மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 85 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

பென்னியும் இன்ஜினீயர்களும் புதிய பருவத்தின் வேலைகளைத் தொடங்க மேல்மலைக்குப் பயணித்தார்கள். கடந்த பருவமழையில் கூடலூர் கணவாய்ப் பாதையில் ஆங்காங்கே மண் சரிந்திருந்தது.

பருவமழை முடிந்து வெள்ளம் வடிந்திருந்த மேல்மலை, மரங்களின் இலைகளை உதிர்த்திருந்தது. இலையுதிரா மரங்கள் சுமைகூடித் திணறியதுபோது, இலையுதிர்த்த மரங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன. உதிர்ந்த இலைகளை ஆடையாக்கி மண் அழகுபார்த்தது. இளமஞ்சள், நீர்த்த மஞ்சள், அடர்மஞ்சள், பசும்பாலின் வெண்ணிறமென மண் இலைகளின் பல வண்ணமணிந்து குதூகலித்தது. மழைக்கு ஒடுங்கிக் கிடந்து, சோர்ந்திருந்த சிறகுகளை விரித்து, புள்ளினங்கள் உயரப் பறப்பதும் தாழ்வதும் வாலையாட்டியபடி உல்லாசமாக நடைபயில்வதுமாக இருந்தன.

தன் பாதையை மறித்து எழுப்பப்பட்டிருந்த தடுப்புச் சுவரை வெறித்துவிட்டு, வலது கரையோரம் பெருக்கெடுத்தது பேரியாறு. வழக்கமான பாதையின் குறுக்கே நின்ற தடுப்புச் சுவரின்மீது இரக்கம் காட்டி, கடந்து சென்றது. பாதை முக்கியமல்ல, பாய்ந்தோடுவதே பாதையென்ற புரிதலில் பேரியாறு நல்லியல்பு காட்டியது.

இன்ஜினீயர்கள் வருவதற்கு இரண்டு நாள்கள் முன்பே ரத்தினம் பிள்ளையும் கங்காணிகளும் மேல்மலைக்கு வந்திருந்தார்கள். வேலை தொடங்குவதற்கு முன்கூட்டி வரும் நாள்களில் வேலை கிடையாது, ஆனால் கூலி உண்டு என்பதையறிந்துகொண்ட வேலையாள்கள் தயாராய் வந்து, தங்களின் குடிசைகளைச் சுத்தம் செய்தனர். காற்றடித்துச் சேதாரமாகியிருந்த மேற்கூரைகளைச் சரிசெய்தார்கள். வெள்ளத்தில் அடித்துச் சென்றிருந்த கட்டுமானப் பொருள்களைத் தேடி எடுத்தார்கள். தரையை மெழுகிப் பூசி, குறைந்தபட்சம் தூங்குவதற்குத் தகுதியானதாக மாற்றினார்கள்.

பென்னி குக்
பென்னி குக்

பென்னியும் இன்ஜினீயர்களும் புதிய பருவத்தின் வேலைகளைத் தொடங்க மேல்மலைக்குப் பயணித்தார்கள். கடந்த பருவமழையில் கூடலூர் கணவாய்ப் பாதையில் ஆங்காங்கே மண் சரிந்திருந்தது. ஜல்லிக் கற்கள் வெள்ளத்தில் அரித்துச் சென்றிருந்தன. செங்குத்தான பாதைகளில் ஏறிவருவதற்காகக் கட்டப்பட்டிருந்த மர ஏணிகள் முற்றிலும் உடைந்து தொங்கின. குறுகலான பாதைகளைக் கடக்க உதவியாகக் கட்டப்பட்டிருந்த மரப்பாலங்கள் முறிந்து விழுந்திருந்தன. ஏற்ற இறக்கங்களும் மேடுபள்ளங்களும் செங்குத்துமாக இருந்த பாதை, ஒவ்வொரு பருவத்துக்கும் செலவு வைக்கும் என்பதை, குதிரையில் வரும்போதே பென்னி மனத்தில் கணக்கிட்டார். ‘அணை கட்டுவதில் பத்தில் ஒரு பங்காவது கூடலூர்க் கணவாய்ப் பாதைக்குச் செலவாகும் போலிருக்கிறதே?’ தன்னுடைய திட்டச் செலவினத்தில் ஒவ்வொரு பருவத்துக்கும் பழுதுபார்ப்பதற்கு என்று தனியாகச் செலவைக் குறிப்பிடாததை நினைத்துப் பார்த்தார். எப்படியும் அதிகரிக்கும் செலவினங்களுக்காக மீண்டும் ஒரு செலவின அறிக்கையைக் கொடுக்க வேண்டும். கூலிகளுக்குக் கொடுக்கும் அதிக சம்பளத்துக்கும், கூடலூர்ப் பாதை பராமரிப்புக்கும்தான் எதிர்பார்க்காத செலவு கூடுகிறது.

சுரங்கப் பாதையில் நடந்த விபத்துக்குப் பிறகு, பத்து நாள்களானது, அங்கு வேலையைத் தொடங்குவதற்கு. சரிந்த டிராமின் தண்டவாளங்களைச் சரிசெய்து, உடைந்த பார வண்டிகளை மாற்றி, புதிதாகப் பாதையமைத்து... எத்தனை இழுபறிகள் என்றிருந்தது பென்னிக்கு. எல்லாவற்றையும்விட நான்கு மட்டக்குதிரைகளைப் பறிகொடுத்தவன், அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. குதிரைகளுக்கான பணம் கொடுக்கிறேன் என்று சொன்னாலும் குத்தங்கால் வைத்து, உட்கார்ந்தவனின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தபடி இருந்தது.

“என் புள்ளைங்க தொர. பொறந்ததே என் கொட்டடியிலதான். பச்சை ருசுவாட்டம் பாத்துப் பாத்து வளத்தேன். கண்ணுமுன்னால வெடிச்சி செதறிடுச்சிங்களே? பத்து அஞ்சு அணா கூடக் கெடைக்குதேன்னு மலைக்கு வந்ததே எனக்குத் தீவினையாப் போச்சே தொர” என்று கதறியவனைச் சமாதானம் செய்ய முடியவில்லை. டிராம் ரயிலும் பார வண்டியும் மட்டும் வெடித்ததால் ஓரளவுக்குத் தப்பிக்க முடிந்தது. வெடிமருந்துக் கிடங்கில் விபத்து நடந்திருந்தால், அவ்வளவுதான், வேலையை நிறுத்த வேண்டிய சூழல் வந்திருக்கும்.

உடனடியாகக் குமுளியில் ஒரு போலீசு கச்சேரி அமைக்க வேண்டும் என்று இந்த வெடி விபத்து குறித்து அறிக்கை அனுப்பியதுடன், கோரிக்கையையும் அனுப்பினார் பென்னி. குமுளியில் இருந்து மலையேறத் தொடங்கினால் ஒரு மைலுக்குள் திருவிதாங்கூர் சமஸ்தானம் வந்துவிடுகிறது. அணை கட்டுமிடத்திற்குச் சமஸ்தானத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். சமஸ்தானத்தின் போலீசும் நாயர் படையும் கடுமையான விதிகளைப் போட்டார்கள். மேல்மலைக்கே வந்திராதவர்கள், இரவும் பகலும் நடமாட ஆரம்பித்துவிட்டார்கள். கூலிகளைப் பிடித்து விசாரிப்பதும், காரணமின்றிப் பிடித்து உட்கார வைப்பதும், விசாரணைக்கு வரச்சொல்லி அழைப்பதும் அவர்களின் அதிகாரம் எல்லைமீறிச் செல்கிறது. விபத்து அதிக பாதிப்பைத் தந்தது என்றாலும் ஒரே ஆறுதல், மெட்ராஸ் பிரசிடென்சியின் எல்லைக்குள் விபத்து நடந்தது என்பதுதான்.

“மிஸ்டர் ஜான்...” டெய்லரின் அழைப்பில் சிந்தனை கலைந்தார் பென்னி.

“யெஸ் மிஸ்டர் டெய்லர்...”

“கலெக்டர் டர்னரைச் சந்திச்ச பாதிப்பிலிருந்து இன்னும் மெக்கன்சி தெளியலை. கவனிச்சீங்களா?”

மெக்கன்சி பின்னால் குதிரையில் வந்துகொண்டிருந்தார்.

“குறுகலான பாதையிது. என்னைப் பின்னால் திரும்பிப் பார்க்க வைக்கும் நோக்கத்தோடு கேள்வி கேட்கிறாயா?”

“அதெல்லாம் உன்னுடைய குதிரை, நீ கண்ணை மூடி உட்கார்ந்தாக்கூட மேல்மலைக்குப் போயிடும். அவ்வளவு பழகிடுச்சு.”

நீரதிகாரம்
நீரதிகாரம்

“குதிரைக்கும்தானே சம்பளம் தருது சர்க்கார். அது வேலையைச் சரியாகச் செய்ய வேண்டாமா?”

குதிரை கனைத்தது.

“ஆமாம்னு சொல்லுதே?” டெய்லர் சொல்ல, எல்லாம் சிரித்தனர்.

“உண்மையில் கண்டமநாயக்கனூர் ஜமீனுடைய பெட்டிஷன் பார்த்து எனக்கு மயக்கமே வந்துடுச்சு ஜான். அதுவும் இந்தக் கலெக்டர் அதையே காரணமாக்கி வேலையை நிறுத்திட்டார்னு தெரிஞ்சவுடனே மூச்சுப் போச்சு. நீ வந்துதான் சரியாகும்னு நெனைச்சேன். நல்லவேளை, அவரே வித்தியாசமா பிரச்சினையைக் கொண்டு போயிட்டார். ஜான், ஒரே ஒரு சந்தேகம். டர்னர் எப்படிக் கலெக்டரா இருக்கார்? அவரால் ஐந்து நிமிஷத்துக்கு ஒரே மாதிரியா இருக்க முடியல.”

“அதனால்தான் அவர் கலெக்டரா இருக்கார். நீயும் நானும் காட்டு மேட்டுல அலையிறோம். மூவாயிரம் அடி உயரத்தில் பெரியாறு சவால்விட்டுக் காத்துட்டு இருக்கு, வா.”

“பெரியாறா, நாமான்னு பார்த்துடலாம். ஆனா எனக்கு அவரை நினைச்சா ஆச்சரியமா இருக்கு. கோமாளி மாதிரி இருக்கார் ஒரு பக்கம். ஒரு பக்கம் பாதிரியார் போல இருக்கார். ஒரு பக்கம் தேர்ந்த நிர்வாகி மாதிரி, ஒரு பக்கம் ஆபத்பாந்தவன் மாதிரி. ஒரு பக்கம் நல்ல ரசனைக்காரன் மாதிரி.”

“ரொம்ப யோசிக்காதே டெய்லர். டர்னர் மாதிரியும் ஆளுங்க இருக்கட்டுமே? நம்மை மாதிரி ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு எல்லாரும் இருந்தா வாழ்க்கையில என்ன சுவாரசியம் இருக்க முடியும்?”

“சரிதான்” என்று சொன்ன டெய்லர், யோசனையுடன் மலையை வேடிக்கை பார்த்தார்.

பேரியாற்றின் வலக்கரையோரம் நீரின் போக்கை மாற்றிவிட்டு எழுப்பிய தடுப்புச் சுவர் பாதிப்பின்றி நின்றிருந்ததைப் பார்த்து பென்னிக்கு மனம் நிறைந்தது. சாத்விகமான குழந்தைபோல் பேரியாறு வலக்கரை வழியே வெளியேறியது. இடக்கரையோரமும் பார்க்கும் வேகத்தில் பென்னி விரைந்தார்.

தடுப்புச் சுவரின் முன்பக்கம் வந்து நின்றபோது, சுவரிலிருந்து கசியும் நீர் மண் அணைக்கும் தடுப்புச் சுவருக்கும் இடையில் தேங்கி நின்றது. மண் அணை உடைந்தால், தண்ணீர் நேரடியாகப் பதினெட்டடி ஆழத்தில் இருக்கும் அணை கட்டுமிடத்திற்குச் சென்று நிரம்பிவிடும்.

டெய்லரை அழைத்தார்.

“நல்லவேளை, பயந்துகிட்டே இருந்தேன். மண் அணை பருவமழையைத் தாங்கிடுச்சு. மண் அணை எப்ப வேணா உடையலாம். உடனே அணையை வலுப்படுத்தணும்.”

“கசிவே இவ்வளவு தண்ணி வந்துடுச்சே ஜான்?”

“வெறும் கசிவு நீர்தான். வெள்ளம் போனாத்தான் கஷ்டம். வெள்ளத்துடன் மரம், கல், மண், சேறுன்னு எல்லாம் சேர்ந்துபோய் தேங்கும். கசிவுத் தண்ணிய மோட்டர் வச்சு வெளியேத்திடலாம். ஒன்னும் கவலையில்லை.”

“உடனே ஏற்பாடு செஞ்சிடுறேன். ஆனா, கசிவை நிறுத்துறது எப்படி?”

“காட்டுல என்ன பொருள் கிடைக்குதோ அதையே நாம் பயன்படுத்தணும். இங்க என்ன இருக்கு, கல், மண், மரம்தானே? நிறைய மண், மரத்தை இரண்டு கரைக்கும் கொண்டாந்து தயாரா வைக்கச் சொல். மண் அணையை வலுப்படுத்திட்டா பயமில்லை. டேம் சைட்டுக்குத் தண்ணி போகாது. மெயின் டேம் வேலையை ஆரம்பிச்சிடலாம்.”

“யெஸ் ஜான்” என்ற டெய்லர், ரத்தினம் பிள்ளையை அழைத்தார்.

அவசரமாக வந்து சேர்ந்த ரத்தினம் பிள்ளை, ஆளே உருக்குலைந்திருந்தார்.

“என்னாச்சு பிள்ளை, வெத்திலை போடக் காணோம்? உங்க காதுத் தோடு மாதிரி பளபளப்பா இருப்பீங்க, இப்படிக் கறுத்து வாடிப்போய் இருக்கீங்க?” என்றார் டெய்லர்.

“கும்பிடுறேன் தொர. இங்கேயிருந்து போனதுல இருந்து வெஷ ஜுரம். ஒரு வாய் கஞ்சி கெடையாது. படுத்த படுக்கைதான். அடியெடுத்து வைக்கத் திராணியில்ல. ரெண்டு திவசமாத்தான் பச்சைத்தண்ணி பல்லுல பட்டுச்சு. நாட்டு வைத்தியன் வெத்தலையைக் கையில தொடக்கூடாதுன்னு சொல்லிட்டான். சுண்ணாம்பு தடவாம வெத்தலை போடுறீயளான்னு கேட்கிறான் தொர.”

“என்னைய மாதிரி சுருட்டுக்கு மாறிடுறீங்களா?” டெய்லர் அடங்கின குரலில் கேட்டார்.

“ஐயே... நாத்தம் கொடலைப் புடுங்கும்” என்று முகத்தைச் சுளித்த பிள்ளை, கேட்பது டெய்லர் என்றவுடன் உடனே குரலை மாற்றினார்.

“ஊர்ல மரியாதையா இருக்காது தொர.”

“அப்போ எனக்கும் மரியாதை தர மாட்டீங்க?”

“டெய்லர், அவரே காய்ச்சல்ல விழுந்தெழுந்து பிழைச்சு வந்திருக்கார். நீ எதுக்கு அவரைத் துளைக்கிற?”

“உண்மைதான் தொர... ஊர்ல...”

“என்னது, உண்மையா?” ரத்தினம் பிள்ளை முடிக்கும்முன் டெய்லர் குரலை உயர்த்தினார்.

“ஐயோ தொர, க்ஷமிக்கணும். நான் சொல்ல வந்தது, எப்படியோ பொழைச்சு வந்துட்டேன்னு. மேல்மலையில இருந்து கெளம்புனவங்க பலபேரு வழியிலயே சீக்கு வந்து செத்துப் போயிட்டாங்க. இப்போ வர்றப்பகூட வழியில அங்கங்க பிரேதம் கெடக்குறதா பேசிக்கிறாங்க. உண்மை என்னான்னு தெரியாது. சில பேரு ஊருக்கு வந்து படுத்தவங்கதான், எழுந்துக்கவே இல்ல.”

“பிள்ளை, இப்போ எத்தனை ஆளுங்க வேலைக்கு வந்திருக்காங்கன்னு பாருங்க, சீக்கிரம் கணக்கெடுத்துட்டு வாங்க” லோகன் விரட்டினார்.

“லோகன், பெர்னாண்டஸை வரச்சொல்” என்றார் பென்னி.

அடுத்த அரை மணி நேரத்திற்குள் இன்ஜினீயர்களும் பெர்னாண்டஸ் தலைமையில் வந்திருந்த ஆசாரிகளும் பென்னியின் வீட்டில் ஒன்றுகூடினர்.

பெர்னாண்டஸின் கம்பளியாடைக்குள் காற்று தாராளமாக நுழைந்து வெளியேறியது. பொத்தான் அணியாத அவரின் மேலாடை குளிரைத் தாராளமாக அனுமதித்தது. அவர் உடல் குளிருக்குப் பழகியிருந்தது. படர்ந்த முகத்தின் தீட்சண்யம் கவர்ந்தது.

“பெர்னாண்டஸ், இப்போ உங்களோட உதவிதான் முழுமையாத் தேவைப்படுது. தடுப்புச் சுவருக்கும் மண் அணைக்கும் இடையில கசிவுத் தண்ணி தேங்குது. இப்போதைக்கு அதிகம் இல்லைன்றதால பயமில்லை. ஆனா ஆத்துல தண்ணியோட வேகம் எப்போ கூடும்னு நம்மால் சொல்ல முடியாது. கசிவு வேகமா வந்தா மண் அணையைக் காப்பாத்த முடியாது. மண் அணை உடைஞ்சா டேம் சைட்டுக்கு நிமிஷத்துல தண்ணி போயிடும். தண்ணி மட்டும் போகாது, மரம், மட்டை, கல்லு மண்ணுன்னு எல்லாம் போய்ச் சேந்திடும். அடைக்காம இருக்கிற பாறைப் பள்ளங்கள்ல போய் இதெல்லாம் நிரம்பிட்டா, வேலையை முதல்ல இருந்து ஆரம்பிக்கணும். தடுப்புச் சுவரும் தாங்காது. உடனே கசிவு நீர் உள்ள வராம நிறுத்தணும்.”

“என்ன செய்யணும்னு சொல்லுங்க மிஸ்டர் பென்னி.”

“ஆசாரிங்க அத்தனை பேரும், பெரிய பெரிய மரச்சட்டங்களைச் செய்யணும். நாள் கணக்காகச் செய்ய முடியாது. எவ்ளோ வேகமா செய்றீங்களோ அவ்ளோ நல்லது. இருபதடி, முப்பதடிக்கு இருக்கணும் மரச்சட்டங்கள். வரிசையா சட்டங்கள நிறுத்திட்டோம்னா, இடைவெளியில மணல் மூட்டைகளை அடுக்கிடலாம். நீங்க உடனே வேலையை ஆரம்பிங்க. யானைப் பாகன்க கிட்ட சொல்லி, அங்கங்கே வெட்டிப் போட்டிருக்கிற மரக்கட்டைங்களை எடுத்துக்கிட்டு வரச்சொல்லுங்க. கொஞ்சம் பேரை, மூங்கில், பிரம்புகளை வச்சு, பெரிய பெரிய தடுப்புகளைப் பின்னச் சொல்லுங்க. பெரிய பாய் மாதிரி இருக்கணும். அதையும் தடுப்புச் சுவரையொட்டி நிறுத்தணும்.”

பெர்னாண்டஸ் உடனே விடை பெற்றார். அவர் கிளம்பிய பத்து நிமிடங்களுக்குள் யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது. மரங்கள் வெட்டப்படும் சத்தமும் தொடங்கிவிட்டது.

பென்னி பேயத்தேவனையும் கூட்டாளிகளையும் அழைத்தார்.

“தேவன், நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. இரண்டு கரையிலும் மலை மாதிரி மண்ணைக் குவிச்சு வைக்கிற. மணலையும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ மூட்டையா கட்டச் சொல்லு. மணல் மூட்டையோ, மண்ணோ இல்லைன்னு சொல்லக்கூடாது. சரியா? ராசுமாயன், நீ அங்கங்க இருக்க கல்லு, உடைஞ்ச பாறைங்க எல்லாத்தையும் கொண்டாந்து கரையோரத்துல சேர்க்கிற. அந்தோணி, உன்னோட வேலை என்னன்னா, தண்ணியோட மட்டம் கூடுதான்னு பார்த்துக்கிட்டே இருக்கணும். கொஞ்சம் கூடுற மாதிரி தெரிஞ்சாலும் போதும், எச்சரிக்கை கொடுத்துடணும். பகல்ல மட்டும் இல்ல, ராத்திரி முழுக்க. ராத்திரியிலதான் கவனமா இருக்கணும். பகல்ல ஒருத்தர் இல்லைன்னாலும் ஒருத்தர் கவனிப்போம். ராத்திரியில நீங்கதான் கவனிக்கணும். சரியா?”

பேயத்தேவன், ராசுமாயன், அந்தோணி மூவரும் உத்தரவுக்குப் பணிந்தார்கள்.

பார்வதியையும் எஸ்தரையும் அழைத்தார்.

நீரதிகாரம்
நீரதிகாரம்

“எத்தனை பேர் பெண்கள் இருக்கீங்களோ அத்தனை பேரும் கையில் கூடையுடன் ஆத்துக்கு இரண்டு கரையிலும் நிக்கணும். சொல்லச் சொல்ல மண்ணள்ளிக் கொட்டுற வேலை உங்களுக்கு. சீக்கிரம் எல்லாரும் வாங்க. போதுமான கூடைகள் இருக்கா?”

“கொஞ்சம் பிரம்புங்களைப் பின்னணும் தொர. போன சீசன்ல வச்சிருந்தது எல்லாம் பிஞ்சி கெடக்குது. மண்ணள்ளித் தூக்குனா அப்படியே மூஞ்சியிலத்தான் கொட்டும்.”

“ஆளுக்குப் பத்துன்னு சீக்கிரம் பின்னுங்க” என்று அவசரப்படுத்தினார் பென்னி.

“இறைவன் உம்மை ஆசீர்வதிக்கட்டும் ஜான்” என்று ஆசீர்வதித்தபடியே பாதிரியார் ராபர்ட் உள்ளே வந்தார்.

“தோத்திரம் பாதர்” என்றனர் பென்னியும் இன்ஜினீயர்களும்.

“தேவனின் துணை உனக்கு இப்போது தேவை என்பதை என் உள்மனம் சொல்லியது. நான் உடனே கிளம்பி வந்துவிட்டேன்.”

“நல்லது பாதர். நெருக்கடியான நேரம்தான். நீங்கள் இருப்பது பெரிய நம்பிக்கை” என்றார் மெக்கன்சி.

காடு அமைதியாக இருந்தது. பெரியாறு அணையின் பணியாளர்களோ தீயாகப் பரவினார்கள்.

யானைகள் தும்பிக்கையினால் மரங்களை முறித்துத் தள்ளின. கிளைகள் கீழே விழும் வேகத்தில் துண்டாக்கி, நதிக்கரைக்குக் கொண்டு வரப்பட்டன. நதிக்கரையோரமிருந்த மணலைப் பெண்கள் தலையில் சுமந்து வந்து கொட்டினார்கள். மணல் நீரை உறிஞ்சி வேகமாக உள்ளே அனுப்பும் என்பதால் சுவரையொட்டிக் கொட்டுவதற்கு, மண்ணள்ளி வந்தார்கள். அணை கட்டுமிடத்தில் பெரும்பாலும் பாறைகள் இருந்ததால் காட்டுப் பகுதிக்குச் சென்று மண்ணள்ளி வந்தார்கள்.

அந்தோணியும் கூட்டாளிகளும் நீரின் ஓட்டத்தைக் கண்காணித்தனர். கரையோரம் கம்பொன்றை ஊன்றி வைத்திருந்தான் அந்தோணி. வலக்கரையோரம் நதி செல்வதால், இடக்கரையோரத்தில் கம்பூன்றினான். கம்பின் நீர்மட்டத்தைப் பார்ப்பதற்கு அதன் அருகில் நிரந்தரமாக ஒரு வேலையாள் நிறுத்தப்பட்டான்.

வேலை தொடங்கிய அடுத்த நாளுக்குள் பெர்னாண்டஸும் மற்ற குழுவினரும் தயாராகிவிட்டார்கள். சூரியன் கீழ்வானத்திற்கு வருமுன் பெர்னாண்டஸ் நீரில் இறங்கினார். தடுப்புச்சுவரையொட்டி, மரச்சட்டங்களை அடுக்கினார். தேங்கிய நீர் மரச்சட்டத்தை அடித்துச் செல்லாது என்றாலும் நீரின் அழுத்தம், மரச்சட்டங்களை ஓரிடத்தில் நிற்க விடவில்லை. மண்ணாகவோ மணல்பரப்பாகவோ இருந்தால் பூமியில் மரச்சட்டத்தை அடித்து இறக்கலாம். பாறையில் நிறுத்த முடியாது. ஒரு மரச்சட்டத்தை நிறுத்த அடுத்த மரச்சட்டத்தை வைத்தவுடன் இரண்டையும் நிரப்பும் அளவுக்கு மேலிருந்து மண்ணள்ளிக் கொட்ட வேண்டும்.

பெர்னாண்டஸ் முதலிரண்டு மரச்சட்டங்களை நிறுத்தினார். மரச்சட்டங்களுக்கு முன்பும் பின்பும் இடையிலும் பார்வதியும் எஸ்தரும் ஐம்பது அறுபது பெண்களும் மண்ணள்ளிக் கொட்டினார்கள். நிதானமாக அவர்கள் கொட்டக் கொட்ட மண், நீரில் கரைந்தது. மரச்சட்டம் நிற்காமல் நீரில் அலைந்தது.

மெக்கன்சிக்குக் கோபம் வந்தது.

“ஒரு ஒரு கூடையா கொட்டிக்கிட்டு இருந்தா எல்லாம் கரைஞ்சுதான் போகும். எப்படி மழை பெய்யுமோ அப்படி மண்ணைக் கொட்டணும். கொஞ்சம்கூட இடைவெளி இருக்கக் கூடாது. லோகன், எத்தனை ஆளுங்க இப்போ வேலையில இருக்காங்க?”

“மொத்தம் 1,155 பேர் இருக்காங்க மெக்.”

“ஆசாரிகள விட்டுடு. மீதிப் பேர்?”

“55 பேரை விட்டுட்டு தோராயமா...”

“அப்போ 1,100 பேரையும் இடக்கரையில இருந்து வலக்கரை வரைக்கும் நிக்க வை. இவங்க மெதுவா அள்ளிக்கொட்டிக்கிட்டு இருந்தா மண் அணை அடிச்சுக்கிட்டுப் போயிடும்” என்று சத்தம் போட்டார்.

லோகன் டெய்லரைப் பார்க்க, டெய்லர் விசில் ஊதினார். அங்கங்கே வேலையில் இருந்தவர்கள் நிமிர்ந்து பார்க்க, டெய்லர் அனைவரும் நதிக்கரைக்கு வரச் சத்தம் கொடுத்தார்.

தேங்கிய நீருக்குள் ஆசாரிகள் வரிசையாக மரச்சட்டங்களையடுக்க, மணல் மூட்டைகளும் கூடை மண்களும் அடுத்தடுத்து விழுந்தன. பெர்னாண்டஸ் அடுத்த மரச்சட்டம் வைக்க இடம் நகரும் முன், முந்தைய மரச்சட்டம் மணல் மூட்டைகளின் பிடியில் இருந்தது.

பொழுது சாய்ந்தும் வேலை முடியவில்லை. நதியின் இரண்டு கரையில் இருந்தும் மரச்சட்டங்களையடுக்கி, மண் கொட்டிக்கொண்டு முன்னேறினார்கள். இரவு கனத்த இருட்டைப் பரப்ப, பென்னி வேலையைத் தொடரலாமா வேண்டாமா என்று யோசித்தார்.

டெய்லரைப் பார்த்தார். டெய்லருக்கும் அதே எண்ணம். குளிர் விறைக்கத் தொடங்கிவிட்டது. கொசுக்கள் ஆள்களை மொய்த்தன. காற்றில் கொஞ்சமும் வெப்பமில்லை. விலங்குகள் வரலாம், யானைக்கூட்டம் வரலாம், விஷ ஜந்துகள் கடிக்கலாம் என்று பல அச்சங்கள் இருளைப் போலவே இன்ஜினீயர்களின் மனத்தைச் சூழ்ந்தன.

பெர்னாண்டஸ் பென்னியைப் பார்த்தார்.

“மிஸ்டர் பென்னி, நாள் முழுக்கச் செய்திருக்கிற வேலையை முடிக்காமல் விட்டுச் சென்றால், இரவு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் இத்தனை சிரமப்பட்டுச் செய்த வேலை வீணாகப் போகும். கவலைப்படாதீர்கள். முடித்துவிடுவோம்” என்றார் பெர்னாண்டஸ்.

மொக்கை மாயன் கடுங்காப்பியைப் பெரிய மண்பானையில் கொதிக்க வைத்துக் கொடுக்க, முங்கிலியத் தேவன், பெரிய குவளைகளில் ஒவ்வொருவருக்கும் மோந்து கொடுத்தார். ரத்தினம் பிள்ளையோ, குளிரில் விறைத்துச் சாராயத்திற்குத் தவித்துக் கிடக்கும் நோஞ்சான்களைக் கண்டுபிடித்துச் சந்தடியின்றி மண்கலயங்களை நீட்டினார்.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு வேலை தடையின்றி நடந்தது. மணல் மூட்டைகளையடுக்கிச் சென்ற இடத்தில் பென்னி கால் பூட்சைக் கழற்றிவிட்டு நடந்தார்.

“இரவு நேரத்தில் கடுமையான குளிரில் வெறுங்காலில் நடக்கப் போகிறாயா பென்னி?” டெய்லர் பதறினார்.

“எங்காவது சின்னக் கசிவு இருந்தாலும் காலுக்குத் தெரிந்துவிடும். நான் ஒருமுறை பார்த்துவிடுகிறேன்.”

“குளிரில் வெறுங்காலுடன் நடப்பாயா? இருநூறு அடிக்கு?”

“அதெல்லாம் நடக்கலாம், கவலைப்படாதே” என்ற பென்னி, மணல் மூட்டைகளையடுக்கிய இடத்தையொட்டி நடந்தார். மணல் ஈரத்தைத் தவிர, தண்ணீர் காலில் தட்டுப்படவில்லை. ஆறுதலாய் நடந்தவர், தூரத்தில் பார்த்தார்.

இரண்டு பக்கமிருந்தும் மணல் மூட்டைகளையடுக்கி வருபவர்கள் நெருங்கிவிட்டார்கள். கசிவில் தேங்கியிருந்த நீரையும் கொஞ்சம் கொஞ்சமாக இடக்கரையோரம் வெளியேற்றியாகிவிட்டது. இன்னும் பத்தடி தூரம்தான், மண்ணை அணைத்துவிட்டால் போதும், மண் அணையைக் காப்பாற்றிவிடலாம் என்று நினைத்து முன்னேறிய பென்னியின் காலில் தேங்கியிருந்த தண்ணீர் சளக்கென்று சத்தமெழுப்பியது.

பென்னி அதிர்ந்தார். குனிந்து தரையைத் தொட்டுப் பார்த்தார். உள்ளங்கையில் அள்ளிவிடக்கூடிய அளவுக்கு அதற்குள் நீர் கசிந்திருந்தது.

“டெய்லர், தீப்பந்தம் ஒன்னு எடுத்துட்டு வா.”

“என்னாச்சு ஜான்?’’ டெய்லர் மேலிருந்து கேட்டார்.

“வெளிச்சம் காட்டு, சொல்றேன்.”

டெய்லர் கையிருந்த தீப்பந்தத்துடன், அருகிலிருந்தவரிடம் இன்னொரு தீப்பந்தம் வாங்கிக்கொண்டு கீழிறங்கினார்.

“என்னாச்சு ஜான்?”

“சத்தம் போடாதே. இங்க பாரு, நீர் கசியுது.”

“ஓ ஜீசஸ்...” டெய்லர் குனிந்து தொட்டுப் பார்த்தார்.

“அதுக்குள்ள இவ்வளவு தண்ணி வந்துடுச்சே?”

“அதான் எனக்கும் தெரியலை. பார்க்கலாம்” என்ற பென்னி, தீப்பந்தத்தைக் கீழே காட்டினார்.

மரச்சட்டங்களுக்கு அடியில் முட்டுக்கொடுப்பதுபோல் ஓரிடத்தில் கருங்கற்களை அடுக்கியிருந்தார்கள்.

மரச்சட்டங்களுக்கு இடையே மண்ணோ, மணலோ மட்டுமே கொட்ட வேண்டும், கரையோரங்களில் கல்லோ உடைந்த பாறையோ கொட்டலாமென்று பென்னி சொல்லியிருந்தார். கவனமின்றி மரச்சட்டங்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக யாரோ கல்லை அடுக்கியிருக்கிறார்கள். கல்லின் வழியாக எளிதில் நீர் கசியத் தொடங்கியிருந்தது.

பென்னி உடனே பெர்னாண்டஸை அழைத்தார்.

அவருக்குப் பார்த்தவுடனே புரிந்துவிட்டது. சாப்பிடுவதற்காக மேலே ஏறிப்போன நேரத்தில் ஒரு மேஸ்திரியை நிறுத்தியிருந்தார். சின்னஞ்சிறு இடைவெளியில் நேர்ந்த பிழை. மொத்தக் காரியத்தையும் கெடுக்க இருந்தது.

“உடனே பார்த்துட்டீங்க பென்னி. ஓ ஜீசஸ். இந்தப் பெர்னாண்டஸ் செய்த வேலை தப்பாப் போயிடுச்சின்னு பேராகியிருக்கும். காப்பாத்திட்டீங்க.”

பெர்னாண்டஸ் தன் உதவியாளர்களை அருகில் அழைத்தார். வரிசை குலைந்துவிடாமல், ஒரு கல்லை நகர்த்திவிட்டு, அவ்விடத்தில் உடனே மண்ணடைத்தார். கல்லடுக்கியிருந்த இடங்களில் மண்ணால் நிரப்பினார்.

“இதுவே எங்க ஊர்க் காடா இருந்தா கரணையை வச்சு, கசிவை அடைச்சுடுவோம். இங்க எங்க போறது?” என்றார் மொக்கை மாயன்.

“மேல்மலையில் கிடைக்காதா?”

“இருக்கு தொர. சொதசொதன்னு நாலஞ்சு குட்டைங்களைப் பாத்து வச்சிருக்கேன். அதும்பூரா கரணைதான். விடிஞ்சா மாட்டு வண்டியில அடிச்சிட்டு வந்துடலாம்.”

“முடியுமா தேவன்?” பென்னி.

“நீங்க சொன்னா எதுவுமே முடியாதுன்னு கெடையாது தொர.”

கடுங்குளிரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த வேலையாள்களுடன் அந்த இரவின் நட்சத்திரங்கள் கண்விழித்துப் பார்த்தபடி விண்ணிறைந்து நின்றன. உலக நன்மைக்காக உயிரைப் பொருட்படுத்தாத தேவன்கள் அந்த இரவினை நிறைத்தனர்.

- பாயும்