மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 87 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

இரவும் துவண்டு விழுந்த கணத்தில் கீழ்வானில் வெளிச்ச முளை எழுந்தது. தன் விளையாட்டுக்கு இருளே ஏதுவானது என்றெண்ணிய பேரியாறு, விளையாட்டை நிறுத்திக்கொண்டு வலக்கரையோரம் நிதானமாக வெளியேறியது.

மண் அணையைக் காக்க மனிதர்களே கரையாகி, இரவு முழுக்க மண்ணுக்குள் புதைந்தார்கள். குலை நடுங்கச் செய்த காரிருள், தண்ணீரின் நிலைத்த பேரோலம், எலும்பைத் துளைக்கும் குளிர், இடுப்புயரம் உயர்ந்து மூழ்கடிக்கத் தயாராகிய வெள்ளம் என மரணத்தின் கறுத்த நிழல் ஒவ்வொருவரையும் மூச்சடைக்க வைத்தது. சிந்தை கலங்காமல் திடமாய் மார்புவரை ஈரமண்ணில் புதையுண்டு நின்ற ஒவ்வொருவரும் பேரியாற்றைத் தோற்கடிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டார்கள். பேரியாறு தன் பலம்கொண்டு சுவரை மோதி, உள்நுழையுமிடமெங்கும் தடுத்து நிறுத்தும் கரையாக முளைத்தார்கள் மனிதர்கள். ஆறும் உன்மத்தம் கொண்டு 200 அடி நீளச் சுவருக்குள் இங்கே, அங்கே என நுழைய எத்தனித்தது. எங்கெல்லாம் தடுப்புச் சுவருக்குள் தண்ணீர் நுழைந்ததோ, அங்கெல்லாம் வேலையாள்கள் இயந்திர வேகத்தில் கரையாகி நின்றார்கள். ஒவ்வொருவரும் கைகோத்து, கால் பிணைத்து நிற்க, ராட்சசக் கூடைகளில் இருந்த மண் அவர்களை மூழ்கடித்தபடி இருந்தது. தண்ணீர் மூன்றடி நின்றால், ஐந்தடிக்கு மனித அணை எழுந்து நின்றது.

இரவு முழுக்க, ‘என் முன்னால் நீங்கள் எம்மாத்திரம்’ என்ற களியாட்டம் பேரியாற்றுக்கு. ‘உன்னை வெற்றிகொள்ள நாங்கள் வரவில்லை, வசக்கி, அழைத்துச் செல்லவே வந்திருக்கிறோம். நாங்கள் சமருக்கு நிற்கவில்லை. சமரசத்துக்குத்தான் கைகோத்து நிற்கிறோம்’ என்ற பணிவுடன் பேரியாற்றின் முன் நின்றார்கள். இயற்கையை ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது, தங்களுக்கிணங்க வசக்கிக்கொள்ள முடியுமென்பதைச் சின்னஞ்சிறிய மனிதக்கூட்டம் மேல்மலையின் அடர்ந்த இருட்டில், உயிரச்சத்திற்கிடையில் பேரியாற்றுக்கு நிரூபித்தது.

பென்னி குக்
பென்னி குக்

அதிகாரிகளின் உத்தரவில்லை. கங்காணிகளின் கூச்சலில்லை. ஒழுங்கு செய்யும் விசில் சத்தமில்லை. உடல் வலியில்லை. உறக்கமில்லை. சுணக்கமில்லை. யாரும் யாருக்கும் வேலையிடவில்லை. கூடியிருந்த ஆயிரம் பேரின் எண்ணமும் ஒரு புள்ளியில் நின்றது. கையில் ஜெபமாலையுடன் வேதவார்த்தைகளை உரக்கச் சொல்லிக்கொண்டிருந்த பாதிரியார், கல் உடைக்கும் தங்கராசு, ஆசாரி பெர்னாண்டஸ், வயது முதிர்ந்த மொக்கை மாயன், குழந்தை போன்ற சாமி, குழந்தையே ஆன சங்கிலி, மருந்து கொடுக்க வந்த எஸ்தர், காதலனுக்காக உடன் வந்த பார்வதி எனத் தாங்கள் பார்க்க வந்தது இன்ன வேலையென்று பார்க்காமல் ஒவ்வொருவரும் நதிக்கரையில் கூடியிருந்தார்கள். இரவு முழுக்க குடிசைகளில் விரிக்கப்படாத பிரம்புப் பாய்கள் மட்டும் முடங்கிக்கிடந்தன.

விடிய விடிய தடுப்புச் சுவரில் பேரியாறு உண்டாக்கிய உடைப்புகளைச் சரிசெய்து கொண்டிருந்தார்கள் மேஸ்திரிகள். அவர்கள் சுவரின் உடைப்பைச் சரிசெய்யும் வரை, வெள்ளம் வந்து தாக்கா வண்ணம், மனிதர்கள் கரைகட்டி நின்றார்கள். உடைப்பு எடுப்பதும் கரைகட்டி நிற்பதும் உடைப்பை அடைப்பதுமாகப் பேரியாற்றுடன் துவந்த யுத்தம் நடந்தது.

இரவும் துவண்டு விழுந்த கணத்தில் கீழ்வானில் வெளிச்ச முளை எழுந்தது. தன் விளையாட்டுக்கு இருளே ஏதுவானது என்றெண்ணிய பேரியாறு, விளையாட்டை நிறுத்திக்கொண்டு வலக்கரையோரம் நிதானமாக வெளியேறியது. இரண்டு மலைத்தொடர்களுக்கு இடையில் ஒடுங்கி வரும் பேரியாற்றையே கையாள முடியவில்லை, அதன் முழு ஆகிருதியில் அருகிலும் செல்ல முடியாதோ என்று சூரியன் அஞ்சுவதுபோல் கீழ்வானில் உள்ளழுந்தியது.

இனி உடைப்பில்லையென்று உறுதியான பிறகே, புதையுண்டவர்களை மேலே இழுத்துப் போட்டார்கள். மண்ணில் புதையுண்ட அவயவங்களில் நீரின் வரியோடிய தடம். கறுத்த தேகங்கள் நீரில் ஊறி வெண்ணிற ரேகைகளோடியிருந்தன. நீண்ட கயிறுகளைப் பிடித்து மேலேறிய தேகங்களுக்கு இடுப்புக்குக் கீழே உணர்வில்லை. மேலே இழுத்துப் போடப்பட்டவர்கள் கரையில் வீசப்பட்ட மீன்கள்போல் உணர்வற்றுக் கிடந்தார்கள்.

பென்னியும் இன்ஜினீயர்களும் உடனடியாக அவர்களை ஈரமற்ற இடத்திற்குத் தூக்கிச் செல்லச் சொன்னார்கள். இளம்வெயில் உடலில் படும்படி பாறைகளில் கிடத்தப்பட்டார்கள். வெயிலின் சூட்டை உறிஞ்சிய உடல் கொஞ்சம் கொஞ்சமாக உணர்வு பெற்றெழுந்தது. இளம்வயதினர் என்றாலும் மண்ணும் தண்ணீரும் கொடுத்த அழுத்தத்தில் திணறித் தத்தளித்திருந்தனர்.

நீரதிகாரம் - 85 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...
நீரதிகாரம் - 85 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

பென்னி, உயரமான பாறையொன்றின்மேல் நின்று அணை கட்டுமிடத்தைப் பார்த்தார். தடுப்புச்சுவரும் மண் அணையும் கம்பீரமாக நின்றன. பேரியாறு சுவரில் மோதித் திரும்பி, மடைமாற்றப்பட்ட வழியில் வெளியேறியது. இத்துடன் நதி தன் சாகசத்தை நிறுத்திக்கொண்டால் போதும், அணை கட்டுமிடம் நீரின்றி உலர்ந்துவிடும். உடனடியாக அணை வேலையைத் தொடங்கிவிடலாம் என்ற கணக்கிடல் பென்னிக்குள் ஓடியது. கண்முன் அணை மேலெழும் காட்சிகள் விரிந்தன.

டிசம்பர் மாதம். கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேலை தொடங்கி இரண்டாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் ஹெட் வொர்க் தொடங்கவில்லை. இந்த சீசனை இடைவெளியின்றி மார்ச் மாதம்வரை நீட்டிக்க பென்னி திட்டமிட்டிருந்தார்.

கரையெழுப்பிய பின்னரும் நீரின் கசிவினால் அணை கட்டுமிடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. தண்ணீரை வெளியேற்ற 12 குதிரைத் திறன் கொண்ட இயந்திரம் அம்மையநாயக்கனூரில் இருந்து வந்துகொண்டிருக்கிறது. இயந்திரத்தைக் கடைக்காலுக்குக் கீழே இறக்கி, நீரை இறைத்து வெளியேற்றிவிட்டால் போதும், உடனடியாக அணை வேலை தொடங்கிவிடும்.

இன்ஜின் பற்றிய நினைவு வந்தவுடன் பென்னி பரபரப்பானார்.

“டெய்லர்...”

“யெஸ் ஜான்...” வேலையாள்களின் அருகில் நின்று அவர்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த டெய்லர், பென்னி அருகில் வந்தார்.

“இன்ஜின் என்னாச்சு? பாளையத்தைக் கடக்க முடியவில்லை. எடை அதிகம்ன்றதால மரப்பாலத்தில் ஏற்ற முடியாமல் நிறுத்தியிருக்குன்னு சொன்னியே?”

“இன்னும் நாலஞ்சு நாள்ல இங்க வந்துடும் ஜான். சுலபமா நீ கப்பல்ல ஏத்தி லண்டன்ல இருந்து தூத்துக்குடிக்கு அனுப்பிட்ட. அம்மையநாயக்கனூருக்கு வந்த இன்ஜினை இறக்குறதுக்குள்ளயே பெரும்பாடு. வழியில் எத்தனை ஆறு, ஓடைன்னு கடந்து வரணும்? 3500 எல்.பி.எஸ். (தோராயமாக 1,500 கிலோ) எடை. நாலு மாசமா வருது, வருது, இன்னும் வருது. பாளையம் ஆத்துத் தரைப்பாலத்துலதான் முதல்ல தடைபட்டு நின்னுச்சு. ரொம்பப் பழைய பாலம். அப்படியே ஏத்தியிருந்தா பாலம் உடைஞ்சிருக்கும். பழைய பாலத்து மேலேயே பெரிய மரப்பலகைகளை அடுக்கச் சொல்லி, சுருளியாத்தைக் கடந்தாச்சு. அடுத்து பெரிய சவால் வையிரவன் ஆறுதான். பாதையே ரொம்ப குறுகல். அதுக்குமேல் சின்னப் பாலம். நாலு குதிரையால் இழுக்க முடியல. 12 குதிரைத் திறன் இன்ஜின். அதனால டிராக்‌ஷன் இன்ஜின்ல இரும்புச் சங்கிலி கட்டி இணைச்சுத்தான் இழுத்துக்கொண்டு வர்றாங்க. கூடலூர்க் கணவாய் மேலே பாதி தூரம் வந்துடுச்சு.”

“இனிமே உடைப்பு வராதுன்னு நினைக்கிறேன். இன்ஜின் வந்தா அஸ்திவாரத்துல கெடக்கிற தண்ணிய இறைச்சிட்டு, வேகமா வேலையை ஆரம்பிச்சிடலாம். கிறிஸ்துமஸுக்குள்ள ஹெட் வொர்க் ஆரம்பிக்கணும். அதுக்கு ஏற்பாடு செய்.”

“வந்திடும். டிராக்‌ஷன் இன்ஜின் இழுத்துட்டு வருது. மேடு, பள்ளம், செங்குத்தான பாதைன்னு எத்தனை இடைஞ்சல்.”

“ஆனா இன்ஜின் வந்தாத்தான் வேலை ஆரம்பிக்க முடியும். இருபதடி பள்ளத்துக்குள்ள இருந்து தண்ணிய வெளியேத்தறதுக்கு வேற வழியில்லை.”

“கவலைப்படாதே பென்னி. லோகன், இன்ஜினைக் கொண்டு வர்றதுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டார்.”

கைகால்களை உதறிக்கொண்டு நிற்கும் வேலையாள்களைப் பார்த்தார்.

“அர்ப்பணிப்பான குடிகள். இவங்க இல்லைன்னா நம்மால் ஒரு நாள் இந்தக் காட்டுக்குள் வேலை செய்ய முடியாது. பயங்கரமான இந்தக் காட்டை நினைத்துதான் கடவுளாலும் அணை கட்ட முடியாதுன்னு ஆர்தர் சொன்னார். கடவுளே வந்து வேலை செய்யுற மாதிரி, ஒவ்வொருத்தரும் வேலை செய்யுறாங்க. இந்த அப்பாவி ஜனங்களுடைய உயிரோடு விளையாடுறமோன்னு குற்றவுணர்ச்சியாவும் இருக்கு டெய்லர்.”

“அப்படியில்லை. இந்த ஜனங்களுடைய எதிர்காலத்துக்காகத்தானே நாம உயிரைப் பணயம் வச்சு இந்தக் காட்டுக்குள்ள கிடக்கிறோம். நாம மட்டும் தெய்வப்பிறவிங்களா என்ன? காய்ச்சல் வந்தா என் உயிரும்தான் போவும், உன் உயிரும்தான் போவும். காட்டு மிருகங்க நம்மள மட்டும் சாப்பிட மாட்டோம்னு விட்டுடுமா?”

டெய்லர் சொன்னவுடன், ‘உண்மைதான்’ என்பதுபோல் நின்றார் பென்னி.

“தேவனின் கிருபை. என்ன நடக்குதோ நடக்கட்டும்.”

“ஒரே ஒரு சிந்தனை மட்டும் இங்க வந்த பிறகு எனக்குள்ள ஓடுது.”

“என்ன?”

“செத்துப்போகப்போறோம்னு மனசுக்குத் தோணுறதுக்கு முன்னால செத்துப்போயிடணும் ஜான்.”

“ஓ... இதெதுக்குத் தேவையில்லாத சிந்தனை. லோகனைக் கூப்பிடு. இன்ஜின் எங்க இருக்குன்னு கேட்கலாம்.”

“யெஸ்...”

பென்னி அருகில் வந்த லோகன் கவலையுடன் நின்றார்.

“இன்னும் எத்தனை நாளாகும் லோகன்?”

“அதைத்தான் யோசிக்கிறேன் மிஸ்டர் பென்னி. செங்குத்தான பாதையில் ஏற முடியாமல் குதிரைகள் திணறி, கீழிறங்கிவிட்டன. இன்னும் அரைக் கிலோ மீட்டர்தான் தூரம். எப்படிக் கொண்டு வருவதுன்னு புரியலை.”

நீரதிகாரம்
நீரதிகாரம்

“இவ்வளவு தூரம் வந்த இன்ஜின் மேல்மலைக்கு வர்றதுக்கா இவ்வளவு தாமதம்?”

“அடிவாரம் வரைக்கும் டிராக்‌ஷன் இன்ஜின்ல எப்படியோ கொண்டு வந்துட்டோம். மலைமேல் குதிரைங்கதானே இழுக்குது? ஒன்றரை டன் எடையை மலைமேல் எப்படி இழுக்க முடியும்? அதுவும் ரொம்ப செங்குத்தான பாதையில்?”

“கூலிங்க இருபது, முப்பது பேரைக் கூப்பிட்டுக்கோ. கயிறு கொண்டு வரச்சொல். எல்லாரும் ஒரே நேரத்தில் சேர்ந்திழுக்கணும். கயிறு அறுந்து இன்ஜின் மலையில் உருண்டுடப் போகுது. அத்தோடு சீப் இன்ஜினீயரிடம் என் தலை உருண்டுடும்.” பென்னி.

``ஒரு குதிரை இழுக்கிற அளவுக்கு ஆளுங்க வேணும்னா பத்தாளு வேணும். பத்தாளு சேர்ந்தாத்தான் ஒரு குதிரையோட வலிமை வரும். அப்போ நாப்பது ஆள் வேணுமே?”

“உன் கணக்கையெல்லாம் நிதானமாச் சொல்லு, கேட்டுக்கிறேன். இப்போ ஆகவேண்டியதைச் செய்.”

டெய்லரும் லோகனும் உள்ளழுந்திய புன்னகையுடன் கூலி முகாமை நோக்கி நடந்தார்கள்.

முப்பது பேர் சேர்ந்திழுத்து, இரண்டு பர்லாங்கு தூரத்தை இரண்டு நாளில் கடந்தது இன்ஜின். கைகளிலும் தோளிலும் கயிறு உரசிய காயம். முதுகில் கயிறு கிழித்த இடங்களில் முத்து முத்தாக ரத்தச் சிவப்பு தேங்கி நின்றது. தம்மைவிட எடை கூடிய உணவுப் பருக்கையைச் சுமந்து செல்லும் எறும்புகளைப்போல், இன்ஜினை மேல்மலைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். வலக்கரையோரம், நதிமட்டத்திற்குக் கீழே பதினெட்டடி ஆழத்தில், மரப்பலகைகளால் ஆன மேடையொன்று அமைத்து இன்ஜினை உட்கார வைத்தார் பென்னி. ‘இனி எல்லாச் சிக்கல்களும் தீர்ந்தன. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று நம்பிக்கையூட்டுவதுபோல் பேரிடத்தை ஆக்கிரமித்து உட்கார்ந்தது இன்ஜின்.

அடுத்த நாளே அணையின் அடித்தளத்தில் தேங்கிக் கிடந்த தண்ணீரை வெளியேற்றும் வேலை ஆரம்பித்தது. தண்ணீருடன் கலந்திருக்கும் சின்னச் சின்னக் கற்கள், மரக்குச்சிகள், புல் பூண்டுகளைப் பிரித்தெடுக்க எட்டங்குல இயந்திரம் ஒன்றையும் வைத்தார்கள். ஒரு நாள் முழுக்க இயந்திரம் கடைக்காலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றியது. அன்று வானம் மிகவும் சாதகமான வானிலையுடன் ஒப்புரவாய் இருந்தது. பொழுது சாயும் வரை வேலை துரிதகதியில் நடந்தது.

குறைந்த ஒளியில் சின்னஞ்சிறு அறைக்குள் நான்கு பேரும் அமர்ந்திருந்தார்கள். சாளரம் வழியே தெரிந்த வானில் நட்சத்திரங்கள் மேகங்களின்றி ஒளிர்ந்தன.

“கடந்த வாரம் இதே நாள் இரவை நினைத்துப் பார்க்கிறேன். உடல் நடுங்குகிறது” என்றார் டெய்லர்.

“ஆமாம், தடுப்புச் சுவர் உடைந்தால், ஃபர்லோவுக்கு எழுதிக்கொடுத்துட்டு லண்டன் கிளம்பிடலாம்னு நெனைச்சேன்.”

“நீயுமா மெக்?”

“ஆமாம். வேற என்ன செய்யுறது? கடற்கரையோரம் குழந்தைங்க கட்டுற மணல் வீட்டை அலை கலைச்சு விட்டுட்டுப் போற மாதிரி, பெரியாறு தடுப்புச் சுவரையெல்லாம் அடிச்சிக்கிட்டுப் போய்க்கிட்டே இருந்தா என்னதான் தீர்வு? அணையாவது மண்ணாவதுன்னு கெளம்பிடலாம்னு நெனைச்சேன்.”

“தப்பு மெக். நடக்கிறது எதுவுமே நம்ம முயற்சியில நடக்கலை. நாம கருவியா இருக்கோம். அதனால சலிப்பும் வேணாம். சந்தோஷமும் வேணாம்.”

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக நான்கைந்து நாள்களுக்காவது வேலைக்கு விடுமுறை விடலாம் என்பது மெக்கன்சியின் விருப்பம். குழந்தைபோல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பென்னியிடம் வலியுறுத்தினார்.

“இங்கு பெரும்பாலான கூலிங்க கிறிஸ்தவர்கள் இல்லை. இப்போதைக்கு விடுமுறை விட்டால், திரும்பி வந்து வேலையைத் தொடங்க ரொம்ப தாமதமாகும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு மாதிரி இருக்கு இந்தக் காடு. நல்லாருக்கும் போதே இடைவெளி இல்லாமல் வேலை செய்யணும் மெக். நீங்க எல்லாரும் கொடைக்கானல் போயிட்டு வாங்க. நான் இங்கிருந்துக்கிறேன்.”

“உனக்கு ஜார்ஜி, குழந்தைங்களைப் பார்க்க வேணாமா?”

முகம் சோர்ந்து பலவீனமாய் வயிற்றுப் பிள்ளையுடன் இருக்கும் ஜார்ஜியானாவின் நினைவு பென்னிக்குள் வந்து சென்றது. மேல்மலையில் இருந்து கிளம்பினால், கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம் வழியாகக் கொடைக்கானலுக்குச் சென்றுவிடலாம். காலையில் கிளம்பினால் நள்ளிரவுக்குள் குழந்தைகளுடன் இருக்கலாம் என்று ஆர்வம் எட்டிப் பார்த்தது. உடனே கலைத்தார்.

“இல்லை, ஜார்ஜியும் என்னை எதிர்பார்க்க மாட்டாள்.”

“நானும் போகவில்லை. அங்கு சென்றாலும் நான் மட்டும்தானே தனியாக இருக்க வேண்டும்? சாதகமான சூழல் அமைந்து ஒவ்வொரு வேலை நடப்பதும் கடினமாக இருக்கிறது. நான் மேல்மலையிலேயே இருக்கிறேன்” டெய்லர்.

“லோகன், உனக்குப் போகணும் என்றால் நீ போயிட்டு வா.”

“நாளைக்கு முடிவெடுக்கிறேன் ஜான். பார்ப்போம்.”

இளம் குளிராய் வீசிய காற்று இரவை ரம்மியமாக்கியது. மதுக்கோப்பைகளுடன் மனம் நிறைவாய்ப் பேச்சு நகர்ந்தது.

திடீரென்று மரங்களின் கிளைகள் காற்றில் அலைவுறும் சத்தம். பென்னி பேச்சை நிறுத்தி, வெளியில் அதிகமாகும் சத்தத்தைக் கூர்ந்து கவனித்தார். காற்று மரங்களில் மோதும் சத்தம். சாளரத்தின் வழியாக வானத்தைப் பார்த்தார். ஒளிர்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்கள் காணாமல்போயிருந்தன. வானம் வெறும் இருட்டாய்த் தெரிந்தது. பென்னியின் முகத்தில் கலவரம் கூடியது. மதுக்கோப்பையை எதிரில் இருந்த குட்டை மேசையில் வைத்துவிட்டு, வேகமாக வெளியில் வந்தார். நின்று வானத்தைப் பார்த்த அவரின் நெற்றியில் முதல் துளி மழை விழுந்தது.

“மழை போயிடுச்சுன்னு பாத்தா, திரும்ப வருதே?”

மூவரும் வெளியில் வரும்முன் மழையின் வேகம் கூடியது.

”என்னாச்சு, அதுக்குள்ள வானம் கருக்கிருட்டா ஆயிடுச்சு?”

“ஜான், வெள்ளம் அதிகம் வந்தாலும் இனி சுவருக்குப் பாதிப்பிருக்காதே?”

“மழையோட அளவைப் பொறுத்துதானே சொல்ல முடியும் லோகன்?”

ஆங்காங்கே குடிசைகளில் மங்கலாய் இருந்த வெளிச்சம், மழைச்சத்தம் கேட்டவுடன் அதிகமானது. விளக்குத் திரியை ஏற்றிவிட்டிருப்பார்கள். எல்லாருக்குமே பயம் வந்திருக்கும்.

சுதாரிக்கும்முன் மழைத்தாரைகள் முகத்தில் அறைந்தன. தடித்த சணல் கயிற்றால் முகத்தில் இழுத்த வலி. கனமான மழைத் துளிகள். வேகமாக வீட்டுக்குள் ஓடினார்கள்.

“மழை இவ்ளோ கனமா ஆரம்பிக்குதே?” பென்னியின் குரலில் மழையின் கனம் தெரிந்தது.

“பார்ப்போம் இரு. கவலைப்படாதே.” டெய்லரின் குரலில் நம்பிக்கையற்ற வார்த்தைகள் தொக்கி நின்றன.

மழையின் வேகம் நொடிக்கு நொடி அதிகரித்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. பருத்த மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. நிமிடத்தில் வீட்டு வாசலில் முழங்கால் அளவு வெள்ளம் வந்தது. பென்னி வேகமாக கதவைச் சாத்தினார்.

மழை, மழை, வானம் மழையாக மாறி காட்டுக்குள் இறங்கியதுபோல் நிற்காமல் பெய்தது மழை. பேரியாற்றுக்கு உதவ நானிருக்கிறேன் என்பதாக மழையும் உன்மத்தம் காட்டியது. மரங்களின் கழுத்தைத் திருகியது காற்று. கிளைகளின் முழங்கையை உடைத்தெறிந்தது. குடிசைகளின் கூரைகளைப் பிய்த்தெறிந்தது. விலங்குகள் அச்சத்தில் கூக்குரல் எழுப்பின. பறவைகள் அடங்கி ஒடுங்கி மரப்பொந்துகளுக்குள் அடைக்கலம் புகுந்தன.

மணல் மூட்டைகளை ஆவேசமாக இழுத்துச் சென்றது. அரக்கன் ஒருவன் காட்டை அடித்துத் துவம்சம் செய்வதுபோல் மழை ஊழித்தாண்டவமாடியது. இடைவெளியின்றிப் பெய்தது. மின்னல் பச்சை மரங்களுக்குள் இறங்கிக் காணாமற்போக, இடியோ வனாந்தரங்களில் விழுந்தது. மழை, இடியையும் மின்னலையும் விரட்டி, நிதானமாகப் பெய்தது. பிரபஞ்சத்தின் ஆசீர்வாதமாகவும் அழிவாகவும் நீண்டு வளர்ந்தது மழை. கரையோரங்களில் வளர்ந்த மனித நாகரிகத்தைக் கடல்கோளால் எடுத்துக்கொள்ளும் சூட்சுமத்தை அறிந்த தண்ணீரல்லவா?

நால்வரும் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்படியொரு மழையைப் பார்த்ததில்லை என்றார் பென்னி. இருபது முப்பது வருஷங்களாக மேல்மலையில் பேரியாற்றில் பெய்யும் மழையின் அளவைப் பதிந்திருக்கிறார்கள். இன்று பெய்யும் மழை, கடந்த காலப் பதிவுகள் எல்லாவற்றையும்விட அதிகமாக இருக்குமென்று யூகித்தார் பென்னி.

“நிச்சயம் கிராஸ் டேம் தாங்காதுன்னு நினைக்கிறேன்.” மெக்கன்சியின் குரல் உடைந்திருந்தது.

அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அதே எண்ணம்தான் ஓடியது. நினைத்துப் பார்க்கக் கூடாது என்று சிந்தனையை அழிக்க நினைத்தாலும் மனம் மீளவில்லை. அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தவுடன் பென்னியால் நிற்க முடியவில்லை.

மழைச் சத்தம் வலுத்திருந்தது. தொம் தொம் என்று ஓங்கி அறையும் சத்தம். மழைத்தாரைகள் தனித்து, இடைவெளியுடன் விழுவதுதான் இயல்பு. இன்றோ வானத்தைத் தலைகீழாகக் கவிழ்த்ததுபோல் மழை மொத்தமாக விழுந்தது. பென்னி, சாளரத்தின் வழியே உற்றுப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். முன் அந்தியில் ஆரம்பித்த மழை, இரவு பத்து மணியளவில் யாரோ அதட்டிக் கட்டளையிட்டு நிறுத்தியதுபோல் நின்றது.

பென்னி, விளக்கை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். இடுப்பளவு நீருக்குள் மெதுவாக நடந்து, பாறையின் மேலேறி நின்று தொலைநோக்கியில் பார்த்தார். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. காதடைக்கும் தண்ணீரின் சத்தம். வலக்கரையோரம் நதியின் ஓட்டம் பெருஞ்சத்தமாய்க் கேட்டது.

பென்னி மலைச்சரிவில் இறங்கினார்.

“ஜான், இப்போ போய் என்ன செய்யப் போறோம்? இருட்டில் ஒன்னும் தெரியாது. விடிஞ்சு போய்ப் பார்க்கலாம்.” டெய்லரின் குரல் நீரின் சத்தத்தில் தேய்ந்தது. பென்னி சரிவில் இறங்கியிருந்தார்.

அவசரமாக, விளக்குகளும் தொலைநோக்கிகளும் எடுத்துக்கொண்டு மற்றவர்களும் நீரில் தத்தளித்துச் சரிவில் இறங்கினார்கள்.

வெள்ளம் பெருக்கெடுத்ததில் மண் சரிந்து பாதைகள் அரித்துப்போயிருந்தன. காலுக்குப் பிடிமானம் இல்லாமல் பென்னி சறுக்கினார். மரக்கிளைகளை ஆதரவுக்குப் பிடித்ததில் முறிந்திருந்த அவை கையோடு வந்தன. மண் அடித்துப் போனதால் கூர்மையான கற்கள் துருத்திக்கொண்டு கால்களைக் கிழித்தன.

ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தார். ஈரத்தில் நனைந்த பூட்ஸ் சுமை கூடி காலைப் பின்னுக்கு இழுக்க, பூட்ஸை அங்கேயே கழற்றி விட்டார். ஈரத்தில் ஒட்டியிருந்த காலுறையுடன், விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் முன்னேறினார். பின்னால் டெய்லர் பேசும் சத்தம் கேட்டாலும் பென்னி காத்திருக்கவில்லை. அவர் சிந்தையெல்லாம் இரண்டு தடுப்புச் சுவர்களும் பத்திரமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதிலேயே இருந்தது.

மலைச்சரிவில் இறங்கினாலும் இரண்டு கரையிலும் வெளியேறும் தண்ணீரின் சத்தம் அச்சம் கொடுத்தது. நான்கு மணி நேரத்திற்கு நிற்காமல் மழை பெய்திருக்கிறது. பேய் மழை. குறைந்தது மூன்று, நான்கு அங்குலம் மழையாவது இருக்கும். பருவமழைக் காலத்தில் ஒரு மாதத்திற்குப் பெய்ய வேண்டிய மழை. மதுரா டிஸ்ட்ரிக்ட்டில் ஓராண்டுக்குப் பெய்ய வேண்டிய மழையில் ஆறில் ஒரு பங்கு. எதைக் குலைக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு இந்த மழை பெய்ததோ? வழியில் காலில் குத்திய கல், மரக்குச்சிகள், பொரும்பு, கடிக்கும் அட்டைகள் எதையும் பொருட்படுத்தாமல் முன்னேறினார் பென்னி.

ஒரு இர்ரிகேஷன் இன்ஜினீயருக்குத் தண்ணீரின் சத்தம் பழகிவிடும். கால்வாய் வெட்டவும், வாய்க்கால் அமைக்கவும், மதகுகளைச் சீர் செய்யவும், குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ளவும் எப்போதுமே தண்ணீர் அவனின் தினசரிகளில் ஒன்று. தண்ணீரில் நிற்பதும், தண்ணீரில் வேலை செய்வதுமாய், தண்ணீர்தான் வாழ்க்கை. சமவெளிகளில் தண்ணீரில் நாள் முழுக்க நின்று வேலை செய்தாலும் தண்ணீரைவிட்டு இரவில் தப்பித்துவிடலாம். வெளியேற வழியே இல்லாத நடுக்காட்டில் தண்ணீர்ச் சத்தத்துக்குள்ளேயே உழல்வது தாங்க முடியவில்லை. கவர்னர் கன்னிமாரா வருகையில் ஒரு பெண், ‘தண்ணீரின் சத்தம் பைத்தியம் பிடிக்க வைக்கிறது’ என்று சொன்ன வார்த்தையை, தான் ஒவ்வொரு நிமிடமும் அனுபவிப்பதாக நினைத்தார்.

மலைச்சரிவின் முடிவில் கண்ணுக்குத் தெரிந்த நதியை உற்றுப் பார்த்தார். நீர்மட்டம் ஆறேழு அடி கூடியிருக்கலாம். பென்னி திகைத்தார்.

கண்முன் ஆர்ப்பரித்து நகரும் நதியைப் பார்க்கும் இந்தக் கணத்தில் விரக்தி மேலிட்டது. ‘எல்லாப் போராட்டங்களும் முயற்சிகளும் விரயமாய்ப் போய்விடுமா?’ என்ற கேள்வி தந்த அழுத்தம் வெறுமையைக் கொடுத்தது. மழையின் புதுவெள்ளத்தில் குதூகலமாய் பேரியாறு ஆர்ப்பரித்துச் சென்றது. துளி வெளிச்சமும் இல்லாமல் அடர்ந்திருந்த காட்டில், அகன்று ஓடிய பேரியாறு வெள்ளிபோல் ஒளிர்ந்தது.

நீரதிகாரம்
நீரதிகாரம்

பென்னி நின்றிருந்த இடத்திற்கு டெய்லரும் மெக்கன்சியும் லோகனும் வந்து சேர்ந்தார்கள்.

“முதல்முறையா இந்தப் பெரியாற்றைப் பார்த்து எனக்கு பயம் வருது.”

பென்னியின் வார்த்தையைக் கேட்டுச் சிலிர்த்துத் திரும்புவதுபோல் பேரியாற்றின் சிற்றலையொன்று பென்னியின் காலை நனைத்துத் திரும்பியது.

“நீ சொல்றதுதான் ஜான், என்ன நடந்திருக்கோ அதை நல்லதாக்கிக்கலாம் வா” டெய்லர்

நம்பிக்கைகள் தகர்ந்து, உறுதிகுலைந்த மனத்துடன் பென்னியும் இன்ஜினீயர்களும் கரையோரம் நடந்தார்கள்.

எதிர்க்கரையில் கையிலிருந்த தீப்பந்தத்தை ஆட்டினான் அந்தோணி.

“தொர, நில்லுங்க. வந்துடுறேன்” என்றவன் படகிருந்த இடத்தைப் பார்த்தான். கரையோரம் ஒரு படகும் இல்லை. வெள்ளத்தில் சென்றிருந்தன.

பென்னிக்குப் புரிந்தது.

“நீ போய் சுவர் எப்படி இருக்குன்னு பார்த்துட்டுச் சொல்லு” என்றார் டெய்லர்.

தடுப்புச் சுவரிருக்கும் இடத்தை நோக்கி ஓடிய அந்தோணி, சில நிமிடங்களில் திரும்பியவன், எதிர்க்கரையில் மண்டியிட்டு, தரையில் குத்தி, தலையில் அடித்துக்கொண்டு அழுதான்.

தன்னை மறித்துக்கொண்டிருந்த முதல் தடுப்புச் சுவரை முழுமையாக எடுத்துச் சென்றிருந்தது பேரியாறு.

- பாயும்