மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 89 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

கடிதத்தை வாசித்து முடித்த பென்னி, பிள்ளையிடம் டெய்லரையும் மெக்கன்சியையும் அழைத்து வரச்சொன்னார். கீழே ஓடும் வெள்ளத்தின் சத்தம் மலையுச்சிக்குக் கேட்டது.

தடுப்புச் சுவரின் சில இடங்கள் மட்டுமே எஞ்சியிருக்க, வெள்ளம் முழுமையாக எடுத்துச் சென்றிருந்தது. மண் அணைக்கு மேலே வெள்ளம் சென்றதில், மண் அணை பெரிய பாதிப்புகளின்றித் தப்பித்தது.

தேவனின் பிறப்பை எதிர்நோக்கியிருந்த கொண்டாட்ட மனநிலை முழுவதுமாகக் காணாமல் போயிருந்தது. மகிழ்வும் துயரமும் கலந்த நாள்களில் துயரங்களில் இருந்து காக்கவே தேவனின் வருகையை ஒவ்வொரு ஆன்மாவும் எதிர்நோக்கும். துயரங்களால் மட்டுமே நிறைந்திருந்த நிராதரவான நிலையில் தேவனின் பிறப்பைக் கொண்டாட வேண்டுமென்ற எண்ணமும் மரத்துப்போயிருந்தது.

பென்னி குக்
பென்னி குக்

பேரியாற்றின் வெள்ளம் அடுத்து வந்த மூன்று நாள்களுக்கும் குறையவில்லை. அணை கட்டுமிடத்திலிருந்து மலைச்சரிவில் கீழிறங்கியவர்கள், அங்கெல்லாம் மழையில்லாததைப் பார்த்துத் திகைத்தார்கள். ஐந்தாறு மைல் சுற்றளவைத் தாண்டி, காடு சமநிலையில் இருந்தது. பெரியாறு புரண்டோடி வரும் வழி மட்டுமே பிரளயத்தின் ருசிகொண்டு பெருக்கெடுத்தது.

பென்னி மனதைரியம் கொண்டு படுக்கையிலிருந்து எழுவதற்கு இரண்டு நாளானது. கண்விழித்ததும் வெளியில் வந்து மலைக்குன்றின் உச்சியில் நின்று பெரியாற்றைப் பார்த்தார். பத்துப் பன்னிரண்டடி மட்டத்திற்கு நீர் புரண்டோடியது. வயிற்றிலொரு கலக்கம் திரண்டது. பெரியாறு பெரிய சவாலென்று நினைத்திருந்தார். அதனருகில் செல்வதற்கு அனுமதிக்காத அளவுக்குத் தீவிரம் காட்டுமென நினைக்கவில்லை. பெரியாறு, வெல்ல முடியாத போர்த்தளபதியாய் களத்தில் எழுச்சியுடன் நிற்பதாகப் பென்னிக்குள் எண்ணமெழுந்தது. தான் தோல்வியுற்ற வீரனாய் இயற்கையின் முன்னால் ஒருபோதும் நின்றுவிடக்கூடாது என்று தீவிரமும் தீயாய்க் கனன்றது.

மழை நின்று வெள்ளம் வடியாத மூன்றாம் நாளின் காலைப்பொழுதில் ரத்தினம் பிள்ளை, கல்கத்தாவிலிருந்து வந்திருந்த கடிதத்தை எடுத்துவந்தார். கடித உறையைப் பிரிக்கச் சொல்லி, பென்னி கைகாட்டினார். சின்னஞ்சிறிய கத்தியின் கூர்முனையினால் உறையின் தலைப்பில் கோடிழுத்தார் பிள்ளை. வாய் பிரிந்தது தெரியாமல் உறை இரண்டாகப் பிரிந்தது. உள்ளிருந்த கடிதத்தை எடுத்து பென்னியிடம் கொடுத்தார்.

கடிதம் படித்துக்கொண்டிருந்த பென்னியைப் பார்வையில் ஆராய்ந்தார் பிள்ளை. சுண்ணாம்பு ஆய்வு செய்வதற்காக ஆறு வருஷத்துக்கு முன்பு வந்திருந்த பென்னியை முதன்முறையாக குருவனூத்தில்தான் பார்த்திருந்தார். ஒடுங்கி இறுகிய முகம். உணர்வுகளையும் வார்த்தைகளையும் தடித்த மீசைக்குள் உள்ளடங்கியிருந்த உதடுகள் தமக்குள் அடக்கியிருந்தன. கண்களில் தீட்சண்யம் ஒளிர்ந்தது. மெலிந்த உடலின் உறுதி, ராணுவ வீரனுக்கானது என்பதைச் சொல்லியது. கவனம் குவிந்த ஒரே பார்வையில் விரைந்து முடிவெடுக்கும் பென்னியின் ஆற்றலைக் கவனித்திருந்தார் பிள்ளை. பொதுவாக, பிரிட்டிஷ்காரர்களிடம் வேலை நேரத்தில் அவசியமற்ற பேச்சோ, நடவடிக்கையோ, வேடிக்கையோ இருப்பதில்லை. நள்ளிரவுவரை மது விருந்தில் திளைத்திருப்பார்கள். விடிவதற்குள் அடுத்த நாளினைத் தொடங்கிவிடுவார்கள். தீவிரமாக வேலையில் கரைத்துக்கொள்ளும் அர்ப்பணிப்பைப் பிரிட்டிஷாரிடம் பார்த்திருக்கிறார் பிள்ளை. பென்னி அப்போது காற்றாய் விரைவார்.

இப்போது பென்னியின் ஒடுங்கிய கன்னம் மேலும் உள்ளொடுங்கி, எலும்பு துறுத்தியிருந்தது. ஆழத்தில் புதைந்திருந்தது கண். உறக்கமற்ற இரவுகளும் தொடர்ந்து எழுகின்ற சிக்கல்களும் பென்னியின் உடம்பை நலியச் செய்திருந்தன. ஈடுபாடற்ற சிந்தனையுடன் அவரின் விழிகள் கடிதத்தில் மேலும் கீழும் சென்றன. புருவம் மட்டும் குவிந்து, நெளிந்தது. பென்னியின் உடல்நலிவு பிள்ளைக்குள் கவலை தந்தது.

நீரதிகாரம்
நீரதிகாரம்

கடிதத்தை வாசித்து முடித்த பென்னி, பிள்ளையிடம் டெய்லரையும் மெக்கன்சியையும் அழைத்து வரச்சொன்னார். கீழே ஓடும் வெள்ளத்தின் சத்தம் மலையுச்சிக்குக் கேட்டது. பென்னி கண்ணை மூடி, நினைவுகளால் காதுகளைப் பொத்தினார். காதில் பஞ்சு வைத்து அடைத்துக்கொள்ள நினைத்தார். முன்பெல்லாம் நீரின் சத்தம் கேட்டால், சந்தோஷமாக இருக்கும். இப்போது தண்ணீர்ச் சத்தம் கேட்டாலே மனத்துக்குள் திகில் பரவுகிறது.

மெக்கன்சி தேக்கடிக்குச் சென்றிருப்பதாகத் தகவல் சொல்லியபடி டெய்லர் பென்னிக்கு எதிரில் வந்து உட்கார்ந்தார். டெய்லருக்குப் பின்னால் வந்த பிள்ளை தயங்கி நின்றார். ‘தான் உள்ளே செல்லலாமா, வேண்டாமா?’ என்ற தயக்கம். தன்னுடைய எல்லைக்குள் நின்றுகொள்வதில் எப்போதும் கவனமாக இருப்பார் பிள்ளை.

“சாப்பிடறதுக்கு முன்னயே வெத்தலை போட்டாச்சா மிஸ்டர் பிள்ளை?” டெய்லர்.

“படுக்கையில இருந்து எழுந்தவுடனே, கை இலைச் செல்லத்தைத்தான் தேடும் தொர. பல்லுல தீர்த்தம் படுதோ இல்லையோ, சுள்ளுனு வெத்தலைக் காரம் உள்ள எறங்கணும்...” சொல்லும்போதே பிள்ளைக்கு நா ஊறியது. பென்னியிடம் கடிதம் கொடுப்பதற்காக உள்ளே செல்வதற்காகத்தான் வாயில் அதக்கியிருந்த வெற்றிலையை அவசர அவசரமாக விழுங்கிவிட்டுச் சென்றிருந்தார்.

“நீ இவ்வளவு சோர்ந்துடுவன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை ஜான். எத்தனை நெருக்கடிகள பாத்திருக்க, சமாளிச்சிருக்க?”

“எனக்கே ஏன்னு புரியல. ஆனா உள்மனசுக்கு என்னவோ புரிஞ்சிருக்கு. புகையா, கலங்கலா இருந்த காரணம், இப்போ துலக்கமா தெரிஞ்சிடுச்சு. இந்தா, இதைப் படி...” பென்னி, கையில் இருந்த கடிதத்தைக் கொடுத்தார்.

கையில் வாங்கிய டெய்லர், அண்டர் செக்ரட்டரி மார்ஷலிடம் இருந்து வந்திருப்பதைப் பார்த்தார். மேலே கல்கத்தா முத்திரை இருந்தது. மார்ஷலுடன் பென்னிக்கு இருந்த மோதலை டெய்லர் நன்கறிவார். மார்ஷல், தன் அதிகாரத்தை நிலைநிறுத்தும் காரியங்களைத் தேடிப்பிடித்துச் செய்வதில் தேர்ந்தவர்.

“என்னாச்சு ஜான்?”

“நான் சொல்லிக்கிட்டு இருந்ததுதான், மார்ஷல் சரியான விஷயத்தைக் கையில் எடுத்துக்கிட்டார்.”

டெய்லர் வேகமாகக் கடிதம் படித்தார்.

“இதென்ன சாதாரண கட்டடம் கட்டுறதா? சுண்ணாம்பு வாங்கினோம், கல்லை அடுக்கினோம், கலர் அடிச்சோம்னு முடிக்கிறதுக்கு? ஒவ்வொருத்தரும் உயிரைப் பணயம் வச்சு, இந்த நடுக்காட்டுல செத்துக்கிட்டு இருக்கோம். அதிகாரியாயிட்டா மூளை வேலை செய்யாதா? மூளை வேலை செய்யாதவங்கதான் அதிகாரி ஆகிறாங்களா?”

“ஒரு கோணத்துல அவரோட கேள்வி ரொம்ப சரிதானே டெய்லர்? 84-ல் செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸ் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தார். அனுமதி கொடுத்ததுல இருந்து ஐந்து வருஷத்துல அணையைக் கட்டி முடிச்சிருக்கணும். ஆனா நாம இன்னும் பவுண்டேஷனே போடலையே?”

“84-ல் அனுமதி கொடுத்தாங்க சரி, பணம் எப்போ கொடுத்தாங்க, 87-ல்தானே பணம் ஒதுக்குனாங்க? அது மறந்து போயிடுமா?”

“அதுவும் சரிதான். அதுக்கும் காரணம் நம்மைத்தானே சொல்லுவார்? மெட்ராஸ் பிரசிடென்சியுடைய செக்ரட்டரி, நான், திருவிதாங்கூர் ரெசிடென்ட், எல்லாம் திருவிதாங்கூரோடு சரியாப் பேசி, இடத்தை வேகமா வாங்கியிருந்தா, இந்தத் தாமதம் வந்திருக்காதேன்னு நம்மைத் திருப்பிக் கேப்பாங்க. அணை கட்டுற இடத்தை வாங்குறதுக்கான பேச்சு வார்த்தையைத் திட்டம் அனுமதி கிடைச்ச பிறகும் மூணு வருஷத்துக்குப் பேசி முடிக்காதது நம்முடைய தவறுன்னுதான் சொல்லுவாங்க.”

“அதுக்காக இப்படியா எழுதுவார்? பெரியாறு புராஜெக்ட் பத்தி, சாதகமா சொல்லி, திட்டத்தை நீட்டிக்க என்கிட்ட ஒரு காரணமும் இல்லை. என்ன செய்யலாம்னு கேட்கிறாரே? அவரோட வார்த்தையில எவ்ளோ அதிகாரம்? நாம எல்லாம் மேல்மலையில கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருக்கோம்னு நெனைக்கிறாரா?”

பென்னி, அமைதியாக இருந்தார். கடந்த ஒரு மாதமாகவே அவர் மனத்திற்குள் திட்டத்தின் காலம் முடிவடைவது பற்றிய சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. களத்தின் நிலைமை மோசமாக இருந்ததால் அவரால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அண்டர் செக்ரட்டரியோ, சீப் இன்ஜினீயரோ ஆய்வுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார். மாதாந்திர அறிக்கைகளுக்கு ‘கடிதம் பதிவு செய்யப்பட்ட’தாகப் பதில் வந்தது. அந்த மேலோட்டமான பதில் வேறெதற்கோ அடித்தளமாக இருக்கப்போகிறது என்ற எண்ணம் பென்னிக்குள் இருந்தது.

தன் திட்டத்தில் மாற்றுக்கருத்துச் சொன்ன பிரௌன்லோவின் யோசனையை ஏற்றுக்கொண்டு, திட்டத்தை மாற்றித்தரச் சொன்னால்தான் அனுமதிக்க முடியும் என்று மார்ஷல், தன்னிடம் மிரட்டலாக நடந்துகொண்டதில் இருந்து பென்னி, அவரிடம் நேரடியான கருத்துப் பரிமாற்றங்களைக் குறைத்துக்கொண்டார். பிரௌன்லோவின் ஆலோசனைப்படி, நீர்ப்போக்கி வைக்கிறோமா என்று கண்காணிக்க நினைத்திருப்பார். அணை வேலையே தொடங்காதது அவரின் எண்ணத்திற்கு அனுகூலமாக அமைந்துவிட்டது. அணை கட்டி முடிப்பதற்கான ஐந்தாண்டுக் காலம் கடந்த அக்டோபருடன் முடிந்தது. திட்டத்தின் பணிகள் எத்தனை சதவிகிதம் முடிந்திருக்கிறது, இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படும், கட்டுமான வேலையின் முன்னேற்றம் நம்பிக்கையளிக்கும்படி இருக்கிறதா ஆகிய கேள்விகளுக்குச் சீப் இன்ஜினீயர் பதிலளிக்க வேண்டும். அணைக்கு அடித்தளமே இன்னும் அமைக்கவில்லை என்ற நிலையில் சீப் இன்ஜினீயர் என்ன பதிலளிப்பார்? அவரின் அமைதியை மார்ஷல் பயன்படுத்திக் கொண்டார்.

பெரியாறு திட்டம் பற்றி நம்பிக்கை தரும் முன்னேற்ற அறிக்கைகள் எதுவும் பெறப்படவில்லை. பிரிட்டிஷ் சர்க்காரின் பணம் ஒதுக்கப்பட்டு, அப்பணம் செலவு செய்யப்படாமல் இருக்கிறது. செலவழிக்கப்படாத பணத்தை வரும் ஆண்டுக்கணக்கில் சேர்க்கவும் கூடாது. சேர்த்தால் வரும் ஆண்டுக்கான ஒதுக்கீட்டைவிட, செலவினம் அதிகமாக இருக்கும். திட்டத்தினால் பலனடையப்போகிற நிலங்களின் வருவாயைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, இந்தத் திட்டம் தேவையான, முக்கியமான திட்டமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உண்டாகும் தாமதம், சர்க்காரின் பண முடக்கத்துக்கு அடிப்படையாக இருக்கிறது. பெரியாறு புராஜெக்ட்டின் சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயரின் அறிக்கையின் அடிப்படையில், திட்டத்திற்கான கால அளவை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று மார்ஷல் கடிதம் அனுப்பியிருந்தார். மார்ஷலின் கடிதத்தை, சீப் இன்ஜினீயர் பென்னிக்கு அனுப்பியிருந்தார்.

“நாம ஒவ்வொரு நாளும் எப்படிப்பட்ட போராட்டத்தில் இருக்கிறோம்னு அவங்களுக்குத் தெரியாதா ஜான்?”

“தெரியலை போல இருக்கே?”

“சரி, நீ இப்போ என்ன எழுதப்போறே?”

பென்னி கண்மூடி, தண்ணீரின் சத்தத்தைக் கேட்டார். சத்தம் அவரை மேலும் மேலும் ஆழத்திற்கிழுத்தது.

“யோசிக்கிறேன்.”

“இன்னும் எவ்வளவு காலமாகும்?”

“நாம் குறிப்பிட்டிருந்த அதே காலம்தான். அஸ்திவாரம் தொடங்கிட்டால் நிச்சயம் ஐந்து வருஷத்தில் முடிச்சிடலாம்.”

‘‘அப்போ, அதே ஐந்து வருஷமாகும்னு எழுது. 95-ல் முடிச்சிடுவோம்னு எழுது.”

“எழுதணும். அவரோட கடிதத்தொனி ரொம்பக் கஷ்டப்படுத்துது. இங்க பெரியாறு நம்மள தோற்கடிச்சே தீருவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டுச் சமருக்கு நிக்குது. கட்டக் கட்ட எல்லாம் வெள்ளத்துல போகுது. எப்படி பௌண்டேஷனை நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரப்போறோம்னு கவலையில இருக்கப்ப, மார்ஷலுடைய கடிதம் ரொம்பச் சோர்வடைய வைக்குது.”

“கவலை, கஷ்டம், துயரம் இதெல்லாம் பொருட்டா ஜான்? தோல்வி வர வர வெற்றிய நோக்கி நாம முன்னேற ஆரம்பிச்சுட்டோம்னுதானே அர்த்தம்?”

டெய்லரின் வார்த்தையைக் கேட்டு, பென்னி வியந்தார்.

“ஆமாம் ஜான். என்னால் கவலை, கஷ்டத்தோட வெம்மையைத் தாங்க முடியாது. தோல்வின்றது கசப்பே இல்லை. சொல்லப்போனா கசப்பு சாப்பிட சாப்பிடத்தான் இனிப்புப் பிடிக்கும். பெரியாறு நமக்குச் சவால் வைக்குது. தினம் எவ்வளவு ஆக்ரோஷமா, எத்தனை ரூபத்துல வர்றேன் பாருங்கன்னு சொல்லுது. ராயல் இன்ஜினீயரிங்கில் படிச்சிட்டு வந்த நமக்கு, இந்த யுத்திகூட பிடிபடலைன்னா எப்படி? யோசிக்காதே, கெளம்பி வா, போய், பெரியாறா நாமான்னு பார்ப்போம்.”

டெய்லரின் உத்வேகம் பென்னிக்குள்ளும் பரவியது. வீட்டுக்குள் சென்றவர், புதிய உடைமாற்றி, காலில் பூட்ஸும் வாயில் ஹூக்காவுமாக வந்தார்.

வெளியில் நின்றிருந்த பிள்ளையிடம், “மாயன் எங்க இருக்கார்னு பார்த்து, துறையூர்ப் புகையிலை இருந்தா வாங்கிட்டு வாங்களேன்” என்றார்.

“எந்த ஊர்ப் புகையிலைன்னாலும் துரை கப்பல்ல ஏத்தினாலும் கொண்டாந்துட மாட்டீங்க, மாயன்கிட்ட கேட்டு வாங்கிட்டு இருக்கீங்களே துரை?”

“மிஸ்டர் பிள்ளைவாள், மாயனுக்கும் எனக்கும் இந்தத் துண்டுப் புகையிலைதான் பந்தமா இருக்கு. ஒவ்வொரு முறையும் புகையிலையைத் துண்டுல மடிச்சு வச்சுக்கிட்டு நான் இருக்கிற இடம்தேடி வந்து மாயன் நிக்குறத பாக்கணுமே? புகையிலையவிட அந்த அன்பு தர்ற போதைதான் அதிகமா இருக்கும்.” டெய்லரின் புன்னகையில் மந்தகாசம்.

கலெக்டர் ஆபீசில் இருக்கிற வெள்ளைக்காரர்கள் முகம் கொடுத்துப் பேச மாட்டார்கள். அவர்கள் முன்னால் எத்தனை மணி நேரமென்றாலும் நிற்க வேண்டும். கையைக் கட்டிப் பணிவு காட்ட வேண்டும். எதிர்க்கருத்துப் பேச முடியாது. அவர்களாகக் கேட்காமல் வாய் திறக்கக் கூடாது. ஓவர்சீயர் என்றாலும், ஹெட் அசிஸ்டென்ட் என்றாலும், கலெக்டர் என்றாலும் விதி ஒன்றுதான்.

பி.டபூள்யூ இன்ஜினீயர்கள் காட்டு மேட்டில் இருப்பதால் அவர்களுக்குச் சுதேசி ஆள்களின் உதவி எப்போதும் தேவை. அதனாலேயே சகஜமாகப் பழகுவார்கள். வாழ்வின் கடினமான நேரங்களில்தான் மனிதர்களின் போலி கௌரவங்கள் கழன்று விழுகின்றன என்று நினைத்துக்கொண்ட பிள்ளை, இரண்டு துரைமார்களையும் பின்தொடர்ந்தார்.

காற்றில் குளிர்ச்சி குறைந்து, இதம் கூடியிருந்தது. ஹூக்காவினைப் புகைத்து, புகையை வெளியேற்றியவாறு, குழப்பம் கலைந்த மனநிலையுடன் பென்னி, சரசரவென்று மலைச்சரிவில் இறங்கினார். மழையில் குழைந்திருந்த செம்மண் காலை உள்ளிழுத்தது. சுதாரித்து, கவனமாக அடியெடுத்து வைத்து முன்னேறினர் இருவரும்.

நீரதிகாரம்
நீரதிகாரம்

“தொரைக மன்னிக்கணும்...” குரல் கேட்டு நின்றனர்.

“மலைமேல தொரைக வீட்டுக்கு வந்து பாக்கலாமான்னு தெரியல. அதுதான் விடியறதுக்கு முன்னால இருந்து குத்த வச்சு பாதையிலயே உக்காந்திருக்கேன்.”

குரல் எங்கிருந்து வருகிறது என்று சுற்றிப் பார்த்தனர். பாதையில் இருந்த கருங்கல் பாறைக்குப் பின்னாலிருந்து கும்பிட்டபடி வந்தாள் தேவந்தி.

“ஓ, பூசாரிப் பெண்ணா?”

“ஜான், நீ லண்டன் போயிருந்தப்ப, யானை குழியில விழுந்துடுச்சே, அப்போ இவங்கதான் பெரிய யானைகள கட்டுப்படுத்தினாங்க.”

“நீ எழுதினது ஞாபகத்துல இருக்கு.”

“சொல்லு, என்ன விஷயம்?”

“தொர, பேரியாத்துக்குக் குறுக்க கட்டுற சுவரை, பேரியாறு அசையாம கொள்ளாம பேத்து எடுத்துக்கிட்டுப் போயிடுதாமே? காணிங்க வந்து சொன்னாங்க.”

“மழை பேஞ்சு அதிக வெள்ளம், அதனாலதான்.”

“இல்லைங்க தொர. தண்ணியும் சாமிதானே? முத்தியம்மை, கண்ணகியம்மை மாதிரி எங்களுக்குப் பேரியாறும் சாமிதான். அதுங்க வழியில நாம போவக்கூடாது தொர. அதுங்களுக்குக் கோவம் வந்துடிச்சின்னா துவம்சம் பண்ணிட்டுத்தான் போவும்ங்க.”

“நாங்க எங்க போனோம்?”

“ஆத்தை மறிக்கிறீங்களே? நான் பொறந்ததுல இருந்து காட்டுல கெடக்கிறேன் தொர. அதுவும் பேரியாத்துக் கரையிலயே கெடக்கிறவ. ஆக்ரோஷமாயிட்டான்னா கிட்ட நெருங்க முடியாது. இந்தக் காட்டுல எத்தனையோ நதிக இருக்கு. ஓடைங்க, அருவின்னு இருக்கு. ஆனா பேரியாறுதான் மூத்தவ. கண்ணகியாத்தாவையே பாத்தவளாச்சே?”

“என்ன விஷயம்னு சொல்லு தேவந்தி.”

“பெரிய தொர மன்னிக்கணும். ஆத்தை மறிக்கறதால அவெ கோவம் அதிகமாயிடுச்சி. நம்பலைன்னா நான் ஒன்னு சொல்லுறேன், பாருங்க. மலை உச்சிமேல ஏறி நின்னு பாருங்க. சுத்தி, இங்க ஐஞ்சாறு மைல தவித்து, வேற எங்கயும் மழையில்ல. வெள்ளமும் இல்ல. ஒரு மாசமா விடாம இங்க மட்டும் எப்படி மழை பேயுது? வைக்கிற பச்சைச் சுவரை, அசங்காமப் பேத்து எடுத்துட்டுப்போது? பேரியாத்துக்குக் கோவம் வந்தா, இந்தக் காட்டையே நாசம் பண்ணிடுவா. இங்க இருக்க மலைக்காணிங்கல்லாம் எங்க போவுங்க? எப்படிப் பிழைக்கும்ங்க? கும்பிடுற தெய்வம் மட்டும் இருக்க, கும்பிடுற ஆளுங்க இருக்காது.” தேவந்தி இரு கைகளைக் குவித்து, பென்னியை வேண்டினாள்.

“அணை கட்டுறதை நிறுத்தச் சொல்லுறீயா?”

“ஐயோ தொர, எங்க புவனேந்திர ராஜாவே சொல்லிட்டாரே, அது மருதைக்குப் போற தண்ணி. ராஜாவோட மூதாதைங்க இருக்க ஊரு. தண்ணி அவசியம் போயே தீரணும்னு சொன்னாரே?”

“அப்புறமென்ன?”

“அவளோட அனுமதிய வாங்கிட்டுச் செஞ்சீங்கன்னா, அவெ கோவம் ஆறிடுவா.”

“என்னது?” இருவரும் அதிர்ந்தனர்.

“ஆமாம் தொர. பேரியாத்துக்கிட்ட அனுமதி வாங்கிட்டம்னா, அவளோட பூரண ஆசி கெடைச்சிடும். உங்க வேலைக்கும் குந்தகம் வராது.”

பென்னியும் டெய்லரும் ஒருவரையொருவர் பார்த்தனர்.

“தேவந்தி, உன்னோட வழக்கமெல்லாம் எங்ககிட்ட சொல்லாதே. வெள்ளம் அதிகமா இருக்கிறதால தடுப்புச் சுவர் அடிச்சிக்கிட்டுப் போகுது. வெள்ளம் குறைஞ்சா வேலை ஆரம்பிச்சிடுவோம்...” சொல்லிவிட்டு பென்னி நடக்கத் தொடங்கினார்.

“தொர... தொர... கொஞ்சம் நில்லுங்க. நீங்க எத்தினியோ ஆத்த பாத்திருக்கலாம். ஆனா இவெ காட்டுச் சூலி. மனசுல வஞ்சகம் வச்சிட்டா விடமாட்டா.”

“ஓ ஜீசஸ்... பெரியாறைக் கூட்டிக்கிட்டு வர்றியா, அனுமதி கேட்கிறோம்?” டெய்லரின் குரலில் கோபம் தெரிந்தது.

“எப்போன்னு சொல்லுங்க தொர. கூட்டிக்கிட்டு வர்றேன்.”

“என்னது, கூட்டிக்கிட்டு வர்றியா?” டெய்லர் அதிர்ந்தார்.

“தொர, காட்டுல இருக்க பெரியவுக கிட்ட பேசணும்னா அதுக்கு ஒரு ஆளிருக்கு. கடுவா, புலிகன்னு மிருகங்க கிட்ட பேசணும்னா அதுக்கு ஆளுக இருக்கு. ஏன், கையில புடிக்க முடியாத காத்தைக் கண்ணுமுன்னால நிறுத்தி வச்சுப் பேசுறதுக்கும் ஆளுக இருக்கு தொர.”

வியப்பும் நம்பிக்கையின்மையும் கலந்த உணர்வில் நின்றனர் இருவரும்.

“நீங்க சரின்னு சொல்லுங்க தொர. நான் உடையான்கிட்ட உடனே போறேன். பேரியாத்துகிட்ட அனுமதி வாங்குறதுக்கு ஆள அனுப்பச் சொல்லுறேன்.”

“விளையாடாதே தேவந்தி... கெளம்பு” என்று சொன்ன பென்னி, வேகமாகச் சரிவில் இறங்கினார்.

தேவந்தி, கூப்பிய கைகளும் கலங்கிய கண்களுமாகத் தன்னைக் கடக்கும் காலடித் தடங்களைப் பார்த்து நின்றாள்.

பென்னி, எதிர்க்கரைக்கு அந்தோணியின் ஓடத்தில் சென்றார்.

‘பெரிய தொரை, சுவர் அடிச்சிக்கிட்டுப் போனதைப் பார்த்துட்டுப் போனவர்தான், படுத்தவர் இன்னும் எழுந்துக்கலையாம்’ எனக் கவலையோடு, மலைக்குன்றையே பார்த்துக்கொண்டிருந்த வேலையாள்கள் பென்னியைப் பார்த்ததும் சந்தோஷத்தில் குழுமினர். கையெடுத்துக் கும்பிட்டனர். அருகில் பார்க்க போட்டி போட்டனர். பெண்கள் தயக்கத்துடன் தள்ளிநின்று நடப்பதை உற்சாகத்துடன் பார்த்தனர்.

“உடம்புக்கு என்னாச்சு தொர?” சங்கிலி பென்னியின் அருகில் வந்து கேட்டான்.

“நல்லா இருக்கேனே, ஒன்னுமில்லை எனக்கு.”

“சாமிதான் பெரிய தொரைக்குக் காய்ச்ச வந்திடுச்சின்னு ஒவ்வொரு மரத்து முன்னாடியும் நின்னு சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தான்.”

“சாமி எங்க?”

“இப்பவும் எங்கயாவது மரத்துமேல உக்காந்துகிட்டு இருப்பான்.”

“வெள்ளம் ரெண்டு மூணு நாளுல வடிஞ்சிடும். உடனே வேலையை ஆரம்பிச்சிடலாம். இப்போ நேரம் கெடைக்கிறப்ப மணலை மூட்டையாக் கட்டிப்போடுங்க. ஆத்தை மறிக்கிறதுக்கு, ஆத்தோட மண்ணைத்தான் எடுத்தாகணும் நாம. வேற வழியில்ல.”

“தொர, மனுசங்களே கரையா நின்னும் தடுத்து நிறுத்தினோம். அப்டியும் நம்மள ஏமாத்திடுச்சே தொர? எத்தினி பேரு தொர? சேத்துல இருந்து தூக்குன பொறவும் மூச்சு விட முடியாம, உடம்பு வலியில படுத்துக்கிட்டு கெடந்தாங்க. அவங்க உடம்பு வலிகூட இன்னும் போவல. ஆனா அதுக்குள்ள கட்டுன சுவரு அடிச்சிக்கிட்டுப் போயிடுச்சே.”

“பரவாயில்லை. மண் அணை உடையாம இருக்கே? அதனால பெரிய பாதிப்பு இருக்காதுன்னு நெனைக்கிறேன். பாத்துக்கலாம். கெளம்புங்க” என்ற பென்னி, தடுப்புச் சுவர் இருந்த இடத்துக்கு நடந்தார். தடுப்புச் சுவர், தான் இருந்த அடையாளத்துக்கு ஆங்காங்கே எஞ்சியிருந்தது. வெள்ளம் ஆக்ரோஷமாய் தடுப்புச் சுவரைப் பெயர்த்தெடுத்துச் சென்றிருந்தது.

“வெள்ளம் வடிஞ்சாதான் உண்மையான சேதம் என்னன்னு தெரியும். 12 எச்.பி. பம்ப் வச்சிருக்கோம். அது வெள்ளத்துல போயிடுச்சா இருக்கான்னு தெரியலையே?”

“என்ன நடந்திருந்தாலும் இப்போ நம்ம கையில ஒன்னும் இல்லை.”

“ஆமாம் ஜான்.”

“எனக்கிருக்கிற பெரிய கவலை... இருநூறடி நீளம், நாற்பத்தி மூணடி உயரம் தடுப்புச் சுவரோட இடிபாடுங்க எல்லாம் பௌண்டேஷன்ல தானே போய்த் தேங்கியிருக்கும்ன்றதுதான். பௌண்டேஷனுக்குள்ள தண்ணி நின்னாலே சிரமம். இப்போ கல்லு, மண்ணு, சுண்ணாம்புன்னு போய்ச் சேர்ந்திருக்கிற இடிபாடுகள எப்படி வெளியேத்தப் போறோம்னு தெரியலையே? எத்தனை மோட்டர் வச்சாலும் தண்ணிய மட்டும்தான் வடிச்செடுத்து வெளியேத்தும். கல்லு, மண்ண எப்படி வெளியேத்தப் போறோம் டெய்லர்? பதினெட்டடி ஆழமும் கல்லு மண்ணால நெரம்பியிருக்கும்னு நினைக்கிறேன்.”

நீரதிகாரம்
நீரதிகாரம்

“ஏறக்குறைய வேலையை முதல்ல இருந்து தொடங்குற மாதிரிதான்.”

தடுப்புச் சுவரின் அகன்ற கல்லொன்றை அப்போது பெயர்த்தெடுத்துக்கொண்டு நகர்ந்தது பேரியாறு.

“ஒரு கல்லையும் மிச்சம் வைக்காதா இந்தக் காட்டாறு?”

“காட்டாறுதான். நாம இதைக் குறைச்சு மதிச்சிட்டோம். மழை பெய்யும், வெள்ளம் வரும்னு ஆய்வு செய்தோமே தவிர, அதோட வேகத்தைக் கட்டுப்படுத்த இங்க என்ன வழின்னு யோசிக்கலை. ஒரு வருஷத்துக்கு ஆறு அடிச்சிக்கிட்டு வந்து சேர்க்கிற அளவு மண்ணையள்ளிக் கொட்டியிருக்கோம். தூசி மாதிரி தட்டிவிட்டுட்டுப் போயிடுச்சே?”

“வெள்ளம் வடியட்டும், அடக்க என்ன வழின்னு பார்ப்போம்.”

பென்னியும் டெய்லரும் நதிக்கரையின் ஓரமாக நடந்தார்கள். இருவரின் எண்ண அலைகள், நதியின் மேற்புற அலைகளைவிட வேகமாகவும் அடர்த்தியாகவும் இருந்தன.

நீரின் சத்தம் கொடுக்கும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, நதிக்கரையோரமே நடக்க விரும்பினார்.

பிள்ளை வேகவேகமாக இருவரையும் பார்த்து நடந்துவருவது தெரிந்தது.

“பேரணைக்குக் கீழே உள்ள வைகை பாசன ஆயக்கட்டுக்காரர்கள் எல்லாம் சேர்ந்து கலெக்டரைப் பார்த்திருக்கிறார்கள். கலெக்டர் சரியான பதில் சொல்லாததால், வழக்கு பதிய இருக்கிறார்கள்” என்று மதுரா கலெக்ட்ரேட்டிலிருந்து கிளார்க் ஒருவன் சேதியனுப்பியிருப்பதாகச் சொன்னார்.

பேரியாறு மலைப்பாம்பினைப்போல் ஒருமுறை உடலை நெளித்துப் பின், நேராக்கிப் புரண்டோடியது.

- பாயும்