மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 90 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

எஸ்தர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட நிறைய பேர் பழகியிருந்தார்கள். மருந்து மாத்திரை சாப்பிடவில்லையென்றால், மலைக்காட்டில் உயிர்பிழைத்திருக்க முடியாது என்ற உண்மை புரிந்தது

இருபதாம் தேதி பிடித்த மழை, கிறிஸ்துமஸ் நாளான இன்றும் நிற்கவில்லை. ஆர்ப்பாட்டமான முந்தைய மழையின் முகம் மாறி, ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்ததுபோல் மழை அமைதியாகப் பெய்தது. மரங்களை வேரோடு சாய்க்கும் உன்மத்தமில்லை. கிளைகளை உடைத்தெறியவில்லை. பாறைகளை உருட்டித் தள்ளி, பாதைகளை மறைக்கவில்லை. வீட்டுக் கூரைகளைப் பிய்த்தெறியவில்லை. கனமான இயந்திரங்களைத் தூக்கியெறியவில்லை. சுண்ணாம்பு அரைக்கும் கல் அரவை காற்றில் பறக்கவில்லை. ஓடங்களையும் படகுகளையும் வெள்ளம் இழுத்துச் செல்லவில்லை. ஆனால், முகத்தின் ஈரம் காயும் நொடிகூட மழை விடவில்லை. மழைத் தாரைகள் ஒருவரையும் அச்சுறுத்தாமல் விழுந்தபடி இருந்தன.

வெள்ளத்தின் மட்டம் கூடவும் இல்லை. குறையவும் இல்லை. பேரியாற்றின் வலக்கரையோரம் வெளியேறிய வெள்ளம், நதியை வளைத்துப் பிடித்து அணைப்பதுபோல், பின்பக்கத் தடுப்புச் சுவரைத் தொட்டு ஓடியது.

பென்னி குக்
பென்னி குக்

ஆக்ரோஷமான மழைக்குக் குடிசைக்குள் பதுங்கியிருந்த கூலிகள், நிற்காமல், தன்மையாகப் பெய்யும் மழையுடன் அணுக்கம் காட்டினார்கள். நனைந்தபடி மணல்மூட்டைகளைக் குவித்து வைத்தார்கள். மரச்சட்டங்களைத் தைத்தார்கள். மரங்களை வெட்டிப்போட்டார்கள். ஏற்கெனவே வெட்டிப் போட்டிருந்த மரக்கழிகளை அணை கட்டுமிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள். மழையிலேயே வேலை நடந்த மூன்றாம் நாள், பல பேருக்குக் குளிரும் காய்ச்சலும் வந்தது. விரித்திருந்த சாக்குப் பை அல்லது பாயுடன் பாயாக முடங்கிவிட்டார்கள். வேலையாள்களில் பாதிப் பேர் நோயாளியானவுடன், ஒர்க் ஷாப்புக்கு அருகில் கற்களையடுக்கி, கஞ்சி காய்ச்சி, பெரிய பெரிய மொடாக்களில் வைத்திருந்தார்கள். வெந்நீரும் கடுங்காப்பியும் குடித்துக் காய்ச்சலைத் தணித்தனர். ஐந்தாம் நாள் முகாமில் இருந்தவர்களில் காய்ச்சலின்றி யாருமில்லை. தலைவலியும் உடல்வலியும் அதிகமாக, படுக்கையில் முடங்கினார்கள்.

எஸ்தர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட நிறைய பேர் பழகியிருந்தார்கள். மருந்து மாத்திரை சாப்பிடவில்லையென்றால், மலைக்காட்டில் உயிர்பிழைத்திருக்க முடியாது என்ற உண்மை புரிந்தது. ஓடுகிற ஆற்றுத் தண்ணீரைப் பானைகளில் மொண்டு வைக்கும் வழக்கத்தை எஸ்தர் போராடித் தடுத்திருந்தாள். ஆங்காங்கு நதிக்கரையோரம் தோண்டி வைத்திருக்கிற உறைகிணறுகளில் தண்ணீர் எடுத்துத்தான் குடிக்க வேண்டும் என்ற பென்னியின் உத்தரவை ஒவ்வொருத்தரும் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கிறார்கள் என்று விழிப்பாகப் பார்ப்பாள். நூறு, இருநூறு குடும்பங்கள். நானூறுக்கும் அதிகமான தனி நபர்கள் என்று ஒவ்வொருவரையும் கண்காணிப்பது எளிய செயல் அல்ல. இதில் சாதிப் பிரச்சினை வேறு. எவ்வளவு சொல்லியும், இன்ஜினீயர்கள் மிரட்டியும், அந்தந்த சாதிக்காரர்கள் மட்டும் ஒரே இடத்தில் தங்குவதையும், அங்கு தங்களுக்குக் கீழான சாதிக்காரர்களை அனுமதிக்காததையும் மாற்ற முடியவில்லை. வெள்ளை துரைமார்களும் ஒரு கட்டத்திற்குமேல், ‘வேலை நடந்தால் சரி, இவர்களின் நம்பிக்கைகளுக்குள் நாம் குறிப்பிட்ட எல்லைக்குமேல் தலையிட முடியாது’ என்று ஒதுங்கிவிட்டார்கள். தண்ணீர்தான் பெரிய பிரச்சினை. தண்ணீரைச் சுற்றித்தான் ஆயிரம் பேரும் வசிக்கிறார்கள் என்றாலும், அவரவர் துவைக்கிற இடத்துக்கும், புழங்குகிற தண்ணீர் எடுக்கிற இடத்துக்கும் பனிப்போரே இருந்தது.

கிறிஸ்துமஸ் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நேற்றுக் காலையிலும் மதுரையிலிருந்து வந்திருந்த கூலிகளுக்கிடையே கலகம் எழுந்தது. ரத்தினம் பிள்ளை, பெரிய மொடாக்களில் இருந்த கஞ்சியைச் சின்னஞ்சிறிய மொடாக்களில் ஊற்றி, வரிசையாக வைத்திருந்தார். விசில் சத்தம் கேட்டவுடன் ஒவ்வொரு குடிசையிலிருந்தும் கஞ்சி வாங்குவதற்காக வர வேண்டும். விசில் சத்தம் கேட்டவுடன் ஒட்டர்களும் சாம்பான்களும் உடனே கஞ்சி வாங்க வந்துவிடக் கூடாது. முதலில் ஐரோப்பிய ஊழியர்கள் கஞ்சி வாங்க வேண்டும். போர்த்துக்கீசிய ஆசாரிகளுடன் வந்திருந்த மலையாளிகள் அடுத்தது. அதற்கும் அடுத்து பிள்ளைகளும் முதலியார்களும் செட்டியார்களும். அதற்கடுத்துதான் சாம்பான்களும் ஒட்டர்களும் செல்ல வேண்டும்.

நீரதிகாரம்
நீரதிகாரம்

மழையில் நடமாட முடியாத தங்கராசுவின் இரண்டு நாய்களும் இரவு முழுக்க ஊளையிட்டன. நாய்களின் ஊளை இரவைக் கடூரமாக்கியது. இரவு, பகல் வேறுபாடின்றி முடங்கிக்கிடந்த கூலிகளால் இரவில் தூங்க முடியவில்லை. நாய்களின் ஊளை, அசாதாரணத்தைத் தந்தது.

“வயித்துக்கு இல்லாததால வாயில்லா ஜீவனுங்க கத்துதுங்க…” என்று கவலைப்பட்ட தங்கராசு, நாய்களின் கஞ்சிக் கலயத்தை எடுத்துக்கொண்டு கஞ்சி ஊற்றும் இடத்திற்கு வந்தார்.

“பச்சைப் புள்ளைங்களாட்டம் ரெண்டும் வயித்துப் பசிக்கு அழுதுங்க சாமி, இந்தக் கலயத்துல கஞ்சிய ஊத்துங்க. பசியாத்திட்டு வந்துடுறேன்” என்று தங்கசாமி கேட்டிருக்கிறார்.

கஞ்சியை ஊற்றிய வேலையாளும் மனத்திற்குள் கிலேசமின்றிக் கஞ்சியை ஊற்றியிருக்கிறார். சுடச் சுடக் குருணை அரிசிக் கஞ்சியை ஊற்றவும் சூடுபொறுக்காமல் தங்கராசு கைதடுமாறிக் கஞ்சிக் கலயத்தைக் கீழே விட்டார். கீழே விழுந்த கலயத்திற்காகப் பதறியவர், வெறுங்கையால் கஞ்சியை அள்ளிக் கலயத்தில் ஊற்றப் பார்த்தார். கை வைக்கமுடியவில்லை. அத்தனை சூடு. உடனே, வேலையாள் வைத்திருந்த அகப்பையை வாங்கியவர், அகப்பையினால் கீழே சிந்தியிருந்த கஞ்சியை அள்ளிக் கலயத்திற்குள் ஊற்றினார். தங்கராசு மழையில் நனைந்துகொண்டே நாய்களுக்குக் கஞ்சி கொண்டு போனார். நாய்களும் கஞ்சியை நுனி நாக்கினால் துழாவித் துழாவிக் குடித்தன. `அப்பாடா’ என்பதுபோல் பசிதீர்ந்த அலுப்பில் மல்லாக்கப் படுத்து வாய்பிளந்து தூங்கின.

மதியத்துக்குள் தங்கராசுவைக் கூப்பிட்டனுப்பினார்கள். என்ன ஏதென்று விசாரிக்கும் முன், அவசரமாக அழைத்துச் சென்றார்கள்.

கஞ்சிக் கொட்டகையில் வேலையாள்கள் திரண்டிருந்தார்கள். தங்கராசுவைக் கூப்பிட்டுச் சென்ற ஆள், ரத்தினம் பிள்ளையின் முன்னால் நிறுத்தினான்.

“ஓய் தங்கராசு, ஏம்யா வம்பு வளத்துரீரு?”

“எசமான், நான் தப்புத்தண்டா ஒன்னும் பண்ணமாட்டேன்.”

“நீ அகப்பையத் தொட்டயா இல்லையா?”

தங்கராசுக்குப் பதில் தெரியவில்லை.

“கீழ ஊத்துன கஞ்சிய எதுல அள்ளிப் போட்ட?”

அப்போதுதான் புரிந்தது.

“கஞ்சி சூடா இருந்துச்சி எசமான். கைசூடு பொறுக்கல. அதான் அகப்பையால அள்ளி ஊத்துனென்.”

“நீ நாய்க்கு கஞ்சி ஊத்துன அகப்பையால, இங்க எல்லாரும் கஞ்சிக் குடிக்கணுமா?”

“கஞ்சிய நான் ஒன்னும் பண்ணலையே எசமான்?”

ஒட்டர்களைக் கூலிக்கு அழைத்து வந்திருந்த கங்காணி முன்னுக்கு வந்தான். தங்கராசுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

“கூலிக்கு வந்தா வந்த எடத்துல நவதுவாரத்தையும் மூடிக்கிட்டு வேலை செய்யணும். பெரிய வெள்ளக்காரத் தொர இவரு. நாய்க்கும் பூனைக்கும் சோறு வைக்காம சாப்பிட மாட்டாரு. ஒன்னால காலையில இருந்து எவ்ளோ ரணகளம் நடக்குது தெரியுமா? மேலவீட்டு ஆளுங்க ஒருத்தரும் கஞ்சி குடிக்கல. விஷயம் தெரியறதுக்கு முன்னால வாங்கிட்டுப் போனவங்கெல்லாம்கூட குடிக்காம ஊத்திட்டாங்க. ஏண்டா உசுர வாங்குற?”

தன் வயதுக்குத் தன் பேரன் வயதுள்ளவனிடம் கன்னத்தில் அறை வாங்கியதைத் தங்கராசுவினால் ஜீரணிக்க முடியவில்லை.

கூடியிருந்தவர்களிடம் கையெடுத்துக் கும்பிட்டு, வழிந்தோடிய கண்ணீரை மறைத்தபடி, மழையில் நனைந்துகொண்டே வெளியேறினார்.

மழை பாரபட்சமில்லாமல் எல்லாரையும் நனைத்தது.

பெரிய பாறையொன்றின் மேலே கல்லால் கட்டப்பட்டிருந்த சின்னஞ்சிறிய தேவாலயம். காட்டுச் செடிகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதல் நாள் மாலையே பாதர் ராபர்ட், அடாதமழையிலும் தேவாலயத்தைத் தூய்மை செய்ய வைத்தார். காட்டு இலைகள், பூக்களைக் கொண்ட எளிய அலங்காரம். தன்னை நினைத்துப் பிரார்த்திக்கிற ஒவ்வொருவரின் இடத்திலும் யேசு கிறிஸ்து பிறப்பார் என்ற நம்பிக்கை பாதிரியாருக்கு.

பகல், இரவு வேறுபாடு தெரியாமல் இருள் கவ்விக்கிடந்த பொழுதில் யேசுவின் பிறப்புக்காகத் தேவாலயம் தயாராகியிருந்தது. ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் மாதத்தின் பனிவிழும் நாளின் நள்ளிரவில் யேசு பிறக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் யேசுவின் பிறப்பை, எதிர்பார்த்துக் காத்திருக்கும் லட்சோபலட்சம் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே யேசுசபை பாதிரிகளின் முழுநேரப் பணி.

ராபர்ட் முழுமையாக நனைந்திருந்தார். நனைந்த தலையின்மேல் மூங்கில் பிளாச்சுகளைப் பிணைத்த மூடாக்கை வைத்திருந்தார். குடிசைகளுக்கு உள்ளே இருந்த மக்களை வெளியில் வரச்சொல்லி, குடிசைகளின் வரிசையில் இருந்த பாறையின் மேலேறி நின்றார்.

“தேவனின் பிரியத்திற்குரியவர்களே, கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தபோது, மண்ணுலகு உருவமற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின்மீது தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபோது, அப்பொழுது கடவுள், `ஒளிதோன்றுக’ என்றார்; ஒளிதோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். ஒளிக்குப் ‘பகல்’ என்றும் இருளுக்கு ‘இரவு’ என்றும் கடவுள் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், `நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்’ என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு ‘விண்ணுலகம்’ என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், `விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!’ என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும், ஒன்று திரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். உலர்ந்த தரை உலர்ந்த தரையாக இருக்க வேண்டும். உலர்ந்த தரையை ஆக்கிரமிக்க நீர் பெருக்கெடுத்தால், புல் பூண்டுகள், மிருகராசிகள், மனிதராசிகள் தத்தளிக்கும்…” வேதாகமத்தின் ஆதியாகமத்தை மந்திரக் குரலில், கேட்பவர் மயங்க உச்சரித்தார் ராபர்ட். மேலும் தொடர்ந்தவர், “என் பிரியத்திற்குரியவர்களே, தேவனின் அருள் பூரணமாய் நிரம்பியில்லாததால் இவ்விடத்தில் நற்காரியம் தொடங்கி, தடைபட்டு நிற்கிறது. பெரியாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டுமென்பது இன்ஜினீயர்களின் முயற்சி மட்டுமல்ல, யேசு சபை பாதிரிகளின் முயற்சியுமாகும். நன்னோக்கத்துடன், நன்முயற்சியுடன் தொடங்கப்பட்ட காரியம் தடைபடுவதற்கு, சாத்தானின் தலையீடே காரணமாகும். தேவனின் நல்லொளியற்ற ஆன்மாவிடம் சாத்தான் மேலெழுந்து வரும். சாத்தானை விரட்டினால் உண்டாகும் புனித ஒளியில் மட்டுமே தேவன் அவதரிப்பான். மேல்மலையின் காடு, நீர்ப் பிரளயத்தினால் தத்தளிக்கிறது. அசுத்த ஆன்மாக்கள் விரைந்து நல்ல ஆன்மாக்களாக வேண்டும். பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.” பிரார்த்தனையை நிறைவு செய்யும்போது மழையும் தேவனின் பிறப்பைப் பார்ப்பதற்காகக் காத்திருந்ததுபோல் சிறிது மௌனித்தது.

தங்கராசுவைப் பிரார்த்தனைக்கு வரச்சொன்னதாக அந்தோணி சொன்னான். தேவாலயத்தின் பிரார்த்தனைக்குச் செல்வதில் தங்கராசுவுக்கு விருப்பம் இருந்ததில்லை. காரணம் பாதிரியார் பேசுவது எதுவும் புரிந்ததில்லை. கடவுள் முன்னால் கண்மூடி, கைகூப்பி நின்றுவிட்டு, தன் மனத்துக்குள் தோன்றுவதை வேண்டிக்கொண்டு வருவதுதான் தங்கராசுவுக்குத் தெரியும். தேவாலயத்திலோ பாதிரியார் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார். அவரின் துயருறும் குரல் பாவத்தின் மூட்டைப்போல் தன்னை உணரச் செய்வதால் தங்கராசு தேவாலயத்திற்குச் செல்வதில்லை. பாதிரியார் இன்று அவசியம் வந்தே ஆக வேண்டும் என்று சொல்லியிருந்ததால் வந்திருந்தார். அவர் கவனமெல்லாம் கன்னத்தில் விழுந்த அடியின்மேல் இருந்தது.

பிரார்த்தனை முடிந்து வேலையாள்கள் கலைந்து சென்றவுடன், பாதிரியார் தங்கராசுவைப் பார்த்தார். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். எதிரில் இருந்த நாற்காலியில் தங்கராசுவை உட்காரச் சொன்னார்.

“என்னிக்கு நானு ஆசனத்துலதான் குந்தியிருக்கேன் அய்யரே?”

“ஆசனம்ன்றது எல்லாரும் உட்கார்றதுக்குத்தான் தங்கராசு.”

“இருக்கட்டும் அய்யரே. அந்தப் பௌசுல்லாம் இல்ல” என்ற தங்கராசு கீழே குத்தவைத்து உட்கார்ந்தார்.

“யேசுவுக்கு முன்னால் நீ, நான் எல்லாம் ஒன்னுதான். ஒன்னே ஒன்னுதான், யேசுவுடைய பூரண கிருபை கிடைக்கும் இடத்தில் நாம இருக்கணும்.”

“அந்த இடம்லாம் போறதுக்கு ஏலாது அய்யரே, வயசாயிடுச்சி. கல்லு உடைக்கையிலதான் வயசு தெரியல. சும்மா உக்காந்தா உடம்பு தள்ளுது.”

“அதெல்லாமே யேசு பார்த்துக்குவார். நீ கவலைப்படாம தைரியா இரு. தினம் கோயிலுக்கு வந்துட்டுப் போ, சரியா?” என்ற பாதிரியார் எழுந்து நின்று, தங்கராசுவின் நெற்றியில் சிலுவையிட்டுக் கிளம்பினார்.

கடவுள் வானத்தையும் பூமியையும் படைக்கும்போது வானத்துக்கு மேலும் கீழும் இருந்த நீரெல்லாம் ஒன்று திரண்டதுபோல் மழை பெய்து நீரை வளர்த்தது. மழையை யாரால் நிறுத்த இயலும்? மழையே பிரபஞ்சம். பெருகிப் பெருகிப் பூமியை உண்டது. பிரபஞ்சத்தின் உயிர்களெல்லாம் தாகம் தணிக்க நீரைப் பருக, மழை தன் தாகம் தணிக்க மண்ணை உண்டது. காடெங்கும் இருந்த மண்ணைக் கெள்ளியெடுத்து உண்டது. தாகம் தீராமல் அரித்தெடுத்தது. பின் ஆக்ரோஷமாக பாளம் பாளமாகத் தோண்டியெடுத்து உண்டது. கர்ப்பிணிப் பெண் மண்ணள்ளி ருசிப்பதுபோல் மழை மண்ணைத் தின்றபடியிருந்தது. செடியின் வேர், கொடியின் வேர், புல் பூண்டுகளின் வேர் ஒன்றும் விடாமல் ஒட்டியிருந்த மண்ணையெல்லாம் எடுத்துக்கொண்டது.

வழியில் சலசலத்து ஓடும் சிற்றோடைகளின் நீர், சின்ன முல்லையாறு, பெரிய முல்லையாறு, ஓடைகளின் நீரையெல்லாம் ஒன்றுதிரட்டிக்கொண்டு பேரியாற்றின் பிரவாகமிருந்தது. அழுத்தமாக, ஆழமாக, வேகமாக, விசையாக என்று நீரின் குணங்களனைத்தையும் திரட்டி, அணை கட்டுமிடத்தை வளைத்து நின்றது. தன்னுடைய பாதையை மறித்து எழுப்பப்பட்ட தடையை எடுத்துச் செல்வதற்கான முயற்சியை நிறுத்தவே இல்லை. கோபத்தில் தடுப்புச் சுவரையெடுத்துச் சென்ற பின்னரும், மீதமிருக்கும் மண் அணையை அசைத்துப் பார்த்தது. வலக்கரையோரம் பாதை மாற்றி விடப்பட்டிருந்த மலையின் ஏற்றத்தில் ஏறியிறங்கி, சுண்ணாம்பு அரைக்குமிடத்தை மூழ்கடித்தது. மெல்ல முன்னகர்ந்து தச்சன் பட்டறையையும் கொல்லன் பட்டறையையும் மூழ்கடித்தது. டர்பைன்களை இழுத்துச் சென்றது. மறிக்கப்பட்ட பாதையை மீட்டெடுக்க அத்தனை உத்திகளையும் கையாண்டு தீரம் கொண்ட தளபதியாய் வீறுகொண்டு நின்றது பேரியாறு.

வடகிழக்குப் பருவமழை காலம் முடிந்த பிறகு தொடங்கிய மழை, நீண்ட நாள்கள் தொடராது என்று அனுபவக் கணக்கிட்ட பென்னி, விடாது பெய்த மழையினால் திகைத்தார். வழக்கமென்றும், இதுதான் நடக்குமென்றும் தீர்மானிக்கவே முடியாத விஷயம் இயற்கைதான் என்பது மேல்மலையில்தான் புரிகிறது. ஏறக்குறைய அல்ல, மிகச்சரியாகவே சொல்ல வேண்டுமென்றால், 25 வருஷங்களாகப் பார்த்துவருகிற இந்தப் பெரியாறு தன்னிடம் புதுமுகம் காட்டுகிறதே? மேஜர் பேய்ன் தன்னுடைய திட்டத்தில் கொடுத்திருந்த அணை கட்டுமிடத்தை ஏற்றுக்கொள்வதில் ராயல் இன்ஜினீயர் ஸ்மித்துக்கும் தனக்கும் மாற்றுக் கருத்து இருந்தது. அடுத்தடுத்த ஆய்வுகளுக்குப் பிறகு, ஸ்மித் ஒரு கட்டத்தில் பேய்ன்-னின் கருத்துகளோடு ஒத்துப்போனார். பென்னி மட்டும்தான், இரண்டு மலைக்குன்றுகளுக்கு இடையில் இருநூறு அடி அகலத்தில் பெரியாறு ஓடும் இவ்விடத்தைத் தேர்வு செய்தார். அகலம் குறைவாக வெறும் இருநூறு அடி மட்டுமே ஆறு ஓடும் இவ்விடமே அணை கட்டுவதற்கு ஏற்ற இடமென்று பென்னி தீர்மானித்தார். முந்தைய இடத்தில் அணை கட்டத் தொடங்கியிருந்தால் கண்ணகி கோயிலும் மன்னான்களின் காணியும் முழுமையாக மூழ்கியிருக்கும். தான் தேர்வு செய்த இடமே தனக்குச் சவால் தருகிறதா? பாதை தொலைத்த குழந்தைபோல் சுற்றிச் சுற்றி அங்கேயே தேடும் பெரியாற்றைப் பார்ப்பதற்கும் மனம் சோர்ந்தது. நிலத்தின் அதிகாரமிழந்த அரசனின் ஆன்மா சுற்றிச் சுற்றி வருவதுபோலவும் பெரியாற்றின் போக்கு இருந்தது.

பென்னி கவலையுடன் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

“மார்ஷலின் கடிதத்திற்குப் பதில் எழுதிட்டியா ஜான்? சீப் இன்ஜினீயர் காத்துக்கொண்டிருப்பாரே?”

“இங்கிலாந்து ராணி, இந்தியாவின் மகாராணி ஒப்புதல் கொடுத்த திட்டம். அதனால் உடனடியாக இந்தத் திட்டத்தினைக் கெடுக்கும் காரியத்தை மார்ஷலால் செய்ய முடியாது. ஆனால் எனக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையை அவரால் செய்ய முடியும். அதைத்தான் செய்கிறார். நாமும் சளைத்தவர்கள் இல்லையென்று சொல்ல வேண்டாமா, அதுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

டெய்லரும் லோகனும் படுக்கையில் சாய்ந்து வெளியில் கொட்டும் மழையைப் பார்த்தபடி பென்னி பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

“பிரிட்டிஷ் சர்க்காருடன் நீ எத்தனை முறை மோதிப் பார்த்திருப்பாய் ஜான்?”

“நானென்ன இந்தப் பெரியாறா, மலைகூட முட்டி மோதுற மாதிரி மோதிப் பாக்குறதுக்கு?”

“எனக்குத் தெரியும், உன் கடிதம்ன்னாலே சீப் செக்ரட்டரி ஆபீசுல தலைவலியோடதான் பாப்பாங்களே?”

``உண்மைக்கு நீங்க வச்சிருக்கிற பேர் தலைவலின்னா நான் என்ன செய்யட்டும்?”

“உண்மையைச் சொல், எத்தனை முறை, உன் கடிதத்தினுடைய தொனியைச் சரி செய்யணும், அல்லது கடுமையான கண்டனங்கள்னு சொல்லியிருக்காங்க?”

“எப்பவுமேதான். இதே மேல்மலையில் திண்டுக்கல் ரேஞ்சுக்கு இன்சார்ஜ் ஆபீசரா வந்தப்பகூட இந்தக் காட்டு மேட்டுல வேலை செய்யுறதுக்கு டபுள் அலவன்ஸ் கொடுக்கணும், குதிரை அலவன்ஸும் டபுளாக்கணும்னு நான் எழுதினதுக்கு, டிஸ்ட்ரிக்ட் இன்ஜினீயரே என் கடிதத்தை சீப் இன்ஜினீயருக்கு அனுப்ப மறுத்துட்டார். பொறுத்துப் பார்த்தேன், நானா அனுப்பிட்டேன். டிஸ்ட்ரிக்ட் இன்ஜினீயர் மூலமா அனுப்பாம நேரா எப்படி சீப் இன்ஜினீயருக்கு அனுப்புனீங்கன்னு அதுக்கு ஒரு விளக்கம். வேலை செய்யச் சொல்றாங்களா, செய்யலாம். இவங்க கேட்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்க, கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவா நாம? மைக்குடுவையும் தாளுமா உக்காந்துகிட்டு இருக்கிறதுக்கு?”

“சரி சரி, கர்னல் ஜான் பென்னி குக்னாலே பி.டபுள்யூ அதிரும்; அதிரணும், அதானே?”

“உன் கேலியை நிறுத்திட்டு, மழை எப்போ நிக்கும்னு சொல்லு.”

“மழை எப்போ வரும், எப்போ நிக்கும்னு சொல்லத் தெரிஞ்சா நான் ஒரு தேவதூதன் ஆகியிருப்பேனே மிஸ்டர் ஜான்?”

“ஏன் இவ்ளோ தடை வருதுன்னு தெரியலையே?”

“தூய ஆவிகளோட எண்ணிக்கை குறைவா இருக்காம். ரெவரெண்ட் பாதர் ராபர்ட் பிரார்த்தனையின்போது சொல்லியிருக்கார்.”

“அவர் கவலை அவருக்கு.”

“ஆமாம். அவருக்கு எப்பவும் ஒரே கவலைதான். நான்கு வீடு இருந்தாலும் அங்கொரு தேவனின் கோயிலைக் கட்டியெழுப்பணும்.”

“மெக்கன்சி என்னதான் ஆனார்? கண்டமநாயக்கனூர் ஜமீனின் மைனர் பாண்டியன் வளர்ந்து மேஜர் ஆகிற வரைக்கும் பேரணையை விட்டு நகர முடியாதா?”

டெய்லர் சிரித்தார்.

“பெரியாற்றுத் தண்ணீரைத் தேக்கி வைக்க நினைக்கிற இடமும் பிரச்சினை. பெரியாற்றுத் தண்ணீரைப் பிரிச்சுக் கொடுக்க நினைக்கிற இடமும் பிரச்சினை. என்ன செய்யப் போறோமோ?”

“பேரணைக்குக் கீழ இருக்கிற ராமநாதபுரம், சிவகங்கை ஜமீன்களோடது நியாயமான கோரிக்கைதானே ஜான்? அவங்களுக்குப் பாத்தியதையான வைகையாத்துலதான் பெரியாற்றுத் தண்ணீரைக் கொண்டு போறோம். ஆனா அவங்களுக்குப் பெரியாற்றுத் தண்ணீரைத் தரமாட்டோம்னா, அது நியாயமில்லைதானே?”

“கொடுக்காம இருக்கிறது அநியாயமில்லை. நூறு வருஷத்துக்கு முன்னாடி இந்தத் திட்டத்துக்கான தேவை இருந்த இடம் ராம்நாடுதான். திட்டத்தோட வடிவம் எத்தனை முறை, எப்படியெல்லாம் மாறி வந்திருக்கு? அப்படித்தான், பெரியாற்றுத் தண்ணீர் மதுரைக்கு மட்டும்தாங்கிற முடிவும். வைகைக்குத் தண்ணீர் குடுத்தா அங்க ஏற்கெனவே இருக்கிற ஆயக்கட்டுக்காரங்களுக்குத்தான் தண்ணீர் கொடுக்கணும். அவங்க கூடுதலா வரி தரமாட்டாங்க. மேலூருக்குக் கொண்டுபோனா அவங்ககிட்ட புதுசா நீர்வரி வாங்கலாம். இதானே சர்க்காரோட கணக்கு?”

“அப்டின்னா மேலூர்ல இருந்து சிவகங்கைக்கும் ராம்நாட்டுக்கும் ஏன் பெரியாற்று கால்வாயைக் கொண்டு போகக்கூடாது?”

நீரதிகாரம்
நீரதிகாரம்

“தாராளமா கொண்டு போகலாம். நீயே சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயரா வந்து கொண்டு போ. எனக்கு இன்னும் ஐந்து வருஷம்தான் இருக்கு ரிட்டயராக. நான் மேல்மலையில டேம் கட்டிட்டு ரிட்டயராகுறேன்.”

“உன்கூட பேசினா வயசு அதிகமா இருக்கேன்னு யோசனை வரும். நீ மேல்மலையில ஏறி இறங்குறத பாக்குறப்ப வயசு இவ்ளோ குறைவான்னும் தோணும்.”

“மாயனைக் கூப்பிட்டு நீ சுருட்டுப் பிடி. என்னை விடு.”

“ஜான், இப்போ அவங்க கேஸ் போடப் போறாங்களே? புராஜெக்ட் என்ன ஆகும்?”

“இந்த மழையை நிறுத்தறது எப்படி நம்ம கையில் இல்லையோ, அப்படி புராஜெக்ட்டை நிறுத்தணுங்கிறதும் தொடரணுங்கிறதும் நம்ம கையில் இல்லை.”

“அது சரி, உண்மையில் அவங்க கோரிக்கைய நீ ஏன் கேட்கக் கூடாது?”

“ரெண்டு விஷயம்தான் டெய்லர். அவங்க நோக்கம் அவங்களுக்குத் தண்ணீர் வேணும்னு கேக்குறதவிட, பெரியாற்றுத் தண்ணீரைக் கொண்டார வேணாம்னு சொல்றதுல இருக்கு. ரெண்டாவது கிளாக்ஸ்டன். பெரியாறு புராஜெக்ட்டை எங்கு கொண்டு போனா சர்க்காருக்கு லாபம் வரும்னு அவர் சொன்னாரோ, அதை முழுசா சர்க்கார் எடுத்துக்கிடுச்சு. அதுல எதுனா மாற்றம் பண்ணணும்னா மறுபடியும் ஒரு அறிக்கை வாங்கணும், என்னென்ன மாற்றங்கள் செய்யணும்னு. மலைமேல் இருக்கிற தண்ணிய கீழ கொண்டாருவோம். தண்ணி வந்த பிறகு எங்க வேணா வாய்க்கால் வெட்டிக்கலாம். கால்வாய் தோண்டிக்கலாம். ராம்நாடு வரைக்கும் போனாலும் போகட்டும். சர்க்காரும் சாதுர்யமா இந்தப் பிரச்சினையை அப்படித்தான் தள்ளிப்போடும்னு நெனைக்கிறேன். எல்லா ஜமீன்களும் ஆளாளுக்குப் பேசட்டும். இதுல முக்கால்வாசி ஜமீன் நெலம்தான். ரயத்துகளுக்கு ஏக்கருக்கு வருசத்துக்கு மூணு ரூபான்னு பெரியாற்றுத் தண்ணீர் தரப்போறோம். ஜமீன் நெலங்களுக்கு ஆறு ரூபான்னு சொன்னா, தண்ணியே வேணாம்னு போயிடுவாங்க. லஸ்கர்களை மிரட்டி தண்ணிய இனாமா எடுத்துக்கிட்டு இருக்கிறதாலதானே இவங்கல்லாம் சர்க்காரோட திட்டத்தை எதிர்த்துப் பேசுறாங்க? அவங்க தலையை உருட்டுனா சரியாப் போயிடும்.”

“நீ சொல்றது சரிதான். சில விஷயங்களைப் பேசினா சரியாகும். சிலதைப் பேசாம விட்டா சரியாகும்.”

‘ஆமென்’ என்று சொல்லி, வெளியில் மழை பெய்துகொண்டிருந்தது.

- பாயும்