மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 91 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

“நாம நாலு பேர் இருக்கோம். நாலு பேருக்கும் தனித்தனி வீடு. நெனைச்சா நாம ரெண்டு வீட்ல ரெண்டு ரெண்டு பேரா தங்கலாம். ஆனா தங்குவோமா? அவங்கள தனியா விட்டா இருக்கவே மாட்டாங்க.

மழை நிற்கவில்லை; மந்திரம், மாயங்கள், பிரார்த்தனைகள், கெஞ்சுதல்கள் எதற்கும் செவிசாய்க்கவில்லை. விடாத மழையிலேயே தேவனின் பிறப்பும் நிகழ்ந்தது. ஈரம் கோத்துக்கிடந்த தரைகளில் மண்புழுக்களைப்போல் ஊர்ந்தார்கள் வேலையாள்கள்.

கம்பம் கூடலூர்க் கணவாய்ப் பாதை கனமழையில் அரித்துச் செல்லப்பட்டது. உணவுப்பொருள்களும் கட்டுமானப்பொருள்களும் மேல்மலைக்கு வருவதற்கென்றிருந்தது அந்த ஒரே பாதைதான். மனிதர்களுக்கு மட்டும்தான் காட்டில் பாதை வேண்டும். மிருகங்களுக்கு, அவை செல்லுமிடமே பாதை. மிருகங்கள், பாதையைத் தங்களின் உள்ளங்கால்களுக்குள் வைத்திருக்கின்றன.

கம்பம் கூடலூர்ப் பாதைதான் மேல்மலையென்னும் அடர்ந்த பொக்கிஷத்துக்குள் மனிதர்களை அனுமதிப்பது. மெட்ராஸ் பிரசிடென்சியையும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தையும் இணைக்கும் இந்தக் கணவாய்ப் பாதையை அமைக்க எத்தனை முயற்சிகள்? அடர்ந்த காட்டுப்பகுதியின் விண்ணைமுட்டும் மரங்களை வேரோடு வெட்டிச் சாய்க்க முடியாது. முட்களும் விஷ ஜந்துகளும் நடமாடும் இடத்தில் தங்கி, செடிகொடிகளை அப்புறப்படுத்த முடியாது. பாதையமைக்கப் பணம் ஒதுக்குவார்கள். பெருமழையில் சரிவு வந்து வேலை நிற்கும். அல்லது பாதி வேலை நடந்த பிறகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்.

பென்னி குக்
பென்னி குக்

நூறு வருஷத்துக்கு முன்பு கம்பம், கூடலூர்ப் பகுதி திருவிதாங்கூரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. கம்பத்தைத் தன்னுடைய நிர்வாகத்தின்கீழ் வைத்திருந்த கோம்பை ஜமீன்தார் அப்பாஜி நாயக்கனிடமிருந்து பிரிட்டிஷ் சர்க்கார் வாங்கியவுடன் செய்த முதல் வேலையே, கூடலூர்க் கணவாய் வழியாக மேல்மலைக்குப் பாதை அமைக்க முயன்றதுதான். ஒருமுறைகூட பாதை வேலை முழுமையடைந்ததில்லை.

18 வருஷங்களுக்கு முன்பு பென்னியும் ஸ்மித்தும் பெரியாறு அணைத் திட்டத்தினை சரிசெய்து கொடுப்பதற்காக ஆய்வுக்கு வந்திருந்தார்கள். ரைவ்ஸ் அணை கட்டலாம் என்று சொல்லியிருந்த இடத்தை ஸ்மித்தும் பென்னியும் ஆய்வு செய்தனர். அணையின் செலவைக் குறைப்பதோடு, அதிக நீர் தேங்குவதற்குத் தோதான இடமாகவும் இருக்கிறதா என்று பார்த்தனர். அப்போதும் கணவாய்ச் சாலை காணாமல் போயிருந்தது. பாதையைப் புனரமைக்கும்போது அடுத்தடுத்து அதிர்ச்சிதரும் நிகழ்வுகள். ஒரு புதரைக் கூர்மையான தொரட்டியால் விலக்கியவன், வாய்ப் பேச்சற்று மயங்கினான். சென்று பார்த்தால் புலி கடித்துக் குதறிப்போட்டிருந்த மனித உடல். காட்டில் ஆங்காங்கே மனிதர்களின் எலும்புக் கூடுகள் என்று அத்தனை பிரேதங்கள். ஓரிடத்தில் பெரிய எலும்புக்கூட்டைக் கட்டியணைத்தபடி கிடந்த குழந்தையொன்றின் எலும்புக்கூடு. தாயும் குழந்தையுமாகக் காட்டுக்குள் வந்தவர்கள் என்ன காரணத்தினால் மரணித்தார்களோ?

புதர்களையும் காட்டுச் செடிகளையும் சுத்தம் செய்வதற்குள் கூலிகள் பலருக்குக் காய்ச்சல் வந்தது. தேக்கடி, மலைக்காய்ச்சல் அதிகமாய்த் தாக்குமிடம். அசையாமல் ஓரிடத்தில் நின்றால் அரை நொடிக்குள் கை, கால், முகமெங்கும் வண்டளவு கொசு மொய்க்கும். கொசு கடித்த இடம் தடிக்கும். தடித்த இடம் அரிக்கும். தேய்த்துச் சொறிந்தால் அந்த இடம் வீங்கும். வீங்கிய இடம் காயமாகும். இரண்டு நாளுக்குள் காய்ச்சல் அடிக்கும். காய்ச்சலில் விழுபவர்கள் பிழைத்தெழுவது அரிது.

இரவு முழுக்க தீப்பந்தங்களைக் காட்ட வேண்டும். இல்லையெனில் யானைகள் கூடாரத்துக்குள் இறங்கிவிடும். ஒருமுறை தீப்பந்தங்களை வைத்துக்கொண்டு பத்துக் கூலிகள் மேற்கில் நின்றிருக்க, கிழக்குப் பக்கமிருந்து இறங்கிய யானைகள் தூங்கிக்கொண்டிருந்த கூலிகளை மிதித்துத் துவம்சம் செய்தன. கூரைகளைப் பிய்த்தெறிந்தன. அன்று முதல் தீப்பந்தங்களுடன் இரவு முழுக்கப் பறையடிக்க ஏற்பாடு செய்தார்கள். பறையும் கொட்டும் அடித்ததில் யானைகள் அஞ்சி முகாமுக்குள் வருவதை நிறுத்தின.

நீரதிகாரம் - 91 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

பெரியாறு அணை கட்டும் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு கூடலூர்க் கணவாயில் பாதையமைக்க பென்னி, இரண்டே இரண்டு விஷயங்களை மட்டும் உறுதிப்படுத்திக் கொண்டார். அணை கட்டக் கட்டத் தேங்கும் நீரில் பாதை மூழ்கிவிடக்கூடாது. பாதை செல்லும் வழியில் ஆறோ, சிற்றாறுகளோ குறுக்கிடாமல் பாதையமைய வேண்டும். இதன்றி, கூடலூர்க் கணவாயிலிருந்து அணை கட்டுமிடத்தினைச் சென்றடைய சுருக்கமான வழியையும் பென்னி கணக்கில் கொண்டார். அந்தக் கணக்கீட்டிலேயே எட்டு மைலுக்குப் பாதை அமைக்கப்பட்டது. சில இடங்களில் பதினைந்தடி அகலத்திற்கும் சில இடங்களில் பத்தடிக்குக் குறைவாகவும் பாதை இருந்தது. நான்கடி ஐந்தடி ஆழத்திற்குச் சகதி புதையும் இடங்களும் இருந்தன.

அணை கட்டுவதில் பத்தில் ஒரு பங்கு சவால், அணை கட்டுமிடத்தின் பாதையை அமைத்ததிலும் இருந்தது. அந்தப் பாதை இன்று அரித்தெடுத்துச் செல்லப்பட்டது என்பதைக் கேட்டவுடன் பென்னிக்குள் துயர் மண்டியது.

மழை நிற்காமல் பெய்ததில் குடிசைக்குள் முடங்கிக்கிடக்கும் கூலிகள் கால்வயிறு, அரைவயிற்றுக் கஞ்சி குடித்து நாள்களைக் கடத்தினார்கள். எங்கிருந்து பேய்மழை பெய்கிறதென்று அயர்ச்சியுடன் மேல்மலையில் காத்திருந்தார்கள். மலைக்குள் கடல் ஆர்ப்பரித்து வருவதுபோல் மழை வெள்ளம் புரண்டெழுந்தது. திரும்பிய திசையெங்கும் நீர். மேல்மலையே கரைந்து ஓடியது.

இனி, கஞ்சிக்கும் வழியில்லையோ? கூலிகளைத் திருப்பியனுப்பலாமா? மழை நின்றவுடன் உடனடியாக வேலைக்குத் தேவைப்படும் ஆள்களுக்கு என்ன செய்வது? அடுத்து என்ன என்று பென்னி யோசித்தார்.

கிறிஸ்துமஸ் முடிந்த மூன்றாம் நாள் நள்ளிரவு தண்ணீரின் பேரோலம் கேட்டது. அரைத்தூக்கத்திலிருந்த பென்னி, அலறியடித்து எழுந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்தவருக்கு வெள்ளத்தின் பெருஞ்சத்தம் கேட்டது. 150 அடி உயரத்திலிருந்து கேட்கும்போதே தலை வெடித்தது. நீர்ப் பிரளயம் வந்துவிட்டதோ, இந்த மலை, காடு எல்லாம் நீரில் மூழ்கப்போகிறதோ என்று அச்சம் கொண்டார். டெய்லரும் லோகனும் வெளியில் வந்தனர்.

“ஜான், வெள்ளத்தின் சத்தம் கேட்டியா?”

“சத்தம் கேட்டுத்தான் எழுந்து வந்தேன்.”

டெய்லர் தொலைநோக்கியுடன் வந்திருந்தார்.

“வா, தண்ணி எத்தனை உயரம் போகுதுன்னு பார்க்கலாம்” என்ற பென்னி, மலையுச்சியில் ஏறி நின்றார். இருண்ட கானகத்தில் வெண்ணிற மலைப்பாம்பாய் உருண்டு புரண்டு மேலெழுந்து சென்ற வெள்ளத்தின் ஆக்ரோஷம் அடிவயிற்றில் நெருப்பாய்க் கனன்றது.

``என்ன முடிவிலதான் இருக்கு இந்தப் பெரியாறு?”

“அதான் நமக்குத் தெரியலையே ஜான்? அந்த தேவந்தி சொன்னமாதிரி நாம பெரியாறுகிட்ட அனுமதி வாங்கணுமோ?”

“நீயுமா நம்புற டெய்லர், நதிக்கு என்ன தெரியும்?” லோகன்

“அப்படிச் சொல்ல முடியாது லோகன். மலைக்காணிங்களுக்குக் காடு பத்தி நல்லாத் தெரியும். காட்டுல இருக்க உயிரினங்க மாதிரிதான் ஆறும் அவங்களுக்கு. நதிக்குன்னு குணம் இருக்கு. காட்டு மிருகங்களை வசியப்படுத்தற மாதிரி, நதியையும் வசியப்படுத்த முடியும்னு நினைக்கிறாங்க.”

“அதான் ஒரே வழின்னு நெனைக்கிறேன். எப்படியாவது பெரியாற்றைச் சீராக்கணும். அதுக்கு மழை நிக்கணும். இன்னைக்குப் போற வெள்ளத்தைப் பார்த்தா, ஒரு வருஷமா கட்டுன எதுவுமே மிச்சம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.” பென்னியின் குரலில் துயர் மண்டியது.

“கீழே போய்ப் பார்க்கலாமா?”

“இப்போ போனாலும் எதிர்க்கரைக்குப் போக முடியாதே? வெள்ளம் குறையட்டும்.”

“கட்டக் கட்ட வெள்ளம் அடிச்சிக்கிட்டுப் போகுது. கூலி கொடுத்து வேலை வாங்காம இன்னும் எத்தனை நாளைக்கு ஜனங்களை மேல்மலையில வச்சிக்கிட்டு இருக்கிறது? எஸ்டிமேட்டைவிட செலவு கூடிக்கிட்டுப் போகுது. மெட்ராஸ்ல இருக்கிற சீப் செக்ரட்டரிக்குச் சூழல் தெரிஞ்சாலும் கல்கத்தாவில் இருந்து கேக்கிற கேள்விக்குப் பதில் சொல்ல முடியலை. என்னதான் செய்யிறது ஜான்?”

பென்னி ஓடும் வெள்ளத்தைப் பார்த்து நின்றார். ‘தன்னிடம் பதில் இருக்கிறதே’ என்று நகைப்பதுபோல் பேரியாறு பெருக்கெடுத்தது.

விடிந்தும் விடியாத இருள்பொழுதுக்குள் அந்தோணி மலைச்சரிவுகளுக்குள் பாய்ந்தோடி பென்னியைப் பார்க்க வந்திருந்தான்.

“தொர…”

சாய்வு நாற்காலியில் அரை விழிப்பில் படுத்திருந்த பென்னி, அந்தோணியின் குரல் கேட்டு விழித்தார். அந்தோணியின் வருகை என்ன சேதியைக் கொண்டு வந்திருக்கிறதோ என்ற கலக்கம் உள்ளே எழுந்தது.

“ராத்திரி முழுக்க வெள்ளமான வெள்ளம். பத்துப் பாஞ்சடி வெள்ளம் போயிருக்கும் தொர. ஒருத்தர் தூங்கல. நிக்காத மழை. வெள்ளத்தோட சத்தம். பொழுது விடிஞ்சா ஊருக்குப் போயிடலாம்னு ஜனங்க பேசிக்கிறாங்க. போயிட்டாங்கன்னா திரும்ப வரவைக்கிறது பெரும்பாடு. அதான் தொரகிட்ட சொல்லி, ஜனங்க கெளம்புறத நிறுத்தச் சொல்லணும்னு வந்தேன். காத்துன்னா காத்து தொர. ஏற முடியல. எனக்கே மூச்சுத் திணறிப்போச்சு.”

அந்தோணி கும்பிட்டபடி நின்றிருந்தான்.

“மண் அணை இருக்கா?”

“வெள்ளம் வடிஞ்சாதான் பாக்க முடியும் தொர. தண்ணிக்குள்ள முங்கிக் கெடக்குது.”

“கூலிங்க இருக்கிற எடத்துலல்லாம் வெள்ளம் தேங்குதா?”

“மழை பேயப் பேய வெள்ளம் வருது. சரிவுல இருக்கிற குடிசைங்ககிட்ட தேங்கி நிக்கல தொர.”

“சரி, போய் டெய்லரையும் லோகனையும் வரச்சொல்.”

சிறிது நேரத்துக்குள் மலைச்சரிவில் இறங்கிக்கொண்டிருந்த நால்வரின் மனநிலையும் வெவ்வேறாக இருந்தது. துயரத்தின் அழுத்தம் மட்டும் பொதுவாக இருந்தது.

வலக்கரையோரம் வந்து நின்ற பென்னி, பாய்ந்தோடும் வெள்ளத்தைப் பார்த்தார். பெரிய பெரிய கிளைகளும் மரங்களும் வெள்ளத்தில் சென்றன. செஞ்சிவப்புக் குழம்பாய் அடர்த்தி குறைந்த குருதியின் நிறத்திலிருந்தது வெள்ளம்.

``இடக்கரைக்குப் போக என்ன வழி அந்தோணி?”

“பாலமும் வெள்ளத்துல மூழ்கிடுச்சி. துடுப்பும் போட முடியாது, இந்த வெள்ளத்துல. வேகம் குறையணும் தொர.”

“லண்டன் கெளம்புறதுதான் ஒரே வழின்னு நினைக்கிறேன்…” டெய்லர்.

“பெரியாற்று வெள்ளத்தைக் காரணம் காட்டி நீ லண்டன் போக வேணாம். உன் மனைவி, குழந்தைங்களைப் பாக்கணும்னு சொல்லிட்டுப் போ…” பென்னி.

“இங்க வேலையே நடக்காது போல. எத்தனை நாளைக்குத்தான் உக்காந்துகிட்டு இருக்கிறது. காட்டுல இருக்கிறதே தண்டனை. வீட்டை விட்டு வெளிய வரமுடியாத பேய் மழையில காட்டுல இருக்கிறது பெரிய தண்டனை.”

கொஞ்ச நேரம் நின்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்தார்கள். நேரம் செல்லச் செல்ல தங்களைப் பலவீனமாக நினைக்கச் செய்யும் வெள்ளத்தின் முன் நிற்க முடியாது என்று மலையுச்சிக்குத் திரும்பினார்கள்.

அடுத்த இரண்டு நாள்களானது, மழை குறைந்து வெள்ளம் குறைய. மழை நின்றதால் வெள்ளத்தின் வேகம் மிதத்தில் இருந்தது. நீருக்குள் மூழ்கியிருந்த மண் அணை மிஞ்சியிருக்குமா, அடித்துப் போயிருக்குமா என்று திகிலுடன் பார்த்திருந்தார்கள். நான்காவது நாளில் இடக்கரையோரம் குறைந்த வெள்ளத்தினூடாக மண் அணையின் கரை வெளித்தெரிந்தது. விதைபோல் முகிழ்த்த மண் அணையைப் பார்த்த பென்னிக்குள் மகிழ்ச்சி படர்ந்தது. கரையோரம் மிஞ்சியிருக்கிறது, வேகம் அதிகமாக இருக்கும் நடுவில் என்ன நிலையோ என்ற கவலையும் கூடவே எழுந்தது. அடுத்த நாள் காலையில் வலக்கரையோரம் திரும்பியிருந்த வெள்ளத்தினால் மையத்தில் குறைந்த நீர்மட்டத்தினுக்குள் மேலெழும்பி நின்ற மண் அணையைப் பார்த்து வேலையாள்கள் ஆரவாரித்தார்கள். பென்னி மனசுக்குள் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.

“உசுரைப் பணயம் வச்சு நிறுத்துன அணையாச்சே தொர, எப்படி அடிச்சுட்டுப் போவும்?” பேயத்தேவனும் அந்தோணியும் நெகிழ்ந்தார்கள்.

பதினைந்தடி சென்ற வெள்ளத்தைத் தாங்கி மண் அணை நின்றது கடவுளின் நிமித்தம்தான். ஆறேழு அடி வெள்ளத்திற்கே தடுப்புச் சுவர் அடித்துச் செல்லப்பட்டது. கசிவை நிறுத்த, வெறும் மண்ணையும் கல்லையும் கொட்டியெழுப்பிய மண் அணை பெரும் மழையையும் வெள்ளத்தையும் தாங்கி நின்றது தெய்வத்தின் அருளாசி, இனி அணை கட்டுவதற்குத் தடங்கல் இருக்காது என்று அவரவர் நம்பிக்கையைப் பேசினார்கள். தான் இரவு பகல் பாராமல் மார்பளவுச் சகதியில் புதைந்து நின்றதால்தான் மண் அணை அடித்துச் செல்லப்படவில்லை என்ற பெருமிதம் நீருக்குள் புதைந்து நின்ற ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்தது. அடுத்த நாள் விடிந்ததும் நதி சமநிலைக்கு வந்தது. மண் அணை முழுமையாகத் தன் கம்பீரம் காட்டி நின்றது.

பென்னியும் இன்ஜினீயர்களும் வாரக்கணக்கில் முடங்கிக்கிடந்த சோர்வு நீங்கினர். பௌண்டேஷன் முழுக்க நீர் தேங்கியிருந்தது. மண் அணை தடுத்து நின்றதாலும், வெள்ளம் பதினைந்தடிக்குமேல் புரண்டோடியதாலும் கழிவுகள் பௌண்டேஷனில் சேர்ந்திருக்காது. வெள்ள நீரை மட்டும் இன்ஜின் வைத்து இறைத்து வெளியேற்றினால் போதும், அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு மழையிருக்காது, வேகமாக அஸ்திவாரம் போட்டுவிடலாம் என்று வேகமாக மனத்திற்குள் கணக்கிட்டார்கள்.

நீர் தேங்கி நின்ற வேலையாள்களின் குடில்கள் எந்நிலையில் இருக்கின்றன என்று பார்த்து வரலாம் என்று இன்ஜினீயர்கள் சென்றார்கள். கிளம்பும்போதே அந்தோணி பென்னியை வழிமறித்தான்.

“தொர, நீங்க வர வேணாம். காலை வைக்க முடியாது.”

“வேலை தொடங்கப்போகுது, கூலிங்க எப்டியிருக்காங்கன்னு பாக்கணுமே அந்தோணி? மழையால அவங்க குடிசைங்க எப்டியிருக்கு, ரிப்பேர் பண்ணணுமான்னு பாக்கணும்.”

“பிள்ளையை அனுப்புங்க தொர.”

“ஏய் அந்தோணி, என்ன விஷயம்?” டெய்லர்.

“சின்ன தொர. நான் காரணமாத்தானே சொல்லுவேன்?”

“பரவாயில்லை, வழிய விடு. என்னன்னு பாக்குறோம்” என்று அந்தோணியை விலக்கிய லோகன், பென்னிக்கு வழிகொடுத்தார்.

வேலையாள்கள் முகாமை நெருங்க, மலநெடி முகத்திலறைந்தது. லோகன் முகம் சுளித்தார்.

“அதான் சொல்லுறேன் தொர. காலை வைக்க இடமில்லை. பீக்காடா கெடக்கு. மழைக்கு வீட்ட விட்டு வெளிய போவ முடியாது. அவசரத்தை என்ன செய்யிறது தொர? ஒவ்வொரு வீட்டச் சுத்தியும் மலமும் சலமும்தான். வெள்ளம் அடிச்சிக்கிட்டுப் போயும் இன்னும் சுத்தமாகலை. குடிக்கிற தண்ணியில கலந்துபோய் ரெண்டு நாளா குப்புனு நாத்தம், கொடலைப் புடுங்குது. சின்னச் சின்னக் குடிசையில அஞ்சு பேரு, பத்துப் பேருன்னு மொடங்கிக் கிடந்தா மனுச உடம்பு நாறத்தானே செய்யும்?”

அந்தோணி யதார்த்தத்தைச் சொன்னான்.

வரிசையாக இருந்த குடிசைகளின் முகப்பில் நின்றார் பென்னி. சின்னச் சின்னக் குட்டைகளாய்த் தேங்கி நிற்கும் நீர். வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீர்க் குட்டைகள். ஆங்காங்கே குவிந்திருந்த மலம் என ஒரு நிமிடம்கூட அங்கு நிற்க முடியாத அருவருப்பில் மூவரும் நெளிந்தார்கள். பென்னிக்கு உள்ளூர இரக்கம் சுரந்தது.

“நம்முடைய குதிரைகள்கூட இப்படியொரு சுகாதாரமற்ற இடத்தில் இருக்காது.”

“நோ ஜான். தவறு நம்மீதா? இந்த சுதேசிகளுடைய பிரச்சினையே இதுதான். கூப்பிட்டுக் கேளுங்க, குளிச்சு எத்தனை நாளாச்சுன்னு? மழை ஆரம்பிச்சதுல இருந்து ஒருத்தனும் குளிச்சிருக்க மாட்டான். குடிக்கறது, குளிக்கிறது எல்லாம் ஒரே தண்ணியில. இன்னும் காட்டுவாசிங்கதான். எத்தனை லெட்ரீன் கட்டிக்கொடுத்திருக்கோம், ஒருத்தனாவது உள்ள போய் உக்கார்றானா? கேட்டா, உள்ள போனா வெளிய போக வரலைன்னு காரணம் சொல்லுவானுங்க. எப்படித்தான் நடமாடுற இடத்துல போய் வைக்கிறாங்களோ? கன்ட்ரிப்ரூட்ஸ்…” லோகனுக்குக் கோபம் வந்தது.

“நாம நாலு பேர் இருக்கோம். நாலு பேருக்கும் தனித்தனி வீடு. நெனைச்சா நாம ரெண்டு வீட்ல ரெண்டு ரெண்டு பேரா தங்கலாம். ஆனா தங்குவோமா? அவங்கள தனியா விட்டா இருக்கவே மாட்டாங்க. கும்பலா சேர்ந்தாத்தான் அவங்களுக்கு நிறைவு. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வாழ்க்கை முறை.”

“அதுக்காக இப்படியா, குடிசை முன்னாடி பின்னாடி போய் வைக்கிறது? குடிதண்ணிக்கு என்ன பண்ணுனாங்களோ?” பேசிக்கொண்டே அந்தோணியைப் பார்த்தார் லோகன்.

“கஞ்சியைக் குடிச்சிட்டு கலயத்தைக் கழுவுற தண்ணியிலயே மோந்து குடிக்கிறதுதான் தொர. அதுக்குன்னு எங்க போறது?”

“நல்லாக் குடிச்சீங்க போங்க” என்ற லோகன், வேகமாக முன்னால் நடந்தார்.

“லோகன், பவுண்டேஷன்ல தண்ணிய இறைக்கிறதுக்கு முன்னாடி கூலி கேம்புக்குக் கொண்டு வந்து சுத்தமா தண்ணிய இறைச்சு விடச் சொல்” என்றார் பென்னி.

‘பேசாம ஒழுங்கா இரு’ என்று வனதேவதை அதட்டி நிறுத்தியதுபோல் நின்றுபோயிருந்தது மழை. இளம் வெயிலும் இதமான காலநிலையும் திரண்டு வந்ததும் பென்னியும் இன்ஜினீயர்களும் பரபரப்பானார்கள். வெள்ளத்தின் அளவு குறையக் குறைய வேலை வேகமானது. இரண்டு மாதங்கள் அடி அடியாக 60 மைல் தூரத்தைக் கடந்து வந்த 12 குதிரைத் திறன் இன்ஜின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு சகதியில் புதைந்து கிடந்தது. பதினெட்டடி பள்ளத்துக்குள் கிடந்த இன்ஜினை இப்போதைக்கு வெளியில் எடுக்க முடியாது என்று உறுதியானவுடன் வேறு வழி என்னவென்று பென்னி யோசித்தார். 6 குதிரைத் திறன் கொண்ட இன்ஜின் ஒன்று கைவசமிருந்தது. குட்டி இயந்திரமான அதனால் ஒரு நொடிக்கு 500 காலன் அளவுக்குத்தான் தண்ணீரை வெளியேற்ற முடியும் என்பதால்தான் 12 குதிரைத் திறன் கொண்ட இன்ஜின் வாங்கப்பட்டது. பென்னி, “இறைக்கும் வரை இறைக்கட்டும், சிறிய இன்ஜினையே பயன்படுத்துங்கள்” என்றார். டர்பைனுடன் இணைப்புக் கொடுக்கப்பட்ட இன்ஜின் ஆச்சரியமாக இரவு பகல் இடைவெளியின்றி, எதிர்பார்த்த அளவைவிட இரண்டு மடங்கு தண்ணீரை இறைத்து வெளியேற்றியது. வாங்கும்போது சொல்லப்பட்ட உத்தரவாதத்தைவிட நன்றாக வேலை செய்தது. இடைவிடாமல் பத்து நாள்கள் இன்ஜின் ஓடிய பிறகுதான் அஸ்திவாரம் வரை இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அஸ்திவார வேலை. இனி ஆயிரம், ஐந்நூறு என ஆள்கள் போதாது, உடனடியாக இரண்டாயிரம் பேராவது வேலைக்கு வந்தே ஆக வேண்டுமென்று பென்னி உத்தரவிட்டார்.

ரத்தினம் பிள்ளையும் கங்காணிகளும் திசைக்கொருவராகப் பறந்தார்கள். திருநெல்வேலி, கோயம்புத்தூர், திண்டுக்கல் வரைக்கும் ஏஜெண்டுகள் பேரியாற்று வேலைக்கு வந்தால் கிடைக்கும் சகாயங்கள் பற்றி இனிப்புச் சுற்றிய வார்த்தைகளோடு சென்றார்கள்.

பென்னி வாசித்துமுடித்த கடிதமொன்று அருகில் இருக்க, கறுப்பு மையைத் தொட்டு, இன்னொரு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்.

“என்ன ஜான், முகத்தில் பழைய தெம்பு தெரியுதே?”

“யெஸ் மிஸ்டர் டெய்லர். உங்க லண்டன் பயணத்துக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.”

“யெஸ் யெஸ். போகணும்னு நினைச்சிட்டதால் குழந்தைங்க நினைவு வந்துடுச்சு. என்னோட கடைசி மகள் இந்தியாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க பப்பான்னு அழுகை. கப்பல் பயணம் மூணு வயசுக் குழந்தைக்கு ஒத்துக்குமான்னு, அடுத்த முறை கட்டாயம் கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொன்னேன். இந்த முறை போகும்போது கூட்டிக்கிட்டு வரணும். மேல்மலையில் என்கூட வச்சிக்கணும்னு ஆசையா இருக்கு.”

“கூட்டிக்கிட்டு வா. அதுக்குள்ள ஜார்ஜிக்கும் குழந்தை பிறந்திடும். அவளையும் குழந்தைங்களையும் இங்க கூட்டிக்கிட்டு வந்துடலாம்.”

“யெஸ் ஜான். என்ன லெட்டர்?”

“நமக்கு உதவுற சேதிதான். மிலிட்டரியில் இருந்து ஆள் கேட்டிருந்தோம் இல்லையா, அனுப்பி வைக்க செக்ரட்டரி உத்தரவு போட்டிருக்கார். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள மிலிட்டரி ஆளுங்க வந்துடுவாங்க.”

நீரதிகாரம்
நீரதிகாரம்

“ஓ ஜீசஸ். மிலிட்டரி வந்தா முதல்ல சுதேசி அக்லி பெலோஸ்ஸை குளிக்க வைக்கச் சொல்லணும்.”

“அடடா… நீ என்ன, அதை மறக்கலையா?”

“இவங்க யாருக்குமே சுத்தம்னா என்னன்னு தெரியாதா?”

“இப்போ அது நம்ம பிரச்சினை இல்லை. இரண்டாயிரம் ஆளுகளாவது வேலைக்கு வேணும். அதுதான் மதுரா ஜெயிலருக்குக் கடிதம் எழுதறேன்.”

“ஜெயிலருக்கா?”

“ஆமாம். குற்றவாளிகளைப் பி.டபுள்யூ வேலைக்குப் பயன்படுத்தறது வழக்கம்தானே? மெட்ராஸ்ல பக்கிங்காம் கெனால் கட்டும்போது, ஏன் வைகைக்குக் குறுக்கே பாலம் கட்டும்போதும் மதுரா ஜெயில்ல இருந்த கிரிமினல்ஸை வேலைக்கு அனுப்பினாங்க.”

“என்னோட புராஜெக்ட் எதிலும் நான் கூப்பிட்டதில்லை.”

“பொதுவா பெரிய புராஜெக்ட்டுக்குக் கூப்பிடுறது வழக்கம். ஜெயிலர் உடனே ஒத்துக்குவார். ஏன்னா கைதிங்களுக்குச் சாப்பாட்டுச் செலவு குறையும். அப்புறம் வெளிய வந்து ஜனங்களோடு வேலை பாக்குறப்ப கைதிங்களுடைய மனநிலை கொஞ்சம் சரியாகுதாம். உழைக்கிறதால் வருகிற பக்குவம். நமக்கு என்ன லாபம்னா கைதிங்களுக்குக் கூலி கிடையாது. சாப்பாடு மட்டும் கொடுத்தாப் போதும். மேல்மலைக்குக் கூப்பிடுறதுல ஒரே ஒரு சிக்கல் இருக்கு.”

“என்ன சிக்கல்?”

“கைதிங்களைக் காலையில் கூட்டிக்கிட்டு வந்துட்டு, இரவுக்குள்ள கொண்டுபோய் விட்டுடணும். கை கால்ல சங்கிலியோடுதான் வெளியவே அனுப்புவாங்க. வேலை முடிஞ்சதும் திரும்பவும் சங்கிலி போட்டு விட்டுடணும். நாம தினம் அனுப்ப முடியாதே, அதனாலதான் ஒத்துக்குவாங்களான்னு தெரியல?”

“செக்ரட்டரிக்கு எழுதேன்?”

“ஜெயிலர் முடியாதுன்னு சொன்னா, பிறகு கேட்கலாம். ஆனா ஆளுங்க அவசியம் வேணும் நமக்கு. அஸ்திவாரத்தை நிரப்புற வரைக்கும் கல், மண், சுண்ணாம்பு எல்லாம் பவுண்டேஷனுக்குக் கொண்டு போகணும். டன் டன்னா சுண்ணாம்பு தேவை. இனிமே வேலையில நிதானமா இருக்க முடியாது. இந்த சீசன் முடியறதுக்குள்ள பவுண்டேஷனை நதி மட்டத்துக்கு மேல கொண்டு வந்துட்டா அணை கட்டி முடிச்ச மாதிரிதான். அடுத்து வெள்ளம் வந்தாலும் நமக்குக் கவலையில்லை.”

“கட்டி முடிச்சுடுவமா ஜான்?”

“பெரியாறுகிட்டயே கேட்பமா?”

“எப்படி?” டெய்லர் ஆச்சரியமாய்க் கேட்டார்.

“கேட்டுடுவோம் வா…” டெய்லரின் கையைப் பிடித்து வெளியில் வந்து நின்றார் பென்னி.

“ஏய்… என்னாச்சு ஜான் உனக்கு?” டெய்லரின் முகத்தில் கேலியும் ஆச்சரியமும்.

“நம்மோட சின்ன வயசு விளையாட்டுதான் வா.” பென்னியும் டெய்லரும் குன்றின் மேலேறி நின்றார்கள்.

சிறிது நேரம் நதியைப் பார்த்துக்கொண்டிருந்த பென்னி, சட்டென்று உற்சாகம் காட்டினார்.

“அங்க பார். மஞ்சள் நிறப் பூவோடு சின்னதா ஒரு கிளை மிதந்து வருதா?”

பென்னியிடமிருந்த தொலைநோக்கியை வாங்கிப் பார்த்தார் டெய்லர்.

“ஆமாம், வெள்ளத்தில் தள்ளாடித் தள்ளாடி வருதே.”

“இப்போ நடுவுல வருதா?”

“ஆமாம். வருது.”

“நமக்கு நேரா வரும்போது, கிளை நம்ம பக்கம் வரணும்னு நெனைச்சிக்கோ. பெரியாறு மஞ்சள் பூங்கொத்து கொடுக்கிற மாதிரி திரும்புனா, பெரியாறு நம்மை ஆசீர்வாதம் பண்ணுதுன்னு அர்த்தம், சரியா?”

“ஏய், இதென்ன சிறுபிள்ளைத்தனம்?”

“ரொம்பச் சோதனை வரும்போது, சிறுபிள்ளையா மாறிட்டோம்னா கஷ்டத்துல இருந்து தப்பிச்சுடலாம்.”

“இது நல்ல வழியா இருக்கே?” என்று சொல்லிய டெய்லர், தொலைநோக்கியில் மிதந்து வரும் கிளையைப் பார்த்தார்.

“ஓ ஜீசஸ்…” இருவரும் சிறுபிள்ளையாகி நெற்றியில் சிலுவையிட்டு மிதந்து வரும் பூங்கொத்தைப் பார்த்தபடி இருந்தனர். நீரின் சுழற்சிக்கேற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் தவழ்ந்தும் மஞ்சள் குருவியொன்றைச் சுமந்துவரும் கட்டுமரமாகச் சீராகச் சென்றது. மையத்தின் சுழலை விட்டு இம்மியும் அசையவில்லை. தூரத்தில் தெரிந்த கிளை நெருங்க நெருங்க இருவரின் பதற்றமும் கூடியது.

``ஜான், இப்போதான் கோடு போட்ட மாதிரி அசையாமப் போகுதே?”

“ஆமாம், பார்ப்போம்.”

தவழ்ந்து வந்த கிளையைச் சட்டென்று தடுத்து நிறுத்தியதுபோல் நட்டாற்றில் நின்றது.

“ஜான், கிளை நிக்குது.”

“பெரியாறு நம்மை ஆசீர்வதிக்கும்னு எனக்குத் தெரியும்.”

நின்ற கிளை மையத்தில் இருந்து வலக்கரையோரம் இழுபட்டது. பென்னியும் டெய்லரும் நின்ற மலையுச்சியை ஒட்டிய கரைக்கு வரும்போது கிளையின் மஞ்சள் பூங்கொத்து குன்று பார்த்துத் திரும்பியது.

தொலைநோக்கியைக் கழற்றிக் கொடுத்த டெய்லர், “ஜான், பாரு உன்னுடைய பெரியாறு, நீ சொன்னபடியே உனக்கு ஆசீர்வாதம் செய்து அனுமதி கொடுத்திடுச்சு. பாரு, பாரு” என்று உணர்வெழுச்சித் தாங்க முடியாமல், பாறையில் உட்கார்ந்தார்.

தொலைநோக்கியில் பார்த்த பென்னியின் கண்கள் கலங்கி நின்றன. பாறையில் மண்டியிட்டார். நெஞ்சில் கைவைத்து, கண்களை மூடி உதடுகளை இறுக்கி, பிரார்த்தனை செய்தார்.

- பாயும்