மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 92 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

மழை நின்றவுடன் காடு இயல்புக்குத் திரும்பியிருந்தது. மிதமான வெயிலும் மிதமான குளிருமென்று மனிதர்களை அச்சுறுத்தாத காலநிலையைக் காட்டியது.

நீரின் தளும்பலாக ஆர்ப்பரித்த பென்னியும் டெய்லரும் மனத்தின் சுமைகுறைந்து அமைதியுற்றார்கள். தேவனின் ஆசியைக் கண்முன் பார்த்த பேரமைதி. இயற்கையின் அச்சுறுத்தல்களைப் பார்த்து நம்பிக்கையிழந்திருந்த நேரத்தில், இயற்கை நிகழ்த்தும் அற்புதத்தைப் பார்த்த பேருவகை.

பாறையில் இருந்து எழுந்து நின்று மீண்டும் மஞ்சள் பூங்கொத்தைப் பார்த்தார்கள். அப்போது எழுந்த மெல்லிய அலையில் அசைந்தாடி வலக்கரையோரமே முன்னேறிக்கொண்டிருந்தது பூங்கொத்து.

“ஜான், யேசுநாதர் நிகழ்த்திய அற்புதங்கள்போல் பெரியாறு நிகழ்த்திய அற்புதமா?”

“நிச்சயம் ஆசீர்வாதம்தான். நாம நினைக்கிற நேரத்துல நினைக்கிற விஷயம் நடக்கிறதுதான் உண்மையான ஆசீர்வாதமே. கிளை எப்படி நடுவில் இருந்து வலக்கரைக்கு வந்துச்சு, சொல்லு பார்ப்போம்?”

“ஓ, நீ ஏதும் மந்திரம் போட்டியா?”

“கிளை திரும்பும்போது எனக்கும் அது மந்திரம் மாதிரிதான் பரவசமாய் இருந்தது. இப்போ பார்க்கும்போது தெளிவா காரணம் புரியுது.”

பென்னி குக்
பென்னி குக்

“என்ன காரணம்?”

“நாம கட்டுன தடுப்புச் சுவர் உடைஞ்சு நிக்குது இல்ல, அது தடுத்ததால கிளை நகர்ந்து வலக்கரைக்கு வந்தது.”

“அப்போ ஆசீர்வாதம்?”

“ஆசீர்வாதம்தான். அதிலென்ன சந்தேகம். உடைந்த தடுப்புச் சுவர் அங்கங்க இருக்கு. ஏன் இன்னும் பத்தடி முன்னால் போய் கிளை இடக்கரைக்குத் திரும்பியிருக்கலாமே? நடக்கலையே? நாம நினைச்ச மாதிரி சரியா வந்துச்சில்ல. அதான் ஆசீர்வாதம். தடுப்புச் சுவர் ஒரு கருவி. காரணம் காரியம் தெரியாத பல அற்புதங்களுக்கு மத்தியில தூலமான விஷயம் ஒன்னு இருக்கத்தான் செய்யும். அது துலக்கமா தெரியாத வரைக்கும் கடவுளுடைய கிருபைன்னு நாம ஏத்துக்கணும்.”

“யெஸ் ஜான். கிளை பூங்கொத்தைக் கொடுக்கிற மாதிரியே ஆடி ஆடி வர்றதைப் பார்க்கும்போது உண்மையிலேயே பரவசமா இருந்துச்சு.”

“அப்போ கைதிங்களையும் ஜெயிலர் அனுப்புறாரா, பார்ப்போம்.”

“கட்டாயம் அனுப்புவார்.”

மாலை வெயிலே மஞ்சள் பூங்கொத்தாய் அவர்கள் இருவருக்கும் மலர்ந்து நிற்க, புதிய உற்சாகத்துடன் தங்கள் வேலைக்குத் திரும்பினார்கள்.

சிவகிரியிலிருந்து வந்திருந்த வேலையாள் ஒருவன் தயங்கியபடி லோகனிடம் வந்தான்.

“தொரகிட்ட ஒரு சமாச்சாரம் சொல்லணும்.”

“சொல்லு, என்ன விஷயம்.”

“என்னதான் ஆறணா எட்டணா கூலின்னு ஆச காட்டினாலும், இந்தப் பேய்க்காட்டுல மனுஷங்க இருக்கிறது கஷ்டம். உசுருக்கு பயந்துகிட்டு ஊரப்பாக்க ஓடிப்போயிடுறாங்க. கொஞ்சமாவது இந்தக் காட்டுல இருந்து பழகினவங்கன்னா தாக்குப் பிடிச்சு நிப்பாங்க எசமான்.”

“ஒனக்குத் தெரிஞ்சவங்க அப்படி யாரும் இருக்காங்களா?”

“நான் ராசபாளையம் பக்கம் சிவகிரி எசமான். ஆனா ஊரு வழியா வரச்சொன்னா எனக்கு வழி தெரியாது. இதோ இந்த மலையில இருந்து செண்பகா மலைக்குப் போனம்னா கண்ணக்கட்டி விட்டாலும் போயிடுவேன். செண்பகா அணை கட்டும்போது எங்க அய்யாவும் அதுல கூலி வேலை செஞ்சாரு. மலைக்காட்டுலேயே கெடக்குற ஜனங்கன்னா தாக்குப்பிடிப்பாங்க.”

“என்ன சொல்ல வர்ற?”

“செண்பகா தோப்புல ஆளுங்க இருக்காங்க தொர. இப்போ சொல்லிவிட்டம்னா நாள மறுநா உதயத்துக்குள்ள சரசரன்னு வந்து இறங்கிடுவாங்க தொர.”

“நல்லதாப்போச்சு. இங்க இருக்க யாருக்குத் தெரியுமோ அவங்கள அனுப்பி உடனே கூட்டிக்கிட்டு வரச்சொல்லு. புதுசா கட்டிக்கிட்டு இருக்கிற குடிசைல அவங்கள குடி வச்சிடலாம்.”

“உத்தரவு எசமானே” கும்பிட்டபடியே பின்னுக்கு நகர்ந்தான்.

மேல்மலையின் சின்னஞ்சிறிய சரிவுகள் ஒவ்வொன்றிலும் மனிதர்கள் மேலேறி வந்தார்கள். “மண்ணள்ளிக் கொட்டினால் போதும், அரைத்த சுண்ணாம்பைச் சட்டியில் எடுத்துக் கொட்டினால் போதும், உடைத்துப் போட்டிருக்கிற கல்லைச் சுமந்து வந்தால் போதும், ஒரு ஆளுக்கு நாளுக்கு எட்டணா, ஒரே நாள்ல ரெண்டாளு வேலையைச் செஞ்சா ஒரு ரூபாய் வாங்கிட்டுப் போயிட்டே இருக்கலாம்’ என்று எளிய சொகுசான பணம் கொழிக்கும் வேலைக்கு அழைப்பதுபோல் கங்காணிகள் ஊர் ஊருக்கு ஆள்களிடம் சொல்லி மேல்மலைக்கு அனுப்பி வைத்தார்கள். ‘தை மாதத்தைய அறுவடையை முடிச்சிட்டு வந்துடுறோம்’ என்று சொன்னவர்களிடம், ‘அறுவடைக்குக் கிடைக்கிற வருஷக் கூலிய அங்க ஒரே வாரத்துல வாங்கிக்கிடலாம் வாங்க’ என சொல்லியதைக் குடிகள் நம்பினார்கள். கங்காணிகளுக்கு கைச்செலவுக்குத் தாராளமாகச் சில்லறையும் சாராயமும் கிடைத்ததில் அவர்களின் கால்கள் ஓரிடத்தில் தரிக்கவில்லை. ஒற்றையடிப் பாதை போகும் சின்னஞ்சிறிய ஊர்களையும் விலக்காமல் சென்று ஆள்களைப் பிடித்தார்கள்.

நீரதிகாரம்
நீரதிகாரம்

அந்தந்த ஊர் தலையாரி, கொட்டடித்து ஊர் மன்றலில் ஆள்களைத் திரட்டினான். “மேல்மலையில் பேரியாறு அணை கட்டுற வேலைக்கு ஆளுக தேவை. ஓராளுக்கு ஒரு நாளுக்கு எட்டணா கூலி. எத்தனை புள்ளி போறீங்களோ அத்தனை புள்ளிக்கு கூலிய வாங்கிக்கலாம். சுமை தூக்குறதுக்கு மாடு கன்னு இருந்தாலும் கூட்டிப் போகலாம். அதுகளுக்கும் தனிக் கூலி. குடும்பமா போனா தங்குறதுக்குத் தனிக் குடிசையே போட்டுத்தருது சர்க்காரு” என்று லஸ்கர்களும் கிராம முன்சீப்களும் எடுத்துச் சொன்னார்கள். கம்பம், கூடலூர் தொடங்கி, மேலூர், அழகர்மலை வரைக்கும் பேரியாறு அணைக்கு ஆள் எடுப்பது பற்றிய பேச்சுதான்.

“இதுவரைக்கும் மேல்மலைக்கு வேலைக்குப் போனவங்க யாருமே திரும்பி வரலையாமே?”

“மலையில எறங்கி வர்ற வழி முழுக்க கொத்துயிரும் குலையுயிருமா ஆளுங்க கெடக்காமே?”

“தலையில சுமையைத் தூக்கி வைக்கிறதுக்குள்ள வெள்ளக்கார தொரைக சவுக்கால அடிப்பாங்களாமே?”

“ஒரு வேளைக்குத்தான் கஞ்சி குடுப்பாங்களாம். அதுவும் கையில வாங்கிக் குடிக்கணுமாம்.”

“கங்காணி காலணா புடிச்சிக்கிட்டுத்தான் காலணாக் கூலிய கொடுப்பானாம்.”

“காட்டுல தெனம் ஒரு ஆள புலி அடிச்சிக் கொல்லுதாம்.”

“ஆனைக ராத்திரியானா குடிசைங்கள பிச்சிப்போட்டு தூங்குற ஆளுகள மிதிச்சிப் போட்டுடுமாம்.”

“ஆத்த மறிக்கிறதால கோவம் வந்து தெனம் நாலஞ்சு பேரை நதியே முழுங்கிடுதாமே?”

கருவின்றி உயிராகும் ஒரே உயிரினமான வதந்தி வெவ்வேறு ரூபத்தில் பிறப்பெடுத்தது. பணமென்ற பலமான ஆயுதத்தின் முன்னால் வதந்தியின் மரணமும் கணத்தில் நிகழ்ந்தது. மக்கள் சாரி சாரியாக மேல்மலையின் மடிப்புகளின் வழியாக ஏறினார்கள்.

மழை நின்றவுடன் காடு இயல்புக்குத் திரும்பியிருந்தது. மிதமான வெயிலும் மிதமான குளிருமென்று மனிதர்களை அச்சுறுத்தாத காலநிலையைக் காட்டியது. குதிரைச் சேணம் போலிருந்த இரண்டு மலைக்குன்றுகளுக்கு நடுவில் ஓடிய பேரியாற்றைத் தடுத்து நிறுத்தி, அஸ்திவாரம் அமையவுள்ள இடத்தைத் தீவாக்கினார்கள். நதி மட்டத்திலிருந்து பதினெட்டடி கீழிருந்து அஸ்திவாரத்தை எழுப்ப, ஆங்காங்கே மரப்பாலங்களும் ஏணிகளும் கட்டப்பட்டன. தச்சு ஆசாரிகளுக்கும் ஒட்டர்களுக்கும் கருமான்களுக்கும் ஓய்வில்லை. துண்டு துண்டாக ஆங்காங்கு விழுந்து கிடந்த மரக்கட்டைகளைக் கயிற்றால் பிணைத்து, நீர்போகும் இடங்களில் பாலமாகக் கட்டிவைத்து அசத்துவார்கள். ஏணிகளில் ஏறி இறங்கப் பொறுமை இல்லாத இளவட்டங்கள், ஊஞ்சல்போல் தொங்கியேற மெல்லிய மூங்கில் கழிகளில் படிக்கட்டுகள் வைத்த மர ஊஞ்சல் செய்து, இமைக்கும் நேரத்தில் நீர்போகும் பாதைகளின் ஊடாக வழியமைத்துத் தந்தார்கள்.

மணல் மூட்டைகள் பத்து, நூறு என்று கீழே கொண்டு போக பெரிய இரும்பு வாளிகள் மரத் தூக்கிகளில் பிணைக்கப்பட்டு, இயக்கப்பட்டன. ஐந்தாறு பையன்கள் நாள் முழுக்க ஆங்காங்கே நின்று, கையால் இயக்கும் மரத் தூக்கிகளில் சுண்ணாம்புக் கலவையையும் மணல் மூட்டைகளையும் கீழனுப்பினார்கள்.

சுண்ணாம்பு அரைக்குமிடத்திற்கு லோகன் அதிகம் ஆள்களை நியமித்தார். இரவு, பகல் ஒரு நிமிஷமும் இடைவெளியின்றி அரைக்கப்பட வேண்டுமென்று உத்தரவு. சுண்ணாம்பு அரவையில் ஒரு நாளைக்கு நான்கு முறை காளைகளை மாற்றினார்கள்.

பென்னி பகலில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தபடியே அரை மணிநேரம், ஒரு மணிநேரம் கண் மூடுவதுதான். அவர் உறங்குகிறாரா, வேலைகளைத் திட்டமிடுகிறாரா, மனைவி பிள்ளைகளைப் பற்றி நினைக்கிறாரா, இல்லை, எல்லாம் ஒன்றுசேர்ந்த எண்ணவோட்டங்களா என்று சொல்ல முடியாது. அத்துடன் அவர் உணவுக்காகக்கூட வீட்டுக்கு வருவதில்லை. வேலைத் தளத்திலேயே நின்றார். மற்ற மூன்று இன்ஜினீயர்களும் வெவ்வேறு வேலைகளுக்குச் சென்று வந்தாலும் பென்னி பவுண்டேஷன் வேலை நடக்குமிடத்தை விட்டு நகர்வதில்லை. பென்னியின் அயராத கண்காணிப்பும் வேலையாள்களின் கடும் உழைப்புமாகச் சேர்ந்து அஸ்திவாரம் பத்தடி உயரத்திற்கு எழுந்தது.

மழை வெள்ளம் அரித்ததால் ஆங்காங்கு பாதையின்றி சுண்ணாம்பு மூட்டைகள் மேலே வந்து சேர்வதில் தாமதமானது. ரத்தினம் பிள்ளை கம்பத்தில் இருந்த காப்பிலியர்களைப் பார்த்துப் பேசினார். மேல்மலை வேலைக்குத் தேவைப்படும், காளைகளைத் தோது செய்து வையுங்களென்று ஏற்கெனவே கலெக்டர் ஆபீசு அலுவலர்கள் கொட்டடித்திருந்தார்கள். கொடைக்கானல், திண்டுக்கல், கோயம்புத்தூர் சந்தைகளில் இருந்தெல்லாம் காளைகளை வாங்கி வளர்த்திருந்தார்கள் காப்பிலியர்கள். வண்டி மாடுகள் மேல்மலை நோக்கி, சலங்கை அதிர நடந்தன. மூணாறு மலையிலிருந்து கழுதைகள் கும்பல் கும்பலாக வந்தன. மாட்டு வண்டிகளும் கழுதைகளும் அலை அலையாக மேல்மலையில் ஏறின.

பென்னி எதிர்பார்த்ததைப்போல் வேலைக்கு ஆள்கள் சேர்ந்தார்கள். இரண்டாயிரம் பேரளவில் அணை கட்டுமிடத்தில் இருந்தார்கள். திடீர் குடிசைகள் வேயப்பட்டன. இடமில்லாதவர்கள் பாறைகளின்மேல் கூடாரம் அடித்துத் தங்கினார்கள். நான்கு திசைகளிலும் இரவு முழுக்க தீப்பந்தங்கள் காண்பிக்கவும் கொட்டடிக்கவும் ஆள்களை நியமித்திருந்ததில் ஓரளவுக்கு அச்சமின்றி வெளிக்கூடாரங்களுக்குள் தூங்கினார்கள். தடங்கல், தடங்கல் என்று சோர்ந்திருந்த அணை வேலை தீயாய் நடந்தது.

ஆள்களின் எண்ணிக்கை கூடியவுடன் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்த பென்னி கடிதம் எழுதினார். உடனடியாக சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஒருவரையும் ஆயாக்கள் இருவரையும் நியமிக்கக் கேட்டார். நியமிக்க இருப்பதாக செக்ரட்டரி கடிதம் எழுதியிருந்தார். கடிதம் வந்து ஒருவாரம் ஆகியும் நியமனம் ஆகவில்லை. பாதிரியார் ராபர்ட், அணை வேலை துரிதமானதில், ‘யேசுவின் கருணை’ என்று மகிழ்ந்து உற்சாகமாகப் புதியவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் நட்பு பாராட்டினார்.

சர்க்கார் பணம் கொடுக்கும் வரை ஆங்கூர் ராவுத்தர் காத்திருக்கவில்லை. அரிசி, குருணை, கறிகாய் என மேல்மலைக்குச் சுமையேற்றி அனுப்பி வைத்துக்கொண்டிருந்தார். எல்லாம் கூடிவரும் ஒளிகூடிய பொழுது மேல்மலையில் கனிந்திருந்தது.

அஸ்திவாரத்துக்குத் தேவையான கற்களை மலைச்சரிவுகளில் இருந்து வெட்டியெடுத்து அனுப்பிக்கொண்டிருந்தார் தங்கராசு. பாறை உடைக்கும் இடமென்றாலும் அவரை விட்டு விலகாமல் கூடவே நின்றிருக்கும் அவரின் இரண்டு நாய்களும். வெடி வைக்கும்போது குரைத்துச் சத்தமெழுப்பி இங்குமங்கும் ஓடும். பாறையை உடைக்கும்போது அமைதியாக நிற்கும்.

தங்கராசு தன்னுடன் எத்தனை பேர் வேலை பார்த்தாலும் தானும் சேர்ந்து கல்லை உடைத்துப் போட்டால்தான் நிறைவாக உணர்வார். பெரும்பாலும் அவர் வயதுக்கு, அதைச் செய், இதைச் செய் என்று நின்றுகொண்டு மேலாண்மை செய்பவர்கள்தான் இருப்பார்கள். ஒவ்வொரு கல்லையும் எந்த தினுசில் வெட்டியெடுக்க வேண்டுமென்று வாய் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவரின் கை, அந்த நேரத்திலும் ஒரு கல்லை உடைத்துக் கொண்டிருக்கும்.

அணை கட்டுமிடத்தின் இடக்கரையோரச் சரிவில் பாறையை உடைத்துக்கொண்டிருந்த தங்கராசுக்குக் காலையில் இருந்தே சோர்வாக இருந்தது. உடம்பு முழுவதும் ஓர் அசௌகரியம். வெயிலில் மழையில் காயும் உடம்பு இதுவரை நோயென்று படுத்ததில்லை. வலியென்று கை, கால் முடங்கியதில்லை. தலைவலி, மேலுக்குக் காய்ச்சல் என்று அவர் சொன்னதே இல்லை. கல் உடைக்கும்போது சிறு வயதில் பாறையில் அடித்த உளி தவறுதலாகக் கையில் பட்டு இரண்டு மூன்று முறை காயமாகியிருக்கிறது. தங்கராசுக்கு அவரின் தாத்தையாதான் எல்லாம். நானாவிடம் நெருங்க மாட்டார். தாத்தையா, கைக்காயத்துக்கு மருந்து போட்டபடி, ‘ஆயுதம் தூக்குறவனுக்கு ஆயுதத்துலதான் கவனம் இருக்கணும். இல்லைன்னா தூக்குற ஆயுதம்தான் எமன். கண்ணுல இருக்கணும் கவனம். கொஞ்சம் தப்புனா அங்கஹீனத்தோட, சாப்புடுற கையிலயே கழுவிக்கிற அசிங்கத்தைச் செய்யணும், பாத்துக்கிடு’ என்றார். கவனம் என்றால் என்னவென்பதை ஒரே ஒரு வார்த்தையில் தாத்தையா சொல்லிக்கொடுத்தது, இன்றுவரை மறக்கவில்லை. கைதவறி ஒரு வெட்டு விழுந்ததில்லை. இலக்குவிட்டு அவரின் உளி இறங்கியதில்லை.

இன்று நெஞ்சைப் பிசையும் வலி இருக்கிறது. வயிற்றுக்குக் கீழேயும் எடைகூடி உடல் இரண்டாள் சுமையாய் கனக்கிறது. தாகமாய் இருந்தது. ஆனால் தண்ணீரைப் பார்த்தால் வெறுப்பு வந்தது. நா உலர்ந்து தொண்டைக்குழி வரை வறட்சி. ஒரே பொழுதில் உடலின் சக்தியெல்லாம் வறண்டுபோன உணர்வு. இரவு வெடி வைத்துவிட்டிருந்த பாறையை உடைத்துக்கொண்டிருந்தார்கள். தங்கராசு, உளியை அப்படியே விட்டுவிட்டு மெல்ல நடந்து மர நிழலுக்குச் சென்றார். வாலை ஆட்டியபடியே இரண்டு நாய்களும் உடன் சென்றன.

“ச்சூ, நீங்க போங்கடா. கால்ல சிக்குற மாதிரியே வந்துகிட்டு. ச்சூ...” என்று நாய்களை விரட்டினார்.

அவரின் விரட்டும் குரல் கேட்டவுடன், ‘சரிதான்’ என்பதைப்போல் நாக்கை வெளியில் நீட்டி, தலையைக் கீழே தொங்கவிட்டுக்கொண்டு சமாதானம் காட்டி நடந்தன.

“சொல்றேன் இல்ல. போங்க அம்மாகிட்ட” என்று சொன்ன தங்கராசுக்குக் குரல் வெளியில் வரவில்லை.

தரையைப் பார்த்து, புசு புசு என்று மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு, ‘நீ என்ன வேணா சொல்லு, நாங்க கூடத்தான் இருப்போம்’ என்பதைப் பணிவாய்ச் சொல்லின நாய்கள்.

தங்கராசு மரநிழலுக்குச் சென்றவர் கொஞ்ச நேரம் குத்த வைத்து உட்கார்ந்தார். முகமெங்கும் வியர்வை. தூரத்தில் பார்த்தவருக்கு ஒன்றும் தெரியவில்லை. ‘வியர்வை கண்ணை மறைக்குதா?’ என்று சந்தேகித்து, இரண்டு கையால் முகத்தை அழுந்த துடைத்தார். மீண்டும் பார்த்தார். கலங்கியது தெளிவதற்குப் பதில் மேலும் கலங்கியது. குத்த வைத்து உட்கார்ந்ததில் முழங்காலுக்குக்கீழே நரம்பிழுத்து கெண்டை ஏறியது. கொரக்கலி வாங்கிய காலை நீட்டிச் சரிசெய்ய முயன்றவர் குடைசாய்வதுபோல் மண்ணில் சரிந்தார். மண்ணை முகர்ந்திருந்த நாய்கள் இரண்டும் தங்கராசு கீழே விழுந்தவுடன் அருகில் ஓடிவந்து அவரை மோந்து பார்த்தன. கால்களை ஒன்றும் முகத்தை ஒன்றும் நாவால் நக்கின.

தங்கராசிடம் அசைவில்லாததில் இரண்டும் குரைத்தன. ‘வாள் வாளென்று’ இடைவிடாமல் எழுந்த குரைப்பு, கொஞ்ச நேரத்தில் அழுகை போன்ற கேவலானது. பாறையுடைக்கும் சத்தத்தில் ஒருவரும் நாய்களின் குரைப்பைக் கூர்ந்து கவனிக்கவில்லை. இரண்டில் ஒன்று இன்னொரு நாயைப் பார்க்க, பார்வையின் கட்டளையை உணர்ந்ததுபோல் இரண்டாவது நாய் பாறையுடைக்கும் இடத்திற்கு ஓடிவந்தது. கல்லுடைத்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து இடைவிடாமல் குரைத்தது. அதன் குரைப்பில் அழைப்பிருப்பதை உணர்ந்த காத்தவராயன், “என்னடா வாய மூட மாட்டீங்கிறீங்க? நானா எங்கே?” என்று கேட்டுக்கொண்டே உளியைக் கீழே வைத்துவிட்டு நாய் குரைக்கும் இடத்திற்கு வந்தான். அவன் எழுந்து நடந்தவுடன், திரும்பி ஓடத் தொடங்கியது நாய். நாய் ஓடுவதைப் பார்த்த காத்தவராயன், அதன் குரைப்பும் அசாதாரணமாய் இருப்பதைப் புரிந்து, பின்னால் ஓடினான். தங்கராசு பேச்சு மூச்சில்லாமல் விழுந்துகிடப்பதைப் பார்த்துப் பதறியவன், அப்பாவைத் தூக்கினான். நாயிரண்டின் கேவல் அதிகமானது.

“அந்தோணி, தெப்பத்தை எடு…” கத்திக்கொண்டே கரைக்கு ஓடினான்.

தங்கராசைத் தூக்கிக்கொண்டு ஓடிவரும் காத்தவராயனைப் பார்த்து வேலை செய்துகொண்டிருந்தவர்கள் ஓடிவந்தார்கள். அந்தோணி, ஆபத்து புரிந்து தெப்பத்தின் கயிற்றை அவிழ்த்துவிட்டு, துடுப்புடன் தயாராக நின்றான். எதிர்க்கரையில் ஆசுபத்திரி இருந்தது. என்ன நடந்தாலும் கைவைத்தியம் பார்த்துக்கொண்டவர்கள், உடம்பு சரியில்லையென்றால் ஆசுபத்திரிக்கு வரவேண்டுமென்பதை மேல்மலை சொல்லிக்கொடுத்திருந்தது.

நீரதிகாரம்
நீரதிகாரம்

“எஸ்தர் இங்க இருந்துச்சா?”

“இல்ல, ஆசுபத்திரியிலதான் இருக்கும்னு நெனைக்கிறேன்.”

“என்னாச்சு நானாவுக்கு?”

“என்னன்னு தெரியலையே? கல்லொடைச்சிக்கிட்டு இருந்தாரு. திடீர்னு நாய் குரைக்கிற சத்தம். என்னன்னு போய்ப்பார்த்தா நானா நெனவில்லாம கெடக்குறாரு.”

“ஒம்மேலல்லாம் என்ன?”

காத்தவராயன் குனிந்து தன் மேலைப் பார்த்தான். உடம்பில் ஆங்காங்கே மஞ்சள் பத்துக்களாக இருந்தன. தொட்டு முகர்ந்தவன் முகம் சுளித்தான்.

“என்னாச்சு?”

“தெரியல, அப்பாவுக்கு வயித்தால போயிடுச்சு போல” என்ற காத்தவராயன், தங்கராசின் சோமனைத் தொட்டுப் பார்த்தான். முழுமையாக நனைந்திருந்தது. எலும்பாய் இருந்த மார்புக்கூடு ஏறியிறங்கியதில் நிம்மதியடைந்தான் காத்தவராயன்.

வலக்கரைக்குப் போனவுடன் காத்தவராயனைத் தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு ஆசுபத்திரிக்குள் ஓடினான். காய்ச்சலுக்காக வந்திருந்தவர்களுக்கு மருந்து கொடுத்துக்கொண்டிருந்தாள் எஸ்தர். காத்தவராயன் ஓடிவந்தவுடன், தங்கராசை அருகில் இருந்த படுக்கையில் கிடத்தச் சொன்னாள். அப்போத்தகிரி ஓடிவந்து தங்கராசை நாடிபிடித்துப் பார்த்தார்.

“என்னாச்சு?”

“வேலை செஞ்சிக்கிட்டு இருந்தாரு. கொஞ்ச நேரம் செண்டு பார்த்தா மயங்கிட்டாரு. வயித்தால போயிருக்குன்னு நெனைக்கிறேன்.”

“என்ன சாப்பிட்டாரு?”

“இங்க ஊத்துற கஞ்சிதானுங்க.”

“அதுமட்டுமா சாப்பிடுறீங்க. காட்டுமேட்டுல கைக்குக் கெடைக்கிறதைப் பறிச்சு சாப்பிடுறீங்க. மான் புல்லு மேயுற மாதிரி கெடைக்கிறதை மேஞ்சுக்கிட்டே போறீங்க. எதுனா சேராம போயிருக்கும்.”

“இல்லை, நானா ஒன்னும் சாப்பிடாது.”

அப்போத்தகிரி நம்பாமல் இருவரையும் பார்த்தார். நாடித் துடிப்பில் அனுகூலமான முடிவு தெரியாதது அவரின் முகத்தில் தெரிந்தது.

“இங்கியே இருக்கட்டும். என்னன்னு பார்ப்போம். உக்காருங்க” என்ற அப்போத்தகிரி, எஸ்தரிடம் கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகளைச் சொன்னார்.

தங்கராசு மெலிந்து காய்ந்து உறுதியான ஆலவிழுதாய்க் கிடந்தார். அவரின் மூச்சு பலவீனமாய் இழையளவு இருந்தது. காத்தவராயன் நானாவின் அருகில் குத்தவைத்து உட்கார்ந்தான். வெளியில் இரண்டு நாயின் குரைப்பும் கேட்டது. எப்படி எதிர்க்கரைக்கு நீந்தி வந்தன என்று ஆச்சரியப்பட்டான் அந்தோணி.

அந்தோணி எஸ்தரைப் பார்க்கச் சென்றான்.

“நானாவுக்கு என்ன? திடீர்னு ஏன் மயங்கியிருக்காரு?”

“அதுதான் தெரியலையே? விஷ ஜந்து கடிச்சிடுச்சான்னு தெரியல. விஷ ஜந்து கடிச்சிருந்தா வயித்தால போகாது. சாப்பிட்டது சேரலையான்னு தெரியல.”

“கொடுத்திருக்க மருந்துக்குக் கேக்குமா?”

“கேக்கும். ஆனா அவருக்கு நாடித்துடிப்பு கம்மியா இருக்கு. அதுக்குத்தான் என்ன காரணம்னு தெரியலை. பாக்கலாம் இருங்க.”

“காத்து ஒடைஞ்சி போயிட்டான், என்னன்னு பாருங்க.”

“நீங்க சொல்லவே வேணாம்” என்ற எஸ்தர் சில பச்சிலைகளைத் தேடிப் பிடித்துப் பறித்தாள். நாய்களின் ஊளை அதிகமானது. ஊளை அந்திக்குள் அழுகையானது.

தங்கச்சிலை என்கிற தங்கராசின் விழிகளில் அவரின் உயிரான இரண்டு நாய்களின் பிம்பங்கள் நிலைத்திருக்க, பிறழ்ந்த நினைவுகள் திரும்பாமலேயே மண்ணுலகை நீத்தார். அடுத்த நாள் பொழுது வீழ்வதற்குள் தங்கராசின் மனைவியும் இறந்துபோனாள்.

இருவரின் மரணத்துக்கான காரணம் கண்டறிய முடியாமல் அடுத்து வந்த ஒருநாள் பொழுது கழிந்தது.

தங்கராசு இறந்த மூன்றாம் நாள் கூலிகளில் ஐம்பது பேருக்குமேல் வயிற்றால் போனது. உட்கார்ந்த இடத்திலேயே வாந்தி எடுத்தார்கள். ஒரு வாய் கஞ்சி குடித்தால் குடித்ததைப்போல் இரண்டு மடங்கு வாந்தியாக வந்தது. குடும்பத்தில் ஒருத்தருக்கென்று இல்லை, குடும்பத்துக்கே வயிற்றால் போனது. நான்காம் நாள் காலை கோயம்புத்தூரில் இருந்து வந்திருந்த இருபது வயது ஆள் மணலள்ளிக் கொட்டும் இரும்பு வாளி கையில் இருக்கையில், அப்படியே விழுந்து செத்துக் கிடந்தான். ஐந்தாம் நாள் காலை ஆசுபத்திரி முழுக்க மக்கள் வாந்தி பேதி என்று மயங்கிய நிலையில் சத்துப்போன நடையுடன் வந்து சேர்ந்தார்கள்.

ஆறாம் நாள் காலை, ஆசுபத்திரியில் இருந்தவர்களில் ஆறு பேர் ஒரே நேரத்தில் செத்துப்போன தகவல் பென்னிக்கு வந்தது. “ஆறு பேரா?” என்று அதிர்ந்தவர், நடந்த விஷயங்களை விசாரித்தார். சட்டென்று அவருக்குள் பயம் படர்ந்தது.

“பிள்ளையை வரச்சொல்” என்று உதவியாளனுக்கு உத்தரவிட்டவர், டெய்லர் வீட்டுக்குச் சென்றார்.

“டெய்லர்…”

பென்னியின் குரல் அதிர்ந்து ஒலிப்பது கேட்டு, புகைத்துக்கொண்டிருந்த சுருட்டைப் பாதியில் அணைத்தபடி ஓடிவந்தார்.

“நாம பெரிய ஆபத்துல இருக்கோம்.”

“என்னாச்சு ஜான்?”

“ஐ திங்க்…” பென்னியின் நா தடுமாறியது.

“என்னன்னு சொல்லு.”

“கேம்ப்ல காலரா வந்துடுச்சு…”

“என்னது, காலராவா?” டெய்லருக்கு மயக்கம் வந்தது.

காலராவுக்கு இன்னொரு பெயர் காலன். பூப்போல் வலிக்காமல் உயிர்பறித்துச் சென்றுவிடும்.

“ஆமாம். இன்னைக்கு மட்டும் ஆறு பேர் செத்திருக்காங்க” பென்னி சொல்லி முடிக்கும்போது ரத்தினம் பிள்ளை எதிரில் வந்து நின்றார்.

“அறிவிருக்கா உங்களுக்கு, என்ன நடந்தாலும் எனக்கு அப்பப்போ தகவல் சொல்லணும்னு சொல்லியிருக்கேனே?”

பென்னி கோபமாய்ப் பாய்ந்தவுடன் பிள்ளை பயந்தார். ஒருபோதும் கடுமையான வார்த்தைகளைப் பென்னி பேசிப் பார்த்ததில்லை.

“ஏதும் தப்பு பண்ணிட்டேனா தொர?”

“தப்பு இல்லை, பெரிய குற்றம் பண்ணியிருக்கீங்க.”

“ஐயோ, என்னாச்சு, சுவாமி சத்தியமா நான் செய்யுற வேலைக்குத் துரோகம் பண்ண மாட்டேன் தொர.”

“ஏய், அதெல்லாம் பேச நேரமில்ல. தங்கராசு வயித்தால போய்த்தான் இறந்துட்டார்னு சொல்லியிருக்கணுமில்ல?”

“தொர, அவர் எப்படிச் செத்தாருன்னு தெரியவே இல்லையே? உக்காந்துக்கிட்டு இருந்தவரு, மயங்கி விழுந்து செத்துட்டாருன்னு சொன்னாங்க.”

“ஓடு, கலெக்டர் ஆபீசுக்குத் தந்தி கொடுத்து, சானிட்டரி இன்ஸ்பெக்டரை வரச்சொல். காலரா வந்துடுச்சு. கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்தோம்னா கேம்ப்பே காலியாயிடும்.”

“ஐயோ…” பிள்ளைக்கு உயிர் போகும் பீதி.

“வீட்டுப் பக்கத்துலயே போய் வச்சிருந்த அக்லி பெல்லோஸ் வேலையைப் பாக்கும்போதே சந்தேகப்பட்டேன், எப்படிக் கொள்ளை நோய் எதுவும் வராம இருக்குன்னு?”

“இப்போ செய்ய வேண்டியதைச் சொல்லு டெய்லர். சுத்தமான இடமாச்சே, நமக்கு காலரா ஆபத்தில்லைன்னு நெனைச்சிட்டேன்.”

“காடு சுத்தமாத்தான் இருக்கு. அசுத்தமான தண்ணிய குடிக்கிறாங்க. குளிக்கிறதே இல்லை. கை கழுவுறது இல்லை. இவங்களுக்குச் சுத்தமா இருக்கிறதைப் பத்திச் சொல்லிக்கொடுக்கவே முடியலையே.”

மேல்மலையின் கூலி கேம்ப்பில் விருந்துண்ணும் குதூகலத்துடன் சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தது காலரா.

- பாயும்