மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 93 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

குதிரையிலிருந்து இறங்கியவர், வேகமாக மரத்தடிக்குச் சென்றார். பத்துத் தப்படி எடுத்து வைத்திருப்பார், அதற்குள் அவரின் குதிரையைப் பிடித்துச் செல்ல, நீ நான் என்று பத்துப் பேருக்குமேல் போட்டி போட்டார்கள்.

பெரியாறு அணை வேலையாள்களின் குடிசைகளில் மனிதர்கள் நாராய்த் துவண்டுகிடந்தார்கள். காலரா வந்த ஒரு வாரத்திற்குள் நூறு பேர் இறந்துபோனார்கள். வாந்தியும் பேதியுமாய் உடம்பின் சத்துகள் வெளியேறியதில் உடலை அசைக்க முடியாமல் இருந்த இடத்திலேயே மடங்கி விழுந்தார்கள். உயிர் இருக்கிறதா என்பதைப் பார்க்க ஆளில்லை. உயிருடன் இருந்த உடம்பிலும், மூச்சு நின்றுபோன உடம்பிலும் ஈக்கள் மொய்த்தன. இரண்டாயிரத்தைந்நூறு பேர் வேலை செய்யும் இடத்திற்கான தேவைகளுடன் ஆசுபத்திரி இல்லை. எஸ்தரும் ஒரு டாக்டரும் இரண்டு அப்போத்தகிரிகளும் மூன்று ஆயாக்களும் மட்டுமிருந்தனர். ஐம்பது, நூறு என்று குவிந்த நோயாளிகளைக் கையாளும் வகை தெரியாமல் ஆசுபத்திரி தடுமாறியது.

பென்னி, கலெக்டர் ஆபீசுக்கு சானிடரி இன்ஸ்பெக்டரை அனுப்பச் சொல்லி, அவர் குழுவுடன் வந்து சேர்வதற்குள் மேலும் இருநூறு பேர் செத்துப்போனார்கள். குடிசை வாசலிலும் நதிக்கரையோரங்களிலும் கழிப்பதற்காக ஒதுங்கிய புதர்களின் மறைவிலும் சின்னக் குட்டைகளிலும் மனிதப் பிரேதங்கள். கலெக்டர் உத்தரவில் வேலைக்காகக் கிளம்பியவர்கள், காலராவில் பிழைத்தவர்கள் யாருமில்லையென்ற பயத்தில், வேலை போனாலும் பரவாயில்லையென்று வழியில் காணாமல்போனார்கள்.

மேல்மலையில் ரத்தினம் பிள்ளை, பென்னியையும் மற்ற இன்ஜினீயர்களையும் உடனடியாக கொடைக்கானலுக்குக் கிளம்பிப் போகச் சொன்னார். பென்னி மறுத்ததோடு, அங்கிருக்கும் இன்ஜினீயர்களும் அலுவலர்களும் முகாமை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவிட்டார். தாங்கள் இருக்கும் மேல்மலை பாதுகாப்பானதுதான் என்று இன்ஜினீயர்களின் அச்சம் கலைந்தார். காலராவினால் அதிகரிக்கும் உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்த என்னென்ன வழியிருக்கிறதோ, அத்தனையையும் உடனடியாகச் செய்யச் சொன்னார். முகாமில் பொது அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது. வெந்நீரை மட்டுமே குடிக்க வேண்டும், தண்ணீரில் உப்பும் சர்க்கரையும் கலந்து குடிக்கலாம் என்று அறிவுரைகள் கொடுக்கப்பட்டன.

நீரதிகாரம்
நீரதிகாரம்

எஸ்தரும் அந்தோணியும் ஒவ்வொரு குடிசையாக நுழைந்து வந்தார்கள். குடிசைக்குள் மயங்கிக் கிடந்தவர்களை ஆசுபத்திரிக்குக் கொண்டுவந்து உடனடியாக உப்பு, சர்க்கரை கலந்த தண்ணீரைக் குடிக்க வைத்தார்கள். தண்ணீரை விழுங்குவதற்குக்கூட தெம்பில்லாமல் கடைவாயில் நீர்வழிய வாய்பிளந்து கிடந்தார்கள் வேலையாள்கள்.

திடகாத்திரமான போர்த்துக்கீசிய ஆசாரிகளுமே துவண்டு விழுந்தனர். ஆஜானுபாகுவான உடம்பிருந்தாலும் கண்ணுக்குப் புலப்படாத நோய்க்கூற்றுவனால், இடிவிழுந்த பச்சை மரம்போல் சாய்ந்தனர்.

திருநெல்வேலியிலிருந்து இரண்டு நாள்களுக்கு முன்பு வந்திருந்த இருபது பேர், மூன்று குடும்பங்கள், வந்த நாளிலேயே ஓடும் ஆற்று நீரை மண்குடத்தில் நிரப்பிக் குடித்ததில், இரண்டு குடும்பங்களில் ஒருவரும் மிஞ்சவில்லை.

ராசுமாயனுக்கும் பேயத்தேவனுக்கும் சுடுநீர் கொடுக்கும் வேலையே சரியாக இருந்தது. “சாமி எங்கடா காணோம்? ஒரு வாரமா கண்ணுலயே படலையே அவென்?” என்று அவ்வப்போது பேயத்தேவன் கேட்டுக்கொண்டிருந்தாலும் யாரும் பதில் சொல்லவில்லை. பதிலும் தெரியவில்லை.

புதர் மறைவிடங்களில் ஒரு வாரமாய்க் கிடந்த பிணங்கள் நாறின. பிணநாற்றம் காற்றில் கலந்திருந்தது. அடர்த்தியான பருத்தித் துணியை மூக்கில் கட்டிக்கொண்டுதான் பென்னி நடமாடினார். நிலைமை கைமீறிப் போகவிருந்த நாளில் ராணுவம் வந்திறங்கியது. கட்டட வேலைக்கென்ற எதிர்பார்ப்பில் வந்த ராணுவ வீரர்கள், காலராவினால் சீர்குலைந்திருந்த முகாமைப் பார்த்து அதிர்ந்தார்கள். உடனடியாக நிவாரண வேலையில் இறங்கியது மெட்ராஸ் சாப்பர்ஸ் படை.

அடக்கம் செய்யப்படாமல் கிடந்த பிரேதங்களை ஓரிடத்தில் கொண்டுவந்து கிடத்தினார்கள். ஆழமாகக் குழி தோண்டினார்கள். பத்திருபது பிணங்களாகக் குழியில் தள்ளி மூடினர். ரெவரெண்ட் பாதிரியார் ராபர்ட் இறந்த போர்த்துக்கீசிய, ஐரோப்பிய ஊழியர்களின் பிரேதங்களை முறையாக அடக்கம் செய்ய உதவ வேண்டுமென்று ராணுவத்திடம் கேட்டார். தடுப்புச் சுவர் எழுப்ப மரச்சட்டங்களையும், நீர்வழியைக் கடக்க ஏணிகளையும் பாலங்களையும் அடித்துக்கொண்டிருந்த பெர்னாண்டஸ், கனத்த இதயத்துடன் சவப்பெட்டிகளைச் செய்தார். பாதிரியார் கண்ணீர் மல்க புனித நீர்தெளித்து, ஆண்டவனிடம் நித்திரைகொள்வதற்கான பயணம் தொடங்கட்டும் என்று பிரார்த்தனை செய்து, மரியாதையாக வழியனுப்பி வைத்தார். கொள்ளை கொள்ளையாக மக்கள் செத்துவிழுந்தவுடன், பாதிரியார், பிரிட்டிஷார் மற்றும் ஐரோப்பியர்களுக்கென்று தனியாகக் கல்லறை இருக்கட்டும் என்று பென்னியிடம் தெரிவித்தார். இறந்த ஒவ்வொருவரின் ஆன்மாவும் சாந்தியடைய தனித்தனியாகப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

கூலிகள் பெரிய குழிகளுக்குள் ஐந்து பேர், பத்துப்பேராகச் சேர்த்துப் புதைக்கப்பட்டனர். குடும்பத்தில் கடைசியாக இறந்தவர்களின் நிலைமை துயர்நிரம்பியது. அவர் பெயரென்ன, எப்போது இறந்தார் போன்ற விஷயங்களைச் சொல்வதற்குக்கூட ஆளில்லை. மனிதர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பே, மரணத் தருணத்தில் அவர்களை நினைவுகூர்பவர்கள் அருகில் இருக்க மரணிப்பதுதான். பெரியாறு அணை வேலைக்கு வந்த பாவப்பட்ட கூலிகளுக்கு அந்தக் கனவும் நிறைவேறவில்லை. அடிபட்டு இறந்த விலங்குகளைப்போல் குழிகளில் மனித சரீரங்கள் ஒன்றின்மேல் ஒன்று விழுந்து புதைந்தன.

இறந்தவர்களின் உடைமைகளைச் சேகரித்துத் தீயிட்டது ராணுவம். அரைகுறை உயிருடன் மன்றாடியவர்களை உடனடியாகத் தனிமைப்படுத்தியது. தங்கள் உயிரைப் பற்றிய அச்சம் துறந்த எஸ்தர், பார்வதி, அந்தோணி, பேயத்தேவன் உள்ளிட்டோர் எவ்வளவு முயன்றும் நோய்வாய்ப்பட்டவர்களைக் காக்க முடியவில்லை. ஆனால் மரணித்தவர்களை மரியாதையாகப் புதைக்க ஏற்பாடு செய்தனர்.

மிலிட்டரி, சானிட்டரி கமிஷன் எல்லாம் வந்தும் காலராவின் தீவிரம் குறையவில்லை. பென்னியுடன் அவசரமாக ஆலோசனை நடத்தியது மிலிட்டரி. உடனடியாக குடிசைகளில் உள்ள மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, குடிசைகளைத் தீயிட்டு எரித்தால் மட்டுமே நோயைக் கட்டுப்படுத்த முடியுமென்று சானிட்டரி இன்ஸ்பெக்டர் சொன்னார்.

பென்னி அதிர்ந்தார். குடிசைகளை எரிப்பதா? மீண்டும் எப்போது குடிசை கட்டி முடிப்பது? புதிதாகக் குடிசைகள் கட்ட சர்க்காரிடம் புதிய எஸ்டிமேட் கொடுக்க வேண்டும். சீப் இன்ஜினீயர் அனுமதித்த பிறகு குடிசை கட்ட ஆரம்பித்து, கட்டி முடிக்க எத்தனை மாதமாகுமோ? கொஞ்சம் முன்னேற்றம் காண்பித்தது, இப்படி மொத்தமாய் சரித்துவிடத்தானா என்று மனம் கலங்கினார்.

“குடிசைங்கள எரிச்சு என்ன செய்யப் போறோம்?”

“மிஸ்டர் ஜான், நோயைக் கட்டுப்படுத்தணும்னா இங்க கூலி கேம்ப்ல இருக்க கூலிங்க எல்லாரையும் உடனடியா இடம் மாத்துங்க. இல்லைனா ஒரு உயிரும் மிஞ்சாது. கூலிங்கள இடம் மாத்துன உடனே, குடிசைங்கள எல்லாம் தீ வச்சுக் கொளுத்தணும். தண்ணி முழுக்க அசுத்தமா இருக்கு. இடமும் அசுத்தமா இருக்கு. நாலஞ்சு மாசம் இந்த கேம்ப்பைப் பயன்படுத்தக் கூடாது. இன்னைக்கே நான் சீப் செக்ரட்டரிக்கு எழுதி அனுப்பிடுறேன்” என்றார் சானிட்டரி இன்ஸ்பெக்டர்.

அவர் சொல்வதன் நியாயம் புரிந்தாலும் பென்னியால் உடனடியாகச் சம்மதம் சொல்ல முடியவில்லை.

பென்னி குக்
பென்னி குக்

“இப்போ இருக்கிறவங்களுக்கு ஒன்னும் பிரச்சினையில்லையே? அவங்க எல்லாம் நல்லாத்தானே இருக்காங்க?”

“நல்லா இருக்காங்கன்னு நம்மால் சொல்ல முடியாது. திடீர்னு என்ன வேணா நடக்கலாம். கேம்ப்பை காலி செய்ய என்ன வழின்னு யோசிங்க. சாயந்திரத்துக்குள்ள முடிவு தெரியணும்” என்று கண்டிப்பாய்ச் சொன்னார் இன்ஸ்பெக்டர்.

பென்னிக்கு வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை. வேலை நடப்பதைவிட வேலையாள்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிப்பதுதான் இப்போதைக்கு அவசரம் என்று எண்ணிய பென்னி, ‘மிலிட்டரியும் சானிட்டரி டிபார்ட்மென்டும் என்ன முடிவெடுக்கிறீங்களோ அதை உடனடியாகச் செய்யலாம்’ என்று அப்போதே முடிவைச் சொல்லிவிட்டார்.

பெரியாற்றின் இடக்கரையில் இருந்த கூலி கேம்பை, வலக்கரைக்கு மாற்ற மிலிட்டரி உத்தரவிட்டது. ராணுவ வீரர்களே பெரியாற்றின் வலக்கரையோரத்தில் இருந்த மேடான சரிவுகளில் கூடாரம் அமைத்தார்கள். கித்தான் அடித்து, மரக்கம்புகளில் கயிறுகளைப் பிணைத்து, சரசரவென்று கூடாரங்கள் எழுந்தன. ஒவ்வொரு கூடாரம் கட்டி முடிக்கப்பட்டவுடன் அந்தோணி, இடக்கரையில் நோயின்றி இருந்தவர்களை வலக்கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தான். நோய்ப்படுக்கையில் இருந்தவர்கள் பழைய துணிகளைக்கூட உடன் கொண்டுவரக்கூடாது என்று சானிட்டரி இன்ஸ்பெக்டர் கடுமையான குரலில் உத்தரவிட்டார்.

நான்கு பேர் ஐந்து பேராகத் தெப்பத்தில் ஏற்றிச் சென்று எதிர்க்கரைக்குச் சேர்த்து வந்தவனிடம் பார்வதி ஓடிவந்தாள்.

“அந்தோணி, சங்கிலி மூச்சுபேச்சில்லாம கெடக்கான். சின்னப் பிள்ளை பொழைச்சிக்குவான். எப்படியாவது எதிர்க்கரைக்கு ஏத்திக்கிட்டுப் போறியா?”

“படுத்துக்கெடக்கிற யாரையும் எதிர்க்கரைக்குக் கொண்டாரக்கூடாதுன்னு கண்டிஷனா சொல்லிட்டாங்களே பார்வதி?”

பார்வதி அழுதாள்.

“சின்னப் பிள்ளை, வாழத்தண்டா சொணங்கிக் கெடக்கிறத பாக்க முடியலையே.”

அந்தோணிக்கும் கண்ணீர் வழிந்தது.

“ஒன்னு செய். பொழுது இருட்டுற வரைக்கும் பத்திரமா பாத்துக்கோ. எதுனா வழி செய்யலாம்.”

பார்வதி அழுகையுடன் சங்கிலி கிடக்கும் இடத்திற்குப் போனாள்.

ஒவ்வொரு நாளும் மனித உயிர்களை வாரித்தின்று விழுவதற்காக வெட்கப்பட்ட கதிரவன் அன்று அந்திக்காகக் காத்திருக்கவில்லை. பின்மாலைப் பொழுதுக்குள் மேற்கில் மறைந்தான்.

எஸ்தர், பார்வதி, அந்தோணி மூவரும் சங்கிலி கிடந்த குடிசைக்குள் வந்தனர். உள்ளே நுழையும்போதே நிணநாற்றம். சங்கிலி படுத்துக்கிடந்த துணி முழுக்க மலமும் வாயில் எடுத்ததுமாக இருந்தது.

“ஐயோ, மூச்சிருக்கா பாரு எஸ்தர்” பார்வதி கதறினாள்.

சங்கிலியின் மார்பில் கைவைத்தும், நாடிபிடித்தும் பார்த்த எஸ்தர், “நாடி கீழபோயிடுச்சு” என்றாள்.

“கரடி அடிச்சதுக்கே பிள்ளை பொழைச்சு வந்துட்டான். அவன் ஆயுசு கெட்டி, தூக்கு அந்தோணி. ஆசுபத்திரிக்கு எப்படியாவது கொண்டுபோயிரலாம்.”

அந்தோணி தயங்கி நின்றான்.

“நீயும் பயப்படுறீயா காலரா வந்துடும்னு?”

“என்னப் பாத்தா பயப்படுற மாதிரியா தெரியுது?”

“அப்புறமென்ன, மசமசன்னு நிக்கற?”

“மிலிட்டரி ஆளுங்க, பொழுது இருட்டுன உடனே தெப்பத்தை நிறுத்திட்டாங்க. காவலுக்கும் ஆளு போட்டுட்டாங்க. தெப்பத்தை எடுக்க முடியாது.”

“ஐயோ, என் கரைச்சாமியே, இந்த இளம் குருத்தைக் காப்பாத்த வழிசொல்லேன்” பார்வதி கதறினாள்.

எஸ்தரும் அந்தோணியும் கலங்கி நின்றனர். சங்கிலியை எதிர்க்கரைக்கு எப்படிக் கொண்டு போவதென்ற யோசனை உள்ளே ஓடியது இருவருக்கும்.

“சீக்குக்காரங்க துணியெல்லாம் எரிக்க எடுத்துட்டுப் போறோம்னு சொல்லிட்டு, துணிக்குள்ள சங்கிலியக் கொண்டு போவமா?”

“இங்கியே எரிக்காம எதிர்க்கரைக்கு ஏன் எடுத்துட்டுப் போறீங்கன்னு கேட்டா?”

“ஆமாம்...”

“எந்தக் காரணமும் சொல்ல முடியாது. எதிர்க்கரைக்கு சீக்கு வந்துட்ட ஒருத்தரையும் அனுப்பாது மிலிட்டரி.”

“அப்போ என்னதான் வழி.”

“நான் சங்கிலியை அணையோட பின்பக்கச் சுவர் வழியா தூக்கிட்டுத் தண்ணிக்குள்ள இறங்கிடுறேன். டர்பைன் வச்சிருக்கிற வழியா சத்தம் காட்டாம நீந்தி எதிர்க்கரைக்கு வந்துடுறேன். எஸ்தர் ஆசுபத்திரிக்குப் போகணும்னு சொன்னா மிலிட்டரி ஆளே எதிர்க்கரைக்குக் கூட்டிக்கிட்டு வந்துடும்.”

“சங்கிலிய வச்சிக்கிட்டு நீந்திடுவியா?”

“அதெல்லாம் நீந்துவேன். காளை மாதிரி உடம்ப வளத்துட்டு, அந்தத் தெம்புகூட இல்லைனா என்ன அர்த்தம்?”

கனத்த மனத்துடன், சங்கிலியை ஒரு சோமனில் கட்டினான் அந்தோணி. அவனின் நனைந்த உடைகளைத் தீயிடச் சொல்லி எஸ்தரிடம் கொடுத்தான். சங்கிலியைத் தூக்கி முதுகில் போட்டுக்கொண்டு, தன் முதுகையும் வயிற்றையும் சேர்த்து நீண்ட துண்டினால் இறுக்கிக்கட்டச் சொன்னான். மிலிட்டரி காவல் காத்த தெப்பத்துறையின் பக்கவாட்டில், சத்தமின்றி நீருக்குள் இறங்கினான்.

அந்தோணியின் மடியில் தலைவைத்துப் படுத்திருந்த எஸ்தரின் உடல் குலுங்கியது. தினம் ஐம்பது, நூறு என்று பிரேதங்களைப் பார்த்திருந்தாலும் சங்கிலியின் பிரேதம் பார்த்து அவளுக்குச் சித்தம் கலங்கியது. பஞ்ச காலத்தில் மதுரை வீதிகளில் பிணங்களுக்கு மத்தியில் விழுந்து கிடக்க வேண்டிய தன்னை, அக்காளின் ஆதரவுக் கைகள் அள்ளியெடுத்துக் காப்பாற்றியதுபோல், தன்னால் சங்கிலியைக் காப்பாற்ற முடியவில்லையே? சங்கிலியின் துறுதுறுப்பு, ஓட்டம், உற்சாகம் கண்முன் நின்றது. எத்தனை உயிர்போனாலும், தன் உயிரணைய உயிர் ஒன்று பிரியும் வேதனையைத் தாங்க முடியாமல், அந்தோணியின் மடியில் சுருண்டிருந்தாள்.

இருளுக்குள் சலசலத்த பேரியாற்றில், நீர் மேலெழும்பாமல், கைகால் வெளித்தெரியாமல், தலைதூக்காமல் தண்ணீருக்குள்ளேயே மூச்சடக்கி, நின்றவாக்கில் மெல்லக் கையசைத்து நீந்தினான் அந்தோணி. சந்தமமைத்த பாடலை இனிமையாகப் பாடி, ஆர்ப்பாட்டமாய் ஒவ்வொரு முறையும் பேரியாற்றின் இருகரைக்கும் அலையெழுப்பிச் செல்பவன் இன்று மூச்சுக்காற்றையும் உள்ளடக்கிக் கரையைக் கடந்தான். கரைக்கு வந்தவுடன் சங்கிலியைத் தன்னிடமிருந்து இறக்கவில்லை. எஸ்தரும் பார்வதியும் வந்துவிட்டார்களா என்று பாறையொன்றின்மேல் நின்று பார்த்தான். சங்கிலி நீர் குடித்திருந்தான். உடல் கனத்தது. ஓடிவந்த எஸ்தர், சங்கிலியைத் தொட்டுப் பார்த்து, மயங்கியவள்தான், விழித்துப் பார்த்து அழுது, மீண்டும் மயங்கினாள். பார்வதி, சங்கிலியைக் குழியில் தள்ளாமல் தனியாகப் புதைக்க பேயத்தேவனிடம் வேண்டினாள்.

காலரா, மேல்மலையில் நர்த்தனம் ஆடி அடங்கியபோது, வேலையாள்களில் சரிபாதியினரைத் தின்றுதீர்த்திருந்தது.

குதிரை வண்டிகள் வரிசைகட்டி நின்றன. காளை மாடுகளை விடுவித்துவிட்ட கோச் வண்டிகள் முன்பாரம் இறங்கி, மரநிழலுக்குள் ஒதுங்கின. வெள்ளை அதிகாரிகளின் போஷாக்கான குதிரைகள் அதிகாரத்தின் பளபளப்புடன் வாலை விசிறிக்கொண்டு நின்றன.

சுற்றுப்பட்டு ஜமீன்களும் மிராசுதாரர்களும் அவரவர்களின் ஜபர்தஸ்துகளைக் காட்ட ஆள்களைத் திரட்டியிருந்தனர். அடர்ந்து நீண்ட மீசை, உயர்த்திக் கட்டிய கொண்டை, மின்னும் கடுக்கன், பரந்து விரிந்த தோள் என்று புஜபராக்கிரமும் செல்வச்செழிப்பும் காட்டி நின்றனர்.

மதுரா கலெக்டர் டர்னர் கடுமையான உத்தரவு போட்டிருந்தார். பெட்டிஷன் பெட்டி உத்தமபாளையத்தின் ஆற்றங்கரையோர மருத மரத்தினடியில் கைவிடப்பட்டு இருக்கிறது என்ற செய்தியை, அவரின் டவாலி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு நாள் சொன்னான். கலெக்டர் கோச் வண்டியில் சென்றால் டவாலியும் குமாஸ்தா ஒருவனும் மாட்டு வண்டியிலாவது கலெக்டரைப் பின்தொடர்வார்கள். கலெக்டர் குதிரையில் முன்திட்டங்களின்றி வழிப்பயணத்தை மாற்றுவார். அவர் எவ்வழியில் சென்றார் என்று கண்டுபிடித்து, ஓடிப்போய் அருகில் நிற்பதற்குள், சென்ற வேலை முடிந்திருக்கும். பலநேரம் டவாலியும் குமாஸ்தாவும் விழித்துக்கொண்டு நிற்பார்கள். ஒருநாள் நற்குணம் மேலோங்கி இருக்கையில், தான் கோச் வண்டியில் வருவதாகச் சொன்னார். ஆசுவாச மூச்சைவிட்டு அவருடன் பயணித்தார்கள். அன்றுதான் பெரியாறு அணை தொடர்பான பெட்டிஷன்கள் பெட்டி, இன்னும் திறக்கப்படாமல் இருப்பதைச் சொன்னார்கள். டர்னர் அடுத்த நாளே பாளையம் செல்ல வேண்டுமென்று சொல்லிவிட்டார்.

சுருளியாற்றின் கரையில் இருக்கும் பாளையத்தின் மக்கள் கலெக்டர் வரவிருக்கும் தகவலறிந்து கூடினார்கள். கூடியிருந்த மக்களைவிட, கைவிடப்பட்ட பெட்டிஷன் பெட்டி கவலையாய்க் காத்திருந்தது.

பெட்டிஷன்கள் பலவிதம். கண்ணீரின் உப்பைச் சுமந்திருக்கும் பெட்டிஷன்கள் நியாயத்தின் குரலை எதிர்பார்த்து எழுதப்பட்டிருக்கும். தாளில் ஊறும் மைக்குள்ளும் கண்ணீரின் அடர்த்தியான உப்பு ஊடாடி நிற்கும். தாளில் படியும் துயரம், வாசிப்பவரிடம் ஒரு ரசாயனத்தை உண்டாக்கும். எழுதுபவரிடம் இயற்கையிலேயே எழும் இறைஞ்சுதலையும் வாசிப்பவரிடம் எழும் ஈதல் உணர்வையும் இணைத்துச் சமப்படுத்தும் ரசாயனத்தைக் கண்ணீரின் உப்புதான் செய்யும்.

பெட்டிஷன் பெட்டியில் நிரப்பப்பட்டிருப்பவை, நல்லவை கோருபவையும் அல்ல, அல்லவை நீக்கச் சொல்லுபவையும் அல்ல. தன்னிருப்பைக் காட்ட சரிகையின் பளபளப்பைச் சுமந்து வந்திருப்பவை.

சில தினங்களின்மேல் விசித்திர நிகழ்வுகள் என்றெழுதப்பட்டிருக்கும். பாளையத்துக் குடிகளுக்கு இன்று விசித்திர நாள். பதினெட்டு ஜமீன்களும் மிராசுதாரர்களும் சுருளியாற்றின் கரையில் குவிந்திருந்தார்கள். புழுதி பறக்க வந்து நின்றது டர்னரின் குதிரை.

குதிரையிலிருந்து இறங்கியவர், வேகமாக மரத்தடிக்குச் சென்றார். பத்துத் தப்படி எடுத்து வைத்திருப்பார், அதற்குள் அவரின் குதிரையைப் பிடித்துச் செல்ல, நீ நான் என்று பத்துப் பேருக்குமேல் போட்டி போட்டார்கள். குதிரை, ‘என்னை விட்டுடுங்க, நானே ஓரமாப் போய் நின்னுக்கிறேன்’ என்பதைப்போல் தலையசைத்துக் கனைத்தது. பயணக் களைப்பை ஓய்வில்தான் சரி செய்ய வேண்டும். கலெக்டர் குதிரைக்கோ பயணக் களைப்பைவிட, கலெக்டர் குதிரையென்று கூடியிருப்பவர்கள் அங்கும் இங்கும் இழுத்து அலைபாய விடுவதில் அதிக களைப்பாகிவிடுகிறது. இன்றைக்கும் அதுதான் நடந்தது.

டர்னர் மரத்தடிக்கு வந்தார். கல் மேடையில் மர ஆசனம் ஒன்றைப் போட்டிருந்தார்கள். மேடைக்கு கீழே இருபுறமும் அலங்காரமான இருக்கைகள். ஒவ்வொரு ஜமீனுக்கும் மிராசுதாரருக்கும் அவரவர் தகுதிகேற்ற ஆசனங்கள். ஆசனங்களே அதிகாரங்களென்ற எடுத்துரைப்பு அதில் இருந்தது. மேடையில் ஏறிய டர்னர் தன்னை வணங்கியவர்கள் எல்லோருக்கும் பொதுவாய் ஒரு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு, மர ஆசனத்தைப் பார்த்தார். குமாஸ்தாவிடம் கண் காண்பித்தார். குமாஸ்தா மேலேறி ஆசனத்தை நகர்த்தினார். கூட்டத்தினர் திகைத்தனர். டர்னர் நேரடியாகப் பேச ஆரம்பித்தார்.

“நாற்காலி போடுறதே பேச்சை வளர்த்துறதுக்குத்தானே? அவ்வளவு நேரம் பேச எனக்கு ஒன்றுமில்லை. வேகமா வந்த வேலையை முடிக்கணும்.”

உட்கார்ந்திருந்தவர்களுக்குத் தடுமாற்றம். கலெக்டர் நிற்கும்போது இப்போது தாங்கள் உட்கார்வதா, எழுந்து நிற்பதா என்று. முதலில் எழுந்து நின்றால் கலெக்டரின் கவனத்தைப் பெறலாம் என்று நினைத்த அம்மையநாயக்கனூர் ஜமீன் ராமசாமி எழுந்து நின்றார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவராக எழுந்திருப்பதைப் பார்த்த கலெக்டர், “நீங்கள் யாரும் எழுந்து நிற்க வேண்டியதில்லை” என்று சொன்னவுடன் எழுந்தவர்கள் சட்டென்று உட்கார்ந்தனர்.

“என்ன பிரச்சினை உங்களுக்கெல்லாம்?”

நேரடியான கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்ற குழப்பம். கேள்வியில் குழப்பமில்லை. நேரடியான ஒற்றை பதில் இல்லையென்பதில்தான் குழப்பம்.

“மதுரா முழுக்க ஒவ்வொரு மரத்தடியிலும் தாளும் மைக்கூடுமா ஆளுங்க உக்காந்திருக்கீங்கன்னு கேள்வி.”

அதற்கும் அமைதி.

“பெரியாற்றுத் தண்ணி வரணும்னு நூறு வருஷமா இந்த ஊர்ல முயற்சியெடுத்துக்கிட்டே இருக்காங்க. இப்போ அந்தத் தண்ணி வர்றதுக்கான எல்லா வேலையும் நடக்கும்போது, நீங்கெல்லாம் ஒத்துழைப்பு கொடுக்கணுமா? அதைத் தடுக்கிற வேலை செய்யணுமா?”

அமைதி.

“ரயத்துக பக்கத்து நெலத்துக்காரன் ஒரு வரப்பு வெட்டுனாலே பி.டபிள்யூ-வுக்குப் பெட்டிஷன் போட்டுடுவீங்க. இப்போ என்ன நடக்கப்போதுன்னு தெரியாததால ஆளாளுக்குப் பெட்டிஷன் போட்டுக்கிட்டு இருக்கீங்களா?”

அமைதி.

“சரி, உங்களுக்குப் பேசத் தெரியாதுன்னு தெரியுது. குமாஸ்தா, திறந்து பாக்காம பெட்டிஷன் பெட்டி ஒன்னு இருக்காமே, அதைத் தூக்கிட்டு வா. இன்னைக்கு அதுக்குள்ள எந்தப் பிசாசு மறைஞ்சிருக்குன்னு பாக்கலாம்.”

கலெக்டர் உத்தரவிட்டவுடன் நான்கைந்து பேர் அங்குமிங்கும் ஓடினர். பெட்டி இடப்பக்கம் இருக்கையில் சிலர் வலப்பக்கம் ஓடினர். சிலர் எங்கிருக்கிறது என்று அறிந்துகொள்ளாமல் கால்கள் திரும்பிய திசையில் ஓடினார்கள்.

நீரதிகாரம் - 93 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நான்குபேர் இடுப்புயர கனத்த பெட்டியைத் தூக்கிவந்து கலெக்டரின் முன் வைத்தார்கள். தோதகத்தி மரப்பெட்டி. வசீகரிக்கும் கருமையில் பளபளப்பு கூடியிருந்தது. கலெக்டரின் குறிப்பில் பெட்டி திறக்கப்பட்டது.

கல்மேடையை விட்டுக் கீழிறங்கிய கலெக்டர், ஒவ்வொரு கடிதமாக எடுத்துப் பார்த்தார். கடிதங்கள், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இருந்தன. எல்லாக் கடிதத்தையும் இப்போதைக்குப் படிக்க முடியாது என்று தெரிந்தவுடன் உள்ளே போட்டவர், சரிகைத் துணியில் கட்டப்பட்டிருந்த பெரிய கட்டைப் பிரிக்கச் சொன்னார். கட்டின்மேல் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் முத்திரை இருந்தது. உள்ளே நூற்றுக்குமேல் ரயத்துகளின் கடிதம்.

இறுகிய டர்னரின் முகத்தில் இறுக்கத்தின் கோடுகள் அதிகரித்தன.

“ஒவ்வொரு கடிதமா எடுத்துப் படித்துப் பார்த்துத் தீர்க்கணும்னா அணை கட்ட இன்னும் நூறு வருஷமாயிடும். அப்புறம் இவங்க எல்லாரும் ஏத்துக்கிற நேரம்னு ஒன்னு வரவே வராது. குடிகளுடைய இயல்பே அதுதான்” என்ற டர்னர், ராம்நாட்டு முத்திரையிடப்பட்டிருந்த கடிதமொன்றை எடுத்துக்கொண்டு மேடைக்குத் திரும்பினார். கூடியிருந்த எல்லாரையும் பார்த்தார்.

“இப்போ நான் சொல்லுறத நல்லாக் கேட்டுக்கங்க. சுருளி ஆயக்கட்டுக்காரங்கெல்லாம் ஒருபக்கம் வாங்க. சுருளியோடு வைகை சேர்றதுக்கு முன்னாடி இருக்கிற மூல வைகை ஆயக்கட்டுக்காரங்கெல்லாம் ஒருபக்கம் வாங்க. பேரணைக்குக் கீழ இருக்கிற வைகை ஆயக்கட்டுக்காரங்கெல்லாம் ஒருபக்கம் வாங்க. மொத்தம் மூணு தரப்புதான். இதுதான் உங்களுக்குக் கடைசி வாய்ப்பு. இதுக்கப்புறம் வாய்க்கால் வெட்டும்போது, என் வயக்காட்டுக்குத் தண்ணி வரல, என் வயக்காட்டுக்குத் தண்ணி வரக்கூடாதுன்னு ஒரு ஆள் வாயைத் திறக்கக் கூடாது, புரிஞ்சுதா?”

டர்னர் சொன்னவுடன் ஜமீன்களும் மிராசுதாரர்களும் ரயத்துகளும் மூன்று தரப்பாகப் பிரிந்தார்கள்.

“பேரணைக்குக் கீழ இருக்கிறவங்க கடைசியா பேசுங்க. மொதல்ல சுருளி ஆயக்கட்டுக்காரங்க.”

அப்போது குதிரையின் குளம்பொலி நெருங்கி வரும் சத்தம். களைப்பும் சோர்வும் அழுத்தமாக இருந்த முகத்துடன் மெக்கன்சி குதிரையிலிருந்து இறங்கினார். கலெக்டரைப் பார்த்துப் புன்னகைத்து வணக்கம் செலுத்திய மெக்கன்சி, கூடியிருந்தவர்களைப் பார்த்துப் பொதுவாகத் தலையசைத்தார்.

“வெல்கம் மிஸ்டர் மெக்கன்சி. உங்களுடைய வேலையை நான் செய்ய வேண்டியிருக்கு. கலெக்ட்ரேட் வேலை என்பதே முடங்கிவிட்டது.”

தான் என்ன பதிலளிக்க முடியுமென்ற தயக்கத்தில் மெக்கன்சி அமைதியாக நின்றார். கலெக்டர் உட்காராமல் ஏன் நின்றுகொண்டு பேசுகிறார் என்ற சந்தேகமும் உள்ளே ஓடியது. தான் அமர்வதா நிற்பதா என்ற குழப்பமும்.

கலெக்டர் ஆபீஸ் பியூன் ஒருவன் நாற்காலியொன்றை முன்னுக்கு நகர்த்திவிட்டான். மெக்கன்சி பெரும் ஆசுவாசத்துடன் இருக்கையில் அமர்ந்தார்.

“பேரணையிலிருந்து வர்றீங்களா மிஸ்டர் மெக்கன்சி?”

“கண்டமநாயக்கனூரிலிருந்து வருகிறேன்.”

“அங்கென்ன பிரச்சினை?”

“டிஸ்ட்ரிக்ட் கலெக்டரான உங்களுக்குத் தெரியாததா?”

“எனக்குச் சொல்லப்படுற பிரச்சினையும் உங்களுக்குச் சொல்லப்படுற பிரச்சினையும் ஒன்றாக இருக்காது தெரியுமா?”

“அப்படியா?”

“நிர்வாகியால்தான் அதைப் புரிந்துகொள்ள முடியும்.”

“உங்களுக்கே புரியட்டும். பரவாயில்லை. ஆனால் நாங்கள்தான் சரிசெய்வோம். சொல்லுங்கள், உங்களுக்குச் சொல்லப்பட்டது என்ன?”

“நீங்களே முதலில் சொல்லுங்கள்.”

“யெஸ், நீங்கள் கலெக்டர் அல்லவா, நானே சொல்கிறேன்” என்று கேலி பேசிய மெக்கன்சி, தொடர்ந்தார்.

“வைகையில் பெரியாற்றுத் தண்ணீரைக் கொண்டு போகக்கூடாது. அதனால் வைகைப் பாசன ஆயக்கட்டுக்காரர்களுக்கு பாதிப்பு வரும்னு உங்களுக்கு வந்த பெட்டிஷனை விசாரிக்கத்தான் நான் போனேன்.”

“எனக்கென்ன பெட்டிஷன், தெரியுமா?”

``இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னால் வெள்ளத்துல உடைஞ்சுபோன சாமியப்பன் அணைக்கட்டைச் சரிபண்ண, கண்டமநாயக்கனூர் ஜமீனுடைய இன்ஜினீயர் ஒரு திட்டம் கொடுத்திருக்கார். அந்த அணையை இப்போதைக்குச் சரிசெய்யக் கூடாது. சாமியப்பன் அணையைக் கட்டினா, பேரணைக்குக் கீழ இருக்கிற எங்களுக்குத் தண்ணீர் வராதுன்னு பெட்டிஷன் கொடுத்திருக்காங்க. கட்டும்னு ஒருத்தருக்கும் கட்டக்கூடாதுன்னு ஒருத்தருக்குமா சர்க்கார் யோசனை சொல்லும்?”

``சொல்லும். அதுதான் சர்க்கார்” என்ற டர்னர், மூல வைகையை ஒட்டியிருந்த ரயத்துகளைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்.

- பாயும்