நீங்கள் ஒரு ஆப்பில் ஆட்டோ புக் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வந்த ஆட்டோக்காரரோ `நீங்க ஆப்ல காட்ற 100 ரூபாய கட்ட வேணாம்...80 ரூபா கொடுத்தா போதும்' என்று சொன்னால் எப்படி இருக்கும்? `ஆஹா! அடிச்சுதுடா லக்கு' என்றுதானே உங்கள் மைண்ட் வாய்ஸ் இருக்கும். அப்படி எதுவும் நினைத்துவிடாமல் இந்தக் கட்டுரையை முழுவதும் படியுங்கள் மக்களே!

இது ஒரு வாசகி அனுபவம். அதனால் இந்தக் கதையை அவரின் கோணத்திலேயே பார்க்கலாம்...
நானும் என்னோட ஃபிரண்டும் அண்ணா சாலையில் இருந்து மயிலாப்பூர் செல்ல ஆப்பில் ஆட்டோ புக் செய்தோம். ஆப்பில் எங்களுக்கு 96 ரூபா காட்டுச்சு. 5 நிமிசத்துலேயே ஆட்டோ வந்துடுச்சு. அந்த ஆட்டோவை ஓட்டிவந்த ஆட்டோக்காரரோ, `மேடம்... ஆப்பில் எத்தன ரூபா காட்டுது?'னு கேட்டார். நான் `96 ரூபா'-னு சொன்னேன். அதுக்கு அந்த ஆட்டோக்காரர், ``ஆப்ல டிரிப்ப கேன்சல் பண்ணிட்டு, எனக்கு 80 ரூபா தந்துருங்க''-னு சொல்லிட்டு, ``அதுல காரணம் கேக்கும்... அதுக்கு `reason is not listed'-ல கொடுத்துருங்க"-னு சொன்னார். அதிர்ஷ்ட லட்சுமியே நம்ம கதவத் தட்டுறன்னு நானும் `ஓகே' சொல்லிட்டேன்.
`ஏன் இப்படி சொன்னாரு?'-ங்கற கேள்வி என்னோட மண்டைய குடைய அவர்கிட்டயே கேட்டுட்டேன். அவரோ, ``இல்ல மேடம். இப்போ ஆப்ல காட்டியிருக்க அமௌண்டுக்கு நீங்க சவாரி வந்தீங்கன்னா எனக்கு அதுல 60 ரூபாதான் கிடைக்கும். ஆனா, இப்போ எனக்கு 80 ரூபா கிடைக்குது. அதுப்போக நீங்க சொன்ன இடத்துக்கு பக்கத்துல நான் வந்த அப்புறம் நீங்க டிரிப்ப கேன்சல் பண்ணதால எனக்கு ஓலா கம்பெனில இருந்து 14 ரூபா தருவாங்க. இந்த 14 ரூபா எங்கள மாதிரி ஆட்டோக்காரங்களுக்கு கேஸ் நிரப்ப, பெட்ரோல் போட, டீசல் போட உதவும்.

இந்த மாதிரி எல்லா டிரிப்பயும் நாங்க கேன்சல் பண்ண சொல்ல மாட்டோம். ஒரு நாளைக்கு ஏதோ மூணு, நாலு டிரிப்க்கு தான் இப்படி பண்ணுவோம். எல்லா டிரிப்புக்கும் இப்படி செஞ்சோன்னா எங்களுக்கு அவன் சவாரியே தர மாட்டான். நீங்களே சொல்லுங்க மேடம்... நாங்க கஷ்டப்பட்டு ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறோம். ஆனா, அவன் வெறும் கம்ப்யூட்டர வெச்சு சம்பாதிச்சுட்டு போயிடுறான். அது எப்படி நியாயம். அதனாலதான் அவனுக்கும் லாபம் வர்ற மாதிரி சவாரி ஓட்டிட்டு, எங்களுக்காக மூணு, நாலு சவாரி ஓட்டிக்கிறோம்"னு அவரு சொல்லிட்டு இருக்கவே மயிலாப்பூர் வந்துருச்சு. என்னோட 16 ரூபாய காப்பாத்துன தெய்வத்துக்கு 80 ரூபா கூட ஒரு நன்றியயும் சொல்லிட்டு கிளம்புனேன்.
சரி... கதை முடிஞ்சுடுச்சுன்னுதான நினைக்குறீங்க. ஆனா இல்ல... கொஞ்சம் நேரம் கழிச்சு போனோட நோட்டிபிகேசன்ல ``கேன்சலேசன் சார்ஜ் ரூ.20"ன்னு ஆப் காட்டுது. எனக்கு தூக்கி வாரி போட்ருச்சு. அப்புறம் என்னோட கேன்சலேசன் சார்ஜ்ல இருந்துதான் அந்த ஆட்டோக்காரருக்கு 14 ரூபா போகுது. இதுல ஓலா கம்பெனிகாரங்களுக்கு 6 ரூபா போகுது. ஆக எனக்குதான் 4 ரூபா நஷ்டம்"னு எனக்கு கடைசியாதான் புரிஞ்சது மக்களே" - இப்படி அந்த வாசகி கடிதத்தை முடித்திருந்தார்.

சென்னையில் இரவு வேளைகளில் சவாரி வர ஆப்பில் காட்டும் காசுக்கு மேலே 30 ரூபாய் போட்டுத் தர வேண்டும். அதுவும் கோவை போன்ற நகரங்களில் அனைத்து சவாரிகளுக்கும் தொகைக்கு மேலே 30 ரூபாய் கண்டிப்பாக தந்தே ஆக வேண்டும் என்பது தனிக்கதை மக்களே.
மக்களே, உங்களுக்கும் இந்த அனுபவங்கள் உள்ளதா?