Published:Updated:

மகனின் மூன்று கடிதங்கள் - சிறுகதை

மகனின் மூன்று கடிதங்கள் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
மகனின் மூன்று கடிதங்கள் - சிறுகதை

- அய்யப்பன் மகாராஜன்

மாலை வரை நீண்ட வெயிலின் வன்மத்திற்கு பயந்த எலிசபெத்தாள் தனது மீன்பெட்டியுடன் ராணி வீட்டின் நடைப்புறத்தில் சேர்ந்தாள்.

“தீயாப்பொரியுது! ஆளப் பொசுக்கிப்போடும் போல இருக்கே? இந்தப் போக்கத்த வெயிலுக்கு ஆளும்கொணமும் தெரியுமா? பொட்டிய எறக்கும்மோ...”

எலிசபெத்தாள் கழுத்தைத் தாழ்த்திக்கொடுக்க, ராணி கை உறைப்புக் கொடுத்து பெட்டியைத் தரைக்கு இறக்கினாள்.

“மொரளு கருவாட்டுக்கு உசுர உட்டியே... இந்தா!” என்று ஒரு மடக்குப் பொதியை அவளிடம் கொடுத்தாள்.

அவள் வாங்கி முகர்ந்து வாசனையை மூச்சில் இறக்கினாள்.

“ரொம்ப மோந்தாத! போயிலைக்குப் பழகின மூக்க பஞ்சராக்கிரப் போவுது...” ராணி எடுத்து வந்த காசினை வாங்கி முடிந்து கொண்டாள்.

“ஒங் வண்டிப்பைசாவ இடுப்புல முடியதுக்கு ஆசைப்பட்டுக்கிட்டு இத நா கொண்டுட்டு வரல. வாரப்பல்லாம் கேக்கே... நீத்தண்ணி வச்சிருக்கியா? இருந்தா ரெண்டு சின்ன உள்ளியும் சேத்துத் தா...”

“சோத்த வடிச்சிட்டேன் ஆத்தா... கூடால ரெண்டு பத்தையும் போட்டுத் தரட்டா..?”

“ம்க்கும். பொறவு தேங்கா துருவிப் போட்டுத் தாரெம்பே... அதுவரைக்கித் தாங்காது.. எனக்கு இப்பவே கொடலு தாரணும்... தணுப்பா இருந்தாக் குடு...”

ராணி பழைய கஞ்சியை ஒரு கைபோணியில் கொண்டு வந்து வைத்தாள். எலிசபெத்தாள் அதை ஒருவட்டம் கலக்கி, தலைக்கு மேல் தூக்கி அண்ணாக்கின் வழியாக இறக்கினாள். உள்ளி கடித்துக் கொண்டபோது அடியில் கொஞ்சம் பருக்கை கிடப்பது தெரிந்தது.

“பாத்தியா ஒங்கொணத்த? மட்டைய வச்சிக் கட்டினாலும் நேரா நிக்காது. செரி செரி” என்று சற்றுத் தள்ளி, சுளகில் கிடந்த காந்தாரி மிளகாயை எடுத்து உப்பில் நுணுக்கிக் கடித்துக்கொண்டு மறுவாய்க்கு ஊற்றினாள். நாக்கு சுள்ளென வாங்கிக்கொண்டது.

கல்லுரலின் மீதிருந்த சாக்கு மூடையின் மீது ஆத்தாள் சாய விரும்புவதை உணர்ந்தவளைப் போல “கட்டையைத்தான் கொஞ்சம் சரியேன். வெயிலு தாந்துட்டுப் போலாம்” எனச் சொல்ல வந்தவள், எலிசபெத்தாள் ஆத்தாளின் கீழிமையின் சதையில் தொங்கிய நீர்த்துளியினைக் கண்டதும்,

“யாங் ஆத்தா... ஒம்மவனப் பத்தி யாதாவது துப்பு உண்டா? லெட்டரு கிட்டரு வாரது உண்டா? இப்பதான் நெனச்ச நேரத்துக்கு போனு அடிக்கலாமே..?” என்று கேட்டாள்.

“ஆமா! இடுப்புக்கு ஒண்ணு செவிக்கு ஒன்னுன்னு அலையிறேளே அதுமாதிரி என்னையும் அலையச் சொல்லுதியா? அவனுக்கு என்ன கஷ்டமோ... கர்த்தருக்குத் தானே தெரியும்..?”

“போயி ஒரு ஏழெட்டு வருஷம் இருக்காதா?”

“ஆச்சே! லாசருக்க கடைக்குப் போறது போல எறங்கிப் போயி இப்ப சித்திரை வந்தா எட்டத் தாண்டுது. போன புதுசுல ரெண்டு லெட்டர அனுப்புனான், அது போதும்னு நெனச்சிக்கிட்டான் போல இருக்கு...”

“விசாரிச்சிப் பாத்தியா?”

மகனின் மூன்று கடிதங்கள் - சிறுகதை

“பாத்தாச்சி. கத எழுதப் போறேன்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாம்லா... எழுதித் தீந்ததும் வருவானா இருக்கும்..? அப்பனுக்க ரத்தம். கர்த்தருக்க காரியம்... எங்காலத்துக்குள்ள ஒரு கண்ணு பாத்துரணும்... ஏசப்பா...”

ஒரு வலி வேண்டாத அமைதி அங்கு நிறைந்தது.

“செரி, பேசிட்டு இருந்தா பேசிட்டே இருக்க வேண்டியதான். சூடு கொறஞ்ச மாதிரி இருக்கு... நாம்போறேன்.”

கால்மூட்டுகளைத் தாங்கி எழுந்தவள் ராணியின் மகளின் வருகையினைக் கண்டதும் பெட்டிக்குள் கையை விட்டு, கறுத்த நிறமுள்ள சிறிய பாட்டில் ஒன்றினைக் கையில் எடுத்தாள்.

“மறந்தே போயிருப்பேன்..! இந்த மீன் எண்ணெய இந்தப் பிள்ளைக்குக் குடு... நெஞ்சு தேஞ்சி ஓஞ்சாப்புல இருக்கு, என்னத்தயத்தான் குடுத்து வளத்துதியளோ?! பைசா ஒன்னும் தராண்டாம்.’’

தலைக்கு அண்டை கொடுத்துக் கூடையோடு வீட்டைத் தாண்டி நாலு எட்டில் திரும்ப இருந்தவளிடமிருந்து அந்த பலத்த கீறல் சத்தம் கேட்டது. கூடவே இடித்து விழும் சத்தமும்.

எலிசபெத்தாள் தலைவேதனையுடன் கண்விழித்துப் பார்த்தபோது தம்பிராஜ் டாக்டரின் மருத்துவமனையில் கிடந்தாள். ஒரு பழம்பெரிய வீட்டின் சகல இடத்தையும் மடக்கிக் கட்டில்களாகப் போட்டும்கூட பத்தாது வெளியில் ஆட்கள் உட்கார்ந்திருக்கும் மருத்துவமனை. ஃபீஸ் பெரிதாக இல்லாததால் ஆளுக்காள் வந்து “ரெண்டு பாட்லு குளுக்கோஸ் ஏத்துங்க டாக்டர்!” “ஒங்க கைராசி கொள்ளாம் டாக்டர்!” என்று படுத்துக்கொள்வார்கள். உயர்ந்த மெலிவான தேகத்தின் மீது விரிந்த விசிறியைச் செருகிக்கொண்டது போன்ற முகம். எப்போதும் வாயிலிருந்து அகலாத சிரிப்பு. மூடித்திறக்கையில் கன்னமேட்டில் உதித்து மறைவது போன்ற கண்கள்.

“அம்மைக்கு இப்போ எப்படி இருக்கு?” என்றார் அவளையொத்த வயதைக் கொண்ட தம்பிராஜ்.

“இதாரு... டாக்டருல்லா..? என்னை எதுக்கு இங்க கொண்டுவந்து கெடத்திப் போட்ருக்கு?” ராணி புடவைத் தலைப்பைக் கடித்துப்பிடித்துக் கொண்டு அருகில் வந்தாள். “நல்ல ஒபகாரம்!” என்று சலித்தாள்.

“தலசுத்திக் கீழ விழுந்திருக்கியோ! நல்லா அடிபட்ருக்கு... நாலு தையல்.”

அவள் தலையைப் பிடிக்கப் போக கையில் சிக்கியிருந்த சலைன் குழாய் தடுத்தது. கோபம் அண்ட வந்தது.

“அது சரி... கெடத்தியாச்சி! ஊசியும் நூலும் போட்டுத் தைக்கவும் செய்தாச்சி! போதாததுக்கு குளுக்கோஸு வேற...! இனி பில்லுக்கு நா என் வீட்டத்தான தூக்கிக் குடுக்க வேண்டியவரும்?”

“யே மகாராணி... விழுந்தா பொறக்கியெடுத்து இங்க கொண்டு வந்து சேத்துர்றதா?’’

“அவங்க ஒங்களுக்கு நல்லதுதானே செஞ்சிருக்காங்க... வசக்கேடா பட்டுருந்தா என்ன ஆயிருக்கும்?”

“உசுரு போயிருக்கும் டாக்டரே! இங்க வந்து கெடக்கமாட்டம்லா..? நீங்க மொதல்ல எம் பேர வெட்டுங்க. ஆள விடுங்க.”

“ஒரு ரெண்டுநாளாவது தங்கணுமேயாத்தா...?”

“ரெண்டு நாளா... எதுக்குங்கேன்? தங்க எனக்கு வேற எடமாயில்ல? இந்த ஊசிமருந்து நாத்தத்துல தேகத்த சுருட்டிக்கிட்டுக் கெடக்க என்னால முடியாது.”

பலகலை வித்துவான்களின் முகக்குறிப்புகளை நெற்றியில் கொண்டிருக்கும் தம்பிராஜ் தனது விரல் நகத்தால் அதன் வரிகள்மீது கோடிட்டவாறே சற்று யோசித்தார். எலிசபெத்தாள் அதற்குள் கிளம்பியதும் ஆகவேண்டியவற்றைப் பற்றிப் பட்டியலிடத் தொடங்கினாள். வீடு எப்போது சேர்வது? போன வேகத்திற்கு ரெட்டைக்கடுப்பத்தில் ஒரு கடுங்காப்பியிட்டு குடிக்க வேண்டியது... மாதா கோயிலின் உள்மாடத்தில் அரைத்து வைக்கவேண்டிய வகைக்கு வேப்பிலைக் கொழுந்துகளைப் பறிக்க வேண்டியது... இவர் பேசுகிற பேச்சுக்கெல்லாம் சேத்துவச்சி ஒரு துப்புவாளைய வெட்டி மொளவரச்சிக் கறிவச்சி பழஞ்சியோட சேத்து அடிச்சி ஏசப்பான்னு கவுந்தர வேண்டியது எனத் திட்டங்களை ஓதத் தொடங்கினாள்.

“ப்ரஷரு கூடுதலா காட்டுது..! சுகரு எப்படீன்னு பாக்கணும்...? பரிசோதன ரிசல்ட்டு வரணுமேன்னு ஆலோசிக்கேன்...”

“அதுசரி டாக்டரே..! யாவாரத்த விட்டுப் போட்டு மருந்துங்கையும்னு காலம்பூரா தம்பிராஜாஸ்பத்திரிக்கே அலையணும்னு எனக்கொண்ணும் விதியில்ல. சுகரும் ப்ரசரும் வந்து சாவுற ஆளு நா கெடையாது பாத்துக்கிடுங்க. கெடையில தள்ளிப் போட்டு அந்தச் சோக்கேடுகள எம்மேல இழுத்துக் கொண்டுவந்து விட்ராதியோ. எனக்கு சோலியிருக்கு... ஆமா.”

எலிசபெத்தாள் கிட்டத்தட்ட எழுந்தே விட்டாள். அவளைக் கட்டுப்படுத்துவது சிரமம். அவளுக்கு மனிதர்கள் எல்லாம் ஒன்றுதான். ஆனால் கர்த்தருக்குக் கீழ்தான். டாக்டருக்கென்றெல்லாம் மதிப்புரைகள் ஏதுமில்லை. அவள் நினைவு தெரிந்த வரையில் அதுவே முதல் மருத்துவமனை அனுபவமும்கூட. அவள் வார்த்தைகளில் சொன்னால், “நா ஆசுபத்திரி நடையக்கூட சவட்டிப் பாத்தது கெடையாது.”

தம்பிராஜிடமிருந்து தான் தப்பித்துவிட்டதாக அவள் சொல்லிக்கொள்ளத் தொடங்கினாளே ஒழிய அதன்பிறகு அவள் குரலிலோ முகத்திலோ முன்புபோல அவ்வளவு தெளிச்சம் காணப்படவில்லை. அவளது உள்பலத்தில் ஏதோ ஒரு தடையும் சேர்ந்தே அவளை இயக்குவது போல தென்படத் தொடங்கியது.

ஒருசமயம் வழக்கம்போல கடைமுக்கிற்குப் போனவள் திரும்ப வீட்டிற்கு வராமல் நேராக பஸ்நிறுத்தம் பகுதிக்குப் போய்விட்டாள். வழியில் வைத்து விசாரித்த நபரிடம் “யாதோ ஒரு நெனப்புல சான்சன் கடைக்கு வந்துட்டேன். சோத்த வடிக்கப்போட்டது போட்டமாதிரி கெடக்கும். போய் ஏறக்கணும்...” என்றவளிடம் “இப்படியே போனேனா சோத்துப் பானைக்குக் கை குடுக்கமாட்டே... ஏதாவது கார்காரனுக்குத்தான் அடைகுடுப்பே! நேரா போ...” என்று சொல்லி அனுப்பி விடப்பட்டாள்.

சம்சயமாக வீட்டுக்கு வந்தவள் “பாரு ஒலைத்தண்ணியில அரிசியக்கூட போடாம வெப்புறாளத்துல போயிருக்கேன்...” என்று அரிசியைப் போட்டாள். “ஆமா பஸ் நிக்க எடத்துல பின்னி வீட்டுக்குப் போவணும்னுலா மெனக்கெட்டுப் போனேன். மறந்துட்டேனே..!” என்று வருந்தியவளுக்கு “அப்போ முக்குக்கடைக்கி என்னத்த வாங்கப் போனேன்?” எனக் குழப்பம் வர, நாடியில் கைத் தாங்கினாள்.

“ஒம்மவனுக்குக் கல்யாணம் ஆயிருக்கும்லா?” பெட்டி பிரிக்க வந்த பேபி கேட்டாள்.

“ஆயிருந்தா என்ன செய்ய முடியும், வயசும் ஆவுதுல்லா..? அவனுக்கும் புள்ளகுட்டி வாண்டாமா?”

ரெனால்ட்ஸ் பேனாவை விரலிடுக்கில் தவற விடும் பாங்கோடு உத்தரத்தினைப் பார்க்கும் நோக்கில் புகைப்படத்தில் தொங்கிய பென்கரை நெருங்கிய பேபி “ஒம்மவன் இன்னுமா ஒரு ஒத்தக் கதையவே எழுதிட்டிருக்கான்? டேய் வாலே சீக்கிரம். கெழவி போக்கு செரி இல்ல... இங்க இருக்க புள்ளயளும் ஒன்ன மறந்து காலமாச்சி” என்றாள்.

“சொளவு கொண்டு சாத்துவேன் பாத்துக்கோ... நாக்க மடக்கிட்டு சோலியப் பாரு...” என்றாள் ஆத்தாள்.

பேபி அடுக்கில் வைக்கப்பட்டிருந்த காகிதக் கட்டுகளை விரல்கொண்டு இளக்கிப் பார்த்தாள்.

“இதுலாம் ஒம்மவன் எழுதுன கதையளா ஆத்தா?”

எலிசபெத்தாளின் கண்ணில் திரண்ட நீரை இமை கட்டிக்கொண்டது.

“அது அவங்க அப்பா தலப்பாக்காரரு எழுத்தாக்கும்! கடலுக்குப் போயிட்டு வந்தாருன்னா கொஞ்சம் பத்துந்தண்ணியும் வேணும். காரப்பொடின்னா ரொம்ப இஷ்டம்! அந்தா அந்தப் பொடி வெளிச்சத்துல சாஞ்சிருவாரு. ஒரு ஒன்னு ஒன்னரை ஒறக்கத்துக்குப் பொறவு... நோட்டுப்பேப்பர எடுத்தாருன்னா ஒரே எழுத்துக்குத்தும் வாப்பொலம்பலுந்தான். அப்பனும்புள்ளையுமா எழுதியெழுதி எங்கதைய தரையோட விட்டாச்சி...”

“கவலைப்படாத... ஒம்மவன் கதையெழுதி பெரிய்ய டைரக்டராவி உலக்க சைசுல ஒரு தங்க வடத்தோட வந்து நிப்பாம் பாரு...”

ஏக்கம் மூண்டு வந்ததில் எலிசபெத்தாளின் பற்களற்ற கீழ் நாடி தன்னிச்சையாய் தாழ்ந்து போனது.

“எனக்கு வடமும் வேண்டாம், வாட்டமும் வேண்டாம். கர்த்தரு புண்ணியத்துல ஆயுசுக்குக் கொறவில்லாம அவன் நல்லா இருந்தாப் போதும். இனிமேத்தான் நா வடத்தக் கட்டிக்கிட்டு அலையப் போறனாக்கும்.”

மாதா கோயிலின் சப்பரத் திருவிழா சமயத்தில் பென்கர் நாடகமிட்டு நடித்தது பேபியின் நினைவுக்கும், அதேபோன்றதொரு திருவிழா நாளில் முன்பு பென்கரின் தந்தை நாடக வேடமிட்டு நடித்தது எலிசபெத்தாள் நினைவுக்குமாக ஒருசேர வந்து போனது.

“ஒருதடவ ஒன்வீட்டுக்குன்னு வந்துட்டு கொழம்பத்துல திரும்பப் போயிட்டேன் பாத்துக்கோ...”

“ஆண்டவரே..! யாருக்கிட்டயாவது கடைப்பக்கமா சொல்லிவிட்ருந்தாக் கூடப் போதுமே... நானே வந்திருப்பனே..!’’ என்ற பின்னியிடம் “ஒங்கிட்ட எனக்கொரு ஒபகாரம் வேணுமே!” என்றாள்.

“நீ உருக்கிக் குடுத்த மீனெண்ணெய வருக்கத்தா குடிச்சித் தேறுனவம்லா நா... நீ கேட்டு மறுப்பனா?”

“பின்னியே! பத்து வருசத்துக்கும் மேல ஆச்சி பெங்கருக்க அப்பா கடலுக்குப் போயி திரும்பாம... வானத்துலேருந்து கடலை உறிஞ்சியிழுக்குற காத்தா இருந்தாக்கூட, அவரைத் தூக்கிட்டுப் போயிருந்தா... ஆண்டவரு தம் பலத்தால அவர மீட்டு பத்திரமா எங்கயாவது தரையில் எறக்கி வுட்ருப்பாரு. அவரு வந்து சேரதுவரைக்கும் இந்தத் தும்பமலாம் இருக்கும் போலிருக்கு. இவன் இருந்தானா ஒரு கை பலம் இருக்கும். வரமாட்டங்கான்...

எனக்குள்ள சமாதானம் இல்லாத்த ஒரு போராட்டம் கெடந்து அடிச்சிப் பெடைக்குது...

செலநேரம் ராத்திரிவாக்குல யாரோ கதவத் தட்டது மாதிரி ஒரு ஓர்ம. போயிப்பாத்தா தலப்பாக்கட்டோட ஒரு ஆளு நிக்கத மாதிரி. ‘வா, கடலுக்குப் போவலாம்’னு கூப்புடுதாரு. பயத்துல நாம்போயி படுத்துக்கிடுவன். பொறவுதான் ஐயோ அவுருல்லா வந்துருக்காரு... மூஞ்சிக்க நேரக் கதவ சாத்திட்டமேனு... எறங்கிப் போயிப் பாப்பன். அங்ஙன நின்னவரக் காணாது. எறங்கிப் போயிப் பாத்தா எனக்கு வழி தப்பிருது பாத்துக்க...

எங்க போனாலும் கூடவே வாராரு... என்னத்தையோ சொல்லுதாரு. எனக்குப் புரியல்ல. ஆனா ஏசுதாருன்னு மட்டும் தெரியுது. அதைக் கேட்டுக்கேட்டு எனக்கு உள்ளுக்கயே இருந்துக்கிட்டு அவரு பேசதுமாதிரி ஒரே பேச்சுக் கேட்டுக்கிட்டு இருக்கு...

நேத்துகூட உறக்கத்துல முழிப்பு தட்டுச்சு. பாதி ஒறக்கம். பாத்தா... சேருல சாஞ்சிக்கிட்டு ஏதோ ஒரு நெனப்புல இருக்காரு. பொறவு படக்குபடக்குன்னு எதையோ நெனச்சி நெனச்சி எழுதுதாரு பாத்துக்கோ...

மகனின் மூன்று கடிதங்கள் - சிறுகதை

எனக்குன்னா அப்படியொரு வெப்புறாளம். எழுதும்போது குடிக்கக் காப்பி கேப்பேரே... போட்டா தட்டுமுட்டு சத்தம் கேட்டு கவனம் தப்புச்சுன்னா எழுத்து நின்னுபோயிருமேன்னு ஒரு பயம். ரோட்டுக்கு வந்தா லாசரு கடையத் தொறந்துக்கிட்டு நிக்கது மாதிரி. செம்பெடுத்துக்கிட்டுப் போறேன். நின்னு காப்பிய வாங்கிக்கிட்டுப் போலாம்னு பாத்தா அவன் கடைய மூடிக்கிட்டு இருக்கேங்கான். வெறுங்கையோட வீட்டுக்கு வந்தா தலப்பாக்காரர காணல. எப்ப வாராரு, எப்ப போறாருன்னு ஒரு பிடியும் இல்ல பாத்துக்கோ. எம்மவனுக்க காரியமும் ஒன்னும் தெரியல...’’

பின்னி குறுக்கிடமுடியாத பாஷையோடு அவளே நிறுத்தட்டும் என நின்றான்.

“ஒன்னைய ஆசுபத்திரியில எங்கயாவது காட்டுவமா? யாம்னா இத இப்படியே விடக்கூடாது பாத்துக்கோ...”

“டாக்டருக்கு என்னத்த தெரியும்... ஊசி போடவும் மருந்து கெட்டவும் மட்டுந்தான தெரியும்?”

“இல்லேல்லா... இந்த மாதிரி தோணலுக்கு எல்லாம் டாக்டரு கைய வச்சாதான் செரியாவும்.”

“அதுலாம் வேண்டாம். நீ எனக்கு ஒரேயொரு ஒபகாரம் செஞ்சா போதும்.”

“சொல்லு...”

“எம்மவனப் பாக்கணும். காரியங்கள அவங்கிட்ட ஒப்பிக்கணும்... அவனைத் தேடித்தான் அவரு வாராருன்னு நெனக்கேன்.”

“அது...”

“மறுக்காத! அவன் அனுப்புன ரெண்டுமூணு மெட்ராஸ் லெட்டரு எங்கிட்ட பத்ரமா இருக்கு. அந்த அட்ரசுக்குப் போயி ஒங்கம்ம கெடையில ஆயிட்டா... இப்பவோஅப்பவோன்னு கெடக்கா... நீ இப்பப் போனியானா பாக்கலாம்னு சொல்லணும்... எனக்காவச் சொல்ல மாட்டியா? நீ இதச் சொன்னேனா போதும். அவன் அடிச்சிப் பறந்து வந்துருவான்.”

பின்னிக்கு மூச்சு அடைத்தது.

“என்னத்தச் சொல்லச் சொல்லுத? இந்த அட்ரச ஏற்கெனவே நீ என்கிட்டே தந்து நானும் மெட்ராஸ் போவும்போதுலாம் பலதட போய்ப் பாக்கவும் செய்துட்டேன்... பென்கரு பய அந்த அட்ரசுலையே இல்லை. போன புதூசுல தங்குன அட்ரசாம் அது. இப்ப எங்க இருக்காம்னு யாருக்குந் தெரியல... இத ஓங்கிட்டையும் சொல்லிட்டேன். ஒனக்கு ஓர்ம இல்ல.”

அவள் முகம் போன போக்கில் மனம் மண்டியது தெரிந்தது.

“அப்படியா..? ஒருகண்ணு அவனப் பாத்துரணும்னு கெடந்து துடிக்கென். அது ஆண்டவருக்கு எத்தல.”

எலிசபெத்தாளின் உலகம் அதன்பிறகு வேறு திசை பார்த்துச் சுழலத் தொடங்கியது. சிலநேரங்களில் எங்காவது கடைத் திண்ணைகளிலோ, சாலையின் கம்பி வளைவோடவோ சாய்ந்துகொண்டு ஒரே நிற்பாக நிற்கத் தொடங்கினாள். ஆடைகளை அலசிப் போடவேண்டும், மாற்று உடுத்த வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாகத் தோன்றவில்லை. அதேசமயம் மகனின் கடிதங்கள் மட்டும் அவளது முந்தியில் இறுகக் கட்டிய முடிச்சாக இறுக்கி இருந்தன.

யாராவது போன் பேசிக்கொண்டிருந்தால், “பெங்கருக்க நம்பர் இருக்குமா?” என்று கேட்க ஆரம்பித்தாள். “இல்லை” என்ற பதிலை அவள் அதிகமும் கேட்கத் தொடங்கியது அதன் பிற்பாடுதான். அது அவளை நிராதரவாக்கியது.

அதன்பிறகு ``தலைப்பாக்காரருக்கு போன் போட்டாக் கெடைக்குமா?” என்று கேட்டுப் பார்த்தாள். சிலர் தயங்கினார்கள். சிலர் அச்சப்பட்டார்கள். சிலர் சிரித்தார்கள். அநேகர் விலகிச் சென்றார்கள். அவளுக்கு உதவாத அவர்கள் ஒரு காய்ந்த இருளுக்குள் மறைந்து செல்வதுபோல அவளது கண்களுக்குள் இருள் பஞ்சுப்பொதியாக அடைத்து நின்றது. பஞ்சு விலகும்போது அவள் நடக்கத் தொடங்குவாள். சிலசமயம் அடைப்பு விலக அதிக நேரம் பிடித்தது. இதன் அதீதம் கண்ட ஒருநாளில் அவள் ஒருபோதும் விரும்பாத சம்பவமான மருத்துமனையில் அனுமதிக்கப்படுவது மீண்டும் நேர்ந்துவிட்டது.

இந்தத் தடவை அவள் எதிர்ப்பு எதுவும் காண்பிக்கவில்லை. டாக்டர் அவளை பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தி முடிந்தவரையில் தேற்றிவிடும் நம்பிக்கையைக் கொண்டிருந்தார். தனது நெருங்கிய மருத்துவர்களின் ஆலோசனைகளைக்கூட அவர் பெறத் தொடங்கினார்.

ஆனால் இப்போது இரவின் கனவுகள் அவளைக் கடலுக்கோ அல்லது அவளது தனித்த வீட்டிற்கோ இழுத்துச் சென்றன. அது தீவிரம் கண்ட நேரத்தில் நடுக்கடலில் ஒரு கைப்புறம் அவளைப் பற்றிக்கொள்ள வருவது போலவும் மகனுக்காக அதை நிராகரிப்பது போலவும் அவள் கனவு கண்டாள். அந்தக் கனவு அவளைப் பெரும் அச்சத்தில் தள்ளியது.

அன்று பென்கர் வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்திருந்தான். அந்த மாதச் சம்பளத்தினை எலிசபெத்தாளின் கையில் கொடுத்தான். அதனை வாங்கி எண்ணிய அவள் முகத்தில் கோபம் மூண்டது.

“மிச்சத்த எங்கே?”

“பிடிச்சிட்டுக் குடுத்தாரு”

“அப்படியென்ன பிடித்தம்?”

அவன் எதுவும் பேசவில்லை.

“எல்லாப் பைசாவையும் சினிமா சினிமான்னு தேட்டருக்கும், கதைப் பொஸ்தவம் வாங்கதுக்கும் செலவழிச்சிருப்பே... அந்த அப்பனுக்க மவம்லா..?” என்று இப்போது அவள் திட்டவில்லை. ஒவ்வொரு முறையும் இப்படித் திட்டித்திட்டிப் பழகிவிட்ட அவள் அன்று கடுங்கோபம் கொண்டு பணத்தைச் சுருட்டி அவன் முகத்தின் மீது வீசியபடி, “எடுத்துட்டுப் போ. முன்ன வராத... எங்கயாவது கண்ணுகாணாத எடத்துக்குத் தொலஞ்சி போ... அப்பன மாதிரி போ..!” என்றாள்.

பென்கர் வெகுநேரம் அவள் முகத்தையே பார்த்தபடி நின்றான். இரவு முழுக்க அவள் அழைக்கவே இல்லை. அவள் போய்விட்டாள். பிறகு அவனும் போய்விட்டான். அந்தக் கனவுக்குப் பிறகு அவளுக்கு யாரையும் பார்க்கத் தோன்றவில்லை.

மறுநாள் மருத்துவமனையில் மருத்துவருக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. எலிசபெத்தாளைக் காணவில்லை. தேடியவர்களுக்கும் பதில் கிடைக்கவில்லை.

மடியில் கொண்டிருந்த மகனின் கடிதத்துடன் எலிசபெத்தாள் கோயம்பேடு வந்தபோது மிகவும் துன்பப்பட்டுப்போயிருந்தாள். உடம்பெல்லாம் வியர்த்தும் வீங்கியும் போயிருந்தது. உதடுகள் பசை ஒட்டியது போன்று வெள்ளை கண்டிருந்தது. அவளால் எழுந்துகொள்ளக்கூட இயலவில்லை.

கடிதத்தின் முகவரியினை விசாரித்தபோது சாலையின் மறுபுறம் போகச் சொன்னார்கள். ஒருவரின் கைத்தாங்கலாக மறுபுறம் போனவளிடம் அந்த மனிதர் கரிசனத்துடன் கேட்டார் “எங்கம்மா போகணும்?”

அவள் சாலையின் எல்லாப் புறங்களையும் பார்த்துவிட்டு “அந்தப் பக்கம் போவணும்... என் வீடு அங்கதான் இருக்கு” என்றாள். அவர் திகைத்தார். ஏனெனில் அவள் அந்தப் பக்கத்திலிருந்துதான் அவர் மூலம் சாலையைக் கடந்து வந்திருந்தாள்.