Published:Updated:

சொல்வழிப் பயணம்! - 19

சொல்வழிப் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வழிப் பயணம்

ஓவியங்கள்: மினிமலிக்ஸ்

நான் ப்ளஸ் ஒன் படிக்கும்போது எங்கள் பள்ளியில் ஜி.ஏ.ஜெயக்குமார் என்ற வணிகவியல் ஆசிரியர் இருந்தார். உலக சினிமாக்களின் மீதும் இசையின் மீதும் பேரார்வம் கொண்டவர். வார இறுதி நாள்களில் சென்னைக்குச் சென்று அறையெடுத்துத் தங்கி, உலகத் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு வருவார். நீதி போதனை வகுப்புகளில் அந்த உலக சினிமாக்களைப் பற்றி ஏகாந்தமாக எங்களிடம் பகிர்ந்துகொள்வார். புதுவிதமாக அவர் பேசுவதைக் கேட்டு மனசுக்குள் குருவி பறக்கும். அவருக்கு கிடார் வாசிக்கத் தெரியும். மயில் தோகைகளை விரிப்பதுபோல கைகளுக்கு இடையில் வைத்து விரித்து மூடினால் இசைக்கும் அக்கார்டியன் இசைக் கருவியும் வாசிக்கத் தெரிந்தவர். இசை குறித்தான நிறைய விஷயங்களை எங்களோடு பகிர்ந்துகொள்வார். வணிக சூத்திரங்கள் அடங்கிய மூளைக்குள் ஒரு கலைஞன் அமர்ந்திருப்பது இன்றுவரை நீங்காத ஆச்சர்யம்தான்.

கல்விதான் இந்தச் சமூகத்தின் ஆகப்பெரும் மகத்துவம். கல்வி ஒன்றுதான் மனிதனின் மாபெரும் சக்தி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் மட்டும்தானா என்கிற உரையாடல்கள் தொடர்ந்து சமூகத்தில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நம் கல்விக்கூடங்கள் வெறும் மதிப்பெண்களுக்காக மட்டுமே செயல்படவில்லை. அதைத்தாண்டிய சமூகப் புரிதலை, நுண்ணுணர்வை, சிந்தனையை விதைக்கும் களமாக அவை இருந்திருக்கின்றன. புத்தகங்களைக் கடந்து இசை, ஓவியம், இலக்கியம், அரசியல் எனப் பலவும் ஆசிரியப் பெருந்தகைகளால் கற்பிக்கப்பட்டன. ஆசிரியர் களுடனான உரையாடல், மாணவர்களின் மனதில் பெரும் வெளியைத் திறந்துவிட்டது.

சொல்வழிப் பயணம்
சொல்வழிப் பயணம்

காலப்போக்கில் பள்ளிகளில் இப்படியான உரையாடல்கள் முற்றாக நின்றுபோய்விட்டன. `படிக்கிற மாணவனுக்கு இதெல்லாம் தேவையில்லை' என்கிற இடத்திற்குத் தனியார் பள்ளிகள் சென்றுவிட்டன. தனியார் பள்ளிகளைப் பின்பற்றி அரசுப் பள்ளிகளும் அவ்வழியே சென்றது துரதிர்ஷ்டவசமான ஒன்று. மாணவனை ஏதாவது ஒரு தேர்வுக்குத் தயார்படுத்தி வெற்றிபெற வைப்பது மட்டுமே போதாது. வசதிகள் அதிகரித்த பள்ளிகளில், கற்றலின் ஆழம் குறைந்துவிட்டது.

பள்ளிக் கல்வி படிக்கின்ற ஒரு மாணவனுக்கு ஏசி வகுப்பறை என்பதே என்னைப் பொறுத்தவரை அராஜகம்தான். வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, மைதானங்களில் ஓடி விளையாட வேண்டிய பருவமல்லவா அது. மிக சொகுசாக வேன்களில் வரவழைத்து, ஏசி வகுப்பறைகளில் அமர வைக்கின்றன இன்றைய நவீனக் கல்விக்கூடங்கள். மதிப்பெண்கள் எடுப்பதற்கான கல்வி மட்டுமே நம் குழந்தைகளுக்குப் புகட்டப்படுகின்றன. மாலை அதே வேனில் வீட்டுக்கு அனுப்பிடுவர். மாணவர்களை இந்தப் பொதுச் சமூகத்தோடு எந்தவிதத் தொடர்பும் அற்றவனாக மாற்றுவதில் பள்ளிகளும் கல்லூரிகளும் போட்டி போட்டுக் கொண்டு செயலாற்றுகின்றன.

தமக்குக் கிடைக்காத வசதியைத் தம் பிள்ளைகளுக்குச் செய்து கொடுக்கிறோம் என்று பெருமிதப்படுகிறார்கள் பெற்றோர்கள். உண்மைதான். ஆனால், கல்வி என்பது புத்தகமும் வகுப்பறையும் மட்டுமல்லவே! சமூகத்தை, அதன் அடுக்குகளை, மனிதர்களை, வறுமையை, நோய்மையை என இந்த தேசத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அறிவதும்தான். மருத்துவராகவோ, பொறியாளராகவோ, வங்கி அதிகாரியாகவோ வளரப்போகிற நம் செல்வங்கள் சமூகத்தை அவதானிக்க பள்ளி, கல்லூரிக் காலங்கள் தாண்டி வேறு காலங்கள் ஏது? இப்படி சமூகத்தைப் புரிந்துகொள்ளாத மனது, வேலைக்குச் சென்றதும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே தன் இலக்காக்கிக்கொண்டு ஓடத் தொடங்கும். வரும் தலைமுறை இப்படி இருந்திடக்கூடாதென அரசும் பல்வேறு முயற்சிகள் எடுக்கிறது.

கல்வி என்பது தனக்குப் பிடிக்காதவற்றை பெற்றோரின் வற்புறுத்தலினாலோ, சமூகத்தினுடைய நிர்பந்தத்தினாலோ கற்றுக்கொள்வது அல்ல. தனி மனிதனின் விருப்பத்தில், சொந்தத் தேடலில், சிந்தனையின் அடிப்படையில், கற்றல் என்பது நிகழுமானால், அந்தக் கற்றலினுடைய முழுப் பயனையும் சமூகம் அனுபவிக்க முடியும்.

வகுப்பறைகளைத் தாண்டிய செயல்பாடுகள் முன்பிருந்தன. ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வது மாணவர்களுக்குப் பெரும் பரவசத்தை அளித்தன. நிறைய பேச்சுப் போட்டிகள், பாட்டுப் போட்டிகள், நடனப் போட்டிகள், இலக்கிய மன்றங்கள், சொற்பொழிவுகள், ஆளுமைகளை அழைத்துப் பேசவைத்தல் இவையெல்லாம் ஒரு வகையில், அவனுக்கு மதிப்பெண்கள் இல்லாத ஒரு கல்வியை அளித்துக்கொண்டிருந்தன. இன்று நடத்தப்படும் ஆண்டு விழாக்கள்கூட வணிக நோக்கிலான சம்பிரதாயங்கள் ஆகிவிட்டன. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் அவையெல்லாம் தவிர்க்கப்பட்டு, முழுக்க முழுக்க மாணவர்களுடைய உலகம், வகுப்பறைகளும் புத்தகங்களும் சார்ந்ததாகச் சுருக்கப் பட்டுவிட்டது. குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் அசைன் மென்ட்களும் பெற்றோர் களுக்கானதாக மாறிவிட்டன.

டியூஷன் சென்டர்களின் எண்ணிக்கை மைதானங்களின் எண்ணிக்கையைவிட அதிகரித்துவிட்டன. மாணவர்களின் ஓய்வு நேரம் குறைந்துவிட்டது. ஓய்வு நேரங்களை மொபைல்கள் ஆக்கிரமித்துவிட்டன. சிந்திக்க நேரம் குறைந்துவிட்டது. நட்சத்திரங்களைப் பார்க்க விடாமல், நிலவைப்பார்த்து பிரமிக்க விடாமல், மனம் முழுக்கப் பாடப்புத்தகங்களும் வகுப்பறைகளும் குவிந்துவிட்டன.

பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள்மீது அதீத பிரியமும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையும் வைத்து வளர்கிறார்கள். அது பொருள் சார்ந்ததாக மட்டும் தேங்கிவிடக்கூடாது. தாங்கள் இழந்ததைத் தங்கள் குழந்தைகள் அடைந்துவிட வேண்டும் என்கின்ற அவர்களுடைய எதிர்பார்ப்பில் சிதைவது குழந்தைகளின் உலகம் மட்டுமல்ல, சமூகத்தின் கட்டமைப்பும்தான்.

30-40 வயதைக் கடந்த மனிதர்களுக்குத் தங்களின் பள்ளி, கல்லூரிக் கால நினைவுகள்தாம் என்றும் இனிமையான நினைவுகளாக இருக்கின்றன. கல்லூரிக்குப் பிறகு குடும்பம், பொறுப்பு, அலுவல், வாழ்வியல் பிரச்னைகள், குழந்தைகள் என வாழ்வின் திசைகாட்டி அவர்களின் தடத்தை வேறொரு பக்கமாக நகர்த்திவிடுகிறது. எந்தத் துயரங்களுமற்ற செளந்தர்யங்கள் நிறைந்த பதின் பருவங்கள் ஒவ்வொரு மனிதனின் நினைவுகளிலும் ரம்மியமாக நிறைந்திருக்கின்றன. ஆனால், நினைவுகளை மீட்டெடுத்து அசை போட்டுக்கொள்ள முடியாத அளவிற்குக் கல்வி நிலையங்களும், கற்பித்தல் முறைகளும் சமீபத்தில் மாறிவிட்டதாக நான் உணர்கிறேன். நம்பிக்கையின்றி, பாதுகாப்பற்ற மனநிலையில் மாணவர்கள் தயாராகின்றனர். சிறு தோல்வியை, எதிர்ப்பை, அவமானத்தைத் தாங்கும் வல்லமை அற்றவர்களாகத் திணறுகிறார்கள்.

திருவண்ணாமலையில் டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் நான் ஏழாம் வகுப்பு படித்தபோது, மூன்றாவது நான்காவது ரேங்க் எடுக்கும் மாணவனாக எப்போதும் பழக்கப் பட்டேன். எங்களுக்கு ஆசிரியராக இருந்த ஒருவர், தன்னுடைய வகுப்பில் 60 மாணவர்கள் இருந்தால், 60 பேருமே தன்னிடம் டியூஷன் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவார். 50 ரூபாய் அப்போது டியூஷன் ஃபீஸ். என் அப்பாவே ஆசிரியர்தான். சம்மணங்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு, ஆக்டிவ் வாய்ஸ், பாசிவ் வாய்ஸ் என்று சொல்லிக் கொடுப்பார். அவருக்கு இன்னொரு ஆசிரியரிடம் தன் மகனை டியூஷன் அனுப்புவதில் விருப்ப மில்லை. அதனால், அவரே எனக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பார். டியூஷன் வரவில்லை என்கிற காரணத்தால் ஏழாம் வகுப்பில் நான் ஃபெயிலாக்கப்பட்டேன். அந்த வடு எனக்குள் ஆழமாக தங்கிவிட்டது. நன்றாகப் படிக்கிற பையனை, ஐம்பது ரூபாய் டியூஷன் பீஸ் கொடுக்கவில்லை என்பதற்காக திட்டமிட்டு ஃபெயில் ஆக்கிவிட்டார்கள் என்பதற்காக நான் மிகுந்த துயரப்பட்டேன். இன்று வரையிலும் அந்தத் துயரம் எனக்கு இருக்கிறது.

ரிசல்ட் பார்ப்பதற்காக எங்கள் பள்ளிக்குப் போனேன். ரிசல்ட் ஒட்டப்பட்ட அட்டையில் என் பெயர் இல்லாதது பார்த்து அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தேன். அப்பா, ‘என்ன ஆச்சு?' என்று கேட்டபோது, ‘நான் ஃபெயில் ஆயிட்டேன்' என்று சொன்னேன். ‘நீ ஃபெயில் ஆகக்கூடிய பையன் இல்லையே' என்றபடியே சட்டையை மாட்டியவர், சைக்கிளில் என்னைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்குப் போனார்.

ஹெட் மாஸ்டருக்கும் என் அப்பாவிற்கும் தொடங்கியது உரையாடல். ‘என் பையன் ஃபெயிலாகிற பையன் கிடையாது..!' என்று சொன்னபோது, ‘அதை நாங்கதான் சொல்லணும்' என ஹெட் மாஸ்டர் கூறினார். ‘என் மகனுடைய ஆன்சர் ஷீட்டைக் கொடுக்க முடியுமா?' என்று அப்பா கேட்டபோது ஹெட் மாஸ்டர் மிகுந்த கோபமுற்று, ‘அது எனக்கு அவசியமில்ல’ என்று கத்தினார். ‘நானும் வாத்தியார்தான் சார்' என்றார் அப்பா. ‘நீங்க என்ன சார், ஒரு சாதாரண செகண்டரி ஸ்கூல் வாத்தியார்! நான் 4,000 பேர் படிக்கிற ஸ்கூல்ல ஹெட் மாஸ்டரா இருக்கேன். என்கிட்ட வந்து கேள்வி கேக்குறீங்க?' எனக் குரலை உயர்த்தினார். இருவருக்குமான வாக்குவாதம் முற்றியது.

ஆங்காரத்தில் அப்பா தன் சட்டையைக் கிழித்து, தோள்பட்டையில் குண்டு பட்ட காயத்தை ஹெட் மாஸ்டரிடம் காண்பித்தார். அதிர்ச்சியுடன் நின்றார் ஹெட் மாஸ்டர். ‘நான் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவன். வெள்ளைக்காரன் கிட்ட குண்டடிபட்டவன். அதுக்கப்புறம்தான் வாத்தியாரா வந்தேன்! உன்னை மாதிரி அயோக்கியன எல்லாம் இந்த சீட்டுல உட்கார வைக்கிறதுக்காகத்தானா நாங்க சுதந்திரத்திற்காகப் பாடுபட்டோம்' என்று அப்பா, அந்த அறையே அதிர்வது மாதிரி கத்தினார்.

அப்பாவின் சட்டை பட்டன்கள் தெறித்து அந்தத் தலைமை ஆசிரியருடைய கண்ணாடி டேபிளில் சிதறிய காட்சி எனக்கு இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. அப்பா வெளியே வருகிறபோது என்னை அவருடைய சைக்கிள் கேரியரில் உட்கார வைத்து, ‘என்னைய கெட்டியா புடிச்சுக்கப்பா... பிடிய விடாத!' என்று சொன்னார். நான் இன்று வரையிலும் அந்தப் பிடியை விடவே இல்லை. ஏறக்குறைய 25 ஆண்டுகள் கழித்து `பிடி' என்று இந்த நிகழ்ச்சியை ஒரு கதையாக எழுதினேன். அந்தக் கதை ஆனந்த விகடனில் பிரசுரமாகி அதற்குப் பிறகு, மலையாளத்தில், தெலுங்கில், ஆங்கிலத்திலெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டது.

இந்தமாதிரியான ஏமாற்றங்களும் அவமதிப்புகளும், சின்னச் சின்ன துரோகங்களும் ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுக்கப் பின்தொடர்பவையாகவே இருக்கின்றன. அவை ஒரு அனுபவத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன. இப்படி தமிழில் ஏராளமான கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பள்ளிக் குழந்தைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம், எனக்கு பிரபஞ்சனுடைய ஒரு கதை ஞாபகத்திற்கு வரும்.

அந்தக் கதையில் நன்றாக வாழ்ந்த ஒரு மனிதர் இருப்பார். ஒரு சிட்பண்ட்காரனால் ஏமாற்றப்பட்டு, பின் பாண்டிச்சேரியில் போய் ஒரு பெரிய ஹோட்டல் கட்டலாம் என ஏமாற்றப்படுவார். தன் சொத்துகளை எல்லாம் ஏமாந்து இழந்தபிறகு அவர் ஒரு சிறிய குடிசை வீட்டுக்கு குடிவந்துவிடுவார். தன்னால் இதையெல்லாம் எதிர்த்துப் போராட முடியாத நிலையில், தன் மகனை எப்படியாவது ஒரு பெரிய அதிகாரியாக்கி, பாண்டிச்சேரிக்கு கலெக்டராக்கி, இந்த அவமானத்திலிருந்து தான் தப்பித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டே இருப்பார்.

அந்தப் பையன் ஏழாவதோ, எட்டாவதோ படிக்கையில் அவன் அப்பாவிடம் ஒரு நாள், ‘லண்டன் மேப் வாங்க வேண்டும்’ என்று 15 ரூபாய் பணம் கேட்பான். அப்பா சந்தோஷமாகக் கொடுப்பார். ஒரு வாரம் கழித்து, ‘பிரிட்டன் மேப் வாங்க வேண்டும்’ என்று 15 ரூபாய் பணம் கேட்பான். அதற்கும் பணம் கொடுப்பார். அப்பா தன் நண்பரான தலைமை ஆசிரியர் ஒருவரை சந்திக்கப் போகிறபோது, ‘பையன் எப்படிப் படிக்கிறான்?' என்று அவர் விசாரிப்பார். ‘நல்லா படிக்கிறான். போன வாரம்கூட லண்டன் மேப் வாங்குவதற்கு 15 ரூபாயும், இப்போ பிரிட்டன் மேப் வாங்குவதற்காக 15 ரூபாயும் கொடுத்தேன்' என்று சொல்வார்.

நடந்ததைப் புரிந்துகொண்ட அவர், ‘லண்டனும் பிரிட்டனும் ஒன்னுதான். பையன் எங்கயோ தப்புப் பண்ணுறான்' என்று சொல்லிவிடுவார். தன் எல்லாக் கற்பனைகளும் சரிந்துபோக, இடிந்துபோய் அந்த அப்பா வீட்டுக்கு வருவார். பையனைப் பார்த்து அவன் முன்னால் மண்டியிட்டு, ‘என் சொத்துகளையெல்லாம் இழந்ததற்குக் காரணம், எனக்கு எழுதப் படிக்கத் தெரியாததுதான். அவன் நீட்டின எல்லாப் பத்திரத்திலும் நான் கையெழுத்து போட்டேன். என் வீட்டுக்கு அரண்மனைக்காரன் வீடு என்று பேர். அவ்வளவு பெரிய வீட்டிலிருந்து ஒரு சின்னக் குடிசை வீட்டிற்கு நான் மாறி வரவேண்டியதாக ஆகிவிட்டது. நான் எழுதப் படிக்கத் தெரியாதவன் என்பதற்காக, ஏமாற்றி இரண்டு தடவை பணம் வாங்கினியேப்பா! உனக்கும் அவனுகளுக்கும் என்ன வித்தியாசம்?’ என்று கேட்பதாக முடியும். அந்தக் கதைக்கு பிரபஞ்சன் ‘அடி' என்று தலைப்பிட்டிருப்பார்.

பெற்றோர்களுடைய எதிர்பார்ப்பில் சில குழந்தைகளும், குழந்தைகளுடைய மிகப்பெரிய கனவில் பெரும்பான்மையான பெற்றோர்கள் நெருப்பை அள்ளி வீசுகிறார்கள். இந்த இடைவெளிகளை எப்படிக் குறைப்பது என்று நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

சொல்வழிப் பயணம்
சொல்வழிப் பயணம்

உளமாரக் கற்பிப்பதும் பயில்வதும் வகுப்பறையுடன் முடிந்துவிடுகிற ஒன்றில்லை. வகுப்பறைகளுக்கு வெளியே ஒரு பெரிய உலகம் விரிந்து கிடப்பதையும், அதற்குள்ளாக இருக்கிற இயற்கையையும், மனிதர்களுடைய மகத்துவத்தையும் சிறுவயதிலிருந்தே நாம் அடைகிறபோதுதான் வளமாக கல்வியைப் பெற்றவர்களாகிறோம். எம்.ஏ., பிஹெச்.டி., என்று பட்டம் போட்டுக்கொள்வதால் மட்டுமே ஒரு மாணவன் கற்றலில் தேர்ந்தவனல்ல. குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் சிறந்தவனாக இருக்க முடியுமே தவிர, இந்தச் சமூகத்தின் எல்லா அடிப்படையான விஷயங்களையும் அவன் கற்றறிந்துவிடவில்லை.

அரசுப்பள்ளிகளில் தமிழக அரசு நடத்திய கலை நிகழ்ச்சிகளில் பல மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்கள் பாடிய பாடல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. தமிழ்ச் சான்றோர்களைப் பற்றிப் உரையாடுவது, திரைப்படங்கள் திரையிடுவதென அரசின் சில முன்னெடுப்புகள் பள்ளிகளில் நிகழ்ந்திருக்கின்றன. இது மட்டுமே போதாது.

இதை அரசால் முன்னெடுக்க மட்டுமே முடியும். நாம் இயக்கமாகச் செயல்பட வேண்டும். மாணவர்களுக்காக நாம் திறக்க வேண்டிய ஜன்னல்கள் நிறைய இருக்கின்றன. எல்லைகளற்ற பரந்த வானத்தை அவர்கள் காண வேண்டும். திறக்காத கதவுகளுக்காகக் கலங்காமல், சிறகுகள் முளைத்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். எந்த முன் முடிவுகளும் இல்லாமல் இந்த சமூகத்தை எதிர்கொள்ள அவர்களைத் தயார்படுத்த வேண்டும். அதற்கு வழிகாட்டுபவர்களாக ஆசிரியர்கள் உடன் நிற்க வேண்டும். அந்தப் பாதையாக அவர்கள் பெறும் கல்வி இருக்க வேண்டும்.

சொல்வழிப் பயணம்! - 19

வாழ்வையும், அதன் சகல சுக துக்கங்களையும் எதிர்கொள்கிற மனதைக் கல்வி கொடுக்க வேண்டும். வீரம், திமிர், அறம், கொண்டாட்டம், வெற்றி, தோல்வி, அச்சம் இவை குறித்தான சரியான மதிப்பீடுகளைப் போதிக்க வேண்டும். இதை உள்வாங்குகிற வயதில் அவர்களின் உலகத்தில் வேறு விஷயங்களை இட்டு நிரப்புவது முறையல்ல. அவர்கள் உலகத்தைச் செழுமையாக்க வேண்டும். எதிர்காலச் சமூகத்துக்கான சாளரங்களைத் திறக்கும் கைகள் நமதாகட்டும்.

- கரம்பிடித்துப் பயணிப்போம்