Published:Updated:

சொல்வழிப் பயணம்! - 23

சொல்வழிப் பயணம்! - 23
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வழிப் பயணம்! - 23

ஓவியங்கள்: மினிமலிக்ஸ்

விடிந்தும் விடியாத பொழுதொன்றில் வெள்ளை வெளேரென வேட்டி சட்டையும் நெற்றியில் திருநீறுமாக என் வீட்டுக்கு ஒருவர் வந்திருந்தார். சில பல வருடங்களுக்கு முன்னால் நடந்தேறிய இந்தச் சந்திப்பு என் நினைவில் அப்படியே தங்கிவிட்டது. பெயரைக்கூடச் சொல்லவில்லை அந்த மனிதர். ‘`இத்தன நாளா காசு, பணம்தான் எல்லாம்னு நினைச்சுட்டு இருந்தேன். சம்பாரிச்சதையெல்லாம் எம்புள்ளைகளுக்குன்னுதான் சேத்து வச்சேன். எந்த மனுசங்களோடவும் நேர்மையா பழகல. ஆதாயம் இருக்கான்னு யோசிச்சு யோசிச்சுப் பழகிட்டேன். ஆனா, இதெல்லாம் ஏன்னு புரியல சார். என்னமோ மனசு திடீர்னு வலிக்குது. நேத்து வீட்டையும், கொஞ்சம் நிலத்தையும் புள்ளைகளுக்கு வச்சிட்டு, எல்லாத்தையும் ஒரு ஆதரவற்றோர் பள்ளிக்கு எழுதி வச்சுட்டேன். இனிமே பசின்னு கெஞ்சுற எந்த மனுசனையும் பார்த்திடவே கூடாது. இனிமே அதுக்காகத்தான் சார் இந்த வாழ்க்க. இதை உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு. நேத்து வரைக்கும் இருந்த நான் வேற சார்!'’ எனக் கலங்கிய அந்தக் கண்கள் அடிக்கடி நினைவில் வருவதுண்டு.

மனித மனம் புரிந்துகொள்ளவே முடியாதது. மனம் நம் பேச்சைக்கூட பல நேரங்களில் கேட்பதில்லை. ஒரு நொடிப் பொழுதில் நிகழ்கிற மனமாற்றம்தான் வாழ்வில் மிகப் பெரிய துயரமாக, மகிழ்ச்சியாக மாறிப்போகிறது. `நல்லவர்தான், ஆனா எப்படிப் பண்ணினார்னு கடைசிவர புரியவேயில்ல!' எனக் கதறிய இதயங்களையும், `காலைல வரைக்கும் ரெண்டு பேரும் பிரிஞ்சுருவோம்னுதான் நினைச்சோம். டீ குடிச்சப்புறம் மன்னிப்பு கேட்டார். இனிமே ஒண்ணா வாழ்வோம்னு சொல்லிக் கண் கலங்கிட்டாரு சார்!' என மகிழ்ந்த கண்களையும் இத்தனை ஆண்டுகளில் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். மனதின் போக்கு இன்னதென யாராலும் எப்போதும் வரையறுக்கவே முடிவதில்லை. திடீரெனத் தோன்றும் கனல் கொலையும் செய்ய வைக்கிறது. திடீரெனத் தோன்றும் ஒளி சகலத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காகக் களத்தில் நிற்கவும் செய்கிறது.

சொல்வழிப் பயணம்! - 23

மனதில் இந்த மாற்றம் எந்தப் புள்ளியில் நிகழ்கிறது எனக் கணிக்கிற கடிகாரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனாலும், மனதின் போக்கிலேயே மனிதன் வாழப் பழகிவிட்டான். நல்லது, கெட்டது, சரி, தவறு எனத் தீர்மானிக்கிற கோடுகளைக் கடக்கிற மனிதனின் எண்ணங்கள் புரிந்துகொள்ளவே முடியாதவைதான். சுந்தர ராமசாமியின் கதை ஒன்றுண்டு. ஏழை போலீஸ்காரர் ஒருவரின் மகளுக்குப் பிறந்தநாள் வரும். 50 ரூபாய்க்கு ஒரு கவுன் வாங்கி வரச் சொல்வாள் மனைவி. காவலரின் கைகளிலோ பணமிருக்காது. மாலைக்குள் யாரிடமாவது அந்தப் பணத்தை சம்பாதிக்க வேண்டுமெனத் திட்டமிடுவார். மனதில் கணக்கு போட்டுக்கொண்டே ஒரு டீக்கடையில் இருப்பார். அன்று அத்தனையும் சீராக இருக்கும். எல்லோர் சைக்கிளிலும் டைனமோ இருக்கும். எல்லாரும் போக்குவரத்து விதிகளை மீறாமல் இருப்பர். எப்படி 50 ரூபாயை லஞ்சம் கேட்பது எனக் காரணம் தேடுவார். ஒரு குருக்கள் அங்கிருக்கிற போஸ்ட் பாக்ஸ் ஒன்றில் லெட்டரை போஸ்ட் செய்ய வருவார். போஸ்ட் பாக்ஸ் நிரம்பி இருக்க, உள்ளே இருந்து ஒரு லெட்டரை எடுத்து அதோடு சேர்த்து தன் லெட்டரையும் உள்ளே தள்ளிக்கொண்டிருப்பார். போலீஸ்காரர் அவரை நெருங்கி விசாரிப்பார்.

அவர் கொஞ்சம் பயந்தபடியே, ‘`ஒன்னும் இல்ல சார். ஒரு தபால் போடலாம்னு வந்தேன். பார்த்தா ஏற்கெனவே ஒரு தபால் அடைச்சிக்கிட்டு இருக்குது. அதை எடுத்துட்டு இதைப் போடலாம்னு'’ என்பார்.

‘`இந்த போஸ்ட் பாக்ஸ்ல நிறைய தபால்கள் திருடு போகுது. அதைக் கண்டுபிடிக்கிறதுதான் என் டியூட்டி. உன்னைய கையும் களவுமாகப் புடிச்சிட்டேன்'’ என ஆரம்பிப்பார் போலீஸ்காரர்.

‘ `ஐயோ சார், நான் என்ன பண்ணினேன். இப்படி ஒரு பழியை என் மேல சுமத்துறீங்க?!’' என குருக்கள் பதறுவார். குருக்களின் பயமும், இந்த மாதிரியான அனுபவமே இல்லாத அவருடைய அச்சமும் போலீஸ்காரரை உற்சாகமாக்கும். ‘‘அதெல்லாம் தெரியாது, உன் கையில ரெண்டு தபால் இருக்கு. ஒரு தபால்தான் உன்னுது. இன்னொரு தபால் நீ இந்த போஸ்ட் பாக்ஸ்ல இருந்து திருடுனது'’ என்பார். ‘`நான் ஏன் சார் தபால திருடப்போறேன். எனக்கு தபாலை திருடி என்ன ஆகப்போகுது’' என குருக்கள் கேட்க, “அதையெல்லாம் வந்து நீ ஸ்டேஷன்ல சொல்லு. புதுசா ஒரு எஸ்.ஐ வந்திருக்கிறான். போன உடனே பொடனிலேயே நாலு அறை கொடுத்துட்டுதான் விசாரிக்கவே ஆரம்பிப்பான்'’ என பயமுறுத்த, குருக்களின் உடல் வியர்க்கும். பயத்தை அதிகப்படுத்தும் விதமாக பலவும் பேசும் போலீஸ் ஒருகட்டத்தில், ‘`என்னய்யா முட்டாளா இருக்கிற. ஒரு அம்பது ரூபா குடு'’ எனக் கேட்டு விடுவார். 50 ரூபாய் கேட்ட உடனே, குருக்கள் சுதாரிப்பார், ‘`இல்ல நாம ஸ்டேஷனுக்கே போலாம். நான் ஒன்னும் தப்பு பண்ணல'’ என்று கூறுவார். உடனே போலீஸ்காரர், ‘`யோவ், முட்டாள் மாதிரி பேசாத. போன உடனே எஸ்.ஐ நாலு அறைச்சல் கொடுப்பாரு'’ என்பார். குருக்கள், ‘`இல்ல, பரவால்ல சார். அறைச்சல் கொடுத்தாகூட நான் வாங்கிக்கிறேன். ஆனா நான் காசு தர மாட்டேன். நாம போலாம் வாங்க’’ என்றதும், என்ன செய்வதெனத் தெரியாமல் விழிப்பார் போலீஸ்காரர்.

சொல்வழிப் பயணம்! - 23

சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போலீஸ்காரரும் கொஞ்சம் இடைவெளி விட்டு குருக்களும் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடப்பர். யார் யாரை அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்பது சாலையில் செல்பவர்களுக்குப் புரியாதது மாதிரி இருக்கும். பல குழப்பம், கேள்விகளோடு நடக்கும் போலீஸ்காரர் ஸ்டேஷன் நெருங்கியதும், ‘`ஒரு நிமிஷம் இரு! உண்மையிலேயே இதுக்காகத்தான் ஸ்பெஷல் டியூட்டி போட்டாங்க. ஆனாலும் நீ பாவம். நீ நியாயமாதான் இருக்கிற. நீ போயி ரெண்டு தபாலையும் தபால் பெட்டியில் போட்டுட்டுப் போயிடு'’ என்று போலீஸ்காரர் சொல்வார். ‘`இல்ல. இவ்வளவு தூரம் வந்துட்டோம், நான் போய் அந்த எஸ்ஐ-யைப் பார்த்துட்டே போறேன்’’ என்று சொல்வார். ‘`யோவ், புரியாம பேசாத, அந்த எஸ்.ஐ-க்கு நியாயம் அநியாயம் எல்லாம் தெரியாது. போன உடனே ரெண்டு சாத்து சாத்துவான், பரவாயில்லையா?'’ என்று கேட்பார். ‘`அடிகூட வாங்கிக்கிறேன். ஆனா நான் எதுவும் தப்பு பண்ணல!'’ என குருக்கள் திட்டவட்டமாகச் சொல்வார். உரையாடல் நீண்டு போலீஸ்காரருக்குப் பதறிப்போய் வியர்க்கும்.

‘`என் பொண்ணுக்கு இன்னைக்கு பிறந்தநாள். காலையில புறப்படும்போது வீட்டுக்காரி, ஒரு அம்பது ரூபா தேத்திட்டு வான்னு சொன்னா. காலையில இருந்து பார்க்கிறேன், எல்லாருமே நியாயவான்களாக மாறிட்ட மாதிரி இருக்குது. சரி அம்பது ரூபா எப்படியாவது கிடைக்குமான்னு பார்க்கும்போதுதான், நீ வந்து மாட்டுன. நீ பயங்கரமான ஆளா இருக்க. விட்டுட்டு நீ போ, நான் பாத்துக்குறேன்'’ எனப் பரிதவித்துச் சொல்வார்.

மகளுக்கு ஒரு கவுன் வாங்கிக் கொடுக்கத்தான் இத்தனை பீடிகை என உணர்ந்த குருக்கள், மடித்து வைத்திருந்த ஒரு நூறு ரூபாயை எடுத்து அந்த போலீஸ்காரர் கையில் கொடுத்து, ‘`இந்தா, மறக்காம பொண்ணுக்கு கவுன் வாங்கிட்டுப் போ. சாயங்காலம் நீலகண்டனுக்கு நான் அபிஷேகம் பண்ணும்போது குழந்தையையும் அவங்க அம்மாவையும் கூட்டிட்டு வா. பொண்ணு பேருல ஒரு அபிஷேகம் பண்ணுறேன்” என்று சொல்லுவார். போலீஸ்காரருக்குக் கண்கள் கலங்கும். ‘`சம்பளம் வாங்கின உடனே, இந்தக் காசை ரிட்டன் கொடுத்துடு'’ எனச் சொல்லிச் சொல்வார். இந்த இருவரின் சூழல்தான் நம்மில் பலருக்கும். எந்த நொடி நமக்குள் வஞ்சித்தவர் மேலும் இரக்கம் வரும், எந்த நொடி சக மனிதனை வஞ்சிக்கத் தோன்றும் என்ற கணக்குகள் நமக்குப் பிடிபடுவதில்லை.

என்.எஸ்.மாதவனின் `இரை' என்கிற கதை. ஒரு புகழ்பெற்ற சர்க்கஸின் முக்கியமான இறுதிக் காட்சி ஒன்று. அந்தக் காட்சியில் ஒரு மாஸ்டர் பக்கத்தில், தட்டில் பளபளக்கும் கத்திகளோடு ஒரு பெண் நிற்பாள். எதிரே ஏறக்குறைய ஒரு சிலுவையில் அறையப்பட்டதுபோல ஒரு பெண் நிற்பாள். அவளைப் பார்த்து, இவர் ஒவ்வொரு கத்தியாக எறிய வேண்டும். ஒவ்வொரு கத்தியும் எறியப்படுகின்றபோது அது அவள் மேலே படாமல் அவளுக்கு மிக அருகில் போய் குத்தி நிற்கும். கைத்தட்டல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும். கடைசிக் கத்தியை எறிந்த உடன் அவள் அங்கிருந்து விலகி நிற்பாள். கத்திகளால் வரையப்பட்ட அவள் ஓவியம் மட்டும் திரையில் தெரியும். இதுதான் அந்தக் காட்சி. கிட்டத்தட்ட இந்தக் காட்சிக்காக மட்டுமே நூற்றுக்கணக்கானவர்கள் சர்க்கஸுக்கு வருவார்கள். அந்த மாஸ்டர் வீசிய கத்தி பெண் ஒருவரின் தொடையைக் காயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவாள். இன்றைக்குக் காட்சி இருக்காதென மதுக்குப்பியுடன் உலாவரும் மாஸ்டர் சினிமாவுக்குப் போகத் திட்டமிடுவார். மதுபோதையில், காயம்பட்ட பெண்ணின் கூடாரத்துக்குப் போவார். அவளின் தங்கை அங்கிருப்பாள். அவளிடம் பேசிக்கொண்டிருந்தவனுக்கு டீ போடுவதற்காக ஸ்டவைப் பற்றவைக்கத் தொடங்குவாள். மாஸ்டருக்கு சபலம் ஏற்பட, அவள் அருகில் செல்வான். அந்தப் பெண், கோபமாகத் திட்டி அவனை வெளியே தள்ளுவாள். அவனுக்கு அவமானமாக இருக்கும். என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி நிற்பான்.

அப்போது சர்க்கஸ் மானேஜர் அங்கு வருவார். இன்றைக்கு மாஸ்டரின் காட்சி இருக்கிறதெனச் சொல்வார். உடனே மாஸ்டர், ‘`எப்படி, எனக்குத்தான் இன்னைக்கு நிக்குறதுக்கு ஆளில்லையே?'’ என்பார். மருத்துவமனைக்குச் சென்றவளின் தங்கை வந்து நிற்பாள் எனச் சொல்வார். ‘`அவளுக்கு இதுல பயிற்சியே இல்லயே!'’ என்பார் மாஸ்டர். ‘`அதெல்லாம் அவ அக்கா சொல்லிக்கொடுத்திருப்பா. அவதான் இன்னைக்கு வருவா!’’ எனச் சொல்லிச் செல்வார்.

அன்று மாலை தன்னுடைய கைகளை அகற்றி, தன்னுடைய கால்களை இறுக்கி, சிலுவையில் அறையப்பட்டது மாதிரி இவன் முன்னால் நிற்பாள் அவள். இப்போது ஒரு பெண் அதே 40-50 கத்திகளைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டுவாள். இப்போது ஒவ்வொரு கத்தியாக எடுத்து இவன் அவள்மீது வீச வேண்டும். வலது கை நகத்தை உரசிக்கொண்டு ஒரு கத்தி நிற்கும். மற்றொரு கத்தியும் இப்படி நெருக்கமாக இருக்கும். அவள் மனம் பதைபதைத்து நிற்பாள். அன்றைக்கு மாஸ்டர் வேறு ஒருவனாகக் கத்தியைச் சுமந்து நிற்கிற பெண்ணுக்குத் தெரிவான். ஒவ்வொரு கத்தியாக இவன் எடுத்து வீசுவான். எந்தக் கத்தி வேண்டுமானாலும் அவள்மீது வீசி அடிக்கப்படலாம். அது வேண்டுமென்று கிடையாது, அது ஆக்சிடென்ட். ஒரு நிகழ்ச்சியில் நடக்கின்ற விபத்து. அவமானத்துக்கு அவன் பழிவாங்கப் பார்க்கிறானோ?! அவன் கடைசிக் கத்தியை வீசுகின்ற வரையிலும் அந்தச் சர்க்கஸில் இருப்பவர்கள் அச்சத்தோடு காத்துக் கொண்டிருப்பார்கள். கொத்தாகத் சில கத்திகளை எடுத்து வீசுவான். ஆனால் கடைசிக் கத்தி வரையிலும் அவன் மிக நுட்பமாக அவள்மீது படாமல் அவளுடைய ஓவியம் மாதிரியான உருவத்திற்கு வெளியே வீசி முடிப்பான். இப்போது அந்தப் பெண்ணும் அவனும் ஒரு புன்னகையோடு அவரவர் வழியைப் பார்த்து நடக்க ஆரம்பிப்பார்கள்.

ஒரு அற்புதமான மனிதனின் உள்ளுணர்வைச் சொல்லக்கூடிய கதையாக என்.எஸ்.மாதவன் இந்தக் கதையை எழுதியிருப்பார். காலையில் நடந்த அவமானத்துக்காக ஏன் அவன் பழிவாங்கவில்லை. இத்தனை நடந்த பிறகும் அந்தப் பெண் ஏன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். இந்த இரண்டும் முக்கியக் கேள்விகள். மனித மனம் எந்தத் தீர்மானத்தை எப்போது எடுக்கிறது. எதை மன்னிக்கத் தோன்றுகிறது, எதற்கு வஞ்சிக்கத் தோன்றுகிறது. அன்பு, வெறுப்பு, பகைமை, காதல், அகங்காரம் என மனம் பூசிக்கொள்கிற அத்தனையுமே அரிதாரங்கள்தானா? பல வருடங்களாக ஏன் யாரோ ஒருவரை மன்னிக்காமல் இருக்கிறோம். பெரிய துரோகத்தை மறந்து அணைத்துக் கொள்கிறோம்.

இத்தனையும் நிகழ்த்திவிடுகிற மனம் பெரிய மாயாவிபோல எனக்குத் தோன்றும். சகலத்தையும் மன்னிக்கிற, நேசிக்கிற மனிதர்களால்தான் அத்தனை நன்மைகளும் நடக்கின்றன. மனதில் படிந்திருக்கிற அத்தனை கீழ்மைகளையும் நொடியில் துடைத்தெறிகிற மின்னல் பொழுதுகளால்தான் பிரபஞ்சம் செழித்து நிற்கிறது. அந்த நொடிப்பொழுதில் நிகழ்கிறவைதான் அற்புதமென்றால், அதன் பிரகாசம் அத்தனை மனங்களிலும் எப்போதும் தங்கி நிற்கட்டும்.

- கரம்பிடித்துப் பயணிப்போம்...