சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வடக்கத்திக் கள்ளன் - சிறுகதை

வடக்கத்திக் கள்ளன் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
வடக்கத்திக் கள்ளன் - சிறுகதை

- சசி

நல்லகுண்டாவிலிருந்து ஆட்டோ பிடித்து காச்சிகுடா ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்த போது மாலை மணி நாலே கால் ஆகியிருந்தது. சரியாக ஐந்து மணிக்கு காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும்.

ஹைதராபாத்திலிருந்து சென்னைக்குச் செல்ல கடந்த இரண்டரை வருடங்களில் இந்த ஸ்டேஷனுக்கு வருவது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு இந்தத் தடத்தைப் பற்றி நான் சரிவரக் கேள்விப்பட்டதேயில்லை. அவசரத்திற்கு சார்மினாரில் டிக்கெட் கிடைக்காமல்போகவே, குமாரன் தம்பி ஆலோசனைப்படிதான் இந்த ரயிலுக்கு முன்பதிவு செய்தேன். ஹைதராபாத் பேகம்பெட்டில் ஒரு சிறிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் என்னுடன் பணிபுரியும் சக ஊழியர் மற்றும் எங்கள் ஆஸ்தான ஆசான் குமாரன் தம்பி.

திருச்சூரைச் சேர்ந்த கேரளத்துக்காரர் அவர். குடும்பத்தைப் பிரிந்து தனியாக இருக்கிறார் என்பதைத் தவிர வேறு எதுவும் யாருக்கும் தெரியாது. நாங்கள் கேட்டதும் இல்லை, அவரும் சொன்னதில்லை. குமாரன் தம்பியை எல்லோரும் குமாரன் என்றும், வெகுசிலர் தம்பி என்றும் அழைப்பார்கள். நான் அவரை ஆசான் என்றும் சிலசமயம் குமாரன் ஆசான் என்றும் சொல்வேன். குமாரன் ஆசான் என்று கூப்பிடும்போதெல்லாம் அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். “டேய் பையா... ஒண்ணு, குமாரன்னு கூப்பிடு. இல்ல ஆசான்னு சொல்லிக்கோ. என்ன குமாரன் ஆசான்னு விளிச்சு அந்தப் பேரை அசிஙகப்படுத்தாதே. குமாரன் ஆசான் யாருன்னு உனக்குத் தெரியுமா, மகா கவி அவர்” என்று திட்டுவார்.

வடக்கத்திக் கள்ளன் - சிறுகதை
வடக்கத்திக் கள்ளன் - சிறுகதை

ரயில் நிலையம் வந்து சேர்ந்த சில நிமிடங்களில் குமாரன் தம்பியின் போன்.

“பொருள் பத்திரமா இருக்கா?”

“இருக்கு ஆசானே, பேக்ல வெச்சி ஜிப்பை லாக் பண்ணியிருக்கேன்.”

பொருள் என்றதும் தேவையில்லாத கற்பனையை வளரவிட வேண்டாம். அவர் பொருள் என்று சூசகமாகக் குறிப்பிட்டது நான் வைத்திருந்த சுருக்குப்பை. அதற்குள் முப்பது சவரன் நகை. ஒரு ரெட்டை வட செயின், இரண்டு ஜோடி ஜிமிக்கி கம்மல், கல் பதித்த, பழனி முருகன் டாலர் இணைத்த தாலிக்கொடி, நாலு ஜோடி வளையல்கள், ரெண்டு மூக்குத்தி செட். எங்கள் மொத்தக் குடும்பச் சொத்து மற்றும் காவல் தெய்வம் இது. அதுமட்டுமல்ல, எங்களுக்கு இந்தியன் பேங்க், கனரா பேங்க் அப்புறம் வேர்ல்டு பேங்க் எல்லாமே இந்த நகைகள்தான். கஷ்டம் வரும்போதெல்லாம் இது அடகுக்கடைக்குப் போகும். அதில் சிலது மூழ்கி மிச்சம் திரும்பி வரும். இப்படியே முப்பத்தியேழு சவரன் சுருங்கி இப்போது முப்பது என்றாகிவிட்டது.

இந்தமுறை ஹைதராபாத் வங்கி ஒன்றிலிருந்து மீட்டெடுத்த இந்தக் குடும்பச் சொத்தை எப்படியாவது பத்திரமாக சென்னையில் இருக்கும் என் மனைவி வசம் ஒப்படைக்க வேண்டும், அவ்வளவுதான்.

“தியாகு, சைடு அப்பர் பெர்த்னு வேற சொல்ற. கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. இந்த ரயில்ல நிறைய கூட்டம் இருக்கும். அதுலயும் வடக்கத்திக் கள்ளன்மார் நிறைய பேர் ஏறுவானுங்க.” குமாரன் தம்பி போனில் இதைச் சொன்னதும் என் கையிலிருந்த ட்ராலி பேகை நடுங்கும் கைகளால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டேன்.

“பிரம்ம முகூர்த்தம் யோகசித்திக்கு மட்டுமல்ல, திருடனுக்கும் அதுதான் சரியான நேரம். விடிகாலைல நாம முழுத் தூக்கத்துல இருக்கும்போதுதான் அவனுங்க ஆட்டையப் போடுவானுங்க. அந்த நேரத்துல ரொம்ப உஷாரா இரு. அலாரம் வெச்சாவது எழுந்துக்க.”

குமாரன் தம்பி நான்கு மொழிகளில் ஸ்பஷ்டமாகப் பேசுவார். குவார்ட்டர் மானிட்டர் சரக்கு, ஒரு கைப்பிடி வறுத்த நிலக்கடலை இருந்தால் போதும். தத்துவங்கள் ஆலங்கட்டி மழைபோல் படபடவென்று கொட்டும். கேள்விகளுக்கெல்லாம் ரெடிமேடு பதில்கள் இருக்கும். எல்லாப் பிரச்னைகளுக்கும் சரியான தீர்வும் தருவார். கைமருத்துவம், புராணக்கதை, உலக அரசியல், நாட்டு நடப்பு, மார்க்சியம் இப்படி எல்லாமே அவருக்கு அத்துப்படி. “குமாரன், லேசா அஜீரணம்” என்று யாராவது சொல்லி முடிப்பதற்குள் அவர் மருத்துவம் ஆரம்பித்துவிடுவார். “ஒரு துண்டு சுக்கைத் தட்டி.. இத பாரு. சுக்குக்கு மாத்தா இஞ்சியெல்லாம் எடுக்கக் கூடாது. அது வேற. தயிருக்குப் பதிலா பால் உபயோகப்படுத்துற மாதிரி...” எங்களுக்கெல்லாம் அவர் சொல்வதே வேதவாக்கு.

“டேய் தம்பி, முட்டையில இருந்து குஞ்சு பொரித்து வெளிய வந்ததும் ஆமைக் குஞ்சுங்க மணல்ல இருந்து கடலைப் பாத்து ஓடும். நாம தண்ணியில மூழ்கிடமாட்டோம்னு அதுகளுக்கு எப்படிடா தெரியுது?! காக்காக் குஞ்சு அதோட கூட்டிலிருந்து ஹெல்மெட் இல்லாம கீழே குதிச்சா மண்டை ஒடஞ்சு சாக மாட்டோம்னு எப்படித் தெரிஞ்சுகிட்டுக் குதிச்சு, தானா சிறக விரிச்சுப் பறக்குது? விலங்கு, பறவைகளோட அந்த உள்ளுணர்வுதான் அதுகளை உயிரோடு வெச்சிருக்கும். மனுசனோட உள்ளுணர்வு அவனுக்கு நல்லது கெட்டது தெரிஞ்சிக்க உதவும்.” இப்படியெல்லாம் பேச ஆரம்பிக்கும் அவர், பின்னர் சுருதி கொஞ்சம் ஏறியதும் அர்த்தம் புரியாத மலையாளக் கவிதைகளைத் தொடையில் தாளம் தட்டியபடி ராகம் கூட்டிப் பாடும்போது கேட்பதற்கு சுகமாக இருக்கும்.

“தடிபட்ரி, யர்ரகுண்ட்லா, கடப்பா... இதெல்லாம் வரும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கோ. ஏன்னா, இந்த இடங்கள்லதான் திருட்டுப் பசங்க அதிகம் ஏறுவானுங்க. பக்கத்துல யாராவது வந்து உக்காந்துட்டு கூல் ட்ரிங்க்ஸ், பிஸ்கட் இது மாதிரி ஏதாவது கொடுத்தான்னா வாங்கிச் சாப்பிடாத. அவனுங்களுக்குத் திருட்டு ஒரு தொழில் மட்டும் தான். ஏழை பணக்காரன், நல்லவன் கெட்டவன்னு வித்தியாசம் பார்க்க மாட்டான். பொதுவாக, நம்ம சூட்கேஸ், பேக் இதையெல்லாம் காலால தள்ளிட்டே ரெண்டு மூணு கம்பார்ட்மென்ட் தாண்டி, அத்தோடயே ஓடற டிரெயின்ல இருந்து குதிச்சிடுவானுங்க” என்று பயமுறுத்தினார் குமாரன்.

காச்சிகுடா ஸ்டேஷனுக்கு வந்ததும் முதலில் நான் தேடியது, அங்கு எங்காவது பூட்டு செயின் கிடைக்கிறதா என்றுதான். ஆச்சரியமாக எங்கே பார்த்தாலும் பூட்டு செயின் விற்பவர்கள் திரிந்து கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் குமாரன் தம்பிக்கு போன் செய்து இது வாங்கியதைத் தெரிவித்தபோது ஏதோ ஜோக் கேட்டதுபோல சிரித்தார்.

“தியாகு, இந்தப் பூட்டு செயின் எல்லாம் அவனுங்க அரை செகண்டில் கட்டிங் பிளேயர் கொண்டு கட் பண்ணுவானுங்க. அதைத் தவிர அவன் தர பூட்டு எந்தச் சாவியைப் போட்டாலும் திறக்குற மாதிரிதான் இருக்கும். இது வெறுமனே நம்ம மனசுத் திருப்திக்கு மட்டும்தான். பாதுகாப்பெல்லாம் கிடையாது.”

ரயில் புறப்படும் பத்து நிமிடத்திற்கு முன் என் இருக்கைக்குச் சென்றபோது அங்கே இன்னொரு சீட்டில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். பார்த்தவுடனே அவன் ஒரு வடக்கத்தியன் என்று புரிந்துவிட்டது. பீகாரா, உ.பி-யா என்பது மட்டுமே சந்தேகம். என் ட்ராலி பேகை சீட்டுக்குக் கீழே, மேலிருந்து பார்த்தால் தெரியும்படியான இடத்தில் வைத்து செயின் போட்டுப் பூட்டினேன். என் அருகில் அமர்ந்திருந்த அந்த இளைஞனை மீண்டும் கவனித்தேன். வயது மதிப்பிட முடியாத ஒடுங்கிய உருவம். வெளிர் பச்சைநிற டி-ஷர்ட்டும் கறுப்பு பேண்ட்டும் அணிந்திருந்தான். அவன் கையில் ஒரு தோல் பையைத் தவிர லக்கேஜ் எதுவும் இல்லை. என்னைப் பார்த்ததும் பான்பராக் போட்டு காவி ஏறிய பற்களைக் காட்டிச் சிரித்தான்.

“சாப், எங்க போது?”

“நம்பள்கி சென்னை போறான்.” சொல்லி முடித்த பிறகுதான் அதில் ஒரு வார்த்தைகூட இந்தி இல்லை என்றே உறைத்தது. தமிழ் தெரியாத வடக்கத்தியர்களிடம் புரிய வைக்க வேண்டி அடகுக்கடை சேட்டுத்தமிழில் நாம் பேச முற்படுவதைப் போல ஒரு அவலம் வேறில்லை. “நீ எந்த ஊரு… என்னா வொர்க் பண்ணுது” என்று வேறு வழியின்றி அவனுக்குப் புரியும்படியான கொச்சைத்தமிழில் கேட்டதற்கு “பீகார் சே சாப். மேரா, பிஜிலிக்கா காம்” என்றான்.

பிஜிலியா? சரவெடியை உதிர்த்து விற்கப்படும் உதிரி பட்டாசைத்தான் நாங்கள் பிஜிலி என்று சொல்வோம். இவன் ஒருவேளை உதிரி வேலை செய்வதாகச் சொல்கிறானா? அப்புறமாக பேச்சு வாக்கில் புரிந்தது, அவன் ஒரு எலெக்ட்ரீசியன் என்று.

நம் சகபயணி பீகார்க்காரனா? கடைசியில் ஆசான் வாய் முகூர்த்தம் பலித்துவிட்டதா? வடக்கத்திக் கள்ளன்மார் இடையில் ஏறுவார்கள் என்றார். இவனோ என்கூடவே ஏறியிருக்கிறான். அவ்வப்போது அவன் என் ட்ராலி பேகை திரும்பிப் பார்ப்பதுபோலவேறு தோன்றியது. எப்படியாவது இவன் நகரும் சமயம் பார்த்து நகையுள்ள சுருக்குப்பையை ட்ராலி பேகிலிருந்து எடுத்து பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். அவனோ ரயில் புறப்பட்டதிலிருந்து அசைவதாகவே தெரியவில்லை.

இரவு எட்டரை மணிக்கு கர்நூல் ஸ்டேஷன் வந்ததும் “சாப், சாப்பாடு இர்க்கா... இங்க நல்லா உப்மா வடா மிலேகா” என்றான். நான் இருந்த கம்பார்ட்மென்டில் இருந்து பலர் ஓடிப்போய் சுடச்சுட உப்புமா வடை பொட்டலத்துடன் சூ..சூ என்று விரல்களை சூப்பியபடி சாப்பிடுவதைப் பார்த்து வாயில் எச்சில் ஊறியது. ஆனால் பையை விட்டு எப்படிப் போவது? என் எண்ணத்தைப் புரிந்துகொண்டதுபோல “பெட்டிய நான் பாக்குறேன். நீங்க போய் சாப்பாடு வாங்கு சாப்” என்றான் அவன். என் பேகின் மேல் ஒரு கண்ணாகவே இருக்கிறானோ?

“வேணாம். நான் சாப்பிட்டாச்சு” என்று சொன்னேனே தவிர வயிறு கடகட என்றது. வேறு வழியின்றி கையில் இருந்த மில்க் பிக்கீஸ் பிஸ்கட்டையும் தண்ணீரையும் குடித்துவிட்டு கண் பார்வையில் என் பை தெரியுமாறு, ஓரமாக அமர்ந்துகொண்டேன், ஏதேனும் ஆலோசனை பெறலாம் என்று குமாரன் தம்பிக்கு போன் செய்தால் ரிங் போய்க்கொண்டேயிருந்தது. மணி பார்த்த பிறகுதான், இந்நேரம் ஆசான் மட்டையாகிச் சரிந்திருப்பார் என்று ஞாபகம் வந்தது.

இப்போது அவன் கையில் இருந்த பாதி ஜிப் அறுந்த ஒரு கிழிந்த தோல் பையைத் திறந்து சின்ன ப்ளாஸ்டிக் கவர் ஒன்றை வெளியே எடுத்தான். திறந்திருந்த அவனது கைப்பைக்குள் அனிச்சையாக எட்டிப் பார்த்தபோது அதற்குள்ளே பச்சை ஸ்வெட்டர், ஒரு ஜோடி ரப்பர் செருப்பு. அப்புறம் ஒரு சிவப்புநிற டேப் சுற்றிய கட்டிங் பிளேயர்! ‘அரை செகண்ட்ல கட்டிங் பிளேயர் கொண்டு திறந்திடுவானுங்க’ என்ற ஆசான் குரல் காதில் மீண்டும் ஒலித்தது.

அவன் வெளியே எடுத்த பிளாஸ்டிக் கவருக்குள் இரண்டு வறட்டுச் சப்பாத்தி. இன்னொரு சின்ன பிளாஸ்டிக் பையில் கொஞ்சம் மிக்சர்.

“தோடா மிக்சர் காவோ, சாப்” என்று பிளாஸ்டிக் கவரை நீட்டினான்.

“நோ... நஹி சாயியே...” என்றேன் பயத்தில். ஆசான் வாக்கு வேத வாக்கு. அவன் சாப்பிட்ட உணவுக்குக் கை கழுவும் வேலையே இல்லை. நகர மாட்டானோ என்று யோசிக்கும் சமயம் திடீரென்று பிளாஸ்டிக் பைகளை எடுத்தபடி எழுந்து டாய்லெட் பக்கம் போனான். கண்ணிமைக்கும் வேகத்தில் பேகிலிருந்து சுருக்குப்பையை வெளியே எடுத்து என் பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தினேன். அதற்குப் பிறகு அவன் என் பேண்ட் பாக்கெட்டையே அடிக்கடி உற்றுப் பார்ப்பதைக் கவனித்தேன். கூடுமானவரை அவனிடம் பேசுவதைத் தவிர்ப்பதென்று முடிவு செய்தேன்.

ஒவ்வொரு ரயில் நிறுத்தத்திலும் ஏராளமான பயணிகள் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தார்கள். என் இருக்கை வாசலுக்கு அருகில் வேறு இருந்ததால் எப்போதும் ஒரே களேபரமாகவே காட்சியளித்தது. தெலுங்கு, அது தவிர, இந்தி, உருது என்று கலவையாக பலரும் போனிலும் தங்களுக்குள்ளும் பேசும் சத்தம். எப்போதும்போல் இல்லாமல் இன்றைக்கு ஏனோ தூக்கம் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

இரவு பத்தரை மணிக்கு பெர்த்தில் ஏறி செட்டில் ஆனதும் போனில் அதிகாலை மூன்று மணிக்கு அலாரம் வைத்தேன். தூங்குவதைத் தவிர்க்க நினைத்தேனே தவிர அதற்குப் பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. செண்டை மேளச்சத்தம் நடுவே அந்த பீகார்க்காரன் ‘ஞான் வடக்கத்திக் கள்ளனல்லே... என்டே’ என்று மலையாளப் பாட்டை காவிப்பல் தெரியச் சிரித்தபடி பாடுவதுபோல கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்தபோதுதான் மொபைல் போனில் அலாரம் சரியாக செட் ஆகவில்லை என்று புரிந்தது.

காலை ஐந்து மணி. ரயில் ஏற்கெனவே அரக்கோணம் ஸ்டேஷனைக் கடந்திருந்தது. படபடப்புடன் கீழே பார்த்தபோது செயின் மாட்டிய என் ட்ராலி பேக் பத்திரமாக அதே இடத்தில். பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்துப் பார்த்தபோது காலியாக இருந்தது. நகை இருந்த சுருக்குப் பையைக் காணோம். கீழ் பெர்த் ஆள் அரவமின்றி வெறிச்சோடியிருந்தது. அந்த பீகார் பையனும் அங்கே இல்லை. ரயில் சத்தத்தை மீறி என் இதயத் துடிப்பை உணர முடிந்தது.

ரயிலுக்குள்ளேயே அங்கே இங்கேயென்று இரண்டு மணி நேரம் இலக்கில்லாமல் பித்துப்பிடித்தது போல எல்லாப் பெட்டிகளிலும் சுற்றித் திரிந்து என் சுருக்குப்பையையும் அந்த பீகார் பையனையும் தேடிக்கொண்டிருந்தேன்.

வடக்கத்திக் கள்ளன் - சிறுகதை
வடக்கத்திக் கள்ளன் - சிறுகதை

சென்னை எழும்பூர் ஸ்டேஷன் வந்து சேர்ந்ததும் மூச்சிரைக்க ஓடிச்சென்று ஒரு ஆர்.பி.எப் கான்ஸ்டபிளை அணுகினேன். அவர் என்னை அங்கிருந்த ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றபின், புகாரை எழுதி வாங்கிய ஸ்டேஷன் அதிகாரி மிகவும் சாவதானமாக கேள்விகளைக் கேட்டார். தூக்கக் கலக்கம் அவரது முகத்திலும் குரலிலும் படிந்திருந்தது.

“உங்க பேரு?”

“தியாகு... தியாகராஜன்.”

“அந்தத் தம்பி எங்கே இறங்கினார்னு சொன்னீங்க?”

“சரியாத் தெரியல சார். காலையில மூன்றிலிருந்து நாலரைக்குள்ள எங்கேயோ இறங்கியிருப்பான்னு தோணுது.”

“அவ்வளவு நேரம் பேசிட்டிருந்ததா சொன்னீங்க. அந்த ஆளைக் குறித்து எதுவுமே கேட்கலையா?”

“இல்ல சார். இந்திக்காரன்... பேசுறது ஒண்ணும் புரியலை.”

“ஆள் பீகார். எலெக்ட்ரீசியன்... இதெல்லாம் மட்டும் உடனே கண்டுக்கிட்டீங்க. அவன்தான் எடுத்திருப்பான்னு எப்படி உறுதியா சொல்றீங்க?”

“அது வந்து.. அவன் பேக்ல கட்டிங் பிளேயர், ஸ்க்ரூ டிரைவர் இதெல்லாம் இருந்தது.”

“அட, அதுக்கென்ன? அந்தப் பையன் எலெக்ட்ரீசியன்னுதானே சொன்னீங்க, அப்புறம்? சார், இதப் பாருங்க. திருடன் யாரும் ரிசர்வேஷன் டிக்கெட் போட்டு வர மாட்டான். அப்படியே இருந்தாலும் அது ஃபேக் அட்ரஸ்லதான் இருக்கும். முயற்சி செய்து பார்ப்போம்.”

“எப்படி சார் கண்டுபிடிப்பீங்க?”

“ரிசர்வேஷன் ஃபார்ம்ல கண்டிப்பா ஏதாவது போன் நம்பர் இருக்கும். அத முதல்ல ட்ரேஸ் பண்ணுவோம். ரேணிகுண்டா இல்ல அதுக்கு முன்னாடி ராஜம்பேட்டைனு ஒரு சின்ன ஸ்டேஷன் வரும். இது ரெண்டுல ஏதோ ஒண்ணுலதான் இறங்கியிருப்பான். பார்க்கலாம்.”

வடக்கத்திக் கள்ளன் - சிறுகதை

ஒரு அரைமணி நேரம் கழித்துத் திரும்பி வந்த அவர் என்னை ஒரு மாதிரி தீர்க்கமாகப் பார்த்தபடி காதில் ஒட்டிய மொபைல் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். ஐந்து நிமிடங்கள் கழித்து மேல் சட்டைப்பையில் மொபைல் போனை வைத்தபடி என்னிடம் வந்தார்.

“சார். என்ன ஆச்சு?” பதைபதைப்புடன் கேட்டேன்.

“பார்ட்டிய புடிச்சாச்சு. போன் பண்ணி ராஜம்பேட்டை லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வெச்சிட்டோம்.”

“நகை கிடைச்சதா?”

“அவன்கிட்ட நகை எதுவும் இல்லையாம்.”

“என்னது, நல்லா விசாரிக்கச் சொல்லுங்க சார், பொய் சொல்றானா இருக்கும்?”

“ஆனா, அவன் இறங்கறபோது பெர்த்துக்குக் கீழே ஒரு சுருக்குப்பை கிடக்கிறதப் பார்த்தானாம்.”

“அதை அவன் எடுக்கலையாமா, இது நம்ப முடியாத அநியாயமா இருக்கே?”

“பதற்றப்படாம பொறுமையா இருங்க. அவன் எங்கேயும் போயிடல. விசாரிப்போம். அதைப் பார்த்ததும் உங்களோட பேண்ட் பாக்கெட்ல இருந்துதான் விழுந்திருக்கும்னு அவனுக்குப் புரிஞ்சிடுச்சாம்.”

“அதனால?”

“நீங்க அசந்து தூங்கிட்டிருந்தீங்களாம். லேசா தட்டி உங்களை எழுப்பினானாம். நீங்க...”

“கதை அடிக்கிறான் சார். என்னை லேசா தட்டினானா? அவனை நல்லா நாலு தட்டு தட்டினா உண்மை வெளிய வரும்...”

“சார், அவசரப்படாதீங்க. உங்க பேக் முழுக்க நல்லா செக் பண்ணுனீங்களா?”

“பேக்ல இருக்க சான்ஸே இல்ல சார். பேண்ட் சைடு பாக்கெட்லதான் நகைப்பையை வச்சிருந்தேன். இருந்தாலும் பேக் உள்ளேயும் செக் பண்ணிட்டேன். ரயில்ல எல்லா பெட்டியிலேயும் தேடிப் பாத்துட்டேன். எங்கேயுமே கிடைக்கல. கண்டிப்பா அவன்தான் என் பாக்கெட்டுக்குள்ள கையை விட்டு எடுத்திருப்பான்.”

“அப்படியா சொல்றீங்க?”

“ஆமா சார்.”

“கொஞ்சம் உங்க பேக்ல சைடு ஜிப்ப திறந்து பாருங்க!”

“சைடு ஜிப்லயா, சான்ஸே இல்ல!” என்று சொல்லிக்கொண்டே பையின் புடைத்திருந்த பக்கவாட்டு ஜிப்பைப் படபடப்புடன் இழுத்தேன். உள்ளே சுருக்குப்பை இருந்தது. திறந்தேன். அனைத்து நகைகளும் வைத்தது போல் அதற்குள் அப்படியே.

“எப்படி சார் இது?!”

எப்படி இது நடந்தது என்று ஆர்.பி.எப் ஆய்வாளர் விவரித்தார்.

“நீங்க மேல் பெர்த்துல புரண்டு படுக்கும்போது சுருக்குப்பை கீழே விழுந்திருக்கும்போல. அவன் இறங்குற ராஜம்பேட்டை ஸ்டேஷன் வந்தபோது அதைப் பார்த்திருக்கான். ரயில் அங்க சரியா ஒரு நிமிஷம்தான் நிக்கும். அதை எடுத்து உங்க பாண்ட் பாக்கெட்டில வெக்கலாம்னா, பாக்குறவங்க தப்பா எடுத்துப்பாங்கில்ல... அதுக்குள்ள ரயிலும் கிளம்பவே, உங்க பேக் சைடு ஜிப்புல அவசரமா செருகிட்டு சட்டுனு இறங்கிட்டானாம். எனக்கு என்னவோ இந்தப்பையில இருந்தது நகைகள்னு அவனுக்குத் தெரியும்னுதான் தோணுது.”

அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியாமல் நான், “எப்படி சார் சொல்றீங்க?”

“அதையும் சொன்னானே, ‘சாப் சாப்பாடுகூட வாங்காம ராத்திரியெல்லாம் பேண்ட் பாக்கெட்டை கெட்டியா பிடிச்சிட்டே இருந்தார்’னு” என்று சொல்லிச் சிரித்தார். “ஓகே... நகையெல்லாம் சரியா இருக்குதுன்னு கன்பார்ம் பண்ணிட்டு நீங்க கம்ப்ளைண்ட திருப்பி எடுத்துக்கிட்டா அவன ஸ்டேஷன்ல இருந்து ரிலீஸ் பண்ணிடலாம்” என்றார் ஆர்.பி.எப். அப்போது அவர் செல்போன் மீண்டும் அடிக்க “அங்க இருந்துதான் போன்” என்று என்னிடம் சைகையில் சொல்லிவிட்டுப் பேசினார்.

“ஓகே, ரிலீஸ் ஹிம் சார், கம்ப்ளைண்ட் இஸ் வித்ட்ரான், ஓ, இஸ் இட்...” என்று என்னைப் பார்த்து “அந்தப் பையனுக்கு உங்க கிட்ட ஏதோ கொஞ்சம் பேசணுமாம். அந்தத் தம்பி பேர் பகவான் சிங்.”

தயக்கத்துடன் போனைக் காதில் பொருத்தினேன்.

“மாப் கர்னா சாப், மேரா கல்த்தி ஓகயா”, என்றவனை இடைமறித்து பதில் சொல்லத் தெரியாமல் “நை... கோயி பாத் நை... மேரா மிஸ்டேக்” என்று மட்டும்தான் சொல்ல முடிந்தது. என் ஒவ்வொரு மயிர்க்காலிலும் கூச்சமும் அவமானமும் பொங்கி வழிந்து என்மீது எனக்கே அருவருப்பாக இருந்தது.

அவன் என்னை மன்னிப்பதா, நேரில் பார்த்திருந்தால் சாஷ்டாங்கமாக அவன் காலில் விழுந்திருப்பேன். நேர்மையும் அறமும் பூகோளம், மொழி சார்ந்ததல்ல என்று எனக்குப் புரிந்த தருணமது.

“சாப். நீங்க நைட் பூரா ஒண்ணும் சாப்ட்லே. கானா காவோ சாப். கபி பீகார் ஆனேஸே, அமாரா காவ் ஆஜாவ். பீகார்லே கங்கா கினாரேமே... அமாரா பரிவார்... ஏக் சோட்டா கர்…” என்று சொல்லிக்கொண்டேபோனான். பாதி புரிந்து மீதி என்னால் யூகிக்க மட்டுமே முடிந்தது. நேரம் கிடைக்கும்போது போன் செய்துவிட்டு எங்கோ பீகாரில் ஒரு மூலையில் கங்கைக் கரையோரம் அவன் குடும்பம் வசிக்கும் குடிசைக்கு வரச் சொல்லி பகவான் சிங் அவன் பாஷையில் அழைப்பு விடுத்திருந்தான். போனை கட் செய்தபோது இன்னொன்றும் தெளிவானது. மனிதம் என்பது மனம் சம்பந்தப்பட்டது மட்டுமே.

ஹைதராபாத் திரும்பியபின் ஒரு மாலைப்பொழுதில் குமாரன் ஆசானை ஒரு குவார்ட்டர் மானிட்டருடன் சந்தித்து, இந்தக் கதையை விலாவாரியாக...

இந்த ஒரு முறை நான் பேசி அவர் கேட்க வேண்டும்.