மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 37

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 37
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 37

“வெல்வதும் கொல்வதும் பகையாளியைத்தான்; பகையை அல்ல!”- மூர்க்கர்கள்

சுப்பிரமணியன் வக்கீலிடம் கூலிக்குச் சரணடையும் ஆட்கள் நிறைய பேர் இருந்தார்கள். யாருடைய குற்றங்களுக்காகவோ சரணடையப் போகும் அவர்களின் எதிர்காலம் குறித்து அவர்களுக்கோ, அவர்களின் குடும்பத்தினருக்கோ எவ்வித அச்சமும் இருக்கவில்லை. வக்கீல் சுப்பிரமணியனை நம்பி அவர்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தார்கள். தங்களின் சாதியைச் சேர்ந்த பெரிய ஆட்களுக்குத் தங்களால் செய்யத் தகுந்த உதவியாகவே அதைப் பார்த்தார்கள். சுப்பிரமணியன் வக்கீலும் பெரும்பாலும் இரண்டுக்கு மேல் பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு, அவர்களைக் கரையேற்ற முடியாமல் விசனப்படும் அண்ணன்கள், அப்பாக்களைத்தான் குறிவைத்திருந்தார்.

“ஒண்ணுக்கு நாலு பொட்டப் பிள்ளைகளாச்சு. என்ன செய்றது... கரையேத்த வக்கில்லையே...” என்று சுப்பிரமணியனிடம் வந்து சரண் புகும் அவரின் சாதியைச் சேர்ந்த ஆட்கள் ஏராளம். கைது, போலீஸ் கேஸ், கைவிலங்கு, கோர்ட் படியேறினால் அசிங்கம் என்று எதைக் குறித்தும் விசனப்படாதவர்களாக இருந்தால் சுப்பிரமணியன் அவரை நம்பி வந்தவர்களைக் கரையேற்றிக் கொடுப்பார்.

கேஸ் வாங்கிக்கொண்டு அவர்கள் தண்டனைக் கைதியாக சிறைக்குள் இருக்கும் நாள்களில் சுப்பிரமணியன் வக்கீல் முன்னின்று அந்தக் குடும்பத்தின் நல்லது கெட்டதுகளைப் பார்த்துக்கொள்வார். முடிந்தால் அந்த நல்ல, கெட்ட விசேஷங்களில் கலந்துகொள்வதற்கு, ஜாமீன், பரோல் போட்டு அவர்களை வெளியே கொண்டுவரவும் செய்வார். அந்த விசேஷங்களுக்கு ஆகும் மொத்தச் செலவையும் யாருக்காகச் சிறைக்குள் போனார்களோ, அந்தப் பெரிய மனிதர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவர்களும் சும்மா இல்லை. இதுதான் சாக்கென்று கேஸுக்காகச் சிறையிலிருக்கும் அந்த ஆறேழு வருடங்களில் எல்லா அக்கா, தங்கச்சிமார்களுக்கும் கல்யாணம் காட்சியை நடத்தி முடித்துவிடுவார்கள். அவர்களும் கல்யாணம் முடிந்த கையோடு வேக வேகமாக வயிற்றைத் தள்ளிக்கொண்டு வந்து நின்றால், சீமந்தத்துக்குப் பத்து வகைச் சோறு, பணியாரப் பெட்டி, அதிரசப் பெட்டி, முறுக்குப் பெட்டி என்று மலைபோலப் பண்டங்கள் சாப்பிட ஆளில்லாமல் சீரழிய, எக்கச்சக்கமாகச் செலவுகள் இழுத்துவைக்கப்படும். கோவில்பட்டிப் பக்கம் ஒருவர், தன் தண்டனைக் காலம் முடிந்துவிடும் என்பதற்காக, தன் பதிமூன்று வயதேயான மகளுக்குக் கல்யாணம் செய்துவைத்திருந்தார்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 37
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 37

எப்போதாவது சில நேரங்களில் பெரிய மனிதர்களும் தங்கள் வாக்கைக் காப்பாற்றத் தவறுவது உண்டு. அந்த நேரத்தில் வக்கீல் சுப்பிரமணியன் தன் கைக்காசைப் போட்டு, அந்த விசேஷங்களைக் குறைவில்லாமல் நடத்தி முடித்துக்கொடுப்பார். அதனால்தான் சுற்றுவட்டாரங்களில் சுப்பிரமணியன் வக்கீலுக்கு அவர் சாதியைச் சேர்ந்தவர்களிடையே நல்ல செல்வாக்கு இருந்தது.

சிறைக்கு உள்ளேயும் அவருக்கு அப்படியான செல்வாக்கு உண்டு. சரணடைபவர்களின் மேல் தூசு துரும்பு அண்டாமல், சிறை வார்டன்களின் கையே படாமல் பார்த்துக்கொள்வார். வாரத்துக்கு இரண்டு முறை துண்டுகள் கிடக்கும் கறிக்குழம்பும், நல்ல கஞ்சா சிகரெட்டும் சிறைக்குள்ளேயே கிடைக்கச் செய்வார். நான்கைந்து வருடங்களுக்கு முன்பு, சமுத்திரம் ஒரு கேஸில் உள்ளே இருக்கும்படி ஆகிவிட்டது. அந்த நேரத்தில் ரோசம்மாளை இரண்டு மூன்று நாள்கள் அவனுடன் தங்குவதற்கு உள்ளே அனுப்பிவைத்தார் வக்கீல் சுப்பிரமணியன். உடனிருந்த ஆட்களையெல்லாம் வேறு செல்லுக்கு மாற்றிவிட்டு, அந்த செல்லின் கதவு, ஜன்னல்களைக் கனத்த போர்வைகளால் மூடிவிட்டு மூன்று நாள்கள் உள்ளே சரீர போக விருந்து நடந்தது சமுத்திரத்துக்கு. அப்படியிருந்த வக்கீல் சுப்பிரமணியனிடம் இப்போது தலைகீழ் மாற்றம். காசி அண்ணாச்சி, தன் சாதிக்காரர் என்பதற்காக அவ்வளவு பழகியிருந்தும் சமுத்திரத்தைக் கோர்ட் வாசலில் வெட்டிச் சாய்க்க ஆள் ஏற்பாடு செய்திருக்கிறார்.

வக்கீல் சுப்பிரமணியனுக்கு இன்னும் உள்ளுக்குள் உதறல் எடுத்துக்கொண்டிருந்தது. சமுத்திரத்துக்கு நிச்சயம் தெரிந்துவிட்டது. அவன் வெகு சீக்கிரமே தன்னை வெட்டிச் சாய்க்க வந்துவிடுவான் என்று பயந்தார்.

பிளசர் கார் தூத்துக்குடி பெரியாஸ்பத்திரி வாசலுக்கு வந்து நின்றது. சமுத்திரமும், பெரிய பர்லாந்தும் அவசர அவசரமாக உள்ளே போனார்கள். கம்பவுண்டர் செல்வம் அவர்களை ரோசம்மாள் இருந்த அறையை நோக்கி அழைத்துப்போனார். சற்று தூரத்தில் வராண்டாவில் ரோசம்மாளின் கணவர் மரியதாஸ் நின்றுகொண்டிருந்தார். சமுத்திரத்தைப் பார்த்ததும் எரிச்சலோடு அவர் முகத்தை வேறு எங்கோ திருப்பிக்கொண்டார்.

ரோசம்மாளுக்குக் கழுத்தில் மருந்து வைத்து, பெரிதாகக் காடாத்துணியைச் சுற்றிக் கட்டுப் போட்டிருந்தார்கள். அவள் இன்னும் மயக்கத்தில்தான் இருந்தாள். அறையின் ஒரு மூலையில் பனிமலர் குத்துக்காலிட்டு அமர்ந்து, தலைகுனிந்தபடி அழுதுகொண்டிருந்தாள்.

“ரோசம்மா... ஹேய்... இந்தா ரோசம்மா... சமுத்திரம் வந்திருக்கேன்...” மெல்லிய குரலில் பேசினான். அவன் கண்களில் எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடும் என்பதுபோல கண்ணீர் அணைகட்டி நின்றது.

சத்தம் கேட்டு பனிமலர் தலையை நிமிர்த்திப் பார்த்தாள். பெரிய பர்லாந்தைப் பார்த்ததும் எழுந்தவள், சமுத்திரம் தன் அம்மாவுக்கு அருகில் நிற்பதைப் பார்த்ததும் எரிச்சலானாள்.

“ஒண்ணும் கவலைப்படாதம்மா. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்’’ பெரிய பர்லாந்து சொன்ன அடுத்த நொடியே பனிமலர் விம்மி அழத் தொடங்கினாள்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 37
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 37

“எங்க அம்மைக்கி ஏதாவது ஆச்சுன்னா நாங்க என்னத்துக்கு ஆவோம்... பாருங்க, நல்லா கெதியா நடமாடிட்டு இருந்தவள எப்படி வெட்டிக் கிடத்திட்டானுவன்னு. உங்க சண்டைக்கு எங்க அம்மைய நாங்க சாகக் குடுக்கணுமா... அந்த ஆள எங்க அம்மைய விட்டுட்டு எங்கேயாவது போகச் சொல்லுங்க... போதும், ஊரும் உலகமும் அவளுக்கு அவுசாரிப் பட்டம் கொடுத்து, நாங்க அசிங்கப்படுறது.”

சமுத்திரம் அமைதியாக நின்றான். அதுவரை பர்லாந்தைப் பார்த்துக் கத்திக்கொண்டிருந்த பனிமலர், இப்போது நேரடியாக சமுத்திரத்தைப் பார்த்தே கேட்டாள். “என்னிக்காவது எங்கப்பாவப் பத்தி நினைச்சுப் பாத்திருக்கீங்களா... அவரும் மனுஷன்தானே... எதையெல்லாம் அவரு தாங்கிக்கிட்டு இருக்காருன்னு தெரியுமா?”

சமுத்திரம், ரோசம்மாளின் முகத்தைப் பார்த்தவாறு அமைதியாக இருந்தான். அதற்குள் ஜானும் ராமும் அந்த அறைக்குள் நுழைந்தார்கள்.

“என்னாச்சுனு இப்போ கத்திக்கிட்டு கிடக்க...” பனிமலரை அதட்டிய ஜான், சமுத்திரத்தையும், பெரிய பர்லாந்தையும் பார்த்து நிதானமான குரலில் சொன்னான். “டாக்டரு உயிருக்கு ஒண்ணும் பிரச்னை இல்லன்னு சொல்லிட்டாரு.பன்னருவாளால கழுத்துல வெட்டிருக்கானுவ. நான் அங்க உங்களைத் தேடி வந்தப்போ ஒருத்தன் தோணிலயிருந்து தண்ணிக்குள்ள குதிச்சு ஓடுனான். அவசர அவசரமா தோணி மேல ஏறிப் போயி பாத்தா, அம்மை ரெத்தவெள்ளத்துல கிடந்தா. கழுத்துல பதிஞ்ச அருவாளோட இங்க தூக்கிட்டு ஓடியாந்து சேத்தேன்...” வார்த்தைகள் தடுமாற ஜான் தொடர்ந்து பேசினான். “ஆனா, வெட்டு விழுந்த விதத்தைப் பார்த்தா யாரோ பழக்கமில்லாத புது ஆளா இருப்பான்னு தோணுது. அருவாள பயத்துல பிடிச்சுருப்பான்போல... வெட்டு மேலாக்குல பதிஞ்சு நின்னுடுச்சு.” சமுத்திரம் அது யாராக இருக்குமென்ற யோசனைக்குள் மூழ்கினான்.

“இன்னொரு விஷயம். உங்களுக்கு வஸ்தாவின்னு யாரையும் தெரியுமா?”

ஜான் அப்படிக் கேட்டதும் சமுத்திரம் சட்டென்று அவனை ஏறிட்டுப் பார்த்தான்.

“நீங்க பொறந்த ஊர்லருந்து வந்திருக்கேன்னு சொன்னாரு. அங்க பழைய எம்.எல்.ஏ காசி அண்ணாச்சி இருப்பார்ல... அவரு உப்பளத்துல நிறைய ஆட்களோட வந்து தங்கியிருக்காரு. உங்களை வெட்டிச் சாய்க்கத்தான் வந்துருக்காராம். ஏதோ பழைய பகைன்னு...”

“உன்ன எப்படி அவருக்குத் தெரியும்?”

“அது தெரியல. கூட காசி அண்ணாச்சியும் நின்னுக்கிட்டு இருந்தாரு.”

பெரிய பர்லாந்து, ‘யார் அது...’ என்பதுபோல் பார்த்தார்.’’

“இது பழைய ஊர்ப் பகை. அந்தக் காயம் ஆறி, தழும்பா மாறிடுச்சுன்னு நினைச்சேன். இன்னும் ஆறாம சீழ்க் கட்டி, கடுத்துக்கிட்டுத்தான் இருக்குபோல.’’

சமுத்திரம் மனதுக்குள் ஏதோ திடமாக முடிவெடுத்தவனாக, காசி அண்ணாச்சியின் உப்பளத்துக்குக் கிளம்பத் தயாரானான். பெரிய பர்லாந்தும் அவனுடன் புறப்பட்டார்.

இருவரும் அந்த அறையைவிட்டு வெளியே வரும்போது, பெரிய பர்லாந்தின் மகள் அமலி அவர்களுக்கு நேர் எதிராக நடந்து வந்துகொண்டிருந்தாள். அமலி, தன் அப்பாவை முதலில் கவனிக்கவில்லை. இருவரும் கிட்டே நெருங்கியபோது ஒருவரையொருவர் பார்த்துவிட்டார்கள்.

அமலிக்குத் தன் அப்பாவை அங்கு வைத்துப் பார்த்ததும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பேச்சு மூச்சில்லாமல் அப்படியே உறைந்து நின்றாள்.

(பகை வளரும்...)