
“கோபக்காரனின் அன்பு யார் மனதையும் தொடுவதில்லை”- மூர்க்கர்கள்
தூத்துக்குடி பெரியாஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும்போதே ரோசம்மாள் சமுத்திரத்திடம் கறாராகச் சொல்லிவிட்டாள். “சனியன் போகட்டும்... அதான் உயிரோடதான இருக்கேன்... நீ எவனயும் வெட்டுறேன், குத்துறேன்னு சொல்லிட்டு எங்கயாவது போயிடாத. நான் உன்னைத் தோணியில வந்து நெதமும் பாக்கேன்.”
“ம்ம்... உனக்கு உடம்பு சரியாகுற வரைக்கும் நீ எங்கனயும் அலைய வேண்டாம். நானே உன்னப் பாக்க வர்றேன்.’’
சமுத்திரம் வருவது மரியதாஸின் மனதை நிச்சயம் காயப்படுத்தும் என்ற நினைப்பில், ரோசம்மாள், ``அதெல்லாம் வேண்டாம்’’ என்று மறுத்தாள். சமுத்திரமும் பேருக்குச் சரி என்பதுபோல் தலையாட்டிவிட்டு அங்கிருந்து திரும்பினான்.
அடுத்த நாள் அதிகாலையே கறிக்கடைக்குச் சென்று ரோசம்மாளுக்காக நல்ல இளங்கறியும், சுவரொட்டியும் வாங்கினான் சமுத்திரம். கூடவே, அடுத்த இரண்டு வாரங்களுக்கு நெதமும் சுவரொட்டி எடுத்துவைக்கச் சொன்னான். ‘`புதன், சனி, ஞாயிறு மட்டும்தான் கடா உரிப்போம் நெதம் சுவரொட்டிக்கு எங்க போக...’’ என்று தயக்கத்தோடு சொன்ன கசாப்புக்காரரை சமுத்திரம் முறைத்துப் பார்த்ததும், “சரி, வேற கடைக்காரன் ஆடு உரிச்சா, நெதம் வாங்கிட்டு வந்து தந்துடுறேன். செரியா..?” என்று அவர் சொன்னதும்தான் சமுத்திரம் சமாதானமானான். வழியில், மில்லர்புரம், கனி மெடிக்கல்காரரிடம், ``ரெத்தம் ஊறுறதுக்கு ஏதாவது சத்து டானிக் இருக்கா?’’ என்று கேட்டு இரண்டு டானிக் பாட்டில்களும், ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும் வாங்கிக்கொண்டான்.

திரேஸ்புரம் முக்கில் சவரியான் டீக்கடைக்கு முன்பு ஒரு டீ அடித்துவிட்டு, பீடி பற்றவைக்கலாமென்று வண்டியை நிறுத்தியவன், அங்கு யதேச்சையாக மரியதாஸைப் பார்த்துவிட்டான். அவர் கையில் அன்றைய நியூஸ் பேப்பரை வைத்துக்கொண்டு யாரிடமோ மும்முரமாக அரசியல் வியாக்கியானம் பேசியபடி டீ குடித்துக்கொண்டிருந்தார். கறியையும், மருந்துச் சாமான்களையும் எப்படிக் கொண்டுபோய் ரோசம்மாளிடம் கொடுக்கப் போகிறோம் என்ற குழப்பம் சமுத்திரத்தின் மனதுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. நல்ல வேளையாக அவர் அங்கே இருப்பது தெரிந்ததால், இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு ரோசம்மாளைப் பார்த்து, வாங்கி வந்திருக்கும் பொருளை அவளிடம் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்தான். மரியதாஸ் தன்னை கவனிக்கும் முன்னமே அங்கிருந்து கிளம்பிவிட வேண்டுமென்று புல்லட்டை உதைத்துப் புறப்பட்டான்.
மரியதாஸ், சமுத்திரம் அங்கு வந்து நின்றதிலிருந்து, புறப்பட்டுப் போனதுவரை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டேதான் இருந்தார். அவர் மனம் உள்ளுக்குள் கொதித்துக்கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் அருகிலிருப்பவர்களிடம் வேண்டுமென்றே பேச்சை வளர்த்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார். தன் மனைவியைப் பார்க்கப் போகும் சமுத்திரத்தின் முதுகை உறைந்துபோய்ப் பார்த்தபடியிருந்தார். அருகில் அவரோடு பேசிக்கொண்டிருந்தவர் அமைதியானார். பிறகு, மரியதாஸின் முதுகில் ஆதரவாகக் கைவைத்து “ஆரம்பத்துலயே விட்டுட்ட மரியம்...” என்று அவர் ஏதோ புரிந்துகொண்டவரைப்போலச் சொன்னார். மரியதாஸ் ஒன்றும் பேசவில்லை. “புள்ளைங்களும் அவன் பக்கம் போயிடாம பார்த்துக்கோ... அவ்வளவுதான் சொல்லுவேன்.”
மரியதாஸ் ஒரு சிறு பயத்தோடு “ம்...” என்பதுபோலத் தலையை ஆட்டினார்.
சமுத்திரம் வந்து புல்லட்டை நிறுத்தும்போது ரோசம்மாள் வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்தாள். ஜான், ஹாக்கி விளையாட கிரவுண்டுக்குப் போயிருந்தான். பனிமலர் மட்டும்தான் அடுப்படியில் தீயோடு மல்லுக்கட்டியபடி எதையோ சமைத்துக்கொண்டிருந்தாள். வீட்டுக்குள் நுழைந்த சமுத்திரத்தைப் பார்த்ததும் பனிமலர் திடுக்கிட்டுப்போனாள். என்ன சொல்வதென்று அவளுக்கு வாய்வார்த்தை எழவில்லை. வேக வேகமாக வாசலுக்குப்போய் தன் அப்பா வருகிறாரா எனப் பார்த்தாள். சமுத்திரம் அவன் வாங்கி வந்திருந்த பொருள்களை அவளின் கையில் கொடுத்துவிட்டு, “உங்க அம்மாவ எங்க?” என்று கேட்டதும், “அவங்க தூங்குறாங்க” என்று சொல்லிவிட்டு பனிமலர் பின்கட்டை நோக்கிக் கை நீட்டினாள்.

சமுத்திரம் விறுவிறுவென வீட்டின் பின்கட்டுக்குப் போய் ரோசம்மாள் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான். ரோசம்மாள் அந்த அறைக்குள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். கட்டிலின் அருகிலிருந்த உயரமான ஸ்டூலில், சின்ன டேபிள் ஃபேன் ஓன்று சுற்றிக்கொண்டிருந்தது. வீசிய காற்றில் ரோசம்மாளின் கறுத்த சுருள் முடி அலைபோல் அசைந்தாடியது. சமுத்திரம் சப்தம் எழுப்பாமல் ரோசம்மாளை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
பனிமலர், சமுத்திரத்தின் பின்னால் வந்து நின்றாள். அவளின் கையில் சுடச்சுடப் போட்டு எடுத்து வந்திருந்த கருப்பட்டி காபி இருந்தது. சமுத்திரத்தை என்ன சொல்லி அழைப்பதென அவளுக்குள் தடுமாற்றம் ஏற்பட்டிருந்தது. யதேச்சையாக சமுத்திரமே திரும்பிப் பார்த்தான். பனிமலர் நீட்டிய கருப்பட்டி காபியை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, ``எனக்கு எதுவும் வேணாம்’’ என்று சொன்னான். அவள், ஏன் என்பதுபோல் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்ததும், “நான் காலையிலேயே குடிச்சுட்டேன் அதான்...” என்று சொல்லி முடிப்பதற்கு முன்னமே... “அது தெரியும். இது பால் காபி இல்ல. கடுங்காப்பிதான்...” என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த ஜன்னல் திண்டில் டம்ளரை வைத்துவிட்டுக் கிளம்பினாள். இரண்டு மூன்று எட்டுதான் வைத்திருப்பாள். என்ன நினைத்தாளோ, சட்டென்று திரும்பி, “எங்க அப்பா வார நேரம்... முக்கு ரோட்டுக்குத்தான் டீ குடிக்கப் போயிருக்காவ...’’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் மீண்டும் நுழைந்தாள்.
சமுத்திரம் ரோசம்மாளை எழுப்பிவிடாமல், மீண்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். தன் இடுப்பிலிருந்து சிறிய பிராந்தி பாட்டிலை எடுத்தான். அதில் கால்வாசிதான் மீதமிருந்தது. சுடச்சுடப் புகை வந்துகொண்டிருந்த கருப்பட்டி காபியில் அந்த பிராந்தியை ஊற்றி, ஒரு கலக்கு கலக்கி, ஒரு மடக்கு குடித்தான். அவனால் பொறுக்கக்கூடிய சூட்டில்தானிருந்தது. வாயை எடுக்காமல் ஒரே மடக்கில் குடித்து முடித்து, ஜன்னல் திண்டில் கிளாஸை வைத்தான்.
ரோசம்மாளிடம் சிறிய அசைவு தெரிந்தது. இவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு புரண்டு படுத்தாள். சமுத்திரம் எழுந்து மீண்டும் வீட்டின் முன்கட்டுக்கு வந்தான். பனிமலரின் முகத்தைப் பார்க்காமல், சுவரைப் பார்த்தபடியே கேட்டான்.
“உனக்கு திரும்ப எப்போ காலேஜுக்குப் போகணும்?”
“இன்னும் நாலு நாள்ல கிளம்பணும்.”
“ம்... சேரி... நான் வாரேன்” என்றபடி கிளம்பப் போனான்.
“அம்மா முழிச்சதும் நாளைக்கி அங்க வரச் சொல்லுதேன். நீங்க இங்க வர்றதை எங்கப்பா பார்த்தாருன்னா கஷ்டப்படுவாரு. அதை என்னால தாங்கிக்கக் முடியாது.”
“செரி... நல்லாப் படி... டீச்சர் வேல கிடைக்கிறதுக்கு வேற என்னல்லாம் படிக்கணுமோ படி. எதைப் பத்தியும் யோசிக்காத... உன் அப்பாவப்போல நினைச்சு என்கிட்ட கேளு.” அந்த வார்த்தையைச் சொல்லும்போது சமுத்திரம் ரொம்பவும் தடுமாறினான்.
`அப்பாவப்போல...’ என்ற வார்த்தையைக் கேட்டதும், பனிமலருக்குக் கோபம் கொப்பளித்தது.
“என் அப்பாகிட்ட கேட்டுக்கிடுதேன். நீங்க கிளம்புங்க...’’ என்று முகத்தில் அறைந்தாற்போல் சொன்னாள்.
சமுத்திரம் அங்கிருந்து விறுவிறுவெனக் கிளம்பி, புல்லட்டை உதைத்தான். தெருவைத் தாண்டி, சவரியான் டீக்கடையைக் கடக்கும்போது, மரியதாஸ் புல்லட் சத்தம் கேட்பதற்காகவே காத்திருந்ததுபோல அந்தப் பக்கம் திருப்பிப் பார்த்தார். பிறகு, கையிலிருந்த நாளிதழை விரித்துப் பிடித்துக்கொண்டு, வெறுமனே படங்களை மேய்ந்துகொண்டிருந்தார். அவர் மனதில் எதுவும் தங்கவில்லை. மாறாக, அவர் மனதில் `சமுத்திரம்’ என்ற பெயர் மாத்திரம் ஜுவாலையாகக் கொதித்துக்கொண்டிருந்தது.
புல்லட் நெருங்கி வரும் சத்தம் அவர் காதுகளுக்கு நன்றாகக் கேட்டது. நாளிதழுக்குள்ளிருந்து அவர் கண்கள் மட்டும் சாலையைப் பார்த்து அவன்தானாவெனச் சரி பார்த்தன. சமுத்திரம் அவரைப் பார்க்காமல் கடந்துபோனான். அடுத்த நொடியே மரியதாஸ் விறுவிறுவெனத் தன் வீட்டின் பாதையில் நடக்கத் தொடங்கினார். அவர் நடையில் கோபம், இயலாமை, நொடிந்த மனம் எல்லாம் தெரிந்தன.
போகும் பாதையிலேயே மாரியப்பனின் கசாப்புக்கடை இருந்தது. ரோட்டில் நின்றவாறே, “மாரியப்பா, சுவரொட்டி இருக்கா?” என்று மரியதாஸ் கேட்க ‘`இருக்கு’’ என்றபடி தலையாட்டினார் மாரியப்பன். கிட்டே போன மரியதாஸ் ‘`காசு ரெண்டு நாள்ல தாரேன்’’ என்றதும், “அதனால என்ன... வாங்கிட்டுப் போங்க. அரைக் கிலோ கறியும் சேத்துப் போடவா... காசு மெல்லக் குடுங்க” மரியதாஸ் யோசிப்பதற்குள் கறியைத் தராசில் தூக்கி வைத்தார் மாரியப்பன்.
பனிமலர் வாழை இலைப் பொட்டலத்திலிருந்து சமுத்திரம் வாங்கி வந்திருந்த கறியையும், சுவரொட்டியையும் எடுத்து அலசிக் கொண்டிருந்தாள். மரியதாஸ் தன் பங்குக் கறி பொட்டலத்தோடு வீட்டுக்குள் நுழைந்தார். அங்கு ஏற்கெனவே பனிமலர் அலசிக் கொண்டிருக்கும் கறியைப் பார்த்தும், சிறு அதிர்ச்சியுமில்லாமல் தான் வாங்கிக்கொண்டு வந்த கறியைக் கொடுத்துவிட்டு, “இத அலசும்மா...” என்று சொல்லிவிட்டு சமுத்திரம் வாங்கிக் கொண்டுவந்த கறியை எடுத்துக்கொண்டு போய் தெருவில் நாய்க்குப் போட்டார்.
நான்கைந்து தெருநாய்கள் வந்து பச்சை மாமிசத்தை ‘அவக் அவக்’ என சண்டை போட்டபடியே தின்னத் தொடங்கின.
(பகை வளரும்...)