மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 41

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 41
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 41

“போரின் சமாதானக் காலங்களை‌ முழுவதுமாக நம்ப வேண்டாம். அந்தக் காலத்தை நாம் ஆயுத சேகரிப்புக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.”- மூர்க்கர்கள்

சமுத்திரம் வாங்கிக்கொண்டு வந்திருந்த கிடாக்கறியையும் சுவரொட்டியையும் மரியதாஸ் அள்ளிக்கொண்டு வந்து தெருவில் தூக்கி எறிந்ததும், நான்கைந்து நாய்கள் வந்து அதைத் தின்றன. இதைப் பார்த்துக்கொண்டிருந்த பனிமலருக்குச் சங்கடமாகவும், தன் அப்பாவின் மேல் சிறிது கோபமும் வந்தது. ரோசம்மாளைப் பார்க்கப்போனவர் அங்கே ஜன்னல் திண்டிலிருந்த காபி டம்ளரைப் பார்த்தார். அதைக் கையிலெடுத்து நுகர்ந்து பார்த்த அடுத்த நிமிஷம், அவருக்கு `சுள்’ளென்று கோபம் வந்தது. டம்ளரை ஓங்கி சிமென்ட் தரையில் வீசி அடித்தார். டம்ளர் தரையில் குதித்து, `கிணிங்... ணிங்...’ என்று கோபமான சில்வர் சத்தத்தை எழுப்பியது. அவர் விறுவிறுவென சமையற்கட்டுக்குப் போனார். சத்தம் கேட்டு ரோசம்மாள் கழுத்தைத் திருப்பினாள். காயம் `விண்’ணென்று வலித்தது. மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். மெல்ல மூக்கை இழுத்து நுகர்ந்து அந்த இடத்தைச் சுற்றியடிக்கும் பிராந்தி வாசத்தைக் கண்டுபிடித்தாள். அது சமுத்திரம் வந்துபோன வாடை. கீழே கிடக்கும் டம்ளரைக் குனிந்து எடுத்து நன்றாக நுகர்ந்து பார்த்தாள். அதில் பிராந்தி வாசனை தூக்கலாகவும், காபி வாசனை குறைவாகவும் வந்தது.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 41
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 41

``ஏலா மலரு... நீயும் உங்கப்பன அசிங்கப்படுத்துதல. கடைசில நீயும் அந்த நாய்ககூட சேந்துட்டல்ல... எந்தக் கஷ்டம்னாலும் நீ மட்டும் எப்பயும் அப்பாகூட இருப்பன்னு நினைச்சேன் தங்கம். கடைசில நீயும் இந்த அப்பன கையாலாகாதவன்னு நினைச்சுட்டல்ல... பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லன்னா, நாலு கறித்துண்டு வேங்கிப்போடக்கூட எனக்கு வக்கில்லாமப் போச்சுன்னு நினைச்சிட்டல்ல... வந்தவனுக்கு பிராந்தி ஊத்திக் குடிக்க டம்ளர் எடுத்து குடுத்திருக்க. வெறும் டம்ளர் மட்டும்தான் குடுத்தியா... இல்ல நீயே ஊத்திக் குடுத்தியா?’’ பேசிக்கொண்டிருக்கும்போதே மரியதாஸுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. பனிமலருக்கும்தான். இருவரின் கண்களிலும் நீர்க்கசிவின் பளபளப்பு.“அப்படில்லாம் இல்லப்பா...”

“இல்ல தங்கம்... நீயும் அப்பாவ வெறும் பயலாத்தான நினைக்க...”

“சத்தியமா இல்லப்பா.”

கழுத்திலிருந்த காயத்தின் வலியால் ரோசம்மாவால் குரலெழுப்ப முடியாமல் மெல்ல எழுந்து அடுப்படி நோக்கி வந்தாள்.

அப்பாவும் மகளும் அழும் முகத்தோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு “என்ன ஆச்சு... ஏன் ரெண்டு பேரும் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று விசாரித்தாள். “அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்று சொல்லிவிட்டு, பனிமலர் அடுப்படி வேலையை கவனிக்கப்போனாள்.

மரியதாஸ் அங்கிருக்கப் பிடிக்காமல், உள்ளே அறைக்குள் போய் ஒரு பையில் நான்கைந்து துணிகளைத் திணித்தார். சுவரில், ஆணியில் மாட்டியிருந்த தன் கிளாரினெட்டையும் எடுத்துக்கொண்டார். மீண்டும் சமையற்கட்டுக்கு வந்து, பனிமலரின் முகத்தை மட்டும் பார்த்தபடிச் சொன்னார். ``கோட்டாறு சவேரியார் கோயில்ல விசேஷம். மாரியப்பன் கறிக்கடைல சொல்லிட்டுப் போறேன். நெதம் கறியும் சுவரொட்டியும் தருவாங்க. உங்கம்மையைச் சாப்பிடச் சொல்லு. நீ கறிக்கடைக்கெல்லாம் போகாத. ஜானைப் போயி வாங்கிட்டு வரச் சொல்லு. நான் வர எப்படியும் நாலஞ்சு நாள் ஆகும்.’’ விறுவிறுவென வீட்டின் வெளியே கிளம்பினார். பனிமலர் வாசலுக்குப் போய், கண்கலங்கித் தன் அப்பா போவதைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

ரோஸம்மாள் இது வழக்கம்தான் என்பதுபோல் அமைதியாக இருந்தாள். அடுப்பின் அருகில் போய் சமையல் பாத்திரங்களைப் பார்த்தாள். ``ஏது கறி... வீட்டுக்கு வேற யாரும் வந்தாங்களா?’’ பனிமலர் தெருவைப் பார்த்தவாறு அமைதியாக நின்றாள்.

“உன்னத்தான் கேக்குறேன்டி...”

“அப்பா வாங்கிட்டு வந்தாவ...” மெதுவான குரலில் சொன்னாள்.

“அப்பாவா?” சந்தேகமான குரலோடும், முகத்தோடும் கேட்டாள்.

“ஏன்... அவருல்லாம் வாங்க மாட்டாரா?’’ எரிச்சலான குரலில் பதில் சொன்னதும், ரோஸம்மாள் அமைதியானாள்.

“ம்... செரி... நீ படி. நான் சமைக்கேன்.”

“வேணாம்மா. நான் பாத்துக்கிடுதேன்.”

``நல்லாத்தாண்டி இருக்கேன். நீ போ.’’ பனிமலர் எரிச்சலோடு பாத்திரத்திலிருந்து தன் அம்மாவின் கையைத் தட்டிவிட்டாள். “நீ போ. நான் பாத்துக்கிடுதேன்மா...”

“என்னடி ஆச்சு... ஆளாளுக்கு மூஞ்ச தூக்கிவெச்சுக்கிட்டு இருக்கீங்க” ரோஸம்மாள் கழுத்து வலியோடு, கொஞ்சம் பெரிய குரலில் ஓங்கிப் பேசினாள்.

பனிமலர் பயந்துவிட்டாள். சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். மெதுவான குரலில் சொன்னாள். “அந்த ஆள இங்க வர வேணாம்னு சொல்லும்மா. வேணும்னா நீ போயி பாத்துக்கோ” ரோஸம்மாள் கறிப் பாத்திரத்தை அப்படியே வைத்துவிட்டு, மௌனமாகத் தன் அறைக்குப் போனாள்.

விடிந்தும் விடியாத அதிகாலையில், சமுத்திரத்தைக் கூப்பிட்டு வரச்சொல்லி பெரிய பர்லாந்து தன் வீட்டு வேலையாளை அனுப்பியிருந்தார். முகத்தில் `சளார் சளார்’ என தண்ணீரை அறைந்து தன் முகத்தைக் கழுவியபடியே கேட்டான். “ஏன் என்ன ஆச்சு... இந்த நேரத்துல கூப்பிட்டு விடுறாரு?”

“எனக்குத் தெரியாது. மூணு நாலு பிளசரு வந்திருக்கு. பம்பாய்லருந்து நிறைய ஆட்கள் வந்திருக்காங்க.”

“ஓ...” முகத்தை மட்டும் கழுவிவிட்டுப் போகலாம் என நினைத்தவன், தன் உடைகளைக் களைந்து போட்டுவிட்டு, அப்படியே இருண்ட கடலுக்குள் குதித்து ஒரு ஐந்து நிமிடம் நீந்தவும், முங்கி எழவுமாகயிருந்தான். கயிற்றேணியில் மேலேறி, உடலைத் துடைக்கக்கூட இல்லை. நல்ல கைலியையும் சட்டையையும் எடுத்துக் கட்டிக்கொண்டு உடனே கிளம்பினான்.

வேலையாள் பின்னே அமர்ந்திருக்க, சமுத்திரத்தின் புல்லட் பெரிய பர்லாந்தின் வீடு நோக்கிப் போனது. அந்த நேரம் வீட்டின் எல்லா அறைகளிலும் மஞ்சள் விளக்குகள் எரிவது தெரிந்தது. பெரிய பர்லாந்தின் வீட்டில் மட்டுமல்ல... அருகிலிருக்கும் சின்ன பர்லாந்தின் வீட்டிலும்தான். இரண்டு வீட்டின் முற்றங்களிலும் இதுவரை பார்த்திராத பளபளப்பான வெளிநாட்டு கார்கள். நிறைய புதிய ஆட்கள் இரண்டு வீடுகளிலும் நடமாடுவது தெரிந்தது. அவர்கள், வந்திருப்பவர்களுக்குப் பாதுகாப்பாக வெளியில் நிற்பவர்களாக இருக்கும். இந்தப் புதிய சூழலைப் பார்த்தவாறு முகத்தில் ஆயிரம் கேள்விகளோடு, புல்லட் பெரிய பர்லாந்தின் வீட்டு கேட்டுக்குள் நுழைந்தது. சமுத்திரம் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 41
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 41

அங்கு நல்ல தும்பைப்பூ பரமாஸ் கரை வெள்ளை வேட்டி, தங்க பட்டன்கள் வைத்த முழுக்கைச் சட்டையோடும், அரை வழுக்கைத் தலையும், மீசை மழிக்கப்பட்ட முகத்தோடும் ஐம்பத்திச் சொச்சம் வயதில் கறுத்த உருவமாக ஒருவர், பெரிய பர்லாந்தோடு பேசிக்கொண்டிருந்தார். சமுத்திரம் வந்ததும், பர்லாந்து அவனை அறிமுகப்படுத்தினார். “நான் சொன்னேன்ல... சமுத்திரம்... இவன்தான்.” சமுத்திரம் அவரை நோக்கிக் கும்பிட்டான். பதிலுக்கு திரவியம் அண்ணாச்சியும் கும்பிட்டார். சமுத்திரத்தைப் பார்த்ததும் யாரோ பதுங்குவதுபோல் தெரிந்தது. அப்போதுதான் சமுத்திரம் கவனித்தான். சுப்பிரமணியன் வக்கீல். அந்த ஆளை ‘இவன் என்ன மயித்துக்கு இங்க வந்தான்?’ என்பதுபோல எரிச்சலாகப் பார்த்தான் சமுத்திரம்.

பர்லாந்தின் மனைவியும், அமலியும் அங்கிருப்பவர்களுக்கு டீ கொண்டுவந்து கொடுத்தார்கள். திரவியம் அண்ணாச்சி, தான் பம்பாயிலிருந்து கொண்டுவந்த பரிசுப் பைகளையும், ஜவுளிப் பைகளையும் அமலியிடம் கொடுத்தார். பெண்கள் உள்ளே போனதும் திரவியம் அண்ணாச்சி, வந்த காரியத்தைப் பேச ஆரம்பித்தார். “ஒரு முக்கியமான சோலியா இங்க வந்துருக்கேன். தட்டாம உங்க ஆட்களெல்லாம் சேர்ந்து நிறைஞ்ச மனசோட அண்ணாச்சிக்காக இதைப் பண்ணிக் குடுக்கணும்...’’ பீடிகையோடு பெரிய பர்லாந்தைப் பார்த்துச் சொன்னார். பெரிய பர்லாந்து கூர்ந்து பார்த்தார். ``உங்க தம்பியையும் இங்க வரச் சொல்லிக் கூப்பிட்டேன். மாட்டேன்னு சொல்லிட்டாரு. இங்க பேசிட்டு நான் அங்கயும் போகணும். அவரும் சேர்ந்து செய்யுற காரியம்தான்.”

பெரிய பர்லாந்துக்கு ஒன்றும் விளங்கவில்லை. “நேரடியாவே கேக்குறேன். இப்போ வரப்போற துறைமுக எலெக்‌ஷன்ல நீங்களும் உங்க தம்பியும் விலகிட்டு, அந்தப் பொறுப்பை காசி அண்ணாச்சிக்கு விட்டுக்குடுக்கணும். காசி என் சாதிக்காரன்கிறதால சொல்லல. எனக்கு எல்லா ஆட்களும் ஒண்ணுதான். பம்பாய் துறைமுகத்துல இப்போ ஏகப்பட்ட கெடுபிடி. தொழில் செய்ய முடியல. முன்ன மாதிரி மஸ்தான் பாய், ஹார்பர் தொழில்ல நேரடியா தலையிடுறது இல்ல. வரதண்ணணும் நானும் மட்டும்தான் ஹார்பர் தொழில பாத்துக்குறோம். கஸ்டம்ஸ் ஆபீஸருங்க முன்ன மாதிரி இல்ல. அதுலயும் இப்போ வந்துருக்குற பஞ்சாப்காரர் கடுமையான ஆளா இருக்காரு. தொழில் செய்ய முடியல. முட்டி மோதிப் பாத்தாச்சு. அரசியல் பலத்தையெல்லாம் காட்டியாச்சு. எதுவும் நடக்கல. சரக்கெல்லாம் அப்படி அப்படியே கடல்ல நிக்குது. எங்களையும் தொழிலையும் அழிச்சுட்டுத்தான் போவேன்னு சொல்லிட்டாரு.

எங்களுக்குக் கொஞ்ச நாளைக்கி தொழில் பண்றதுக்கு வேற ஒரு துறைமுகம் வேணும். காசி, போன வாரம் பம்பாய்க்கி வந்தப்ப, `இத நான் செஞ்சு தாரேன். நீங்க வந்து பர்லாந்து பிரதர்ஸுங்ககிட்ட பேசிக்குடுங்க’ன்னாரு. அதான் நானே நேர்ல வந்தேன்.”

திரவியம் அண்ணாச்சி பேசி முடிக்கக்கூட இல்லை. சமுத்திரம் குறுக்கே தன் வார்த்தைகளை விட்டான். “தூத்துக்குடி கடலை யாருக்கும் விட்டுக்குடுக்க முடியாது. உங்களால ஏன்டத பாத்துக்கிடுங்க.”

இந்த பதிலை எதிர்பார்க்காத திரவியம் அண்ணாச்சி, சட்டென நிமிர்ந்து சமுத்திரத்தைப் பார்த்தார்.

(பகை வளரும்...)