மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 42

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 42
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 42

“பகைவனுக்குச் சவக்குழித் தோண்டும்போது, தனக்கும் சேர்த்தே அருகில் தோண்டிவைக்க வேண்டுமென்பது தெரியவரும்!” - மூர்க்கர்கள்

தூத்துக்குடி துறைமுகத்தில் கொஞ்ச காலம் தொழில் செய்துகொள்ள, திரவியம் அண்ணாச்சி பெரிய பர்லாந்துவிடம் வந்து உதவி கேட்டார். திரவியம் அண்ணாச்சி பேசி முடிக்கும் முன்னமே சமுத்திரம் “அப்படில்லாம் தூத்துக்குடி ஹார்பரை நீங்க சொல்றவங்ககிட்ட விட்டுட்டுப் போக முடியாது. வேணும்னா எலெக்‌ஷன்ல யாரு ஜெயிக்குறாங்களோ அவங்ககிட்ட அந்த உதவிய கேட்டு வாங்கிக் கோங்க’’ என்று கறாராகச் சொல்லிவிட்டான். பெரிய பர்லாந்துக்கு தர்மசங்கடமாகிவிட்டது. திரவியம் அண்ணாச்சி கேட்டார். “இவன் பதில்தான் உம்ம பதிலா?” பெரிய பர்லாந்து அமைதியாக இருந்தார்.

திரவியம் அண்ணாச்சியே பேசினார். “தொழில் செய்ய நீங்களும் உங்க தம்பியும் ஹார்பர் எலெக்‌ஷன்ல விட்டுக்குடுத்து அந்தப் பொறுப்ப காசி அண்ணாச்சி கையில ஒப்படைக்கணும், இத ஒரு உதவியாத்தான் கேக்குதேன். ஆளாளுக்கு என் பலத்த காட்டுதேன், உன் பலத்த காட்டுதேன்னு மல்லுக்கட்டிக்கிட்டுக் கிடக்காம இருந்தா எல்லாரும் சம்பாதிச்சுக்கலாம். நீங்களும், உங்க தம்பி சின்ன பர்லாந்தும் சின்னதாத்தான் திட்டம் போடுறீங்க. கணக்குல இல்லாத, பில் இல்லாத சின்னச் சின்ன பொருள்களைக் கரைக்குக் கொண்டுவந்து என்ன பெருசா கெடச்சுடப் போகுது... போன வாரம்கூட ஜெர்மனிலயிருந்து ஆறு பெரிய பெரிய பிரின்டிங் மெஷின தனித்தனியா கழட்டி, இரும்பு ஜாமான் கழிவுன்னு சொல்லி கப்பல்லருந்து இறக்கி, உம்ம புக்கிங் ஆபீஸ்ல வெச்சு ஒண்ணு சேத்து சிவகாசில ஒரு குரூப்புக்கு ஒப்படைச்சிருக்கீங்க. இதுலல்லாம் உங்களுக்கு என்ன பெருசா கெடச்சுரும்... எக்ஸ்போர்ட் டூட்டின்னு ஜெர்மன் கம்பெனிக்காரனும், இம்போர்ட் டூட்டின்னு சிவகாசி குரூப்பும் கவர்ன்மென்ட்டுக்கு குடுக்க வேண்டிய தொகைய ஏமாத்துறதுக்குத்தான் இப்படிச் செய்தானுங்க. இதுல உமக்கு என்ன பெருசா கெடச்சுருக்கும்... ஒரு நாப்பது, அம்பது ஆயிரம்... அவ்வளவுதானே?”

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 42
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 42

பெரிய பர்லாந்தும், சமுத்திரமும் அப்படியே திகைத்துப்போனார்கள். சரியாக அந்த யாவாரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய்தான் கிடைத்தது. `உங்களுக்கு எப்படி?’ என்பதுபோல ஆச்சர்யமாக திரவியம் அண்ணாச்சியைப் பார்த்தார்கள். “இது மட்டுமில்ல, உங்க வீட்டுப் பொம்பளைங்களுக்கு, கொழும்புலருந்து வார கப்பல்ல தெரிஞ்ச கேப்டன்கிட்ட சொல்லி சிலோன் நகையும், கல்லும் இங்க கொண்டு வாறீங்கல்ல... அதுகூடத் தெரியும். இங்க விலையிலயிருந்து கிராமுக்கு எழுபது ரூபா கம்மி. அதுவே ஒரு கிலோ கொண்டுவந்தா கொள்ள லாபம்தான... சரிதானடே?” சமுத்திரத்தைப் பார்த்துக் கேட்டார். “சிலோன் கல்லுக்குத்தான்டே நல்ல மவுசு. அத கொண்டாந்து யாவாரம் பண்ணுங்க. நகைக்கடை முதலாளிங்க வந்து அள்ளிப்பானுங்க. செரி, விஷயத்துக்கு வாறேன். இன்னும் நாலஞ்சு வருஷத்துக்காவது எங்களுக்குத் தொழில் செய்ய ஒரு ஹார்பர் வேணும். உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. மேல ஆபீஸருங்ககிட்ட பேசுற எல்லாத்தையும் மஸ்தான் அண்ணாச்சிய வெச்சுப் பேசி சரிக்கட்டிக்குவோம். எல்லாமே சிலோன் வழியா வார கப்பல்கதான். எந்தக் கெடுபிடியும் இல்ல. இங்க இருக்குற ஆபீசருங்களையும் சமாளிச்சுக்கலாம். நீங்க மூணு பெரும் பேசி முடிவு பண்ணிக்கோங்க. யார் கைல இந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறதுன்னு. என்னைக் கேட்டா நீங்களும், உங்க தம்பியும் விலகிக்கிட்டு காசிய உக்காரவெச்சா, ஒரு வருஷத்துக்கான கமிஷன் தொகைய முதல்லயே குடுக்கச் சொல்லுதேன். பதவிங்குறது கௌரவம்தான. இதுல கௌரவத்தத் தாண்டியும் லட்ச லட்சமா நீங்க சம்பாதிக்கலாம். யோசிச்சு சொல்லுங்க. இன்னும் ரெண்டு நாளு இங்குன இருப்பேன். வியாழக்கிழம கிளம்புதேன். பாக்கணும்னா சுப்பிரமணி வக்கீல்கிட்டச் சொல்லி அனுப்புங்க. நான் அப்படியே பக்கத்துல உங்க தம்பி வீட்டுக்குப் போயிட்டு வாறேன்.” கும்பிட்டுவிட்டுக் கிளம்பினார் திரவியம் அண்ணாச்சி.

வெளியே வந்தவர், நடந்து அடுத்த வாசலிலிருக்கும் சின்ன பர்லாந்து வீட்டுக்குப் போனார். அங்கே சின்ன பர்லாந்திடமும் அதேபோல பேச்சுவார்த்தைதான். இங்கே சமுத்திரம் குறுக்கே புகுந்து வார்த்தைகளை வீசியதைப்போல அங்கே கொடிமரம் வார்த்தைகளை வீசினான்.

``எலெக்‌ஷன் முடியட்டுங்க. எங்க கைக்குப் பொறுப்பு வந்தா நாமளே சேந்து பண்ணலாம். காசி அண்ணாச்சி கைலல்லாம் பொறுப்ப சும்மாத் தர முடியாது.’’ திரவியம் அண்ணாச்சி அமைதியாக இருந்துவிட்டு, அந்த முடிச்சை அவிழ்த்தார். ``எனக்குத் தெரியும். காசி எல்லாத்தையும் சொன்னான். நீங்க ரெண்டு பேரும் சேந்துதான் இந்த தடவ எலெக்‌ஷன்ல உங்க அண்ணன்னு பாக்காம எல்லாத்தையும் காலி பண்ணணும்னு முடிவு பண்ணியிருக்கீங் கன்னு சொன்னான். உங்க அண்ணனைச் சாவடிக்க நீங்க எத்தன தடவ முயற்சி பண்ணியிருக்கீங்கன்னும் எனக்குத் தெரியும். அவருக்கும் அது எல்லாமே நீங்கதான் பண்றீங்கன்னும் தெரியும். இது உங்க குடும்ப விவகாரம். நீங்க பாத்துக்கோங்க. இதுக்கு இடையில காசிதான் கழுதப்புலி மாதிரி நிக்காரு. அவருக்கு எந்தப் பக்கம் பொணம் விழுந்தாலும் சந்தோஷம்தான். அவர் பாதை கொஞ்சம் கொஞ்சமா க்ளியர் ஆகிக்கிட்டே போகும். நீங்க செத்துப்போனா நாளைக்கே உங்க அண்ணன்கிட்ட போயி நிப்பாரு, நாம ரெண்டு பேரும் சேந்து யாவாரம் செய்யலாமான்னு கேட்டுக்கிட்டு... எனக்கு உங்க எல்லாரையும் தெரியும். அதவிட காசிய நல்லாவே தெரியும். யாரும் முட்டிக்காம, அடிச்சுக்காம, வெட்டிக்காம சேர்ந்து யாவாரம் பண்ணணும்கிறதுதான் எனக்கும், பம்பாய்ல இருக்குறவகளுக்கும் ஆசை. கூடிப் பேசி முடிவெடுத்துட்டுச் சொல்லுங்க. முடிஞ்சவரைக்கும் உங்க அண்ணன்கூட சேர்ந்து, இணங்கிப் போங்க. சரி நான் கிளம்புதேன். பம்பாய்க்குக் கிளம்புறதுக்குள்ள ஒரு முடிவு எடுத்துட்டுப் போகணும். அதுக்குள்ள நீங்க மூணு பேரும் சந்திச்சுப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. உங்களுக்குச் சங்கடமா இருக்குன்னா, நானேகூட மூணு பேரையும் சந்திக்க ஏற்பாடு பண்ணுதேன்.”

“யோசிச்சு முடிவு சொல்லுதேன்” என்று சொல்லி திரவியம் அண்ணாச்சியை வழியனுப்பி வைத்தார் சின்ன பர்லாந்து. கொடிமரம்தான் கிடந்து திமிறினான். ``நான் அன்னைக்கே சொன்னேனா... இந்த காசிய நம்பாதீங்கன்னு. அங்க போய் எல்லாத்தையும் சொல்லியிருக்கான் பாருங்க. எனக்கென்னமோ எலெக்‌ஷன் முடிவைப் பார்த்துட்டு ஹார்பர முழுக்க நம்ம கையில வெச்சுக்கிட்டு பேசலாம்னு தோணுது.’’ சின்ன பர்லாந்து வேறு எதையோ யோசித்துக்கொண்டிருந்தார். இறுதியாகச் சொன்னார். ``எனக்கென்னமோ இந்த பம்பாய் ஆளுங்களப் பகைச்சுக்காம அவங்க சொல்றபடி கேட்கலாம்னு தோணுது. இப்போ காசியும் நம்ம பக்கம் இருக்குறதால, என் அண்ணன் மட்டும்தான் தனியா கிடப்பாரு. இந்த ஆட்ககிட்ட அவரோட ஒரு பேச்சும் எடுபடாது. சொல்ற மாதிரி பேச்சு வார்த்தைக்குப் போய்ப் பார்க்கலாம். அதுக்கு முன்ன இந்தக் காசிய கூப்பிட்டு எல்லாத்தையும் சரியா பேசிக்கணும். என் அண்ணனவிட அவன் மோசமானவன்.’’

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 42
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 42

திரவியம் அண்ணாச்சி, மீண்டும் தன் காரை எடுக்க பெரிய பர்லாந்தின் வீட்டுக்கு வந்தார். பெரிய பர்லாந்து, வீட்டுக் வெளியே முற்றத்தில் பிரம்பு நாற்காலி போட்டுக் காத்திருந்தார். வந்த அண்ணாச்சியிடம் “வீட்ல உங்களுக்காகச் சமைச்சிருக்காக. கண்டிப்பா சாப்பிடணும்” என்று சொல்ல, பெரிய பர்லாந்தின் மனைவியும் சாப்பிட அழைத்தார். அமலி எல்லாருக்கும் பரிமாறினாள். நல்ல ருசியான வான்கோழிக் கறியும், மீன்களும். திரவியம் அண்ணாச்சி, எடுத்துவைக்கும் ஒவ்வொரு வாய்க்கும் சமையல் ருசியைப் புகழ்ந்தார். பெரிய பர்லாந்து அமலியின் கைப்பக்குவம் பற்றிச் சொன்னார். சாப்பிட்டு வாய்க்கு வெற்றிலை மெல்லக் கொடுக்கும்போது, “உம்ம தம்பி இதுல இணக்கமா போற மாதிரிதான் தோணுது. முடிஞ்சா நான் நாளைக்கி நைட்டு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்றேன். மூணு பெரும் சந்திச்சு ஒருக்கா பேசிப் பாருங்க.”

“எனக்கென்னமோ வேணாம்னு தோணுது. நீங்க அங்க போன நேரத்துல நான் சமுத்திரத்தோட பேசிப் பாத்தேன். அவனுக்கு இதுல விருப்பமில்ல. ரெண்டு பக்கமும் நிறைய சாவுங்க. இப்பப் போயி சமாதானம் பேசிக்கலாம்னு போனா, செத்தவங்க ஆவிகூட மன்னிக்காது.”

கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டிருந்த சமுத்திரத்தை அண்ணாச்சி ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தார். பின், தன் பிளசரில் ஏறிக்கொண்டார். பிளசர் கிளம்பியது. என்ன நினைத்தாரோ பிளசர் டயர் நாலு உருட்டுதான் போயிருக்கும். வண்டியை நிறுத்தச் சொன்னார். பிளசரிலிருந்து இறங்கி, பெரிய பர்லாந்தை நோக்கிப் போனார். ``நாளைக்கி மதியம் என் தோட்டத்துல ஒரு விருந்து வெச்சுருக்கேன். மறுக்காம நீங்க அவசியம் வரணும். வரும்போது தம்பியையும் அழைச்சுக்கிட்டு வாங்க. மறுக்காம வரணும்.’’ பெரிய பர்லாந்தும், சமுத்திரமும் அவரை என்னவோபோல் பார்த்தார்கள்.

“ஏன் இவ்வளவு வற்புறுத்துறாரு?”

கேட்டின் வெளியே பிளசர் போனது. அவர் இறங்கி நடந்து மீண்டும் சின்ன பர்லாந்தின் வீட்டுக்கு வந்தார். அவரிடமும் அதையே சொன்னார்.

“நாளைக்கி மதியம் விருந்து வெச்சுருக்கேன்” அருகில் நின்ற கொடிமரத்தையும் பார்த்துச் சொன்னார். “வரும்போது தம்பியையும் கூட்டிட்டு வாங்க!”

(பகை வளரும்...)