மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 43

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 43
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 43

“வேறு ஒருவன் பகைக்காக நீ நியாயம் கேட்டுப் போகாதே..!” - மூர்க்கர்கள்

”திரவியம் அண்ணாச்சி, தூத்துக்குடி ஹார்பர் எலெக்‌ஷனை நடத்தாமலேயே அந்தப் பொறுப்பை காசி அண்ணாச்சிக்கு வாங்கிக் கொடுத்துவிடலாமென நம்பினார். அதற்காகவே ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து, மூன்று தரப்பினரையும் ஒரே இடத்தில் சந்திக்கவைக்கும் முயற்சியையும் கையிலெடுத்திருந்தார். கொடிமரத்துக்கு இந்தச் சந்திப்பில் விருப்பமில்லையென்றாலும், சின்ன பர்லாந்து திரவியம் அண்ணாச்சியின் யோசனைக்கு உடன்பட்டுவிட்டார். அவருக்குத் தன் அண்ணனைத் தனிமைப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் தீவிரமாயிருந்தது. எங்கேயோ வெளியிலிருந்து வந்த காசி அண்ணாச்சியின் கைக்கு ஹார்பர் கிடைத்தாலும் பரவாயில்லை. ஆனால், தன் அண்ணன் பெரிய பர்லாந்தின் கைகளுக்கு அதிகாரம் போய்விடக் கூடாது என்கிறரீதியிலேயே சிந்தித்தார். அதனாலேயே திரவியம் அண்ணாச்சி தோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு நிச்சயம் போக வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்.

“போறதுக்கு முன்னாடி காசிகிட்ட பேசிடணும்” என்று கொடிமரத்திடம் சொன்ன சின்ன பர்லாந்து, போனை எடுத்து டயலைச் சுழற்றினார்.

“செத்த நேரத்துல வந்திடுதேன். அவசியம் பாத்துடலாம். எங்கன்னு சொல்லுங்க.” காசி அண்ணாச்சி குதூகலமாக போனைக் கீழே வைத்தார். இருவரும் துறைமுகத்தில் சரக்குகளை வைக்கும் ஆறாம் நம்பர் குடோனுக்கு அருகே சந்திக்கலாமென்று முடிவானது.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் 43
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் 43

பெரிய பர்லாந்து, சிலோன் தெருவிலிருக்கும் தன் புக்கிங் ஆபீஸுக்குப் போன் செய்து குரூஸ் அண்ணனை உடனே கிளம்பி, தன் வீட்டுக்கு வரச் சொன்னார். குரூஸ் அண்ணன் அரக்க பரக்க சைக்கிளை மிதித்துக்கொண்டு பெரிய பர்லாந்தின் வீட்டுக்கு வந்தார். சைக்கிளை இரும்பு கேட்டின் வெளியே நிறுத்திவிட்டு, முற்றத்தில் திரியும் வான்கோழிகளைத் துரத்திக்கொண்டு ஓடுபவர்போல ஓட்டமும் நடையுமாக மாடியில் ஏறி பெரிய பர்லாந்தின் முன்னால் போய் நின்றார்.

ஊதித் தள்ளி அணைக்கப்பட்ட நிறைய சிகரெட் துண்டுகள் பெரிய பர்லாந்தின் காலடியில் கிடந்தன. அதைப் பார்த்த கணத்திலேயே ஏதோ ஒரு காரியத்தில் அவர் முடிவெடுக்கத் திணறுவதை குரூஸ் அண்ணன் கணித்துவிட்டார். நேரடியாகவே கேட்டார்.

“பம்பாய்லருந்து திரவியம் வந்தாகன்னு கேள்விப்பட்டேன். ஏதும் பிரச்னையா?”"

குரூஸ் அண்ணன், செட்டில் எல்லோருக்கும் மூத்தவர் என்பதாலும், பர்லாந்துக் குடும்பத்தில் பல ஆண்டுகள் வேலை செய்வதாலும் இயல்பாகவே எல்லா விஷயங்களிலும் அவரிடம் ஒரு யோசனை கேட்பது பெரிய பர்லாந்துக்கு வழக்கம். அது குடும்பக் காரியமாக இருந்தாலும் சரி... ஹார்பர் காரியமாக இருந்தாலும் சரி.

“கொஞ்சம் பொறுங்க... காக்காவ வரச் சொல்லியிருக்கேன். அவரும் வந்துரட்டும். தொழுகைக்குப் போயிருக்காராம்” குரூஸ் அண்ணனைப்போலவே காக்காவும் பெரிய பர்லாந்தின் ஆலோசனை கர்த்தர்களில் ஒருவராக இருந்தார்.

அடுத்த கொஞ்ச நேரத்திலேயே, தெருவுக்குள் காக்கா பிளசர் நுழையவும், சின்ன பர்லாந்து தன் வீட்டிலிருந்து கிளம்பி காசி அண்ணாச்சியைப் பார்க்க ஹார்பருக்குக் கிளம்பிப் போகவும் சரியாக இருந்தது.

இரண்டு கார்களும் அந்தத் தெருவில் எதிரெதிராகச் சந்தித்துக்கொண்டன.

காக்காவின் பிளசர் பெரிய பர்லாந்தின் வீட்டு வாசலில் வந்து நின்றபோது, அவர் டிரைவரிடம் ஏதோ சொன்னார். டிரைவர் காரின் பின்பக்கத்திலிருந்து இரண்டு பெரிய பலாப்பழங்களை எடுத்து பெரிய பர்லாந்து வீட்டின் வாசலில் இறக்கிவைத்தான். காக்காவிடமிருந்த வயர் கூடையில் கொஞ்சம் இனிப்புகளும், மிட்டாய்களும், பண்டங்களுமிருந்தன. அவர் அதைக் கொண்டுபோய் அமலியிடம் கொடுத்தார்.

“ஏண்ணே, வரும்போதெல்லாம் இவளுக்கு என்னத்தையாவது வேங்கிட்டுதான் வரணுமா... சின்ன பப்பாவா இவ...” அமலியின் அம்மா சின்னதாகக் கடிந்துகொண்டே பேசினார்.

“வீட்ல அண்ணி, ஆயிஷால்லாம் எப்படி இருக்காவண்ணே?”

“அவளுக்கென்ன சக்கர வியாதிதான். மத்தபடி எல்லாரும் சொகம்தான். ஆயிஷா காலேஜுக்குப் போறா. ஏதோ பரீட்சைக்கு படிக்கான்னு லீவு விட்ருக்கானுவ... அமலி நீ நல்லாயிருக்கியாத்தா. ஏன்... மாமா வீட்டுப் பக்கமே வர மாட்டேங்குற... ஒரு எட்டு வந்துட்டுப் போ. அந்த வெள்ளப்புறா முட்ட போட்டு அடைக்கி நிக்கிது.”

“நான் ஒரு நா வாரேன் மாமா.”

“காபி போடவாண்ணே?”

“நாக்கு பொசுங்க சூடா குடும்மா... பாதி ஜீனி போடு, போதும். காவாசி போட்டாக்கூட நல்லதுதாம்.”

“அண்ணிக்கி சக்கர வியாதின்னு சொல்லிட்டு உங்களுக்கு முத்திக்கிட்டு இருக்குபோலயே. சுத்தமா ஜீனி இல்லாமயே குடுக்கேன்.”

“அது செரி... எங்க மேலயா?”

“ஆமா... ரெம்ப நேரமா நீங்க வருவீகன்னுட்டுதான் காத்திருக்காவ.”

காக்கா இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறி, பெரிய பர்லாந்தைச் சந்திக்கப் போனார். அறையில் சமுத்திரமும், குருஸ் அண்ணனும், பெரிய பர்லாந்தும் காக்காவுக்காகக் காத்திருந்தார்கள்.

“பொறுத்துக்கணும். தொழுகைக்குப் போயிட்டேன். வந்ததும்தான் கடைல சுலைமான் சொன்னான். என்ன விஷயம்... ஏதும் பிரச்னையா... குரூஸும் வந்திருக்காரு?”

“ம்... பம்பாய்லருந்து திரவியம் அண்ணாச்சி வந்திருக்காரு. நாலஞ்சு வருஷத்துக்கு தூத்துக்குடி ஹார்பர்ல அவங்க யாவாரம் செய்யணுமாம். நிறைய நாட்டுலருந்து கொழும்பு வழியா சரக்கு கொண்டுவரப் போறாங்களாம்.”

“சரக்குன்னா என்ன கொண்டுவரப் போறாங்களாம்..?”

“அது தெரியல. ஆனா கண்டிப்பா அது சட்டப்படி குற்றமுள்ள சரக்காத்தான் இருக்கும். தங்கமா இருக்கும். இல்லாட்டி ஏதாவது வரி காட்டாம எடுத்துட்டு வர்ற சரக்கா இருக்கலாம். ஃபாரின் ரேடியோ மாதிரி. டெலிவிஷன் மாதிரிகூட இருக்கலாம். டெலிவிஷன் தெரியும்ல...”

“ம்... சின்ன சினிமாக் கொட்டகதான... வீட்டுக்குள்ளேயே வெச்சுக்கிற மாதிரி...” காக்கா சொன்னது, குருஸ் அண்ணாச்சிக்குத்தான் புரியவில்லை.

“என்னத்த வேணும்னாலும் இறக்குவோம்... ஏத்துவோம். நம்மால முடியாத காரியம் நம்ம தொழில்ல என்ன இருக்கு சொல்லுங்க.”

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் 43
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் 43

“திரவியம் அண்ணாச்சி என்ன சொல்றார்... அதுல நமக்கு என்ன கிடைக்கும்... ஆதாயமா, நட்டமா?”

“இதுல ஆதாயமா, நட்டமான்னு சொல்லத் தெரியல. பணமாப் பாத்தா ரெம்ப ஆதாயம். ஆனா, கௌரவமாப் பாத்தா ரெம்ப பெரிய நட்டம்.” இருவரும் புரியாமல் முழித்தார்கள்.

“இந்த ஹார்பர் எலெக்‌ஷன் நடக்குறதுல அவருக்கு இஷ்டமில்ல. அப்படி எதுவுமே நடக்காம காசி அண்ணாச்சிக்கி அந்தப் பதவிய விட்டுக் குடுக்கணுமாம். புக்கிங் ஆபீஸ் எலெக்‌ஷனையும்தான்.”

“யாரு அந்தக் கோமாளி பயலுக்கா?” குரூஸ் அண்ணன் நக்கலாகச் சிரித்தபடியே கேட்டார்.

“அவனுக்குக் குடுத்துட்டு நாம நக்கிட்டு போறதாமா... எலெக்‌ஷன் முடிஞ்சா யாரு ஜெயிக்கிறான்னு தெரிஞ்சுரப் போவுது. அதுக்கு அப்புறம் முடிவு பண்ணிக்கவேண்டியதுதான?”

“அதைத்தான் நானும் சொன்னேன். ஆனா மறு பேச்சில்லாம அந்தத் தாயோலிகிட்ட குடுத்துட்டுப் போகச் சொல்லுதாரு. இது மஸ்தான், வரதண்ணன் எல்லாம் சேந்து எடுத்திருந்த முடிவாம்.”

“அப்படில்லாம் தர முடியாதுன்னு சொல்லுங்க. அவக பம்பாய் ஹார்பர்ல பெரிய ஆளுகன்னா. நாமளும் கொறச்சு இல்ல... முடியாதுன்னு சொல்லுங்க பாத்துக்கலாம். என்னடே சமுத்திரம் நீ என்ன சொல்லுத...”

“நானும் அதத்தான் சொல்லுதேன். நாளைக்கி என்னையும், சின்ன பர்லாந்தையும், காசி அண்ணாச்சியையும் விருந்துக்குக் கூப்பிட்டிருக்காரு. விஷயம் இதுதான். நாலஞ்சு வருஷத்துக்கு ஹார்பர காசிகிட்ட குடுத்துடணும். பணத்தப் பத்தி பிரச்னயில்ல. வர்றதுல சமமா மூணு பங்கு. ஆனா பொறுப்ப மட்டும் காசிகிட்ட குடுத்துடணும்.”

“அதுக்கெல்லாம் போவாதீங்க. ஹார்பரையும் தர முடியாதுன்னு தீர்மானமா சொல்லிடுங்க.” எல்லோரும் காக்காவின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

“நீங்க என்ன சொல்லுதீக?”

காக்கா தீர்மானமாகச் சொன்னார். “நீ நாளைக்கி அங்க போ...”

சமுத்திரமும் குரூஸும் அவரைக் குழப்பமாகப் பார்த்தார்கள்.

“என்ன சொல்லுதீக பாய்... ஹார்பர குடுத்துட்டு... எல்லாம் வாயால சிரிக்க மாட்டான். இதுல எத்தன சாவு நடந்திருக்கு தெரியுமா... எத்தன பேரு செத்துருக்கான் தெரியுமா?”

“ஏ... சும்மாக்கிட சமுத்திரம். நான் அங்க போக மட்டும்தான் சொல்லுதேன். ஹார்பரத் தூக்கி அவர் கைல குடுக்கவா சொல்லுதேன்... என்ன பண்ணணுமோ அத நாமளே பண்ணித் தாறோம்னு சொல்லுவோம்.”

“அதெல்லாம் பேசிப் பாத்தாச்சு... ஒத்துக்கல...”

“நாளைக்கிப் போங்க. பேசுங்க... நிச்சயம் ஒத்துப்பார். நானும் கூட வாரேன்.”

பெரிய பர்லாந்து அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், சின்ன பர்லாந்தும் காசி அண்ணாச்சியும் வேறு திட்டம் போட்டுவைத்திருந்தார்கள்.

(பகை வளரும்...)