
“இரண்டு பகைக் கூட்டங்கள் சமாதானமாக இணையும்போது, ஆயுதங்கள் சற்று ஓய்வாயிருக்கின்றன. மீண்டும் சமாதானம் உடையும் தருணம், ஆயுதங்களின் வேகம் தாங்கவியலாததாயிருக்கும்!” - மூர்க்கர்கள்
இவர்கள் நால்வர் சந்திப்பில் என்ன பேசுகிறார்கள் என்பதை ஒட்டுக்கேட்கவும், உளவு பார்க்கவும் கஸ்டம்ஸ் ஆபீஸர் ஜனார்த்தனம் சமையல் செட்டு ஆள்போல உள்ளே வந்திருந்தார். திரவியம் அண்ணாச்சி ஜனார்தனத்தைக் கண்டுபிடித்துவிட்டார். ஜனார்தனத்துக்கு, கை காலெல்லாம் உதறல் எடுக்கத் தொடங்கியது. “வேற ஆட்கள் எத்தன பேரு உள்ள வந்திருக்கீக... செத்த எல்லாத்தையும் வரச் சொல்லு. தெரிஞ்ச மூஞ்சா யாராவது இருக்காகளான்னு பாக்குதேன்...” ஒவ்வொருத்தராக முன்வந்தார்கள். “அட பரமேஷ் சார்... நீங்க வைசாக் போர்ட்தான... நீங்களும் தூத்துக்குடி போர்ட்லதான் இருக்கீகளா?’’ பரமேஷ் முகத்தில் ஆயிரம் கேள்விகளோடு திரவியம் அண்ணாச்சியைப் பார்த்து விழித்தார்.
“அட எல்லாம் தெரிஞ்ச மூஞ்சிகதான். நாலு பேர்தானா. வேற யாரும் இருக்கீகளா?” எல்லோரும் அமைதியாக விழித்தார்கள். சமையல் செட்டு தவசுப்பிள்ளையிடம் கேட்டார்.
“அவ்வளவுதானா... வேற யாரும் இருக்காகளா அண்ணாச்சி?”
“இன்னும் ஒருத்தர் இருக்காரு!”
“யாரு?” சமையல் கூட்டத்தோடு நின்றுகொண்டிருந்த வேறொருவரையும் தவசுப்பிள்ளை காட்டிக்கொடுத்தார். “யாரு... செத்த வெளிய வாரீகளா?” அந்த ஆபீஸரும் தவசுப்பிள்ளையை முறைத்தபடியே நகர்ந்துவந்தார். “ஏன்... அவர முறைக்கிதீக ஜோர்ஜ் சார். தவசுப்பிள்ள அரசாங்கத்துக்கு உண்மையா இருப்பாருன்னு நம்பிட்டீகளா... அவரு நீங்க வேஷம் கட்டி வாறீகன்னு தகவல் சொன்னப்பவே என்கிட்டே சொல்லிட்டாரு. ஜோர்ஜ் சார் கொச்சி ஹார்பர்லயிருந்து உங்களையும் மாத்திட்டாகளா?”
இதற்கு முன்பு தம்மையெல்லாம் பார்த்திராத ஒருவர் எப்படித் தாங்கள் எந்த ஹார்பரிலிருந்து வந்திருக்கிறோம் என்பதைக் கண்டறிந்தார் என்று எல்லோரும் குழப்பத்திலிருந்தார்கள்.
“இதுகூடத் தெரியாட்டி பின்ன என்ன இதுக்குக் கடல்ல இறங்கி யாவாரம் பண்ணணும் சார்... சரி, தவசுப்பிள்ள... ஆபீஸருங்க எல்லாத்துக்கும் சாப்பாடு போட்டு அனுப்புங்க. வெறும் வயித்தோட அனுப்பாதீக. இவ்வளவு நேரம் செண்டு வெளிய எந்தக் கடையும் திறந்திருக்காது. வீட்லயும் சாப்பிட்டுட்டு வந்துருவேன்னு சொல்லிருப்பாக. வீட்டுப் பொம்பளைங்களும் சோத்துக்குத் தண்ணி ஊத்தி வெச்சிருப்பாக. நைட்டு இவ்வளவு நேரத்துக்குப் பிறகு பட்டினியா அனுப்பக் கூடாது. சரி கிளம்புங்க. நாங்க நாலு பேரும் முக்கியமான விஷயம் பேசவேண்டிக் கிடக்கு” எல்லோரும் அப்படியே நின்றுகொண்டிருந்தார்கள்.
“என்னத்துக்கு இப்போ நிக்கிதீக... வேற எதுனாச்சும் வேணுமா?”

“கோவர்ன்மென்ட்ல எங்களுக்கு நல்லா சம்பளம் கிட்டி. உங்ககிட்ட வாங்கித்தான் ஜீவனம் நடத்தணும்னு அவசியம் ஏதும் இல்லா” என்று ஜோர்ஜ் சார் தன் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டே சொன்னார். “நீங்க என்னதான் பேசுனாலும், என்னதான் பிளான் செஞ்சாலும், தூத்துக்குடி ஹார்போர்ல நாங்க இருக்குற வரைக்கும் ஒண்ணும் செய்ய ஏலாது.”
“சரி சார்... குட் நைட். கிளம்புங்க. ஜனார்த்தனம் சார்... பம்பாய் ஹார்பர்ல என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியும்ல... லேபர் யூனியன், லோடு மேன் சங்கத்தல்லாம் பகைச்சுக்கிட்டு யாரும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். வர்ற கப்பலுங்க ஒரு சரக்கும் இறக்கவும் முடியாது, ஏத்தவும் முடியாது. எத்தன மாசம் ஆனாலும் அப்படியே நிக்க வேண்டியதுதான். அஞ்சாறு வருஷம் முன்னாடி, பம்பாய் ஹார்பர்ல நடந்தது உங்களுக்குத் தெரியும்ல... உங்க டிபார்ட்மென்டுக்குத்தான் அது பெரிய பிரச்னயாச்சு. இங்க தூத்துக்குடிலயும் அது மாதிரி நடந்துறாம பாத்துக்கோங்க.”
“சரி, இப்போம் ஏன் அங்க ஒண்ணும் **** முடியல?” ஜோர்ஜ் சார் நக்கலாகக் கேட்டார்.
“ஏன் பம்பாய்ல ஹார்பர்ல ஒண்ணும் கிழிக்க முடியலன்னு கேக்குறீங்களா... வேகமாவே கிழிப்போம். எமெர்ஜென்சி பீரியட் எப்போ வந்துச்சோ, அப்பமே எல்லாம் போச்சு. அங்க இப்போம் வந்துருக்குற ஆபீஸருங்களும் கொஞ்சமும் எதுக்கும் வளையாம இருக்காவ. வேகமாவே அவக முதுக வளைப்போம்.இல்லாட்டி உடைப்போம்...”
ஜோர்ஜ் சார் நக்கலும் நையாண்டியுமாகச் சிரித்தார்.
திரவியம் அண்ணாச்சி குத்துச் சட்டிக்குள்ளிருந்து கையில் சிக்கிய ஒரு துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். “அப்பமே கொன்னு புதைச்சிருப்பேன். பழசெல்லாம் விட்டுட்டு இப்போம் யாவரத்துல இறங்கியாச்சு. இங்க வந்து தொந்தரவு பண்ணாம கிளம்புற வழிய பாருங்க.”
துப்பாக்கிச் சப்தம் கேட்டு, `பாசமலர்’ படம் பார்த்துக்கொண்டிருந்த காக்கா திரும்பிப் பார்த்தார்.
“ஒண்ணுமில்ல, நீங்க படம் பாருங்க...” அண்ணாச்சி கத்தினார்.
காக்கா பயந்தபடியே மெல்ல அங்கிருந்து கூட்டத்தை நோக்கி வந்தார்.
துப்பாக்கிச் சப்தம் கேட்டு வெளியே நின்றுகொண்டிருந்த கொடிமரம் என்னமோ ஏதோவென வேக வேகமாக உள்ளே ஓடி வந்தான். துப்பாக்கியோடு நிற்கும் திரவியம் அண்ணாச்சியைப் பார்த்தான். ஒரு நொடி சின்ன பர்லாந்தையும் பார்த்துக்கொண்டான்.
“உன்ன வெளியதானடே நிக்கச் சொன்னேன்?”

கொடிமரம் மலங்க மலங்க விழித்தபடி அமைதியாக நின்றான். மீண்டும் ஒரு முறை சின்ன பர்லாந்துக்கு ஏதும் பிரச்னையில்லையே என்று சரிபார்த்துக்கொண்டான்.
தூரத்தில் பண்ணையை நோக்கி வந்துகொண்டிருந்த சமுத்திரத்துக்கும் துப்பாக்கிக் குண்டு வெடித்த சத்தம் கேட்டது. தன் புல்லட்டை வேகமாகப் பண்ணையை நோக்கிச் செலுத்தினான்.
வேக வேகமாக வாசலில் தன் வண்டியை நிறுத்திவிட்டு, பண்ணைக்குள் அவசர அவசரமாக அங்குசத்தையும், நாட்டு வெடிகுண்டையும் எடுத்துக்கொண்டு நுழைந்தான். சமுத்திரமும் கொடிமரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
ஜோர்ஜ் சாரும், மற்ற ஆபீஸர்களும் மறைத்துவைத்திருந்த தங்கள் அரசாங்கத் துப்பாக்கிகளை எடுத்து வைத்துக்கொண்டார்கள். திரவியம் அண்ணாச்சியின் கையில் துப்பாக்கி இருந்தது. சுற்றிலும் லுங்கி கட்டி நிற்கும் ஆட்களின் கையில் துப்பாக்கி இருப்பதைப் பார்த்து சமுத்திரத்துக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் கஸ்டம்ஸ் ஆபீஸர்கள் என்பது அவன் புத்திக்கு எட்டவில்லை. பெரிய பர்லாந்தைப் பார்த்தான். அவர் நாட்டு வெடிகுண்டுகளை ஏந்தியிருக்கும் கையைக் கீழே இறக்கச் சொல்லி சைகை செய்தார்.
“நீ என்னடே... கைல இந்தச் சனியனத் தூக்கிட்டு வந்துருக்க... எல்லாருமே கஸ்டம்ஸ் ஆபீஸருங்க.”
“ஜோர்ஜ் சார்... அதெல்லாம் உள்ள வைங்க. அவன் நீங்க யாருன்னு தெரியாம கைல தூக்கிட்டு வந்துட்டான். செரி நீங்க கிளம்புங்க. நாங்க பேசணும். உங்க வேலைய நீங்க பண்ணுங்க. எங்க வேலைய நாங்க பாக்குதோம். போயிட்டு வாங்க. நிம்மதியா தூங்குங்க. நாளைக்கி காலைல வேகமா ஆபீஸுக்குப் போயிட்டு உங்க பெரிய ஆபீஸர்கிட்ட நடந்ததைச் சொல்லுங்க.”
அண்ணாச்சி இரண்டு கரத்தையும் கும்பிட்டு அவர்களை வழியனுப்பினார்.
“குட் நைட்!”
எல்லா ஆபீஸர்களும் கிளம்பினார்கள். சமுத்திரம், `எல்லாரும் ஆபீஸருங்களா?’ என்று ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“போறதுக்கு வண்டி இருக்கா... இல்ல வந்து விடச் சொல்லவா..?”
ஜோர்ஜ் சார் பண்ணைக்கு வெளியே சிறிது தூரம் நடந்துவிட்டு. ஓரிடத்தில் நின்றார். மூன்று அரசாங்க பிளசர்கள் இருளுக்குள் கருவக்காட்டுக்குள்ளிருந்து வந்தன. ஐந்து பேரும் அதில் ஏறினார்கள். ஏற்கெனவே அதில் மூன்று, நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள்.
ஆபீஸர்கள் போவதைப் பண்ணை வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டு உள்ளே கோபமாக வந்தார் அண்ணாச்சி. கடைவாய்ப் பற்களை அவர் நறநறவெனக் கடிப்பது கன்னத்தில் தெரிந்தது.
“மரியாதையா சொல்லுங்க. யாருலே தகவல் சொன்னது?” தன் துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு கேட்டார். சமுத்திரத்தையும் கொடிமரத்தையும் சந்தேகத்தோடு பார்த்தார்.
சின்ன பர்லாந்து, துப்பாக்கியின் நடுவே குறுக்கிட்டுப் பேசினார். ``இந்த மாதிரி அவனுகள சந்தேகப்படுறதுன்னா பேச்சுவார்த்தைக்கு ஒரு அர்த்தமுமில்ல. எங்களுக்குப் பிடிக்கவுமில்ல.’’ சமுத்திரம், சின்ன பர்லாந்தை ஆச்சர்யமாகப் பார்த்தான். தனக்கும் சேர்த்து அவர் ஏண்டுகொண்டு பேசுவது அவனுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.
பெரிய பர்லாந்துக்கும் அது ஆச்சர்யமாகயிருந்தது!
(பகை வளரும்...)