மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 48

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 48
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 48

“வேட்டை நாய்களுக்கு வன்மத்தைப் பழக்க முடியும்... ஆனால், அதை மறக்கடிக்க முடியாது!” - மூர்க்கர்கள்

திரவியம் அண்ணாச்சியின் யோசனைப்படி மூன்று குழுக்களும் ஹார்பர் தலைமைக்கு எலெக்‌ஷன் இல்லாமல் சீட்டுக் குலுக்கிப்போட்டு முடிவு செய்துகொள்ள ஒப்புக்கொண்டுவிட்டன. சமுத்திரத்துக்கு மட்டும்தான் இந்த யோசனை அறவே பிடிக்கவில்லை. பெரிய பர்லாந்திடம் சொல்லியும் தன் பேச்சு அங்கு எடுபடவில்லை என்பதில் அவனுக்குக் கோபமாக இருந்தது.

நள்ளிரவுக்கு மேல் பர்லாந்துகளின் பிளசர்கள் அவரவர் வீடுகளுக்குள் நுழைந்தன. நெடுநாள்களுக்குப் பின்னர் தன் தம்பியின் மாடி அறை ஜன்னலைப் பார்த்தார். சின்ன பர்லாந்து தன் அறைக்குப் போய் விளக்கை எரியவிட்டு ஜன்னல் வழியாகத் தன் அண்ணனின் வீட்டைப் பார்த்தார். ஒரு நொடி இரண்டு பேரும் பார்த்துவிட்டார்கள். இரண்டு பேருக்கும் பார்வையை எதிர்கொள்ளச் சிறு தடுமாற்றம் தெரிந்தது. பிளசரிலிருந்து காக்கா இறங்கி வந்தார்.

“செரி... அப்போம் நான் கிளம்புதேன். பழசு எல்லாத்தையும் மறந்து அண்ணன், தம்பி ரெண்டு பேரும் இனிமே ஒண்ணுமண்ணா யாவாரம் செய்ங்க. செரி... நாளைக்கி காலைல ரெண்டு சித்தாள்கள அனுப்பட்டா?” பெரிய பர்லாந்து எதுக்கு என்பதுபோலப் பார்த்தார்.

“ரெண்டு வீட்டுக்கும் நடுப்புற போற அந்த சுவர இடிச்சு விட்டுடலாம்...’’

“காலம் வரப்போ பாத்துக்கலாம். செரி நீரூ கிளம்பும். ரெம்ப பேசுதீரு...’’

காக்கா சிரித்துக்கொண்டே சின்ன பர்லாந்தின் ஜன்னலை ஒரு முறை பார்த்துவிட்டு பிளசரில் ஏறிக் கிளம்பினார்.

சின்ன பர்லாந்து, அந்த நேரத்தில் காசி அண்ணாச்சிக்கு போனைச் சுழற்றினார். முதல் ரிங்கிலேயே போனை எடுத்தார் காசி அண்ணாச்சி. சின்ன பர்லாந்து சொன்னார்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 48
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 48

“நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ காசி. நாளைக்கி அண்ணாச்சி குலுக்கலுல என் பேரச் சேக்க வேண்டாம். உம்ம பேரையும் சேக்கக் கூடாது.

“ஏன்... என்னத்துக்கு... உம்ம அண்ணனுக்கு நீரு விட்டுக்கொடுத்தா கொடுத்துக்கோரும். நான் எதுக்குக் கொடுக்கணும்?”

“கைய முளிக்கி மேல தறிச்சிப் போட்டுடுவேன். சோறு திங்க கை இருக்காது சொல்லிட்டேன்.”

“இது நல்ல கதையாவுல்ல இருக்கு. எங்க அண்ணன்கிட்டயிருந்து புடுங்கி, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து யாவாரம் பண்ணலாம்னு சொல்லிட்டு, இப்போம் நீங்க ரெண்டு பேரும் சேந்துக்கப் போறீங்களா?”

“அவருகூட நான் கூட்டுச் சேருறதுங்குறது ஒரு காலத்துலயும் நடக்காது. இப்போம் குலுக்கலுல என் பேரு வருதுன்னு வெச்சிக்க...”

“அதுக்குத்தான காத்திருந்தீக... அதுக்குத்தான இத்தன போராட்டம்...” காசி அண்ணாச்சி அவசரப்பட்டுச் சொன்னார்.

“மூடிட்டு சொல்றத மட்டும் கேளும். அவர் இவ்வளவு தூரம் இறங்கி வருவார்னே நான் நினைச்சுப் பாக்கல. இப்போம் குலுக்கலுல உம்ம பேரு வருதுன்னா... உமக்கு எதுக்க உக்காந்துக்கிட்டு அவரு பதில் சொல்லிக்கிட்டு இருப்பாரா?”

“அதுக்கு ஒத்துக்கிட்டுத்தான எல்லாரும் கைய நீட்டி சத்தியம் பண்ணிட்டு வந்தோம்?”

“நிறுத்து. குலுக்கல்ல என் பேரு இருக்காது. உன் பேரையும் சேக்கக் கூடாது. அவர்தான் அந்தச் சேர்ல உக்காரணும். உனக்குத் தேவ உன் ஆளுகளுக்கு பாமாயில் யாவாரம். அதுக்குத்தான் விருதுநகர் யாவாரிங்கல்லாம் உனக்கு காசக் கொட்டித் தீக்குறாங்க. ஹார்பருக்கு பாமாயில் வந்தா, அந்தப் பக்கமே நான் வர மாட்டேன். தலையிடவும் மாட்டேன். அதுல எனக்கு எந்தப் பங்கும் வேண்டாம்...”

“காலையில திரவியம் அண்ணாச்சிக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிடும்” காசி அரை மனதாகச் சொல்லிவிட்டு போனை வைத்தார்.

சமுத்திரத்துக்குக் கோபம் தீரவில்லை. கடலை வெறித்துப் பார்த்தபடி தோணியின் முனையில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தான். “ச்சே...எல்லா சாவும் ஒரு நொடியில கேலிக் கூத்தாகிருச்சே...” அவனுக்குள் ஆத்திரம் பீறிட்டு வந்தது. தன் கண்முன்னால் இந்த மூவரின் பகைமைக்காகவும், ஹார்பருக்காகவும் இதுவரை வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் செத்துப்போனவர்களெல்லாம் அவன் மனதில் வந்து போனார்கள். ரோசம்மாள்கூட இவர்களின் பகைக்காகத்தானே செத்துப் பிழைத்துக் கிடக்கிறாள்... சமுத்திரம் மனதுக்குள்ளேயே விசும்பினான். பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் அலைகள் மின்னி மினுங்கின. அப்போதே ரோசம்மாளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. மணி எப்படியும் இரண்டரை தொட்டிருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்தேவிடும். அதுவரை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. புல்லட்டை எடுத்துக்கொண்டு திரேஸ்புரத்துக்குக் கிளம்பினான் சமுத்திரம்.

ரோசம்மாளை ஏதோ ஒன்று தூக்கத்திலிருந்து எழுப்பியது. எழுந்ததுமே அவளுக்கு முதலில் சமுத்திரத்தின் ஞாபகம்தான் வந்தது. அதே சமயத்தில், தூரத்தில் எங்கோ புல்லட்டின் சப்தம் அவளுக்குக் கேட்டது. அது பிரமை என்றுதான் முதலில் நினைத்தாள். இல்லை. சப்தம் கிட்டே நெருங்கி வருகிறது என்பதைப் புரிந்துகொண்டவள், அவசர அவசரமாகப் பின்கட்டுக்குச் சென்று முகத்தைக் கழுவி, சேலைத் தலைப்பில் துடைத்துக்கொண்டாள். சப்தம் இன்னும் நெருங்கி வந்தது. உடுத்தியிருந்த சேலையைச் சரிசெய்துகொண்டு வாசல் கதவை நெருங்கியபோது புல்லட் சப்தம் தெருமுனையில் நின்றடங்கி அமைதியாவது அவளுக்குக் கேட்டது. நிச்சயம் அது சமுத்திரம்தான் என்ற எண்ணத்துடன் ரோசம்மாள் தெருமுனையை நோக்கி நடந்தாள்.

சமுத்திரத்தின் புல்லட் சப்தமும், ரோசம்மாள் கதவைத் திறக்கும் சப்தமும் மரியதாஸுக்கும் கேட்டுக்கொண்டுதானிருந்து. அவரைப் பல நாள்களாகத் தூங்கவிடாமல் செய்யும் சப்தங்கள் அவை. ரோசம்மாள் தன் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்துவருவது தெரிந்தது. சமுத்திரத்துக்குத் தெரியும், அவள் எப்படியும் தன்னைப் பார்க்க வந்துவிடுவாளென்பது. எதுவும் பேசிக்கொள்ளாமல் அவள் புல்லட்டில் ஏறிக்கொண்டாள். சமுத்திரம் தோணியை நோக்கி புல்லட்டைத் திருப்பிச் செலுத்தினான்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 48
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 48

அன்று மாலை வ.உ.சி மைதானத்தில் கோச், ஜானை கிரவுண்டுக்கு வெளியே போகச் சொல்லித் திட்டிக்கொண்டிருந்தார். ஹாக்கி பேட்டை பிடித்துக்கொண்டு பதிலுக்கு அவனும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கத்திக்கொண்டே வெளியே வந்தான். ராம் தாமதமாகத்தான் அங்கு வந்து சேர்ந்தான்.

“என்ன ஆச்சுடா... மேட்ச் முடிஞ்சுதா... ஏன் கிரவுண்டுக்கு வெளிய உக்காந்திருக்க?” ஜான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் அருகிலிருந்த கிருஷ்ணன்தான் சொன்னான்.

“அந்த ராஜபாண்டி டீம்ல இருக்குறவன, நம்மாளு ஓங்கி காலுலயே போட்டுட்டான். கோச் இனிமே கிரவுண்டுக்குள்ளேயே வரக் கூடாதுன்னு சொல்லிட்டாரு.”

“என்னதுக்குடா... அவனப் போயி அடிக்கிற?”

“மொத அவன்தாண்டா அடிச்சான்” செம்மண் தூசி படிந்த தன் சாக்ஸைக் கழற்றிக் காண்பித்தான் ஜான். கால் சிவந்து வீங்கியிருந்தது.

“இந்த ராஜபாண்டி ஓவரா ஆடுதாம். அவங்கப்பன் காசி இப்போம் எம்.எல்.ஏ-கூட இல்ல. அதுக்கே இவனுக்கு இவ்வளோ திமிரு.” ஜான் சொன்னான்.

“அந்த கோச் அவனுக ஆளு.”

“அவனுக ஆளுன்னா?” ராம் கேட்டான்.

“ஒரே சாதி... எம்.எல்.ஏ சிபாரிசுல வேல வாங்கினதால, அவரு மவனுக்கு சலுகை குடுக்காரு.’’

ராம் சிறிதுநேரம் யோசித்தான்.

“சரி விடு. இன்னிக்கி இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துடலாம்”

மணி ஏழாக ஐந்து நிமிடமிருந்தது. விளையாடிக்கொண்டிருந்தவர்கள் கிரவுண்டை விட்டு வெளியே வந்து அங்கிருக்கும் ஸ்டேடியத்தில் வந்தமர்ந்தார்கள். காசி அண்ணாச்சியின் மகன் ராஜபாண்டி, ஜானையும் ராமையும் முறைத்துக்கொண்டே வந்தான். வழக்கம்போல ஏழு மணியானதும் கரன்ட் கட் ஆனது. அந்த நேரத்தில், ராஜபாண்டியின் முகத்தில் டி-ஷர்ட்டைப் போட்டு இறுக்கமாக மூடி, சப்தம் வராமல் அவன் தலையை மட்டும் நிமிர்த்திப் பிடித்துக்கொண்டு, உடலை தரதரவென ஸ்டேடியத்தின் படிகளில் படிய தட தடவென கீழே இழுத்துப்போனார்கள் ஜானும் ராமும்.

ராஜபாண்டி முரண்டுபிடிக்க அவனைப் பாத்ரூம் பக்கமாக இழுத்துக்கொண்டு போய் அடுத்த அரை மணி நேரத்துக்கு மரண அடி அடித்தார்கள் இருவரும். வாயில் டி-ஷர்ட்டை அழுத்தியிருந்ததால் அவனால் சப்தம் போடவும் முடியவில்லை.

அடுத்த அரை மணி நேரத்தில் கரன்ட் மீண்டும் வந்தது. ராஜபாண்டி உடம்பெல்லாம் காயத்தோடு ஸ்டேடியத்தின் கீழே கிடந்தான். கோச்தான் முதலில் பார்த்து ஓடிவந்து அவனைத் தூக்கினார். ஸ்டேடியப் படிகளிலிருந்து இரண்டு டீமின் ஆட்களும் இறங்கி ஓடிவந்தார்கள். அதில் ஜானும் ராமும்கூட இருந்தார்கள்.

ராஜபாண்டி கோபமாக ஜானைப் பார்த்தான்.

“இவனுங்க ரெண்டு பேருதாம் சார் தனியா இழுத்துட்டுப் போய் அடிச்சானுவ.” கோச், ராஜபாண்டியைப் பார்த்துக்கொண்டே நின்றார்.

“சரி வா...” என்றபடி அவனுக்கு மருந்து போட அழைத்துக்கொண்டு போனார்.

“மொத அந்த அறுதலி நாய்கள போலீஸுல பிடிச்சுக் குடுங்க சார். இல்ல ஆபீஸ் ரூம்ல போயி எங்க அப்பாவுக்கு போன் அடிக்கேன்.”

“ஏய் ராஜபாண்டி விடுடே... எப்பம் பாரு அவனுங்களையே சொல்லிக்கிட்டு... அவனுக ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் என்கூடத்தான் பேசிக்கிட்டு இருந்தானுவ. வேணும்னா உன் பசங்களையே கேட்டுப் பாரு.” ராஜபாண்டியின் ஆட்களும் கோச் சொன்னதுதான் உண்மை என்றார்கள்.

தன் வாயைக் கட்டிய டி-ஷர்ட் யாருடையது என்று ராஜபாண்டி தேடினான். அதுவும் அவனுடைய நெருக்கமான நண்பனுடையதாக இருந்தது, ராஜபாண்டிக்கு பெரும் குழப்பத்தை உண்டாக்கியது.

உடம்பெல்லாம் வலியோடு கிடந்தவனுக்கு அடுத்த அதிர்ச்சியும் காத்திருந்தது.

(பகை வளரும்...)