மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 54

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 54
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 54

“யானைப்பாகனுக்கு யானையால்தான் சாவு. பேயாய்த் திரிபவனுக்குச் சவுக்கால்தான் சாவு!” - மூர்க்கர்கள்

கடா பாண்டியின் அண்ணனை, சமுத்திரம் தனது புல்லட்டில்வைத்து அவன் வீட்டில் கொண்டுவந்து விட்டான். சின்ன வயதில் வீட்டைவிட்டு ஓடியவனுக்கு, அப்போது பெரியதுபோல் தெரிந்த தனது வீடு மிகவும் சிறியதாகத் தெரிந்தது. அப்போது எட்டாமல் உயரமாகத் தெரிந்த கதவும், ஜன்னலும், திண்ணையும் இப்போது மிகவும் உயரம் குறைந்து தெரிந்தன. வீடு சாத்திக் கிடந்தது. “எய்யா...” என்று வெளியிலிருந்து சப்தம் கொடுத்தான். அசலூர்க்காரனைப்போல் தெரிந்ததால், அக்கம் பக்க வீட்டுக்காரர்கள் ஓரிரண்டு பேர் வந்தார்கள். அவனை யாரோ போலப் பார்த்தார்கள். அவனுக்கும் யாரையும் அடையாளம் தெரியவில்லை. `யார்யா வேணும்?’ சமுத்திரத்திடம் கேட்டார்கள்.

“கருவாட்டுக்காரரோட மூத்த மகேன் ஓடிப்போனதா சொல்வாங்கல்ல... அது நான்தான்...”

“யாரு சிவங்காளையா?”

“ஆமா” என்று தலையை ஆட்டினான்.

“ஏ ஐயா... வளந்து அடையாளம் தெரியாம ஆகிட்டியே... உங்கய்யா கருவாட்டு யாவாரத்துக்குப் போயிருக்கான். வார நேரம்தான்...’’ பேசியவரை அடையாளம் தெரியாமல் கூர்ந்து பார்த்தான் சிவன் காளை.

“என்னடே அடையாளம் தெரியலையா...நாந்தான் பூசாரி மாரியப்பன்.”

சிவனுக்கு இப்போது அடையாளம் தெரிந்தது. “ஆமா... மாமோய் எப்பிடி இருக்கீக..?”

“நல்லா இருக்கேண்டே... நீ ஆளு நல்லா ஃபஸ்ர்ட் கிளாஸா இருக்கியேடே... சினிமாக்காரன் மேறில்ல இருக்க!”

“அத்தை எப்படி இருக்காவ மாமா?”

“உன் அத்தை தவறிப்போயிட்டால்ல... நாலஞ்சு வருஷம் ஆச்சு. காமால வந்து கவனிக்காம வுட்டுட்டோம்யா...”

“ஐயோ...” வருத்தமாக உச்சுக்கொட்டினான்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 54
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 54

“மணி என்ன பண்ணுதான்?”

“அவன் மெட்ராஸ்ல ஒரு சேவுக்கடைல வேலை பாக்கான்யா. இத்தனை வருஷம் எங்க இருந்தடே... பம்பாய்ல இருக்கேன்னு பேச்சு... உண்மைதானா?”

“ஆமா... பம்பாய் ஹார்பர்லதான் இருந்தேன்.”

“கல்யாணம் ஆச்சாடே... யாராவது வடக்கத்திப் பிள்ளைய கல்யாணம் கெட்டிருக்கியாடே... என்கிட்டே மறைக்காமச் சொல்லு. உங்கப்பன்கிட்ட நான் பேசுதேன்.”

“அதெல்லாம் இல்ல மாமா...”

“செரிடே... உன் தம்பி உன்னப் பாக்கத்தான் ஓடி வந்தான்னு சொன்னானுவ. அங்கதான் கிடக்கானா?”

“எல்லாரும் அதான் சொல்லுதாங்க... அவென் அங்க வரலயே மாமா...”

“மெட்ராஸ்ல கண்டா இருக்கானோ... சினிமாக்காரனுவளைப் பாக்கணும்னு சொல்லிக்கிட்டே கிடந்தான். வண்டி ஏறிட்டாம்போல. சரிடே... கதவு சும்மாத்தான் சாத்தியிருக்குன்னு நினைக்கேன். தள்ளிப் பாரு...”

அவர் சொன்னவுடன் நெட்டித் தள்ள அருகில் வந்தான். கதவில் கைவைக்கும் நேரம் வேறு யாரோ கதவைத் திறந்தார்கள். கடா பாண்டியின் காதலி ஜெசிந்தாதான் திறந்தாள். தன் வீட்டின் வெளியே யாரோ வேற்று ஆள் ஒருவன் நிற்பதைப் பார்த்துக் கொஞ்சம் குழப்பமாகப் பார்த்தாள். சிவன் காளையும்தான்.ஏழு மாத சூலி வயிற்றோடு ஒரு பெண் தன் வீட்டுக்குள்ளிருந்து வருவதைப் பார்த்து சிவன் காளைக்கும் குழப்பம். அதற்குள் அவன் அப்பா கருவாட்டு யாவாரம் முடிந்து கடவாபெட்டிக் கட்டிய சைக்கிளோடு வந்துவிட்டார். தன் வீட்டின் முன் அக்கம் பக்கத்து ஆட்கள் நிற்பதையும், அசலூர் இளந்தாரி ஒருவன் நிற்பதையும் கண்டு பார்வையைக் கூராக வைத்துப் பார்த்தார், கண்டுபிடித்துவிட்டார்.

“ஏலே சிவங்காள...” ஐயா கத்தி அழுதுவிட்டார். “என்ன அநாதப்பயலா ஆக்கிவெச்சுட்டு ரெண்டு மக்களும் இப்படி கண்காணாமப் போயிட்டீகளேடே... என்ன பாவம்டே செஞ்சேன் நான்...’’

“ஏய்... அழாதீரும். அதாம் சீமராசா கணக்கா வந்துட்டான்ல... இங்கருந்து பொழச்சா இப்படிப் பொழைக்க முடியுமா... என்னமா வந்துருக்கான்... கண்ணு பட்டுரும். உள்ள கூட்டிட்டுப் போயிரும். தெரு மண்ணெடுத்து சுத்திக் கழிச்சு முச்சந்தில போடும்...”

தெரு ஜனங்கள் கலைந்தார்கள். சிவனுக்கு இன்னும் அந்தச் சூலிப்பெண் யாரென்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததுமே கேட்டான். “யாருப்பா அது..?”

“உன் தம்பி சம்சாரம்டா... ஏழு மாச சூலியா இருக்கா.”

“ஓ... அவனுக்குக் கல்யாணம்லாம் ஆகிடுச்சா?’’ அந்தப் பெண்ணைப் பார்த்துச் சிரித்தான்.

“உங்க பேரு என்ன?”

ஜெசிந்தா அமைதியாக இருந்தாள். தன்னோடு பேச விருப்பமில்லாதவளைப்போல் நினைத்துக்கொண்டான்.

``வேதக்காரப் பிள்ளடா... பாண்டி விரும்பிக் கட்டிக்கிட்டான். பேரு ஜெசிந்தா. சிலுவமிக்கேல்னு சொல்லுவாங்கல்ல... அவரு மக.’’

“ஓ... செரி. அவனை எங்க... எல்லாரும் என்னைப் பாக்கத்தான் வந்திருக்கான்னு சொல்லுதானுவ. பம்பாய்க்கா வண்டி ஏறுனான்?”

“உன்கிட்ட வரலல்ல... நினைச்சேன். நினைச்சது சரியாத்தான் போச்சு. அப்போ என் சாமி பாண்டி நிச்சயமா பெரிய பம்பாய்க்கித்தான் வண்டி ஏறிட்டான்.”

ஜெசிந்தா சேலைக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு சப்தமில்லாமல் குலுங்கி அழுவது தெரிந்தது. இவன் அப்பாவும் கண்ணிலிருந்து நீர்மாலை உதிர்த்தார். சிவனுக்கு ஏதோ பிரச்னை என்பது தெளிவாகப் புரிந்தது.

“என்ன ஆச்சு... சொல்லுங்களேன்...’’ பொறுமையிழந்து கேட்டான்.

“என்ன ஆச்சுன்னு தெரியலடே... ஆனா உன் தம்பி செத்து ஆறு மாசமாச்சுடே... தீவாளிக்கி முத நாத்து காணாமப்போனவன்தாண்டே... பொணமாக்கூட வீட்டுக்கு வரல...”

சிவன் காளைக்கு அதிர்ச்சியாக இருந்தது. தன் சின்ன வயது தம்பியின் முகம் வந்து வந்து போனது. அவனுக்கு அடக்க முடியாமல் அழுகை வந்தது. ``நல்லா விசாரிச்சீகளா... எங்குனயாவது தூரம் தொலைவுக்கு வண்டி ஏறியிருக்கப்போறான்.’’

“தூரம் தொலைவுக்குப் போறதுக்கு அவனுக்கு என்ன சோலி வந்துச்சு... போனவன் இவள இப்படி விட்டுட்டு எங்குனயாவது நிப்பானா... எங்களுக்கு நம்பிக்கை செத்துப்போச்சுடா. இங்கதாம் எவனோ அவன அடிச்சுக் கொன்னுருக்கானுவ. எனக்கு நல்லாத் தெரியும்... இங்க ஹார்பர் வேலைக்குத்தாண்டா போயிட்டு வந்துக்கிட்டு இருந்தான். அப்பப்போ கையெல்லாம் கறி மருந்து வாடை வந்துச்சு. அப்போமே நினைச்சேன். என்னத்தையோ செய்ய காத்திருக்கான்னு...”

சிவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு, மூக்கும் கீழுதடும் ஆடின.

“யாருப்பா பண்ணிருப்பானுவ?”

“தெரியலையேய்யா... ஆனா நிச்சயமா கண்ண மூடிட்டாம். அது உறுதி. என்ன சித்ரவதை செஞ்சு கொன்னானுவளோ..?” மகனை இழந்து கருவாட்டுக்காரார் கிடந்து துடித்தார். ஜெசிந்தாளும் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

வீட்டுக்குள் இருக்க முடியாமல் விறுவிறுவென வெளியே வந்து ஒரு மறைவிடத்தில் நின்று சிகரெட் பற்றவைத்தான். தூரத்தில் பெட்டியெல்லாம் உப்பு ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் போய்க்கொண்டிருந்தது. அதே ரயிலை ஊரின் வேறொரு முனையிலிருந்து சிகரெட் பிடித்தபடியே கொடிமரம் பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் நிம்மதியின்றி இருந்தான். ‘வந்திருப்பவன் மோப்பம் பிடித்து, தன்னைத் தேடி வந்தால் என்ன செய்வது... வந்தால் என்ன… இவனையும் முடித்து பன்றிக்கறி போல கூறு போட்டு கடா பாண்டியின் மிச்ச சொச்ச சதைகளைப் போட்டதுபோல வளர்ப்பு நாய்களுக்கும், தெரு நாய்களுக்கும் வீசிவிட வேண்டியதுதான்’ கேள்வியும் பதிலும் அவன் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 54
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 54

ஏனோ இன்று சமுத்திரத்துக்கும் கடா பாண்டியின் நினைவாக வந்து, அவனைத் தூங்கவிடாமல் செய்தது. எழுந்து போய் தோணியின் நுனியில் நின்றுகொண்டு ஒரு பீடியைப் பற்றவைத்து இழுத்தான்.

சிவன் காளை, தன் தம்பியைப் பற்றித் தீவிரமாகத் தேடவும், விசாரிக்கவும் தீர்மானித்துவிட்டான். ஒரு மாதம் இங்கே விடுப்பு போட்டு இருக்க நினைத்தவன், இப்போது ஜெசிந்தாளுக்குக் குழந்தை பிறந்ததும் போகலாமென்று முடிவுசெய்தான். நாளை காலை, முதல் வேலையாக கடா பாண்டி வேலை செய்த இடத்திலும், சமுத்திரத்திடமும், அவன் நண்பர்களிடமும் விசாரிக்க வேண்டுமென்று தோன்றியது. அவனுக்கு வீட்டுக்குள் போக மனசே வரவில்லை.

அதேநேரம் ஜெசிந்தா ஒரு சிறிய பெட்டியில் எடுத்துவைத்திருந்த பெரிய மிளகைப்போல் காய்ந்து, உலர்ந்து, சுருங்கிக்கிடந்த கடா பாண்டியின் கண்களை எடுத்துப் பார்த்தாள். அந்தக் கண்கள் எந்தத் திசையில் வைத்தாலும் அவளையே ஏக்கமாகப் பார்ப்பதுபோல் தெரிந்தது.

காலை விடிந்தும் விடியாத பொழுது. தன் அப்பாவின் கருவாட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு சமுத்திரத்தைப் பார்க்கக் கிளம்பினான் சிவன் காளை. ஆனால், அவன் வழியில் கண்டது கொடிமரத்தை!

(பகை வளரும்...)