
“பகையுணர்வுக்கு ஆண், பெண் பேதமில்லை... தன் உடலை அவமானப்படுத்துபவனை நரகலைப்போல அவமதிக்கிறாள் பெண்!” - மூர்க்கர்கள்
கடா பாண்டியின் அண்ணன் சிவன்காளை, தனது தம்பி குறித்து ஏதாவது தகவல் கிடைக்குமாவென சமுத்திரத்தைப் பார்ப்பதற்காகக் கிளம்பினான். லூர்தம்மாள்புரத்தைத் தாண்டி கடற்கரைப் பாதைக்குப் போகும் வழியிலேயே அவன் கொடிமரத்தைப் பார்த்துவிட்டான். அப்போது, பனங்காட்டில் நின்று கள்ளு குடித்துக்கொண்டிருந்தான் கொடிமரம். சிவன்காளை அவனைப் பார்த்ததுமே தன் சைக்கிளை நிறுத்தி, “அண்ணே...” என்றழைத்து வணக்கம் சொன்னான்.
கொடிமரமும் அவன் வருவதை தூரத்திலேயே பார்த்துவிட்டான். இருந்தாலும், பனைமட்டைக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு கள்ளு குடிப்பதைப்போல் பாவனை செய்துகொண்டிருந்தான். சிவன்காளை குரலைக் கேட்டதும், அப்போதுதான் அவனைக் கவனிப்பதுபோல, “அட வாய்யா பம்பாயி... என்ன இந்தப் பக்கம்... எதும் சோலியாவா?” என்று கேட்டான். அவன் ஏதோ சொல்ல வருவதற்குள் “வா ஒரு மடக்கு குடிச்சுட்டுப் போ” என்ற கொடிமரம், பச்சைப் பனைஓலையை விரித்து மடித்து, குழிபோல் ஆக்கி சிவன்காளையின் கைகளில் திணித்தான்.
“இல்லண்ணே சுண்ணாம்பு பதினி இருந்தா ஊத்துங்க... போதும்.”
“அட இன்னும் சின்ன பிள்ளையாடே நீ... நான் பொறந்தப்ப சேனத் தண்ணியாவே இந்தப் பனம்பாலைத்தான் ஊத்துனா என் பாட்டி.”

பனையேறியார் அவன் கையிலிருந்த மட்டையில் கள்ளை ஊற்றினார். போதும் போதும் என்று தடுத்தபோதும் விடுவதாயில்லை. அருகிலேயே ஒரு மண்சட்டியில் வதக்கிய பன்றிக்கறி இருந்தது. “கட்டக்கால் சாப்பிடுவியா?” தலையாட்டிக்கொண்டே அதில் இரண்டு விள்ளலை எடுத்து வாயில் போட்டு சவக்கினான் சிவன்காளை.
கொடிமரம் அவனை அழைத்துக்கொண்டு மெல்ல நாலெட்டு எடுத்துவைத்தான். சிவனுக்கு முகம் வியர்த்து, நடையில் தள்ளாட்டம் வந்தது. இருவரும் அருகிலிருந்த பனை மர நிழலில் போய் நின்றார்கள்.
“இப்போம் சொல்லுடே... என்ன சோலி இங்க..?”
“என் தம்பி விஷயம்தான். எங்கய்யா அவன் செத்துப்போயிருப்பான்னு சொல்லுதாவ... யாராவது இங்க ஊர்க்காரனுங்கதான் கொன்னு புதைச்சுருப்பானுவன்னு நினைக்காரு. பாவம் சின்னப் பய... எனக்கு இன்னும் அவன் எங்குனயோ உயிரோட இருப்பான்னு நம்பிக்கை இருக்கு... அதாம் கடைசியா அவனைப் பார்த்தவங்ககிட்ட விசாரிக்கலாமுன்னு சமுத்திரம் அண்ணனையும், குரூஸ் அண்ணனையும் பாக்கப் போய்க்கிட்டு இருக்கேன்” என்றான்.
“நான் ஒண்ணு சொல்றேன் கேளு. உன் தம்பிய காங்கலைன்னு போலீஸ்ல வேணும்னா ஒரு கம்ப்ளெயின்ட் குடுடே. இன்ஸ்பெக்டர் நம்ம ஆளுதான். நானும் கூட வாரேன்... ஒரு மாசத்துக்குள்ள எங்க இருந்தாலும் ஆளைக் கண்டுபிடிச்சுக் குடுத்துருவானுவ. ஆனா, நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேண்டே... அதும் கொஞ்சம் காதுல போட்டுக்கோ. அவன் ரெம்ப நாளா ரஜினிக்கி ரசிகர் மன்றம் வெய்க்கேன். போஸ்டர் அடிக்கேன்னு சுத்திக்கிட்டு இருந்தான். அதுல ஊருக்குள்ள நிறைய கடன்பட்டுட்டான். சீட்டுக் காசை வேற திரும்பக் குடுக்கலைன்னு பேச்சு. ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாடி நம்ம பய ஒருத்தன், மெட்ராஸ் வண்ணாரப்பேட்டையில வெச்சு ஒருத்தனைப் பார்த்துட்டு, `பாண்டி...’ன்னு கூப்பிட்டிருக்கான். ஆனா, கூப்பிடக் கூப்பிட காது கொடுக்காம ஆளு ஓடியே போயிட்டானாம். மெட்ராஸ்ல ஒங்களுக்கு ஒறவுக்காரங்க ஆரும் உண்டான்னு விசாரி. இல்லை ரசிகர் மன்றத்துப் பயலுவ பொடதிலயே ரெண்டு போடு... ஒளறிடுவானுவ.”
“ஓ... அதாம் விஷயமா... சினிமா கிறுக்கு பிடிச்ச செருக்கியுள்ள... சீட்டுக் காசை எடுத்துட்டா ஊரைவிட்டு ஓடியிருக்கான். அங்க எங்கய்யா அவன் செத்து போயிட்டாம்னு நெதம் அழுதுக்கிட்டு சாமி கும்பிடுதாரு. என் கண்ணுல மாட்டட்டும் செருக்கியுள்ளல உறிச்சுடுறேன்” என்றபடி சிவன்காளை ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான்.

“இன்னும் எத்தன நாளுடே இருப்ப... பம்பாய்க்கி எப்போம் வண்டி ஏறுத?”
“இருப்பேன்... இன்னும் ரெண்டு மாசம் பொறுத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு போகலாம்னு தோணுது. அங்க ஒரு பிள்ளையையும் பிடிக்கலை. என்னருந்தாலும் நம்மூர் பிள்ளைகளை மாதிரி வராதுல்ல...”
“ஓ... அதான பாத்தேன்...”
“செத்த நேரம் இங்குன ஒக்காரட்டுமா... கண்ணக் கட்டிக்கிட்டு வருது.” மரநிழலைக் கைகாட்டிச் சொன்னான் சிவன் காளை.
“தைரியமா படு. இங்க யாரும் வர மாட்டானுவ. எல்லாம் நம்ம பயலுகதான் இங்க. நீ தூங்கு” என்றபடி பனையேறியாரிடம் ஒரு துண்டை வாங்கி நிழல் தரையில் விரித்துக்கொள்ளக் கொடுத்தான் கொடிமரம்.
காசி அண்ணாச்சி காலையிலேயே இரண்டு பெக்குகளை முடித்திருந்தார். இன்று முதல் பெரிய பர்லாந்தின் கட்டுப்பாட்டின்கீழ் ஹார்பர் வந்துவிடும். என்ன காரியம் சாதிக்க வேண்டுமென்றாலும், அந்த ஆளிடம்தான் கூனிக்குறுகி நிற்க வேண்டும் என்று நினைக்கும்போதே காசி அண்ணாச்சிக்கு ஆத்திரமாக வந்தது. ‘பணத்துக்காக இப்படி பீ திங்க வேண்டியிருக்கிறதே...’ என்று நினைத்து நினைத்து நொந்துகொண்டார்.
காசி அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி பத்மா, “நான் மதுரைக்கிப் போறேன். எனக்கு நிறைய பர்ச்சேஸ் பண்ணணும். நீங்க வர்றீங்களா?” என்றாள். இரண்டு கட்டு நூறு ரூபாய் தாள்களைப் பத்மாவின் முன்னால் எறிந்தார் காசி அண்ணாச்சி. பத்மாவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. அந்த ரூபாய்க் கட்டுகளை எடுத்து, காசியின் முகத்தில் விசிறி அடித்தாள் பத்மா. “மயிரு... என் வாழ்க்கையையும் வயசையும் கெடுத்து, குட்டிச்செவுராக்கிட்டு, இப்ப பணத்தைத் தூக்கி வீசுறியா நீ... த்தூ” என்று காரித் துப்பினாள். காசிக்கு ஆத்திரம் சுர்ரென்று ஏறியது.
“என் தப்புத்தாண்டி... நாயே... உன்னல்லாம் அன்னைக்கே கொன்னு புதைச்சிருக்கணும்” என்றவர், எழுந்து அவளின் தலைமுடியைப் பிடித்து அடிக்க முயன்றார்.
“கைய எடுடா... கிழட்டுப்பயலே...” காசி அதிர்ச்சியில் உறைந்துபோனார். அவரின் கையிலிருந்து பத்மாவின் தலைமுடி மெல்ல நழுவியது.
“சின்னப் பிள்ளையக் கட்டுறது முக்கியமில்லடா... அவ உடம்புக்கும் ஆசைக்கும் ஈடு குடுக்கணும்... முடியாட்டி வேற எவனுக்காவது பொண்டாட்டிய கூட்டிக் குடுக்கணும். இப்பிடி நல்லாக் குடிச்சுட்டு மல்லாந்து கிடக்குற உனக்கு எதுக்குடா ரெண்டு பொண்டாட்டி?” என்று எகிறினாள் பத்மா.
“என்னடி சொன்ன... அரிப்பெடுத்த முண்ட...”
உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்த வேகத்தில், பத்மாவின் சேலை முந்தானையை உரிந்த காசி, அவளின் ஜாக்கெட்டைக் கிழித்தார். அரை நிர்வாணமாகியிருந்த பத்மாவின் உடலைத் தீர்க்கமாக ஒரு முறை பார்த்துவிட்டு அவசர அவசரமாக அவளைச் சுவரில் சாய்த்து அவள்மீது முயங்கினார். கழுத்து, தோள், முதுகுப் பக்கங்களில் கடித்துவைத்தார். பத்மா வலியிலும் வேதனையிலும் துடிக்க, அந்த ஐந்து நிமிடங்களும் அவளுக்குக் கொடூரமாக அமைந்தன. மயிற்பீலியால் உடலெங்கும் தடவியதுபோல் சிலிர்க்கச் சிலிர்க்க நிகழவேண்டிய விஷயம், காய்ந்த கருவேல முள்ளைக்கொண்டு உடலெங்கும் கிழித்ததைப்போல் நிறைவேறியது. நிதானத்துக்கு வந்த காசி அண்ணாச்சி, இன்னொரு பெக்கை அடித்துவிட்டு, பிளசரில் ஏறி ஹார்பருக்குக் கிளம்பினார். பத்மா தன் உடலில் பதிந்த காயங்களைத் தடவிப் பார்த்து, தன்னையே நொந்து அழுதுகொண்டிருந்தாள்.
பொழுது சாய வீட்டுக்குத் திரும்பியிருந்தான் சிவன்காளை. வாசலில் அவன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த அவன் அப்பா, “ஏய்... எங்கலே போய் தொலைஞ்ச... உன்னைத் தேடி அலைஞ்சு இன்னிக்கிக் கால் கடுத்துப்போச்சு. கையெடுத்துக் கும்பிடுதேன். எனக்கு ஒத்தப் பிள்ளையாவது மிஞ்சட்டும். நீ ஒண்ணும் பாண்டியைத் தேடிக் கிழிக்க வேண்டாம். விதி இருந்தா அவன் வாழுதான். இல்ல... எல்லாம் முடிஞ்சுதுன்னு ஆகுறான். உனக்கும் என்னமாவது ஆச்சுன்னா இந்தக் கட்டைக்கு வேற விதியில்லை.”
“இப்போம் என்ன நடந்துபோச்சு... நாலெடத்துல விசாரிச்சாத்தான் ஏதாவது தாக்கல் கெடைக்கும். உம்ம மகேன் இருக்குற இடம் தெரிஞ்சுபோச்சு... மெட்ராஸுல இருக்கானாம். வண்ணாரப்பேட்டையில வெச்சு ஆள் யாரோ பார்த்திருக்கானுவ. ஊரைவிட்டுப் போகும்போது, சீட்டுக்காசை எடுத்துக்கிட்டு ஓடியிருக்கான்... அது தெரியாம அவன் போட்டோவுக்கு மாலை போட்டு, பொட்டு வெச்சு அழுதுக்கிட்டிருந்திருக்கீங்க...’’
பாண்டியின் அப்பாவுக்கும், ஜெஸிந்தாவுக்கும் அவன் பேசிய எதிலும் துளியும் நம்பிக்கை வரவில்லை.
அதேநேரம், கடா பாண்டி மெட்ராஸிலி ருப்பதை நம்பவைப்பதற்காக ரயிலில் மெட்ராஸ் போகும் தெரிந்தவன் மூலமாக ஒரு தபாலைக் கொடுத்து, அங்கிருந்து போஸ்ட் செய்யும்விதமாக ஏற்பாடு செய்திருந்தான் கொடிமரம்.
அடுத்த நான்கு நாள்களில் அந்த தபால் கருவாட்டுக்காரர் வீட்டுக்கு வந்துசேர்ந்தது. தான் சொன்னதுபோலவே பாண்டி மெட்ராஸில்தான் இருக்கிறான் என்பதற்கு ஆதாரமாக அந்தத் தபாலை, தன் அப்பாவிடமும் ஜெஸிந்தாவிடம் காட்டினான் சிவன்காளை. அவர்கள் முகத்தில் எந்தச் சலனமுமில்லை.
கருவாட்டுக்காரர் மட்டும் பேசத் தொடங்கினார். “ஏண்டா, உன் தம்பி என்ன ஆனான்னு நீ யார்கிட்ட விசாரிச்ச?”
(பகை வளரும்...)