மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 56

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 56
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 56

“பகைமையிலிருந்து விலகிச் செல்ல, அன்பை நெருங்கி வர வேண்டும்!”- மூர்க்கர்கள்

தன் தம்பி எழுதியதாக வந்திருந்த தபாலைப் பார்த்ததும் சிவன்காளை தன் அப்பாவிடமும் ஜெசிந்தாவிடமும் காட்டினான். அவர்கள் அதை கடா பாண்டி எழுதியிருப்பான் என நம்பவில்லை. பாண்டியின் `அப்பா உன் தம்பி குறித்து யாரிடமெல்லாம் விசாரித்தாய்?’ என சிவனிடம் கேட்டார். சிவன் சமுத்திரத்தைச் சந்திக்கச் சென்ற வழியில் கொடிமரத்தைச் சந்தித்ததைச் சொன்னான். பாண்டியின் அப்பாவுக்கு ஏற்கெனவே கொடிமரத்தின் மேல் ஒரு சந்தேகமிருந்தது. “போஸ்ட் ஆபீஸ் சீல் வண்ணாரப்பேட்டை, மெட்ராஸ்னு இருக்கு. அவம் இருக்குற இடத்தோட விலாசத்தை எழுதல. அங்குன போயி விசாரிச்சா ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சுரலாம். ஒருவேளை மெட்ராஸ் ஹார்பர்ல வேல பாக்கானான்னு விசாரிச்சா தெரிஞ்சுபோயிரும். பொடணில தட்டி கூட்டியாரேன்.’’

‘`அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அவன் வாரப்ப வரட்டும். நீ உன் சோலியப் பாரு. இங்குன வந்தியா... ரெண்டு மாசம் ஆடு, கோழின்னு கறிக்கஞ்சி குடிச்சியா... கோயில் குளம்னு போயிட்டு வந்தியா... நாலு சிநேகிதய்ங்ககூட சேந்து சினிமா கொட்டகை, சாராயக்கடைன்னு சுத்தி வந்தியா... ஒரு கல்யாணம் காட்சின்னு பண்ணுனியா... அப்பிடியே அவளையும் கூட்டிக்கிட்டு சந்தோஷமா திரும்பப் பொழைக்க ஊரப் பாத்து பொட்டியக் கட்டிக்கிட்டு ஓடிப்போயிரணும். அப்புறம் புள்ளைக்கி மொட்ட போட, காது குத்து, கடாவெட்டுன்னு வருஷத்துக்கு ஒருக்கா வந்தா போதும். எங்கயாவது கெதியா இருந்து பொழச்சுக்கோங்கடே. இன்னிக்கி நெலமைல உசுரோட இருக்குறதுதான் பெரிய விஷயமாவே இருக்கு. உடம்புல உசுரும், மனசுல தைரியமும் இருந்தா போதும்டே. எங்கயாவது கிடந்து, எப்படியாவது பொழச்சிக்கலாம். அவன் விஷயத்தை இத்தோட விட்டுடு. அவம் எப்போம் வாரானோ அப்போம் இங்க வரட்டும். தேட வேண்டாம் செரியா... போதும்டா அய்யா... ராமனுக்கு வனவாசம் மேறி நீ ஏற்கெனவே என்னை விட்டுப் பிரிஞ்சு போயி பல வருஷம் கழிச்சு இப்போம்தான் வார. நீ வார நேரம் அவன் ஊருக்குப் போயிட்டாம். மயிலோடைலயிருந்து உன் தாய்மாமனை வரச் சொல்லியிருக்கேன். உனக்கு ஒரு பொண்ணு பாத்து கல்யாணம் கட்டிவெய்க்கேன். எந்த நொம்பலமும் இல்லாம நல்லபடியா ஊரு போய் சேந்து வம்சத்த விரிச்சு விடுங்கடே...’’

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 56
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 56

‘`செரிய்யா. நீங்களும் என்கூட பம்பாய்க்கி வந்துருங்க...’’

‘`வேணாம்டா அய்யா. நான் இங்க கிடந்து ரெண்டு கருவாட்ட வித்து பொழப்பை நகத்திக்கிறேன். இந்தப் பிள்ளையையும் பாத்துக்கணும்ல... உன் தம்பி பிள்ளைகள வளத்துக்கிட்டு இங்குனயே இருந்துடுறேன்.’’

சிவனுக்குத் தன் அய்யா பேசுவது என்னவோபோல் உறுத்திக்கொண்டேயிருந்தது. அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் விரக்தியும் இழப்பும் இழையோடிக்கொண்டேயிருந்தன.

``சரி. நான் கிளம்புதேன்...’’

``சரிடே... சைக்கிள் வேணும்னா எடுத்துக்கிட்டுப் போ...’’

``நீங்க யாவரத்துக்குப் போக வேண்டாமா?’’

``அது கிடக்கு. உன் மாமனைப் பாத்துட்டு தலைச் சுமையா சுமந்து போயி வித்துட்டு வந்துருதேன்.’’

“வேணாம். அம்புரோஸ் அண்ணன் கடையில வாடகை சைக்கிள் எடுத்துக்கிடுதேன்.’’

``சரிய்யா. சொன்னது ஞாபகம் இருக்குல்ல... அங்க இங்க நிக்காத, சொல்லிட்டேன். யார்கூடயும் பேச்சு குடுக்காத. ஊர் நிறைய மாறிடுச்சு. முன்ன மேறி இல்ல.’’

தூத்துக்குடி வ.உ.சி மைதானத்துல காலையிலேயே ஹாக்கி மேட்ச் இருந்தது. திருநெல்வேலி டீமோடு மோத வேண்டும். அதிசயமாக காசி அண்ணாச்சியின் மகன் ராஜபாண்டியும் ஜானும் ஒரே டீமிலிருந்து திருநெல்வேலி டீமுக்கு எதிராக ஆடினார்கள். திருநெல்வேலி டீம்தான் முன்னேறிப் போய்க்கொண்டிருந்தது. கோட்டுக்கு வெளியே ஜானின் கோச் தலையில் தலையில் அடித்துக்கொண்டு எரிச்சலாகப் புலம்பிக்கொண்டிருந்தார். ``இவனுவ ரெண்டு பேரும் முட்டிக்கிட்டு கிடந்தா என்ன மயிருலே கப்பு கிடைக்கும்... வீணா தோக்கப்போறானுவ.அந்த திருநெல்வேலி கோச் வேற மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ-ல என்கூடப் படிச்சவன். இன்னிக்கி அவன் மேட்ச் முடிஞ்சதும் என்னைப் பாத்து வாயால சிரிக்க மாட்டான். வேற எதாலயாவதுதான் சிரிக்கப்போறான். இவய்ங்க ரெண்டு பெரும் இன்னிக்கி என் மானத்த வாங்காம விடப்போறதில்லை.’’

அன்று அமலியின் அத்தை கன்னியாஸ்திரீ ஸ்டெல்லாவும் அவளோடு செயின்ட் மேரீஸ் காலேஜுக்கு உடன் வந்தார். அவரோடு உடன் படித்த தோழிதான் காமர்ஸ் டிபார்ட்மென்ட்டின் ஹெச்.ஓ.டி-யாக வேலை செய்கிறார்.காலையிலேயே மேட்ச் பார்க்கப் போக நினைத்தவளுக்கு, ``நானும் காலேஜுக்குக் கூடவர்றேன்’’ என்ற அத்தையின் வார்த்தை அமலிக்குத் தலையில் இடி இறங்கியதைப் போலிருந்தது. அத்தையை காமர்ஸ் டிபார்ட்மென்ட்டில் விட்டுவிட்டு விறுவிறுவென காலேஜின் பின்பக்க வாசல் வழியாக வெளியேறி, அவசர அவசரமாக ரிக்‌ஷாவில் ஏறி வ.உ.சி கிரவுண்டுக்கு ஓடினாள். அவள் வரும்போது பாதி மேட்ச் முடிந்திருந்தது. கோச் அழாத குறையாக ராஜபாண்டிக்கும் ஜானுக்கும் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். இறுதியில் கையெடுத்துக் கும்பிட்டார், கெஞ்சினார். ``எப்பிடியாவது ஜெயிச்சு என் மானத்தைக் காப்பாத்துங்கலே... அவம் முன்னால என்னைத் தலைகுனிய வெச்சுடாதீங்க.’’

அந்த கேலரியில் ஜானைத் தவிர எல்லோருமே அமலியைப் பார்த்தார்கள். ராமும் பார்த்துவிட்டான். மைதானத்தில் அமலியின் வருகையை ஜானுக்குத் தெரியப்படுத்த சைகையால் முயன்றுகொண்டிருந்தான்.கேலரியில் ஆங்காங்கே ஓரிரு இளம்பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அவளின் கல்லூரிப் பெண்களேகூட ஓரிருவர் இருந்தார்கள். ஆனால் இவ்வளவு அழகான பெண்ணைப் பார்த்ததும் அங்கிருக்கும் இளைஞர்களால் சும்மா அமர முடியவில்லை. ஆங்காங்கேயிருந்து விசிலடித்தார்கள். ஊரே அமலியைப் பார்த்தாலும் ஜான் திரும்பிப் பார்க்கவே இல்லை. அமலி விறுவிறுவென நேராகவே கோச்சின் அருகில் வந்தாள். ராமும் பின்னாலேயே ஓடிவந்தான். ஏற்கெனவே கோச் மிகவும் கோபமாக இருக்கிறார். இவள் போய் எதாவது ஏடாகூடமாகப் பண்ணி அவரை மேலும் கோபப்படுத்திவிடக் கூடாது. ``ஹலோ...’’ அமலி திரும்பி ராமைப் பார்த்தாள். ``ஹலோ எப்படி இருக்கீங்க?’’ புன்னகையோடு கேட்டாள்.

``நான் நல்லா இருக்கேன். வாங்க அங்க உக்காரலாம். ஏற்கெனவே கோச் ரொம்பக் கோபமா இருக்கார். ஃபர்ஸ்ட் முப்பத்தஞ்சு நிமிஷம் முடிஞ்சிருக்கு. அஞ்சு நிமிஷம் ரெஸ்ட். திரும்ப ஆரம்பிக்கப்போகுது. வாங்க... அங்க உக்காந்து பாக்கலாம்.’’

``நாம எத்தனை கோல் போட்டிருக்கோம்?’’ ராம் ஒரு விரலை நீட்டினான்.

``வெறும் ஒண்ணா?’’

``ஆமா.’’

``ஏன்?’’

``அவனுக ரெண்டு பேருக்குள்ள பிரச்னை. சேந்தே விளையாட மாட்டேங்கிறானுவ. ராஜபாண்டி இவனுக்கு பாஸ் பண்ணவே மாட்டேங்கிறான். இவனும் அப்படித்தான் பண்றான். டீம்ல நல்லா விளையாடுற ஆளுங்களே இவனுக ரெண்டு பேருதான். வாங்க கேலரில உக்காரலாம்...’’

``இருங்க. ஜானைப் பாத்துப் பேசிட்டு வர்றேன்.’’

சிரித்தபடியே ஜானுக்கு முன் வந்து நின்றாள். ஜானுக்குப் பெருமிதம் தாங்க முடியவில்லை. ராஜபாண்டி, `பெரிய பர்லாந்தின் மக ஏன் இங்க வாரா?’’ என்று முறைத்துப் பார்த்தபடியே இருந்தான். அமலி பேதமில்லாமல் ராஜபாண்டியைப் பார்த்தும் சிரித்தாள்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 56
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 56

``ரெண்டு பேரும் சேந்து விளையாடி நம்ம ஊருக்கு கப் வாங்கிக் குடுக்கணும் சொல்லிட்டேன். இல்லாட்டி நானே கல் எறிஞ்சு அடிப்பேன்.’’

``நல்லா சொல்லும்மா. அவங்க பிரச்னைல என் மண்டதான் உடையுது.’’ கோச், அமலியிடமும் அங்கலாய்த்தார். அமலி தன் பையிலிருந்து பச்சை நிற குளூக்கோஸ் டப்பாவை எடுத்தாள். டப்பாவின் தலையைப் பிய்த்து தன் கையில் சிறிது கொட்டி, நுனிநாக்கால் மெல்ல ருசி பார்த்தாள். நாக்கிலும் தொண்டையிலும் குளூக்கோஸ் ருசி குளுகுளுவென இறங்கியது. முதலில் ராஜபாண்டியின் கையை விரிக்கச் சொல்லி, கூம்பாய் அதில் கொஞ்சம் கொட்டினாள். அவன் சிரித்தபடியே வாய்க்குள் கொட்டினான். ஜான் தன் வாயைத் திறந்து காண்பித்தான். அவள் செல்லமாக அதட்டினாள். ``கையைக் காட்டு.’’ ஜானுக்கு நிறைய கொட்டினாள். அவன் வாய்க்குள் போட்டு புறங்கையால் துடைத்தான். வம்படியாக கோச்சின் கையையும் வாங்கி அதிலும் கொட்டினாள்.

``சரி போயிட்டு வா. ரெண்டு பேருமே நல்லா விளையாடணும், சொல்லிட்டேன். ஜான் எனக்கு அந்த கப் வேணும். மரியாதையா வாங்கிக் குடு.’’ அவன் பெயர் சொல்லிப் பேசியதும் ராஜபாண்டிக்கு என்னவோ போலானது. `பரவாயில்லை, அவள் முன்னால் சிறப்பாக விளையாடித் தன்னை நிரூபிக்க வேண்டும்’ எனத் தீர்மானித்துக்கொண்டான். நாலெட்டு நடந்த ஜானைத் திரும்பக் கூப்பிட்டாள். அவன் நெற்றியில் வேளாங்கண்ணியிலிருந்து எடுத்து வந்த புதுமை எண்ணெயை சிலுவைக்குறிபோல் போட்டுவிட்டாள். ராஜபாண்டியும் தன் நெற்றியைக் காட்டி வந்தான். அவன் முன் குட்டியான அந்த விரலளவு எண்ணெய் பாட்டிலை நீட்டினாள்.

``ஏன் எனக்குல்லாம் நெத்தியில போட்டுவிட மாட்டீங்களா?’’ ஜான் இதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மறுத்து தலையை ஆட்டினான். ஆனால் ராஜபாண்டி விடாப்பிடியாகக் குனிந்து நின்றுகொண்டேயிருந்தான். உள்ளே விசில் அடித்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் அமலி அவன் நெற்றியிலும் சிலுவை அடையாளம் போட்டாள்.

ராஜபாண்டி கிரவுண்டுக்குள் சந்தோஷமாக ஓடினான். ஜானுக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது. அமலி என்ன செய்வதெனத் தெரியாமல் அங்கேயே அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்!

(பகை வளரும்...)