
“யுத்தத்துக்கு ஆயுதமும், சாதகமான பருவநிலையும் வரும்வரை காத்திருக்க வேண்டும். அதுவரை எதிரிகளைப் பேச்சுவார்த்தையில் காலம் தாழ்த்த வேண்டும்.” - மூர்க்கர்கள்
மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் ஜானின் அணி வெற்றிபெற்று, அடுத்தகட்ட நகர்வுக்குச் சென்றது. இன்னும் இரண்டு பெரிய போட்டிகள் விளையாட வேண்டும். அவற்றில் வென்றால், அடுத்தது மாநில அளவிலான போட்டிதான். எப்படியாவது மாநில அளவில் வென்றுவிட்டால் முயற்சி செய்து ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ராமின் அப்பா ஞானவேல் சொல்லியிருக்கிறார். ஜான் மாவட்ட அளவில் வென்றதில் அமலிக்கு மகிழ்ச்சி தாள முடியவில்லை. அன்று மாலை செய்தித்தாளில் ஜானின் குழுப் புகைப்படம் வந்திருந்தது. அமலி பஸ் ஸ்டாண்டிலிருக்கும் நியூஸ் பேப்பர் கடையில் கொத்தாகப் பத்து நியூஸ் பேப்பர்களை வாங்கி வைத்துக்கொண்டாள்.
புகைப்படத்தில் ஜான்தான் நடுநாயகமாக நின்றுகொண்டிருந்தான். ராஜபாண்டியைத் தவிர மற்ற எல்லோரின் கைகளும் ஜானின் தோள் மேல்தான் கிடந்தன. ராஜபாண்டியின் ஓரக்கண் பார்வை மட்டும் ஜானின் மீதிருந்தது. அதில் ஒரே நேரத்தில் பொறாமையும் வன்மமும் குடிகொண்டிருந்தன.
அமலி ஒவ்வொரு நியூஸ் பேப்பரையும் விரித்து, ஜானின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். எல்லாவற்றிலும் அதே முகம்தான் என்றாலும், அவளுக்கு அதில் ஒரு திருப்தி. மாலை, ஜான் குரூப்ஸ் வழக்கமாக டீ குடிக்கும் அய்யனார் டீ ஸ்டாலில் சைக்கிளை நிறுத்திவிட்டு நெடுநேரமாக நின்றுகொண்டிருந்தாள் அமலி. போதாக்குறைக்கு மூன்று, நான்கு டீ வேறு குடித்துவிட்டாள். டீ மாஸ்டருக்கு விஷயம் புரிந்துவிட்டது. “நீ இன்னும் பத்து டீ குடிச்சாலும் அவனுவ இன்னிக்கி வர மாட்டானுவத்தா. ஒரு பாக்கெட் சிகரெட்டை வாங்கிட்டு அப்பவே போயிட்டானுவ. நிச்சயம் சரக்குதான் ஓடும். நீ பர்லாந்து அண்ணன் மவதான?’’
“ம்... அவன் என் ஃபிரெண்டுதான். வேற ஒண்ணுமில்ல...’’
“செரிம்மா... நான் வேணும்னா கடைப் பையனை அனுப்பி, நீ இங்குன நிக்கிறன்னு சொல்லிட்டு வரச் சொல்லவா?”
“அதெல்லாம் வேண்டாம். நான் கிளம்புறேன்” அமலி சோகமான முகத்தோடு அங்கிருந்து சைக்கிளை உருட்டியபடி இரண்டு எட்டு நடந்தாள். பின்னிலிருந்து ஒரு குரல். “ஏ புள்ள அமலி...’’ அமலி திரும்பிப் பார்த்தாள். பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே ஒரு கோவில்பட்டி பஸ் நின்றுகொண்டிருந்து. அதற்குள்ளிருந்து ஆட்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள். அமலி ஒரு நிமிடம் சுற்றுமுற்றும் பார்த்தாள். ``அமலி...’’ என்று கூப்பிட்டபடியே பனிமலர் அங்கு வந்தாள். அமலிக்குச் சிறிது அதிர்ச்சியாக இருந்தது. ஜானைத் தேடினால் அவன் அக்கா வந்து நிற்கிறாள். எதற்கும் இருக்கட்டுமென முந்திக்கொண்டு கேட்டாள், “எப்படி இருக்கீங்கக்கா... இப்போம்தான் வாரீங்களா?”

“நல்லா இருக்கேன் அமலி. எனக்குத் தல வலிக்கி. ஒரு டீ சாப்பிடலாமா..?” அமலி பின்னால் திரும்பி, அய்யனார் டீ ஸ்டாலைக் காட்டினாள். “அங்க போலாமா?”
“ஏன் வேற கடையே இல்லையா... ஜான் குடிக்கிற கடையிலதான் உனக்குக் குடிக்கணுமா..?” அமலி இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“அப்படி இல்ல. ரோட்டத் தாண்டணுமேன்னு பாத்தேன்.”
“சரி வா... அங்கேயே போலாம்.”
டீ மாஸ்டர் மீண்டும் அமலியை அங்கு பார்த்ததுமே சிரித்தார். ``ரெண்டு டீ போடுங்க...’’ டீ மாஸ்டர் சிரித்தவாறே கொண்டுவந்து கொடுத்தார். ஒரு மடக்குதான் வைத்திருப்பார்கள். டீக்கடையிலிருந்து வெளியேறிய இரண்டு வயதான ஆண்கள் முனகிக்கொண்டு போனார்கள். “பாத்தியா... பொம்பளப் பிள்ளைக வெளிய வந்து டீ குடிச்சுட்டு நிக்காவ... உருப்படுறதுக்கா... பின்ன விலைவாசியெல்லாம் ஏறுமா, ஏறாதா?” பனிமலருக்குக் கோபமாக வந்தது. கோவில்பட்டியிலும் அவளுக்கு இதுபோல நிறைய முறை நடந்திருக்கிறது. வேண்டுமென்றே அவர்கள் முன்னால் கத்திக் கேட்டாள்.
“அண்ணே ஒரு பெர்க்லி சிகரெட் குடுங்க.”
“என்ன அகராதி பாத்தியா... திரேஸ்புரம் பிள்ளையாத்தான் இருக்கும்...’’அவர்கள் இருவரும் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு அங்கிருந்து புலம்பியபடியே நகர்ந்தார்கள்.
கடைக்காரர் உண்மையிலேயே சிகரெட்டை எடுத்து நீட்டிக்கொண்டிருந்தார். அமலியும் பனிமலரும் சிரித்துக்கொண்டார்கள்.
``சும்மாத்தான் கேட்டேன்...”
“சும்மா கேட்டியோ, நெசத்துக்குக் கேட்டியோம்மா... டப்பாவுலயிருந்து எடுத்த சிகரெட்ட திரும்ப வாங்க மாட்டேன்.”
“சரி குடுங்க...” அமலி தன் டிபன் பாக்ஸைத் திறந்து சில்லறை எடுத்துக்கொடுத்து, அதை வாங்கிக்கொண்டாள்.
கடைக்காரர் என்ன பண்ணுகிறாள் பார்ப்போமென வேண்டுமென்றே கத்திச் சொன்னார். “கங்கு அங்க இருக்கு பாரும்மா...’’
கடை ஓரத்தில் ஒரு தேங்காய் நார்க் கயிற்றின் நுனியில் கங்கு புகைந்துகொண்டிருந்து. அவர் சொன்னதைக் கடைக்கு வந்தவர்களும் வேடிக்கை பார்த்தார்கள்.
“வேணாம்ணே... என்கிட்டே தீப்பெட்டி இருக்கு” என்று பனிமலர் அவர் வாயை அடைத்தாள். அமலிக்குப் பேச்சே வரவில்லை. அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.
“நான்கூட அந்த ஆள் சொன்னதுமே சிகரெட்ட எடுத்து பத்தவெச்சுடுவீங்களோன்னு நினைச்சிட்டேன்க்கா.”
பனிமலர், அவளை ஆழமாகப் பார்த்துச் சிரித்தாள். ``பத்தவெக்கலாம்னுதான் நினைச்சேன். பாவம் நீ கூட இருக்கேன்னுதான் விட்டுட்டேன்.’’
வெடித்துச் சிரித்துவிட்டு, அமலி சொன்னாள், “சைக்கிள்ல உக்காருங்கக்கா... டபுள்ஸ் போகலாம்.”
“வேண்டாம். நான் நடந்தே போயிடுறேன்...”
“இருக்கட்டும், நான் வீட்ல விடுறேன்.”
சைக்கிள் கேரியரில் பத்து நியூஸ் பேப்பர்களைப் பார்த்ததும், “எதுக்குடி இவ்வளவு..?” கேரியர் கவ்வியை இழுத்து எல்லா நியூஸ் பேப்பர்களையும் எடுத்துப் பார்த்தாள். சரியாக மூன்றாம் பக்கம் திருப்பி, “எல்லா பேப்பர்லயும் அதே மூஞ்சிதான இருக்கு. பின்ன என்னத்துக்கு இவ்வளவு... அவனப் பாத்தியா?”
“இல்ல...” என்று தலையாட்டினாள்.
“இந்த ஆம்பளப் பயலுவலே இப்படித்தான். என்னத்தையாவது ஜெயிச்சு கப்பு வேங்கிட்டா உடனே குடிச்சு கூத்தடிக்கப் போயிடுறது. என் வீட்டுச் சனியன் மட்டுமென்ன விதிவிலக்கா?”
அமலி சமாளித்து, சிறிதாகச் சிரித்தாள்.
“சரி. உங்க வீட்லல்லாம் ஒத்துப்பாங்களாடி?” அமலி மலங்க மலங்க முழித்தாள்.
“என் தம்பிய மாப்பிள்ளையா உங்க வீட்ல ஒத்துப்பாங்களான்னு கேக்குதேன்...” இவ்வளவு வெளிப்படையாக பனிமலர் கேட்பாளென்று அமலி நம்பவில்லை. தயங்கியும் யோசித்தும் பதில் சொன்னாள்.
“நம்புறேன்க்கா... எங்க ஸ்டெல்லா அத்தை தெரியும்தானே... கன்னியாஸ்திரீயா பாளையங்கோட்டையில இருக்காங்கல்ல... அவங்ககிட்ட சொல்லித்தான் நடத்தணும். அவங்க சொன்னா வீட்ல ஒத்துப்பாங்க.”
“ம்... சரிடி நல்லா இரு. நான் கிளம்புறேன்...”
“நான் வந்து விடுறேன்க்கா...”
“அதெல்லாம் வேணாம்... சினிமா போஸ்டரைப் பாத்துக்கிட்டே நடந்து போயிடுவேன். நீ கிளம்பு... இனிமே `அக்கா நொக்கா’ன்னு கூப்பிடாத... `மைனி’ன்னு கூப்பிடு. செரியா...” அமலி சிரித்தாள்.
“சரி நீ கிளம்பு... அவனை நாளைக்கித் தலையில தட்டி உன்ன வந்து பாக்கச் சொல்லுதேன்.”

“அமலி சிரித்தபடியே சைக்கிளை டக் அடித்து ஏறி ஓட்டினாள். மனசெல்லாம் நூறு டியூப் லைட் போட்டது மாதிரி அவ்வளவு பிரகாசமானது. ஏதேதோ பாடல்கள் ஓசைகளாக வந்து மனதுக்குள் ஒலித்தன. ‘மைனி...’ என்று ஓரிருமுறை முணுமுணுத்துக்கொண்டே சென்றாள்.
ஹார்பரில் இரவு பகலாக, கப்பல்கள் வரவும் போகவுமாயிருந்தன. லோடுகளை ஏற்றவும் இறக்கவுமாக வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருந்தன. சமுத்திரம் தன் தோணிக்கு வந்தே ஒரு வாரத்துக்கும் மேலாகியிருந்தது. இரண்டு பர்லாந்துகளின் புக்கிங் ஆபீஸ்களிலும் வழக்கத்தைவிடவும் அதிகமாகச் சரக்குகள் வந்து குவிந்தன. அதற்கு நேர்மாறாக காசி அண்ணாச்சியின் புக்கிங் ஆபீஸில் வரவுகள் குறைந்தன. அவரின் சாதியைச் சேர்ந்த ஒருசிலர்கூட பர்லாந்துகளிடம் புக்கிங் செய்யத் தொடங்கினார்கள். என்னதான் அதிகாரம் மூன்று பேருக்கும் பொதுவானதாக இருந்தாலும், பர்லாந்துகளே ஹார்பரின் சக்கரவர்த்திகளைப்போல் நடந்துகொள்வதாக காசி அண்ணாச்சிக்கு அடிமனதில் எரிச்சல் கிளம்பியது.
கஸ்டம்ஸ் ஆபீஸர்களும் தங்கள் பங்குக்குக் கண்சிமிட்டாமல் வேலை செய்தார்கள். வழக்கத்தைவிட செக்கிங் கடுமையாக இருந்தது. ராமின் அப்பா ஞானவேல் செக்கிங் ஏரியாவிலேயே பழியாகக் கிடந்தார். ராம்தான் அவருக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தான். அதேபோல சமுத்திரத்துக்கும் ஜானின் வீட்டிலிருந்து சாப்பாடு வந்தது. இரண்டு பேரும் ஒரே பைக்கில்தான் ஹார்பருக்குள் வந்து போனார்கள்.
ஒவ்வொரு முறை அவர்கள் வரும்போதும், ஜானிடம் ஏதாவது ஒரு புதிய பொருளை சமுத்திரம் கொடுத்தான். ஒருநாள் ஆஸ்திரேலியக் கப்பலிலிருந்து டெலிவிஷன் பெட்டிகள் நான்கைந்து டியூட்டி கட்டாமல் வந்திருந்தன. அவற்றில் இரண்டு பர்லாந்துகளின் வீட்டுக்கும், ஒன்று காசி அண்ணாச்சிக்கும் போக மீதமொன்று சமுத்திரத்துக்கென பங்களிக்கப்பட்டது.
அவற்றை வெளியே கொண்டுபோவதற்காக காசியின் பிளசரைக் கேட்டு வாங்கிக்கொண்டு, அதில் டி.வி பெட்டிகளைவைத்து ஹார்பரிலிருந்து வெளியே எடுத்துக்கொண்டு போனான் சமுத்திரம்.
அதுவரை சின்னஞ்சிறிய பொருள்களைப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வெளியே விட்டுவந்த அதிகாரிகள் அன்றைக்கு ஞானவேலுக்கு கால் செய்து விஷயத்தைச் சொன்னார்கள்.
“சார்... பர்லாந்துகூட இருக்குற ஆள். நாலு டெலிவிஷன் பாக்ஸை எடுத்துட்டுப் போறான் சார். எதுக்குமே டியூட்டி கட்டலை.”
“விட்ருங்க... போகட்டும்...”
அவருக்குத் தெரியும் எதைப் பிடிக்க வேண்டும், எதை விட வேண்டுமென. `இந்த டெலிவிஷன் பெட்டிகளால் சிறிய அளவில் வரி இழப்பு மட்டும்தான் ஏற்படும். பெரிய அளவில் தங்கமோ, போதை வஸ்துகளோ எடுத்துப்போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...’ என்று நினைத்தார்.
சமுத்திரம் முதல் டெலிவிஷனை ரோசம்மாள் வீட்டில் கொண்டுவந்து இறக்கினான். அதன் பிறகுதான் பர்லாந்துகளின் வீடுகளிலும், காசி அண்ணாச்சி வீட்டிலும் அவை இறக்கப்பட்டன. சமுத்திரத்துக்குப் பெரிய பர்லாந்து கொடுக்கும் இடம் எல்லாருக்கும் உறுத்தலாயிருந்தது.
(பகை வளரும்...)