மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 59

வேட்டை நாய்கள் - பாய்ச்சல்
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல்

“அறமற்றுச் சேர்க்கும் பணத்தின் ஓரத்தில் ரத்தக்கறைகள் படிந்திருக்கும்.” - மூர்க்கர்கள்

ஆஸ்திரேலியா கப்பலிலிருந்து வந்த சரக்குகளை பம்பாய்க்காரர்கள் மூன்று பேரும் நேரில் வந்து பார்த்துவிட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். பம்பாய்க்காரர்களுக்குச் சொல்ல முடியாத சந்தோஷம். பெரிய பர்லாந்தின்மீதும், சமுத்திரத்தின்மீதும் மஸ்தானுக்குப் பெரும் நம்பிக்கை பிறந்தது. இவர்கள் இருவரையும் நம்பி எந்தக் கடல் வியாபாரமும் செய்யலாமென்று அவருக்குத் தோன்றியது. அதுதான் தென்கிழக்கு நாடுகளோடு நடக்கும் முதல் பரிவர்த்தனை வேறு. மஸ்தானுக்கும், வரதண்ணனுக்கும், திரவியம் அண்ணாச்சிக்கும் இது சரிப்பட்டு வருமாவென்ற சந்தேகமிருந்தது. போதாக்குறைக்கு கஸ்டம்ஸ் ஆபீஸர்கள் வேறு கண்கொத்திப் பாம்பாகச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தார்கள். அதையெல்லாம் தாண்டி, ஏழாயிரம் அவுன்ஸ் தங்கமும் பழுதில்லாமல் கைகளில் வந்து சேர்ந்ததில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்.

``இதைத் தொடர்ந்து பண்ணலாமில்லையா?’’ என்று ஒன்றுக்கு நான்கு முறை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டார்கள். தூத்துக்குடிக்காரர்கள் மூவரும் சந்தேகமின்றி தலையாட்டினார்கள்.

கரைக்கு வந்த தங்கத்தை பம்பாய்க்குக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை காசி அண்ணாச்சி எடுத்துக்கொண்டார். அதற்காக லாரியில் டம்மியான டீசல் டேங்குகளை இணைத்து, அதில் தங்கத்தைவைத்து எடுத்துச் செல்லலாம் என சமுத்திரம்தான் யோசனை கூறினான். பம்பாய்க்காரர்களுக்கு அந்த யோசனை மிகவும் பிடித்துப்போனது. அதேநேரம் எல்லா திட்டங்களும் சமுத்திரம் சொன்னதாகவே இருந்ததில் சின்ன பர்லாந்தும், கொடிமரமும் கொஞ்சம் எரிச்சலானார்கள். ஆனால், இந்த இடத்தில் வேறு வழியில்லை. ஒத்துப்போகத்தான் வேண்டுமென அமைதியாக இருந்தார்கள்.

பம்பாய்க்காரர்கள், முதல் தங்கச் சரக்கு இறங்கிய வெற்றியைக் கொண்டாட ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அவர்களுக்கு எந்த வெற்றியையும் விருந்துவைத்துக் கொண்டாடிவிட வேண்டும். உடனுக்குடன் ஏற்பாடுகள் நடந்தேறின. விருந்துக்கு ரகசியமாக ஆஸ்திரேலியா கப்பலின் கேப்டனும், எண்ணெய் கப்பலின் கேப்டனும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 59
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 59

கடத்தல் சரக்கை ஏற்றிவரும் கப்பல்களையும், கேப்டன்களையும், அந்த நிறுவனத்தையும் கஸ்டம்ஸ் ஆபீஸர்கள் நினைத்தால் உள்நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் தடைசெய்யலாம். சர்வதேச எல்லையின் நீர்ப்பரப்பில் கப்பல்கள் மிதக்கும் வரைதான் இந்திய ஆபீஸர்கள் முடிவெடுப்பது சிரமம். ஆனால், உள்நாட்டு எல்லைக்குள் நுழைய ஒப்புதல் கேட்டாலோ, அல்லது அத்துமீறி நுழைந்தாலோ ஆபீஸர்களால் அந்தக் கப்பலையும், அதன் கேப்டனையும் சிறைப்பிடிக்க முடியும். அதனாலேயே இரண்டு கப்பலின் கேப்டன்களும் கரைக்கு வந்து விருந்தில் கலந்துகொள்ளப்போவதை ரகசியமாக வைக்கச் சொல்லி மஸ்தான் உத்தரவிட்டிருந்தார்.

விருந்தின் முடிவில் அடுத்தடுத்த தங்கப் பரிவர்த்தனைகளுக்காக நாள் குறிக்கப்பட்டது. இதே முறையில் பெரும் தங்கத்தை லங்கா ஹார்பரில் வைத்து வேறு எண்ணெய்க் கப்பலுக்கு மாற்றிக்கொள்ள முடிவானது. பெரும்பாலும், வெளிச்சமில்லாத அதிகாலையில் நேரத்தில் நுழையும் கப்பல்களில் சரக்குகள் வரும். அதுதான் பாதுகாப்பானது; தப்பிக்கவும் வசதியானது.

``சின்ன பர்லாந்தின் பங்களிப்பு மிகவும் குறைவுதான். சொல்லப்போனால் அவருக்கு ஒரு வேலையுமில்லை. ஆனாலும் ஏன் மூவருக்கும் சம பங்கு கொடுக்க வேண்டும்... பெரிய பர்லாந்துக்கு அதிகமாகக் கொடுக்கலாமா?’’ என்று திரவியம் அண்ணாச்சி, மஸ்தானிடம் கேட்டார்.

“அதெல்லாம் வேண்டாம். மூணு பேருக்குமே சம பங்குதான். என்னைக்குமே இந்தத் தொழில்ல மட்டும் அந்தப் பாகுபாடு இருக்கக் கூடாது. ஒருத்தருக்குக் கூட கொடுத்து, இன்னொருத்தருக்குக் குறைவா இருந்தா அவங்க மனசுல உறுத்தல் வரும். அதுவே ஒருத்தர் மேல ஒருத்தருக்குப் பொறாமையை உண்டாக்கும். மாத்தி மாத்திக் காட்டிகொடுத்துட்டு, யாவாரம் கெட்டு குட்டிச்சுவராப் போயிடும்” என்றார் மஸ்தான்.

அதன்படி மூவருக்கும் சம பங்காகவே பிரித்துக் கொடுக்கப்பட்டதில் நல்ல தொகை கிடைத்திருந்தது.

“எங்களோட சரக்கு மட்டுமில்ல. நீங்களும் உங்க சரக்குகளை இங்கருந்து வேற வேற நாடுகளுக்கு எடுத்துட்டுப் போங்க. லங்கா ஹார்பருக்கு இங்கருந்து முத்து எடுத்துட்டுப் போயி, அங்கருந்து ஸ்டோன்ஸ் வாங்கிக்கிட்டு வந்து, வித்து காசு பாருங்க...” என்றார் மஸ்தான். அதைக் கேட்டு மூவரும் சிரித்தார்கள்.

“அதெல்லாம் எப்பவுமே பண்ணிக்கிட்டுத்தான் இருக்கோம்” என்றார் சின்ன பர்லாந்து.

“ஓ... சரி. என்ன வேணும்னா பண்ணுங்க. நாங்க எப்பவுமே கூட இருக்கோம்.” பம்பாய் ஆட்கள், தூத்துக்குடிக்காரர்களுக்கு வாக்கு கொடுத்தார்கள்.

கடத்தல் வணிகத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு யோசனை இருந்தது. பெரிய பர்லாந்துக்கு சில வணிகங்கள் மட்டுமே போதுமானதாகயிருந்தன. அவர் பெரும்பாலும் இறக்குமதி வணிகத்தில் மட்டும் லாபம் பார்க்க நினைத்தார். அதில் ரிஸ்க்கும் குறைவாக இருந்தது. வரி கட்டாமல் எடுத்து வரும் வெளிநாட்டு ரேடியோ, டெலிவிஷன், துணிமணிகள், நறுமணத் தைலங்களைக் கூட காக்காவின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டார்.

காசியும் சின்ன பர்லாந்தும் பக்கத்து நாடுகளுக்கும், தீவுகளுக்கும் என்னென்ன பொருள்கள் தேவையோ அதை தூத்துக்குடி யிலிருந்து அனுப்பிவைத்தார்கள். அளவில் சிறிய, ஆனால் விலையுயர்ந்த பொருள்களையே பெரும்பாலும் அவர்கள் தேர்வுசெய்தார்கள்.

கடத்தல் பொருள்களை அனுப்பும்போது, எடை, சரக்கு செக்கிங் எல்லாம் முடித்து கப்பலில் ஏற்றப்பட்டு, சீல் வைக்கப்பட்ட கன்டெய்னர்களின் கதவுகளை வெல்டிங் மூலம் பெயர்த்தெடுத்து, அதனுள் தாங்கள் ஏற்கெனவே ஏற்றி அனுப்பிய மலிவான சரக்குகளை எடுத்துக் கடலில் வீசி எறிந்தார்கள். பிறகு, அதன் எடைக்குச் சரிக்குச் சமமாக விலையுயர்ந்த கடத்தல் சரக்குகளை நிரப்பி, பெயர்த்தெடுத்த கன்டெய்னர் கதவுகளை மீண்டும் வெல்டு அடித்து பழையபடி மாற்றியமைத்தார்கள். இதனால் கன்டெய்னர் லாக்குகளில் இருந்த கஸ்டம்ஸ் சீலும், எடையும் மாறாமல் அப்படியே இருந்தன. வெல்டு அடித்த இடத்தையும் சுவடு தெரியாமல் தேய்த்து, பழையதுபோல பெயின்டிங்கும் செய்தார்கள்.

பெரும்பாலும் கன்டெய்னர்கள் கப்பலில் ஏறிய அடுத்த ஆறு மணி நேரத்துக்குள் கிளியரன்ஸ் கிடைத்துவிடும். அந்த நேரம்தான் இந்த வேலைகளைச் செய்து முடிக்க அவர்களுக்குச் சாதகமானதாக இருந்தது. அப்படி இல்லாவிட்டாலும் ஒன்றும் பாதகமில்லை. கப்பல் ஹார்பர் எல்லையைத் தாண்டி நான்கு கடல் மைல் தூரம் சென்றதும் மீன்பிடிப் படகுகளிலிருந்து சின்ன பர்லாந்தின் ஆட்கள் கப்பலில் ஏறி, நடுக்கடலில்வைத்தே வேலைகளைக் கச்சிதமாக முடித்தார்கள்.

எல்லோர் கையிலும் கடல் அலைபோல் பணம் புரளத் தொடங்கியது. காசி அண்ணாச்சி, சின்ன பர்லாந்து, பெரிய பர்லாந்து மூவரின் வீடுகளிலும் வெளிநாட்டுப் பொருள்கள் நிறைந்தன. உடுத்தும் துணிகள், நறுமணப் பொருள்கள், டெலிவிஷன், டெலிபோன் எல்லாமே ஃபாரின் பொருள்களாக இருந்தன. பெரிய பர்லாந்தும் சமுத்திரமும் யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டுத் துப்பாக்கிகளை இறக்குமதி செய்துகொண்டார்கள். துப்பாக்கி விஷயம் காக்காவுக்குக்கூட தெரியாமல் பார்த்துக்கொண்டார் பெரிய பர்லாந்து.

சமுத்திரம், தன் கையில் சேர்ந்த பணம் மொத்தத்தையும் ரோசம்மாளிடமே ஒப்படைத்தான். அவள் வீட்டின் கொல்லம் ஓடு போட்ட கூரைகளை மாற்றிவிட்டு, கான்கிரீட் தளம் அமைத்துக் கொடுத்து, கூடுதலாக அறை எடுக்கச் செய்தான் சமுத்திரம். தண்ணீர்க்கு வீட்டுக்குப் பின்னால் போர் போடப்பட்டது.

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வெளிப்படையாகவே ரோசம்மாள் குறித்த ஆவலாதிகளைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள். அதைக் காதில் வாங்கிக்கொள்ளாத ரோசம்மாள் பனிமலரின் கல்யாணத்துக்கும், ஜானின் படிப்புக்கும் காசை ஒதுக்கிவைக்கத் தொடங்கினாள். ஜானுக்கு எப்படியாவது ஒரு பி.இ.டி வாத்தியார் வேலையோ, ரயில்வே வேலையோ கிடைக்க வேண்டும் என மனதுக்குள் கணக்கு போடத் தொடங்கினாள் ரோசம்மாள்.

தன் வீட்டின் ஒவ்வொருகட்ட வளர்ச்சியும் மரியதாஸை அவமானப்படுத்துவதாக இருந்தது. மனிதர் முழுநேரமும் குடியில் மூழ்கினார். உடுத்திய துணி மணி அவிழ்ந்து கிடப்பதைக்கூட உணர முடியாதவராக, கையில் கிளாரினெட்டோடு சாலையில் நிர்வாணமாகக் கிடந்தார். அதேநாளில், பஜாருக்குச் செல்லும் வழியில் ரோசம்மாள் சாலையில் மயங்கி விழுந்தாள். உடன் சென்ற பக்கத்து வீட்டுப் பெண்கள் என்னவோ ஏதோவெனப் பதறிப்போய் அவளை அருகிலிருந்த கிளினிக்கில் கொண்டுபோய் சேர்த்தார்கள்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 59
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 59

ரோசம்மாள் மயக்கம் தெளிந்து கண் திறந்தபோது, உடனிருந்த பெண்கள் அடக்க மாட்டாமல் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அருகில் பனிமலர் கோபத்தோடும் எரிச்சலோடும் தன் அம்மாவையே பார்த்தபடியிருந்தாள். ஜான் கிளினிக்கின் வாசலிலேயே நின்றுகொண்டான். ரோசம்மாள் என்ன காரணமென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டுப் பெண்கள்தான் அவளைக் கிண்டல் செய்யும் தொனியில் கேட்டார்கள். “என்ன ரோசம்மாக்கா அடுத்து பனிமலருக்கு தங்கச்சியா, தம்பியா..?”

ரோசம்மாளுக்குச் சட்டென்று கண்கள் துளிர்த்துவிட்டன. மெல்ல சுதாரித்துக் கொண்டவள், ‘இவர்கள் தெருவெல்லாம் அசிங்கப்படுத்தி விடுவார்களே...’ என்ற நினைப்போடு, பனிமலரையும் ஜானையும் திரும்பிப் பார்த்தாள். அவர்கள் அவளுக்கு முகம் கொடுக்கவேயில்லை.

‘சமுத்திரத்துடன் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமோ...’ என்று தன்னையே நொந்துகொண்டாள் ரோசாம்மாள்.

(பகை வளரும்...)