மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 60

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 60
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 60

“திரியைக் கிள்ளிய வெடி, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்.” - மூர்க்கர்கள்

கடா பாண்டியின் காதலி ஜெசிந்தாவுக்கு பேறுகால வலி எடுக்கத் தொடங்கியது. கருவாட்டு யாவாரத்துக்குப் போயிருந்த கடா பாண்டியின் அப்பா மாடசாமி இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. யதார்த்தமாக அந்த மதிய நேரத்தில் வீட்டுக்கு வந்த சிவன்காளை, பேற்று வலியால் துடிக்கும் ஜெசிந்தாவைப் பார்த்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்தான். பிறகு சுதாரித்துக்கொண்டு, முக்கு ரோட்டிலிருந்து ரிக்‌ஷா வண்டியை வரவழைத்து, அதில் ஜெசிந்தாவை ஏற்றிக்கொண்டுபோய் ஹோலி க்ராஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தான்.

ஆஸ்பத்திரியில் யாருடைய சைக்கிளையோ வாங்கிக்கொண்டு வேகமாக ஜெசிந்தாவின் அம்மா மேரியை அழைத்து வந்தான். ஆஸ்பத்திரியில் நிமிஷத்துக்கொருதரம் பெரிய நர்ஸ், ``ஜெசிந்தா வீட்டுக்காரர் யாருங்க... அந்த மருந்து வேங்கிட்டு வாங்க... இந்த மருந்து வேங்கிட்டு வாங்க...’’ என்று விரட்டிக் கொண்டேயிருந்தார். மறுபடியும் யாரிடம் போய் சைக்கிள் கேட்பதென்று, ஓடி ஓடிப் போய் எல்லா மருந்துகளையும் வாங்கிக்கொண்டு வந்தான் சிவன்காளை.

பக்கத்து பெட்டில் அட்மிட் ஆகியிருந்த பெண்ணுக்கு மருந்து வாங்குவதற்காக, மீண்டும் வெளியே வந்த பெரிய நர்ஸ், “லெட்சுமி வீட்டுக்காரர் காளியப்பன் யாரு...” என்று கேட்க ஒருவரும் பதிலளிக்கவில்லை. அதை கவனித்த சிவன்காளை “குடுங்க நான் வேணா மருந்து வேங்கிட்டு வர்றேன்” என்றான்.

“உன் பேரு காளியப்பனா..?”

“இல்லைங்க.”

“அப்போம் சும்மா இரு... காளியப்பன் யாரு இங்க?” நர்ஸ் கடும் கோபமாகக் கேட்டார்.

“பொண்டாட்டிய பெட்டுல படுக்கப் போட்டுட்டு எங்கதான் போவாய்ங்களோ, இந்த ஆம்பளைங்க... சரி இந்தாங்க... நீங்களே மருந்துகளை வேங்கிட்டு வாங்க...” என்று சிவன்காளையிடம் மருந்துச் சீட்டை கொடுத்தார். அந்த சீட்டுக்கும் அவனே சென்று மருந்து வாங்கிவந்தான்.

சிறிது நேரத்தில் சிகரெட்டை அணைத்துவிட்டு, உள்ளே நுழைந்த லெட்சுமி வீட்டுக்காரர் காளியப்பனை, பெரிய நர்ஸ் திட்டித் தீர்க்கத் தொடங்கினார்.

“கூட இருக்கறதுக்கு வேற ஆள் யாருமில்லையா?”

“எல்லாரும் குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட வேம்பாருக்கு போயிருக்காங்க. அடுத்த மாசம்தான் தேதி சொன்னாங்க. வலி முன்னாடியே வந்துருச்சு.”

காளியப்பன் சொன்னதைக் கேட்டு நர்ஸுக்கு எரிச்சலாக வந்தது.

“ஆமா வலி காலண்டர் பாத்துதான் வரும். நீங்களும் ஆடி அசைஞ்சு வாங்க.’’

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 60
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 60

“என்ன வேங்கணும்னு சொல்லுங்க நர்ஸம்மா... வேங்கிட்டு வாறேன்.”

“அந்தா நிக்கிறாரே... அவரே எல்லா மருந்தையும் வேங்கிட்டு வந்து குடுத்துட்டுட்டாரு... இங்கேயே இருங்க, கூப்பிடுவோம்” என்று பிரசவ அறைக்குள் நுழைந்தார் பெரிய நர்ஸ்.

காளியப்பன் அமைதியாகச் சென்று சுவரில் சாய்ந்துகொண்டான். அருகில் நின்ற சிவன்காளைக்கு நன்றி சொல்லும்விதமாக அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தன் சட்டைப் பையிலிருந்து இரண்டு பத்து ரூபாய்த் தாள்களை எடுத்து நீட்டினான் காளியப்பன்.

“இருக்கட்டும்ங்க... ஏழு ரூபாய்தான் ஆச்சு. வெச்சுருங்க...” என்ற சிவன்காளை, காளியப்பன் நீட்டிய காசை வாங்கிக்கொள்ளாமல் பின்வாங்கினான்.

“உங்களுக்கு இதுதான் முத பிள்ளையா?”

“இல்லைங்க. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. இது என் தம்பி பொஞ்சாதி. இது அவனுக்குப் பொறக்கப்போற புள்ளை. எங்க குடும்பத்துக்குத் தலைச்சன் புள்ளை. அந்தா சேர்ல உக்காந்திருக்காகல்லா... அது அவளோட அம்ம...”

“ஒங்க தம்பி ஊர்ல இல்லையா அப்போ?”

“அவன் உசுரோட இருக்கானான்னே தெரியலைண்ணே. சிலபேரு அவன் மெட்ராஸ்ல இருக்கான்னு சொல்றாய்ங்க... எங்கய்யா அவன் செத்துட்டான்னே நம்புறாரு. எது உண்மைன்னு யாருக்கும் தெரியலை...”

காளியப்பனுக்கு ஏதோ வித்தியாசமாகத் தோன்ற, “ஒங்க தம்பி பேரு...” என்று கேட்டான்.

“பாண்டி... கடா பாண்டின்னு கூப்பிடுவானுவ... இங்க சினிமா, தியேட்டர்னு சுத்திக்கிட்டு கிடப்பாம். ஹார்பர்ல பெரிய பர்லாந்து ஆளுங்களோட வேல பாத்தானாம். ஏழெட்டு மாசம் ஆச்சு... என்ன ஆனான்னு தெரியலை.”

காளியப்பனுக்கு யாரென்று புரிந்துவிட்டது. சட்சட்டென... கடா பாண்டியும், கொடிமரமும் அவன் ஞாபகத்துக்குள் வந்துபோனார்கள். அதற்குள் பெரிய நர்ஸ் காளியப்பன் பெயரைச் சொல்லி அழைத்து, “ஆம்பளைப் பிள்ளை பொறந்திருக்கு…” என்றார். அவன் வேகமாக உள்ளே ஓடிச் சென்று குழந்தையைப் பூப்போலத் தூக்கிக்கொண்டான்.

“குடுங்க... துடைச்சு கிடைச்சு பவுடர் போட்டு கொண்டு வருவாங்க. புதுத்துணி கொண்டு வந்திருக்கீங்களா?”

“இல்லையே... ஓடிப்போயி வாங்கியாந்துரவா?”

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 60
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 60

“நிக்காதீங்க... ஒடனே போங்க...” என்றார் பெரிய நர்ஸ் விரைப்புடன்.

அவசரஅவசரமாக வெளியே வந்தவன், “தம்பி உங்ககிட்ட சைக்கிள் இருக்கா... பொறந்த பிள்ளைக்கு கோடித்துணி வேங்கணும்” என்று சிவன்காளையிடம் கேட்டான்.

“சைக்கிள் இல்லை... ஆனா புதுத்துணி இருக்கு” பைக்குள்ளிருந்து கோடித்துணியை எடுத்துக் கொடுத்தான் சிவன்காளை.

“அப்போம் உங்க தம்பி பிள்ளைக்கி...”

“அது இன்னும் ரெண்டு மூணு சேர்த்து வேங்கிட்டேன். ஆணா, பொண்ணான்னு தெரியாதே... அதான் கவுனு, பனியனுன்னு ஒவ்வொண்ணுலயும் ரெண்டு, மூணு வாங்கியாந்துட்டேன்” என்றான், சிரித்தபடி.

காளியப்பன் சற்றுத் தயங்கினான். “பரவால்ல வாங்கிக்கோங்கண்ணே... தாய்மாமன், மருமகனுக்குச் செஞ்சதா இருக்கட்டும்...” என்றான் சிவன்காளை. காளியப்பனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அதை வாங்கிக்கொண்டு போய் குழந்தைக்கு அணிவித்து அதன் நெற்றியில் ஈரமில்லாமல் முத்திட்டான்.

“பொறக்குற பிள்ளைக்கி முன்னாடியே துணி எடுத்து வெக்கக் கூடாதுன்னு சொல்லுவானுவ...” ஜெசிந்தாவின் அம்மா மேரி மெல்ல சிவன்காளையின் காதுபடச் சொன்னார்.

“அதுனால என்ன... கடைக்காரன் தச்சு வெச்சுருக்கறதில்லையா... அதெல்லாம் பார்க்காதீங்க” என்றான் சிவன்காளை. அதற்குள், “ஏங்க ஜெசிந்தா வீட்டாள் இருக்கீங்களா... உங்களுக்கு பொம்பளைப் பிள்ளை பொறந்திருக்கு...” என்றார் பெரிய நர்ஸ்.

சந்தோஷத்தோடு பச்சை நிற கவுனை எடுத்துக்கொண்டு வேகமாக அறைக்குள் ஓடினான் சிவன்காளை. பின்னாலேயே ஜெசிந்தாவின் அம்மா மேரியும் உள்நுழைந்தார்.

பிள்ளையைப் பார்த்ததும் மேரிக்கு மனசெல்லாம் குமுறிக்கொண்டு வந்தது. மகளை வாஞ்சையாக அணைத்துக்கொண்டவர், ‘பெத்த பிள்ளை முகத்தைப் பார்க்க அப்பனுக்குக் கொடுத்து வெக்கலையே...’ என மனம் புழுங்கினார். ஆனால், சிவன்காளை அந்த சிசுவைத் தன் பிள்ளைபோல் நெஞ்சோடு ஏந்திக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தான். “அப்படியே எங்க அம்மா ஜாடை” என்று அவன் வாய் முணுமுணுத்தது.

சாயங்காலத்துக்கெல்லாம் லெச்சுமி, காளியப்பனின் உறவுக் கூட்டம் ஆஸ்பத்திரியை மொய்த்திருந்தது. கடாபாண்டியின் அப்பா மாடசாமியும், ஜெசிந்தாவின் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் வந்து சேர்ந்திருந்தார்கள். குழந்தையைப் பார்த்ததும் மாடசாமிக்குக் கண்களில் நீர் துளிர்த்தது. குழந்தையைக் கையில் வாங்கியபோது, கண்ணீர் கரைபுரண்டது அவருக்கு. அந்தப் பிஞ்சுக் குழந்தை கண்களை இறுக்கிக்கொண்டு, நாக்கைத் துழாவியபோது, “குட்டி நாவு பொறந்ததும் உப்பு ருசிதான் தேடணுமா... கருப்பட்டியை கரைச்சு சேனத் தண்ணி வெய்ங்க...” என்றார் மாடசாமி.

ஜெசிந்தாவின் அம்மா மேரி தயங்கிக் கொண்டே, “நீங்களே சேனத் தண்ணி குடுத்துருங்க” என்றார். ``பெரியப்பன் நான் கொடுக்கேன்...’’ என்று சிவன்காளையே பிள்ளைக்குச் சேனை வைத்தான்.

லெச்சுமி குடும்பத்தாரும், ஜெசிந்தாவின் அக்கம் பக்கத்து உறவுகளும் ஆளாளுக்கு மாற்றி மாற்றி இரண்டு பிள்ளைகளையும் கொஞ்சிக் கொண்டிருக்க, காளியப்பனும் சிவன்காளையும் சற்று ஆசுவாசமானார்கள்.

“வாரீங்களா... வெளிய போயி ஒரு டீயடிச்சுட்டு வரலாம்” என்று காளியப்பனிடம் சிவன்காளை கேட்க, இருவரும் டீக்கடையை நோக்கி நடந்தார்கள். “அப்புறம் நீங்க எங்க வேலை பாக்கீங்க?” சிவன்காளை கேட்டான்.

“நானும் ஹார்பர்லதான்... சின்ன பர்லாந்து அண்ணாச்சியோட கம்பெனில...”

“ஓ... அப்ப என் தம்பிய நல்லாத் தெரிஞ்சுருக்குமே ஒங்களுக்கு...”

காளிக்கு என்னவோ போலானது. நிர்வாணமாக ஆற்றங்கரையில் கிடந்த கடா பாண்டியின் கழுத்தில், சுருக்குக்கம்பியைப் போட்டு பன்றியைப்போல அவனைத் துண்டு துண்டாக்கிக் கொன்றது காளியப்பனின் ஞாபகத்துக்குள் வந்து வந்து போனது. மேற்கொண்டு அவனால் டீயைக் குடிக்க முடியவில்லை. அடிவயிற்றிலிருந்து ஓங்கரித்துக் கொண்டு வரத் தடுமாறினான்.

“என்னண்ணே ஆச்சு?”

“காலைலருந்து சாப்பிடலையா... அதாம் ஓமட்டிக்கிட்டு வருது.”

“அப்போ ஒரு ஜிஞ்சர் சொல்லவா?”

“இல்ல வேண்டாம்... இருக்கட்டும்” இருவரும் சிறிது நேரம் அமைதியாக நின்றார்கள்.

“ஒண்ணு சொல்லட்டா... பேசாம உங்க தம்பி பொண்டாட்டிய நீங்களே கெட்டிக்கிட்டா என்ன?” காளியப்பன் கேட்டதும், சிவன்காளை ஒரு நொடி அதிர்ச்சியடைந்தான்.

தட்டுத் தடுமாறி, “ஒருவேளை என் தம்பி திரும்பி வந்துட்டான்னா... அது எவ்ளோ பெரிய துரோகமாகிடும்?” என்றான் சிவன்.

“இல்ல... அப்படி ஒருபோதும் நடக்காது” என்றான் காளியப்பன்.

சிவன் நெற்றியைச் சுருக்கி காளியப்பனையே பார்த்தான்.

(பகை வளரும்...)