வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நட்புக்கு ஒரு கணம் பாசத்திற்கு ஒரு கணம் வீரத்திற்கு அரைக்கணம் என்று கணங்களைக் கணக்கிட்டு சொல்லோவியம் தீட்டி திகைக்க வைக்கிறான் பாரதி. என்ன அற்புதமான கணக்குகள் அவை.
அர்ச்சுனன் கண்ணனின் தங்கை சுபத்திரையை காதலிக்கிறான். மூத்த அண்ணன் பலராமர் நாடற்ற அர்ச்சுனனுக்கு தங்கையை மணம் செய்துதர விரும்பவில்லை. அர்ச்சுனன் காதலியைக் கவர்ந்து சென்று மணந்துகொள்ள விரும்புகிறான். காதலுக்கு உதவ நண்பன் வேண்டுமே. கண்ணனோ காதலியின் அண்ணன். கண்ணனுக்கும் இந்தக் காதலில் உடன்பாடு உண்டு. அதனால் கண்ணனிடமே ஆலோசனை கேட்கிறான். கண்ணனும் ஆலோசனை சொல்கிறான்.
மற்றொரு சமயம் பாரதப்போர் நடக்கும் நேரத்தில் கர்ணனைக் கொன்றால்தான் பாரதப் போரில் வெற்றி என்ற நிலை. அப்போதும் அர்ச்சுனன் கர்ணனைக் கொல்ல கண்ணனிடம் ஆலோசனை கேட்கிறான். கண்ணனும் யோசனை சொல்கிறான்.

இந்த இரு காட்சிகளையும் சொல்ல வந்த பாரதி,
'பொன்னவிர் மேனிசுபத்திரை
தன்னைப் புறங் கொண்டு
போவதற்கு உபாயம் ஒன்று
உரை என்றால் உபாயம் இரு
கணத்தே உரைப்பான்…
அந்தக் கன்னன் வில்லாளன்
தன்னைக் கொல்வதற்கே
உபாயம் ஒன்றுஉரைஎன்றால்
உபாயம் ஒரு கணத்தே
உரைப்பான்.' என்று .
எழுதுகிறான்.
இது கண்ணன் என் தோழன்
என்ற கண்ணன் பாட்டுக்கவிதை
இதில் இரண்டு
பிரச்சனைகளுக்கும் கண்ணன்
தீர்வு சொல்கிறான். தன் தங்கையையே கடத்துவதற்கு தன்னிடமே ஆலோசனை கேட்டதும் துணுக்குறுகிறான் கண்ணன். ஒரு புறம் தங்கை.. மறுபுறம் நண்பன்.. நண்பனுக்கு உதவினால் அண்ணனுக்குத் துரோகம்..
ஒருகணம் யோசித்துவிட்டு
நண்பனுக்கு உதவ வருகிறான்.

இந்த இடத்தில்தான் பாரதியின் கவிதை நுட்பத்தை நோக்க வேண்டும். உபாயம் சொல்ல இரண்டு கணங்களை எடுத்துக் கொள்கிறான் கண்ணன். ஒரு கணம் உறவு குறித்து தயக்கம்.
மறுகணத்தில் நட்புக்காக உறவின் எதிர்ப்பை எதிர் கொள்ளத் தயாராகிறான்….
அடுத்த காட்சியில் கர்ணனைக் கொல்ல வழி சொல் என்று கேட்ட ஒரு கணத்தில் உபாயம் சொல்கிறான் கண்ணன். இந்தச் சித்திரத்தை கவிதையில் தீட்ட விளையும் பாரதி கண்ணனின் இந்தப் பண்பை நட்பின் உயர்வைச் சொல்வதற்காகவே
'கண்ணன் என் தோழனில்' அழகோவியமாகத் தீட்டி கவிதையில் 'நகாசு ' வேலை செய்து பிரமிக்க வைக்கிறான்.

அடுத்து கண்ணனின் வீரம் பற்றி கண்ணன் என் அரசன் என்று கண்ணனை அரசனாகப் பாவித்துக் கவி புனைகிறான். வீரத்தைப் பற்றி பலரும் பலவாகப் புகழலாம். பாரதியாயிற்றே ! வித்தியாசம் வேண்டாமா?
கண்ணனின் வீரத்தை இப்படிப் பாடுகிறான்.
சக்கரத்தை எடுப்பதுஒர்கணம்
தர்மம் பாரில் தழைப்பது மறுகணம்
இக்கணத்தில் இடைக்கணம்
ஒன்றுண்டோ
இதனுள்ளே பகையை மாய்த்திட
வல்லான் காண்..
அரைக்கண நேரக்கணக்கையெல்லாம் கவிதை ஓவியமாகத் தீட்டுகிறானே இந்தக் கணக்குப் பிள்ளை..
பாரதியின் குறும்பில் விளைகிறது மற்றொரு கணக்கு.
பக்திப் பாடல்கள் வரிசையில்
கண்ணம்மாவின் காதல் என்ற தனிப்பாடலிது. எல்லோரும் பொன்னை மதிப்பீடு செய்கையில் மாத்துக் குறையாத பத்தரை மாத்துத் தங்கம் என்றுதானே தங்கத்தை உச்சமதிப்பீடு செய்வோம். ஆனால் கண்ணனை கண்ணம்மா என்ற காதலியாக உருவப் படுத்துகிற பாரதி காற்று வெளியிடையே கண்ணம்மாவின் காதலை எண்ணிக் களிக்கின்றான். தொடர்ந்து அவள் மேனியை வர்ணிக்கும் போது "பத்துமாத்துப் பொன்னொத்த நின் மேனியும்"
என்று அரை மாத்தைக் குறைத்து விடுகிறான். மிகவும் ஊன்றிக் கவனித்தால் மட்டுமே அவனது குறும்பு பிடிபடும்.

கண்ணனோ நீலமேனியை உடையவன். அவனைக் காதலியாக மாற்றும் போது கண்ணனின் கறுமை நிற மேனி என்று சொன்னால் பொருந்தாது. பொன்னிறம் என்றால் கண்ணனுக்குப் பொருந்தாது.
பேசாமல் பொன்னின் அரை மாத்தைக் குறைத்து விடுகிறான்.
அதனாலேயே பத்து மாத்துப் பொன்னொத்த மேனியும் என்று பாடுகிறான். இன்னொரு மறை பொருளும் இருப்பதாகத் தோன்றுகிறது.

கண்ணன் மானிடனாக அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. மனிதர்களின் ஆசாபாசங்களுடன்தான் கண்ணனின் பிம்பம் வடிவமைக்கப் படுகிறது. ஒரு தர்மயுத்தத்தில் ஒரு பக்கமாகச் சாய்ந்து விடுகிறான். ஒரு தாயின் நூறு பிள்ளைகளையும் கொன்று அந்தத் தாயின் சாபத்திற்கு ஆளானவன் கண்ணன். என்னதான் கடவுள் என்றாலும் அவன் மீதும் கறைகள் தீட்டப்படுகின்றன. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதானோ என்னவோ கண்ணம்மாவைப் பத்து மாத்துத் தங்கம் என்றானோ பாரதி..யாரே விளக்குவர் அந்தக் கணக்கு பிள்ளையின் கணக்கீடுகளை..
பாரதியைக் கணக்குப் பிள்ளை என்று சொல்லக் காரணம் இருக்கிறதே. பாரதியின் சிறுகதைகள் சில மட்டுமே வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ஆறில் ஒரு பங்கு சிறுகதை. இக்கதை மிகவும் விமர்சிக்கப்பட்டது. ஆறில் ஒரு பங்கு என்ற தலைப்பிற்கும் கதைக்கும் சம்பந்தம் கிடையாது.
சில சிந்தனையாளர்கள் இதற்கான விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள்.
'ஒரு சாதி ஓர் உயிர்; பாரத நாட்டில் முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது. இந்த உணர்வே நமக்கு ஸ்வதந்திரமும் அமரத்தன்மையும் கொடுக்கும். “நாந்ய பந்தா வர்த்ததே அயநாய” வேறு வழியில்லை. இந்நூலை, பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம்'
இது பாரதி அந்தக் கதைக்காக எழுதிய முன்னுரை.

இங்கு பாரதியை சமூகநீதியின் பிரதிநிதியாகப் பார்க்கிறோம்.
தேச விடுதலை வேண்டுமெனில் சமூகவிடுதலை எத்தனை அவசியம் என்பதில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறான் .
உண்மையில் இது ஒரு காதல்கதை. முதலில் பிரிந்துவிடுகிற காதலர்கள் காந்தியின் சேவைக்காக வெவ்வேறு தளங்களில் சந்திக்க நேர்கையில் மீண்டும் ஒன்றுசேர்கிறார்கள்.ஆனால் சமூகசேவைதான் முக்கிய இடம் பிடிக்கிறது.
கவிதையெனினும், காவியவடிவில் எழுதும் பாடல்களாகட்டும் பாரதியின் நகாசு வேலைகளும் கணக்கியல் சிலேடைகளும் படிப்போர் உள்ளத்தை அந்தக் கணக்குப்பிள்ளை கொள்ளை அடிப்பதை மறுக்கமுடியாது.
*********
-கமலநாபன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.