
தமிழ் நெடுஞ்சாலையின் முக்கியத் திருப்பம்.
உண்டி முதற்றே உலகு. உணவு என்பது பண்பாடு, பழகிப்போன வழக்கம். அதனால் அது ஓர் அடையாளம். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதுபோல கேழ்வரகு, தினை, கம்பு, சோளம், சாமை போன்ற சிறுதானியங்கள் காலம் காலமாக தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. வரகும் தினையும் உணவு மட்டுமல்ல உணர்வும்கூட.
2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக (International Year of Millets) அறிவிக்கக் கோரும் இந்தியாவின் தீர்மானத்தை ஐ.நா பொதுச்சபை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இணையத்தில் இச்செய்தியை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில், இதற்கான விதையை வலுவாக ஊன்றியதில் ஒடிசாவின் பங்களிப்பும் இருக்கிறது.

மதுரையில் வளர்ந்ததால் ரேஷன் கடையில் அரிசியும் கோதுமையும்தான். ஆனால் விடுமுறையில் தாத்தா ஊருக்குப் போகும்போது எங்கும் கேழ்வரகு, சோளக்காடுகள். ‘சீமையில் தெனமும் அரிசிச் சோறாமே’ என்று கேட்டவர்கள் உண்டு. கேழ்வரகு எக்கச்சக்கமாக விளையும் ஊரில் `சர்க்கரை சத்துக்கு கோதுமைதான் நல்லது’ என்று அப்போதே நம்பினார்கள். இப்போது ஓட்ஸ்! இறக்குமதி செய்யப்படும் எதற்கும் தனி மவுசு.
1988-ல் கட்டாக்கின் கூடுதல் ஆட்சித்தலைவராக நியமன ஆணை. நகரங்களில் வேலை பார்க்கவா மதுரையிலிருந்து இவ்வளவு தூரம் வந்தோம் என்று தோன்றியது. “நான் பழங்குடி மக்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். என்னை ஏதாவது தண்ணியில்லாத காட்டுக்கு அனுப்புங்கள் சார்” என்று தலைமைச் செயலாளரைச் சந்தித்துச் சொன்னேன். வியப்புடன் பார்த்தார். கோராபுட் மாவட்டத்திற்குப் பணி மாற்றம் செய்யப்பட்டேன். `நேயர் விருப்பமாக’ நான் விரும்பிக்கேட்ட ஒரே நிறுத்தம். தமிழ் நெடுஞ்சாலையின் முக்கியத் திருப்பம்.
தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் நெல் சாகுபடி தோன்றிய ஆதி நிலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது ஒடிசாவின் கோராபுட் பகுதி. மலைநில, புன்செய் வரகும் தினையும் அடுக்கு நீர்ப்பாசன நெல் விவசாயமும் கைகுலுக்கிக் கொண்ட இடம்.
நெல்லுக்கு `றெக்கை’ இருந்ததாக போண்டா பழங்குடி கதை மரபு ஒன்று உண்டு. ‘மனிதர்களுக்கும், நெல்லுக்கும் போட்டி. அதில் நெல் தோற்றதால் நடுவராக இருந்த சூரியக்கடவுள் நெல்லின் றெக்கையை வெட்டினார். அதனால் நெல் பறக்காமல் அடங்கி இருக்கத் தொடங்கியது’ என்று அந்தக் கதை போகிறது. தான்தோன்றியாக வளர்ந்த காட்டு நெல் (Wild Paddy) மனிதனின் கட்டுக்குள் விளைபயிராக (Domesticated Paddy) மாறிய காலகட்டத்தின் குறியீடுதான் இந்தக் கதை.
பழங்குடி வாரச்சந்தைகளை வேடிக்கை பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். காக்கிரி கும்மாவில் திங்கட்கிழமை, அனக்காடல்லியில் வியாழக்கிழமை, குண்டுலியில் வெள்ளிக்கிழமை. ஆந்திராவிலிருந்து வந்த கருவாடுகள் மலைபோல் குவிந்துகிடக்கும். கடல் மீன் கருவாட்டில் மலை மக்களுக்கு அப்படி என்னதான் ஒரு மயக்கமோ தெரியவில்லை. பண்டமாற்றுதானே பண்பாட்டு மாற்றத்தின் தொடக்கம்.
அறுவடைக் காலத்தில் சிறுதானியங்கள் அடிமாட்டு விலைக்குப் போகும். பஞ்சாபில் இருந்து அரிசியும் கோதுமையும் ரயில்களில் வந்து இறங்கும். சிறுதானியங்களின் விலைக்கும், விற்பனைக்கும் உத்தரவாதம் இல்லை என்ற உண்மை உறுத்தும்.
1989-ல் மும்பையில் உள்ள டாடா சமூகவியல் நிறுவனத்தில் (TISS) ஒரு பயிற்சி முகாம். இந்தியா முழுவதும் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டோம். பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பற்றிப் பல விவாதங்கள் நடந்தன.
ஒடுக்கப்பட்ட மக்களை ‘பட்டியல் இனத்தவர்’, ‘பட்டியல் பழங்குடியினர்’ என்றும் அறிவித்திருப்பதைப் போல கேழ்வரகு, கம்பு, தினை, சோளம் போன்றவற்றை ‘பட்டியல் தானியங்கள்’ (Scheduled Crops) என்று அறிவிக்க வேண்டும் என்றேன். பசுமைப் புரட்சி இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கு உதவியிருக்கிறது. ஆனால், அரிசிக்கும் கோதுமைக்கும் கிடைத்த ஆதரவில் நூற்றில் ஒரு பங்குகூட சிறுதானியங்களுக்குக் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டதுடன் புறநானூற்றின் சில வரிகளை ஆங்கிலத்தில் விளக்கினேன்.
‘கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை...’
வரகு, தினை, கொள்ளு, அவரை ஆகிய இந்த நான்கு உணவைத் தவிர வேறு எதுவும் எங்கள் உணவு இல்லை;
‘கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!’
நடுகல் வழிபாடுதான் எங்கள் வழிபாடு அதைத்தவிர நெல்மணிகளைத் தூவி வழிபட வேறு கடவுள் யாருமில்லை.
தேநீர் இடைவேளையில், மூத்த அதிகாரியான பி. என். யுகாந்தர், “பட்டியல் தானியங்கள் என்ற சொல்லாடல் அருமை; இந்த யோசனை எப்படி வந்தது?” என்று கேட்டார். கோராபுட் வாரச் சந்தைகள் பற்றிச் சொன்னேன்.

கண்மூடித் கண் திறந்ததுபோல இருக்கிறது; கால் நூற்றாண்டுக்கு மேல் கடந்துவிட்டது. ஒடிசாவிலிருந்து டெல்லி, அங்கிருந்து சென்னை, மீண்டும் டெல்லி என்று பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிவிட்டு 2014-ல் மீண்டும் ஒடிசா திரும்பினேன்.
ஒடிசா நெடுந்தூரம் பயணித்துவிட்டது. வெளிமாநிலங்களில் இருந்து இப்போது அரிசி வரும் பேச்சுக்கே இடமில்லை. அரிசி உற்பத்தியில் உபரி நிலை. வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் சில மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று.
2016-ம் ஆண்டு ‘வேளாண்மை அமைச்சரவை’ (Agriculture Cabinet) என்று முதல்வர் தலைமையில் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. அப்போதுதான் சிறுதானியங்களின் மறுமலர்ச்சிக்குத் திட்டமிட்டோம். ஒடிசாவின் சிறுதானிய விவசாயிகள், அனுபவம் மிக்க தன்னார்வலர்கள், கல்வியாளர்கள், கள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தோம். பரிந்துரைகளை முதல்வரிடம் சமர்ப்பித்தோம். `ஒடிசா மில்லட் மிஷன்’ (OMM) என்ற குறுந்தானிய இயக்கம் அரசுத் திட்டமாக 2017-ல் அறிவிக்கப்பட்டது. முதலில் ஏழு மாவட்டங்கள்; இப்போது 14 மாவட்டங்களில் செயல்படுகிறது. 65 கோடியில் ஆரம்பித்த நிதி ஒதுக்கீடு இப்போது 576 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மல்கான்கிரியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கச் சென்றேன். பழங்குடி விவசாயிகளிடம் உரையாடினேன். அப்போது, “கேழ்வரகு என்பது வெறும் தானியம் இல்லை; அது எங்கள் பண்பாடு” என்றார் ஒருவர். புறநானூற்று வரிகளின் எளிய பதவுரைபோல ஒலித்தது அந்தக் குரல். நியமகிரி பகுதியில் ஒரு பழங்குடி பலிச்சடங்கில் கேழ்வரகுப் படையலைப் பார்த்தபோது, சங்க இலக்கியத்தின் வேலன் வெறியாட்டத்தில் தினையை வைத்துக் கும்பிடும் காட்சிதான் நினைவுக்கு வந்தது.
இப்போது ஒடிசாவில் கேழ்வரகு, நெல் போலவே அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆதரவால் வெளிச் சந்தையிலும் கூடுதல் விலை கிடைக்கிறது. ஒடிசாவில் கேழ்வரகு விவசாயிகளின் சராசரி குடும்ப வருமானம் 215 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக `நிதி ஆயோக்’ ஆய்வு கூறுகிறது.
பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் அரசால் கொள்முதல் செய்யப்பட்ட கேழ்வரகு நியாய விலைக் கடைகள் மூலம் மக்களைச் சென்று சேர்கிறது. கார்டுக்கு உரிய அரிசியில் ஒரு கிலோவைக் குறைத்துக்கொண்டு அதற்குப்பதிலாக ஒரு கிலோ கேழ்வரகு. விலை ஒரு ரூபாய்தான். பழங்குடி விவசாயிகளுக்கு இரண்டு வகைகளிலும் நன்மை. புன்செய் காட்டிலும் சாப்பிடும் தட்டிலும் மறுபடியும் கேழ்வரகு. மாவு அரைக்கும் இயந்திரங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன; `மில்லட் சக்தி’ என்ற மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறுதானிய பிஸ்கட், கேக் தயாரிக்கிறார்கள்.

மதிய உணவுத் திட்டத்தில் கேழ்வரகு சேர்க்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மழலையர் மையத்தில் கேழ்வரகு லட்டு பாப்புலர். சிறுதானிய விவசாயம், நேரடிக் கொள்முதல் பற்றி ஊர் ஊராக ‘மைக்’ கட்டிய வேன்களில் பிரசாரம். `மில்லட் மிஷன்’ வெறும் அரசுத் திட்டம் அல்ல; மக்கள் இயக்கம். உலகக் கோப்பை ஹாக்கி பந்தயம் நடந்தபோது கலிங்கா ஸ்டேடியத்தில் ‘மில்லட் கபே’ (Millet Cafe) மீது ஊடக வெளிச்சம்.
ஒடிசா மில்லட் மிஷனை இந்தியாவின் சிறந்த முன்னெடுப்புகளில் ஒன்றாக ‘நிதி ஆயோக்’ அறிவித்துள்ளது. 2018 செப்டம்பரில் தேசிய சிறுதானிய துணை அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது, ஒடிசா மாடலைப் பின்பற்றுமாறு வேளாண்மைத்துறை அமைச்சர் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டார். மதிய உணவுத் திட்டத்தில் சிறு தானியங்களை அறிமுகம் செய்ய மனிதவள மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சகம் பரிந்துரைத்தது. பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இத்திட்டத்தைப் பசுமைப் புரட்சிக்கான காலத்திற்கேற்ற மாற்றாக வடிவமைக்க முடியுமா என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆராய்கிறது.
2018-ம் ஆண்டை தேசிய சிறுதானிய ஆண்டாக அறிவித்த இந்திய அரசு, இதை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது. 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கும் தீர்மானத்தை இந்தியா முன்வைத்தது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் `சங்கச்சுரங்கம்’ என்ற எனது இணையவழிச் சொற்பொழிவுத் தொடர். ‘ஓர் ஏர் உழவன்’ பற்றிப் பேசுவதற்காக சங்க இலக்கியத் திணை நிலங்களில் மீண்டும் பயணிக்கிறேன். பழகிய சாலை என்றாலும் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவம். புரவுவரி செலுத்த இயலாத ஊராக முல்லை நிலச் சமுதாயம் கைக்கும் வாய்க்குமாகக் காலம்கடத்துகிறது. ஆனாலும் அங்குள்ள சீறூர்த் தலைவன் கடன் வாங்கியும் விருந்தினர்களை உபசரிக்கிறான். அதேநேரத்தில் பெருவேந்தர் வந்தாலும் எதிர்த்துப் போரிடும் தன்மானம் கொண்டவனாக இருக்கிறான். நெல்லும் கரும்பும் மருத நிலத்தின் பெருமைக்குரிய பயிர்கள். பெருவேந்தர்களின் வளமான நிலங்களின் பெருமை பேசும் புலவர்கள், வரகு, கொள்ளு போன்ற சிறுதானியங்களை மட்டும் உண்கிற அரிசிச்சோறு அறியாதவர்களை இளக்காரமாகப் பேசுகிறார்கள். அதே நேரத்தில் வரகு, தினை, கொள், அவரை ஆகிய நான்கைத் தவிர வேறு எதுவும் உணவு இல்லை என்ற முழக்கத்தின் மூலம் உணவுக்குள் ஒளிந்திருக்கும் பண்பாட்டு அரசியலைப் பொதுவெளியில் போட்டு உடைக்கிறது சங்க இலக்கியம்.சங்க இலக்கிய சிறுதானிய வேளாண்மையில் பெண்களின் பங்களிப்புதான் அதிகம். தினைப் புனத்தையும், ஏனலையும் பெண்கள் காவல் காப்பதை 55 குறிப்புகளும், ஆண்கள் காவல் காப்பதை 14 குறிப்புகளும் தெரிவிக்கின்றன. ஒடிசாவின் சிறுதானிய மறுமலர்ச்சியின் முதுகெலும்பே பெண்கள்தாம்.ஐ.நா சபையின் தீர்மானத்தைப் பற்றி அறிந்த மகிழ்ச்சியில் ஒரு கேழ்வரகு பிஸ்கட் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எடுத்துச் சாப்பிடுகிறேன். எப்போதையும்விட சுவையாக இருக்கிறது.கரும்புக்கும் வரகுக்கும் கயிறு இழுக்கும் போட்டி என்றால் நான் வரகின் பக்கமே நிற்பேன். ஏனெனில் அதுவே `கடைசி மைலின்’ உணவு. பருத்தியும் கரும்பும் பணப்பயிர்; தேவைதான். ஆனால், வரகும் தினையும் பசிப்பிணி தீர்க்கும் மருத்துவம். பகிர்தல் அறம்.அதனால்தான் அம்மன் திருவிழாவில் இப்போதும் கூழ். - பயணிப்பேன்
சிறுதானிய உலகம்
சிறுதானியங்கள் 7,000 ஆண்டுகளுக்கு முன்பே பயிர்செய்யப்பட்டன. பண்டைய சீனா, கொரியா, இந்தியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
சிறுதானியங்களை வறட்சியான பகுதிகளிலும் பயிர் செய்யலாம். குறுகிய காலப் பயிர்களும்கூட. வரகை 60 முதல் 90 நாள்களுக்குள் அறுவடை செய்துவிடலாம். அரிசி, கோதுமைபோல எளிதில் கெட்டுப்போவதில்லை.
உலகின் சிறுதானிய உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இந்தியாதான் (36 சதவிகிதம்). 97 சதவிகித சிறுதானிய சாகுபடி, வளரும் நாடுகளில்தான். நைஜர், நமீபியா, எத்தியோப்பியா, சாட், காம்பியா, மாலி போன்ற நாடுகளில் சிறுதானியங்களே முக்கிய உணவு.
ICRISAT என்ற சர்வதேச நிறுவனமும், தெலங்கானாவில் இயங்கும் இந்திய சிறுதானிய ஆய்வு நிறுவனமும் சிறுதானியங்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன.
- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது