
பெயர் வைப்பதில் அப்படி என்ன இந்த பழங்குடியினருக்கு யோசனை...
1998-ம் ஆண்டு மயூர்பன்ஜ் கலெக்டர் பொறுப்பில் நான். “சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பார்க்க வந்திருக்கிறார்” என்று உதவியாளர் சொன்னதும் உடனே அவரை உள்ளே அழைத்தேன். வந்திருந்தவர் அந்த மாவட்டத்தின் ஒன்பது எம்.எல்.ஏ-க்களில் ஒருவர். பெயர் ராவணேஸ்வர் மடேய். தனது தொகுதி தொடர்பான சில பிரச்னைகளைக் கூறினார். அவர் பேசி முடித்ததும் நான் கேட்டேன், “உங்களுக்கு ராவணேஸ்வர் என்று பெயர் வைத்ததற்கு காரணம் எதுவும் இருக்கிறதா?”
“இந்தப் பகுதியில் ராவணேஸ்வர் என்று பலர் இருக்கிறார்கள். அதுவும் ஒரு நல்ல பெயர்தானே” என்று சொல்லி அவர் கிளம்பிவிட்டார். எனக்குள் ஒரு பூதம் கிளம்பியது. அதிகாரிகளில் ஒருவரிடம் இதுபற்றி விசாரித்தேன் “இது என்ன பிரமாதம் சார். நமது அலுவலகத்திலேயே ஒரு துரியோதனன் இருக்கிறார்” என்றார். அடுத்த அரை மணி நேரத்தில் எனது அறையில் துரியோதனன்.

எதிர்மறைப் பெயர்கள் என்று கருதப்படும் பெயர்கள் பற்றிய எனது தேடல் இப்படித்தான் தொடங்கியது. ஒரு சின்ன முட்டுச்சந்து என்று நுழைந்துவிட்டேன். ஆனால் அது இந்தியாவின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் என்னை இழுத்துச் சென்றுவிட்டது.
பல்வேறு வட இந்திய, கிழக்கு இந்திய மாநிலங்களின் வாக்காளர் பட்டியல்களைத் தோண்டித் துருவினால் அங்குமிங்கும் ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித், மேக்நாத், துரியோதனன், துச்சாதனன், சகுனி, கம்சன் என்போர் ஆயிரக்கணக்கில். அதை இந்திய வரைபடத்தில் போட்டுப் பார்த்தால்தான் புரியும், காப்பியங்களும் பேரரசர்களின் கல்வெட்டுகளும் ஒருபோதும் பேசாத இந்தியச் சமூகவியல்.
எனது வட மாநில நண்பர் ஒருவர் ஒருமுறை கேட்டார். “தமிழ்நாட்டில் ராவணனைக் கும்பிடுவீர்களா?” ராவணனுக்குத் தனியாக கோயில் எதுவும் பார்த்ததில்லை. கொடும்பாவி கொளுத்துவதும் இல்லை என்றேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ராவணன் கோயில்கள் இருப்பதைப் பற்றி நான் அறிந்தபோது வியப்பாக இருந்தது.


உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் பிஸ்ரக் என்ற ஒரு கிராமம். டெல்லியிலிருந்து 55 கிலோமீட்டர். ராவணன் இங்குதான் பிறந்ததாக இந்தப் பகுதி மக்கள் கூறுகிறார்கள். ராவணனின் கொடும்பாவியைக் கொளுத்தி ராம்லீலா கொண்டாடுவது இங்கே நிகழ்வதில்லை. அந்த நேரத்தில் இங்கே துக்கம் கொண்டாடுகிறார்கள். ராவணனின் தந்தையான விஸ்ரவா என்ற முனிவரின் நினைவாகவே பிஸ்ரக் என்ற ஊர்ப்பெயர் வந்ததாம். இங்கே ராவணனுக்கு ஒரு கோயில் கட்ட முயற்சி நடைபெறுவதாகவும் இது தொடர்பாக இரு பிரிவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதைப்போலவே கான்பூரிலும், பதாயுன் மாவட்டத்தின் சாகுகராவிலும் ராவணன் கோயில்கள், எக்கச்சக்கமான பக்தர்கள். ராவணன் மனைவி மண்டோதரி மத்தியப்பிரதேசத்திலுள்ள விதிஷாவில் பிறந்ததாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். விதிஷாவில் ராவண கிராம் என்ற பெயரில் ஓர் ஊரும், அங்கே ராவணன் கோயிலும் இருக்கிறது. இப்பகுதியிலுள்ள மாண்ட்ஸோரில் ராவணன் - மண்டோதரி திருமணம் நடந்ததாம். இங்கே உள்ள பத்துத் தலை ராவணன் சிலையின் உயரம் 35 அடி.
தேர்தல் காலத்து அவசரங்களில் கான்பூர், பதாயுன், விதிஷா போன்ற பகுதிகளுக்குச் சென்றபோது ராவணன் கோயில் நினைவுக்கு வந்ததுண்டு. ஆனால், அங்கு தேர்தல் நடத்துவதே பதற்றமான வேலை; இதில் நான் ராவணன் கோயிலுக்குச் சென்றால் பத்திரிகைச் செய்தி ஆகிவிடும் என்பதால் செல்லவில்லை.
ராஜஸ்தானில் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மௌட்கில் / முட்கில் என்ற பிரிவைச் சேர்ந்த பிராமணர்கள் தங்களை ராவணனின் வழித்தோன்றல்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். ஹிமாசலப்பிரதேசம் கங்ரா மாவட்டத்தில் பைஜ்நாத் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் ராவணனை எரிக்கும் தசராப் பண்டிகையில் பங்கேற்பதில்லை.
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்திலுள்ள சங்கோலா என்ற ஊரில் ராவணன் சிலை வழிபடப்படுகிறது. கட்சரோலி மாவட்டத்தில் வசிக்கும் கோண்டு பழங்குடியினர் ‘ராவணன் எங்கள் கடவுள்’ என்று கூறுகிறார்கள். ராவணனின் கொடும்பாவியைக் கொளுத்தி அவமதிக்கக் கூடாது என்று பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்த இந்தப் பழங்குடிகள், மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு கொடுத்துவருகிறார்கள்.
பவுலா ரிச்மேன் எழுதிய Many Ramayanas என்ற புத்தகத்தின் மூலம் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் மேல்காட் (Melghat) பகுதியில் வசிக்கும் கொர்க்கு பழங்குடிகள் பற்றி அறிந்தேன். இவர்கள் தங்களை ‘ராவண வம்சி’ என்று பெருமையாக அழைத்துக்கொள்கிறார்கள். இந்தப் பகுதியில் சிலர் ராவணன் என்ற பெயருடன் இருப்பதை வாக்காளர் பட்டியல் மூலம் அறிந்தேன். தசரா பண்டிகையின்போது சமவெளிப்பகுதியில் ராவணன் கொடும்பாவி கொளுத்தப்படும்போது கும்பகர்ணனுக்கு ஆரத்தி நடத்துகிறார்கள் இவர்கள். இங்கே ராவணன், துரியோதனன் என்று இரண்டு பெயரையும் ஒருங்கே கொண்ட ஒருவர் வசிக்கிறார் என்பதை சென்ற ஆண்டுதான் கண்டுபிடித்தேன். மிகவும் வியப்பாக இருந்தது. இது கொரோனா காலம். இல்லையென்றால் இந்நேரம் அவரை நேரில் சந்தித்திருப்பேன்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் ஆந்திரப்பிரதேசம் காக்கிநாடாவில் ராவணன் கோயில் உள்ளது. தெலங்கானாவில் பத்ராச்சலம் பகுதியில் ராமன் கதையோடு தொடர்புடைய பல இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் கோணசீமா பகுதியில் அயோத்திய லங்கா உள்ளிட்ட நதித் தீவு கிராமங்கள் பல உள்ளன.

இந்த உலகம் பெயர்களால் நிறைந்தது. பல பழங்குடி மக்களின் பெயர் சூட்டும் முறைகள், சடங்குகளை நேரில் சென்று பார்த்திருக்கிறேன். இது ஓர் ஆழமான சமூக உளவியல். இறந்து போன முன்னோர்களின் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுவது உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது. எந்தப் பாட்டன், பாட்டி பெயரைக் குழந்தைக்கு வைப்பது என்பதை, குறி பார்த்து (Divinatory Test) முடிவு செய்கிற பழக்கம் சில பழங்குடிகளிடம் இருக்கிறது. முன்னோரின் பெயர்களைத் தாங்குபவர்கள்தான் பெயரன்-பெயர்த்திகள் (பேரன்-பேத்தி). சங்க இலக்கியத்தில் ‘நன்னன் சேய் நன்னன்’ என்ற பெயர்கூட இதைத்தானே சொல்கிறது.
1989-ம் ஆண்டு போண்டா என்ற தொல்பழங்குடியினர் வசிக்கும் முதிலிப்படா என்ற மலைகிராமத்திற்குச் சென்றிருந்தேன். இந்தப் பழங்குடி பற்றி வெரியர் எல்வின் விரிவாக எழுதியிருக்கிறார். இவர்கள் பெரும்பாலும் பிறந்த கிழமையின் பெயரையே குழந்தைகளுக்குச் சூட்டிவிடுகிறார்கள். நான் அங்கே சென்றபோது திங்கள், செவ்வாய், புதன் எல்லாம் தெருவில் விளையாடுவதை வியப்புடன் பார்த்துத் திரும்பினேன்.
காட்டு வழியில் தனியாக நடந்து போகும் போது காத்தோ கருப்போ, பேயோ பிசாசோ அண்டுவதுபோல் தோன்றினால், அந்தப் பகுதியில் உலாவக் கூடிய சந்தேகத்திற்குரிய பேய்களின் பெயர்களை குத்துமதிப்பாக சத்தமாகச் சொன்னால், சம்பந்தப்பட்ட பேய், ‘நம்ம பேர் தெரிந்துவிட்டதே’ என்ற பயத்தில் அப்படியே ‘ஆஃப்’ ஆகிவிடும் என்பது முண்டா பழங்குடியினரின் நம்பிக்கை.
இதைக் கேட்டதும் நம் ஊர்களில் ‘ஒட்டி அடிக்கிற’ உள்ளூர்க் கோடாங்கிகள்தான் எனது நினைவுக்கு வந்தார்கள். பேயை `விரட்டுகிற’ கோடாங்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக ‘சந்தேகத்திற்குரிய’ பேய்களின் ஊரையும் பெயரையும் சொல்லிப் பாடுவதையும், பேயின் ஊரும் பெயரும் தெரிந்ததும், கோடாங்கியின் ‘கை’ ஓங்கி, பேயை மிரட்டியும் நைசாகப் பேரம் பேசியும் விரட்டி அடிப்பதை நானே பார்த்திருக்கிறேன். ‘அட்ரஸ்’ தெரியாத வரைக்கும்தான் ஆட்டம் போடுகிறது பேய்!
சிறுவயதில் `போதும் பொண்ணு’ என்ற பெண் குழந்தையின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேன்... இயக்குநர் பாரதிராஜா கருத்தம்மா படம் எடுத்தபோது `போதும் பொண்ணு’ என்ற அந்தப் பெயர் மீண்டும் எனக்குள் ஒலித்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி... மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் `நகுஷா, நகோஷி’, அதாவது ‘விருப்பத்தை மீறி’, ‘தேவையற்றது’, `மகிழ்ச்சி இல்லை’ போன்ற பெயர்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளின் பெயரை மாவட்ட நிர்வாகம் மாற்றி அக்குழந்தைகளின் விருப்பப்படி ஐஸ்வர்யா ராய், வைசாலி போன்ற பெயர்களைச் சூட்டி புதிய சான்றிதழ்கள் வழங்கியது. டாக்டர் பகவான் பவார் என்ற மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரியின் ‘ஐடியா’ இது. இந்த மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் விகிதம் 1000/881 என்ற புள்ளிவிவரத்தோடு சேர்த்துப் பார்த்தால் ’நகுஷா’ போன்ற பெயர்களுக்குப் பின்னிருக்கும் சமூக உளவியல் அழுத்தமாகத் தெரியும். இந்தப் பெயர் மாற்றம் உற்சாகமூட்டும் ஒரு உதாரணம்.
நேற்று என்ன சாப்பிட்டோம் என்பதுகூட மறந்துபோய்விடுகிறது. ஆனால் எண்ணற்ற பெயர்க்குவியலில் எப்பொழுதோ கடந்துவந்த ஏதேதோ பெயர்கள் அப்படியே நினைவில் இருக்கின்றன, மூளையின் சுவர்களிலெல்லாம் ஆணியடித்து.
தமிழ் நெடுஞ்சாலையில் எனக்குள் குறுக்கும் நெடுக்கும் இடைவிடாமல் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன விதவிதமான பெயர்கள். `பெயரில் என்ன இருக்கிறது?’ என்று ரோமியோவைப் பார்த்து ஜூலியட் கேட்பதாக ஷேக்ஷ்பியர் எழுதினாலும் எழுதினார். ‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்று போகிற போக்கில் கேட்கிறார்கள்.
2019-ம் ஆண்டு. இங்கிலாந்தில் ஸ்ட்ராட்ஃபோர்டு-அப்பான்–அவான் என்ற அழகிய நதிக்கரைச் சிறு நகரில் நானும் என் மனைவியும். ஷேக்ஸ்பியர் பிறந்த வீடு, படித்த பள்ளி, விளையாடிய தெரு என்று சுற்றிப் பார்த்தோம். உலக இலக்கிய ஆர்வலர்களின் மெக்கா அது. பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம். ஷேக்ஸ்பியர் என்ற அந்த ஒற்றைப் பெயரைச் சுற்றியே அந்த நகரம் இயங்குகிறது.
ஷேக்ஸ்பியர் வீட்டில் நின்று படம் எடுக்கும் போது கேட்க நினைத்தேன் “பெயரில் என்ன இல்லை, ஷேக்ஸ்பியர்?” இதோ பாருங்கள், உங்கள் வீட்டின் முன்பு உங்கள் பெயருக்கு எவ்வளவு கூட்டம்!
- பயணிப்பேன்
****
போதும் பொண்ணு
தமிழ்நாட்டில் ‘போதும்’ என்று தொடங்கும் பெயர் கொண்டவர்கள் (பதினெட்டு வயதிற்கும் மேற்பட்டோர்) குறைந்தபட்சம் 9,000 பேர் இருக்கிறார்கள். இதில் போதும் பிள்ளை, போதும் மணி, போதும் மலர், போதும் ராஜா, போதும் செல்வி, போதும் மயில், போதும் கனி போன்ற பெயர்களையெல்லாம் வடிகட்டிவிட்டுப் பார்த்ததில் தமிழ்நாட்டில் போதும் பொண்ணு (பொன்னு, பெண், பெண்ணு) என்ற பெயர்களில் தோராயமாக 8,000 பேர் இருப்பது தெரிந்தது. இந்தப் பெயர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டாலும் ஒப்பீட்டு அளவில் சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகமாகவும் தென்காசி, காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் குறைவாகவும் இருக்கின்றன. இது பழைய டிரெண்டா அல்லது இன்னும் தொடர்கிறதா என்ற கேள்விக்கு, ‘குறைந்து வருகிறது, ஆனாலும் முற்றிலும் கைவிடப்படவில்லை’ என்பதுதான் விடை. இப்பெயர் கொண்டவர்களை வயது வாரியாகப் பார்த்தபோது 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம். ஆனால், இன்னும் 19 வயதுக்குட்பட்டவர்களும் இருக்கிறார்கள்.
ஒரு சமூகவியலின் போக்கையும் மாற்றங்களையும் புரிந்துகொள்ளவும் பெயர்கள் பயன்படுகின்றன. சமத்துவம், பெண்ணுரிமை, சமூகநீதி நோக்கிய பயணத்தில் பெயர்களும் நம்மை வழிநடத்தும்.
பெயரில் என்ன இல்லை!
- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது