மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 15 - “வேகமாக ஓடினால் வேலை!”

வேகமாக ஓடினால் வேலை
பிரீமியம் ஸ்டோரி
News
வேகமாக ஓடினால் வேலை

மாற்றமுடியாத விதிமுறைச் சுவர்களால் கட்டப்பட்ட இரும்புக்கோட்டை அல்ல அரசாங்கம். ‘மாற்றி யோசிக்க’ வாய்ப்பளிக்கும் சோதனைக்கூடம்.

1992ஆம் ஆண்டு அது. ஒடிசா தலைமைச் செயலகத்தின் தலைவாசலில் எனது கார் மெதுவாக நுழைகிறது. காவலர்களின் அருகே நின்ற யாரோ என்னை உற்றுக் கவனித்ததுபோல ஓர் உணர்வு. திடீரென்று அவர் எனது காரை விரட்டிக்கொண்டு பின்னால் ஓடி வந்தார். ‘யாரோ, ஏதோ அவசரம்’ என்று நினைத்துக்கொண்டேன். போர்ட்டிகோவில் கார் நின்றதும் மாடிப்படிகளில் ஏறிச் சென்றேன். அப்போதும் அந்த நபர். நான் இரண்டாவது மாடிக்குச் சென்று தொழில்துறைச் செயலரின் அறையை நோக்கி நடந்தபோது அவர் என்னை வழிமறித்து நிறுத்தினார். கொஞ்சம் பரபரப்பு.

“சார், நீங்கள் கோராபுட்டில் வேலை பார்த்தீர்கள்தானே?”

“ஆமாம், அதற்கு என்ன?” என்றேன்.

“நீங்கள் ஓட்டப்பந்தயம் வைத்து எனக்கு அரசாங்க வேலை கொடுத்தீங்க... நான் இப்போது குனுப்பூரில் வேலை பார்க்கிறேன்” என்று சொன்னார். முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

“இங்கே எப்படி” என்று விசாரித்தேன். தலைமைச் செயலகத்திற்கு அவசரக்கடிதம் கொண்டு வந்ததாகச் சொன்னார்.

தமிழ் நெடுஞ்சாலை - 15 - “வேகமாக ஓடினால் வேலை!”

அப்போதெல்லாம் மின்னஞ்சல் கிடையாது. தபால் போய்ச்சேர சில நாள்கள் ஆகும் என்பதால் அவசரக் கடிதங்களை ‘ஸ்பெஷல் மெசஞ்சர்’ மூலம் அனுப்பி வைப்பார்கள்.

“எனக்கு யாரையும் தெரியாது சார். எனக்கு கவர்மென்ட் வேலை கிடைக்கும் என்று கனவில்கூட எதிர்பார்க்கவில்லை. உங்களைத் திரும்பப் பார்ப்பேன் என்றும் நினைக்கவே இல்லை” என்றார். பழங்குடியினர் இந்த அளவுக்கு முன்வந்து வழிமறித்துப் பேசமாட்டார்கள். இது மூன்றாண்டு அரசாங்க வேலையின் தாக்கமாகக்கூட இருக்கலாம். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

அத்துவான மலைக்காடுகள். விநியோகப் புள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் விளிம்புகள். காரியம் சாதிக்கும் கலையை இன்னும் கற்றுக்கொள்ளாத கடைசி மைல்கள். ஒருவரின் பெற்றோர் யார் என்பதும், பிறந்த இடத்தின் ‘பின்கோடு’ எது என்பதும் அவர்களின் வாய்ப்புகளை, வசதிகளை வாழ்க்கையை எப்படியெல்லாம் தீர்மானிக்கிறது!

கோராபுட் மாவட்ட கலெக்டர் எஸ்.பி.நந்தா ஒரு விடுமுறை நாளில் என்னை வீட்டிற்கு அழைத்தார். மிகவும் கண்டிப்பானவர். பழங்குடி மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். அதனால் அவர்மீது எனக்குக் கூடுதல் மதிப்பு.

“சுகாதாரத்துறையில் மருத்துவமனை உதவியாளர்கள், கடைநிலை ஊழியர்கள், சமையல் செய்வோர் என்று சுமார் நூறு பணியிடங்களை நிரப்பவேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து 5,000 பெயர்கள் வந்துள்ளன. இதில் குளறுபடிகள், தலையீடுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்தப் பணிநியமனம் தொடர்பான வேலைகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்றார்.

5,000 பேரையும் நேர்காணல் செய்து மதிப்பெண் போடுவது நடைமுறைக்குப் பொருந்தாத காரியம். தாஜ்மகாலை யார் கட்டியிருந்தால் என்ன? பரிந்துரைகள், பாரபட்சம் தவிர்த்து நியாயமாகத் தேர்ந்தெடுப்பது என்றால், பேசாமல் ஓட்டப்பந்தயம் வைக்கலாம் என்றேன். ஒப்புக்கொள்வாரா என்று நினைப்பதற்கு முன்பே, ‘இது நல்ல ஐடியா’ என்று சொல்லிவிட்டார். மருத்துவமனை உதவியாளர்கள் போன்ற வேலைக்கு உடல் வலுவுள்ள ஆட்கள் தேவை. பழங்குடி இளைஞர்கள் அதிகம் தேர்ச்சிபெற இதுதான் பொருத்தமாக இருக்கும் என்று அவரும் கருதினார். “Go Ahead Bala” என்றார்.

மறுநாள் அதிகாரிகளிடம் திட்டத்தைச் சொன்னேன். அவ்வளவு ரசித்ததாகத் தெரியவில்லை. மாவட்ட விளையாட்டு அதிகாரி மட்டும் உற்சாகமாகக் காணப்பட்டார். “சார், போலீஸ் போன்ற வேலைக்குத்தானே ஓட்டப்பந்தயம் வைப்பார்கள்” என்று ஒரு அதிகாரி லேசாக இழுத்தார். கொஞ்சம் சீரியஸாகப் பார்த்ததும் ஆஃப் ஆகிவிட்டார்.

மூன்று நாள்கள் தேவைப்படும் என்று தோன்றியது. நான் வேறு எல்லா வேலைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.

போட்டியாளர்களைக் காலையில் ரிசர்வ் போலீஸ் மைதானத்தில் திரட்டினோம். எனது கையில் மைக். தயக்கமின்றி வெளிப்படையாகப் பேசினேன்.

“வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெயர் அனுப்பவே உங்களில் பலர் ஏதாவது செலவழித்திருக்கக் கூடும். அதுபற்றி எனக்குத் தெரியாது. இப்போதும் உங்களில் சிலர், இந்த வேலையை வாங்குவதற்காக யாரையாவது நாடியிருப்பீர்கள். வாக்குறுதியும் கொடுத்திருப்பார்கள். இதில் யாரை எடுப்பது, யாரை விடுவது? 50 பேரில் ஒருவருக்குத்தான் வேலை கிடைக்கும். எனவே ஓட்டப்பந்தயம் நேர்மையான வழியாக இருக்கும் என்று நினைக்கிறோம். யாருடைய சிபாரிசும் தேவையில்லை. வேகமாக ஓடினால் வேலை...” என்று, எனக்குத் தெரிந்த ஒடிய மொழியில் விளக்கினேன். சில நிமிடங்கள் அமைதி. ‘`இந்த ஓட்டப்பந்தயம் நல்லது என்று நினைப்பவர்கள் கை தூக்குங்கள்’’ என்றதும் கைகள் மளமளவென்று உயர்ந்தன.

ஆயிரம் ஆயிரம் பேராக ஓடிய முதல் இரண்டு ரவுண்டு முடிந்ததும் ஒரு புகார் காதுக்கு வந்தது. யாரோ ஒரு சிலரை உள்ளூர்க்காரர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று இறக்கிவிட்டதாக. அந்தத் தகவல் உண்மையோ பொய்யோ, குறிப்பிட்ட இடைவெளியில் இருபுறமும் போலீஸ், ஊர்க்காவல் படையினரை நிறுத்தினேன்.

பிஜய குமார் டக்கிரி
பிஜய குமார் டக்கிரி

முக்கியப் பொறுப்பிலிருந்த பிரமுகர் ஒருவர் அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார். அனைவரும் கையறு நிலையைச் சொல்லி என்னைக் கைகாட்டிவிட்டனர். “பையனை வேகமாக ஓடச் சொல்லுங்கள் சார்” என்று சொன்னேன்.

இரண்டாவது நாள் இன்னொரு யோசனை வந்தது. அடுத்தடுத்த சுற்றுகளை கோராபுட் நகரை ஒட்டி நடத்தாமல், ஊருக்கு வெளியே உள்ள மலைச்சாலைகளில் நடத்தலாம் என்று. வாக்கிங் போகும்போது ஆர்.டி.ஓ அலுவலகத்தின் முன்பு பதிவுக்கு வந்திருந்த ஐந்தாறு புத்தம்புது அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்கள் நிற்பதைப் பார்த்திருந்தேன். அடுத்த சில மணி நேரத்தில் அந்த பஸ்கள் ஓட்டப்பந்தய ‘டூட்டி’யில்.

ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்பவர்கள் யாரேனும் மயக்கம் போட்டு விழுந்தால் என்ன ஆகும் என்று என்னிடம் அரட்டியைக் கொடுத்தனர் சில அதிகாரிகள். இதே சந்தேகத்தை ஒரு அரசியல் பிரமுகரும் என்னிடம் கேட்டிருந்தார். ‘உள்குத்து’ எதுவும் இருக்குமோ என்று எனக்கும் கொஞ்சம் டென்ஷன்தான். சில ஆம்புலன்ஸ் வண்டிகள், டாக்டர்கள் ஓட்டப்பந்தயச் சாலையில். குளுக்கோஸ் பவுடர், தண்ணீர் பாட்டிலுடன் வழிநெடுக தன்னார்வலர்கள்.

இறுதிக்கட்ட ஓட்டப் பந்தயம். யாரும் ஆள்மாறாட்டம் செய்து ஓடிவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் புகைப்படம் பிடித்து ‘கிராஸ் செக்’ செய்தோம். இறுதி ‘தேர்வில்’ ஓடியவர்களுக்குப் புது பனியன் கொடுத்தோம். பனியனின் முதுகுப்பக்கத்தில் அடையாள எண் எழுதிய சீட்டை ஒட்டிவிட்டோம். ஒவ்வொரு சீட்டிலும் எனது கையெழுத்து, அலுவலக ரப்பர் ஸ்டாம்ப். இதுபோக ஒன்று முதல் எண்கள் எழுதிய ‘வெற்றி டோக்கன்களிலும்’ கையெழுத்து போட்டேன்.

மைதானத்தில் மீண்டும் என் கையில் மைக். இறுதிப்போட்டி விதிமுறைகளைக் கூறினேன். இது உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கப்போகும் ஓட்டப்பந்தயம். யாரும் யாருக்கும் பரிந்துரை செய்யமுடியாத தேர்வு. ‘வெற்றி உங்கள் கால்களில்’ என்ற ரேஞ்சில்.

வழியெங்கும் போலீஸ் பாதுகாப்பு. போட்டி முடியும் இடத்தில் டோக்கன்களுடன் அதிகாரிகள். ஓடி வருபவர் எல்லைக்கோட்டைத் தாண்டிய அடுத்த நொடியே அடுத்தடுத்து வருபவர்கள் மொத்தமாகக் கலந்து குழப்பமாகிவிடக்கூடாது என்பதற்காக மூங்கில்களால் கட்டப்பட்ட குறுகலான பட்டிக்குள் அனுப்பப்பட்டார்கள். நான் அந்த இடத்தில் நின்றுகொண்டேன். நமது ஜல்லிக்கட்டு வாடிவாசலை மனதில் வைத்துதான் இந்த ஏற்பாடு. வெற்றிபெற்றவர் அந்த மூங்கில் பட்டிக்குள் நுழைந்து வெளியே வருவதற்கு முன்பு அவரது கையில் வெற்றி எண் எழுதிய டோக்கன், குளுக்கோஸ் கலந்த எலுமிச்சம்பழ ஜூஸ் ஒரு கிளாஸ், வெளியே வந்ததும் டோக்கனுடன் ஒரு போட்டோ. டோக்கன் வாங்கிய அனைவரையும் பஸ்களில் மீண்டும் கோராபுட் மைதானத்திற்குக் கொண்டு சென்றோம்.

காஸிராம் சிஸா
காஸிராம் சிஸா

மைதானத்தில் பந்தல் போட்டு ‘கவுன்ட்டர்’கள் அமைத்திருந்தோம். ஏற்கெனவே அச்சாகியிருந்த நியமன ஆணைப் படிவங்கள். டோக்கனை வாங்கிக்கொண்டு ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. கடைசி கவுன்ட்டரில் பெயர் எழுதி நியமன ஆணை. நான் கடைசி கவுன்ட்டரில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தேன். பெயர் என்ன, ஊர் என்ன என்று ஒரு சின்ன நேர்காணல். டோக்கனைக் கொடுத்துவிட்டு நியமன ஆணைகளை வாங்கிச் சென்ற இளைஞர்களின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. கடைசி ஆளுக்கும் நியமன ஆணையைக் கொடுத்துவிட்டு, அறிக்கை தயாரித்து கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்ப இரவாகிவிட்டது. கமுக்கமாக வேலையை முடிக்கக்கூடிய இடைத்தரகர்கள் கடுப்பாகி யிருப்பார்கள். கலெக்டருக்கும் எனக்கும் பயங்கர மகிழ்ச்சி. ‘த்ரில்’அனுபவம். ஒருவகையில் இந்த ஓட்டப்பந்தயம் ஆட்சிப்பணியின் ஆக்கபூர்வமான சாத்தியங்கள் பற்றிய புதிய புரிதலை எனக்களித்தது. இதை யாரும் ஆட்சேபிக்கவில்லை; வழக்கு தொடுக்கவில்லை என்பதுதான் முக்கியம்.

தமிழ் நெடுஞ்சாலையில் இதைப் பதிவிட பழைய விவரங்கள் தேவைப்பட்டன. இப்போது கோராபுட் கலெக்டராக உள்ள அப்துல் அக்தாரிடம் பேசினேன். பழைய ஆட்கள் யாரும் இருந்தால் விசாரிக்க முடியுமா என்று கேட்டேன். ஒரேநாளில் அந்த ஓட்டப்பந்தயத்தின் மூலம் அரசுப்பணிக்கு வந்த இரண்டு பேரைக் கண்டுபிடித்துவிட்டார்.

தாமன்ஜொடி அருகே மத்தல்புட் சமுதாய சுகாதார மையத்தில் உதவியாளராகப் பணியாற்றிய பிஜய குமார் டக்கிரி, அண்மையில் ஓய்வுபெற்றார். அதே மையத்தில் சமையல் பணியாளராக இப்போதும் பணியாற்றுகிறார் காஸிராம் சிஸா. 86 பணியிடங்களுக்கு 5,000 பேர் திரண்டது, ஓட்டப்பந்தயம், ஆம்புலன்ஸ், குளுக்கோஸ் தண்ணீர், ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்றுப் பணி நியமனம் பெற்றது என்று எல்லாவற்றையும் நினைவுகூர்ந்திருந்தனர். இந்த இருவருக்கும் ‘தாஜ்மகாலைக் கட்டியது யார்’ என்பது இப்போதுகூடத் தெரியாமல் இருக்கலாம்! அதனால் என்ன?

விளையாட்டில் சாதனை படைப்போரை நேரடியாக ஒடிசா காவல்துறையில் பணி நியமனம் செய்யும் திட்டமொன்று 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 96 வீராங்கனை, வீரர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பட்டியல் பழங்குடியினர் 36 பேர், பட்டியல் இனத்தவர் 15.

இந்தத் திட்டத்தின் கீழ் அண்மையில் நியமிக்கப்பட்ட 39 பேருக்கு நியமனச் சான்றிதழ் வழங்கும் விழா 2021 ஜூன் 26 அன்று நடந்தது. நியமனம் பெற்றவர்களில் 30 பேர் பெண்கள். 9 பேர் ஆண்கள். முதல்வர் இணையவழியில் வாழ்த்துகிறார். நானும் இணையவழியில் இணைந்திருக்கிறேன்.

சொல்லிவைத்ததுபோல அதே நாள் தொலைக்காட்சிகளில் செய்தி. டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி இந்திய அணியில் மீண்டும் ஒடிசாவின் பழங்குடி வீராங்கனை டீப் கிரேஸ் எக்கா. அணியின் இரண்டு துணை கேப்டன்களில் எக்காவும் ஒருவர். இது இவருக்கு இரண்டாவது ஒலிம்பிக். டீப் கிரேஸ் எக்காவின் பெயரிலுள்ள ‘எக்கா’ என்பது குலக்குறிப் பெயர். ஒரான் மக்கள் பேசும் குரூக் என்ற திராவிட மொழியில் எக்கா என்றால் ஆமை என்று பொருள். ஆனால், ஹாக்கி மைதானத்தில் புலி போல் பாய்ந்து விளையாடுவார். ஆல் தி பெஸ்ட் இந்தியா.

மீள்நினைவில் உருவகமாக, அந்த கோராபுட் ஓட்டப்பந்தயம் எனக்குள் ஓடுகிறது. தலைமைச் செயலகத்தில் என்னை ஓடிவந்து வழிமறித்து பேசிய அந்த பழங்குடி இளைஞரை நினைத்துக்கொள்கிறேன்.

மாற்றமுடியாத விதிமுறைச் சுவர்களால் கட்டப்பட்ட இரும்புக்கோட்டை அல்ல அரசாங்கம். ‘மாற்றி யோசிக்க’ வாய்ப்பளிக்கும் சோதனைக்கூடம்.

- பயணிப்பேன்

****

தமிழ் நெடுஞ்சாலை - 15 - “வேகமாக ஓடினால் வேலை!”

பழங்குடிகளும் விளையாட்டும்

ஒடிசா பழங்குடி வீராங்கனைகளும், வீரர்களும் தேசியப் போட்டிகள், ஆசியா, காமென்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் முத்திரை பதித்துவருகின்றனர். ஆண்கள் ஹாக்கி இந்திய அணியின் முன்னாள் கேப்டன், ஒலிம்பிக் வீரர் திலீப் டிர்க்கி. இவரை ராஜ்யசபா உறுப்பினராக்கி கெளரவித்தது ஒடிசா. லாசரஸ் பர்லா, மைக்கேல் கிண்டோ, பிரபோத் டிர்க்கேம், வில்லியம் கால்கோ, தீப்சன் டிர்க்கி, பிரேந்திர லர்க்கா என்று சாதனையாளர் பட்டியல் நீள்கிறது.

மகளிர் ஹாக்கி முன்னாள் கேப்டன் சுனிதா லாக்ராம், ஒலிம்பிக் வீராங்கனை. முன்னாள் கேப்டன் ஜோதி சுனிதா குல்லு உலகக்கோப்பை, ஆசியப் போட்டிகளில் விளையாடி வென்றவர். நமீதா டோப்போ, லிலிமா மின்ஸ் ஆகியோரும் தடம்பதித்து வருகின்றனர்.

பூர்ணிமா ஹேம்ப்ரம் 2015, 2017 ஆசியத் தடகளப் போட்டிகளில் வெண்கலம் வென்றார். புவனேஸ்வரம் விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிற்சிபெற்ற ஜவுனா முர்மு இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்குப் புகழ்தேடித் தந்தார். கால்பந்து, பளு தூக்குதல் ஆகிய விளையாட்டுகளிலும் ஒடிசா பழங்குடி வீராங்கனைகள் வாகை சூடினர்.

இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில அளவிலான பழங்குடி விளையாட்டுப் பெருநிகழ்வை 2018-ல் ஒடிசா நிகழ்த்தியது.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது