மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 25 - இரண்டாம் சுற்று

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

மேஜையில் இந்த இரண்டாம் சுற்றில் நான் எழுதிய நூல்கள். விசைப்பலகையில் தமிழ் நெடுஞ்சாலை...

சென்னையின் அந்த மருத்துவமனையில் படுத்திருக்கிறேன் விட்டத்தை வெறித்தபடி. வலது பெருங்குடலில் புற்றுநோய். இதை மருத்துவர் என்னிடம் சொல்லும் முன்பே, என் மனைவியின் கலங்கிய கண்களில் அச்சடித்திருந்த அறிக்கையை என்னால் வாசிக்கமுடிந்தது.

அது 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாவது வாரம். ஹீமோகுளோபின் 7.1, கழிவில் மறைந்து கசியும் குருதி, ரத்தச்சோகை என்ற மூன்று அறிகுறிகளுடன் டில்லியிலிருந்து விமானம் ஏறும்போதே புற்றுநோயாக இருக்கலாம் என்ற அச்சம் இருந்தது. அறுவை சிகிச்சைக்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டுசெல்லப்படும் வழியில் கூரை நகர்ந்து கூடவே வருகிறது. எனது கையை இறுகப்பற்றி நம்பிக்கையூட்டுகிறார் என் மனைவி.

‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு’ என்ற குறள் மனதில்.

மயக்க மருந்தில் நினைவு நழுவும் நொடிகளில் `பெருமை’ என்ற சொல் எழுத்துருவில் பெரிதாய், இன்னும் பெரிதாய் வளர்கிறது. என் மனைவியின், மகள்கள் இருவரின் முகங்களை மனத்தில் நிறுத்தி ஏதோ சொல்ல முயல்கிறேன்.

ஆர்.பாலாகிருஷ்ணன்
ஆர்.பாலாகிருஷ்ணன்

கனவுகளும் காலண்டர்களும் எவ்வளவு சீக்கிரமாகக் கிழிந்துவிடுகின்றன. எத்தனை பேருக்கு வாய்க்கிறது உட்கார்ந்து உயில் எழுத. நெடுஞ்சாலைகளில் தினம்தோறும் உடைகின்றன எண்ணற்ற நீர்க்குமிழிகள். பெருந்தொற்று தொட்டழித்த குடும்பங்கள் எத்தனை!

இரண்டு வாரங்களில் எல்லாம் தலைகீழாகிவிட்டது. அமெரிக்காவிலுள்ள டென்வரில் இரண்டு வாரப் பயிற்சி முடிந்து டில்லி திரும்பும் வழியில் நியூயார்க்கில் ஐ.நா தலைமையகத்தில் நான். இந்தியாவின் நிரந்தரப்பிரதிநிதியான தூதர் மன்ஜீவ்சிங் பூரி 2009 இந்தியப் பொதுத்தேர்தல் பற்றித் தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு நேரில் விளக்க அழைத்திருந்தார். உரை முடிந்து, மதிய உணவு முடித்துக் கிளம்பும்போது மன்ஜீவ்சிங் சொன்னார், “அசத்தல் பாலா. ஐ.நா சபை தேர்தல் பிரிவில் பொறுப்பளித்தால் வருவீர்களா என்று விசாரிக்கிறார்கள்” என்று. “இந்தியா சென்றபின் சொல்கிறேன்” என்றேன்.

இந்தியாவிலும் அப்போது H1N1 வைரஸ் பரவத்தொடங்கியிருந்தது. விமான நிலையத்தில் `தெர்மோ ஸ்கேனிங்’ எனப்படும் சோதனை செய்துதான் வெளியே விட்டார்கள். வந்த மறுநாளே வேலையில் மூழ்கினேன்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

நான் மருத்துவரிடம் சென்றதுகூட எதார்த்தமாகத்தான். டில்லியில் லேடி ஹார்டின்ஜ் அரசு மருத்துவமனையில் என் நண்பர் ஒருவர் மருத்துவர். கொஞ்சம் களைப்பாக இருக்கிறது. H1N1 வைரஸ் சோதனை செய்யலாமா என்று கேட்டேன். ``போங்க சார் போங்க. டெஸ்ட் எல்லாம் தேவையில்லை. காபி வேண்டுமென்றால் குடிக்கலாம்” என்று காபிக்கு ஆர்டர் கொடுத்தார். நான்தான் விடாப்பிடியாக ஒரு ரத்தப் பரிசோதனையாவது செய்யலாம் என்றேன். அடுத்த மூன்றாம் நாள் சென்னையில்.

உடம்பு நம்மிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் உற்றுக்கேட்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஏப்ரல் 10, 2009 வழக்கமான வருடாந்திர மருத்துவச் சோதனையின் போதே ஹீமோகுளோபின் 10.2 தான் இருந்தது. வழக்கமாக 14 இருக்கும். ‘சரியாகச் சாப்பிடுவதில்லையா’ என்று கேட்டு இரும்புச்சத்து மாத்திரை கொடுத்தார் டாக்டர். மாதுளம்பழம் சாப்பிடச் சொன்னார். அதற்கு மேல் அதுபற்றிப் பேசும் அல்லது கேட்கும் மனநிலையில் நானில்லை. இன்னும் ஆறே நாள்களில் 16ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு. அப்போது எனது வயிற்றில் புற்றுநோய் வளர்வது தெரிந்திருந்தால் நான் உடைந்துபோயிருப்பேன். தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் ஒருமுறை பரிசோதித்திருந்தால் அமெரிக்கா போயிருக்க மாட்டேன்.

அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து எனக்கு கீமோதெரபி தேவையா இல்லையா என்று குழப்பம் இருந்தது. மும்பை சென்று சுரேஷ் அத்வானி, தினேஷ் பெந்தர்கர் என்ற இரண்டு புற்றுநோய் மருத்துவ நிபுணர்களைச் சந்தித்தேன். கீமோதெரபி தருவது என்று முடிவானது. வாரம் ஒருமுறை டில்லி வந்த பெந்தர்கரிடம் சிகிச்சை பெற்றேன்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

அடித்துத் துவைத்துக் காயப்போட்டதுபோல இருந்தது உடம்பும் மனசும். முன்னுரிமைகள் தலைகீழாகத் தோன்றின. ஒத்திப்போட்ட செயல்கள் உற்றுப்பார்த்தன. தலையில் தூக்கித் திரிந்த மகுடங்கள் கனத்தன. நான் எனக்குள் அழுதேன். சில ஆண்டுகள் சென்னையில் வாழும் தேவையை உணர்ந்தேன்.

‘தென்மாநிலங்களுக்கு பிராந்திய ஆணையராக சென்னையில் நியமிக்கலாமா’ என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கேட்டபோது வியப்பில் உறைந்தேன். அரசியலமைப்புச் சட்டத்தின் 324வது உறுப்புரையின் கீழ் தேர்தல் ஆணையம் அப்படி ஒரு பொறுப்பை உருவாக்கமுடியும் என்பதை நான் அறிவேன். அந்த வார்த்தை எனக்கு ஆறுதல் அளித்தது. ஆனாலும் நான் ஓய்வை வேண்டி ஒதுங்க விரும்பினேன். 2011இல் தமிழ்நாட்டில் தேர்தல் வரப்போகிறது என்பதையும் நினைத்துப்பார்த்து `வேண்டாம்’ என்றேன். சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக நியமனம் பெற்றேன்.

சிகிச்சை எல்லாம் முடிந்ததும், அலுவலகம் செல்லாத மாதங்களுக்குத் தேர்தல் ஆணையத்திடம் விடுமுறைக் கடிதம் கொடுத்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாள்களைத் தவிர மீதி நாள்கள் விடுமுறை எடுக்கத் தேவையில்லை என்றது ஆணையம். ``கணக்கு பார்த்து விடுமுறை கேட்கிறாயா பாலா? இந்தத் தேர்தல் ஆணையத்தில் கணக்கு பார்த்தா நீ வேலை பார்த்தாய்” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கேட்டபோது என் கண்களில் நீர்.

இந்தியத் தேர்தல் ஆணையம் எனக்கு அளித்த விடைதரும் விழா முன்பின் நிகழாதது. விடுமுறையில் இருந்த ஊழியர்கள்கூட வந்துவிட்டார்கள். அரங்கில் இடமில்லை. தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி உருது மொழியில் அருமையான கவிதை எழுதி வாசித்து எனக்காக அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் சொன்னார். தாஜ் பேலஸ் நட்சத்திர விடுதியில் அதிகாரிகளின் குடும்பத்தினருடன் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு மாபெரும் விருந்து. தேர்தல் ஆணையத்தின் வரலாற்றில் அதுவே முதல் தடவை. “இந்த விழா பாலாவுக்காக இல்லை; பாலாவை மீட்டுக் கொண்டுவந்த சுஜாதா பாலகிருஷ்ணனுக்கு” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

2010 ஜூன். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா முன்னிலையில் சிந்துவெளி பற்றிய எனது புதிய தரவுகளை வெளியிட்ட நொடியில் எனது `இரட்டைக்குதிரைகளில்’ ஒரு குதிரை உயிர்த்தெழுந்து கனைத்தது. சென்னையில் பணியில் இருந்தாலும் எனது இன்னொரு குதிரையின் கடிவாளம் என்னிடம் இல்லை என்றே உணர்ந்தேன். விருப்ப ஓய்வு பெற்று முழுநேர ஆய்வு செய்யலாமா என்று யோசித்தேன். ஆனால், 2013இல் தேர்தல் ஆணையம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து நான் இந்தியத் துணைத் தேர்தல் ஆணையராக இரண்டாம் முறை நியமிக்கப்பட்டேன். பஸ்தரின் நக்சல் காடுகளில் மீண்டும் பறந்தபோது மேகங்களில் எனது `இரண்டாவது குதிரை.’

2014 இறுதியில் கூடுதல் தலைமைச் செயலராகப் பணி உயர்வு பெற்று ஒடிசா திரும்பினேன், நிதித்துறைப் பொறுப்பில். 2015இல் ஒருமுறை டாக்டர் பெந்தர்கரை டில்லியில் சந்தித்தேன். ‘கிராமப்புறங்களில் - குறிப்பாக ஏழைமக்கள் புற்றுநோய் வந்தால் என்ன பாடுபடுகிறார்கள்; மருத்துவச் செலவில் குடும்பங்கள் எவ்வாறு சீரழிகின்றன’ என்பது பற்றிப் பேசினோம். மத்தியப்பிரதேசத்தில் உஜ்ஜயினி மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளதாகக் கூறினார். அவரை ஒடிசாவுக்கு வரும்படி அழைத்தேன். உஜ்ஜயினி மாவட்ட மருத்துவ அதிகாரியும் அவருடன் வந்தார். சுகாதாரத்துறை உயரதிகாரிகளுடன் சேர்ந்து கலந்தாய்வு செய்தபின் டாக்டர் பெந்தர்கரை முதல்வரிடம் அழைத்துச் சென்றேன். ``இவர்தான் எனக்கு டில்லியில் கேன்சர் சிகிச்சை அளித்தவர்” என்று அறிமுகம் செய்தேன். திட்டத்தை விளக்கினோம். அனைவருக்கும் மருத்துவம் முதல்வரின் முன்னுரிமை இலக்கு. இந்தப் புதிய திட்டத்திற்கு வரவு செலவுத் திட்டத்தில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஆணையிட்டார்.

2016இல் நவரங்பூரில் இத்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. பிறகு அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் டில்லியில், மும்பையில், கட்டாக்கில் சிறப்புப் பயிற்சி. இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்வடிவம் பெற்றது. இப்போது 32 மையங்கள் இயங்குகின்றன. புற்றுநோய் மருந்துகளை, எவ்வளவு விலை உயர்ந்தது என்றாலும் மாநில மருத்துவக்கழகம் கொள்முதல் செய்து அளிக்கிறது. நோயாளிகளுக்கு ஒரு செலவும் இல்லை. இதனால் கீமோதெரபி கட்டுபடியாகாமல் பாதியில் கைவிட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. அலைச்சலும் இல்லை. இதுவரை மாவட்ட மையங்களில் மட்டும் 25,000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கொரோனாப் பெருந்தொற்று காலத்தில்கூட 13,589 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். 2019இல் மரணவலி தணிப்புப் பிரிவும் (Palliative care and Pain Management) தொடங்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கதிரியக்க சிகிச்சை மையங்களை நிறுவும் திட்டம் தயாராக உள்ளது.

2018இல் ஒருமுறை கீமோதெரபி பெற்ற நோயாளிகளுடன் முதல்வர் இணையவழியில் கலந்துரையாடினார். “ஒவ்வொருமுறையும் கீமோதெரபிக்காக நூற்றுக்கணக்கான மைல் பயணம் செய்து துன்பப்பட்டேன். வாழ்வதைவிட சாவது மேல் என்றுகூட யோசித்தேன். இப்போது மாவட்ட அளவில் சிகிச்சை கிடைப்பதால் உயிர்பிழைத்தேன்” என்று ஒரு நோயாளி உணர்ச்சிபொங்கக் கூறினார்.

செப்டம்பர் 6, 2021. முதல்வர் அலுவலகத்தில் எனது அறையில் நான். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து மையங்களையும் பார்த்துவிட்டுத் திரும்பிய டாக்டர் பெந்தர்கர் பின்னூட்டம் அளிக்கிறார். ஆச்சார்ய ஹரிகர் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சாரங்கியும் அவருடன். அடுத்து செய்யவேண்டிய பணிகள் பற்றிப் பேசுகிறோம். எனது இரண்டாம் சுற்றை அர்த்தமுடையதாய் ஆக்குவது இதுபோன்ற நிறைவுகள்தான்.

தினேஷ் யெந்தர்கர்
தினேஷ் யெந்தர்கர்

அறம் ஒரு வலைப்பின்னல். ஓர் அறத்தைத் தாங்குகிறது இன்னொரு அறம். அந்த மெல்லிய வலைதான் சுமக்கிறது பூமியின் மொத்த எடையை. `நன்றி’ என்பது வெறும் கொடுக்கல் வாங்கல் என்றால் அதைப் பொருட்பாலில் வைத்திருப்பார் வள்ளுவர். அது அகத்தில் ஊறும் அறத்துப்பால். 2009இல் அந்த அதிர்ச்சி வைத்தியம் எனக்குத் தேவைப்பட்டது என்று உணர்கிறேன். நன்று செய்வதன் நடைமுறைச் சூத்திரம் ‘இன்றே’ செய்வதில் இருக்கிறது. இந்த இன்றியமையாத தேவையை ஓர் இடுக்கண் வந்தெனக்கு இடித்துச் சொன்னது.

மேஜையில் இந்த இரண்டாம் சுற்றில் நான் எழுதிய நூல்கள். விசைப்பலகையில் தமிழ் நெடுஞ்சாலை. எது நெகிழ்ச்சி அளிக்கிறதோ அதுவே மகிழ்ச்சி அளிக்கிறது. அன்பானவர்களால் ஆனது என் உலகம். அதனால் தினமும் கூடுகிறது எனது நன்றிக்கடன்.

- பயணிப்பேன்

*****

மாவட்ட புற்றுநோய் சிகிச்சை மையம்
மாவட்ட புற்றுநோய் சிகிச்சை மையம்

இந்தியாவில் புற்றுநோய்

இந்தியாவில் இன்றைய தேதியில் 22 லட்சம் புற்றுநோயாளிகள் உள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 11 லட்சம் புது நோயாளிகள். சுமார் 7.84 லட்சம் உயிரிழப்புகள். பத்துப் பேரில் ஒருவர் 75வது வயதை எட்டும் முன் புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

அமெரிக்காவில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு 161 புற்றுநோய் மருத்துவர்கள் உள்ளனர். சீனாவில் 18 பேர். ஆனால், இந்தியாவில் இருவர் மட்டுமே. இதுதான் பிரச்னையின் மூலகாரணமே. இவ்வளவு பெரிய நாட்டில் மருத்துவ புற்றுநோய் நிபுணர்களின் (Medical Oncologist) எண்ணிக்கை 2,500 மட்டுமே. புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர்கள் 1,200.

புற்றுநோயைத் தாமதமாகக் கண்டறிவதுதான் உயிரிழப்பிற்குக் காரணம். கிராமப்புறங்களில் புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனை வசதிகள், தேர்ந்த மருத்துவர்கள் இல்லை என்பதாலும் தாமதம் ஏற்படுகிறது. 75 சதவிகித புற்றுநோயாளிகள் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது