மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 26 - தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம்

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

நூலகம் என்பது நூல்களை அடுக்கிவைக்கும் கிட்டங்கி அல்ல...

எனக்கு சென்னையை அவ்வளவாகத் தெரியாது. 2010 ஜூன் 28ஆம் தேதி. தரமணியிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் சிந்துவெளி அறிஞர் அஸ்கோ பர்போலாவின் ஆய்வுரை. அந்த நூலகம் எங்கே இருக்கிறது என்று வழிகேட்டுத்தான் சென்றடைந்தேன். அப்போது எனக்கு எப்படித் தெரியும், அந்த நூலகம்தான் தமிழ்நெடுஞ்சாலையின் முக்கிய நிழற்குடை, கனவு மெய்ப்பட காலம் எனக்களித்த கொடை என்பது. இதுதான் தற்போது எனது சென்னை முகவரி.

இந்தியாவில் பெயர் சொல்லத்தக்க எல்லா நூலகங்களிலும் ஒருமுறையாவது ஏறி இறங்கியிருப்பேன். ஆனால் இந்நூலகத்தில் கால் வைத்தபின் வேறெங்கும் செல்லும் தேவையை நான் உணரவில்லை. எனக்குத் தேவையான ஆவணங்களை உலகின் எந்த நூலகத்தில் இருந்தும் தேடி எடுத்துக் கையில் கொடுக்கும் ஒற்றைச் சாளரம்.

5,000 சதுர அடி கட்டடம். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் என்று தன்னைத் தன்னம்பிக்கையுடன் அடையாளம் செய்துகொள்கிறது. பயனடைந்த ஆய்வாளர்கள் தயக்கமின்றி இதை வழிமொழிவார்கள். இந்நூலகத்தின் இயக்குநர் சுந்தர் ஒரு சக ஆய்வாளராக 2010ஆம் ஆண்டு கோவை செம்மொழி மாநாட்டில் அறிமுகமானார். அஸ்கோ பர்போலா உரையைக் கேட்கப்போன இடத்தில் “அடுத்த உரை நீங்கள்தான்” என்றார் சுந்தர்.

காரைக்குடி அருகிலுள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் நிறுவனத்தை நடத்தியதால் ‘ரோஜா முத்தையா’ ஆனார். மற்றவர்கள் தேவையில்லை என்று தூக்கி எறிந்ததை எல்லாம் ரோஜா முத்தையா வாங்கிச் சேகரித்தார். இல்லையென்றால் ஆயிரக்கணக்கான பழைய அரிய நூல்களைக் கிழித்துப் பலகாரம் மடித்திருப்பார்கள். ஒருமுறை அவர் இப்படி எழுதியுள்ளார். ‘எனது வாழ்க்கை, புத்தகம் தேடி இரவு பகல் என்று வித்தியாசமில்லாத உழைப்பாகவே அமைந்துவிட்டது. அது என் பாக்கியம். பயனோ அளவற்றது. ஒரே ஆனந்த மயம். இறைவனின் அருட்கொடைகளில்கூட புத்தகமே மிகமிக மேலானது.’

ரோஜாமுத்தையா
ரோஜாமுத்தையா

எதைத்தேடுகிறார்கள் என்பதுதான் பலரிலிருந்து சிலரை வேறுபடுத்திக்காட்டுகிறது. வங்கிக்கணக்கல்ல வாழ்க்கைக்கணக்கு என்ற புரிதலே ஒரு விடுதலைதான். கோணிப்பைகளில் நிறைத்தவர்களைப் புதைத்த இடத்தை புதல்வர்களே மறந்துவிட்டார்கள். ஆனால், தமிழகத்தின் தலைநகரில் ரோஜா முத்தையா பெயரில் ஓர் ஆகச்சிறந்த ஆய்வு நூலகம்.

ரோஜா முத்தையாவின் மறைவிற்குப் பிறகு அவரது சேகரிப்பை விலைக்கு வாங்கி அதைத் தமிழகத்திற்கே கொடையாகக் கொடுத்த சிகாகோ பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்ச்சமூகம் எழுந்துநின்று கைதட்ட வேண்டும். இதில் ஜேம்ஸ் நை என்ற ஜிம்மின் பங்களிப்பு முக்கியமானது.

சென்னையில் ரோஜா முத்தையா நூலகம் உருவாக அரும்பணியாற்றியவர் பி.சங்கரலிங்கம். மூன்று ஆண்டுகள் இந்த நூலகத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர். 1997-ல் சங்கரலிங்கத்தின் திடீர் மறைவு பேரிழப்பு. அதன்பிறகு தியோடர் பாஸ்கரன் மூன்று ஆண்டுகள் இயக்குநராகச் செயல்பட்டார். 2010 முதல் இரண்டு ஆண்டுகள் சென்னையில் எனது பணி. அப்போது ரோஜா முத்தையா நூலகத்திற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தேன். சுந்தர் எனக்கு நூலகத்தைச் சுற்றிக்காட்டினார்.

சுமார் 50,000 நூல்கள், 50,000 இதர ஆவணங்களுடன் தொடங்கிய நூலகத்தின் சேகரிப்பு தற்போது நான்கு மடங்காகியுள்ளது. பலர் தங்களது நூல்களை நன்கொடையாகக் கொடுத்துள்ளனர். மு.அருணாசலம், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், கிஃப்ட் சிரோமணி, ஐராவதம் மகாதேவன், சம்பகலெட்சுமி, ஏ.கே. ராமானுஜன், கவிஞர் சுரதா, பேரா. வீ.அரசு, ராபர்ட் ஹார்ட்க்ரேவ், ருடால்பஸ், எட்வர்ட் மாண்ட்கோமெரி, டென்னிஸ் ஹட்சன், மில்டன் சிங்கர் ஆகியோரது தனிப்பட்ட சேமிப்புகள் தற்போது இந்த நூலகத்தில் உள்ளன.

நூலகத்தின் இயக்குநர் க.சுந்தர் மற்றும் ஊழியர்கள்
நூலகத்தின் இயக்குநர் க.சுந்தர் மற்றும் ஊழியர்கள்
பி.சங்கரலிங்கம், ஜேம்ஸ் நை
பி.சங்கரலிங்கம், ஜேம்ஸ் நை

செவ்வியல் இலக்கியங்கள், மருத்துவம், குறிப்பாக சித்த மருத்துவம், வெகுஜன இலக்கியம் (Popular literature), தமிழ்த் திரைப்படச் சுவரொட்டிகள், நாடகக் கொட்டகை அழைப்பிதழ்கள், பல்வேறு காலகட்டத்துத் திருமண அழைப்பிதழ்கள், பழைய இசைத் தட்டுகள், காலனிய அரசு சார்ந்த ஆவணங்கள் என ஆயிரக்கணக்கான ஆவணங்கள் இங்கே. விளிம்பு நிலை மக்களின் வரலாற்றைப் பேசும் சமகால ஆவணங்கள் பொது நூலகங்களில் கிடைக்காது.

நூலகத்தில் பழைய ஆவணங்களை நுண் படச்சுருள்களில் சேமிக்கும் சிறப்பு வசதி உள்ளது. ஆண்டுமுழுவதும், 24 மணி நேரமும் அறையின் வெப்பநிலை 18 டிகிரியிலும், ஒப்பு ஈரப்பதம் 35 சதவிகிதத்திலும் இருக்கவேண்டும். இந்த அறையில் வைக்கப்பட்டுள்ள நுண்படச்சுருள் ஆவணங்கள் 500 ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கும். இந்த வசதியுள்ள நூலகம், தென்னிந்தியாவில் இது ஒன்றே. தற்போது தொழில்நுட்பம் மேலும் வளர்ந்துள்ளது. பழைய ஆவணங்கள், நூல்கள் எண்ணிமமாக்கப்பட்டு (Digitization) முகில் கிடங்கில் (cloud storage) சேமிக்கப்படுகின்றன. 15 லட்சம் பக்கங்கள் நுண்படச்சுருள்களாகவும் 20 லட்சம் பக்கங்கள் எண்ணிமப் படிமங்களாகவும் சேமிக்கப்பட்டுள்ளன.

நூலகம் என்பது நூல்களை அடுக்கிவைக்கும் கிட்டங்கி அல்ல. செயல்முறை சார்ந்ததே அதன் சிறப்பு. ஆற்றல் மிக்க மனித வளம். இயக்குநர் சுந்தர் ‘யாழ்ப்பாண நூலகத்திற்கு ஓர் இரங்கற்பா’ என்ற குறுநூலின் ஆசிரியர். ரோஜா முத்தையா நூலகம் பற்றிய ‘மாற்றுவெளி’ சிறப்பிதழ், காப்புரிமைச் சட்டம் குறித்த தொகுப்பு நூலின் பதிப்பாசிரியர். பிஜு பட்நாயக் வாழ்க்கை பற்றிய ஆவண நூலின் படைப்பாளர். எனது ‘Journey of a Civilization: Indus to Vaigai’ நூலை உலகத்தரத்தில் கவனமாகத் திட்டமிட்டுச் செதுக்கியவர்.

மாலா என்று அழைக்கப்படும் முத்துமாலதி, ரோஜா முத்தையாவுடன் கோட்டையூரில் பணியாற்றியவர். இப்போது உசாத்துணை நூலகராக நன்கு அறியப்படுபவர். ஆய்வாளர்களின் உதவிக்கரம் இவர். ஒரு நூலகத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது நூற்பட்டியல். 1994-ல் நிறுவனமயமாக்கப்பட்ட பின், நவீன நூலகவியல் கோட்பாடுகளைக் கொண்டு நூற்பட்டியலை உருவாக்கும் நூலகத்தின் இணைஇயக்குநர் இரா. பிரகாஷ் இத்துறையில் மிகச் சிறந்த திறனாளர்.

ஒருநாள் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர் நூலகத்திற்கு வந்தார். “எனக்குப் பின்னால் நான் சேகரித்த நூல்களை என் பிள்ளைகள் வீசியெறிந்து விடுவார்கள். எனவே அந்த நூல்களை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். ஆனால் நூலகத்தின் பிரச்னை வேறு. நூல்களை வைக்க இடமில்லை; போதிய நவீன அலமாரிகளும் இல்லை. இதை வருத்தத்துடன் விளக்கினார் சுந்தர். இதுதான் எதார்த்தம். பழைய நூல்களின் சரணாலயத்தில் இடம், நிதி இரண்டிற்கும் பற்றாக்குறை.

தரமணியில் 2005ஆம் ஆண்டு முதல் தமிழக அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் நூலகம் இயங்குகிறது. நூலகத்தை விரிவாக்க டாக்டர் எம்.எஸ் சுவாமிநாதன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். சென்னை மாநகராட்சி இதைச் செயல்படுத்த அரசின் முன் அனுமதி தேவை. இதற்காக நான் தொலைபேசியில் பலரையும் தொடர்பு கொண்டேன். ஒடிசாவி லிருந்து சென்னை வரும்போது தலைமைச் செயலகம் சென்று சம்பந்தப்பட்ட உயரதிகாரியை இரண்டு முறை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தேன். பயனில்லை. கோப்பின் மீது அமர்ந்திருந்த அதிகாரி அந்த நாற்காலியிலிருந்து நகர்ந்த பின்னால் மீண்டும் முயன்றோம். 2019இல் அனுமதி கிடைத்தது. ஆனால், அந்த 25 லட்சம் காலாவதி ஆகித் திரும்பிப் போய்விட்டது.

இடச்சிக்கனத்துடன் நூல்களை பாதுகாக்கும் ‘கம்பேக்டர்’
இடச்சிக்கனத்துடன் நூல்களை பாதுகாக்கும் ‘கம்பேக்டர்’
நுண் படச்சுருள்களில் சேமிக்கப்படும் ஆவணங்கள்
நுண் படச்சுருள்களில் சேமிக்கப்படும் ஆவணங்கள்

சுந்தர் ஒரு நாள் எனக்கொரு பரிசளித்தார். கணிதமேதை ராமானுஜம் கைப்பட எழுதிய கணிதக்குறிப்புகளின் அச்சு அசலான மறுபதிப்பு. இந்தப் பொறுப்பை மும்பையிலுள்ள அடிப்படை ஆய்வுகளுக்கான டாடா நிறுவனம் (TIFR) ரோஜா முத்தையா நூலகத்திடம் ஒப்படைத்திருந்தது. ராமானுஜம் ஒரே பக்கத்தில் பச்சை, சிவப்பு, நீல மையில் எழுதிய குறிப்புகளைப் புதிய செயல்முறையில் நுண்படம் எடுத்து அதை மீண்டும் எண்ணிமமாக்கியது ரோஜா முத்தையா நூலகத்தின் சாதனை. 1812இல் அச்சேறிய திருக்குறளின் முதல் பதிப்பு இதே செயல்முறையில் மீள்பதிப்பாக வெளியிடப்பட்டது. தமிழர்கள் தங்கள் வீட்டில் வைத்துப் பெருமைப்படவேண்டிய வெளியீடு இது.

2007ஆம் ஆண்டு சிந்துவெளி ஆய்வு மையத்தை ஐராவதம் மகாதேவன் இந்நூலகத்தில் நிறுவினார். அவர் 1977இல் வெளியிட்ட சிந்துவெளிக் குறியீடுகள், உருவப்பொறிப்புகளின் தொடரடைவினை 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி இணைய ஆவணமாக இந்நூலகம் வெளியிட்டது. சிந்துவெளி வரிவடிவம் பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்கு இது பெரிதும் உதவும். ரோஜா முத்தையா நூலகம் நடத்தும் மாதாந்திர சொற்பொழிவுகள் சிறப்பானவை. 400 உரைகள் நிகழ்ந்துள்ளன. ரொமிலா தாப்பர், தாமஸ் ட்ராட்மன், ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா, சம்பகலெட்சுமி போன்ற அறிஞர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர்.

2020-21 காலகட்டத்தில் பெருந்தொற்றால் முடங்கியது உலகம். அப்போது ‘சங்கச் சுரங்கம்’ என்ற தலைப்பில் 30 வாராந்திர சொற்பொழிவுகளை இணையவழி நிகழ்த்தினேன். சங்க இலக்கியத்தை மீள்வாசிப்புச் செய்யும் இந்த முயற்சியை ரோஜா முத்தையா நூலகமும் திருச்சி களம் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்தன. இதில் நூலக அலுவலர் மணிகண்ட சுப்பு செய்த ஒருங்கிணைப்புப் பணி சிறப்பானது.

வாழ்க்கை பல வியப்புகளின் கூட்டசைவு. நான் வழிகேட்டுச் சென்றடைந்த நூலகத்தின் அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவிலும் அந்த நூலகத்தில் இயங்கும் சிந்துவெளி ஆய்வுமையத்தின் மதிப்புறு ஆலோசகர் பொறுப்பிலும் இப்போது இருக்கிறேன்.

ஒரு கட்டத்தில் இந்த நூலகத்தில் 30 பேர் பணியாற்றினார்கள். இப்போது 11 பேர். காரணம் நிதிப்பற்றாக்குறை. தமிழுக்காகக் குரல் கொடுப்பது எளிது. செயல்படுவதுதான் கடினம். நூலகங்களை அரவணைப்பது நமது முன்னுரிமைகளில் ஒன்றாக இன்னும் மாறவில்லை.

ஒவ்வொரு நூலையும் பாதுகாத்து எண்ணிமமாக்கி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய ஐயாயிரம் ரூபாய் செலவாகும். இடச்சிக்கனத்துடன் நூல்களைப் பாதுகாக்க ‘கம்பேக்டர்’ எனப்படும் புதிய இரும்பு அலமாரிகள் தேவை. ஒவ்வொன்றின் விலை சுமார் ஒரு லட்சம்.

உலகத் தமிழர்களே! பாரதியின் வரியொன்றை உரிமையுடன் கடன் வாங்கி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் வாசலில் நின்று உரக்கச் சொல்கிறேன்...

அன்ன யாவிலும் புண்ணியம்கோடி
இங்கே இத்துப்போகும் நிலையில் இருக்கும்
நூல்களில் ஒன்றைத் தத்து எடுத்தல்!

- பயணிப்பேன்

****

அச்சுக்கலையும் தமிழும்

அச்சுக்கலையின் வருகைதான் வாசிப்பைப் பரவலாக்கியது. முதல் தமிழ்ப் புத்தகம் 1554ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் லிஸ்பனில் வெளியானது. இந்நூலில் தமிழ்ச்சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக்கோக்கப்பட்டன.

தம்பிரான் வணக்கம்
தம்பிரான் வணக்கம்

1577இல் கோவாவில் அச்சிடப்பட்ட ‘தம்பிரான் வணக்கம்’ என்ற நூல்தான் இந்திய வரிவடிவொன்றில் அச்சேறிய முதல் தமிழ் நூல். 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் இந்தியாவிலும் இலங்கையிலுமாக அச்சிடப்பட்ட மொத்த நூல்கள் 1,771. மேற்கத்திய மொழி நூல்கள் 1,099. கிழக்கத்திய நூல்கள் 672. இவற்றில் தலையாய இடம் தமிழுக்கே. இக்காலகட்டத்தில் 266 தமிழ் நூல்கள், வங்காள மொழியில் 80 நூல்கள், ஹிந்துஸ்தானியில் 20 நூல்கள் அச்சேறின. சமஸ்கிருத மொழியில் ஒரு நூல் மட்டும் அச்சாகியது.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது