மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 28 - தோழர் திருவள்ளுவர்

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

திருக்குறளைத் தன் தலையில் தூக்கிக் கொண்டாடிய பேரரசன் யாரேனும் உண்டா?

வாசிப்பறை மடிக்கணினியில் ‘தோழர் திருவள்ளுவர்.’ மேஜையில் நாட்டுக்குறள், பன்மாயக்கள்வன். பின்னணியில் மெல்லிய ஒலியில் எனது உழவர் கீதம்.

“உழவுத் தொழிலை உச்சத்திலே
தூக்கி வச்சது யாரு?
உலக மனிதர் சிறந்த தமிழர்
வள்ளுவர் அவர் பேரு.
பல ஆயிரம் தொழில்கள் பூமியில்
கோடிகள் புரளும் கைகளில்
அட… ஆயினும் காகிதம் சோறாகாது
கடையினில் காய்கறி விளையாது”


நாட்டுக்குறள் பாடல் - ஓவிய நூலைப் புரட்டிப் பார்க்கிறேன். இன்பத்துப்பாலிலிருந்து ஏழு குறள்கள். பரிமேலழகர், நாமக்கல் கவிஞர், மு.வ, கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் சிற்பி, அன்வர் பாட்சா, ஹெலினா கிறிஸ்டோபர் உரைகள், குறளின் பொருள் தழுவிய நாட்டுப்புறப்பாடல்கள், தாஜ் நூரின் இசையில் ஒலிப்பேழை. டிராட்ஸ்கி மருதுவின் அற்புதமான ஓவியங்கள். எவ்வளவு அழகாக நூலை வடிவமைத்திருக்கிறார் மோசஸ் கிளாட்ஸன். ஏன் உழைத்தார்கள் இப்படி? வள்ளுவர் என்ற பெயரின் ஈர்ப்பு விசையை அளப்பது எப்படி?

27 நவம்பர், 2016. சென்னை நாரத கானசபா. மாலை 5:59. எண்மத்திரையில் இலக்கக் கடிகாரம். 59, 58, 57 என்று நொடிகள் கரைகின்றன. மிகத்துல்லியமாய் 6 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து. தவறிக்கூட யாரும் தழுவக்கூடாத மதம் தாமதம் என்பதால் ‘கவுண்ட் டவுன்.’ வள்ளுவன் தாடியின் நிழலில் தமிழ் பேசும் தைரியம். ‘வள்ளுவர் குரல்’ (Voice of Valluvar) குடும்பத்தின் நிகழ்வு. நிரம்பி வழியும் அரங்கம். திருக்குறள் பற்றிய ‘கால மணல்வெளியில்’ என்ற மணல் அசைவூட்டக் குறும்படம். ஒடிசாவின் அன்புக்கொடை.

திருவள்ளுவர்
திருவள்ளுவர்

சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்தின் பேராளுமைகள். கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சிவகுமார், நீதியரசர் மகாதேவன், பத்மா சுப்ரமணியம், டிராட்ஸ்கி மருது, ச.தமிழ்ச்செல்வன். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனும், சங்கர சரவணனும் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்கள். தாஜ் நூரின் இசை முழக்கம். மேளம், தாளம், தாரை, தப்பட்டை, ஆட்டம், பாட்டம். பின்னணிப் பாடகர்கள் கவிதா கோபி, அந்தோணி தாஸ், நின்சி வின்சென்ட், வேல்முருகன், மீனாட்சி இளையராஜா, பிரபு, சின்னப்பொண்ணு.

``யாரிவ ஊர்வசியா
ஆண்கொத்தி மோகினியா
கண்ணுமொழி ரெண்டிலயும்
கரண்டு வச்ச பாதகியா”


என்று தெறிக்கவிடுகிறார் அந்தோணி தாஸ்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்ட ஒலிப்பேழையைப் பெற்றுக்கொண்டது `திருக்குறள் சகோதரிகள்’ என்றழைக்கப்படும் திருச்சி பள்ளி மாணவிகள் சூர்யா, உமா, காவியா.

மிகையாகச் சொல்லவில்லை. எனது வாழ்வில் மிக நிறைவாய், மனதிற்கு நெருக்கமாய் நான் உணர்ந்த பத்து நாள்களைப் பட்டியலிடச் சொன்னால் இந்த நாள் அதிலொன்றாய் நிச்சயம் இருக்கும். விடிந்தால் எனது பிறந்த நாள். அப்படியொரு முன்னிரவு இனி எப்போது வரும்!

நாட்டுக்குறள் விழா அரங்கம்
நாட்டுக்குறள் விழா அரங்கம்

திருக்குறள் ஒரு தனிமனிதனின் குரல் அல்ல; ஓர் உயர்பண்பாட்டின் ஒட்டுமொத்தத் தெளிவின் திரள். அடையாளங்களுக்கு அப்பால் நின்று பேசுவது போன்ற மெய்யறிவு, விடுதலை வேறெதுவும் இருக்கிறதா? அது வள்ளுவன் தனக்குள் உணர்ந்த உலகப்பொறுப்பு. எல்லைகளற்றது வானம்.

2016 ஜூன் மாதத்தில் ஒருநாள் இரவு. மூச்சுமுட்டுவதுபோல் எனக்குள் ஒரு புழுக்கம். தூக்கம் வரவில்லை. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு கடைசியில் பாலித்தீனில் மூட்டைகட்டிக் கிடத்தப்பட்டிருந்த படம் மனசை விட்டுப் போகமறுத்தது. என்ன செய்யலாம்? அடுத்த ஐந்து மாதங்களில் பாட்டெழுதி, இசையமைத்து, ஒலிப்பேழையாக்கி ஓவியம் தீட்டி நூலாக்கி நாரத கான சபாவில் நாங்கள். தெம்மாங்குத் தமிழ் பாட காரணம் கருதித் தேர்ந்தெடுத்த அரங்கம். அழகிய சினம் ஆறிய தினம்.

எதிர்முழக்கம், எதிர்வினை என்ற இரண்டில் எனக்குப் பிடித்தது எதிர்வினை. செயல்தான் ஆகச்சிறந்த அறிக்கை. நாட்டுக்குறள் திட்டத்துடன் ஒருநாள் சென்னை வந்திறங்கினேன். வளசரவாக்கத்தில் நண்பர் ராஜேந்திரன் வீட்டில் இசையமைப்பாளர் தாஜ்நூரைச் சந்தித்தேன். வரிகளை வாங்கிப்படித்தார். ‘சரி’ என்றார்.

நாட்டுக்குறள் வெளியீட்டு விழா
நாட்டுக்குறள் வெளியீட்டு விழா

திருக்குறள் ஒரு திறந்தவெளி இலக்கியம். அது மந்திரமோ, தந்திரமோ அல்ல, சொல்லப்போனால் அது ஒரு சுதந்திரம். கற்பனை வளமும் கவிதைத்திறனும் காட்சிப் படிமங்களாய் கண்முன்விரியும் இலக்கிய மேடை இன்பத்துப்பால். இன்றைய புதுக்கவிதைகளுக்கும் விதை நெல். வாழ்வியலை 360 டிகிரி கோணத்தில் அணுகும் இந்த நடைமுறை இலக்கியத்தைப் பதினெண்கீழ்க்கணக்கு என்று கணக்கு காட்டியது காலம்.

11ஆம் நூற்றாண்டில் திருவள்ளுவருக்குப் புகழாரம் சூட்டிய திருவள்ளுவ மாலை திருவள்ளுவர் பற்றிய சில கட்டுக்கதைகளுக்கும் கற்பிதங்களுக்கும் விதை போட்டது. கட்டடங்களைக் கட்டுவது கடினம், இடிப்பது எளிது. ஆனால் கட்டுக்கதைகளைக் கட்டுவது எளிது; இடிப்பதுதான் கடினம். 1873இல் தரங்கம்பாடியில் வெளியான திருக்குறள் பதிப்பில் இன்பத்துப்பால் இல்லை. 1967இல் நாகர்கோவிலில் வெளியிடப்பட்ட திருக்குறள் மாணவர் பதிப்பிலும் தவிர்க்கப்பட்டது. திருவள்ளுவருக்கும் இன்பத்துப்பாலிற்கும் தொடர்பு இல்லை என்பது போன்ற பாசாங்கால் பயனில்லை.

2017 ஜனவரி 15. பொங்கல் விடுமுறையின் போது நாட்டுக்குறள் விழா விஜய் டி.வி-யில் 90 நிமிடம் சிறப்பு நிகழ்ச்சியாக உலகளவில் ஒளிபரப்பானது. அப்போது அமெரிக்கா சென்றிருந்த நானும் என் மனைவியும் சான் பிரான்சிஸ்கோவில் என் மூத்த சகோதரரின் மகள் வீட்டில் பார்த்தோம். நாட்டுக்குறள் ஏற்படுத்திய அதிர்வுகள் அழகானவை. பொதிகை தொலைக்காட்சியில் ஒரு நேரலை நிகழ்ச்சி. அதில் நானும் தாஜ்நூரும். நாட்டுக்குறள் பாடல்களுக்கு கவிதா ராமு ஐ.ஏ.எஸ் அற்புதமாக நடனம் ஆடினார். ஈரோடு வேளாளர் கல்லூரி மாணவிகள் நாட்டுக்குறளுக்கு ஆடிய உற்சாக நடனத்தை ‘யூடியூபில்’ பார்த்தேன். 2019இல் அமெரிக்கத் தமிழ் வானொலியில் நாட்டுக்குறள்.

தமிழ் நெடுஞ்சாலை - 28 - தோழர் திருவள்ளுவர்
உழவர் கீதம் அணியினர்
உழவர் கீதம் அணியினர்

நண்பர் கார்த்திகேய சிவசேனாபதியின் ஏழு வயது மகள் குந்தவி நாட்டுக்குறளை அவ்வளவு அழகாகப் பாடுகிறார். அமெரிக்காவில் வசிக்கும் கவிதா பாண்டியனின் குறுந்தகவல். “என் மகன் ரோஹனுக்கு நாட்டுக்குறள் மிகவும் பிடிக்கிறது. அடிக்கடி பாடுகிறார்.” நாட்டுக்குறள் கேட்டபடி அலுவலகம் செல்கிறேன் என்று டெக்சாஸில் இருந்து பதிவிடுகிறார் மதிவாணன் ராமலிங்கம்.

பன்மாயக் கள்வன். குறள் தழுவிய 57 காதல் கவிதைகள். எழுத்தாளர் பிரபஞ்சன் இந்த நூலிற்கு எழுதிய அணிந்துரையை மகுடமாகச் சூடி மகிழ்கிறேன். “நீங்கள் காதலர் என்றால், உங்கள் காதல் கூர்மை அடையும். காதலிக்காதவர் என்றால் நாளை தொடங்குவீர்கள். வள்ளுவர் பன்மாயக்கள்வனைப் படிக்க நேர்ந்தால் பாலகிருஷ்ணனைப் பாராட்டுவார்.” இதற்கு மேல் வேறென்ன விருது வேண்டும் எனக்கு?

சென்னையில் சுதர்சன் பட்நாயக் எழுப்பிய வள்ளுவர் மணற்சிற்பம்
சென்னையில் சுதர்சன் பட்நாயக் எழுப்பிய வள்ளுவர் மணற்சிற்பம்

‘வாட்ஸ்அப்’-பில் தேய்ந்த விரல், ‘பெடல்’ ஊர்தல், `ஊடலூர்’ பேருந்துநிலையம், குவளை பஞ்சாயத்து, உப்பு விஞ்ஞானி, கொட்டும் பனியில் குளிர் காபி, 6 மடிப்பு, காமத்தின் ‘பை சார்ட்’, ‘தொல்லை’ திணை, காதலுக்கு யூரியா போன்ற கவிதைத் தலைப்புகள். நான்தான் எழுதினேனா!

“நெற்றிப்பொட்டில்
விழுகின்றன
நொடித்துகள்களின்
தனித்தனிச் சுத்தியல்கள்.
மலையை விழுங்கிய
மலைப்பாம்பைப் போல
நகராமல் கிடக்கிறது
மணித்துளி.”


சங்க இலக்கியமும் திருக்குறளும் உழவர்களை உயர்த்திப்பிடித்தது வெறும் பொருளியல் அல்ல; சமூக உளவியல். இதை உரக்கச் சொல்லவே உழவர் கீதம் எழுதினேன். அது ஓர் உற்சாக அனுபவம். பாடலை எழுதி தாஜ்நூருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினேன். பாடல் பதிவின் போது நானும் சென்னையில் இருந்தேன். மாமல்லபுரத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அமெரிக்காவில் டெட்ராய்ட், டல்லாஸ், ஜப்பான், மலேசியா, இத்தாலி, சிங்கப்பூர், கத்தார், குவைத், வியட்நாம், சீனா, கொரியா, ஆல்ப்ஸ் மலையிலிருந்து அந்தப்பாடலை உலகத்தமிழர்கள் பாடி ஆடி ஒளிப்பதிவு செய்து அனுப்பினார்கள். அந்தக் காட்சிகளைப் படக்கோவை செய்து உழவர்கீதத்தை உருவாக்கினோம். யூடியூபில் ‘உழவர் கீதம்’ என்று தேடிப்பாருங்கள்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

திருக்குறளை ‘பொதுமறை’ என்று சொல்வதை விட ‘பொதுமுறை’ என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். 2015 மே மாதம் சென்னையில் நடந்த பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் பொதுமுறையை முன்மொழிந்தேன்.

திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ‘தமிழ் வேதமாகிய திருக்குறள்’ என்று சொல்லிப் பழகி விட்டோம். திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கையுடையவர். ஆனால், திருக்குறள் சமய நூல் அல்ல. மறை என்பது வேதம் என்பதன் தமிழாக்கமே. ‘பொது’வாக இருக்கும் எதுவும் ‘மறை’யாக இருக்கமுடியாது. அதைப்போலவே ‘மறை’யாக இருக்கிற எதுவும் ‘பொது’வாக இருக்கவே முடியாது.

பொதுமறை என்பதே கற்பிதம்தான். அவ்வாறு ஒன்று இருக்குமென்றால் ஏன் இத்தனை சமயங்கள்; இத்தனை சாதிகள். திருவள்ளுவரின் வேட்டியின் நிறம் பற்றி ஏன் இத்தனை விவாதங்கள். திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ் கணக்கு நூல்களைப் படிப்பது வீண் என்று பதினேழாம் நூற்றாண்டில் ஏன் சொல்லப்போகிறார் ஒரு சுவாமிநாத தேசிகர்! வள்ளுவர் சிலைக்கு எப்படி மறுக்கப்படும் இடம்? எந்த வழிபாட்டுத் தலத்தில் மறை நூலாக இருக்கிறது திருக்குறள்? திருக்குறளைத் தன் தலையில் தூக்கிக் கொண்டாடிய பேரரசன் யாரேனும் உண்டா?

சென்னையில் ஆட்டோ ஓட்டுபவர் வள்ளிமுத்து. வள்ளுவர் குடும்பக் கூட்டத்தில் அவரைச் சந்தித்திருக்கிறேன். சிறந்த திருக்குறள் செயல்பாட்டாளர். இவர் ஓட்டும் ஆட்டோவை ‘திருக்குறள் ஆட்டோ’ என்றே அழைக்கலாம். பொதுமக்கள் இலக்கியம் என்பதுதான் திருக்குறளின் பெருமை.

கணிப்பொறி ஆல்பத்தில் பழைய படங்கள். 2000ஆம் ஆண்டு உத்கல் பண்பாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதி நல்கையில் அமைத்த திருக்குறள் இருக்கை; 1991-92இல் கவிஞர் கணநாத் தாஸ் செய்த திருக்குறள் ஒடியா மொழிபெயர்ப்பில் ஆற்றிய சிறிய பங்களிப்பு என்று பழைய நினைவுகளில் பயணிக்கிறேன். இன்னும் பின்னோக்கி நடக்கிறேன். 1970களின் தொடக்கத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு ஆடி வீதியில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் பேச்சுப் போட்டியில் பரிசு வாங்கிய நினைவுகள். புகைப்படம் இல்லை. ஆனால் மனசில் இருக்கிறது அந்த மாலை.

யாருக்கும் அவர் என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு அவர் தோழர் திருவள்ளுவர். இதுவரை வரையப் பட்டுள்ள ஓவியங்கள்; செதுக்கப்பட்டுள்ள சிலைகள், எழுதப்பட்டுள்ள உரைகள் யாவும் தரும் மனத்தோற்றங்களை மறந்துவிட்டு, திறந்த மனதுடன் திருக்குறளைப் படித்துப்பாருங்கள். வள்ளுவர் உங்கள் அருகில் நிற்பதை உணர்வீர்கள். பேசிக்கொண்டே அவர் உடன்நடந்து வருவதுபோல் தோன்றும். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

ஹரித்வார் போன்ற வழிபாட்டுத் தலங்களில் ஆயிரம் கேள்வி கேட்பார்கள். உண்மையில், திருவள்ளுவரின் சிலை இருக்கவேண்டிய இடம் பாராளுமன்றமும் உச்சநீதி மன்றமும்தான்.

திருவள்ளுவர் மாலை முதல் விக்கிபீடியா வரை குறிப்பிடும் மாதானுபங்கி வள்ளுவரின் பெயரில்லை. அவரது வேட்டியும் துண்டும் வெண்மை அன்றி வேறில்லை.

- பயணிப்பேன்

****

வள்ளுவர் குரல் குடும்பம் (Voice of Valluvar))

வள்ளுவர் குரல் குடும்பம் தொடக்கத்தில் (2014) வாட்ஸ்அப் செயலி தளத்தில் இயங்கியது. இப்போது டெலிகிராம் சமூக ஊடகத்தில். திருவள்ளுவரைப் பல்வேறு கோணங்களில் பார்க்கும் 270 உறுப்பினர்கள். ‘வாசல் தோறும் வள்ளுவம் தெளிப்போம்’; ‘Valluvar Forever - இவர்போல் யார் இன்னொருவர்’ என்று இயங்கும் இந்தக் குழுவை நிறுவி ஒருங்கிணைத்துவரும் சி.ராஜேந்திரன் ஓய்வுபெற்ற இந்திய வருவாய்ப் பணி (சுங்கம் & மத்திய கலால் துறை) அதிகாரி. ‘பாமரருக்கும் பரிமேலழகர்’ என்ற நூலின் ஆசிரியர்.

புவனேஸ்வர் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகளோடு இணைந்து ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மூலம் வள்ளுவர் குரல் குடும்பம், பூரி, விசாகப்பட்டினம், சென்னை, திருவனந்தபுரம், கோவா கடற்கரைகளில் வள்ளுவர் மணற்சிற்பம் அமைத்துக் கொண்டாடியது.

திருக்குறள் சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளில் ‘வள்ளுவர் குரல்’ குடும்பம் ஈடுபட்டுள்ளது.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது