
தமிழ் நெடுஞ்சாலை எனது பாதையும் பயணமும் மட்டுமல்ல; எனது இருப்பின் அடையாளமும்...
செப்டம்பர் 6, 2007. தென்கொரியத் தலைநகரம் சியோல். மக்களாட்சி முறையை மேம்படுத்துவதில் தேர்தல் ஆணையங்களின் பங்குபற்றிய இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு இந்திய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறேன். தேசிய தேர்தல் ஆணைய வளாகத்திலுள்ள இந்தச் சிலை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. பார்த்துக்கொண்டே நெடுநேரம் நிற்கிறேன். திடமான ஒருவர் ஆடாமல் அசையாமல் நெஞ்சை நிமிர்த்தி, ஆனால், நிதானமாக நிற்கிறார். முன்னோக்கி மடக்கிய அவரது கைகளில் கிடைமட்டமாய் ஒரு நீண்ட கம்பு. அந்த நெடுங்கோலின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஏழு புறாக்கள். ஒரு புறாவின் சிறகைத் தொடும் மற்றொரு புறாவின் சிறகு; அவரது தலைக்கும் மேலே தோரணம்போல. அந்த உருவம் அசைந்தால், கம்பு அசைந்தால், அந்த ஏழுபுறாக்களில் ஒரு புறா நகர்ந்தால்கூட இந்த உருவகம் கலைந்துபோகும். இத்தனைக்கும் ஒரு புறா எதிர்த்திசையில் பறக்கிறது. என்ன சொல்கிறது இந்தச் சிற்பம்? அந்த உறையாத உயிர்ச்சிறகுகள் ஒத்திசைக்கும் நோக்கம் என்ன?
மக்களாட்சி என்பது ஒருவழிப்பாதை அல்ல. அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கும் அரசியல் சாசனம், தேர்தல் சட்டவிதிகள், வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தேர்தல் மேலாண்மை நிறுவன அமைப்பு என்ற பன்முகப் பரிமாணங்கள் சேர்ந்தியங்கும் கூட்டியக்கம். தேர்தல் ஆணையம் நிச்சயமாக ஒரு நீதிமன்றம் அல்ல; பலரும் நினைப்பது போல ஒரு பந்தய நடுவரும் அல்ல. அதனால் இந்தச் சிலையில் எது எதற்கான குறியீடு என்று யோசிக்கிறேன்.

தென்கொரியாவின் மக்களாட்சி கடந்து வந்தது மலர்ப்பாதை அல்ல. 1910 முதல் 1945 வரை ஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழ். கொரியாவின் பிரிவினைக்குப் பின்னர் தென் கொரிய மக்கள் மக்களாட்சி முறையைத் தேர்ந்தெடுத்தார்கள். நம்பகத்தன்மையற்ற அடுத்தடுத்த தேர்தல்கள் மக்களாட்சி முறையின் மாண்புகளைக் காயப்படுத்தினாலும் கொரிய மக்களின் ஜனநாயக வேட்கை தணியவே இல்லை. படிப்பினைகளால் பண்பட்ட கொரிய மக்களின் தளராத கூட்டு நம்பிக்கையே மக்களாட்சிமுறையை நிமிர்த்தி நேர்செய்தது. இன்றைய தேதியில் உலகின் சிறந்த குடியரசுகளில் ஒன்று தென்கொரியா.
இரண்டு நாள் கருத்தரங்கில் இந்தியத் தேர்தல் முறை பற்றி விரிவாக விளக்கினேன். நமது வாக்குப்பதிவு இயந்திரம் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள். தென்கொரிய வாக்குப்பதிவு இயந்திரம் மிக நவீனமானது. கணிப்பொறி, மென்பொருள், இணையவெளி என்று இயங்குகிறது. காட்சிக்கு வைத்துச் செயல்முறை விளக்கம் அளித்தார்கள். இந்திய வாக்குப்பதிவு இயந்திரம் ஒருவகையில் கணக்குக் கூட்டல் இயந்திரம்தான். இருந்தாலும் பழைய வாக்குப்பெட்டி போலவே இதற்குப் பல ‘பூட்டுகள்’ நம்பிக்கையூட்ட. தென்கொரியா போல கணிப்பொறியை நமது வாக்குச்சாவடிகளில் வைத்து இணையவெளியில் இணைத்தால் குற்றச்சாட்டுகள் கூடுதலாகக் கும்மியடிக்கும்.
நேர்மையான தேர்தல் என்ற அடித்தளத்தின் மீதுதான் நிற்கிறது மக்களாட்சி என்ற மாபெரும் கோபுரம். தேர்தல் அமைப்புகளின் நிறுவன அறமும் செயல் திறமும்தான் மக்களாட்சியின் வேர்களை வலுப்படுத்தும் வீரிய உரம். தலைவர்களின் மரணங்களிலிருந்து, சமூகங்கள் எளிதில் மீண்டுவிட முடியும். நாற்காலிகளின் `வெற்றிடத்தை’ நிரப்ப எப்போதும் நீள்வரிசை. ஆனால் நிறுவன அறங்களின் சரிவு மிகத்துயரமானது. அந்தச் சரிவை நிறுத்தி சரி செய்ய நெடுங்காலம் ஆகும்.


சியோல் தேர்தல் ஆணையத்திலிருந்து கிளம்பும் போது அந்தச் சிலையை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். சமன் செய்து சீர்தூக்கும் நிறுவன அறத்தை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாகச் சொல்கிறதோ? இப்படியொரு உருவகச் சிலையை நமது தேர்தல் ஆணையத்தில் செய்து நிறுத்தினால் என்ன என்று யோசித்தேன். டில்லி திரும்பியதும் ஆணையத்திடம் படத்தைக் காட்டி விளக்கினேன்.
தென்கொரியாவின் நிலப்பரப்பு 99,720 சதுர கி.மீ; மக்கள் தொகை 5.17 கோடி. (தமிழ்நாடு 1,30,058 சதுர கி.மீ; மக்கள் தொகை 7.8 கோடி). தலைநகர் சியோல் ஒரு கட்டுமானக்காடு என்றாலும் கொரியாவின் நிலப்பரப்பில் 64 விழுக்காடு இயற்கையான காடுகள் என்பது ஆறுதல். சியோலைச் சுற்றியே எட்டு மலைகள். தலைநகரமா அல்லது மலைநகரமா! தென்கொரியக் கடற்கரையின் நீளம் 2,413 கி.மீ. மக்கள் வாழாத 3,000 சிறு தீவுகள்.
கருத்தரங்கிற்கு வந்திருந்த ஒவ்வொரு வெளிநாட்டு விருந்தினருக்கும் தனியே ஒரு மொழிபெயர்ப்பாளர். இந்தியர்கள் இவ்வளவு வேகமாக ஆங்கிலம் பேசுவது எப்படி என்று மொழிபெயர்ப்பாளர் நாசுக்காகக் கேட்டதும் வேகத்தடை விதித்துக்கொண்டேன். ‘பாலிவுட் நடிகர்’(!) மாதிரி இருப்பதாக அவர் சொன்னதை சுத்தமாக நம்பவில்லை! அதை உபசரிப்பின் ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டேன்.
விதவிதமான வடிவமைப்புகளில் வானுயர் கட்டடங்கள். சில தலைநகரங்களில் கடந்த காலத்தின் நெடி இருக்கும், சில நகரங்களில் நிகழ்காலத்தின் விருப்பம் தொனிக்கும். ஆனால் சியோல் நகரத்தின் கட்டுமானங்களில் எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்பு தெரிகிறது.
தென்கொரியாவின் மக்கள் தொகை நெருக்கம் மிக அதிகம். தொழில் உற்பத்திப் பெருக்கத்தால் கணக்கற்ற மக்கள் நகரங்களுக்குப் புலம்பெயர்ந்ததால் இப்போது நகர்வாழ்வியல் கொரியாவின் மையப்புள்ளியாக மாறிவிட்டது. ஐந்து கோடிக் கொரியர்களில் ஒரு கோடிப் பேர் தலைநகர் சியோலில் வசிக்கிறார்கள்.
சியோலை புஷான் என்ற துறைமுக நகருடன் இணைக்கும் AH1 என்ற 416 கி.மீ நீள ஆசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிற்கிறேன். `வளர்ச்சிப்பாதை’ (Growth path) என்ற சொல்லாடல் ஓர் உருவகம்போல நாம் பயன்படுகிற உத்தேசக்குறியீடு. ஆனால், இந்த நெடுஞ்சாலை கொரியப் பொருளாதாரத்தின் நாளமோ சிரையோ அல்ல; மகாதமனி. கொரிய மறுமலர்ச்சியின் உருவகம் அல்ல; மெய். புஷானுக்குப் போக ஆசை. நேரமில்லை.
சியோல் நகரின் ஊடாக ஓடும் ஹேன் நதியில் கப்பலில் அழைத்துச்சென்றார்கள். வட, தென் கொரிய நாடுகளுக்கு இடையிலுள்ள ‘ராணுவமயமாக்கப்படாத’ (Demilitarized Zone) சிறு நிலப்பகுதியிலுள்ள தொழிற்பேட்டைக்குச் சென்றது தனி அனுபவம்.
உயர்தொழில்நுட்பமே தென்கொரியப் பொருளாதாரத்தை உந்தும் விசை. சர்வதேசப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (OECD) முதல் பயனாளியாகத் தனது பயணத்தைத் தொடங்கிய தென்கொரியா இப்போது மற்ற நாடுகளுக்கு நிதியுதவி செய்யும் நாடாக வளர்ந்திருக்கிறது. உலக ஏற்றுமதியில் ஏழாவது இடம். பொருளாதாரத்தில் 11வது பெரிய நாடு. தனிநபர் சராசரி ஆண்டு வருமானம் 42,728 அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் சுமார் 32 லட்ச ரூபாய். அனைவருக்குமான கல்வி, மருத்துவ வசதியில் புதிய உச்சம். உலகிலேயே அதிவேகமான இணையதள இணைப்பு. ஏழைகளின் ஜப்பான் என்று ஒருகாலத்தில் முன்னிறுத்தப்பட்டாலும் தனது தரத்தில் குறைவில்லை என்பதைத் தென்கொரியா மிக அழுத்தமாகப் பதிவு செய்துவருகிறது. கல்வியே ஆயுதம். கடின உழைப்பே கச்சாப்பொருள்.
மத நம்பிக்கை சமூகப்பண்பாட்டின் மையக்கருத்து இல்லை. 56 விழுக்காடு மக்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள். கிட்டத்தட்ட 15 விழுக்காடு தங்களை நாத்திகர்கள் என்று அடையாளப்படுத்தியுள்ளனர். மீதியுள்ளவர்கள் கிறிஸ்தவம் அல்லது பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆயினும், கொரியப் பண்பாட்டின் அடித்தளமாக விளங்குவது கன்பூசியஸின் மனிதநேய சித்தாந்தம்தான்.
கொரிய உணவுவகை இப்போது உலக அளவில் பிரபலமாகிவருகிறது. கிம்ச்சி என்ற சாலட் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. கொரிய மக்கள் திரைப்படங்களிலும் பாப் இசையிலும் ஆர்வம் கொண்டுள்ளனர். கரோக்கி (Karaoke) என்ற பொழுதுபோக்கு தென்கொரியாவின் நிகழ்காலப் பண்பாட்டின் முக்கியமான ஓர் அங்கமாக வளர்ந்திருக்கிறது. ‘நொரேபங்’ எனப்படும் கரோக்கி கூடத்திற்குச் சென்று வேடிக்கை பார்த்தது புதிய அனுபவம்.
2018ம் ஆண்டு ஜப்பான், கொரியா, சீனா ஆகிய மூன்று நாட்டுப் பயணத்தின் போது சியோலில் இரண்டு நாள்கள். கொரியா வணிக ஒருங்கிணைப்பு நிறுவனத்துடன் (KOTRA) சேர்ந்து இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த உரையாடல். ஒடிசா மாநிலத் தொழில்துறை அமைச்சர், அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சென்றிருந்தேன். ஒரு நாள் முழுவதும் அடுத்தடுத்து சந்திப்புகள். சுற்றிப்பார்க்க நேரமில்லை. டோங்டெமுன் டிசைன் பிளாசா (Dongdaemun Design Plaza) எனும் வடிவமைப்பு வளாகத்தையும் லொட்டே உலக கோபுரத்தையும் வெளியிலிருந்துதான் பார்க்க முடிந்தது.
இரண்டு முறை கொரியா சென்ற போதும் நமது இந்தியத் தூதர்களைச் சந்தித்தேன். 2007ல் தூதராக இருந்த என். பார்த்தசாரதி கொரியாவின் வரலாறு மற்றும் பண்பாடு பற்றிய ஆழமான ஆர்வம் கொண்டவர். இந்தியாவுக்கும் கொரியாவுக்குமான பண்பாட்டுத் தொடர்புகள் குறித்து விளக்கினார். 2018ல் இரண்டாவது முறை சியோல் சென்றபோது பிரியா ரெங்கநாதன் இந்தியத் தூதராக இருந்தார். அவரது ஒத்துழைப்பால் ஒடிசா குழுவின் பயணம் பயனுள்ளதாக அமைந்தது.
ஆகஸ்ட் 30, 2018. சியோலின் இன்ச்சியான் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சீனாவின் ஃபூஜான் மாகாணத்திலுள்ள ஃபூஜோவ் நகருக்குச் செல்லக் காத்திருக்கிறோம். எனது மீள் நினைவில் 2007. உத்தரப்பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நேர்மையான தேர்தலை நடத்திக் காட்டியிருந்த நேரம். பன்னாட்டு நிறுவன உயர்பொறுப்புகளுக்குப் பொருத்தமானவர்களைத் தேடிக்கண்டறியும் ஆலோசனை அமைப்பொன்று என்னைத் தொடர்பு கொண்டது. தென்கொரிய நிறுவனமொன்றில் முக்கியமான பொறுப்பிற்கு அழைப்பு. கற்பனை செய்துகூடப் பார்த்திராத ஊதியம். இதுபற்றித் தலைமைத் தேர்தல் ஆணையாளர் கோபாலஸ்வாமியிடம் தெரிவித்தேன். ``வேண்டாம் என்று சொல்லிவிடாதே, உனக்கும் உன் குடும்பத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்’’ என்றார். எனது மனைவியிடமும் மகள்களுடனும் கலந்தாலோசித்து ``வேண்டாம்’’ என்றேன். ``ஏன் மறுக்கிறீர்கள்’’ என்று தொலைபேசியில் கேட்டார்கள். ‘நான் பார்க்கும் ஆட்சிப்பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது; சிந்துவெளி ஆராய்ச்சியும் செய்கிறேன்’ என்றேன்.
தமிழ் நெடுஞ்சாலை எனது பாதையும் பயணமும் மட்டுமல்ல; எனது இருப்பின் அடையாளமும். ஒருவேளை நான் அந்த அழைப்பை ஏற்றிருந்தால் என்று தர்க்க நீட்டிப்பாக யோசித்துப்பார்க்கிறேன். 2019 டிசம்பர் 16 அண்ணா நூற்றாண்டு நூலக அரங்க மேடையில் எனது ஆய்வு நூலைக் கையில் ஏந்தி நின்றிருக்க மாட்டேன். எனக்குத் தெரியும், உலகத்தில் பாதியை உயில் எழுதிக்கொடுத்தாலும் சிந்துவெளி விட்ட இடத்தையும் சங்க இலக்கியம் தொட்ட இடத்தையும் விட்டுத்தர மாட்டேன்.
- பயணிப்பேன்



தமிழ் - கொரியா தொடர்பு
ஹோமர் பி. ஹல்பர்ட் என்ற ஆராய்ச்சியாளர் திராவிட மொழிகளுக்கும் கொரிய, ஜப்பானிய மொழிகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய கருதுகோளை 1905ல் முன்வைத்தார். சுசுமு ஓனோ (1970) கொரிய ஜப்பானிய மொழிகளின் சொற்களில் திராவிட மொழிகளின் குறிப்பாகத் தமிழ்மொழியின் தொடர்பு பற்றி வெளியிட்ட கருத்துகள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. 1984ல் மொர்கன் இ க்ளிப்பிங்கர் கொரியா மற்றும் திராவிட மொழிகள் பற்றிய பல தரவுகளை முன்வைத்தார். க்ளிப்பிங்கரின் இந்தக் கருத்தை மீள்வாசிப்பு செய்யவேண்டும் என்று சியோல் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் லீ கி மூன் 2011ல் தெரிவித்தார்.
கொரியா தமிழாய்வுத் தலைவர் ஜங் நம் கிம் “கொரிய மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையிலான தொடர்பு வலுவானது. ஆனால் அதை இருமொழிகளின் தோற்றம் சார்ந்த மொழி மரபுத் தொடர்பு என்று கூறமுடியாது; இதுபற்றி மேலும் ஆய்வுகள் தேவை” என்கிறார்.
நெடுங்காலத்திற்கு முன்பே கொரியா, ஜப்பான் போன்ற பகுதிகளுக்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்ததால் இம் மொழியுறவு நேர்ந்திருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக்கருதுகோளை முன்மொழிந்த ஆய்வாளர்கள், நான், நீ, வா, அப்பா, புல், நாள் உள்ளிட்ட பல தமிழ்ச்சொற்களைக் கொரிய மொழிச் சொற்களோடு ஒப்பிடுகிறார்கள்.
- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது