மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 34 - கங்காருகளின் தாயகம்!

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

சுமேரிய மெசபடோமிய நாகரிகம் செழித்த பூமியின் தற்காலப்பெயர் இராக்!

2018 ஏப்ரல் 13. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட். இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தைக் காண மைதானத்தை நோக்கிச் செல்கிறேன். அந்தச் சிறுமி அணிந்திருந்த இந்திய அணியின் மேலாடையில் ‘ஒடிசா’ என்ற சின்னம் பளிச்சென்று கண்ணில்பட்டது. இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகளின் நல்கையாளர் ஒடிசா மாநில அரசு.

அந்தச் சிறுமியின் தந்தையிடம் பேசினேன். சிறுமியின் பெயர் நிஷ்தா. எதிர்காலத்தில் ஒருநாள் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்காக விளையாடும் கனவுடன் ஆஸ்திரேலியாவில் வளரும் குழந்தை. முன்னே நடந்துசென்ற விளையாட்டுத்துறை அமைச்சரையும் சக அதிகாரிகளையும் அழைக்கிறேன். நிஷ்தாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நிஷ்தாவின் தந்தை இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் விளையாடியவர். ஒடிசாவில் நடைபெறவிருக்கும் (நவம்பர்-டிசம்பர் 2018) உலகக்கோப்பைப் பந்தயத்திற்கு நிஷ்தாவை அழைத்துவரச் சொல்லி அழைப்புவிடுத்தோம். விமான டிக்கெட்டிலிருந்து தங்கும் வசதிவரை எல்லாம் எங்கள் பொறுப்பு என்று கூறினோம். நிஷ்தா மனதில் உட்கார்ந்தாள்.

2018 இறுதியில் உலகக்கோப்பை ஹாக்கி பந்தயத்தை புவனேஸ்வரத்தில் நடத்த அணியமாகிய நேரம். அலுவல் சார்ந்த அயல்நாட்டுப்பயணங்கள் எப்போதும் அவசரகதியில். இந்த ஒருவார ஆஸ்திரேலியப் பயணம் விதிவிலக்கு. பயணத்தின் நோக்கமே 21வது காமன்வெல்த் போட்டிகளையும் ஆஸ்திரேலிய விளையாட்டு மைதானங்களின் நிர்வாகமுறையையும் நேரில் காண்பது. அதனால் கொஞ்சம் ஆற அமர.

காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் சிறுமி நிஷ்தாவுடன்
காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் சிறுமி நிஷ்தாவுடன்
இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங்கை அழைத்து வரும் நிஷ்தா
இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங்கை அழைத்து வரும் நிஷ்தா

பிரிஸ்பேனிலிருந்து 66 கி.மீ தூரத்தில் கோல்டு கோஸ்ட். கடலின் வாசல்படியில் இவ்வளவு உயரமான கட்டுமானங்கள் கட்டுப்படியாகுமா? யுகாம்பே மொழிபேசும் பழங்குடிகளின் ஆதிக்குடில் இது. ஆனால் இப்போது இது வேறு உலகம். 70 கி.மீ நீளக் கடற்கரைகள், அலைச்சறுக்காடும் (surfing) ஆர்வலர்கள் கூட்டம். சூரிய ஒளியில் நனையும் சுற்றுலாப் பயணிகள், தூங்கா இரவு கேளிக்கைக்கூடங்கள். ஊடறுத்து ஓடும் நெராங் நதி. நீர் நோக்கி நிற்கும் அழகிய வீடுகள். இதற்காகவே நகரின் குறுக்காகவும் நெடுக்காகவும் அமைக்கப்பட்டுள்ள 860 கி.மீ நீளக் கால்வாய்கள். விசைப்படகுகள். நேரில் பார்த்திருக்காவிட்டால் நம்பியிருக்கமாட்டேன்.

மகளிர் இறகுப்பந்து ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி. சாய்னா நேவாலும் பி.வி சிந்துவும் மோதுகிறார்கள். யார் வென்றாலும் தங்கமும் வெள்ளியும் இந்தியாவுக்கே. இந்த இருவருக்கும் ஒரே பயிற்சியாளரான கோபிசந்த் இருவரையும் களத்தில் நின்று உற்சாகப்படுத்துகிறார். கோபிசந்த்தின் மனநிலை பற்றிய யோசனை எனக்குள்.

2018 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 26 தங்கப்பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடம்பெற்றது. 15-ம் தேதி நடந்த நிறைவுவிழாவை நேரில் பார்த்தோம். உலகப்புகழ்பெற்ற தடகள வீரர் உசேன் போல்ட் திடீரென்று மேடையில் தோன்றி மகிழ்வித்தார். எனது ‘சிறகுக்குள் வானம்’ (2012) நூலில் அவரைப் பற்றி எழுதியது மனத்திரையில்.

 ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை
ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை
 மெல்பன் விளையாட்டு அரங்கம்
மெல்பன் விளையாட்டு அரங்கம்

20 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு அரசாங்கச் செலவில் ஓராண்டு மேற்படிப்பிற்குச் செல்லும் வாய்ப்பு. ஆனால் ஒடிசாவில் பெரும் வெள்ளம். தலைமைச்செயலர் அழைத்தார் ‌ “பாலா, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா போகலாமே. இப்போது இங்கே தேவைப்படுகிறீர்கள்.” குடும்பத்துடன் ஆஸ்திரேலியா போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஏமாற்றம். அந்த ‘அடுத்த ஆண்டு’ திரும்ப வரவில்லை.

2018 ஏப்ரல். ஓய்வு பெற இன்னும் ஏழே மாதங்கள். திடீரென்று ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் வாய்ப்பு. அதுவரை கால்வைத்திராத கண்டம். மீதி உலகத்திலிருந்து வெகுதூரத்தில். ஆஸ்திரேலியா ஒரு கண்டம், ஒரு நாடு, ஒரு தீவு. ஆஸ்திரேலியாவிற்கு ‘Land Down Under’ என்ற பட்டப்பெயர் உண்டு. 65,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் குடியேறிய இந்நிலப் பரப்பின் பட்டப்பெயரை தமிழில் எப்படிச் சொல்லலாம்! உலகின் கீழடி?

ஏப்ரல் 11, மெல்பன் (Melbourne) நகரின் துல்லாமரைன் விமான நிலைய ஓடுதளம். தனிமைக்குள் தரையிறங்குவதுபோல் ஏதோ ஒரு வினோத உணர்வு. ஒவ்வொரு நாட்டிற்கும் ஏதோ ஒன்றில் இருக்கிறது ஒரு மிதமிஞ்சிய ஈடுபாடு. கூட்டுமனநிலையில் குடியேறிய பொதுக்காதல். ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் வாசலில் நிற்கிறோம்.

இணையத்தில் படித்த வர்ணனை நினைவிருக்கிறது. “இது ஒரு புனிதக்கோயில். சிட்னி நகருக்கு ஒப்பேரா மாளிகை, பாரிஸுக்கு ஈஃபெல் கோபுரம், நியூயார்க்கிற்கு சுதந்திரதேவியின் சிலை. அதுபோல மெல்பன் நகருக்கு இந்த கிரிக்கெட் மைதானம். இது உலகிற்கான மெல்பனின் குறியீடான அடையாளம். முதல் மரியாதை.” இந்த மைதானத்தை ‘ஜி’ (G) (அதாவது ‘கிரவுண்ட்’ என்பதன் சுருக்கம்) என்று செல்லமாக அழைக்கிறார்கள். வயது 168. பல மைல்கற்கள். 1859-ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட் இங்கே தொடங்கப்பட்டது. 1971-ல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பிறப்பிடம் இதுவே.

சிட்னி ஒப்பேரா மாளிகை
சிட்னி ஒப்பேரா மாளிகை
கோல்டு கோஸ்ட்
கோல்டு கோஸ்ட்

மைதான வளாகத்தில் விளையாட்டு அருங்காட்சியகம். 95 விளையாட்டுகள் தொடர்பான 3,500 காட்சிப்பொருள்கள். நவீனத் தொழில்நுட்பத் தொடுதிரை, முப்பரிமாணப் படிமங்கள் (3D hologram), விளையாட்டை இப்படியும் நேசிப்பார்களா? உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் ஒட்டிக்கொண்டே உடன்வருகிறது சங்க இலக்கியம். ‘விளையாட்டும் விரும்பார் கொல்!’ என்ற கலித்தொகை வியப்பின் அதிர்வு மெல்பனில் எனக்குள். இறவாப்புகழ் கொண்ட கிரிக்கெட் வீரர்களின் பெயர்களும் படங்களும் இடம்பெற்றுள்ள மாபெரும் சபைதனில் நிற்கிறேன். மைதானத்திற்கு வெளியே கிரிக்கெட் வீரர்களின் சிலைகள். வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லியின் சிலையருகே நின்று படம் எடுத்துக்கொள்கிறேன். பிராட்மேன் சிலையருகே நிற்கும்போது 1980களில் தூர்தர்ஷனில் தவறாமல் பார்த்த ‘தி பாடிலைன்’ (The Bodyline) தொடர் நினைவுக்கு வந்தது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழங்குடிகள் வசித்த நிலம். புதிதாகக் குடியேறிய பிரிட்டிஷ்காரர்கள் பழைய பெயரை மாற்றி பிரிட்டிஷ் பிரதமராக இருந்த மெல்பனின் பெயரைச் சூட்டினார்கள். யர்ரா நதி எவ்வளவு அழகாக இருக்கிறது. இவ்வளவு அழகான நீலவானத்தைப் பார்த்தாக நினைவில்லை. நிற்காமல் ஓடுபவனின் கவனக்குறைவாகவும் இருக்கலாம். வீதியில் நாற்காலி போட்டு அமர்ந்து ஓர் இசைக்கலைஞர் வாசிக்கும் இனிய இசை, அந்திமாலை, யர்ரா நதியை நின்று ரசித்த பாலம்- இப்போதும் என்னை நிறைக்கிறது. இந்த நதிகள்தான் எத்தனை வரலாறுகளுக்கு சாட்சியமாக இருக்கின்றன. யர்ரோ-யர்ரோ என்றால் பழங்குடிகளின் மொழியில் ‘எப்போதும் ஓடுவது’ என்பது பொருளாம்.

சிட்னி சென்றோம். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் டான் பிராட்மேன் பெயர் சூட்டப்பட்ட விதானத்தின் கீழ் நிற்கிறேன். சிட்னியிலிருந்து 90 நிமிடப் பயணதூரத்தில் இருக்கிறது பிராட்மேன் வளர்ந்த, கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய ஊரான பௌரால். அலையன்ஸ் என்று அறியப்படும் சிட்னி கால்பந்து மைதானத்திற்குச் சென்றோம்.

கங்காரு
கங்காரு

சிட்னியின் முத்திரை மோதிரம் போன்ற ஒப்பேரா மாளிகையின் (Sydney Opera House) சூழல் வனப்பு சொக்கவைக்கிறது. டென்மார்க்கைச் சேர்ந்த ஜோர்ன் அட்சன் வடிவமைத்தது. ``இக்கட்டடத்தில் பட்டுத் தெறிக்கும்வரை தனது ஒளி எவ்வளவு அழகானது என்று சூரியனுக்கே தெரியாது’’ என்று சொல்கிறார் பிரபல கட்டடக் கலைஞரான லூயிஸ் கான். இதைவிட வேறு என்ன சொல்லிவிட முடியும்?

சிட்னியில் இந்தியத் தூதரக அதிகாரிகள் விருந்தளித்தனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் பற்றி உரையாடுகையில் திடீரென்று தமிழர்கள் பற்றிய பேச்சுவந்தது. சிட்னியில் தமிழர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டம் பற்றிச் சொன்னார்கள். சிட்னியில் எழுப்பிய குரல் அலங்காநல்லூருக்கும் கேட்டது என்றேன். ஏன் இப்படி என்றார் அந்த அதிகாரி. `டிசைன் அப்படி’ என்றேன். இதை எழுதும்போது நனவோடையில் மிதக்கிறேன். 2019 டிசம்பரில் சென்னையில் வெளியான Journey of Civilization: Indus to Vaigai என்ற எனது நூலை 2020 மார்ச்சில் மெல்பன் பாராளுமன்ற வளாகத்தில் நடந்த தமிழ் மரபுக் கண்காட்சியில் வைத்து அழகுபார்த்துவிட்டார்கள் தமிழர்கள். வியப்பானவர்கள்.

கோல்டுகோஸ்ட்டில் குர்ரும்பின் வனவிலங்கு சரணாலயத்தில் பார்த்த கங்காருகள். ஆஸ்திரேலியாவின் பழங்குடிகளைப்போலவே இனம்புரியாத ஏதோ ஒன்றின் குறியீடாகத் தோன்றுகிறது. 65,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிகுடிகள் எப்படித்தான் இந்தத் தனித்த கண்டத்தைக் கண்டடைந்தார்களோ! தனித்துவமான 400 தொல்குடிகள், மொழிக்குழுக்கள். இந்த மொழிகள் பெரும்பாலானவை வழக்கொழிந்து போய்விட்டன. எஞ்சியிருப்பவை இல்லாமல்போகும் அபாயத்தின் விளிம்பில். ஒலிகள் ஓய்ந்துபோகும் மொழிகளின் மரணம் துயரமானது.

வரலாற்றின் நீளமும் நிகழ்காலமும் தலைகீழ்விகிதமோ! நவீன ஆஸ்திரேலிய வரலாற்றின் வயது 250 ஆண்டுகள்தான். இப்போது உலகின் மிக முக்கியமான, பொருளாதார வளர்ச்சிமிக்க நாடுகளில் ஒன்று. வாழ்க்கை வசதி தரப்பட்டியலில் எட்டாவது இடம். சிறந்த மக்களாட்சிகளின் பட்டியலில் ஒன்பதாவது இடம். மக்கள்தொகையில் 30 சதவிகிதம் புலம்பெயர்ந்தோர். உலகின் மிகப்பழைமையான நாகரிகங்கள் செழித்த நாடுகளின் இன்றைய நிலைமையை நினைத்துப்பார்க்கிறேன். சுமேரிய மெசபடோமிய நாகரிகம் செழித்த பூமியின் தற்காலப்பெயர் இராக்!

ஜூன் 8-ம் நாள், 2018. எனது அறையில் கோபிசந்த். ஒடிசா தலைமைச் செயலகத்தில் `எல்லைகளுக்கு அப்பால்’ (Going Beyond Boundaries) என்ற தலைப்பில் உரையாற்ற அழைத்திருந்தோம். சொற்பொழிவு அரங்கிற்கு அவரை அழைத்துச் செல்லும்போது காமென்வெல்த் இறுதி ஆட்டத்தில் என்ன நினைத்தீர்கள் என்று கேட்டேன். சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளருக்கு துரோணர் பெயரில் விருது அளிப்பது முரண் என்ற எனது கருத்தை அவரிடம் பகிரத்தோன்றியது. பகிர்ந்தேன்.

2018 நவம்பர் 28. புவனேஸ்வரத்தில் உலகக்கோப்பை ஹாக்கி தொடக்கவிழா. ஏ.ஆர்.ரஹ்மான் ஹாக்கி கீதத்தை அரங்கேற்றுகிறார். மாதுரி தீட்சித் மற்றும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு நடனக்கலைஞர்கள் பங்கேற்ற சிறப்பு நடனம் உலகின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது. பல் அடுக்கு நடன மேடையின் மேலடுக்கில் குறியீட்டுப்படிமமாய்.ஒடிசா பழங்குடிகள் நடனம். ஷாருக்கான் உலக ஹாக்கி வீரர்களை வரவேற்கிறார். இருளைக்கிழித்து ஒளிர்கிறது வாண வேடிக்கை. அன்று எனது 60வது பிறந்தநாள். அடுத்த இரண்டு நாள்களில் ஆட்சிப்பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.

இந்தியா-பெல்ஜியம் களமிறங்கும் ஆட்டம். இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங்கை கரம் பிடித்து மைதானத்திற்குள் அழைத்து வருவது, ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கும் நிஷ்தா. கரவொலியில் அதிர்கிறது கலிங்கா விளையாட்டரங்கம்.

- பயணிப்பேன்

கங்காரு
கங்காரு

கங்காருகள்

கங்காரு வயிற்றில் பை உள்ள பாலூட்டி விலங்கு. பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அருகில் உள்ள தீவுகளே கங்காருகளின் தாயகம். ஒரே தாவில் 13 மீட்டர் தூரம் தாண்டும் ஒரே விலங்கு. ஆனால், பின்னோக்கி நகர இயலாது. நீந்தும் திறன் உண்டு.

இரண்டு கால்களைக் காற்றில் உயர்த்திக் குதிக்கும்போது வேகமாக ஓடும். நான்கு கால்களையும் தரையில் வைத்து நடக்கும்போது மெதுவாகவே நடக்கும். பின்னங்கால்களால் தத்திச்செல்லும்போது சமநிலை பேண உதவுவது வலுமிக்க வால்.

விருப்ப உணவு புல். ஆடுமாடுகளைப் போல உணவை அசைபோடும். அபாயச் சூழலை உணர்ந்தால், தனது கால்களை பூமியில் வேகமாக அறைந்து மற்ற கங்காருகளை எச்சரிக்கும். வளர்ந்த ஆண் கங்காரு பக் (buck), பெண் கங்காரு டோ (doe), இளம் கங்காரு ஜோயி (joey) என்றும் அழைக்கப்படுகின்றன.

பிறக்கும்பொழுது ஒரு சின்னப் புழுவின் (இரண்டு செ.மீ.) அளவிலேயே பிறந்து, முன்புறம் உள்ள பையுடன் இணைக்கப்பட்டு வளர்கிறது. பையை விட்டு வெளியே வர சுமாராக 9 மாத காலம் ஆகும். பெண் கங்காரு ஒரே சமயத்தில் மூன்று குட்டிகளைப் பராமரிக்கிறது. முதல் குட்டி அவ்வப்பொழுது வந்து பால் குடித்துச் செல்லும். இரண்டாவது பையில் இருக்கும். மூன்றாவது கருவில். இதனால் பெண் கங்காரு ஒரு நிரந்தர கர்ப்பிணி.

கங்காரு, ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவையான கன்டாஸ் நிறுவனத்தின் சின்னம்.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது