மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 35 - கலைஞர் என்னும் பரிவுத்தமிழ்

கலைஞர்
பிரீமியம் ஸ்டோரி
News
கலைஞர்

ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது

2018 ஆகஸ்ட் 7 மாலை. ‘கலைஞர் மறைந்தார்’ என்ற செய்தி வெளியானபோது நான் மும்பையில் இருந்தேன். ஒடிசா முதல்வருடன் பயணம். சென்னை செல்ல இயலாத சூழல். நள்ளிரவைத் தாண்டி உறக்கமின்றி நேரலைகளில் விழித்திருந்தேன். திரண்டிருக்கும் மக்கள், உணர்ச்சி வெள்ளம், அண்ணா சமாதி அருகே கலைஞரின் உடலை அடக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை, உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு. மனசெல்லாம் சென்னையில்.

எத்தனை கோடி மனிதர்கள் நடந்தது இந்தத் தமிழ் நெடுஞ்சாலை. ஆயினும், எனது கையெழுத்தில்தானே இருக்கும் எனது நாட்குறிப்பு. நினைவலைகளில் கலைஞர்.

1976-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாள் முதன்முறையாக கோபாலபுரம் வீட்டில் சந்தித்தேன். நெருக்கடிநிலை காலம். அவரது ஆட்சி கலைக்கப்பட்டு (ஜனவரி 31, 1976) குடியரசுத்தலைவர் ஆட்சி. “மதுரை யாதவர் கல்லூரியின் முத்தமிழ் மன்றத் தலைவர் நான். பேராசிரியர் தமிழ்க்குடிமகனின் மாணவன். எங்கள் கல்லூரி விழாவில் நீங்கள் பேச வரவேண்டும்” என்றேன். கலைஞர் புன்னகைத்தார்.

“இப்போது இருக்கும் சூழ்நிலையில் என்னை உங்கள் கல்லூரிக்கு அழைக்கக்கூடாது. நானும் வரக்கூடாது. கல்லூரிக்கும் நல்லதல்ல; தனிப்பட்ட முறையில் உங்கள் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பானது அல்ல” என்றார். “நான் காமராஜரின் தொண்டன், ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் மேடைப்பேச்சாளன்” என்றேன். “அதற்கென்ன, நல்லதுதானே” என்றார். “ஆட்சிக்கலைப்பிற்குப் பிறகு அரசியல் காரணங்களால் ஒரு கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு இப்போது யாதவர் கல்லூரியில் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்” என்றேன். “அது போதாதா?” என்றார் சிரித்தபடி. தமிழ்க்குடிமகனின் நலம் விசாரித்தார். அமரச்சொல்லி ஆற அமர பேசுவார் என்று நினைக்கவே இல்லை. பரிவுத்தமிழ்.

நான் ஏன் அந்தச் சூழலில் கலைஞரைப் பார்க்கச் சென்றேன் என்று பலமுறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். நெருக்கடிநிலையை காமராஜர் கடைசிவரை ஒப்புக்கொள்ளவில்லை; அவசரநிலை பிரகடனத்திற்குப் பிறகு அவர் வாழ்ந்த நாள்கள் மிகச் சரியாக 99 நாள்கள் மட்டுமே; 1976 ஜனவரி 31 ஆட்சிக்கலைப்பு வரை தமிழகத்தில் நெருக்கடிநிலையின் நிழல் படவில்லை; 1976 ஜனவரி 17, 18 தேதிகளில் திருச்சி காட்டூரில் நடந்த ஸ்தாபன காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிறகு நான் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டேன். இத்தனைக்கும் தமிழ் இளங்கலை முதலாண்டில் பல்கலைக்கழகத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன். இந்த உணர்வுகள் என்னை வலுவாக பாதித்திருந்தன. காமராஜர் இறந்தபோது இறுதிமரியாதை செலுத்த லாரியில் பயணித்துச் சென்னை வந்த நான் இப்போது கலைஞரைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால் அனைவரின் நலம்கருதி கலைஞர் வரமறுத்து என்னை ஆற்றுப்படுத்தி அனுப்பிவிட்டார்.

தமிழ் நெடுஞ்சாலை - 35 - கலைஞர் என்னும் பரிவுத்தமிழ்

1989 சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்ற பேராசிரியர் தமிழ்க்குடிமகன் சட்டப்பேரவைத் தலைவர். ஒடிசாவிலிருந்து விடுமுறையில் வந்த என்னை முதல்வரிடம் அழைத்துச் சென்றார். “தமிழ்க்குடிமகன் உங்கள் பெயரை அடிக்கடி குறிப்பிடுவார்” என்று கூறிய கலைஞர் `‘நீங்கள் திருவாரூர் மாப்பிள்ளையாமே’’ என்று கேட்டார். அவருடன் இருந்த ஐந்து நிமிடங்களில் அங்கு வந்த சில தலைவர்களிடம் `திருவாரூர் மாப்பிள்ளை’ என்று இரண்டு முறை கூறிவிட்டார்.

1997-ம் ஆண்டு. தேதி நினைவில்லை. தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம். பாரதிராஜாவின் `ஞாபக நதிக்கரையில்’ நூல் வெளியீட்டு விழா. முதல்வர் கலைஞர், ஜி.கருப்பையா மூப்பனார் கலந்துகொண்டனர். நானும் பேசினேன். உரையை முடித்து இருக்கைக்குச் செல்கையில் முதல்வருக்கும் மூப்பனாருக்கும் வணக்கம் தெரிவித்தேன். மூப்பனாரை நன்கறிவேன். முதல்வரிடம் அவர் என்னை அறிமுகம் செய்தார். “பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்” என்று சொன்னதும் “தமிழ் இலக்கிய மாணவர். திருவாரூர் மாப்பிள்ளை” என்று முடித்தார் கலைஞர். எத்தனை ஆண்டுகள் இடைவெளி. எத்தனை ஆயிரம் பேரைச் சந்தித்திருப்பார். எப்படி நினைவில் வைத்திருக்கிறார்!

தலைக்கு மேல் ஒரு கூரை முக்கியம் என்றாலும் அதை ஒரு பெரிய இலக்காக எனக்குள் நிறுத்தியதில்லை. 1994-95-ல் புவனேஸ்வரத்தில் ஒடிசா அரசு எனக்கு ஒரு வீட்டுமனை ஒதுக்கியபோது ‘வேண்டாம்’ என்று எழுதிக்கொடுத்தேன். நாம்தான் தமிழகம் திரும்பிவிடுவோமே என்ற எண்ணம்தான். ஊரெல்லாம் சுற்றினாலும் நிலைக்கு வந்தால்தானே தேருக்கு நிம்மதி. நான்கு ஆண்டுகள் கழித்துத் தமிழ் என்னைத் தாங்கியது, எப்போதும் போல.

அனுமதி கேட்டா நடக்கின்றன அதிசயங்கள். அட்டவணை ஏது ஆச்சரியங்களுக்கு. அரைநாள் வாடகைக்கு ஆட்டோ எடுத்து வந்து என் வாசலில் இறங்கியது ஒரு பேரன்பு. அந்தப் பெரியவரின் பெயர் ஷோபா காந்த தாஸ். தமிழகத்தில் அவரை எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை. இதைப் பதிவிடும் இந்த நொடிகளில் அவரது நினைப்பு எனது நெஞ்சை அழுத்துகிறது. 20.11.2021 அன்றுதான் அவர் சென்னையில் காலமானார். கலைஞரின் நெடுநாள் நண்பர். நான் கலைஞரைக் கடைசியாக நேரில் பார்த்ததுகூட அவர் ஷோபா காந்த தாஸின் குடும்ப நிகழ்வுக்கு வந்து காரில் இருந்தபடி வாழ்த்தியபோதுதான்.

ஷோபா காந்த தாஸ்
ஷோபா காந்த தாஸ்

நான்கு ஆண்டுகள் (1994-98) நான் சென்னையில் பணியாற்றியபோது நண்பர் தமன் பிரகாஷ் (அப்போது கணையாழி பதிப்பாளர்) மூலம் எனக்கு அறிமுகமானவர். பீகாரில் பிறந்து வளர்ந்து 1945 வாக்கில் சென்னையில் குடியேறியவர். தேசியத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணின் நம்பிக்கைக்கு உரியவர். அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களை நேரடியாக அறிந்து பழகியவர். நெருக்கடி நிலையின் போது வடமாநிலத்தலைவர்கள் சிலருக்குத் தமிழகம் புகலிடமாக அமைந்ததில் இவரது பங்குண்டு என அறிந்தேன்.

“நீங்கள் ஓய்வுபெற்றதும் தமிழ்நாட்டிற்கு வந்துவிடுங்கள். நான் முதல்வரிடம் எனக்காக எதுவும் கேட்டதே இல்லை. உங்களைப்பற்றிச் சொல்லி அரசாங்க விலையில் ஒரு வீட்டு மனை வாங்கித்தருகிறேன்” என்றார். ‘ஏதோ டீ, காபி வாங்கித் தருவது போல சொல்கிறாரே’ என்று நினைத்துக்கொண்டேன். அந்த உரையாடலைப் பெரிதாக உள்வாங்கவில்லை. விண்ணப்பக் கடிதம் கேட்டார். தராமல் நாள் கடத்தினேன். இப்போது ஆட்டோவில் வந்து இறங்கியிருக்கிறார் கையோடு கடிதம் வாங்கிச் செல்ல.

ஜார்ஜ் எல்.ஹார்ட்
ஜார்ஜ் எல்.ஹார்ட்

அடுத்த இரண்டு நாள்களில் தொலைபேசியில் சொன்னார். ``கலைஞரைப் பார்த்துவிட்டேன். அவரைத் தெரியும் என்று நீங்கள் சொல்லவே இல்லையே” என்றார். தமிழ் மாணவர், ஒடிசா கேடர் எல்லாம் தெரிந்திருக்கிறது என்றார். “சார், அவரை எல்லாருக்கும் தெரியும். ஆனால் என்னை அவர் நினைவில் வைத்திருப்பார் என்பது எனக்கு எப்படித் தெரியும்?” என்றேன். ஒடிசா சென்றதும் இதை அடியோடு நான் மறந்துவிட்டேன். ஆறேழு மாதங்கள் கழித்து நடைமுறையிலிருந்த விதிமுறைகளுக்கு இணங்க தமிழக அரசின் ஆணை. மகிழ்ச்சி.

2004-ம் ஆண்டு மே 24. வீட்டு வசதி வாரிய மாதத்தவணைகளை ஆறு ஆண்டுகளில் கட்டிமுடித்துப் பதிவு செய்ய வந்திருக்கிறேன். கலைஞரை நேரில் பார்க்க விரும்பினேன். மாடியில் கலைஞர். “நீங்கள் முதல்வராக இருந்தபோது 1998-ல் ஒதுக்கீடு செய்த வீட்டு மனையை இன்று பதிவு செய்தேன். உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன்’’ என்றேன்.

அருகில் இருந்த சண்முகநாதனிடம் “அப்படியா?” என்று கேட்டார் கலைஞர்.

“எனக்கு நினைவு இல்லை’’ என்ற கலைஞர் சில‌ நொடிகள் மௌனத்திற்குப் பிறகு ``நான் நினைவில் வைக்கக்கூடாது. ஆனால் நீங்கள் மறக்காமல் பார்க்க வந்தது மகிழ்ச்சியான விஷயம்” என்றார் புன்னகையுடன்.

 பூரி கடற்கரையில் கலைஞர் நினைவைப் போற்றும் மணற்சிற்பம்
பூரி கடற்கரையில் கலைஞர் நினைவைப் போற்றும் மணற்சிற்பம்

``நான் தமிழ் மாணவன். திருக்குறள் படித்தவன்’’ என்றேன்.

``எல்லோரும்தான் திருக்குறள் படித்திருக்கிறார்கள்’’ என்றார். எதை நினைத்துச் சொன்னார் என்று புரியவில்லை. ஆனால் நிறைவாக உணர்ந்தேன். எனது பணி‌ பற்றி விசாரித்தார். மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தையான பிஜூ பட்நாயக் பற்றியும் நினைவுகூர்ந்தார்.

நாங்கள் டெல்லியில் இருக்கும்போது என் மனைவி ஒருமுறை சொன்னார். “உங்கள் சிந்துவெளி கொற்கை-வஞ்சி-தொண்டி வரைபடத்தைக் கலைஞர் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்.” 2008-ம் ஆண்டு ஒருநாள் கலைஞரைச் சந்தித்தேன். கையில் வரைபடம். மடிக்கணினியில் கூகுள் எர்த். வியப்பாக இருக்கிறதே என்றார். “ஒருமுறை இதைப் பெரிய திரையில் காட்டுங்கள். அறிஞர்கள் அவையில்” என்றும் கூறினார்.

2010 ஜூன் 24. கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி ஆய்வரங்கில் கொற்கை வஞ்சி தொண்டி வளாகத்தை உலகிற்கு அறிவித்தேன். அகல்திரையில் வரைபடம். அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் முன்னிலை. மீள்நினைவில் 2004-ம் ஆண்டு. ஒன்றிய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தொலைபேசியில் அழைத்தார். தமிழின் செம்மொழித் தகுதியை விளக்கும் விரிவான கட்டுரைகள் இருந்தாலும் அமைச்சரவைக்கு எளியமுறையில் விளக்க ஏதுவாக சுருக்கமான ஓர் ஆங்கில வரைவு அவசரமாக வேண்டுமென்றார். விடுமுறை எடுத்து எழுதி அமைச்சர் மாறனுக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன். செம்மொழிக்குப் பச்சைக்கொடி காட்டிய அமைச்சரவைக்கூட்டம் முடிந்த ஐந்தாவது நிமிடமே டில்லியிலிருந்து அமைச்சரின் தனிச் செயலர் சஞ்சய் மூர்த்தி (ஐ. ஏ.எஸ்) அலைபேசியில் தெரிவித்தார். இதோ செம்மொழி ஆய்வரங்கில் நிறைவுடன் நான். இயல்பான, எதேச்சையான சிறுபுள்ளிகள்தான். கோடாக இழுத்துக் கோலமாக்கினால் கொண்டாடத் தோன்றுகிறது.

ஒடிசாவில் உத்கல் பண்பாட்டுப் பல்கலைக்கழகத்தில் `திருக்குறள் இருக்கை’ அமைக்கத் தமிழக அரசு 10 லட்சம் நிதி நல்கியது. அப்போது முதல்வராகக் கலைஞர், தமிழ்ப்பண்பாட்டு அமைச்சராகப் பேராசிரியர் தமிழ்க்குடிமகன். ஒடிசாவின் பண்பாட்டுத்துறைத் செயலராக நான். மேலும், புவனேஸ்வர் தமிழ்ச்சங்கக் கட்டடம், வாசிப்பு மையத்திற்கு 15 லட்சம் நிதியுதவி அளித்தார் கலைஞர்.

தொலைக்காட்சிகள் முன்பு துயரில் விடிந்தது 2018 ஆகஸ்டு 8. அரபிக்கடலோரம் நடக்கிறேன். வங்கக்கடற்கரையில் கலைஞர் இறுதி உறைவிடம் பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விவாதம் தொடங்கும். ‘இந்தியாவின் நுழைவாயிலில் (Gateway of India) நிற்கிறேன்.

வித்யாசாலைகளில் (பள்ளிக்கூடம்) வியாச நோட்டில் (கட்டுரை ஏடு) ரஜா விண்ணப்பம் (விடுமுறைக் கடிதம்) எழுதி அப்பியாசம் (பயிற்சி) செய்த தலைமுறை என்னுடையது. சர்வகலாசாலை பல்கலைக்கழகமாகவும், உப அத்யட்சகர் துணைவேந்தராகவும், அபேட்சகர் வேட்பாளராகவும் உருமாறிய காலகட்டத்தின் நேரடி சாட்சியம் நான்.

செம்மொழி மாநாடு இலச்சினை
செம்மொழி மாநாடு இலச்சினை

தாய்மொழிவழிக்கல்வி, மாநில உரிமைகள், சமூக நீதி, சமவாய்ப்பு போன்றவற்றிற்காக கலைஞர் போன்ற தலைவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பியிருக்காவிட்டால், குடிமைப்பணியைத் தமிழில் எழுதும் உரிமை எனக்குக் கிடைத்திருக்காவிட்டால் இன்றைய தேதியில் நான் எங்கே இருந்திருப்பேன். நிச்சயம் இந்தியாவின் நுழைவாயிலில் இல்லை!

நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டிய நேரம். முகேஷ் அம்பானி, ஆனந்த் மகேந்திரா, குமாரமங்கலம் பிர்லா, ஆதி கோத்ரெஜ், கௌதம் சிங்கானியா போன்ற தொழிலதிபர்கள் முதல்வரை அடுத்தடுத்து சந்தித்து ஒடிசாவில் தொழில் முதலீடு பற்றிப் பேசவிருக்கிறார்கள்.

திடீரென்று ஒரு யோசனை. மணற்சிற்பக் கலைஞர் பத்ம சுதர்சன் பட்நாயக்கை அலைபேசியில் அழைத்தேன். எனது மனதை எப்படி வாசித்தாரோ தெரியவில்லை. எடுத்தவுடன் கலைஞர் மறைவு பற்றி விசாரித்தார். அதனால்தான் அழைத்தேன் என்றேன். பூரியில் வங்கக் கடற்கரையில் கலைஞர் நினைவைப் போற்றும் மணற்சிற்பம்.

வியப்புக்குறியா, வினாக்குறியா, அரைப்புள்ளியா, முற்றுப்புள்ளியா என்று விளக்கம் தராமல் ஏதோ ஒன்று எப்படியோ நிகழ்கிறது. அதனால்தான் வாழ்க்கை அவ்வப்போது அழகாக இருக்கிறது. மணற்சிற்ப வேலை தொடங்கியது. நீதிமன்றத்தில் விவாதம் தொடர்கிறது. முதல்வரின் கலந்தாய்வில் நான். மணற்சிற்பத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு. ‘Tribute to Kalaignar The Legend 1924 - 2018’ என்று எழுதி அனுப்பினேன்.

- பயணிப்பேன்...

பரிதிமாற்கலைஞர்
பரிதிமாற்கலைஞர்

இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் 12.10.2004-ல் வெளியிட்ட No.IV-14014/7/2004-NI-II அரசு ஆணை, தமிழைச் செம்மொழியாக அறிவித்தது. 150 ஆண்டுக்காலக் கோரிக்கை. “தமிழைச் செம்மொழியாக்க சூரிய நாராயண சாஸ்திரி என்கிற பரிதிமாற்கலைஞர் அவர்கள் வைத்த கோரிக்கை பூத்து, காய்த்து, பழுத்து, அழுகிவிடுமோ என்று அஞ்சியிருந்த காலத்தில், மத்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது” என்று தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் கலைஞர் மு.கருணாநிதி.

இந்திய அரசு ஆண்டுதோறும் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி, பாரசீகம் ஆகிய பண்டைய மொழி அறிஞர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது அளித்து கௌரவித்துவந்தது. இந்த ஐந்து மொழிகள் பட்டியலை யார் எப்போது முடிவு செய்தார்கள் என்பது தெரியவில்லை. தோற்றத் தொன்மையும் தொடரும் இளமையும் கொண்ட வாழும் மொழியான தமிழ் மொழி அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 இந்தியமொழிகளில் ஒன்றாகவே கருதப்பட்டது.

தமிழைச் செம்மொழியாக அறிவித்தது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ். அதன் பின்னர் சம்ஸ்கிருதம் (2005), கன்னடம் (2008), தெலுங்கு (2008) மலையாளம் (2013) ஒடியா (2014) ஆகிய மொழிகள் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன.

தமிழின் செம்மொழித் தகுதி குறித்த ஆகச்சிறந்த ஆவணம் ஜார்ஜ் எல்.ஹார்ட் எழுதிய ‘Statement on the status of Tamil as classical language’ என்ற அறிக்கையாகும். தமிழைச் செம்மொழியாக அறிவிப்பதற்காக எடுக்கப்பட்ட தொடர்முயற்சிகள், அதன் பின்புலமான அரசியல் பற்றி மணவை முஸ்தபா எழுதிய `செம்மொழி உள்ளும் புறமும்’ என்ற நூல் விளக்குகிறது.