
வணிகர்களின் சுமைகளைத் தூக்கி, கொலைப்பசியுடன் நடக்கும் பாலைவன ஒட்டகம் நாம் அறிந்த தற்காலத் தமிழ் நிலப்பரப்பில் எப்படி சாத்தியம்?
“ஒட்டகம் எலும்பு தின்னுமா?” ஒட்டகக்காரர்களிடம் கேட்கிறேன். வினோதமாகப் பார்த்தார்கள். “ஆமாம், பார்த்திருக்கிறேன்” என்றார் ஒருவர். “கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை” என்கிறார் இன்னொருவர். குழப்பம் குறையவில்லை. எனக்குள் கேட்டுக்கொண்டேன்... சங்க இலக்கியம் ஏன் பொய் சொல்லப்போகிறது?
பிப்ரவரி 5, 2010. தார்ப் பாலைவனம் சூழ்ந்த ஜெய்சால்மர். கீமோதெரபியால் கொட்டிய தலைமுடி மீண்டும் வளரத் தொடங்கியிருந்தது. களைப்பு முற்றிலும் நீங்கவில்லை. தேர்தல் ஆணையக் கருத்தரங்கிற்காக டில்லிக்கு வெளியே முதல் பயணம். என் மனைவியும் உடன் வந்திருக்கிறார்.
‘குறும்பொறை உணங்கும் ததர்வெள் என்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்…’
(அகநானூறு: 245)
‘பாலை நிலத்தில் பசி தாங்க முடியாத ஒட்டகம் அங்கே சிதறிக்கிடக்கும் விலங்குகளின் வெள்ளை எலும்புகளைத் தின்று பசியாறியது’ என்று காட்சிப்படுத்தும் சங்க இலக்கியப் பாடல் என்னைக் குடைந்துகொண்டே இருந்தது. இப்போது இங்கே என்னை இழுத்து வந்திருக்கிறது. மதுரை இளநாகனார் ஏன் தேவையின்றி எழுதப்போகிறார்? எழுதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் ஓர் ஒட்டகம் ஒருவனை இப்படி உலுக்குமா? பிகாநேரில் (Bikaner) உள்ள தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையத்தைத் தொடர்புகொண்டேன். பதில் இழுவையாக இருந்தது.
‘தி நியூஸ்’ (The News) என்ற பாகிஸ்தான் நாளிதழில் 2018 அக்டோபர் 18 தேதியிட்ட ஒரு செய்தி; எனது கேள்விக்கான விடை. சிந்து மாகாணத்தில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை இனப்பெருக்கத்துறையின் தலைவர் டாக்டர் பெர்ஷோத்தம் கத்ரி சொல்கிறார். “அச்சோர் தார்ப் பாலைவனப் பகுதியில் கடும் வறட்சியால் தாவரங்கள் கருகிப்போய்விட்டன; பசிக்கொடுமை தாங்காமலும் உடம்பில் பாஸ்பேட் பற்றாக்குறையாலும் பாலைவன ஒட்டகங்கள் செத்த விலங்குகளின் எலும்பைத் தின்னுவது அதிகமாகிவிட்டது.” இவ்வாறு ஒட்டகம் போன்ற விலங்குகள் எலும்பு தின்னும் பழக்கத்திற்கு ஆஸ்டியோபேஜி (Osteophagy) என்று பெயர். சிந்துவெளி விட்ட இடத்தையும் சங்க இலக்கியம் தொட்ட இடத்தையும் புலன்விசாரிக்கும் எனக்குச் சிந்து மாகாணத்திலிருந்து கிடைத்த விடை. ஒட்டகம் எலும்பு தின்னும்!

ஆனால், ஒட்டகம் எலும்பு தின்னுமா தின்னாதா என்பது மட்டுமல்ல எனது தேடல். ஒட்டகம் பற்றிய இந்த உன்னிப்பான கவனிப்பு சங்க இலக்கியத்திற்குள் எப்படி நுழைந்தது? ஒட்டகம் எலும்பு தின்பது பற்றி எந்த வடமொழி இலக்கியமும் மூச்சு விடவில்லை. தென்னிந்தியாவில் பாலைவனம் இல்லை; வணிகர்களின் சுமைகளைத் தூக்கி, கொலைப்பசியுடன் நடக்கும் பாலைவன ஒட்டகம் நாம் அறிந்த தற்காலத் தமிழ் நிலப்பரப்பில் எப்படி சாத்தியம்?
மண்ணிலோ மலையிலோ மரங்களிலோ இல்லை மனிதர்களின் மீள் நினைவு. மனசில் இருக்கிறது. வாய்மொழி இலக்கியத்தைக் கால நில வெளிகளினூடாகக் கடத்தும் கால்வாய்கள் கால்நடையாய் நடந்த மனிதர்களின் வாய்கள்.
சிறுபாணாற்றுப்படையில் இன்னொரு காட்சி. கடற்கரையில் அலையில் ஒதுங்கிய அகில் மரக்கட்டைகளை தூரத்திலிருந்து பார்க்கும்போது படுத்துத் தூங்கும் ஒட்டகம்போல இருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே செல்கிறது தொல்காப்பிய மரபியல். ஒட்டகத்தின் ஆண்பால், பெண்பால், இளமைப் பெயர்களுக்கு இலக்கணம் வகுக்கிறது. ஓர் உயர்தனிச் செம்மொழியில், மாற்றருஞ் சிறப்பின் மரபியலில் இலக்கணமாக இடம்பெற எத்தனை காலத்து ஒட்டக உறவு தேவைப்படும்? இந்த ஒட்டக நெருக்கம் தமிழ்த்தொன்மங்களில் நேர்ந்த நிலம் எது? காலம் எது?
சங்க இலக்கியப் பாலைத்திணைப் பாடல்கள் பற்றித் தனி ஆய்வுகள் நடந்துள்ளன. தொல்காப்பியத்தில், சங்க இலக்கியத்தில் ஒட்டகம் இருப்பதைக் கவனித்தும் அமைதியாகத்தானே நடந்து கடந்திருக்கிறது ஆய்வுலகம். தாவர உண்ணியான ஒட்டகம் தின்றது வெள்ளை எலும்பு போன்ற வெள்ளை மலர்கள் என்றுகூட விளக்கம் கொடுத்துவிட்டார்களே இணையத்தில். நீ ஏன் தூங்க மறுக்கிறாய் என்று எனக்கு நானே எத்தனை முறை சொல்லிப்பார்த்திருக்கிறேன். கேட்டால்தானே!
சிறுவயதில் எனக்குத் தெரிந்த ஒரே சுற்றுலாத்தலம் அழகர்கோயில். குலதெய்வம் பதினெட்டாம்படி கருப்பசாமியைக் கும்பிட குடும்பத்தோடு போவோம். பள்ளிச்சுற்றுலாவும் அலுக்காமல் அங்கேதான். அழகர்கோயில், பழமுதிர்சோலை என்பதெல்லாம் இயல்பாக இருந்தது. ஆனால் ‘நூபுர கங்கை’ என்ற பெயர் ‘நூதனமாக’ இருந்தது. ஒட்டவில்லை. குழப்பத்துடன் திரிந்தேன் - அது பரிபாடல், சிலப்பதிகாரம் சொல்லும் சிலம்பாறு என்று பின்னொருநாள் அறியும்வரை. நூபுரம் என்றால் சிலம்பு, கங்கை என்றால் ஆறு! கேரளத்தில் பன்னி ஆறு, பெரியகுளத்தில் வராக நதி. நாம் மொழிபெயர்க்கப்பட்டவர்கள்.
பஃறுளி எங்கே? ‘வாயில்’ என்பதன் மொழிபெயர்ப்பா கபாடபுரம்? திரிவேணி ஆகாமல் எப்படித் தப்பியது முக்கூடல்? இப்படித் துரத்திய கேள்விகள் எத்தனை?
கேள்விகள், விடைகள் இவையிரண்டில் கேள்விகளுக்குத்தான் முதல் மரியாதை. முதலில் பிறந்ததால் மூத்தது என்பதால் இல்லை. விடை தெரியாமல் வாழ்ந்துவிடலாம். கேள்விகள் இல்லாத வாழ்க்கையில் உப்புச்சப்பே இருக்காது.
இப்படித்தான் இமயமலையின் உயரங்களில் நரந்தை என்ற நறும்புல் தின்ற கவரியைப் பற்றித் துல்லியமாய்ச் சொல்கிறது சங்க இலக்கியம் (புறம் 132; பதிற்றுப்பத்து 11). நான் காஷ்மீர்த் தேர்தலின்போது இதுபற்றி விசாரிக்கிறேன். நறும்புல்லின் விவரம் தேடி டில்லியில் இந்தோ- திபெத் நூலகத்தில்.
காளிதாசனும் கண்டறியாத கவரி பற்றிய துல்லியம். இந்த நறும்புல்தான் கவரியின் (Yak) பாலை நறுமணமாக்குகிறதாம். அதனால்தான் யாக் தேநீர் மணக்கிறது. என்னத்த சொல்ல! நாம் அண்மையில் கூடக் கவரியை ஒரு மான் என்று கருதி ‘கவரிமான்’ படம் எடுத்தோம்.
இருங்கழிப் பெருஞ்சுறா (Whale Shark) கடித்துக் காயப்படுத்தியதால் நொண்டி நடக்கிறது வண்டியில் பூட்டிய அத்திரி என்ற கோவேறு கழுதை. (அகநானூறு 120). காட்டுக் கழுதைகள் வசிக்கும் ஒரே இடம் குஜராத்தின் கட்ச் பகுதிதான். சிந்துவெளி முத்திரையில் (M- 290) இடம்பெறும் காட்டுக்கழுதை பற்றிய கட்டுரை எழுதியுள்ளார் அஸ்கோ பர்போலா. இருங்கழிச் சுறா இனப்பெருக்கம் செய்யும் பகுதியும் இந்தக் குஜராத் கடற்கரைதான். அத்திரியின் காலைச் சுறா கடித்திருக்கும் இயற்கைச் சூழல் எதுவென்ற புரிதலுக்காகச் செலவழித்த நாள்கள் எத்தனை? சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்ற எனது முன்மொழிவு ஓர் இரவில், ஒரு தரவில் முளைத்தது அல்ல.

இதோ வைகைக் கரையில் பழைய பகடைகளை உருட்டிவிட்டிருக்கிறது கீழடி. பகடை நடந்த பாதையில் புது வெளிச்சம். பாரதம் உருட்டிய இதிகாசப் பகடைதான் பழம்பெரும் பகடை என்று காலம் காலமாய் நிலவிய கருத்தை 1924-இல் புரட்டிப் போட்டது சிந்துவெளிப் பண்பாடு. பகடையின் முதல் முகவரி மொகஞ்சதாரோ. ஹரப்பாவில் செம்புரைக்கல்லிலும் (Sandstone) சுட்ட களிமண்ணிலும் செய்த பகடைகள். குஜராத்தின் லோத்தலிலும்கூட. ஆறு பக்கம் புள்ளிகள் கொண்ட அறுகோணப் பகடைகளின் (cubic dice) அகரம் எதுவென்று அடையாளம் தெரிந்தது.
பண்டைய இந்தியாவின் பகடை விளையாட்டு பற்றி டி.என்.ரே (1939) தெளிவாக விளக்குகிறார். சிந்துவெளிப் பகடை விளையாட்டு வேத கால பகடை விளையாட்டிற்கு முந்தையது; முற்றிலும் மாறுபட்டது என்கிறார். “வேதகால மக்கள் பிபிதகா என்ற தான்றிக் கொட்டைகளை (Terminalia Bellirica) பகடைக் காய்களாகப் பயன்படுத்தினார்கள். சாலகா என்று ‘நாரத ஸ்மிருதி’ கூறுவது தந்தத்தால் செய்யப்பட்ட நாற்கோணப் பகடை. பாணினி கூறும் அஸ்கசாலகா ஒரு பகடை விளையாட்டு. பகடை விளையாடும் முறை பற்றி வேத இலக்கியங்களில் மிகவும் குறைவான செய்திகளே கிடைக்கின்றன. பகடை விளையாட்டில் பயன்படுத்தப்படும் பலகை பற்றித் தகவல் எதுவும் இல்லை” என்கிறார் ரே.
சிந்துவெளிக்கும் வேத காலத்திற்கும் இடையிலான இந்த ‘பகடை இடைவெளியை’ புரிந்துகொள்ளாமல் இந்தியப் பண்பாட்டு வரலாற்றை உருட்டுவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பது. வரலாற்றுக்காலத்தைப் பொறுத்தவரையில் மத்திய இந்தியாவிலும், தக்காணப் பீடபூமியின் வடக்குப் பகுதியிலும் கங்கைச் சமவெளியிலும் வடமேற்குப் பகுதியிலும் (தட்சசீலம்) எலும்பாலும், தந்தத்தாலும் செய்யப்பட்ட பகடைகள் கிடைத்தன. கனசெவ்வகப் பகடைகள் அரிதானவை. சுடுமண்ணால் செய்யப்பட்ட சில கனசெவ்வகப் பகடைகள் குஷானர் காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட கால அடுக்குகளில் சில இடங்களில் கிடைத்துள்ளன.
சிந்துவெளிப் பண்பாட்டுப் பகடை விளையாட்டில் இரண்டு பகடைக் காய்கள் இணையாக உருட்டப்பட்டனவா அல்லது ஒரு பகடை மட்டும்தான் பயன்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆயினும் மொகஞ்சதாரோவின் DK பகுதியில் அருகருகே, மிக நெருக்கமான இரண்டு இடங்களில் துல்லியமான ஒரே அளவான பகடைகள் கிடைத்துள்ளன. இதனால் இரு பகடைகளை ஒருசேர உருட்டினார்கள் என்பது அனுமானம். ஆனால் அதற்கான விடை சங்க இலக்கியத்தில் இருக்கிறது என்பது யாருக்குத் தெரியும்?
வல்லு எனப்படும் பகடை தொடர்பான கலைச் சொற்களின் புணர்ச்சி விதிகளுக்குப் போகிற போக்கில் இலக்கணம் சொல்கிறது தொல்காப்பியம். அதனால் வல்லப்பலகை; வல்ல நாய் போன்ற சொற்களை அறிகிறோம். பகடை ஆடும் போது நகர்த்தும் காய் (Games Man) வல்ல நாய் என்று அழைக்கப்பட்டது. இன்று வரை தாயக்கட்டை விளையாட்டில் இந்த ‘நாய்’ நகர்கிறது.
மக்கள் புலம்பெயர்ந்ததால் கைவிடப்பட்ட ஊரின் பாழடைந்த மன்றத்தில் வல்லப்பலகை வனப்பிழந்து சிதைந்து கிடக்கிறது (அகநானூறு 377). சங்குகளில் துளையிட்டும் பகடைகள் செய்யப்பட்டன (அகம் 135) தாமப்பல் கண்ணனார் என்ற புலவர், சோழ மன்னன் நலங்கிள்ளியின் தம்பியான மாவளத்தானுடன் பகடை விளையாடினார் (புறம் 43). ஆனால் பகடை உளவியலின் உச்சக்கட்டப் படப்பிடிப்பு கலித்தொகையில் (136). பகடை நுட்பங்களை நூல்பிடித்து அளக்கும் காதல் கவிதை.
காதலன், காதலி சந்தித்துக்கொள்ளும்போது ஏற்படும் மகிழ்ச்சி; தாமதத்தால் நேரும் வருத்தம் ஆகிய உணர்வுகளைப் பகடை விளையாட்டில் விரும்பிய எண் பெறுதல்; வேண்டிய எண்ணை மீண்டும் பெறுதல்; பத்து என்ற எண் தரும் பெருமகிழ்ச்சி; சிறு எண் பெற்றவனின் துயரம்; பந்தயம் கட்டிக் கைக்காசை இழந்தவனின் வலி ஆகிய உணர்வுகளோடு ஒப்பிடும் செவ்வியல் இலக்கியம் வேறெங்கும் இருக்கிறதா? நான் அறிந்தவரையில் இல்லை.
இந்தப் பாடலில் வரும் பத்து உருவம், வித்தாயம், மறுவித்தம், சிறுவித்தம் போன்ற கலைச் சொற்களுக்கான பொருளைக் கடின உரையில் தொடங்கி எளிய உரை வரை தேடித்தேடிப் படித்தேன். ‘பத்து உருவம்’ என்ற சித்திரிப்புக்குத் தெளிவான விளக்கத்தை யாரும் அளிக்கவில்லை. ஏனெனில், அது உரையாசிரியர்கள் அறியாத அறுகோண கனசதுரப் பகடை. அப்போது ஹரப்பாவும் இல்லை; கீழடியும் இல்லை.
இரண்டு கனசதுரப் பகடைகளை உருட்டிப் போட்டால்தான் பத்து என்ற எண் சாத்தியம். இரண்டு பகடைகளிலும் ஐந்து, அல்லது ஒரு பகடையில் ஆறு இன்னொன்றில் நான்கு என்று விழுந்தால் மட்டுமே பத்து உருவம் கிடைக்கும். மொகஞ்சதாரோ, ஹரப்பா பகடைகளின், லோத்தலில் கிடைத்த ஹரப்பா கால பகடையின் படத்தைப் பார்த்திருக்கிறேன். அதனால் கலித்தொகையின் மீள்வாசிப்பில் எனக்குள் மின்னல் வெட்டியது சிந்துவெளி கனசதுரப் பகடை. ஆனால் அகழாய்வுத் தடயம்? இதோ வாராது வந்த மாமணியாய் கீழடி!
கீழடியில் இதுவரை மூன்று கனசதுரப் (அறுகோண) பகடைகள் ஒரு செவ்வகப் (நாற்கோண) பகடை கிடைத்துள்ளன. இரண்டு கனசதுரப் பகடைகள் சுடுமண்ணால் ஆனவை; செவ்வகப் பகடை தந்தத்தால் ஆனது.
ஒன்றுக்கு எதிராக ஆறு; இரண்டுக்கு எதிராக ஐந்து; மூன்றுக்கு எதிராக நான்கு. இதுதான் லோத்தலில் கிடைத்துள்ள ஹரப்பா பண்பாட்டுக் கால கனசதுரப் பகடையின் எண் நிரல் வரிசை. கீழடியிலும் அதே நிரல் வரிசையில் ஒரு பகடை. சிந்துவெளிப் பகடை, சங்க இலக்கியப் பகடை, கீழடிப் பகடை ஆகிய மூன்றும் கைகோத்து நின்று கண்சிமிட்டுகின்றன.
கட்டுக்கதைகள் வரலாறானால் காலண்டர்கள் எதற்கு? கற்பனைக்குத் தேவையில்லை கரிமக் கணக்கு. ஆனால் உண்மைக்குத் தேவை எப்போதும் ஓர் உரைகல். தரவுகள் போன்ற ஊக்கம் வேறில்லை. புரிதலைப் போன்ற ஆக்கம் வேறொன்றுமில்லை.
உண்மை வரலாறு யாரும் யாருக்கும் எழுதும் உயில் அல்ல, உரிமை. சிந்துவெளியிலிருந்து இறங்கி, சங்க இலக்கியத்தில் புழங்கி, கீழடியில் உருள்கின்றன கனசதுரப் பகடைகள்.
- பயணிப்பேன்
- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது