மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 37 - பசிப்பிணி மருத்துவம்

ஐந்து ரூபாய் விலையில் உணவளிக்கும் “ஆகார்” மையங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐந்து ரூபாய் விலையில் உணவளிக்கும் “ஆகார்” மையங்கள்

பசியைவிடக் கொடுமையான, பரவலான நோய் வேறெதுவும் இருக்கிறதா?

2020 மே 3. கொரோனா ஊரடங்கின் 40வது நாள். வெளிமாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவியாய்த் தவிக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடையாய் எளிய குடிமக்கள். மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோ நோக்கிச் செல்கிறது ஒரு கான்கிரீட் கலவை இயந்திர வாகனம். இந்தூர் எல்லையில் சோதனையிடுகிறார்கள் காவல் துறையினர். அதிர்ச்சி. கலவை இயந்திரத்திற்குள் பதுங்கிப் பயணம் செய்யும் 18 தொழிலாளர்கள். சுட்டெரிக்கும் வெயில். வெப்பநிலை 40 டிகிரி. எப்படித் துணிந்தார்கள்?

“இந்தக் கலவை இயந்திரத்திற்குள் 18 பேர் எப்படி… வெப்பமாக இல்லையா” என்று வியப்புடன் கேட்கிறார் ஓர் ஊடகவியலாளர். “பசியைவிட இந்த வெப்பம் கொடுமையாக இல்லை” என்று பதில் சொல்கிறார் மனோஜ் யாதவ் என்ற தொழிலாளி. பொட்டில் அடித்தது போல் இருக்கிறது. அன்றிரவு சாப்பிடும்போது இனம்புரியாத குற்ற உணர்வு.

‘நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்’, ஒருவன் நெருப்புக்குள்கூடப் படுத்துத் தூங்கிவிட முடியும். ஆனால் வறுமை படுத்தும்பாட்டில் கண்மூடித் தூங்குதல் இயலாது (குறள் 1049). ‘ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி… அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி’ (புறம் 371) என்று சங்க காலத்தில் வயிற்றில் பசியுடன் நடந்ததுபோலவே இன்றும் நடக்கிறார்கள். பசி ஒரு பழைய நோய். உலக நோய். இன்றும் தொடர்கிறது. பசியைவிடக் கொடுமையான, பரவலான நோய் வேறெதுவும் இருக்கிறதா?

அரிசி
அரிசி

மே 21. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் அடிபட்டுக்கிடந்த நாயின் மாமிசத்தைத் தின்கிறார் ஒருவர். கொரோனா காலத்துக் கொலைப்பசி.  என்ன கொடுமை இது. ‘பரந்து கெடுக உலகியற்றி யான்’ என்று சபித்த வள்ளுவனும் ‘ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று முழங்கிய பாரதியும். காலமும் களமும்தான் மாறியிருக்கிறது. எதார்த்தம் இன்னும் நெருப்பாய்ச் சுடுகிறது.

புறநானூற்றின் 173ஆம் பாடலில் பசிப்பிணி மருத்துவன் இல்லம். படுக்கப்போட்டு மருந்து கொடுக்கும் மருந்தகம் அல்ல; உட்காரவைத்து உணவளிக்கும் உணவகம். பசிப்பிணிக்கு ஒற்றை மருந்து உணவுதான். பண்ணன் ஒரு சிறுகுடித் தலைவன். அதனால் என்ன, வேள்பாரி என்ன பெருவேந்தனா? கடையெழு வள்ளல்களில் யார் பேரரசன்? பசியுடன் வருவோர்க்கெல்லாம் தவறாமல் உணவளிப்பவன் பண்ணன். அதனால் அவன் வீடு பசிப்பிணி மருத்துவன் இல்லம். பசிப்பிணி மருத்துவம் என்பது வேறொன்றுமில்லை. பகிர்தல் அறம்; பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் திறம்.

தமிழிலக்கியத்தில் வரவர `பசி’ குறைந்துவிட்டது. அது எப்படி சாத்தியம்! சங்க இலக்கிய காலத்தில் வறுமை இருந்தது; இடைக்காலத்தில் எல்லோரது வயிறும் நிரம்பிவிட்டதா? இல்லை. பசி பற்றிய நமது பார்வை மாறிவிட்டதோ?!

மனுநீதிச் சோழன் கூற்றாக `மனுமுறை கண்ட வாசகத்தில்’ வள்ளலார் பேசுகிறார்.

‘குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!’


ஒருவகையில் நமது கூட்டுச் சிந்தனைக்கு எதிரான குற்றப்பத்திரிகை அது. அதனால்தான் வடலூரில் அணையாது எரிகிறது அடுப்பு.

 18 பேர் பயணம் செய்த கலவை இயந்திரம்
18 பேர் பயணம் செய்த கலவை இயந்திரம்

2002 நவம்பர் 21. தலைமைச் செயலரின் அறையில் நான். மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையர் பொறுப்பில் இருந்தேன். பி.யூ.சி.எல் தொடர்ந்த பொதுநல வழக்கில் (வழக்கு எண் 196/2001) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க  தீர்ப்பை வழங்கியிருந்தது உச்ச நீதிமன்றம். ‘உணவு என்பது மக்களின் உரிமை’ என்பதே தீர்ப்பின் சாரம். ‘பட்டினியால் எவரும் சாகாமல் காப்பது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை; இனிமேலும் பட்டினிச் சாவுகள் நேர்ந்தால் தலைமைச் செயலர்கள்தான் பொறுப்பு’ என்ற அதிரடித் தீர்ப்பால் அதிர்வலைகள். எனக்கு உள்ளூர மகிழ்ச்சி.

1980களில், 90களில் ஒடிசாவில் பட்டினிச்சாவுகள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வரும். ‘அது பட்டினிச் சாவு அல்ல; ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்பட்ட நோயின் பாதிப்பு’ என்று அறிக்கை வரும். அறிக்கை தவறென்றும் சரியென்றும் அரசியல் நடக்கும். பசிப்பிணி போக்கும் அதிகாரத்தை ஏற்கெனவே பரவலாக்கியிருந்தது ஒடிசா அரசு. யாரேனும் உணவின்றிப் பட்டினி கிடந்தால் அந்த ஊரின் ஊராட்சித்தலைவர் வேறு யாரிடமும் அனுமதி கோராமல் பத்து நாள்களுக்கான உணவுப்பொருள்களை வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த உதவியை ஒரு மாதம் வரை சார் ஆட்சியரும் இரண்டு மாதம் வரை மாவட்ட ஆட்சியரும் நீட்டிக்கலாம். இதையும் தாண்டி அவ்வப்போது பட்டினிச் சாவு பற்றிய பத்திரிகைச் செய்திகள்.

பகிர்தலுக்கான அதிகாரத்தைப் பரவலாக்குவது மட்டுமே இதற்கு விடை என்று தலைமைச் செயலரிடம் சொன்னேன். “அதைத்தான் ஏற்கெனவே செய்துவிட்டோமே” என்றார். “அது பட்டினி கிடப்பவருக்குத் தெரியாது; உணவுப்பாதுகாப்பு ஒரு இலவசச் சலுகை அல்ல; வாழ்தலுக்கான உரிமையின் உள்ளீடான உரிமை என்ற விழிப்புணர்வு வெளிச்சம் பெறவில்லை” என்றேன்.

அடித்தால் யாருக்கு வலிக்கும் என்பதும், இழுத்துப் பிடித்தால் யாருடைய கழுத்தைக் கயிறு இறுக்கும் என்பதும் தெளிவாக இல்லையென்றால் அரசு இயந்திரம் அலுப்பு எடுக்கும். நிலைநாட்டப்படும் வரை `நீதி’ என்பது இன்னொரு சொல்தான்.

தலைமைச் செயலரிடம் கலந்துரையாடித் திரும்பியதும் எனது மடிக்கணினியில் ஒரு விரிவான ஆணையைத் தட்டச்சு செய்கிறேன்.

இதுவரை எனது பணியில் நான் கைப்பட எழுதிய முக்கியமான கடித வரைவுகளில் இதுவும் ஒன்று. தலைமைச் செயலர் கையொப்பமிட்ட இந்தக் கடிதத்தின் புகைப்பட நகல் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டுதான் எழுதுகிறேன் இந்தக் கட்டுரையை.

‘மக்கள் நலம்தான் மக்களாட்சி முறையின் ஆதார சுருதி. குடிமக்கள் அனைவருக்கும்  உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் தார்மிகப் பொறுப்பு (moral responsibility). இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் நமது மாநில அரசின் கடப்பாடு, அர்ப்பணிப்பு ஐயத்திற்கு அப்பாற்பட்டது’ என்று தொடங்குகிறது இந்தக் கடிதம்.

தொழிலாளர் எக்ஸ்பிரஸ். பச்சைக்கம்பள வரவேற்பு
தொழிலாளர் எக்ஸ்பிரஸ். பச்சைக்கம்பள வரவேற்பு

‘‘ஒவ்வொரு மாதமும் 2ஆம் தேதியும் 17ஆம் தேதியும் 3 மணிக்கு ஊராட்சி அளவில் வார்டுவாரியாக அனைவரது உணவுப்பாதுகாப்பு; ஆதரவற்றோரது நிலைமை பற்றி விவாதித்துப் பின்னூட்டப் படிவத்திலுள்ள வினாக்களுக்கு விடையளித்து ஊராட்சித்தலைவர்; விரிவாக்க அதிகாரி கையொப்பமிட்டுச் சான்றிதழ் அளிக்கவேண்டும். 3, 18 தேதிகளில் 2 மணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்; அதே நாள்களில் 5 மணிக்கு சார் ஆட்சியர் அளவில் இதே கேள்விகளுடன் கலந்தாய்வு நடக்கும். 4, 19 தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக பேரிடர் மேலாண்மை ஆணையரான எனக்கு முப்பது ஆட்சியர்களிடமிருந்து பின்னூட்ட அறிக்கையும் உறுதிச்சான்றும் வரவேண்டும். 5, 20 தேதிகளில் 3 மணிக்குள் தலைமைச் செயலருக்கு நான் அறிக்கை அளிப்பேன். கலந்தாய்வு செய்து அறிக்கை தரும் ஒவ்வொரு அதிகாரியும் `நான் அறிந்தவரையில் இந்தத் தகவல் உண்மை என்று சான்றளிக்கிறேன்’ என்று எழுதிக் கையொப்பமிட வேண்டும். கடைசியில் இப்படி நானும் சான்றிதழ் அளித்துக் கையொப்பமிடுவேன்.”

இந்தப் பின்னூட்டச் செயல்திட்டத்துடன் தலைமைச் செயலரும் நானும் மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்து ஒப்புதல் பெற்றோம். பத்து நாள் வரை பசிப்பிணி தீர்க்கும் முதல்கட்டப் பொறுப்பும் அதிகாரமும் ஊராட்சித் தலைவர் / விரிவாக்க அதிகாரியின் கூட்டுப்பொறுப்பு என்று கிராமத்துச் சுவர்களில் சுவரொட்டி ஒட்டினோம். பொறுப்பு பற்றிய புதிய புரிதலுடன் களத்தில் இறங்கியது அரசு இயந்திரம். இப்போது பட்டினிச் சாவுகள் பழைய கதை. நெல் உற்பத்தியில் உபரி நிலை; இந்தியாவில் மூன்றாவது இடம். குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் கிலோ ஒரு ரூபாய் விலையில் மாதம் ஐந்து கிலோ அரிசி. ஐந்து ரூபாய் விலையில் ஆங்காங்கே வேண்டிய அளவு உணவளிக்கும் ‘ஆகார்’ மையங்கள். தினமும் ஒரு லட்சம் பேர் உணவருந்துகிறார்கள். மகளிர் தன்னுதவிக் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்களுடன் சேர்ந்து அரசு நடத்தும் இந்த ‘ஆகார்’ மையங்கள் மட்டுமல்ல, சமையல் கூடங்களும் ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்றவை.

அமர்த்தியா சென் கூறுகிறார். “பசி என்பது மக்களில் சிலர் உண்பதற்கு உணவில்லாமல் இருப்பதாகும். ஆனால் அங்கு மக்கள் சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்பது அதன் பொருளில்லை.” ஆமாம். வயல்களுக்கும் வாய்களுக்கும்; கடைகளுக்கும் கைகளுக்கும் எவ்வளவு தூரம்! இந்தியாவில் தாது வருடப்பஞ்சத்தில் (1876-78) லட்சக்கணக்கில் மக்கள் மடிந்தபோதும் கிடங்குகளில் தானியங்களைப் பெருச்சாளிகள் தின்றன. சரக்கு ரயில்களும், தானிய ஊகவணிகமும், புதிய பணப்பயிர்களும், உள்ளூர்ச் சந்தைகளின் நலிவும் சேர்ந்து செய்த சேதாரம். வங்காளப் பஞ்சத்தின் (1943) சோகக்கதையும் இதுதான். இப்போதும்கூட பாதி உலகம் பெருந்தீனி கொடுக்கும் நோய்களின் கவலையில். மீதி உலகம் ரத்தச்சோகையில், சத்துணவின்றி குழந்தைகள் சவலையில்; விநியோக விபரீதம்!

ஒடிசா திரும்பிய‌ புலம்பெயர் பணியாளர்
ஒடிசா திரும்பிய‌ புலம்பெயர் பணியாளர்

‘அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி’ (குறள் 226) என்று உபரியை பசித்தவன் வயிற்றில் பாதுகாக்கச் சொன்ன திருக்குறள் ஒரு பொதுவுடமைக் குரல். விநியோக அற வெளிச்சம். ஏழைகளின் வயிறு வள்ளல்களின் ஏம வைப்பகம் (Savings Bank) என்பது பாவாணர் சொன்ன பதவுரை.

2020 மே - ஜூன். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒடிசா திரும்பினார்கள். கைவிடப்பட்ட கையறு மனநிலை அந்தத் தொழிலாளர்களின் மனதில் தோன்றக்கூடாதென்று ஆணையிட்டார் முதல்வர். புலம்பெயர் தொழிலாளர்களை இரண்டுவாரம் முறைப்படி தனிமைப்படுத்த 16,669 தற்காலிக மருத்துவ முகாம்கள். ஊராட்சித் தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்களின் சில அதிகாரங்கள். பரிசோதனை முதல் அனைத்து மருத்துவ வசதிகளும் அனைவருக்கும் இலவசம்.

குறியீடுகள் முக்கியமானவை. உடல்மொழிதான் உரத்த சொல். இதோ கேரளாவிலிருந்து `தொழிலாளர்கள் எக்ஸ்பிரஸ்’ வந்து நிற்கிறது. ரயில் நிலைய நடைபாதையில் பச்சைக்கம்பளம். தூண்களில் பலூன்கள். வாசலில் மருத்துவர்கள், தயாராக உணவுப்பொட்டலங்கள், ஊருக்கு அழைத்துச் செல்ல பேருந்துகள், வாகனங்கள். மாநிலம் முழுவதும் பசிப்பிணி மருத்துவம். ‘சில ஆண்டுகள் பாலங்கள் கட்டாவிட்டாலும் சாலைகள் போடாவிட்டாலும் பரவாயில்லை. ஒவ்வொரு உயிரும் முக்கியம்’ என்று உயரதிகாரிகளின் அன்றாடக் கலந்தாய்வில் தெளிவாகச் சொன்னார் முதல்வர்.

ஐந்து ரூபாய் விலையில் உணவளிக்கும் “ஆகார்” மையங்கள்
ஐந்து ரூபாய் விலையில் உணவளிக்கும் “ஆகார்” மையங்கள்

பிறமாநிலத் தொழிலாளர்கள் ஒடிசாவின் நெடுஞ்சாலைகளை நடந்து கடக்கும் அவலம் நேரக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தோம். எல்லையில் வரவேற்று, உணவளித்து, மருந்துகள் கொடுத்து பேருந்துகளில் ஜார்கண்ட், சத்திஸ்கர், மேற்கு வங்காள எல்லைகளில் இறக்கிவிட்டோம்.

எதுவும் எப்போதும் மாறாதெனில் வண்ணத்துப் பூச்சிகளே இருக்காது என்று சொன்னது யாரென்று தேடித் தேடிப்பார்க்கிறேன். அடிப்படையான உண்மையை யார் சொல்லியிருந்தால் என்ன?

ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் சென்னையில் நூலகத்தில் குடியிருக்க ஆசைப் பட்டேன். ஆனால் இப்போதும் ஒடிசாவில். நல்லதுதான்.  இல்லையென்றால் இந்தப் பெருந்தொற்றுப் பணிகளை சென்னையில் விட்டத்தை வெறித்தபடி வேடிக்கை பார்ப்பது எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்.

அடிக்கடி நான் அசைபோடும் மீள்நினைவு. “உனக்குப் பொதுவாழ்க்கை என்றால் ரொம்பவும் பிடிக்குமோ” என்று அந்த நள்ளிரவில் (1973, மே) பெருந்தலைவர் காமராஜர் கேட்டது. ``ஆமாம்” என்று வார்த்தையில் சொன்னேனா, அல்லது வெறுமனே தலையை ஆட்டினேனா என்று நினைவில் இல்லை.

இந்த ‘மைதானம்’ எவ்வளவு சாத்தியங்கள் நிறைந்தது. நான் பொதுவாழ்க்கையில்தான் இருந்திருக்கிறேன். அப்போதும், அதன் பிறகும், இப்போதும்.

இந்த 37 ஆண்டுக்கால ‘பொதுவாழ்க்கை’ எனக்குப் பிடித்திருக்கிறது.

- பயணிப்பேன்

****

தமிழ் இலக்கியப் பரப்பில் பசி, பட்டினி என்ற சொற்களின் பயன்பாட்டைப் பட்டியலிட்டால் சில புரிதல்கள் துலங்கும். (நன்றி- முனைவர் ப. பாண்டியராஜா http://tamilconcordance.in/index.html)

பசி: தொல்காப்பியம் 1; சங்க இலக்கியம் 67; திருக்குறள் 5; சிலப்பதிகாரம் 1; மணிமேகலை 38, சீவக சிந்தாமணி 2, வளையாபதி 1, குண்டலகேசி 0, கம்பராமாயணம் 12; மூவர் தேவாரம் 6; திருவாசகம் 1; பெரியபுராணம் 15; நாலாயிர திவ்ய பிரபந்தம் 5, திருப்புகழ் 17; தேம்பாவணி 21, சீறாப்புராணம் 24.

பசிப்பிணி: சங்க இலக்கியம் 1; சிலப்பதிகாரம் 1, மணிமேகலை 5; கம்பராமாயணம் 1.

பட்டினி: சங்க இலக்கியம் 1; சிலப்பதிகாரம் 1, சீவகசிந்தாமணி 2, மூவர் தேவாரம் 2, நாலாயிர திவ்ய பிரபந்தம் 1.

தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ‘பசி’ என்ற தலைப்பில் பல நூல்கள் (க.நா.சுப்ரமண்யம், இந்திரா பார்த்தசாரதி, கே.ஜி. இராதாமணாளன், வந்தனா அலமேலு) வெளிவந்துள்ளன. ‘பஞ்சும் பசியும்’ (தொ.மு.சி ரகுநாதன்); `பசியின் கொடுமை’ (கம்ப தாசன்); ‘பசித்த மானிடம்’ (கரிச்சான் குஞ்சு); `பசித்த பொழுது’ (மனுஷ்ய புத்திரன்); ‘பசித்த மனம்’ (கே.ஜெயலெட்சுமி) ‘அலமேலுவின் அசுரப்பசி’ (ஜெயா பரமசிவம்) ‘பசித்த தலைமுறை’ (மொழிபெயர்ப்பு - இந்திரன்); ‘பசியா பாசமா’ (ஜெ. ஹாரிஸ்) ஆகிய நூல்கள் நினைவுக்கு வருகின்றன.