மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 38 - சிறகுக்குள் வானம்

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

ஒவ்வொரு முறையும் நான் வீழ்ந்து எழும் போதெல்லாம் எனது கைகளில் அந்தக் கேடயம்.

21 ஆண்டு இடைவெளி, அதைவிடப் பெரிய தயக்கத்தைத் தாண்டி நான் 2012இல் எழுதிய நூலின் பெயர் ‘சிறகுக்குள் வானம்’. மேஜையில் சிறகுக்குள் வானத்துடன் ‘அன்புள்ள அம்மா’ (1991). இந்தக் கட்டுரையை எழுதும் இன்று காலை இப்படி விடிந்தது.

திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியின் ஆங்கில ஆசிரியை மோ. ரூபவதி, தமிழாசிரியை ஆ. பரிமளாதேவியிடம் பேசுகிறேன். சிறகுக்குள் வானத்தை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரின் மனதில் விதைத்து, கொத்துக் கொத்தாகப் பின்னூட்டம் வாங்கி அஞ்சலில் அனுப்பியவர்கள். ஆயிரம் கடிதங்களாவது இருக்கும். முன்னாள் மாணவர்கள் இருவரிடம் பேசவேண்டும் என்றேன். நிவேதிகா, நுஸ்ஹத் கானம் இருவரின் எண்களை அனுப்பினார் ரூபவதி. பேசினேன். எவ்வளவு தெளிவாகப் பேசும், எழுதும் இளையதலைமுறை!

தமிழ் நெடுஞ்சாலை - 38 - சிறகுக்குள் வானம்

“எழுதி, படித்துப் பார்த்து மடித்து வைத்துக் கொள்கிற வகையைச் சேர்ந்தவன் நான்” என்று ‘அன்புள்ள அம்மா’ என்னுரையில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தேன். எனது உதிரிக் கவிதைகளைத் தொகுப்பாக்கி, கவிஞர் மு.மேத்தாவின் அணிந்துரை பெற்று வெளியிட்டவர் நர்மதா ராமலிங்கம்.

1998. கவிதை எழுதுவேன் என்ற தகவல் கசிந்து ஒடியா கவியரங்கத்துக்கு அழைத்தார்கள். நான் மாவட்ட ஆட்சித் தலைவர். ‘எழுதுவதில்லை’ என்பது பற்றி எழுதி வாசித்தேன். ‘ஒரு முன்னாள் கவிஞனின் பனை ஓலை.’

‘இங்கே
நியாயவிலைக் கடையில்
காணாமல் போகும்
ஒவ்வொரு லிட்டர்
மண்ணெண்ணெய்க்கும்
எனது
எத்தனை லிட்டர்
இலக்கியக் கண்ணீர்
ஈடாகும்?’


ஒரு கண்டிப்பான அதிகாரிக்குக் கையில் தடியும் முகத்தில் தாடியும் கட்டாயம் என்று நான் நம்பிய காலம்! இந்திய ஆட்சிப்பணி, இந்தியவியல் ஆய்வு என்ற இரட்டை முன்னுரிமைகளின் இடையில் சிக்கியது எனக்குள் இருந்த படைப்பெழுத்தின் கழுத்து. இது ஓர் இயலாமை. அதை வெளிக்காட்டாமல் என்னிடமிருந்து நான் தப்பிக்க ‘எழுதாதவன்’ வேஷம் போட்டு இருந்தேன் என்பது இப்போது புரிகிறது.

 குன்றக்குடி அடிகளார் சுழற்கேடயம்
குன்றக்குடி அடிகளார் சுழற்கேடயம்

2008 ஜூன். தேர்தல் ஆணைய முகவரிக்கு திருச்சியிலிருந்து எஸ்.ஆர்.வி பள்ளியின் முதல்வர் துளசிதாசன் கணிப்பொறியில் அச்சிட்டு அனுப்பிய அழகிய கடிதம். ‘வடக்கு வாசல்’ இதழில் வெளியான எனது நேர்காணலைக் குறிப்பிட்டு ‘கனவு மெய்ப்பட’ என்ற தலைப்பில் எங்கள் பள்ளியில் பேச வாருங்கள் என்று அழைத்திருந்தார். அறிமுகம் இல்லை. அந்தக் கடிதம் பிடித்திருந்தது. அக்டோபரில், காஷ்மீர்த் தேர்தலைக் கையில் வைத்துக்கொண்டு திருச்சிக்கு வந்தேன். தமிழ் நெடுஞ்சாலை என்பது வேறென்ன; பயணித்த இடங்களும் பழகிய மனிதர்களும்தானே. ஒரு புதிய உறவின் தொடக்கம். அலுக்காமல் அழைப்பார்கள் அடிக்கடி; சலிக்காமல் செல்வேன் எங்கிருந்தாலும். இருவழிப் பாதை. நானும் கற்றேன்.

2011 ஜனவரி. அப்போது நான் சென்னையில் பணிபுரிந்தேன். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், துளசிதாசனுடன் ஒடிசா சென்றேன். எனது பழைய தடங்களில் பயணித்தோம். “பள்ளியில் பேசியதையெல்லாம் நூலாக எழுதுங்கள் அண்ணா” என்றார் துளசி. திடுக்கிட்டு மறுத்தேன். “எழுதும் அளவிற்கு என்னிடம் என்ன இருக்கிறது” என்றேன். “உங்கள் வாழ்க்கை ஒரு புதினம் போன்றது” என்றார் எஸ்.ரா. ஒருநாள் திருச்சியில் இருந்து சென்னைக்கு ஓர் உதவியாளரை அழைத்து வந்து “நீங்கள் சொல்லுங்கள்; தட்டச்சு செய்கிறோம்” என்றார் துளசி.

இரண்டாம் சுற்று நூல் வெளியீட்டு விழா
இரண்டாம் சுற்று நூல் வெளியீட்டு விழா
இரண்டாம் சுற்று நூல் வெளியீட்டு விழா
இரண்டாம் சுற்று நூல் வெளியீட்டு விழா

சென்னைத் துறைமுகக் கழகம் விருந்தினர் விடுதியில் அமர்ந்து பேசினோம். இருந்தாலும் சொந்தக் கதையை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. மனுஷ்யபுத்திரனிடம் அழைத்துச் சென்றார் துளசி. எனது தயக்கத்தைப் பகிர்ந்துகொண்டேன். இரண்டு கட்டுரைகளைப் படித்துப்பார்த்தார். “இது வாடிக்கையான வழிகாட்டி எழுத்து அல்ல! சொந்த அனுபவங்களின் ஊடான உணர்வுகளே இதன் பலம்” என்றார். ‘சிறகுக்குள் வானம்’ முதலில் உயிர்மை பதிப்பாக வெளியானது. பிறகு பாரதி புத்தகாலய பதிப்பாக. ஒன்பது ஆண்டுகளில் இதுவரை 20,000 பிரதிகளுக்கு மேல். நம்ப முடியவில்லை.

எனது மின்னஞ்சல் உள்பெட்டியில் ‘சிறகுக்குள் வானம்’ என்று தட்டச்சு செய்கிறேன். சூர்யாவின் அகரம் அறக்கட்டளை நிர்வாகி அந்தோணிசாமியின் மடல். ‘அன்பு தம்பி, தங்கைகளே’ என்று அகரம் குடும்ப மாணவ மாணவியரை அழைத்து, சிறகுக்குள் வானத்தை அறிமுகம் செய்கிறார். வரிகளை மேற்கோள் காட்டி வாசிக்கத் தூண்டுகிறார். அந்தத் தம்பி, தங்கையரில் சிலர் இப்போதும் என்னுடன் தொடர்பில். 2019 டிசம்பர் 16, Journey of Civilization நூல் வெளியீட்டு விழாவிற்கு அகரம் குடும்பத்து முதலாண்டு மாணவர் எட்டுப் பேரை அந்தோணிசாமி அழைத்து வந்தது கூடுதல் மகிழ்ச்சி.

நிவேதிகா, நுஸ்ஹத் கானம் இருவருடன் பேசியது இந்த நாளுக்கான சிறகு. நிவேதிகா குரலில் எவ்வளவு உணர்ச்சி. மருத்துவக் கல்விக்கான இடம் கிடைக்காத ஏமாற்றம்; பொறியியல் தனக்குப் பொருத்தமில்லை என்ற புரிதல்; வேளாண் துறையில் பட்டம்; விகடன் மாணவ நிருபராக ஓராண்டு இயங்கியதில் நிறைவேறிய அடிமன விருப்பம்; தெலங்கானாவில் தற்போது ஒரு தேசிய வங்கியில் பணி; அடுத்த கட்டப் போட்டித் தேர்வுக் கனவுகள்; தனியாளாய்ப் போராடி வளர்த்து ஆளாக்கிய தாய் என்று பத்து நிமிடத்தில் அவர் கொட்டித்தீர்த்த உணர்வுகள்... உடையும் குரலின் ஊடே சொல் பிசகாமல் சொன்ன சிறகுக்குள் வானம்.

சிறகுக்குள் வானம் முகப்போவியம்
சிறகுக்குள் வானம் முகப்போவியம்

நுஸ்ஹத் கானம். மருத்துவம் படிக்கப் போதுமான நல்ல மதிப்பெண். ஆனால் மனதிற்குப் பிடித்தது சட்டக்கல்வி. ஐந்தாண்டுப் படிப்பு. இப்போது பி.ஏ., எல்.எல்.பி. கல்லூரியில் படிக்கும்போதே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் போராட்ட பூமியில் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு அளிக்கக் களமிறங்கிய தன்னார்வலர்களில் ஒருவர். வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளார். குடிமைப்பணிக் கனவைச் சுமப்பவர். ‘‘சோர்வடையும்போதெல்லாம் கரம் பற்றி வழி நடத்தும் கையேடு சிறகுக்குள் வானம்’’ என்றார். வேறென்ன வேண்டும் எனக்கு? இருவரிடமும் புகைப்படம் கேட்டு வாங்கினேன், விகடனுக்கு அனுப்ப.

2017. ஒடிசாவில் வளர்ச்சித் துறை ஆணையர் பொறுப்பில் தலைக்கு மேல் வேலை. “இன்னொரு நூல்” என்றார் துளசி. தெறித்து ஓடினேன். என் மனைவியைத் தொலைபேசியில் அழைத்து ஆதரவு திரட்டினார். ஒரு நூலை எழுத வைக்க இப்படியெல்லாமா திட்டம் தீட்டுவார்கள்! நாகர்கோவிலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ நூலுக்காக விருது பெற வந்தேன். விழா முடிந்ததும் கோதையாறு சென்றோம். எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, தோழர் நாகராஜன், துளசிதாசனுடன் நான். அருவியில் குளித்த கையோடு இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை. கமலாலயன் ஒடிசா வந்து என்னுடன் 10 நாள்கள் தங்கி உதவினார். மே 20, 2018. எஸ்.ஆர்.வி தமிழ்ப் பதிப்பகம் வெளியீடாக ‘இரண்டாம் சுற்று’. திருச்சியில் விழா. தோழர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிட்டார். ‘இரண்டாம் சுற்றை’ எல்லா வகையிலும் சாத்தியமாக்கிய என் மனைவி சுஜாதா முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். மகிழ்ச்சி.

பிறந்த ஊர் நத்தம், வளர்ந்த ஊர் மதுரை என்றாலும் தத்து எடுத்திருப்பது திருச்சி. பேசவும் எழுதவும் தூண்டும் ‘களம்’ மலைக்கோட்டை மண். ஆனால் எந்தத் தலைப்பில் பேசினாலும் என்னையும் அறியாமல் ‘மதுரைக்காரன்’ பெருமையைப் பேசிவிடுவேன். பேச்சிலும்கூட வைகை வாடை. ‘மதுரையைச் சுற்றிய கழுதை’ என்பது ஒரு வினோத மனநிலை! துளசிதாசன், கவிஞர் நந்தலாலா உரிமையுடன் சொல்கிறார்கள். “இப்போது உங்கள் ஊர் மதுரை அல்ல; திருச்சி!”

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் துணை இயக்குநர் சங்கர சரவணன் இன்னொரு தம்பி. கால்நடை மருத்துவர். ஆனால் கை, கால், தலை, மனசு எல்லாம் தமிழில். சங்கத்தமிழை அப்படியே சாப்பிடும் அட்டகாசன்! ‘விகடன் இயர்புக்’ ஆய்வுக்குழுவின் கௌரவ ஆலோசகர். பலரின் குடிமைப்பணிக் கனவு மெய்ப்பட உதவியவர்; உதவுபவர். டில்லி, புவனேஸ்வரம், சென்னை என்று எங்கு வசித்தாலும் ஆண்டுதோறும் ‘விகடன் இயர்புக்’கில் எனது கட்டுரை. வேலைப்பளுவால் கட்டுரை அனுப்பாமல் தவிர்ப்பேன்; தவிப்பேன். ஆனால் விடாது கருப்பு! ஒருமுறை அவருக்கு எழுதினேன். “அச்சில் பக்கத்தை மிச்சம் வைத்துப் படுத்துகிறாய், உன் நச்சரிப்பால் என் எழுத்தை நடத்துகிறாய்!”

யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்! எனது பணி சார்ந்த பொறுப்புகளில் மூழ்கி தலையை வெளியே எடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாகத் திரியும் என்னை விடாமல் துரத்தி வேலை வாங்கும் இவர்களை என்னுடன் ஒரு கோட்டில் இணைப்பது எது?

எனது எழுத்துகள் அனைத்தையும் டிராட்ஸ்கி மருதுவின் தூரிகை அதன் இயல்பில் வாசிக்கிறது; ஒரு கூடுதல் பரிமாணத்தைக் கொடுக்கிறது. சிறகுக்குள் வானத்தின் முகப்பு ஓவியமும் கோட்டோவியங்களும். அந்தக் கண்ணாடியில் தெரியும் உருவம் எதிரே நிற்கும் உருவத்தின் வெறும் பிம்பம் அல்ல; வேறொன்று. சக்கர நாற்காலியில் இருப்பவன் தலையில் ‘பீனிக்ஸ்’ பறவை ஒன்று சிறகை எடுத்துப் பரிவுடன் சூட்டுகிறது. எனக்காக நீங்கள் வரையும் ஓவியங்களில் வண்ணங்கள் தவிர அன்பும் அக்கறையும் எத்தனை விகிதம் டிராட்ஸ்கி?

2008 அக்டோபர் 18, அந்த மழை நாள் மாலையில் சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியில் நான் பேசச் சென்றிருக்கவில்லை என்றால் ‘சிறகுக்குள் வானம்’ (2012), ‘இரண்டாம் சுற்று’ (2018), ‘குன்றென நிமிர்ந்து நில்’ (2018), ‘கடவுள் ஆயினும் ஆக’ (2021) சாத்தியம் இல்லை. கொரோனா காலத்தில் நான் நிகழ்த்திய “சங்கச் சுரங்கம்” பற்றிய 30 உரைகளையும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துடன் இணைந்து நடத்தியது திருச்சி ‘களம்.’

மே 17, 2020. கொரோனாப் பெருந்தொற்றுப் பேரிடரின் போது சிறகுக்குள் வானம், இரண்டாம் சுற்று பிரதிகள் கேட்டு மின்னஞ்சல்கள். உள்பெட்டி விசாரிப்புகள். இரண்டு நூல்களையும் விலையில்லாப் பதிவிறக்கம் செய்ய இணையத்தில் (bookday.in) வெளியிட்டோம். கிண்டில் பதிப்பும்.

மொத்தத்தில் அழகாகத்தான் இருக்கிறது. நான் ஊன்றிய விதையின் வேர்களில் விழுகிறது வேண்டும் பொழுது ஈர மழை. எனது ஜன்னல் ஓரத்தில் இதமான சூரியன். மொழி புரியா தவர்களுக்கும் புரிகிறது நான் முணுமுணுக்கும் வார்த்தை. வினாக்களும் வியப்புகளும் ஊடுபயிராக ஒன்றாக விளையும் வயல் போல் வாழ்க்கை.

தமிழ் நெடுஞ்சாலையைத் தவறாமல் படிக்கும் நண்பர் ஒருவர் உள்பெட்டியில் சொன்னார், “கொடுத்து வைத்தவர் நீங்கள்.” எதைக் கொடுத்து வைத்தேன், யாரிடம், எப்போது? இந்த வாழ்க்கைதான் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது புதிய புதிய அனுபவங்களை. ஆழமான என் விருப்பங்கள் அடுத்தடுத்து சாத்தியமாகின்றன. எமர்சனின் மொழியில் சொல்வதெனில் என் விருப்பங்களை நிறைவேற்ற சூழ்ச்சி நடக்கிறது! முற்பிறவி, அடுத்த பிறவிகளில் நம்பிக்கை அற்றவன் நான். அதனால், நான் சந்தித்துப் பேசிய மனிதர்களின் நேசத்தைக் கொண்டாடுகிறேன்.

பேச்சுப் போட்டிகளில் யாரும் பேசலாம்.‌ பரிசுகள் வாங்கலாம். ஆனால் ஒரு பட்டிமன்ற மேடையில் “இந்த நடுவர் நாற்காலியை இந்த இளைஞனுக்குத் தந்துவிடத் தோன்றுகிறது” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்ன போது எனக்கு வயது 24. தமிழ்க்குடிமகன், சாலமன் பாப்பையா அமர்ந்திருந்த மேடை. இறக்கை முளைத்திருந்தால்தான் தேவதையா! எவ்வளவு பெரிய மனசு அடிகளாருக்கு.

நிவேதிகா -  நுஸ்ஹத் கானம்
நிவேதிகா - நுஸ்ஹத் கானம்

2016ஆம் ஆண்டு. குன்றக்குடியிலிருந்து தொலைபேசி. மறைந்த அடிகளார் வழியில் ஆதீனத்தை வழிநடத்தும் தவத்திரு பொன்னம்பல அடிகளார் பேசினார். “எனது ’அன்பே வாழ்வு’ நூலுக்கு நீங்கள் அணிந்துரை எழுதுங்கள்.” எழுதினேன். மீள் நினைவில் அந்தப் பட்டிமன்ற மேடையில் நான். தமிழ் நெடுஞ்சாலை நேர்க்கோடா, நீள்வட்டமா?

1976இல் என்னை வெளியேற்றிய கல்லூரிக்காக அனைத்துக் கல்லூரிப் பேச்சுப்போட்டியில் நான் வென்றெடுத்த குன்றக்குடி அடிகளார் சுழற்கேடயம். அதே கேடயத்தை எனக்கு அடைக்கலம் தந்த யாதவர் கல்லூரிக்கு அடுத்த ஆண்டு வென்றேன். அதை வீட்டில் வைத்து ஒருநாள் அழகு பார்த்த பிறகு கல்லூரிக்குக் கொடுத்தேன். எத்தனை சுழல்கள். எத்தனை சூறாவளிகள்.

ஒவ்வொரு முறையும் நான் வீழ்ந்து எழும் போதெல்லாம் எனது கைகளில் அந்தக் கேடயம்.

காஷ்மீரத்தில் எல்லைப் பகுதியில் இந்தியாவின் மக்களாட்சி என்ற மகத்துவப் பெருமையின் கடைசி மைல் கற்கள் போல வாக்குச்சாவடிகள். பார்க்கும் தூரத்தில் பனிமுகடுகள். எல்லைகள் இருக்கும் திசையை விளக்குகிறார் ஹெலிகாப்டர் விமானி. பொற்கோட்டு இமயத்தை இயன்ற மட்டும் என் விழிகளில் அள்ளிப் பூசிக் கொள்கிறேன். திரும்பிப்பார்க்கிறேன். மதுரையில் நரிமேட்டில் நான் அண்ணாந்து பார்த்த ஆகாய விமானங்கள் எனது பழைய வானத்தில். அரைக்கால் டவுசருடன் நான் என் நண்பர்களுடன் தெருவில் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

சிறகுக்குள் வானம் என்பது, வானத்தை வளைக்கும் நப்பாசை அல்ல; சிறகின் மீதான எல்லைமீறிய இலக்குத்திணிப்போ, எதிர்பார்ப்போ அல்ல. அவரவர் வானம். அவரவர் சிறகு.

ஈர்ப்பு விசை மீறி எழத்துணியும் சிறகுக்கு, சிறகே வானம்.

அதனால் சிறகுக்குள் வானம்.

- பயணிப்பேன்