மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 39 - எது நெகிழ்ச்சி அளிக்கிறதோ...

பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் எழுப்பிய மணற்சிற்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் எழுப்பிய மணற்சிற்பம்

வெறும் மகிழ்ச்சியிலிருந்து நெகிழ்ச்சி தரும் மகிழ்ச்சியை வேறுபடுத்துவது கண்களில் கசியும் ஈரம்தான்...

வாழ்க்கை என்பது தலைப்புச் செய்திகளின் திரள் அல்ல! சிறுசிறு அசைவுகளின் நிரல். நின்று நிதானித்து உற்றுக்கவனித்தால் மட்டுமே அவற்றின் இருப்பு புலப்படுகிறது.

2001 ஆகஸ்ட். ஜாஜ்பூர். கொண்டல் மாமழை கொட்டித் தீர்த்து வெள்ளக்காடானது ஒடிசா. நிவாரணப்பணி சிறப்பு அதிகாரியாகக் களத்தில் நான். கால்வாய்க்கரையில் ஓர் அரசினர் விடுதியில் முகாம். “ஒரு கிராமத்திலிருந்து கூட்டமாக வந்திருக்கிறார்கள். சும்மா பார்க்கவேண்டுமாம்” என்றார் உதவியாளர்.

சும்மா பார்ப்பதா? ஏதும் வில்லங்கமாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டே வெளியே சென்றேன்.

வணங்கினார்கள். ஊர்ப்பெயரைச் சொன்னார்கள். எதுவும் பிரச்னையா என்று கேட்டேன். ‘‘பிரச்னை ஏதுமில்லை சார். பதினைந்து வருடங்களுக்கு முன்பு நீங்கள் சப் கலெக்டராக இருந்தபோதே கேள்விப்பட்டோம். பெரும்புயலின் போது கலெக்டராக வந்தீர்கள். இப்போது வெள்ளம். மீண்டும் வந்திருக்கிறீர்கள். டி.வி-யில்கூடப் பார்த்தோம். நீங்கள் தென்னிந்தியா என்று தெரியும். நேரில் பார்க்க வந்தோம்” என்றார்கள்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

“அது சரி, வந்தது வந்துவிட்டீர்கள். உங்கள் பகுதியில் வெள்ளம் எப்படி? மனு எதுவும் இருந்தால் கொடுங்கள்” என்றேன். சொன்னதையே சொன்னார்கள். அதற்குமேல் எதுவும் கேட்டால் வருத்தப்படுவார்கள் என்று தோன்றியது. மீண்டும் வணங்கிவிட்டு வாடகை வேனில் ஏறச் சென்றபோது ஒருவரிடம் கேட்டேன். “வண்டியில் வந்திருப்பீர்கள்போல இருக்கிறதே?”

“ஆமாம் சார். வெகுதூரம் என்பதால் ஆளுக்கு ஐம்பது ரூபாய் போட்டு வாடகை வண்டி பிடித்துவந்தோம்.” நெகிழ்ந்து நின்றேன்.

பத்தாண்டுகள் கழித்து சிறகுக்குள் வானத்தில் (2012) இந்த நிகழ்வைக் குறிப்பிட்டேன். “ஆட்சிப்பணியில் கிடைத்த விருது, பாராட்டுரைகள், சிறப்புகள் அனைத்தையும்விட நான் பெரிதாய் நினைப்பது முகம் தெரியாத இந்த மனிதர்களின் அங்கீகாரத்தைத்தான்.”

2006 மே 11. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை. ``மேற்கு வங்கத்தில் துளியும் வன்முறையின்றி, உயிரிழப்பு ஏதுமின்றித் தேர்தல் நடத்தமுடியும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால், நடத்திக்காட்டிவிட்டோம்” என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பெருமிதத்துடன் சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி. டாண்டன். ஒன்பது மாதங்கள் திட்டமிட்டு நடத்திய கனவுத்தேர்தல் அது.

நவீன் சாவ்லா
நவீன் சாவ்லா

தலைமைத் தேர்தல் ஆணையர் என்னை அழைத்துச் சொன்னார். “சிறந்த பணிக்கான பிரதமர் விருதுக்கு உங்கள் பெயரைத் தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கப்போகிறது. சுயவிவரக் குறிப்பை என் தனிச் செயலரிடம் கொடுங்கள்” என்றார். “மிக்க நன்றி. ஆனால் விருதெல்லாம் எதற்கு சார்?” என்றேன். “தேர்தல் மேலாண்மையில் மேற்கு வங்கத் தேர்தல் புதிய மைல் கல்” என்றார். நான் சுயவிவரக்குறிப்பைத் தரவில்லை. மறுநாள் மீண்டும் அழைத்தார். “தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு அரசு விருதுகள் அளிக்கப்படுவது பொதுவெளியில் விமர்சிக்கப்படும்” என்றேன். “அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையமே பரிந்துரைக்கும்போது விமர்சனத்திற்கு ஏது இடம்?” என்றார் “ஒரு முதல் அமைச்சர் அந்த மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு விருது கொடுத்தால் நாம் என்ன நினைப்போம். பிரதமர் விருதும் அப்படித்தானே” என்றேன்.

“நான் ராஜர்ஷி பட்டாச்சார்யாவிடம் சொல்லி நேரடியாகக் கோப்பு அனுப்பச் சொல்கிறேன். நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம்” என்றார். பட்டாச்சார்யா ஆணையத்தின் மூத்த துணைத் தேர்தல் ஆணையர். என்னைவிட ஆறு ஆண்டுகள் பணியில் மூத்தவர். நேராக அவரது அறைக்குச் சென்று எனது தரப்பு வாதத்தைச் சொன்னேன். “தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் விருது கொடுப்பது சரியான முன்மாதிரியாக இருக்காது. ஆணையம் எனது பணியைப் பாராட்டுகிறது என்ற பெருமிதமே போதுமானது. இது தொடர்பாக மேல்நடவடிக்கை எடுக்கவேண்டாம்” என்று கோரினேன். டாண்டன் சார் மறுநாள் அறைக்கு அழைத்து சிரித்துக்கொண்டே சொன்னார் “உங்களைத் திருத்த முடியாது.” அவரது அன்பிற்கு நன்றி சொன்னேன். எனது பெயர் விருதுக்குச் செல்லாது என்ற மகிழ்ச்சியுடன் எனது அறைக்குச் செல்கிறேன். மீள்நினைவில் நான் மீண்டும் ஜாஜ்பூரில். அந்த கிராமத்து மக்கள் வேனில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். நான் நெகிழ்ந்து நிற்கிறேன்.

பி.பி. டாண்டன்
பி.பி. டாண்டன்

அறிவாற்றல், திறன்கள் எல்லாம்கூட நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். ஆனால் உணர்வுகள் நம்மை ஏமாற்றுவதில்லை. உணர்ச்சிதான் நம்மை மனிதர்களாக வைத்திருக்கிறது. புத்திசாலித்தனம் அல்ல.

2004 பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை. வீட்டு வாசலில் ஒரு பேருந்து வந்து நின்றது. வெளிக்கதவைத் திறந்துகொண்டு பெருந்திரளாக நுழைகிறார்கள். இருபது பேருக்கும் மேல் இருக்கும்; சில பெண்களும். ரகுராஜ்பூர் மக்கள். அங்கவஸ்திரத்துடன் குரு மாகுனி சரன் தாஸ். சில நாள்களுக்கு முன்புதான் பத்மஸ்ரீ பட்டம் வாங்கியிருந்தார். பத்மஸ்ரீ விருதை எனது கைகளில் கொடுத்து அவரது கழுத்தில் அணிவிக்கச் சொன்னார். ஊர்க்காரர்களும் ஒருமித்த குரலில் கோரினார்கள். நான் மறுத்துவிட்டேன். மேதகு குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அணிவித்த விருது. கையில் வாங்கிப் பார்த்து மகிழ்ந்தோம் நானும் என் மனைவியும்.

மாகுனி தாஸை ரகுராஜ்பூரில் அவரது நடனப்பள்ளியில் முதன்முதலாக சந்தித்தேன். கோத்திப்புவா, ஒடிசி நடனத்தின் ஊற்றுக்கண். குருகுல வழியில் சிறுவர்கள் தங்கிப் பயிற்சிபெறும் பள்ளியை நடத்துகிறார். பழுதடைந்த பள்ளிக்கூரையைச் சீரமைக்க அவர் வங்கியில் கடன் வாங்குவதாக அறிந்தேன். நீங்கள் கடன் வாங்கவேண்டாம் என்று சொல்லி அந்தப் பள்ளிச் சீரமைப்பை அரசின் செலவில் செய்தோம்.

ரகுராஜ்பூரில் பத்ம 
மாகுனி தாஸ் சிலை
ரகுராஜ்பூரில் பத்ம மாகுனி தாஸ் சிலை

பத்மஸ்ரீ விருதுக்கு ஒடிசா அரசு சார்பில் பொருத்தமான பெயர்களைப் பரிந்துரைக்கும் குழுவின் கலந்தாய்வு. மாகுனி தாஸ் நினைவுக்கு வந்தார். அவரது சுயவிவரக் குறிப்பை அதிகாரிகள் மூலம் பெற்று, குழுவில் பரிந்துரைத்தேன். மாகுனி தாஸ் பத்மஸ்ரீ விருது பெறுகிறார் என்ற செய்தியைத் தொலைக்காட்சியில் அறிந்து மகிழ்ந்தேன். ஆனால் ஊரே திரண்டு வீட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. ‘செவ்வியல் நடனங்களே முன்னுரிமை பெறுவதால் கோத்திப்புவா போன்ற வேர்நிலைக் கலைகள் புறக்கணிப்படுகின்றன என்ற குறை இந்த விருதால் தீர்ந்தது’ என்று உணர்ச்சிபொங்கச் சொன்னார் மாகுனி தாஸ்.

சாமானிய மக்களின் அன்பு எளிமையானதும் கம்பீரமானதும் ஆகும். அதன் உடல்மொழி ஒப்பனை அற்றது; உண்மையானது, அதனால் அழகானது. ‘இவ்வளவு தூரம் இத்தனை பேர் நேரில் வந்தது எனக்கு எவ்வளவு பெரிய கௌரவம்’ என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தேன்.

2010 மார்ச்சில் ஒருநாள் டில்லியில். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தனது அறைக்கு அழைத்தார். NDTV `சிறந்த இந்தியன் - 2009’ விருதை இந்தியத் தேர்தல் ஆணையம் அப்போதுதான் பெற்றிருந்தது. நான் புற்றுநோய் சிகிச்சை முடிந்து, சென்னையில் பணிச்சுமை குறைவான ஒரு நியமனத்தை எதிர்பார்த்திருந்தேன்.

பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் எழுப்பிய மணற்சிற்பம்
பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் எழுப்பிய மணற்சிற்பம்

இந்தியத் தேர்தல் மேலாண்மைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக குடியரசுத் தலைவரின் பத்மஸ்ரீ விருதுக்கு எனது பெயரைப் பரிந்துரை செய்ய விரும்புவதாக சாவ்லா தெரிவித்தார். நான் அதிர்ந்தேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை.

‘எனது பெயரை ஆணையம் பரிந்துரைக்க வேண்டாம்; அதிலொரு சிக்கல் இருக்கிறது’ என்றேன். 2007ம் ஆண்டு பஞ்சாப் தேர்தலை அவருக்கு நினைவுபடுத்தினேன். அப்போது டி.ஜி.பி-யாக இருந்த ஓர் அதிகாரியின் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதுபற்றி விசாரித்த ஆணையம் அந்த டி.ஜி.பி-யை தேர்தல்தொடர்பான பொறுப்புகளிலிருந்து நீக்கியது. நீக்கப்பட்ட அதிகாரி பல ஆண்டுகளுக்கு முன்பு பத்மஸ்ரீ விருது பெற்றவர். அவரை எப்படி ஆணையம் நீக்கலாம் என்ற கேள்வி எழுந்தது.

‘இந்த இரண்டு காலகட்டங்களும் பணிச்சூழல்களும் வெவ்வேறானவை; ஒன்றோடொன்று தொடர்பற்றவை’ என்பது ஆணையத்தின் நிலைப்பாடு. அப்போது நான் தேர்தல் ஆணையத்தின் திட்டமிடல் மற்றும் தேர்தல் நடத்துதலுக்கான பொறுப்பில் இருந்தேன். அரசு அதிகாரிகளின் பணிக்காலத்தில் இத்தகைய உயரிய விருதுகளை வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை ஆணையம் உரிய தளங்களில் முன்மொழிந்தது. இதை நான் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நினைவுபடுத்தி, எனக்கான எந்தப் பரிந்துரையும் ஆணையத்தின் முந்தைய நிலைக்கு முரண்பாடாக இருக்கும் என்றேன். “யாரும் இதைச் சொல்லவில்லையே” என்றார். “நான் சொல்லவேண்டும் சார்” என்றேன். அவரது அறையிலிருந்து எனது அறைக்கு யோசனையுடன் நடந்து செல்கிறேன். மீள்நினைவில் குரு மாகுனி தாஸின் பத்மஸ்ரீ விருதைக் கையில் ஏந்தி நிற்கிறோம் நானும் என் மனைவியும்.

சில ஆண்டுகளாக ஒடிசா அரசு சார்பில் குடியரசுத் தலைவரின் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளுக்குப் பொருத்தமானவர் பெயர்களைப் பரிந்துரைக்கும் குழுவின் தலைவராக இருக்கிறேன். தகுதியுள்ளவர்களைத் தேடித்தேடிப் பரிந்துரைக்கிறோம். நிறைவும் குறைவும் நெஞ்சில் இருக்கிறது. எது நெகிழ்ச்சி அளிக்கிறதோ அதுவே மகிழ்ச்சி அளிக்கிறது என்பதுதான் இந்தத் தமிழ் நெடுஞ்சாலை எனக்கு வாசித்தளித்த வாழ்வியல் பாடம்.

வெறும் மகிழ்ச்சியிலிருந்து நெகிழ்ச்சி தரும் மகிழ்ச்சியை வேறுபடுத்துவது கண்களில் கசியும் ஈரம்தான். எதற்காக வருந்தி அழுதாலும் எளிதாக வந்துவிடுகிறது கண்ணீர். ஆனால் மகிழ்ச்சியால் கண்களில் ஈரம் கசிய ஒரு நெகிழ்ச்சி தேவைப்படுகிறது.

விருது வாங்குகிறோம், வாங்காமல் போகிறோம். இரண்டுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதாகத் தோன்றவில்லை. ஒன்றை மட்டும் என்னால் உத்திரவாதத்துடன் உறுதியாகச் சொல்லமுடியும். கையில் வாங்கியதும் கண்ணீர் வந்துவிடும் என்று கருதும் விருதொன்றும் இல்லை. ஆனால் வாடகைக்கு வண்டியெடுத்து வந்த அந்த கிராமத்துக்காரர்களும் ரகுராஜ்பூர் மக்களும் எனக்குள் நிகழ்த்திய நெகிழ்ச்சியை நான் நேசிக்கிறேன். இது மிகை அல்ல, மெய். சிறிதும் பெரிதுமாய் அவ்வப்போது மகிழ்ந்த தருணங்களில் பல மறந்தே போய்விட்டன. ஆனால் நெகிழ்ந்து நின்ற தருணங்கள் நெஞ்சில் நிற்கின்றன.

ரகுராஜ்பூரில் உள்ள குரு மாகுனி தாஸின் நடனப்பள்ளி
ரகுராஜ்பூரில் உள்ள குரு மாகுனி தாஸின் நடனப்பள்ளி

ஒரு தேர்வில் கிடைத்த வெற்றி, வாழ்க்கை முழுவதற்குமான அடையாள அட்டையாக ஆகிவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். அதனால் அந்த `மகுடம்’ பற்றிய பெருமிதத்தை மசூரியிலேயே இறக்கிவைத்துவிட்டுத்தான் ஒடிசாவுக்குச் சென்றேன்.

தமிழ் நெடுஞ்சாலை ஓர் அனுபவப் பகிர்வுத் தொடர். யார் எனது அண்மைக்காலக் கதாநாயகன் என்று என்னை நானே கேட்கிறேன். எர்ணாகுளத்தைச் சேர்ந்த சுரேஷ்தான். “பணம் என்னடா பணம்... மனம்தானடா நிரந்தரம்!” என்ற தலைப்பில் விகடனில் (ஏப்ரல் 11, 2012) வந்த செய்தியால் சுரேஷை அறிந்தேன். சிறகுக்குள் வானத்தில் (2012) கவிதையாக்கினேன்.

“கேரளத்தில்
குலுக்கலில் விழுந்த
கோடி ரூபாயை
‘அமுக்கி’விடாமல்
உரியவரைத் தேடி
ஒப்படைத்தவர்
ஒரு பெட்டிக்கடைக்காரர்.
அவரைவிடவும்
பெரிய மனிதன்
இந்த தேசத்தில்
எந்தப் பணக்காரன்?’’


டிசம்பர் 16. முகநூலைத் திறக்கிறேன். Journey of a Civilization ஆங்கில நூலின் இரண்டாவது ஆண்டு விழாவிற்கு பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் அழகான மணற்சிற்பம் எழுப்பிப் பதிவிட்டிருக்கிறார். எப்படியெல்லாம் நெகிழ வைக்கிறார்கள்.

இருட்டு மனங்கள் ஏதேனும் சொல்லட்டும். வெளியே உலகம் வெளிச்சமாகத்தான் இருக்கிறது.

- அடுத்த இதழில் முடியும்

******

நெகிழவைத்த நேர்மையாளர்!

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

கேரளத்தைச் சேர்ந்த சுரேஷ். எர்ணாகுளம் மாவட்டத்தில் லாட்டரிச் சீட்டு விற்பவர். ஐயப்பன் என்ற முதியவர் இவரிடம் ஐந்து லாட்டரி டிக்கெட் வாங்கினார். பையில் கையை விட்டார். பணம் இல்லை. ‘இந்த ஐந்து டிக்கெட்டையும் தனியாக எடுத்து வைக்கிறேன். நாளை பணத்தைக் கொடுத்துவிட்டு டிக்கெட்டை வாங்கிக்கொள்ளுடங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் சுரேஷ். மறுநாள் லாட்டரிச் சீட்டு குலுக்கல் முடிவில், ஐயப்பனுக்காக சுரேஷ் எடுத்து வைத்த ஐந்து லாட்டரி டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு கோடியே நாற்பதாயிரம் ரூபாய் பரிசு. உடனடியாக, அந்த ஐந்து டிக்கெட்டுகளையும் எடுத்துக்கொண்டு ஐயப்பன் வீட்டுக்குச் சென்ற சுரேஷ், அவரிடம் விவரத்தைச் சொல்லி, டிக்கெட்டுக்கான 250 ரூபாய் பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு லாட்டரிச் சீட்டுகளை அவரிடமே கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். ‘நான்தான் பணம் தரலையே, டிக்கெட்டை எடுத்துக்கிட்டு பணத்தையும் நீங்களே வாங்கிக்குங்க’ என்று ஐயப்பன் சொன்னார். ஆனால் சுரேஷ் ஒப்புக்கொள்ளவில்லை. ஆளுக்குப் பாதியாக எடுத்துக்கொள்ளச் சொன்ன ஊர்க்காரர்களின் யோசனையையும் சுரேஷ் ஒப்புக்கொள்ளவில்லை.

சுரேஷின் அண்ணன் டீக்கடைக்காரர். செங்கல் சூளையில் தம்பி. கூலி வேலைக்குச் செல்லும் அக்கா. சுரேஷின் வாழ்க்கையும் சோகமயமானதுதான். `‘நாங்க அந்த ஒரு கோடி ரூபாயை எடுத்திருந்தாக்கூட எங்களுக்கு இந்த அளவுக்குப் பெருமை வந்திருக்காது. அவ்வளவு நல்லவங்களை இப்போ பார்க்கிறோம். எங்க மாநில முதல்வர் நேரில் அழைச்சுப் பெருமைப்படுத்துறார். ஆயுசுக்கும் இதுபோதும் சார் எங்களுக்கு’’ என்று நெகிழ்கிறார் சுரேஷின் மனைவி தீபா. எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஸ்ரீலட்சுமியும், நான்காம் வகுப்பு படிக்கும் மகன் ஸ்ரீஹரியும் அப்பாவைக் கட்டிக்கொண்டு முத்தமழை பொழிகிறார்கள்.

இந்தக் குடும்பத்தைச் சென்னைக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார் நடிகர், இயக்குநர் பார்த்திபன். நீதிபதி சந்துருவும் கலந்துகொண்ட விழா அது. (விகடன்: ஏப்ரல் 11, 2012).