மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 4 - தமிளி என்ற மைல்கல்

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

என் மனசெல்லாம் சங்க இலக்கியங்கள் பதிவிடும் நடுகற்களின் மீதுதான்...

தென் ஒடிசாவின் கோராபுட்டிலிருந்து ராயகடாவுக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலை. 1988-ம் ஆண்டின் இறுதியில் ஒரு நாள். போக்குவரத்து அதிகமற்ற அந்த அழகிய சாலையில் ஜீப்பில் சென்றுகொண்டிருக்கிறேன்.

அந்த மைல் கல்லில் என்ன எழுதியிருக்கிறது? சரியாகத்தான் படித்தேனா? ஜீப்பை நிறுத்தச்சொல்லி இறங்கினேன். ‘தமிளி’ என்று ஒடியா மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்தது. ‘தமிளி என்ற அந்த ஊரின் பெயர் எந்த மொழிச்சொல், அதன் பொருள் என்ன’ என்பதைவிட தமிளியில் வசிக்கும் மக்கள் யார் என்பதுதான் எனக்குள் எழுந்த முதல் கேள்வி.

1936 வரை மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது கோராபுட். ஒடிசாவிலுள்ள 62 பழங்குடிகளில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் இப்பகுதியில் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட `தமிழ்’ என்ற சொல்லைப் போலவே ஒலிக்கும் இந்தத் ‘தமிளி’யில் வசிக்கும் மக்களின் மொழி ஒரு திராவிட மொழியோ என்ற எதிர்பார்ப்போடு அந்த ஊருக்குள் சென்றேன்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

‘குவி’ என்ற திராவிட மொழியைப் பேசும் ‘கோண்டு’ பழங்குடியினர் அந்த மக்கள். நான் பேச்சுக் கொடுத்தபோது ஒடியாவும் பழங்குடி மொழியும் கலந்த கலவையான ‘தேஷியா’ என்ற ஒரு வட்டார வழக்கில் பேசினார்கள். தேஷியாவில் பேசத்தெரிந்த டிரைவர் எனக்கு உதவினார்.

அவர்கள் பேசிய `நானு’, `நீனு’, `கண்ணு’, `பாலு’, `தின்’ போன்ற பல சொற்கள் பழகிய சொற்கள் போல ஒலித்தன. அம்மக்களுடனான வெகு நேர உரையாடல்களுக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பிப் பயணத்தைத் தொடர்ந்தபோது ‘தமிளி’ என்ற அந்த இடப்பெயரும், அம்மக்கள் பேசிய, சொற்களும் மூளை முழுவதும் நிரம்பி என் முகத்தில் வழிவதாக உணர்ந்தேன். ‘தமிளி’ என்ற மைல்கல் எனக்குள் சப்பணம் போட்டு அமர்ந்தது.

அடுத்த ஒரு வாரத்தில் கோராபுட் மாவட்ட ஆட்சியரின் அலுவலக நூலகத்தில் இரண்டு நூல்களைத் தேடிப் பிடித்தேன். 1. பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்டிருந்த மெட்ராஸ் ராஜதானியில் அடங்கிய கிராமங்களின் தாலுகா மற்றும் ஜில்லா வாரியான அகர வரிசைப் பட்டியல்; 2. 1911-ல் எஃப்.வி.பி ஷூல்ஸ் (FVP SCHULZE) என்ற பாதிரியார் எழுதிய குவி மொழி இலக்கண நூல்.

இந்த இரண்டு நூல்களையும் நான் படிக்கத் தொடங்கிய நாளின் ஆர்வமும் அவசரமும் இன்றும் நினைவிலிருக்கிறது. நான் பிறந்த மதுரை மாவட்டத்தின் ஊர்ப் பெயர்களையும், கோராபுட் மாவட்டத்தின் ஊர்ப் பெயர்களையும் ஒரே புத்தகத்தில் பார்ப்பது ஒரு புதிய அனுபவம். அந்தப் பட்டியலில் இருந்த பல ஊர்களுக்கு நேரில் சென்றேன்.

ஆட்சிப்பணி, ஆய்வுப்பணி என்ற இருகோட்டுப் பயணம் ஒன்றுக்கு ஒன்று முரண் அல்ல: இரண்டிற்கும் வளம் சேர்க்கும் அரண் என்ற புரிதல் எனக்குள் நேர்ந்தது இந்த மண்ணில் தான்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

ஒருமுறை ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வழங்கப் பெற்ற பழங்குடிப் பயனாளிகளின் பட்டியலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மனதிற்குள் ஒரு சந்தேகம் வந்தது. அந்த ஊருக்கு நேரில் போகலாம் என்று அந்த அதிகாரிகளையும் அழைத்துச் சென்றேன். உடைகளைக் கழற்றித் தலையில் வைத்துக்கொண்டு ஒரு காட்டாற்றைக் கடந்தோம். கறவை எருமை மாடுகளில் ஒன்று கூட அங்கே இல்லை. அது எனக்கு வியப்பாகவும் இல்லை. அந்தக் கிராமத்துப் பழங்குடிகள் செத்தாலும் பால் கறக்க மாட்டார்கள் என்பது முன்பே எனக்குத் தெரியும்.

உண்மையில் அதிகாரிகள் ஆந்திராவிலுள்ள பார்வதி புரத்துக்கு அழைத்துச் சென்று கறவை மாடுகள் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். “பால் கறந்து யாருக்கு விற்றீர்கள்? மாடுகள் இப்போது எங்கே?” என்று அந்த அதிகாரிகளையே கேட்கச் சொன்னேன்.

“பால் கறப்பதா, பால் விற்பதா..?” கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டு விட்டதைப்போல ஆச்சரியப் பட்டார் ஒரு பழங்குடிப் பெரியவர். “அம்மா பால் குழந்தைக்கு; மாட்டுப் பால் கன்றுக்குட்டிக்கு. அம்மா பாலை யாராவது கறந்து விற்பார்களா” என்று கிண்டிக் கிழங்கு எடுத்துவிட்டார். என்னுடன் வந்த அதிகாரிகளின் முகத்தில் ஈயாடவில்லை. அந்த மாடுகள் எங்கே என்றதற்கு, ``பல்வேறு பண்டிகைகளின் போது சமூக விருந்து நடத்திச் சாப்பிட்டோம்” என்று ஒளிவுமறைவில்லாமல் சொன்னார். அது பால் கறந்து விற்கும் வாழ்வாதாரத் திட்டம் என்பதைக்கூட அம்மக்களுக்கு யாரும் விளக்கியிருக்கவில்லை. ஆண்டு இலக்கை வெற்றிகரமாக எட்டி, புள்ளிவிவரம் கொடுத்தி ருந்தார்கள் வட்டார அதிகாரிகள்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

திரும்பி வரும்போது, இதுபற்றி நான் என்ன மேல் நடவடிக்கை எடுக்கப் போகிறேனோ என்ற பீதிக்கு நடுவிலும் ஓர் அதிகாரி கேட்டார், “நீங்க தமிழ்நாடு. இங்கே வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. இவுங்க பால் கறக்க மாட்டாங்கன்னு உங்களுக்கு எப்படி சார் முதலிலேயே தெரியும்?” அவர் களுக்கு நான் மானிடவியல் வகுப்பெடுத்தேன்.

மத்தியப்பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்த (இப்போது சத்தீஸ்கர்) பஸ்தர் மாவட்டத்தின் தலைநகர் ஜகதல்பூர். கோண்டு பழங்குடிகளின் தாயகம் அது. இப்பகுதியிலுள்ள அபுஜ்மரியா மலைக்காடுகள் பழங்குடித் தொன்மங்களின் தொட்டில். ஜகதல்பூருக்குச் சென்றபோது அந்த மாவட்ட கலெக்டரின் உதவியுடன் பல ஆவணங்களையும் கிராமங்களின் பெயர்களையும் படித்து வியப்பில் உறைந்தேன்.

ஒருங்கிணைந்த பஸ்தர் மாவட்டம், இப்போது நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ‘நாடு’ (Nad) என்று முடியும் 235 ஊர்கள் இருப்பதை அந்த ஆவணங்களின் மூலம் கண்டறிந்தேன். மல்நாட் (மலை நாடு), முள் நாட் (முள் நாடு), வைநாட் (வை நாடு) நெல் நாட் (நெல் நாடு), தல நாட் (தலை நாடு), பள் நாட் (பள் நாடு), இர்ப்பி நாட் (இலுப்பை நாடு), எரம் நாட் (எருமை நாடு) பறை நாட் (பறை நாடு) என்ற ஊர்களின் பெயரைப் படித்தபோது தமிழ்நாடு, கேரளாவில் உள்ள பெயர்களைப் போலத் தோன்றின. இப்பெயர்கள் பஸ்தருக்குள் என்னை மீண்டும் இழுத்துச்சென்றன.

‘நாடு’ என்ற சொல்லாக்கம் மற்றும் அதன் கருத்தியல் பற்றிய தேடல் பீகாரில் வசிக்கும் மால்பஹாடியா பழங்குடிகளிடம் என்னை அழைத்துச்சென்றது. அவர்களின் மால்ட்டோ மொழியில் ’நாட்’ என்றால் ‘நட்ட கல்.’ நீத்தார் ஆவி, அணங்கு போன்ற வழிபாட்டுத் தொடர்புடையது. வரகு, தினை போன்ற தானியங்கள் விளையும் மலைச்சரிவு நிலங்களில் வசிக்கும் ஒரான் பழங்குடி மக்களும் தங்களது ‘குருக்’ மொழியில் நட்டு வைத்த தெய்வத்தை ‘நாட் கல்லு’ என்று அழைக்கிறார்கள். என் மனசெல்லாம் சங்க இலக்கியங்கள் பதிவிடும் நடுகற்களின் மீதுதான்.

‘கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!’


என்று எப்போதோ படித்த புறநானூற்று வரிகள் நினைவுக்கு வருகின்றன.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

உண்மையைச் சொல்லப்போனால் சங்க இலக்கியக் குறிஞ்சித் திணை மரபுகள் பற்றித் தற்காலத் தமிழர்களான நமக்கு இருப்பது ஓர் அரைகுறையான புரிதல்தான். ஆனால் பஸ்தரின் வெயில் கதிர்கள் புகாத அடர் காட்டு மலை இடுக்குகளில் அது இன்றும்கூட கண்கூடான வாழ்வியல்.

பஸ்தர் பகுதியில் வாழும் முரியா கோண்ட் என்ற தொல்திராவிடப் பழங்குடிகளின் ‘கோட்டுல்’ எனப்படும் ‘இளைஞர் குழாம்’ (Youth Dormitory) வாழ்க்கைமுறை தொல்காப்பியம், மற்றும் சங்க இலக்கியக் குறிஞ்சித் திணைப் பாடல்கள் குறிப்பிடும் `பாங்கர் கூட்டம்’, `பாங்கியர் கூட்டம்’, `செவிலித்தாய் மரபு’, `உடன்போக்கு’ போன்ற அகவாழ்வியல் மரபுகளை இன்னும் தன் அடிமடியில் அடைகாக்கிறது.

என்மட்டில் சத்தீஸ்கர், ஒடிசா பழங்குடிப் பகுதிகள்தான் சங்க இலக்கியக் குறிஞ்சித்திணைப் பாடல்களின் நிகழ்களமான ஆய்வுக்கூடம். கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் நான் படித்திருந்த சங்க இலக்கியம் எல்லாம் பாட்டும் பதவுரையும்தான் என்ற புரிதல் எனக்குத் தொடங்கியது. இப்போது கூட எனக்குத் தோன்றுகிறது, ‘சங்க இலக்கியம் படிப்பவர்களை, ஆர்வமுள்ளவர்களை அழைத்துப் போய்க் காட்டவேண்டும்’ என்று.

எனது ஆராய்ச்சிகளுக்காக முதன்முதலில் பஸ்தருக்குச் சென்றபோது நினைத்தே பார்க்கவில்லை, 20 ஆண்டுகளுக்குப் பின் கண்ணிவெடிகளாலும், கெரில்லாத் தாக்குதல்களாலும் காயப்பட்ட அந்தக் குருதிக் களத்தில் பொதுத்தேர்தல் நடத்துவதற்காக மீண்டும் மீண்டும் பறந்து வருவேன் என்று.

2008-ம் ஆண்டு. பஸ்தரில் இருந்து ஹெலிகாப்டரில் மாநிலத் தலைநகர் ராய்பூருக்குத் திரும்புகிறேன். கீழே `பறவைப் பார்வையில்’ மெழுகியது போன்ற அந்த அழகிய பசுமைப் பிரதேசம் கவிதைபோல நழுவுகிறது. இந்தியாவின் வேறெந்தப் புள்ளியில் நிற்கும் போதும் ஏற்படாத ஒரு வினோத வேதியியல் எனக்குள் நிகழ்கிறது. தொன்மங்கள் தூங்கும் தொட்டிலான அந்த ஆதிமூலத்தின் அடிவேரை நினைத்து அதன் ஆழத்தில் உறைவதுபோல் இழுத்து மூச்சு விடுகிறேன். பஸ்தரை இனிமேல் எப்போது பார்க்கப்போகிறேன் என்று நினைத்துக்கொண்டேன்.

2013 மே 25-ம் தேதி சுக்மா மாவட்டத்தின் தர்பா பள்ளத்தாக்கில் மாவோயிஸ்ட்களின் பயங்கரத் தாக்குதல். வி.சி.சுக்லா மற்றும் சில அரசியல் தலைவர்கள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் சட்டமன்றப் பொதுத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடந்தாக வேண்டும். அச்சத்தின் பிடியில் அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் திட்டமுடையவர்களும்.

அப்போது, ஒடிசா அரசிடமிருந்து இரண்டாண்டுகள் கல்வி விடுமுறை பெற்று சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன். தர்பா தாக்குதலைத் தொலைக்காட்சிகளில் ஒரு செய்தியாக மட்டும் பார்த்து நகர்ந்துவிட்டேன். ஆனால் தமிழ் நெடுஞ்சாலை, தாளில் வரைந்த நேர்க்கோடு அல்ல; கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்தது.

2013 ஐந்து மாநிலத் தேர்தல்களையும், 2014 நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த என்னை மீண்டும் துணைத் தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதுகிறார்.

இதோ பஸ்தரில் மீண்டும் தரையிறங்குகிறேன் நான்.

- பயணிப்பேன்

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

“தரைப்பொண்ணு”

கோண்டுகள் (Khonds) ஒடிசாவில் வாழும் பழங்குடியினர். மலைப்பகுதிகளில் வாழும் கோண்டுகள் ‘குயி’ மொழியையும் சமவெளிகளில் வாழும் கோண்டுகள் ‘குவி’ மொழியையும் பேசுகிறார்கள். இம்மொழிகள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. நியமகிரி மலைப்பகுதியில் வாழும் டோங்கிரியா கோண்டு பழங்குடி இளம்பெண்கள் மட்டுமன்றி இளைஞர்களும் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் அழகே அழகு.

குயி மொழியில் ஊர், கிராமம் என்பதை ‘நாஜு’ என்கிறார்கள். இது ‘நாடு’ என்ற சொல்லின் மாற்று வடிவம்தான். டோங்கிரியா கோண்டுகளின் தலைமைக் கடவுள் நியம்ராஜா. தங்களின் மலைகள், காடுகள், அருவிகள் ஆகிய அனைத்திலும் இறைத்தன்மையைக் காண்பவர்கள். டோங்கிரியா மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், கலை வடிவங்கள் ஆகிய அனைத்திலும் மலைகளின் தாக்கம் இருக்கும். ஏனெனில் டோங்கிரியா கோண்டுகள் நூற்றுக்கு நூறு மலையின் மைந்தர்கள்.

கந்தமால் பகுதியில் வாழும் குட்டியா கோண்டுகள் “தரி / தரைப் பெண்ணு” என்ற தாய்த்தெய்வத்தை வணங்குகின்றனர். ‘தரைப்பெண்ணு’ என்பது பூமித்தாய்தான்.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது