மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 40 - யாதும் ஊரே...

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

நடக்க நடக்க வளர்கிறது எனது தமிழ் நெடுஞ்சாலை...

தமிழ் நெடுஞ்சாலையின் 40வது மைல்கல். இந்த மீள்நினைவுத் தொடரைத் தொடங்கிய இடத்தில் மீண்டும் நான். 2019 டிசம்பர் 16, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம். ‘Journey of a Civilization: Indus to Vaigai’ நூல் வெளியீட்டு விழா.

“பாலா சார் தமிழ்நாட்டில் பிறந்தவர். ஆனால் ஒடிசாவில் வளர்ந்தவர். இவரைத் தமிழ்நாட்டில் விடாமல், ஒடிசாவுக்குக் கையோடு அழைத்து வரச்சொல்லி என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார் எங்கள் மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.” நயம்படச் சொல்லி என்னை அன்பால் நிறைக்கிறார் சிறப்பு விருந்தினர் சுப்ரத் பாக்‌ஷி. பத்து நூல்களின் ஆசிரியர், ஒடிசா திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக அமைச்சரின் தகுநிலையில் (Cabinet Status) முதல்வரால் நியமிக்கப்பட்டவர். ‘உலகத்தை முத்தமிட்டவர்’ உவந்தளிக்கும் ஆங்கிலப் பூங்கொத்து.

தானொரு கூட்டுப்புழுவாய் இருந்தது பட்டாம்பூச்சிகளுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ, எனக்கு நினைவிருக்கிறது. தெருமுனைக்கு அப்பால் ஒரு திசையறியாச் சிறுவன்; வீட்டிற்கு அருகில் வேலை கிடைக்க நேர்த்திக்கடன்; குடிமைத் தேர்வு என்ற மலையை எதேச்சையாக இழுத்துப் பார்த்தவன்; நேர்காணலுக்கு டெல்லி செல்லும்வரை தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டாதவன். வேர்களிலிருந்து விலகி தரதரவென்று என்னை நானே இழுத்துச் செல்கையில் என்னைப் பார்க்க எனக்கே பாவமாக இருந்தது. நானும்தான் எவ்வளவு மாறியிருக்கிறேன்; அல்லது காலம் என்னை மாற்றியிருக்கிறது.

விடைபெறும் பொழுது ஒடிசா முதல்வருடன்
விடைபெறும் பொழுது ஒடிசா முதல்வருடன்

1984ஆம் ஆண்டின் இறுதியில் ஒருநாள். உத்தராகண்ட் (அப்போது உத்தராஞ்சல்) பத்ரிநாத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் மனா. இதுதான் இந்தியாவின் கடைசி கிராமம். அதற்கு அப்பால் திபெத். வசுதரா என்ற பனிவெள்ளருவி. முகத்தில் சாரல். அருவியைச் சுற்றி ஆரவாரம். ஆனாலும் என்னை மௌனம் கவ்வுகிறது. மதுரைக்குத் தாவும் மனசு. தனிமையின் பிடிக்குள் நான். சற்று விலகி நடக்கிறேன். பாறை இடுக்கில் பனி ஈரத்தில் ஒரு காலித் தீப்பெட்டி. அனிச்சையாகக் குனிந்து எடுக்கிறேன். சிவகாசியாக இருக்குமோ? சிவகாசி இல்லை, கோவில்பட்டி. இரண்டும் ஒன்றுதான். மனாவிலிருந்து மதுரை எவ்வளவு தூரம். பத்ரிநாத்திலிருந்து டேராடூன், டில்லி, விஜயவாடா, சென்னை, பிறகுதான் மதுரை! என்ன யோசனை என்கிறார் நண்பர் ஒருவர். “ஒன்றுமில்லை” என்கிறேன். உண்மையில் ஒன்றுமில்லை என்பது போன்றொரு வெறுமை.

1985ஆம் ஆண்டு. ஒடியா கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தேன். பூரி கடற்கரையில் நான். இந்திய வரைபடம் கண்ணில் விரிகிறது. இதே வங்காள விரிகுடா ‌தூத்துக்குடியிலும். “இதே கடல்” என்ற சொல் ஆறுதலாய் இருக்கிறது. ஆனாலும் பரந்துவிரிந்த கடல் பயமுறுத்துகிறது.

இவ்வளவு வலிக்குமா? நல்லதோ, கெட்டதோ, பழகிய வட்டம். பார்த்த மனிதர்கள், குடித்த கடையில் குடிக்கும் தேநீர். தினமும் படித்துப் பழகிப்போன அதே நாளிதழ். அதே பேருந்து; அதே நிறுத்தம். ஆண்டுதோறும் அழகர் திருவிழா.

2003ஆம் ஆண்டு. ஒருங்கிணைந்த சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை தனித்தனித் துறைகளாகப் பிரிக்கப்பட்டது. ஏற்கெனவே சுற்றுலா, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, பேரிடர் மேலாண்மை போன்ற பொறுப்புகளை ஒருசேர வகித்துவந்த நான், பண்பாட்டுத் துறைக்கும் செயலராக நியமிக்கப்பட்டேன். முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்திக்க வந்திருக்கிறேன், பண்பாட்டுத் துறையின் செயலர் பதவிக்கு நான் பொருத்தமா என்ற யோசனையுடன். சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்னால் (1991) இதே போன்ற ஒரு கேள்வியுடன் அன்றைய முதல்வர் பிஜூ பட்நாயக்கை நான் சந்திக்கக் காத்திருந்த அதே அறை. பண்பாட்டுத் துறைக்கு எப்போதும் சொந்த மாநிலத்து ஐ.ஏ.எஸ் அதிகாரியையே நியமிப்பார்கள். யாரேனும் எதிர்மறையாகக் கருத்துச் சொல்லிவிடுவார்களோ என்று எனக்குள் ஒரு தயக்கம். “அப்படிப்பட்ட தயக்கம் தேவையே இல்லை; ஒடியா பண்பாடு குறித்த உங்களது ஆய்வுகளை அனைவரும் அறிவார்கள்” என்று ஊக்கப்படுத்தினார் முதல்வர். அடிப்படையில் அவர் ஓர் எழுத்தாளர். இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் வெளியான மூன்று நூல்களின் ஆசிரியர். இந்திய தேசிய கலை, பண்பாட்டு மரபு அறக்கட்டளையை (INTACH) நிறுவியவர்களில் ஒருவர்.

சென்னையில் சுப்ரத் பாக்‌ஷி
சென்னையில் சுப்ரத் பாக்‌ஷி

உரக்கச் சொல்கிறேன். ஒடிசாவில் நான் வகித்த பணிப்பொறுப்புகளில் மிகவும் உயர்ந்ததாகக் கருதுவது பண்பாட்டுத் துறையின் செயலர் பொறுப்பைத்தான். எவ்வளவு பெரிய நம்பிக்கை. இதற்கான மனப்பாங்கை, உடல்மொழியை எனக்குக் கற்றுக்கொடுத்ததே தமிழ்தான்.

2004ஆம் ஆண்டு வெளியிட்ட ஒடிசா பண்பாட்டு வரைபட ஏடு (Cultural Atlas of Odisha) இந்தியாவில் ஒரு முன்னோடி முயற்சி. இந்த வரைபட ஏட்டை வெளியிட்ட முதல்வர் அதில் என்னைக் கையெழுத்திட்டுத் தரச்சொன்ன போது நம்பவே முடியவில்லை. இப்படியெல்லாம் நடக்குமா? பூரி ஜெகநாதர் கோயில் பற்றிய கிழக்கிந்திய கம்பெனியின் இரண்டு முக்கியமான ஆவணங்களை (1805 மற்றும் 1807ஆம் ஆண்டுகள்) தேர்ந்த வரலாற்று அறிஞர் குழுவின் மூலம் ஆராய்ந்து மூல ஆவணங்களை அச்சு வடிவில் முதன்முதலாக வெளிக்கொணர்ந்தபோது ஒடிசா மகிழ்ந்தது.

2004 சட்டமன்ற, நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்கள். இந்தியத் தேர்தல் ஆணையம் ஒடிசாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக என்னை நியமித்து, தேர்தல் நடத்தப் பணித்தது. தேர்தல் முடிந்ததும் அரசிடமிருந்து ஆணையத்திற்குக் கடிதம். தேர்தல் பணிகள் முடிந்துவிட்டதால் நான் ஏற்கெனவே வகித்த பொறுப்புகளில் பேரிடர் மேலாண்மை ஆணையர், பண்பாட்டுத் துறை ஆகிய இரண்டையாவது மீண்டும் கூடுதல் பொறுப்பாக ஏற்க அனுமதிக்கவேண்டும் என்று அரசு கோரியது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்னைத் தொலைபேசியில் அழைத்தார். “பொதுநலன் கருதிப் பேரிடர் ஆணையர் பொறுப்பு என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது ஆனால் பண்பாட்டுத் துறை கூடுதல் பொறுப்பு எதற்கு, நீங்கள்தான் தமிழ்நாட்டுக்காரர் ஆயிற்றே?” என்று தமிழில் கேட்டார். நான் என்ன சொல்வேன். “எனக்கும் புரியவில்லை!” என்றேன்.

ஒடியா மொழிபெயர்ப்பு நூல்
ஒடியா மொழிபெயர்ப்பு நூல்

2018 ஏப்ரல் 28. ‘உத்கல் கவுரவ்’ மதுசூதன் தாஸின் 150வது பிறந்த நாள். புவனேஸ்வரத்தில் முக்கியமான பொதுச் சொற்பொழிவை நிகழ்த்துகிறேன். 2002 முதல் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தச் சொற்பொழிவை நிகழ்த்திய, ஒடியாவைத் தாய்மொழியாகக் கொள்ளாத முதல் சொற்பொழிவாளர் நான் என்பது இந்தத் தமிழ் நெடுஞ்சாலை எனக்கு அளித்த பெருமிதத்திற்குரிய கொடை.

2018 நவம்பர் 30. குடிமைப்பணியிலிருந்து ஓய்வுபெறுகிறேன். அப்படி ஒன்றும் வித்தியாசமான உணர்வுடன் விடியவில்லை அன்று காலை. தெரிந்து காத்திருந்த நாள்தானே. ஆனாலும், அந்த நாள் எதிர்பார்த்ததைவிட உணர்ச்சிகரமாக ஆகிவிட்டது. வாடிக்கையான விடை தரும் நிகழ்வு; பூங்கொத்து மரியாதை; ஊடக நேர்காணல், புகைப்படங்கள் என்பதைத் தாண்டி எனது பணி நிறைவு நாளை எப்படியெல்லாம் திட்டமிட்டிருக்கிறார்கள் என் அன்பிற்குரியவர்கள்.

மாலை 5.45. தலைமைச் செயலக அரங்கில் அனைத்து உயரதிகாரிகளின் கூட்டம். ‘Listening Windows’ (கேட்கும் சாளரம்) என்ற தொகுப்பு ஆவண நூலை முதல்வர் வெளியிடுகிறார். ‘ஒடிசா அறிவுப் புலம்’ (Odisha Knowledge Hub) என்ற பெயரில் எனது துறை ஒருங்கிணைத்த சொற்பொழிவுத் தொடரில் நிகழ்ந்த 18 சொற்பொழிவுகளின் சுருக்கம்; புகைப்படங்களின் தொகுப்பு நூல். அதன் தலைமைத் தொகுப்பாசிரியர் நான். சக இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சித்ரா ஆறுமுகம் முனைப்புடன் தொகுத்தது. நூலை முதல்வர் வெளியிடுகிறார். நான் ஆற்றிய பணிகளுக்கு நன்றி சொல்கிறார். அவர் காட்டிய அன்பிற்கும் அளித்த ஆதரவிற்கும் நன்றி சொல்கிறேன். அந்த நொடியில் ஓய்வு பெற்றேன். ஒடிசா அறிவுப்புலத்தின் மூன்றாவது சொற்பொழிவை (ஏப்ரல் 2, 2016) நிகழ்த்த அழைக்கப்பட்டவர் சுப்ரத் பாக்‌ஷி. உரைகேட்ட முதல்வர், ஒடிசா அரசில் பொறுப்பேற்க அழைத்தார் அவரை.

ஓய்வுபெற்ற 30வது நிமிடத்தில் நான் கலந்துகொண்ட முதல் நிகழ்வும் ஒரு நூல் வெளியீடு. ஒடிசா பற்றிப் பல ஆண்டுகளாக நான் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வுச் சொற்பொழிவுகளின் ஒடியா மொழிபெயர்ப்பு ‘ஆபத பத சின்ஹ’ (உறைந்த பாதச்சுவடுகள்). மொழிபெயர்த்தவர் சங்ராம் மகாபாத்ரா என்ற ஒடிசா ஆட்சிப்பணி அதிகாரி. சுப்ரத் பாக்‌ஷி அந்நூலை வெளியிட்டார். என் மனைவியும் மகள்களும் கைதட்டி மகிழ்ந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். விற்பனையில் முதலிடம் பெற்ற இந்த நூல் மூன்றாம் முறையாக அச்சுக்குச் செல்கிறது.

இந்தியாவின் கடைசி கிராமம் மனா
இந்தியாவின் கடைசி கிராமம் மனா
வசுதரா அருவி
வசுதரா அருவி

2018 டிசம்பர் 15. அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பதினைந்தாவது நாள். ஒடிசா அறிவுப் புலத்தின் அதே மேடை. 19வது சொற்பொழிவாற்ற அரசு என்னை அழைத்தது. ‘வரலாற்றுக்கான உரிமை’ (Right to History) என்ற தலைப்பில் பேசுகிறேன். ஓய்வுபெற்ற இரண்டாம் நாள் சென்னை சென்று அங்கிருந்து சிம்லா சென்று உயராய்வு நூலகத்தில் சிந்துவெளி நூலிற்குக் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தேன். அழைப்பை ஏற்று உரை நிகழ்த்த வந்தேன். உரையின்போது தனது அறையிலிருந்து காணொலித் திரையில் முதல்வர்.

நனவோடையில் நனைந்து மீள் நினைவுகளிலிருந்து மீண்டு நிகழ்களத்தில் நிற்கிறேன். அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் ஒடிசாவின் அழுத்தமான முத்திரைகள். நான் நடந்த பாதையின் சுவடுகள். அரங்கின் நுழைவாயிலில் பத்ம சுதர்சன் பட்நாயக்கின் கைவண்ணத்தில் மணற்சிற்பமாய் நிற்கிறது நூலின் பல்வண்ண முகப்பு அட்டை. திரையில் பத்ம நீல மாதவ பாண்டா இயக்கத்தில் எனது நூல் பற்றிய ஆங்கிலக் குறும்படம். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு மொகஞ்சதாரோ நடன மங்கை செப்புச் சிலை. ஹரப்பா பண்பாட்டுக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்ப முறை. ஒடிசா பழங்குடி உலோகச் சிற்பக் கலைஞர்கள் அபிராம் ஹேம்ரம், அனம் டுடு ஆகிய இருவரின் படைப்பு.

ஒடிசா அறிவுப்புலத்தில் உரையாற்ற வந்த அமெரிக்க விண்வெளி வீரர் ஜேக் டேவிட்
ஒடிசா அறிவுப்புலத்தில் உரையாற்ற வந்த அமெரிக்க விண்வெளி வீரர் ஜேக் டேவிட்

மேடையைப் பார்க்கிறேன். தமிழ் தனக்காகத் தோண்டி எடுத்த தொல்பொருள் ஆணையர் த.உதயச்சந்திரன். 2019 ஆகஸ்டில் கீழடிக்கு அவருடன் சென்றேன். இயக்குநர் சிவானந்தன், அகழ்வாய்வாளர்கள் தடயங்களை விளக்கினார்கள். கீழடி 4-ஆம் 5-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கை தாமதமின்றி (செப்டம்பர் 2019) வெளியானது. எப்பொழுதோ சூட்டிய இந்த நூலின் தலைப்பிற்குக் கீழடி அளித்த புத்தொளி தரவு; இனிய வரவு. அறிக்கை வெளியான 24 மொழிகளில் ஒடியாவும் ஒன்று. அகழ்வாய்வாளர் சுனில் குமார் பட்நாயக் அப்போதுதான் மொழிபெயர்த்து முடித்திருந்தார்.

யாருக்கு எப்படியோ, எனக்குத் தெரியாது. என் மட்டில் தமிழ் இலக்கியம் படித்தேன் என்பதால் மட்டுமே குடிமைப் பணி சாத்தியமானது. ஒடிசாவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது என்பதால் மட்டுமே இந்தத் தமிழ் நெடுஞ்சாலைப் பயணம் வைகை நதிக்கரையில் தொடங்கி மகாநதி வழியாக சிந்துவெளியை அடைந்து கீழடியைத் தொட்டிருக்கிறது.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றெனும் புரிதல் எனக்கு பல்கலைக்கழகங்கள் புகட்டிய வெளிச்சம் அல்ல. ஒடிசாவின் பழங்குடி காடுகள் நடத்திய பாடம். ‘இந்தியத் துணைக்கண்ட பண்பாடு ஓர் உருக்குப் பானை (Melting Pot) அல்ல; சாலட் கிண்ணமும் (Salad Bowl) அல்ல; அது ஒரு மழைக்காடு (Rain Forest)’ என்பது நான் வாசித்தறிந்தது அல்ல; வாழ்ந்து அறிந்தது.

“வெளியே வானம் பெரிதாய் இருந்தாலும் அதற்குக் கூரையே இல்லை” என்று குறை சொன்ன நான் என் மண்வாசனையை மறக்கமுடியாமல் இப்படி எழுதினேன்,

‘ஓர் ஆகஸ்ட் மாதத்து,
மன்னிக்கவும்,
ஓர் ஆவணி மாதத்து
மாலையில் நான்
ரயிலேறிய போது
நீ
அழுதுகொண்டே
விடை கொடுத்தாய்.
அம்மா…
அப்போது நான்
வீரன் வேஷம்
போட்டு இருந்ததால்
அழவே இல்லை.
விடிந்த பிறகு
வேஷம் கலைந்து
அழத்தொடங்கினேன்.
இன்னும்
நிறுத்தவே இல்லை
(அன்புள்ள அம்மா, 1991)

இது அப்போதைய களநிலவரம். மனக்கலவரம். காலம் நமது காயங்களுக்கு எப்படியெல்லாம் கட்டுப்போட்டு ஆறவைக்கிறது. இதோ, இங்கேயும் அதே வானம். எனக்கான நிலா என்னோடு பேசுகிறது நான் எங்கிருந்தாலும்.

கீழடியில்... உதயச்சந்திரன்
கீழடியில்... உதயச்சந்திரன்

இப்போது எனக்கு 63 வயது. ஒடிசாவில் மீண்டும் பணிப்பொறுப்பு. பேச்சுக்குச் சொல்லவில்லை, எத்தியோப்பியாவில் ஒரு செயல் என்னால்தான் நடைபெற வேண்டும் என்றால் தயங்காமல் அங்கிருப்பேன். அதுபோல எங்கெனினும். ‘மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினிதுறையும்முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ (பட்டினப் பாலை 216-218) என்ற வரிகளால் வெறுப்புணர்வு இல்லாத பொறுப்புணர்வை எனக்குள் எப்போதோ விதைத்த தமிழின் தாள்களைத் தொட்டு வணங்குகிறேன். எந்தப் புள்ளியில் எந்தத் துளியில் எந்த மொழியில் தனது பெயர் எப்படி மாறியது என்ற உணர்வின்றி ஓடுகிறது உலக நதி.நடக்க நடக்க வளர்கிறது எனது தமிழ் நெடுஞ்சாலை. அட்சரேகைகளும் தீர்க்கரேகைகளும் கற்பனைக் கோடுகள். யாதும் ஊரே யாவரும் கேளிர்!

நன்றியும் வணக்கமும்.

அன்புடன்,

ஆர்.பாலகிருஷ்ணன், புவனேஸ்வரம்.

தமிழ் நெடுஞ்சாலை - 40 - யாதும் ஊரே...