மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 6 - எத்திசைச் செலினும்

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

‘ஞாயிறு போற்றும்’ பழங்குடிப் பண்பாடுகளின் ஊடாகப் பயணிக்கும்போதெல்லாம் சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்தும் சேர்ந்தே ஒலிக்கும்.

"முதலமைச்சர் பேசுவார்” என்று அவரின் உதவியாளர் தொலைபேசியில் சொன்னார். அதைத் தொடர்ந்து மறு முனையில் முதலமைச்சர் பிஜு பட்நாயக். நான் வணக்கம் சொல்லி முடிப்பதற்கு முன் அவர் சொன்னார்.

“பாலகிருஷ்ணன், உங்களை நார்வேக்கு அனுப்புகிறேன். பாஸ்போர்ட் இருக்கிறதா?”

“இல்லை சார்” என்றேன்.

“பாஸ்போர்ட் இல்லையா! உடனே ஏற்பாடு செய்யுங்கள். கிளம்புவதற்கு முன் என்னை நேரில் பாருங்கள்…’’

அது 1991-ம் ஆண்டு. ஒடிசா மாநில நிதிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பொறுப்பில் இருந்தேன். எதிர்பாராமல் நேர்ந்த எனது முதல் விமானப் பயணம் போல, இப்போது திடீரென்று முதல் வெளிநாட்டுப் பயணம். நார்வே புறப்படும் முன்பு முதல்வரைப் பார்க்கச் சென்றேன்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

“நார்வே அருமையான நாடு, குளிர் கடுமையாக இருக்கும்” என்று ஆரம்பித்தவர், “போன இடத்திலும் வேலையே கதி என்று இருக்காமல் ஒரு சுற்றுலாப் பயணியைப்போலச் சுற்றிப் பாருங்கள். நார்வே நாட்டின் பாரம்பரிய முறைப்படி சமைக்கப்படும் ‘ஸ்மோக்டு சால்மன்’ (Smoked Salmon) மீன் தனிச் சுவையாக இருக்கும். சாப்பிடுங்கள்” என்று முடித்தார்.

1991 ஜூலையில் இந்தியா தனது புதிய பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை அறிவித்திருந்தது. இதன் பின்னணியில் பல்வேறு வெளிநாட்டுத் தொழில் முனைவோர் அமைப்புகளிடம் கலந்துரையாட இந்தியக் குழுக்கள் அனுப்பப்பட்டன. நார்வே சென்ற குழுவில் நான். எங்கள் குழுவின் தலைவர், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.பி.டண்டன். ஹிமாசலப் பிரதேசத்தின் தொழில்துறைச் செயலாளர்.

பயணக் களைப்பு இருந்தாலும் எளிதில் தூக்கம் வரவில்லை. நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அந்த நட்சத்திர விடுதியின் அறையிலிருந்த மேஜையில் ஒரு பைபிளும், ஒஸ்லோ நகரின் டெலிபோன் டைரக்டரியும். நான் டைரக்டரியை எடுத்துப் புரட்டினேன். இடையிடையே பல தமிழர்களின் பெயர்கள் கண்ணில் பட்டன. பெயர்களைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது, இலங்கைத் தமிழர்கள்.

மறுநாள் ஒஸ்லோவின் மையப்பகுதியில் ஒரு கடை வளாகத்தில் நான்கைந்து பேர் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழ் காதில் விழுந்த இடத்தில் நின்று ‘நீங்கள் எந்த ஊர்’ என்று கேட்பது மதுரைக்காரனின் பாத்திரப்படைப்பு. ‘ஒஸ்லோவில் இந்திய உணவகம் எங்கே இருக்கிறது, பார்க்க வேண்டிய இடங்கள் எவை’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

பயணம் தொடங்கிய இரண்டாவது நாளே இந்தியக் குழுவின் தொடர்பாளராக (Spokesperson) என்னை அறிவித்து வியப்பூட்டினார் குழுவின் தலைவர். அவர் எதிர்காலத்தில் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவார் என்பதும், நான் அவரது தலைமையின் கீழ் துணைத் தேர்தல் ஆணையராக சவால்கள் மிகுந்த மேற்கு வங்காளத் தேர்தலை 2006-ல் பொறுப்பேற்று நடத்துவேன் என்றும் அப்போது நினைக்கவே இல்லை!

3.85 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புடைய நார்வேயின் மக்கள்தொகை இப்போதுகூட 53 லட்சம்தான். இதில் கணிசமானவர்கள் பல வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள். 174 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாநகரின் மக்கள்தொகை, நார்வேயின் மக்கள் தொகையைவிட அதிகம். நவம்பர் மாத இறுதியிலிருந்து ஜனவரி வரை வடதுருவப் பகுதிகளில் அடிவானத்திலிருந்து சூரியன் எழுவதே இல்லை. சரியாக அந்த நேரத்தில் அங்கே சென்றிருந்தேன். மின்விளக்கு வெளிச்சத்தில் மூன்று வேளையும் சாப்பாடு. முதன்முதலில் பனிப்பொழிவில் நனைந்தது தனிப் பரவசம்.

ஒஸ்லோ, ஸ்டவங்கர், கிறிஸ்டியன்ஸாண்ட், பெர்கன் போன்ற முக்கியமான நகரங்களுக்குச் சென்றோம். பல்வேறு தொழிற்சாலைகளைப் பார்வையிட்டோம். தொழில் முனைவோர் கூட்டமொன்றில் எனக்கு அருகே அமர்ந்திருந்த ஒருவரின் சிறிய கைப்பெட்டியிலிருந்து இடையிடையே ஒரு மணியோசை. உடனே அவர் வெளியே சென்று ஒரு கருவியைக் கையில் எடுத்துப் பேசிவிட்டு வருவதைக் கவனித்தேன். ஆர்வம் தாங்கமாட்டாமல் “அது என்ன” என்று கேட்டேன். “மொபைல் போன்” என்றார். உணவு இடைவேளையின்போது அது எப்படி வேலை செய்கிறது என்பதை அவர் விளக்கினார். ‘கைப்பேசி’ என்ற ஒன்று இருப்பதை அன்றுதான் நேரில் பார்த்தேன். வியப்பாக இருந்தது.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

நார்வே நாட்டின் நரம்பு நாளங்களில் சாகசம் ஓடுகிறது. தென் துருவம், வட துருவம் ஆகிய இரண்டிலும் முதன்முதலில் கால் பதித்த நார்வேக்காரர் ரோஅல்ட் அமண்ட்சன் (Roald Amundsen). ஆனால் எனது நார்வே ஹீரோ, தோர் ஹெயர்டால் (Thor Heyerdahl). ஆகச்சிறந்த சாகசக் கடலோடி. அத்துடன் அவர் ஒரு எழுத்தாளர் என்பதால்,

‘எல்லைகளா, அப்படி என்று எதையும் நான் பார்த்ததே இல்லையே; ஆனால் எல்லை என்பது சிலரது எண்ணத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன்’ என்று அவர் எழுதியது கவிதை போலத் தோன்றும். ஆனால், கடல்களை வென்று அவர் கண்டறிந்த அனுபவம் அது. ஒஸ்லோவிலுள்ள ‘கோன்-டிக்கி’ (Kon-Tiki) அருங்காட்சியகத்தில் ஹெயர்டால் சாகசப் பயணம் செய்த மரத்தெப்பம் (raft) காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பயணம் பற்றி எப்போதோ படித்திருந்தேன். ஆனால், கோன்-டிக்கி என்ற பெயர்தான் மனதில் பதிந்திருந்ததே தவிர, ஹெயர்டாலின் பெயரையும், அவர் நார்வேக்காரர் என்பதையும்கூட மறந்து விட்டிருந்தேன்.

கோன்-டிக்கி என்பது பெரு நாட்டு சூரியக் கடவுளின் பழைய பெயர். கோன் - டிக்கி தெப்பத்தின் அருகில் நிற்கும்போதே, கோனார்க் சூரியக் கோயில்தான் நினைவுக்கு வந்தது. ஒடிசாவின் சுற்றுலா, பண்பாட்டுத்துறைச் செயலாளராக இருந்தபோது கோனார்க் பற்றியும் சூரிய வழிபாடுகள் பற்றியும் துருவத் தொடங்கினேன். கோனார்க் சூரியக் கோயிலில் தொடங்கி பிரிட்டிஷ் சாலிஸ்பெரியிலுள்ள கல்வட்டத்திற்கும் (Stonehenge), ஜப்பானின் அமதிரசு கோயிலுக்கும், காஷ்மீரின் மார்த்தாண்ட் சூரியக் கோயிலுக்கும் தமிழ் நெடுஞ்சாலை என்னை நேரில் அழைத்துச்சென்றது. ‘ஞாயிறு போற்றும்’ பழங்குடிப் பண்பாடுகளின் ஊடாகப் பயணிக்கும்போதெல்லாம் சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்தும் சேர்ந்தே ஒலிக்கும்.

கொரோனா முதல் அலை. அக்டோபர் 17, 2020 அன்றிரவு இணைய வழியாக நான் நிகழ்த்தவிருந்த ‘சங்கச்சுரங்கம்’ உரைக்கான இறுதி வரைவைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். அது இருபதாவது உரை. ‘எத்திசைச் செலினும்’ என்ற தலைப்பு ஒளவையாரின் தன்மானத் தமிழ்க் கொடை.

அதியமான் நெடுமான் அஞ்சியின் வீட்டு வாசலில் ஔவையார். அவரை வீட்டிற்குள் அழைப்பதில் காலதாமதம். ஔவையாரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வாசலில் நின்ற காவலாளியிடம் சொல்கிறார், “அறிவும் புகழும் கொண்டவர்கள் இறந்து விட்டார்கள் என்பதற்காக இந்த உலகம் வெற்றிடம் ஆகிப்போவதில்லை. மரம் வெட்டும் தச்சரின் திறமை வாய்ந்த பிள்ளைகள் கோடரியுடன் நுழையும் காடு போன்றது இவ்வுலகம். எந்தத் திசையில் சென்றாலும் அங்கே சோறு கிடைக்கும்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பிப்போகிறார்.

ஔவையாரின் ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ என்ற புறநானூற்றுப் பாடல்(206) வரியை மீண்டும் மீண்டும் யோசிக்கிறேன். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’; ‘பெரிதே உலகம் பேணுநர் பலரே’ என்றெல்லாம் சங்க இலக்கியத்தால் எப்படிப் பேசமுடிந்தது? இது தனி மனிதர் தமிழா, இல்லை, பயணங்களால் பட்டை தீட்டப்பட்ட ஒரு நாகரிகத்தின் பட்டறிவுப் புரிதலா? இந்தப் பரந்த உலகத்தில் அன்றுமுதல் இன்றுவரை தமிழர் நடந்த தடம் எல்லாம் தமிழும் நடந்திருக்கிறது. மின்னல் வெட்டியதுபோல எனக்குள் வந்து போகிறது, நார்வேயில் அந்த இரவில் நான் புரட்டிப் பார்த்த டெலிபோன் டைரக்டரி.

உடனே ‘நார்வே தமிழர்கள்’ என்று கூகுளில் தேடுகிறேன். அப்போதுதான் நான் அண்மையில் இணையத்தில் வாசித்தறிந்திருந்த ஒரு தமிழ்ச்சாதனை மீண்டும் கண்ணில் பட்டது. ‘துந்ரா தமிழர்கள்’ என்ற ஆவணப்படம் (Tamils of the Tundra). வடதுருவத்தின் வாசல்படி வரை குழந்தை குட்டிகளோடு சென்று வாழ்ந்து காட்டிய இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் பற்றியது.

வார்தோ என்ற இடம் ஒஸ்லோவிலிருந்து இன்னும் வடக்கே 2,000 கி.மீ. யாழ்ப்பாணத்திலிருந்து பார்த்தால் 10,000 கி.மீ தூரம். 1987-ல் அங்கு சென்ற சுந்தரம், அவரின் மனைவி சிவயோகம் சிவநேசன், பனிச்சறுக்கு வண்டியில் விளையாடும் தமிழ்க் குழந்தைகள்; மீன் பதனிடும் தமிழர்கள், ஷிஃப்ட் மேலாளர் ரவீந்திரன் துரைசிங்கம்; கடை வைத்திருக்கும் தமிழ்ப் பெண் என்று நகர்கிறது அந்த ஆவணப்படம்.

‘சங்கச் சுரங்கம்’ உரை தொடங்க இன்னும் சில மணி நேரமே இருந்தது. நார்வே தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முருகையா வேலழகன் தொடர்பு எண்ணைக் கண்டுபிடித்து வாட்ஸப் அனுப்புகிறேன். ‘வார்தோ ஆவணப் படத்தில் இடம்பெறும் யாருடனாவது நான் பேச முடியுமா’ என்று கேட்கிறேன். ‘அங்கே ஷிஃப்ட் மேனேஜராக இருந்த ரவீந்திரன் துரைசிங்கம் எனக்குத் தெரிந்தவர்தான்’ என்கிறார்.

அன்று இரவு இணையத்தில் எனது உரை. உரையின் முடிவில் சில நிமிடங்கள் துரை சிங்கத்தையும், வேலழகனையும் பேச அழைக்கிறேன். பேசுகிறார்கள்.

‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ என்று ஔவையார் முழங்கிய சுயமரியாதைத் தமிழுக்கான சமகால சாட்சியம் அது. என் மனசில் அயலகம் என்ற ஆறாம் திணையின் உறைபனி கரைந்து உருகி ஓடுகிறது.

உலகம் என்ன அவ்வளவு பெரியதா!

தமிழ் கூறு நல்லுலகம் என்ன அவ்வளவு சிறியதா!

- பயணிப்பேன்...

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

கோன்-டிக்கி

கோன்-டிக்கி என்பது இன்கா மொழியில் பெரு நாட்டு சூரியக் கடவுளின் பழைய பெயர். 1947-ல் தோர் ஹெயர்டால் சாகசப் பயணம் செய்த அந்த மிதவைப் படகிற்கு கோன் டிக்கி என்று பெயரிட்டார். பால்சா மரக்கட்டைகளால் பழங்கால முறைப்படி வடிவமைக்கப்பட்ட தெப்பப் படகில் பெரு நாட்டிலிருந்து புறப்பட்டார். பசிபிக் பெருங்கடலில் 4,300 கிலோ மீட்டர் தூரத்தை 101 நாள்களில் கடந்து பாலினீசிய தீவுக் கூட்டங்களில் ஒன்றான ‘டுவா மொட்டு’ என்ற தீவை அடைந்தார்.

கோன் டிக்கி சாகசப் பயணம் பற்றி ஹெயர்டால் 1948-ல் நார்வேஜியன் மொழியில் எழுதிய நூல், பல மொழிகளில் வெளியானது. இந்தப் பயணம் பற்றிப் பல ஆவணப் படங்களும் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் வந்துவிட்டன.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது