மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 7 - புயல் வந்த போதிலும்...

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

பேரிடர் மேலாண்மையில் இன்று தேசிய அளவில் மட்டுமன்றி உலகளவிலும் ஒடிசா தனி முத்திரை பதித்திருக்கிறது.

2003 ஆகஸ்ட் இறுதியில் ஒருநாள். ஒடிசா மாநிலத்தின் மகாநதி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் விடாத பேய்மழை. ஹீராகுட் அணையில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ‘58 மதகுகள் வரை திறக்க நேரும்’ என்று அபாயச் சங்கு ஊதுகிறது நீர்வளத் துறை. ‘டெல்டா பகுதி என்ன ஆகும்’ என்ற பதற்றம். வெள்ளம் சூழக்கூடிய பகுதிகளில் முன்கூட்டியே நிவாரணப் பொருள்களுடன் கள அலுவலர்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் ‘போர் அறை.’ அப்போது நான் ஒடிசாவின் பேரிடர் மேலாண்மை ஆணையர். முதல்வர் அலுவலகத்திலிருந்து அவரின் கூடுதல் செயலர் தொலைபேசியில் சொல்கிறார் “இன்னும் பத்து நிமிடங்களில் முதல்வர் உங்கள் அறைக்கு வருகிறார்.”

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

அதிகாரிகளை ‘அலர்ட்’ செய்கிறேன். மேஜையில் தாறுமாறாகச் சிதறிக்கிடந்த பேப்பர்களை ஒழுங்கு செய்துவிட்டு. அருகிலிருந்த மேஜைக் கணினியின் திரையில் வெள்ளத்தில் மூழ்கக்கூடிய பகுதிகள் பற்றிய கணிப்பு வரைபடத்தைத் தயாராக வைக்கிறேன். `நோட் பேடில்’ சில புள்ளிவிவரங்கள்.

முதல்வர் நவீன் பட்நாயக் அறைக்கு வருகிறார். உடன் அவருடைய அலுவலக அதிகாரி ஒருவர், பாதுகாப்புக் காவலர், சில தொலைக்காட்சி காமிராக்கள். வெள்ள அபாயம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கினேன். “ஒவ்வொரு உயிரும் முக்கியம். தேவையான அனைத்தையும் செய்வோம். ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லிச் செல்கிறார்.

இது ஒரு புதிய உடல்மொழி. இது ஒரு புதிய நடைமுறை. எனக்குத் தெரிந்து மாநில முதல்வர் பேரிடர் கள நிலவரம் பற்றி உரையாட ஓர் அதிகாரியின் அறைக்கு நேரில் சென்றது இதுதான் முதல் தடவை. 2003 வெள்ளம் கடந்த ஒரு நூற்றாண்டின் மிகப்பெரிய வெள்ளங்களில் ஒன்று. 1999 கடும் புயலின்போது ஏராளமான ஹெலிகாப்டர்கள், விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. 60 கோடி பில் வந்தபோதுதான் ‘எதுவும் இலவசம் இல்லை’ என்று தெரிந்தது. ‘செத்த ஆடு கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்’ என்பதுபோல பேரிடர் வந்த பின் வானத்திலிருந்து உதவுவது என்றால் செலவு அதிகரிக்கத்தான் செய்யும். இதனால் வெள்ள நீர் கிராமங்களைச் சூழ்வதற்கு முன் உணவு தானியங்கள், நிவாரணப் பொருள்களுடன் ஒரு கள ஊழியரை ஒவ்வொரு கிராமத்திலும் முன்கூட்டியே நிறுத்திவிட்டோம்.

ஹெலிகாப்டர்கள் தேவையில்லை என்று முடிவு செய்தபோது ஊடகங்களில் வியப்பும் வினாக்குறிகளும். நிவாரணப் பணிகளும் ஹெலிகாப்டர்களும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். விசாகப்பட்டினத்திலும், மேற்கு வங்காளத்தில் உள்ள கலேய் குண்டாவிலும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் இருந்தாலும் ஒடிசாவுக்குக் கொண்டு வரவில்லை. அப்போது நகராட்சித் தேர்தல் சமயம் என்பதால் இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியது. இருந்தாலும், ‘பேரிடர்க் காலங்களில் தன் கையே தனக்குதவி என்று தரையில் கால்வைத்து நிற்கப் பழக வேண்டும். அண்ணாந்து பார்த்துக் கையேந்தக் கூடாது’ என்ற புதிய அணுகுமுறையில் மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உறுதியாக இருந்தார்.

வெள்ளத்தின் சூழ்நிலையைப் பொறுத்து ‘ஆன் தி ஸ்பாட்’ முடிவெடுக்கும் உரிமை கள அதிகாரிகளுக்கும், ஊராட்சித் தலைவர்களுக்கும் முன்கூட்டியே எழுத்து மூலம் வழங்கப்பட்டது “இந்தத் திட்டம், அந்தத் திட்டம் என்றெல்லாம் இல்லை. உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு தானியமும் ஒவ்வொரு நயா பைசாவும் வெள்ள நிவாரணத்துக்குத்தான். செலவழித்துவிட்டுத் திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கள அதிகாரிகளிடம் தெளிவாகச் சொன்னோம். அப்போது பி.கே.மொஹந்தி தலைமைச் செயலராக இருந்தார். நான் நேரத்திற்கு சாப்பிடுவதில்லை என்று கேள்விப்பட்ட அவர், தொடர்ந்து இரண்டு நாள்கள் இரவு 11 மணியளவில் என் அலுவலக அறைக்கு வந்து அமர்ந்து, வீட்டிலிருந்து ஏற்கெனவே வந்திருந்த இரவு உணவைச் சாப்பிட வைத்துச் சென்றது மறக்கமுடியாதது. தலைமைப்பண்பு அது.

தமிழ் நெடுஞ்சாலை - 7 - புயல் வந்த போதிலும்...

2003 அக்டோபர் முதல் வாரம். வெள்ளத்தின் பாதிப்புகள் பற்றி நேரில் விளக்கி மத்திய அரசின் உதவி கோருவதற்காக டெல்லியில் பிரதமர் வாஜ்பாயை சந்திக்கிறார் முதல்வர் நவீன் பட்நாயக். நானும் அவருடன் சென்றிருக்கிறேன். வெள்ளப் பேரிடரை ஒடிசா மிகுந்த தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்ட விதம் பற்றி பிரதமர் பாராட்டினார். குறிப்பாக ‘ஹெலிகாப்டர் உதவி தேவையில்லை’ என்றது பற்றியும், வெளி நிவாரண உதவிகளை வேண்டாம் என்று மறுத்ததையும் பிரதமரே சுட்டிக்காட்டி, ‘எவ்வாறு நிகழ்ந்தது’ என்று கேட்டார். முதல்வர் என்னை விளக்கச் சொன்னார். ஒடிசாவின் புதிய அணுகுமுறைகள் பற்றி நான் விவரித்தேன்.

பேரிடர் மேலாண்மையில் இன்று தேசிய அளவில் மட்டுமன்றி உலகளவிலும் ஒடிசா தனி முத்திரை பதித்திருக்கிறது. 2004-ம் ஆண்டு அந்தமான் நிகோபார், தமிழ்நாடு மற்றும் பல இடங்களை சுனாமி தாக்கியபோது ஒடிசா மாநிலம் நிவாரணப் பணியில் களமிறங்கியது. விமானம் மூலம் நிகோபார் தீவுகளைச் சென்று சேர்ந்த முதல் நிவாரணப் பொருள்கள், ஒடிசாவிலிருந்து சென்றவைதான்.

வெள்ளம் போலவே வேகமாக ஓடுகிறது காலம். 2017, ஜூலை 16-ம் தேதி. ராயகடா என்ற மாவட்டத்தில் திடீர் வெள்ளம். அப்போது நான் மாநில வளர்ச்சி ஆணையராக இருக்கிறேன். பேரிடர் மேலாண்மையின் நேரடிப் பொறுப்பில் இளைய தலைமுறை அதிகாரிகள். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. பிஜூ பட்நாயக் பூங்காவில் காலை நடைப்பயிற்சியில் இருக்கும்போது கைப்பேசியில் அழைப்பு. “வெள்ளம் பற்றி நேரடி ஆய்வு செய்ய முதல்வர் பேரிடர் கண்ட்ரோல் ரூமுக்கு இன்னும் சிறிது நேரத்தில் செல்வார். நீங்களும் வந்துவிடுங்கள்.” கண்ட்ரோல் ரூமுக்குச் செல்கிறேன், சிறிது நேரத்தில் முதல்வர் அங்கு வருகிறார். அரை மணி நேர ஆலோசனைக்குப் பிறகு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எல்லா நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள தனது கையெழுத்திட்ட ஓர் ஆணையைக் கையில் கொடுத்துவிட்டுச் செல்கிறார். 2003-ம் ஆண்டு முதல்முதலாகப் பேரிடர் போர் அறைக்கு (War Room) முதல்வர் வந்தது நேற்றுப்போல இருக்கிறது. நனவோட்டத்தில் கடந்த நாள்கள். மேலும் பின்னோக்கிப் பயணிக்கிறேன்.

நிவாரண இடம்
நிவாரண இடம்
புயல் பாதிப்பு பகுதி
புயல் பாதிப்பு பகுதி

1999-ம் ஆண்டு ’சூப்பர் சைக்ளோன்’ காட்சிகள் மனத்திரையில் விரிகின்றன. அக்டோபர் 29-ம் தேதி புயல் கரை கடப்பதற்கு முதல் நாள் வாய்மொழி உத்தரவாக என்னை மயூர்பன்ஜ் மாவட்டத்துக்கு அனுப்பினார் தலைமைச் செயலாளர். புயல் திசைமாறி வேறு பல மாவட்டங்களைத் தாக்கியது. 13 மாவட்டங்கள் சின்னாபின்னமாகின. தகவல்தொடர்புகள் முற்றிலும் அறுபட்ட நிலையில், வங்கிகளில் அரசுக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து மேற்கு வங்காளத்திலிருந்து லாரி லாரியாக வாங்கி அனுப்பிய நிவாரணப் பொருள்கள்தான் பல மாவட்டங்களைச் சென்று சேர்ந்த முதலுதவி என்பதை நினைத்துப் பார்த்தால் நிறைவாக இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை அரை கிலோ மீட்டர் நீளத்துக்குச் சேதம் அடைந்தது. ரயில் போக்குவரத்து இல்லை. பத்ரக் மாவட்டத்தில் நிலைமை கைமீறிப் போவதை ஒரு போலீஸ் ஐ.ஜி வயர்லெஸில் சொல்கிறார். அங்கே மத்திய அரசின் ஓர் உணவுக் கிட்டங்கியில் ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகள் கையிருப்பில் இருந்தன. ஆனால், கிட்டங்கி மேலாளர் ஊரில் இல்லை. மத்திய அரசின் உடமை என்பதால் உள்ளூர் கலெக்டருக்குத் தயக்கம் இருந்தது நியாயம்தான். அவர் ஓய்வு பெற ஓரிரு மாதங்களே இருந்தன. இந்தப் பிரச்னையில் குறுக்கிட்டு, மத்திய அரசின் உணவு கிட்டங்கியின் பூட்டை சாட்சியங்களுடன் உடைக்கச் சொல்லி, தேவையான அரிசி மூட்டைகளை எடுத்துக்கொண்டு அறிக்கை அனுப்பச் சொன்ன அந்த நிமிடங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

`இப்படிச் செய்யலாமா, செய்யக்கூடாதா’ என்று யோசிப்பதற்குக்கூட நேரமில்லை என்பதோடு, அதற்கு வழிகாட்டக்கூடிய முன்னுதாரணங்களும் அப்போது இல்லை. ஆனால், ‘பாதிக்கப்படாத ஒரு மாவட்டம், பாதிக்கப்பட்ட மாவட்டத்துக்குத் தானே முன்வந்து நிவாரணப் பணிகளில் எல்லா வகையிலும் உதவ வேண்டும்’ என்பது இப்போது விதிமுறைகளுக்கு உட்பட்ட நடைமுறை. அப்படி உதவும் மாவட்டங்களுக்கு ‘கேட்-வே’ என்று பெயர்கூட வைத்துவிட்டோம். இப்போது யாரும் பயப்படத் தேவையில்லை.

2013 ஃபைலின் புயல் 220 கி.மீ வேகத்தில் ஒடிசாவைத் தாக்கியது. 36 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். சாவு எண்ணிக்கை 44 மட்டுமே. இதை 1999 சூறாவளியினால் 10,000 பேர் உயிரிழந்தார்கள் என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான், இந்த மீட்புப் பணிகளின் வீரியம் புரியும். இந்தப் புயலை ஒடிசா கையாண்ட விதம் உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தது. ஐ.நா சபையின் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஒடிசா அரசுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது. அப்போது டெல்லியில் ஐந்து மாநிலத் தேர்தல் பணிகளில் இருந்தேன். பேரிடர் மேலாண்மையில் ஒடிசா எட்டிய கூட்டுப் பெருமிதத்தை தூரத்தில் இருந்தாலும் நானும் உணர்ந்து நெகிழ்ந்தேன்.

இப்போது சென்னை வெள்ளம், கேரள வெள்ளம்; ஆந்திரா, மேற்கு வங்கப் புயல் என்று எங்கே பேரிடர் என்றாலும் அங்கே ஒடிசாவின் மீட்புப் படையினர். எத்தனை பேரிடர்கள், எத்தனை இழப்புகள். கடந்து வந்த பாதைகளும், கற்றுக்கொண்ட பாடங்களும்தான் ஒடிசாவை வழிநடத்துகின்றன.

``யாரிடம் கேட்டு மத்திய அரசுக் கிட்டங்கியின் பூட்டை உடைக்கச் சொன்னீர்கள்” என்று யாரும் என்னிடம் கேட்கவில்லை. ஆனால், அத்தகைய சூழ்நிலையில் பூட்டை உடைக்கவில்லை என்றால் இப்போது நிச்சயம் கேள்வி கேட்போம்.

சார்ல்ஸ் ஆலன் சொல்வதைப் போல, வாழ்க்கையில் நல்லன அல்லாதவற்றைவிட அதிகமாய் இருப்பது நல்லவைதான். சூறாவளிகளைவிட அதிகமாய் சூரிய உதயங்கள்.

- பயணிப்பேன்...

புயல் பாதிப்பு பகுதி
புயல் பாதிப்பு பகுதி
புயல் பாதிப்பு பகுதி
புயல் பாதிப்பு பகுதி

ஒடிசாவைக் கேளுங்கள்: ‘தி நியூயார்க் டைம்ஸ்’

பேரிடர்கள் ஆபத்தானவை. அதே நேரத்தில் அவை கற்றுத்தருகிற பாடங்கள் பயனுள்ளவை. 1999-ல் 300 கி.மீ வேகத்தில் வீசிய சூப்பர் சைக்ளோன் ஏற்படுத்திய பேரழிவு மறக்கமுடியாதது. ஆயினும் பேரிடர் மேலாண்மையில் தேசிய அளவில் மட்டுமன்றி உலக அளவிலும் ஒடிசா முன்னிலை பெற அதுவே திருப்புமுனையான படிப்பினை.

2019-ம் ஆண்டு ஒடிசாவில் நான்கு கட்டமாக நடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 29-ம் தேதிதான் முடிவடைந்திருந்தது. மே 23, வாக்கு எண்ணிக்கை. இதற்கிடையில் மே 3-ம் தேதி ஃபனி புயல் ஒடிசாவைத் தாக்குகிறது. மணிக்கு 200 கி.மீ வேகம். தேர்தல் பணியில் களைத்துப்போயிருந்த அரசு இயந்திரம் அசுர வேகத்தில் செயல்படுகிறது. சில மணி நேரத்தில் 14 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டதால் உயிரிழப்பு 40 மட்டுமே. ‘வாஷிங்டன் போஸ்ட்’ இது பற்றி வெளியிட்ட ஒரு நீண்ட செய்தியின் நீளமான தலைப்பு, ‘இந்தியாவின் பேரழிவுப் புயல் ஃபனி ஏன் 10,000 பேரைப் பழிவாங்காமல் 40 பேரை மட்டும் கொன்றது? நன்றி மக்களாட்சிக்கும் தொழில்நுட்பத்திற்கும்.’ 

‘மில்லியன் மக்களைப் புயலிலிருந்து காப்பது எப்படி? இந்தியாவிலுள்ள ஒரு ஏழை மாநிலத்தைக் கேளுங்கள்’ என்ற தலைப்பில் புகழாரம் சூட்டியது ‘தி நியூயார்க் டைம்ஸ்.’

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது