Published:Updated:

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 1

தங்கமலை ரகசியம்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கமலை ரகசியம்

மேகக் கூட்டங்கள் உரச கம்பீரமாக உயர்ந்து நிற்கும் தேவாலா மலைத்தொடர்களின் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது தேவாலா டவுன்

குமரி தொடங்கி குஜராத் வரை 1,600 கிலோமீட்டர் நீளும் மேற்குத் தொடர்ச்சி மலை எத்தனையோ ரகசியங்களை தன்னுள் புதைத்துவைத்திருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான், நீலகிரியின் தேவாலா. மனிதர்கள் சிலரது ஆசைக்கும் நிராசைக்கும், வாழ்வுக்கும் சாவுக்குமான இடைவெளியில் இருளடர்ந்த பூமிக்குள் நீள்கின்றன தேவாலா மலைத்தொடரின் திகிலடைந்த தங்கச் சுரங்கங்கள். சட்டவிரோதம் என்பது மட்டுமல்ல... உள்ளே இறங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது தெரிந்தும்,

புற்றுக்குள் ஊறும் எறும்புகளைப்போல சாரை சாரையாகச் சுரங்கங்களுக்குள் ஊர்கிறது ஒரு கூட்டம். எங்கோ இருப்பவனின் பேராசைக்காக வயிற்றைக் கழுவிக்கொள்ள உயிரைப் பணயம் வைப்பவர்களும் உண்டு... புதையல் வெறியில் புதைந்துபோகத் துணிபவர்களும் உண்டு. என்ன நடக்கிறது அடர்வனத்தில்?

கடந்த அக்டோபர் மாதம்... மொத்த வனத்துறையினரும் டி-20 புலியைத் தேடிக்கொண்டிருந்த நாள்கள் அவை. நள்ளிரவு யானைகளின் திடீர் பிளிறல் தேவாலா வனத்தையே உலுக்கியது. இரவு முழுவதும் பிளிறல் தொடர்ந்ததால், ஏற்கெனவே ஆட்கொல்லிப் புலி பயத்தில் இருந்தவர்கள் என்னவோ ஏதோ என்று பீதியில் உறைந்துபோனார்கள். மறுநாள் விடிந்ததும் வனத்துறையினர் மெதுவாக வனத்துக்குள் சென்று பார்த்தபோது, யானைக்குட்டி ஒன்று 12 அடி ஆழமான குழிக்குள் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. சுற்றிலும் நான்கைந்து யானைகள் அங்குமிங்கும் அலைபாய்ந்துகொண்டிருந்தன. வெடிகளைப் போட்டு பெரிய யானைகளை வனத்துறையினர் விரட்டிவிட்டாலும், அவ்வளவு சீக்கிரம் யானைக் குட்டியை குழிக்குள்ளிருந்து மீட்க முடியவில்லை. தங்கச்சுரங்கத்துக்காகத் தோண்டப்பட்ட குழி அது. குழிக்குள் விழுந்த வேகத்தில் சறுக்கிக்கொண்டு சென்று சுரங்கத்துக்குள் சிக்கியிருந்தது அது. மழை நாள்கள் வேறு... சுற்றிலும் பள்ளம் தோண்டி இரண்டு நாள்கள் இரவு பகலாகப் போராடி யானைக்குட்டியை மீட்டு, அதன் கூட்டத்துடன் சேர்த்துவைத்தனர் வனத்துறையினர். அடுத்த சில நாள்களில் அதே பகுதியில் இன்னொரு தங்கச்சுரங்கக் குழிக்குள் இரண்டு தந்தங்களும் வெளியே நீட்டிக்கொண்டு மண்ணில் புதையுண்டு கிடந்தது ஆண் காட்டு யானையின் மண்டையோடு ஒன்று. இதையடுத்தே, தங்கச்சுரங்கம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 1

தேவாலா அருகிலிருக்கும் கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகள் மலை மாவட்டமான நீலகிரியில் அமைந்திருந்தாலும், `மலையகத்தின் சமவெளி’ என்றே அழைக்கப்படுகின்றன. தமிழகம், கேரளம், கர்நாடகம் என மூன்று மாநில எல்லைகளும் சந்திக்கும் புள்ளியும் இதுதான். மாறுபட்ட பருவநிலையைக்கொண்டிருக்கும் இந்த நிலப்பரப்பில் தேயிலை, காபி, நெல், வாழை எனச் செழிப்பாக விளைவதால் `பொன் விளையும் பூமி’ என்றும் அழைப்பார்கள். உண்மையில், இது பொன் புதைந்த பூமியும்கூட! ஆமாம்... இன்றும் வனத்துறையின் ஆவணங்களில் இயற்கை வளங்கள் நிறைந்த நாடுகாணி, தேவாலா மலைத் தொடர்களை ‘கோல்டு மைன்ஸ் ஏரியா’ என்றே குறிப்பிட்டுள்ளார்கள். அது ஏன் என்பதை அறிய கொஞ்சம் பின்னோக்கிப் பயணிப்போம்...

கேரளா மற்றும் தமிழகத்தின் மலைப்பிரதேசங்களில் புதுப்புது குடியேற்றங்களையும், பெரும் தேயிலை மற்றும் காபி தோட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் நிறுவனங்கள்,

1830-களின் தொடக்கத்தில் கேரளத்தின் மலப்புரம், நீலகிரியின் கூடலூர் உள்ளிட்ட மலைத் தொடர்களில் தங்கப் படிமங்கள் இருக்கின்றனவா என்று கண்டறிய தேடுதல் வேட்டையில் தீவிரம் காட்டின. அப்படியான வேட்டையில்தான், தேவாலா மலைத்தொடர்களில் தங்கம் புதைந்திருக்கும் ரகசியத்தைக் கண்டறிந்தனர். 1831-ம் ஆண்டு, லண்டனைச் சேர்ந்த ஹூகேனின் என்பவர்தான் இந்த தங்கமலை ரகசியத்தை முதன்முதலில் கண்டறிந்தார். ‘மைனிங் கம்பெனி’ எனப்படும் சுரங்கம் அமைத்துக் கொடுக்கும் நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ‘ஆல்ஃபா கோல்டு மைனிங் கம்பெனி’ என்ற சுரங்கம் அமைக்கும் நிறுவனம், தேவாலா மலையில் இரண்டு சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்குச் சுரங்கப் பாதைகளை அமைத்து, தங்கத்தை வெட்டியெடுக்க வழிவகை செய்து கொடுத்தது.

1879-ம் ஆண்டு களமிறங்கிய ‘லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டிங்’ நிறுவனம், தேவாலா மண்ணிலிருந்து தங்கத்துகள்களைப் பிரித்தெடுக்கும் வேலையை ஆரம்பித்தது. சில ஆண்டுகள் நடைபெற்ற இந்தத் தங்க வேட்டையில், எதிர்பார்த்த அளவு தங்கம் கிடைக்கவில்லை. வரவைவிட செலவே அதிகமானது. வேறு வழியின்றி தங்கச்சுரங்கங்களைக் கைவிட்டுவிட்டு நடையைக் கட்டியது அந்த நிறுவனம். அவர்கள் கிளம்பினாலும், அந்த மலைக்குள் தங்கம் தூங்கிக்கொண்டிருக்கும் விஷயம் சுற்றுவட்டார மக்களின் தூக்கத்தைக் கெடுத்தது. எப்படியாவது நமக்கும் கொஞ்சம் தங்கம் கிடைக்காதா என்ற வேட்கையில், இரவோடு இரவாக ஆளாளுக்கு கடப்பாரை, மண்வெட்டியுடன் தீப்பந்தங்களைக் கட்டிக்கொண்டு மலையைக் குடையக் கிளம்பியது ஒரு கூட்டம். 30 அடிக்கு கீழே குழி தோண்டி பக்கவாட்டில் அரை கிலோமீட்டர், ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குச் சுரங்கங்களைக் குடைந்துகொண்டிருக்கும் அந்தக் கூட்டம், பாறை இடுக்குகளில் ரேகையைப்போல படர்ந்திருக்கும் தங்கப் படிமங்களை மூச்சுமுட்ட ஊர்ந்து‌ சென்று தேடிக்கொண்டிருக்கிறது... பல தலைமுறைகளாக... இன்றும்! கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் சட்டவிரோதச் சுரங்கங்கள் இவை.

அப்படியான தங்கச் சுரங்கங்களைத் தேடித்தான் நாமும் பயணித்தோம்... மேகக் கூட்டங்கள் உரச கம்பீரமாக உயர்ந்து நிற்கும் தேவாலா மலைத்தொடர்களின் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது தேவாலா டவுன். சாலையின் இரு பக்கங்களிலும் சிறிதும் பெரிதுமாக சில கடைகளைக் கொண்டிருக்கும் இந்த ஊர்தான் சுற்றுவட்டார கிராம மக்கள் ஒன்றுகூடும் இடம். நீலகிரி, கேரளம், கர்நாடகம் என வெவ்வேறு பக்கங்களிலிருந்து தங்க வேட்டைக்காக வருபவர்கள் ரகசியமாக ஒன்று கூடுவதும், வேட்டைக்குப் பிறகு தங்கத்துடன் வனத்திலிருந்து திரும்பி பங்கு பிரித்துக்கொள்வதும் இதே ஊரில்தான் என்கிறார்கள். ஆனால், அத்தனையையும் படுரகசியமாக வைத்திருக்கிறார்கள். உள்ளூர் மக்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் அப்பாவிகளாக இருக்கிறார்கள். தாங்கள் உண்டு... தங்கள் விவசாயம் உண்டு என்று இருப்பவர்களில் சிலரையும் ஆசைகாட்டி, காட்டுக்குள் தங்கம் தேடுவதற்காகக் கூலி கொடுத்து அழைத்துச் செல்கின்றன சில கும்பல்கள்.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 1

வாரக்கணக்கில் தேவாலா டவுனில் காத்துக் கிடந்ததில், ஒருவழியாக தங்க வேட்டை கும்பல் ஒன்றைக் கண்டுபிடித்து, மெதுவாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்‌. உள்ளூர் நபர் ஒருவரின் உதவியுடன் சென்றதால், நம்பிக்கையுடன் பேசினார்கள்... அப்படித்தான் நம்மிடம் அறிமுகமானார் அந்தப் பெரியவர். தேவாலா வனத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்கங்களுக்குள் சென்று வரும் நபர் அவர். வாட்டசாட்டமான கறுத்த உருவம், சிவந்த கண்கள், நரைபூத்த தாடியுடன் தேவாலாவில் உள்ள ஒரு டீக்கடையில் கையில் பீடியுடன் பிளாக் டீ குடித்துக்கொண்டிருந்த அவரிடம் நம்மை தங்கச் சுரங்கத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டோம்.

“முடியவே முடியாது” என்று கறாராக மறுத்தவர், திடீரென்று என்ன நினைத்தாரோ... தாடியைச் சொறிந்தபடியே “சரி, உங்களை நம்பி கூட்டிட்டுப் போறேன். எங்களோட முகத்தை போட்டோ, வீடியோ எடுக்கக் கூடாது. யானை வெரட்டுனாலும்... புலி அடிச்சாலும்... அது என்ன பிரச்னைன்னாலும் நாங்க பொறுப்பில்லை... சரியா?” என்று கேட்டுவிட்டு முகத்தைச் சுருக்கி உற்றுப் பார்த்தார். “சரி” என்றோம்!

(தோண்டுவோம்...)