Published:Updated:

திருச்சி – ஊறும் வரலாறு 13: உறைந்த இசை... `திருச்சியின் மகன்' எம்.கே.டி.பாகவதர் வரலாறு!

எம்.கே.டி.பாகவதர்
News
எம்.கே.டி.பாகவதர்

ஒரு முப்பது ஆண்டுகள் தன் குரலால் தமிழ்நாட்டை கட்டிப்போட்டு மயக்கிய பாகவதர் 'திருச்சியின் மகன்' என்பது நம் ஊரின் பெருமைதான்.

Published:Updated:

திருச்சி – ஊறும் வரலாறு 13: உறைந்த இசை... `திருச்சியின் மகன்' எம்.கே.டி.பாகவதர் வரலாறு!

ஒரு முப்பது ஆண்டுகள் தன் குரலால் தமிழ்நாட்டை கட்டிப்போட்டு மயக்கிய பாகவதர் 'திருச்சியின் மகன்' என்பது நம் ஊரின் பெருமைதான்.

எம்.கே.டி.பாகவதர்
News
எம்.கே.டி.பாகவதர்
அழகான கட்டடத்தை FROZEN MUSIC என்பார்கள். எது ஒன்று அழகாக இருந்தாலும் அதை இசையாய்ப் பார்ப்பவர்கள் நாம். திருச்சியிலோ ஓர் அழகே இசையாகவும் இருந்தது. அவர்தான் தியாகராஜ பாகவதர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். அழகனான எம்.ஜி.ஆர் வியந்த அழகன் அவர். 'நடிகன் குரல்' பத்திரிகையில் எம்.ஜி.ஆர் சொன்னார், “எத்தனை விளக்குகள் எரிந்தாலும் பாகவதர் ஒரு இடத்தை விட்டுச் சென்றுவிட்டால் அந்த இடத்தை இருள் கவ்விக்கொள்ளும். அவரைச்சுற்றி ஒரு ஒளி எப்போதும் இருக்கும்” என்று.

இசையை ரசிக்காத 23-ம் புலிகேசி மாதிரி ஒரு மன்னனிடம் ஒரு கவிஞன் சொன்னான், ’மன்னா, உங்கள் இதயத்தை எந்த எதிரியின் வாளாலும் துளைக்கமுடியாது’ என்று. ’ஏன்’ என்றான் மன்னன். கவிஞன் சொன்னான், ’இசையாலேயே துளைக்க முடியாத உங்கள் இதயத்தை வாளாலா துளைக்க முடியும்’ என்று.

உண்மைதான். இசை மென்மையானது, வலிமையானது, கூர்மையானது. அதனால்தான் பாரதிதாசன் “தெள்ளு தமிழில் இசைத்தேனைப் பிழிந்தெடுத்துத் தின்னும் தமிழ் மறவர் யாம் யாம்” என்று துள்ளினார்.

எம் கே.டி பாகவதரும் திருச்சியும்
எம் கே.டி பாகவதரும் திருச்சியும்
இப்படியான ’இசைத் தமிழில்’ அதிக மக்களால் ரசித்தும் ருசித்தும் கேட்கப்படுவது திரை இசைப் பாடல்கள்தான். ஒருவகையில் இசையை, அதன் கடுமையான இலக்கண மரபிலிருந்து விடுவித்து; ஜனாயகப்படுத்தியதும் திரையிசைதான்.

இன்று இசை கேட்பதற்கு விதவிதமான கருவிகள் வந்துவிட்டன. ஒருகாலத்தில் ரேடியோ, சினிமா, இசைத்தட்டு மூன்றும்தான். டேப்ரெக்கார்டர் பின்னால் வந்து சேர்ந்தது. எத்தனை கருவிகள் வந்தாலும் பாட்டும் இசையும்தான் அடிப்படை. அதுவும் பாடும் குரலில் வழியும் தேன் நம்மை மயங்கடிக்கும். விதவிதமான குரலழகால் மனமும் காற்றும் நிரம்பி வழியும். அப்படியான ஒரு குரல்தான் பாகவதரின் குரல். “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று அவர் பாடினால் அவர் ராதைக்கு மட்டுமல்ல, எந்த ராதைக்கும் கோபம் தணியும்.

“மன்மதலீலையை வென்றார் உண்டோ” என்று ஒரு சாதாரண தொழிலாளி சுத்த சங்கீதத்தில் பாடுகிறான். சாஸ்திர சங்கீதம் எளியவர்களுக்குப் புரியாது என்ற பிம்பத்தை உடைத்தது அது. பிரச்னை சங்கீதத்தில் இல்லை, பாடும் முறையிலும் குரல் வளத்திலும் உள்ளது என்பதை மரபான சங்கீத உலகை ஏற்கவைத்தார் பாகவதர். அதனால்தான், சங்கீத விமர்சனத்தைக்கூட எல்லோரையும் படிக்கவைத்த எழுத்தாளர் கல்கி, பாகவதரின் கச்சேரியைக் கேட்டுவிட்டு, “இந்தக் குரலையும் பாட்டையும் கேட்டுவிட்டு, வேறு பாட்டைக் கேட்டுக் காதைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது” என்று சபாவை விட்டுப் போய்விட்டாராம். ஒரு நல்ல காபியைக் குடித்துவிட்டால் வேறு காபி குடிக்க மனசு வராதல்லவா, அப்படி இது.

ஒரு முப்பது ஆண்டுகள் தன் குரலால் தமிழ்நாட்டைக் கட்டிப்போட்டு மயக்கிய பாகவதர் 'திருச்சியின் மகன்' என்பது நம் ஊரின் பெருமைதான். நன்றாகப் பாடும் எத்தனையோ பாகவதர்கள் அன்று இருந்தார்கள். ஆனால் தன் 12 வயதில் இவர் பாடத்தொடங்கிய பின்னால் 'பாகவதர்' என்றால் அது எம்.கே.தியாகராஜ பாகவதர்தான் என்றாகிப்போனது. இதுதான் மக்கள் தரும் இடம். அடைவது எளிதல்ல.
எம்.கே.டி. பாகவதர்
எம்.கே.டி. பாகவதர்

அந்தக் கால சினிமாவின் பெரிய வசனகர்த்தா ஏ.எஸ்.ஏ.சாமி. அவர் ஓர் அனுபவத்தைச் சொல்கிறார். நியூடோன் ஸ்டூயோவில் பாடல் ஒலிப்பதிவு. பதிவுசெய்தவர் ஒரு வெளிநாட்டு ஒலிப்பதிவு நிபுணர். பாகவதர் பாடுவதைக் கேட்ட அந்த நிபுணர் சொன்னாராம், “This man is having not a voice, but a GOLD MINE in his Throat.”

அந்த நிபுணர் தெரிந்தோ தெரியாமலோ சொன்ன தங்கச்சுரங்கம் சரிதான். பாகவதரின் தந்தை சிறந்த பொற்கொல்லர். தந்தை நகையில் 'நகாசு' வேலை செய்தபோது மகன் தன் குரலில் நகாசு செய்து மெருகு ஏற்றிக்கொண்டிருந்தான்.

திருச்சி எடத்தெருவில்தான் பாகவதர் பிறந்த வீடு. தந்தை கிருஷ்ணமூர்த்தி. தாய் மாணிக்கத்தம்மாள். 1910-ம் வருடம் மார்ச் 1-ம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்குத் தியாகராஜன் என்று பெயர் வைத்தார்கள். சிறுவன் தியாகராஜன் பாலக்கரை உய்யக்கொண்டானில் நீந்தி விளையாடுவானாம். கழுத்தளவு நீரில் சாதகம் செய்வானாம். இன்றைய திருச்சிவாசிகளுக்கு இந்தச் செய்தி ஐயோன்னு இருக்கும். என்ன செய்வது, நாம் வாங்கிவந்த வரம் அப்படி.

குழுமியானந்த சுவாமிகள்
குழுமியானந்த சுவாமிகள்
DIXITH

வரகனேரியில் உள்ள குழுமியானந்த சுவாமிகள் சமாதிக்குப்போய் மனமுருகிப் பாடுவது தியாகராஜனின் வழக்கம். பாலக்கரை ஜபமாதா கோயில் பள்ளியில்தான் படித்தான். இசையில் இருந்த ஆர்வம் படிப்பில் இல்லை. மகனின் மனசை புரிந்துகொண்ட அப்பா கிருஷ்ணமூர்த்தி, பிடில் வித்வான் சின்னையாபிள்ளையிடம் தியாகராஜனை இசை கற்க அனுப்பினார். இவர்தான் பாகவதரின் முதல் குரு. பஜனைப் பாடல்கள்தான் அந்தக்கால சேர்ந்திசை. தியாகராஜன் 'பித்தா பிறைசூடி' தேவாரப்பாடலை பஜனையில் பாடி ஒன்ஸ்மோர் கேட்கவைத்தான். தியாகராஜன் புகழ் திருச்சியில் பரவியது.

திருச்சியில் உள்ள ஆர்.ஆர்.சாபா முக்கியமான இசை - நாடக அகாடமி. இதைத் தோற்றுவித்தவர் F.G.நடேச ஐயர். இவர் பெயரால்தான் FGN HALL உள்ளது. இந்த நடேசய்யர்தான் தியாகராஜனின் உடல் அழகாலும் குரல் வனப்பாலும் கவரப்பட்டு ஹரிசந்திரா நாடகத்தில் லோகிதாசனாக நடிக்கவைத்தார். சிறுவன் தியாகராஜன் லோகிதாசனாகமாறி, “அம்மா பசிக்குதே... தாயே பசிக்குதே...” என்று தன் குரலால் பாடி உருகியபோது ஆர்.ஆர்.சபாவின் காற்றும் அழுதது. பார்த்த மக்கள் பதறினர். ஒரு நட்சத்திரம் உதித்ததை உலகம் ஏற்றது.

கேள்வி ஞானத்தாலேயே கிரங்கடித்த தியாகராஜனுக்கு பிடில் வித்வான் பொன்னுவய்யங்கார் தானே முன்வந்து பாட்டு சொல்லிக்கொடுத்தார். காலம் அவன் கைக்கு வந்தது.

திருச்சி பெரிய கம்மாளத் தெருவிலுள்ள காளியம்மன் கோயில்
திருச்சி பெரிய கம்மாளத் தெருவிலுள்ள காளியம்மன் கோயில்
DIXITH
வயது 16 நம் எம்.கே.டி-க்கு. அவரின் முதல் கச்சேரி, திருச்சி பெரிய கம்மாளத் தெருவிலுள்ள காளியம்மன் கோயிலில். கூட்டம் அலை மோதியது. புதுக்கோட்டை தஷ்ணாமூர்த்திபிள்ளை என்றால் இசை உலகம் எழுந்து நிற்கும். பெரிய கஞ்சிரா வித்வான். அவர்தான் கச்சேரிக்குத் தலைவர். எம்.கே.டி-யின் குரலில் சொக்கி அவரே கஞ்சிரா வாசித்தார் என்றால் என்ன சொல்வது.

நம் தியாகராஜன் அன்றுமுதல் எம்.கே.டி பாகவதர் ஆனார். தியாகராஜனை, 'தியாகராஜ பாகவதர்' என்று முதலில் அழைத்தது பாடலாசிரியரான நடராஜ வாத்தியார்தான். தன் முதல் கச்சேரியிலேயே தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அன்று மேடைகளில் இல்லாத பழக்கமது. கஞ்சிரா மேதை பாராட்டினார்.

பாகவதரின் தமிழ் இசை குறித்த பிற்காலப் பேச்சொன்றை நாம் கவனிக்கலாம். 1941 டிசம்பரில் நடந்த தமிழிசை மாநாட்டில் பாகவதர் பேசினார்: “பொதுவாகவே இசை என்பது இன்பத்தை அளிக்கக்கூடியது. அதுவும் பொருள் தெரிந்த சொற்களால் ஆகிய இசையாகவிருந்தால் மிக மிக இன்பமாகும். நமது நாடு தமிழ்நாடு. நமது தாய்மொழி தமிழ். நாம் தமிழர்கள். எனவே நாம் தாய்மொழியில் இசை கேட்க விரும்புகிறோம். இது இயற்கை. இது நம் உரிமை.”

குரலிலும் கருத்திலும் பிசிரில்லாத பாகவதர் கட்டி வாழ்ந்த பங்களா இன்றும் மத்தியப் பேருந்து நிலையம் அருகில் ராணுவ கேம்ப்புக்கு எதிரே உள்ளது. அந்த மாளிகை அதே வடிவத்தில் இன்று ஒரு லாட்ஜாக உள்ளது. பாகவதரின் மனைவி கமலம். தஞ்சாவூரைச் சேர்ந்தவர்.

நாடகங்களில் ஜொலித்த பாகவதரின் நல்ல காலம், அதுவரை மௌனமாக இருந்த தமிழ் சினிமா பேசத் தொடங்கியது. அது பாகவதரின் கலை வாழ்வில் பெரிய திருப்பத்தைக் கொண்டுவந்தது. பாகவதரின் 'பவளக்கொடி' நாடகத்தைப் பார்த்த லேனா செட்டியாரும் கே.சுப்ரமணியமும் அதை 1934-ல் சினிமாவாக எடுத்தார்கள். படத்தில் பாகவதர் துரிதகதியில் பாடிய 'சோமசேகரா' பாடல் பயங்கர ஹிட். சங்கீத உலகின் ஜாம்பவான்களான அரியக்குடி, செம்மங்குடி, கும்பகோணம் ராஜமாணிக்கம்பிள்ளை போன்றவர்கள் பாராட்டினார்கள். பட டைட்டிலில் அவர் பெயரை சங்கீத பூஷணம் எம்.கே.தியாகராஜ பாகவதர் என்றே போட்டார்கள். படம் 1935-ல் திரைக்குவந்து சக்கைபோடு போட்டது. அப்போது பாகவதருக்கு வயது 24.

நவீன சாரங்கதாரா
நவீன சாரங்கதாரா

அதன்பின் வந்த 'நவீன சாரங்கதாரா' பாடலுக்காகவே ஓடியது. 40 பாடல்கள். சுத்த ராகங்களால் அமைந்த பாடல்கள். மக்கள் மனங்களை பாகவதர் கொள்ளைகொண்டார். இதில் பாகவதர் பாடிய 'வெண்புறா' பாடலை என்றும் மறக்க முடியாது என்றார் முன்னாள் முதல்வர் கலைஞர்.

முதல் இரண்டு படங்களும் பெரிய வெற்றி. மகிழ்ச்சிக்கு நடுவே பெரும் துன்பமும் வந்தது. பாகவதரின் தந்தை இலங்கையில காலமானார். அடுத்து இரண்டு வெற்றிப் படங்களாக சிந்தாமணியும் அம்பிகாபதியும் வந்தன. பாகவதரின் புகழ்பெற்ற “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி” சிந்தாமணியில் வந்த பாடல்தான். மொத்தம் 25 பாடல்கள். காதல் மன்னன் ஜெமினி கணேசன் தன் கல்லூரி நாள்களில் பாகவதர் பாடல்களைத்தான் பாடிக்கொண்டிருப்பாராம். இந்தப் பட வெற்றியால் கிடைத்த லாபத்தில் மதுரையில் சிந்தாமணி என்று ஒரு தியேட்டரே கட்டப்பட்டது.

மதுரையின் சிந்தாமணி திரையரங்கம்
மதுரையின் சிந்தாமணி திரையரங்கம்
சிந்தாமணி
சிந்தாமணி

ஆயிரம் ரூபாயாக இருந்த பாகவதரின் சம்பளம் மூன்றே ஆண்டுகளில் 'அம்பிகாபதி' படத்தில் 11,000 ரூபாயாக உயர்ந்தது. எல்லிஸ் ஆர்.டங்கன் என்ற அமெரிக்கர் படத்தை இயக்கினார். இதில்தான் தமிழின் முக்கியமான வசனகர்த்தாவான இளங்கோவன் அறிமுகமானார். இன்றுகூட நாம் பேசிக்கொண்டிருக்கும் “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும், அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டும்” என்ற வரிகளை இளங்கோவன் பாகவதருக்குத்தான் எழுதினார்.

25 நாள்கள் ஓடினாலே வெற்றிப்படம் என்கிறோம் இப்போது. ஆனால் ஒரு படம் 1,000 நாள்கள், அதாவது மூன்று தீபாவளியைக் கொண்டாடியது. அந்த சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. அதை நிகழ்த்தியவர் பாகவதர். அந்தப் படம் 'ஹரிதாஸ்'.
ஹரிதாஸ்
ஹரிதாஸ்
மக்கள் அவரை வெறிகொண்டு ரசித்தார்கள். ஒரு நம்பமுடியாத நிகழ்ச்சி. திருச்சி - புதுக்கோட்டை சாலை. ரயில்வே கேட் சாத்தியிருக்கிறது. பாகவதர் கார் நின்றுகொண்டிருக்கிறது. கேட்டைக் கடக்கும்போது ரயில் கார்டு பாகவதரைப் பார்த்துவிடுகிறார். உடனே ரயில் நின்றுவிடுகிறது. டிரைவரும் கார்டும் இறங்கிவந்து பாகவதரைப் பாடச்சொல்கிறார்கள். வேறுவழியில்லாமல் பாகவதர் பாட ரயில் புறப்பட்டது. இவ்வளவு புகழ் எந்தக் கலைஞனுக்கும் சாத்தியமா, தெரியவில்லை.
இதனால்தான் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சொன்னார், ”எனக்கும் பாகவதருக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் மக்களைத் தேடிக்கொண்டு போகிறேன். மக்களோ பாகவதரைத் தேடிக்கொண்டு வருகிறார்கள்” என்று.

பாகவதர் பக்திமான். என்.எஸ்.கே பகுத்தறிவாளர். ஆனாலும் நல்ல நண்பர்கள். இவர்களின் கூட்டணி பல படங்களில் ஜெயித்தது. பாகவதருக்குச் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுத்தந்த 'திருநீலகண்டர்' தான் இருவரையும் இணைத்தது. வாழ்வும் தாழ்வும் இருவரையும் ஒன்றாகவே சிறைவரை அழைத்துப் போனது தனிக்கதை.

திருநீலகண்டர்
திருநீலகண்டர்
இசை விமர்சனத்தில் யாராவது 'சுருக்' என்று தைத்தால், நீ என்ன பெரிய சுப்புடுவா என்பார்கள். அந்த சுப்புடு பாகவதரை வியந்தார். “பாகவதரின் ‘தீன கருணாகரனே நடராஜா’ பாட்டை லேசில் பாடமுடியாது. கரணம் தப்பினால் மரணம். பாடிப்பாருங்கள் தெரியும் சேதி” என்றார். ஆனாலும் மரபான சபாக்கள் அவரை அதிகம் அழைக்கவில்லை. திருவையாற்றில் நடக்கும் தியாகராஜ ஆராதனைக்கு ஒரே ஒருமுறைதான் அழைத்தார்கள். அவரின் அதீதப் புகழ் அவரை நடிகரா, பாடகரா என்ற குழப்பத்தில் தள்ளியது.

இரண்டாம் உலகப்போர் 1939-ல் தொடங்கியது. ’யுத்த நிதி’ திரட்ட பாகவதர் கச்சேரி செய்தார். பெரும் தொகை வசூலானது. அதற்காக திவான் பகதூர் பட்டம்தர பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. நிராகரித்தார். இன்று BHEL அமைந்துள்ள திருவறம்பூர்ப் பகுதியை அரசு வழங்க முன்வந்தது. பாகவதரோ நான் செய்தது உதவி. பிரதிபலனாக எதுவும் வேண்டாம் என்றார். குரல் மட்டுமல்ல மனசும் தங்கம்.

அவரின் முழு இசைத்திறமையும் ஞானமும் வெளிப்பட்ட இடம் திருச்சி வானொலிதான். 1942 தொடங்கி பலமுறை அவர் திருச்சி வானொலியில் பாடியுள்ளார். அவர் பாடி நடித்த பில்ஹணன் ஒலித்தது திருச்சி வானொலியில்தான். ஆனால் இன்றைய இசை ஆய்வாளர்களுக்கு பாகவதரின் முழுக் கச்சேரி கேட்கக் கிடைக்கவில்லை. அகில இந்திய வானொலி தன் பொக்கிஷத்திலிருந்து அதை உலகுக்குத் தந்தால் அந்த ஏழிசை மன்னருக்கு மீண்டும் மகுடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

சூப்பர் சிங்கர்களால் இன்றுகூட பாடப்படும் பாடல் “வதனமோ சந்திர பிம்பமோ.” அந்தப் பாடல் வந்த படம் ’சிவகவி’ வருடம் 1943. நாகப்பட்டினத்தில் இந்தப்படம் ஆறு மாதங்கள் ஓடியது. வெளியிட்டவரை சிவகவி செட்டியார் என்றே மக்கள் அழைக்கத்தொடங்கினர்.

அவருடைய பைக் நம்பர் MSC 3111; கார் நம்பர் RD 2296 அவர் சவாரி செய்தது வெள்ளைக் குதிரை - எல்லாவற்றையும் மக்கள் நேசித்தார்கள். அவரும் மக்களை மிகவும் மதித்ததன் அடையாளமாக, வார்த்தைகளைச் சிதைக்காமல் பாடினார். “கிருஷ்ணா... முகுந்தா” என்று ஹரிதாஸில் அவர் குழைந்தபோது, இசை என்ற இன்ப வெள்ளத்தில் திளைக்க ஓடோடி வந்த மக்களை அவர் ஏமாற்றவில்லை. மக்களும் ”பாடுங்கள் பாகவதரே பாடுங்கள்” என்றனர்.

’லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’— இசைவாணரும் கலைவாணரும் சந்தித்த நரகம். அவதூறாக எழுதுவதே ’இந்து நேசன்’ பத்திரிகையின் வழக்கம். முகமூடி என்ற புனைபெயரில் லட்சுமிகாந்தன் எழுதியது எல்லாம் மஞ்சள் எழுத்து. அவன் கொலைசெய்யப்பட்டான். யார் காரணம் என்று தெரியவில்லை. ஆனால் பாகவதரும் கிருஷ்ணனும் 1944 டிசம்பர் 27-ல் கைதானார்கள். வழக்கு உயர் நீதிமன்றம் தாண்டி ப்ரிவி கவுன்சிலுக்குப் போனது. அது ஒரு சோக வரலாறு. 1947 ஏப்ரல் 25-ம் நாள் இரு கலைஞர்களும் விடுதலையானார்கள்.

இந்தக் கால இடைவெளி சினிமாவைப் பாட்டிலிருந்து வசனத்துக்கு மாற்றிவிட்டது. பாகவதர் ’ராஜ முக்தி’ எடுத்தார். வசனம் புதுமைப்பித்தன். ஆனாலும் படம் வெற்றியடையவில்லை. மனம் கலங்காத பாகவதர் சுதந்திர தினத்தில் வானொலியில் அபாரமாகக் கச்சேரி செய்தார். தான் ஒரு தேர்ந்த இசைவாணன் என்பதை நிருபித்தார். ஆனாலும் 1952-ல் வந்த அவரது படங்களான அமரகவியும் சியாமளாவும் சினிமாவின் மாற்றங்களை உள்வாங்கவில்லை.

தியாகாராஜ பாகவதர் சமாதி
தியாகாராஜ பாகவதர் சமாதி
DIXITH
“சங்கு சுட்டாலும் வெண்மைதரும்” என்பதைப்போல் அவர் வாழ்ந்தார். 1957-ல் இந்தியப் பிரதமர் நேரு திருச்சி வந்தார். ரோஜாவுக்கு மாலை சூட மல்லிகை போனது. காமராஜர், திருச்சி பாராளுமன்றத் தேர்தலில் பாகவதரை நிற்கச் சொன்னார். பாகவதர் ’நான் கலைஞன், அரசியல் வேண்டாம்’ என்றார். நமக்கு அவரைக் கும்பிடத்தோன்றுகிறது.

சினிமா அவரைப் புறக்கணித்தாலும் இசை அவரைக் கட்டியணைத்தது. கபாலீஸ்வரர் கோயில் கச்சேரிக்கு மனிதக்கடல் போல் கூட்டம் கூடியது.

சர்க்கரை நோயும் மனச்சோர்வும் அவரைத் தின்றன. கண்பார்வை மங்கியது. தஞ்சைப் புன்னைநல்லூர் மாரியம்மனை “கண் பாரம்மா மாரியம்மா...” என்று நெஞ்சுருகப் பாடினார். அவரின் பொருள்வசதி குறைந்தது. ஆனால், மிக ஏழ்மையில் வாடியதாகச் சொல்வது பொதுப்புத்தியின் புனைவு. கடைசிவரை அவரிடம் இரண்டு கார்கள் இருந்தன. அவரின் பங்களா அவரிடம்தான் இருந்தது.

ஏழிசையின் விஸ்தீரணமான ராகம், 1959 நவம்பர் 1-ம் நாள் இசைப்பதை நிறுத்திக்கொண்டது. நாடே முகாரியில் மூழ்கியது. உடல் திருச்சிக்கு வந்தது. மலைக்கோட்டை பார்க்காத மக்கள் கூட்டம். சங்கிலியாண்டபுரத்தில் உள்ள சமூக இடுகாட்டில் அவரது தாய்-தந்தை சமாதியின் அருகே அடக்கம் நடந்தது. முதல்வர் காமராஜர், நடிகவேள் ராதா, நாவலர் முதலானோர் அஞ்சலி செலுத்தினர்.

அவர் 49 ஆண்டுகளே வாழ்ந்தார். 14 படங்களே அவர் நடித்தது. திரையில் பாடியதோ ஏறக்குறைய 110 பாடல்கள். அவர் செய்த இசைக் கச்சேரிகள் ஏராளம். காலம் கடந்தும் நாம் அவரின் “சொப்பன வாழ்வில் மயங்கி” கிடக்கிறோம்.

(இன்னும் ஊறும்)