சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வைத்தியம்: சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- காரை சந்திரசேகரன்

முதலில் ஒரு விஷயத்தைத் தீர்மானமாகச் சொல்லிக் கொள்கிறேன். இந்தக் கதை ரமணா திரைப்படம் வருவதற்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்தது. கடவுளாக, கோவில்களாக நினைக்கப்படுகின்ற மருத்துவர்களும் மருத்துவமனைகளும், ஆபத்தான இந்தக் கொரோனா காலகட்டங் களிலும்கூட பணம் சம்பாதிப்பதற்காக கேவலமாக மக்களிடம் நடந்து கொள்கின்ற அவல நிலையைச் செய்திகளாகக் காண்கின்றபோது, வேதனை அளிப்பதாக இருக்கிறது... அந்த எண்ணங்களின் தொடர்ச்சிதான் இது.

உண்மையில் நடந்த அந்தச் சம்பவத்தை என்னால் அவ்வளவு சுவையாக ஒரு சிறுகதையாக எழுத முடியுமா என்பது சந்தேகம்தான்.

எங்கள் ஊருக்கு நீங்கள் எப்போதாவது வருகை தந்தீர் களானால் கண்டிப்பாக பார்வதி அக்காவைக் கேள்விப்பட்டே ஆகவேண்டும். சிறு பையன்களுடன் விளையாடும் குறும்புக் கதாநாயகியர்களைத் திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். நிஜத்தில் இவளைச் சொல்வார்கள்.

திரையில் பார்க்கின்ற அந்த அழகான முகங்கள்கூட திரைக்கு வெளியே அப்படியே இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் எங்கள் பார்வதி அக்கா எப்போதும் மலர்ந்த பூவாகவே இருப்பாள். மிகப்பெரிய பலசாலியாக, அறிவாளியாக, இன்னும் பலவாறாக எங்களுக்குள் பதிவாகி இருந்தாள். இப்போது நினைத்துப் பார்த்தால் அவள் ஒரு வெகுளிப் பெண்ணாக இருந்திருக்கிறாள் என்பது தெரிகிறது. அவ்வளவு அழகான பெண்ணுக்கு திருமணம் தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதற்கான காரணத்தை எங்களால் அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை.

அக்காவுக்கு ஜாதகத்தில் பிரச்சினை என்று சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். காதல் பிரச்சினையில் சிக்கி இருக்கிறார் என்றும் பேச்சு இருந்திருக்கிறது. எடை மேடை நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த ரங்கராஜன் ஒருமுறை காதல் கடிதம் கொடுத்து, பார்வதியின் அப்பாவிடம் நடுத்தெருவில் அடி வாங்கியிருக்கிறார்.

சொல்லிக்கொள்ளும்படி படிப்பு இல்லை. பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் நின்றுபோயிருக்கிறது அவளுடைய பள்ளிப்படிப்பு. பல பேர் பெண் பார்க்க வந்துவிட்டு வெறுமனே போயிருக்கிறார்கள்.

மற்ற எவரையும்விட நான் அந்த அக்காவுக்கு நெருக்கமாக இருந்தேன். பார்வதி அக்காவின் தம்பியான வெங்கடேஷ் என்னுடைய பால்ய காலம் தொட்டே நண்பன் என்பதுதான் விசேஷமான காரணம்.

வைத்தியம்: சிறுகதை

ஒருமுறை கோயம்புத்தூருக்கு அருகில் இருந்த ஒத்தக்கால் மண்டபத்தில் மாப்பிள்ளை நிச்சயமாகியிருந்தது. திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும்போது மாப்பிள்ளையின் அப்பா திடீரென உடல்நலக் குறைவால் இறந்து போயிருக்கிறார். அதற்கு அக்காவின் ராசிதான் காரணம் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. திருமணமும் அத்தோடு நின்றுபோனது.

அக்காவுக்கு வயதும் ஏறிக்கொண்டே போனதால் ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை பார்க்கும் ஆர்வமே இன்றி அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். சிறுவர்களாக அவளுடன் விளையாடிக் கொண்டிருந்த நாங்கள் இப்போது கல்லூரி மாணவர்களாக மீசை முளைத்த வர்களாக மாறிவிட்டிருந்தோம். இப்போதும் அக்கா அப்படியேதான் இருக்கிறாள். இப்போது வேறு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். குறும்புத்தனம் மட்டும் கொஞ்சம் குறைந்திருக்கிறது.

எவரும் எதிர்பாராத தருணத்தில்தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அக்காவின் தூரத்து உறவு முறையைச் சேர்ந்த அவர்களுக்கு அக்காவை மிகவும் பிடித்துப்போய்விட்டது. படபடவென பெண் பார்க்கும் படலம், நிச்சயம் என்று அடுத்தடுத்து வேகமாக நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. எங்கள் ஊரின் மிகவும் பிரபலமான வேல்முருகன் திருமண மண்டபம் பதிவு செய்யப்பட்டு விட்டது. மாப்பிள்ளை தங்கமான மனிதர். வாரம் ஒருமுறை எங்களுடன் வந்து கிரிக்கெட் விளையாடுவார்.

``பாத்து விளையாடுங்கடா... பந்து அங்க பட்டுறப்போகுது.’’ சித்தப்பா விளையாட்டாகச் சொல்லுவார்.

ஒவ்வொரு நாளும் மிகுந்த பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருந்தது. நகை எடுத்தல், துணிமணி எடுத்தல், பத்திரிகை அடித்தல் என்று எல்லா நிகழ்வுகளும் எந்தத் தொய்வும் இன்றிப் போய்க்கொண்டிருந்தது. அக்காவுக்குக் கல்யாணக்களை முகத்தில் தெரிந்தது. நானும், நண்பன் வெங்கடேஷும் பொள்ளாச்சியில் அவர்களுடைய சித்தி வீட்டுக்கு ஒரு வேலையாகச் சென்று அப்போதுதான் திரும்பியிருந்தோம். இரவு எட்டு மணி இருக்கும். வெங்கடேஷ் பதற்றமாக என்னை அலைபேசியில் அழைத்தான்.

``அக்காவுடைய கட்டம் வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு... அப்பா சீரியஸா இருக்கிறார். உடனே வாடா...’’

இன்னும் திருமணத்திற்கு ஒரு இரண்டு நாள் இருக்கையில் இப்படி ஒரு செய்தியைக் கேட்டது அதிர்ச்சியாக இருந்தது. அங்கு போய்ச் சேர்வதற்குள் பல்வேறு சிந்தனைகள் சேர்ந்து சோர்வடையச் செய்து கொண்டிருந்தன என்னை.

ஒரு மணி நேரத்துக்கு முன்பு இருந்த திருமணக் களை முழுவதுமாக அழிந்துபோய் துக்கக் களை வந்திருந்தது. நானே எதிர்பாராத விதமாக, கிட்டத்தட்ட என்னை ஒரு மருத்துவன் போல் நடத்தினார்கள். நான் அக்குபஞ்சர் பயிற்சி முறைக்காக சிலநாள் நகரத்துக்குச் சென்று வந்திருக்கிறேன். அதுதான் காரணம்.

நான் அவருடைய அறைக்குள் நுழைந்த போது நண்பன் இன்னும் இருவரைத் தவிர வேறு எவரும் வரவில்லை. எந்த அசைவும் இன்றி அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார். அவரின் நாடியைப் பிடித்துப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. நல்லவேளையாக அவர் கண்மூடி இருந்ததால் எதுவும் விகாரமாகத் தெரியவில்லை.சிறிது நேரம் எதுவும் பேசாமல் மேலும் கீழுமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். படபடப்பாக இருந்தது. நண்பனைப் பார்த்தேன். அவன் கீழே நிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

நடுங்கிய கையோடு அவருடைய நாடியைப் பிடித்துப் பார்த்தேன். அதிர்ச்சியாகிவிட்டது. இறந்துவிட்டிருக்கிறார். லேசாக சூடு இருக்கிறது. இப்போதுதான் இறந்திருக்க வேண்டும். தயங்கியபடி மேலே நிமிர்ந்து மற்றவர்களைப் பார்த்தேன். அவர்கள் ஆர்வமாக என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

வைத்தியம்: சிறுகதை

திடீரென ஒரு யோசனை. இறந்துவிட்டதை நான் சொல்ல முடியாது. கொஞ்ச தூரத்தில் சித்த வைத்தியர் இருக்கிறார். அவரைத்தான் கூப்பிட வேண்டும். அவர் வந்துதான் சொல்ல வேண்டும். அது ஒன்றும் பிரச்சினை இல்லை. கூப்பிட்டால் வந்துவிடுவார். பளீரெனச் சொல்லிவிடுவார்.

பார்வதி அக்கா நினைவில் ஓடினார். இந்த முறை அவரின் திருமணம் நின்றுவிட்டால் இனி அவரின் திருமணத்தை நினைத்துப்பார்க்கவே முடியாது. இரண்டு நாள்தானே. அதற்குத்தான் சில மருத்துவமனைகள் இருக்கிறதே...

``டேய் வெங்கடேஷ், சீக்கிரமா ஒரு ஆம்புலன்ஸ் புடிச்சுட்டு வாடா... அப்பாவைக் காப்பாற்றி விடலாம்.’’

பீதியாக இருந்த வெங்கடேஷ் சற்று ஆறுதல் ஆகி வேகமாக வெளியில் ஓடினான். நான் வெளியில் செல்ல நினைத்தவன் சட்டென அமைதியாகிவிட்டேன். கூட இருந்த மற்ற இருவரை அவனுடன் போகச் சொன்னேன். யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்பதையும் கூடவே சொல்லி வைத்தேன். இப்போது அவரின் கைகளைத் தொட்டுப் பார்த்தேன். விறுவிறுப்பு ஆரம்பமாகியிருந்தது.

வெளியே அழுகைச் சத்தம் ஆரம்பமாகி யிருந்தது. யாரோ இரண்டு பேர் அவர்களையெல்லாம் அதட்டி அழுகையை நிறுத்த வைத்துக்கொண்டிருந்தனர்

எனக்கு நேரம் ஆக ஆக புதிதாக ஒரு பயம் வந்திருந்தது. நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது. எப்படியாவது ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சேர்த்துவிட்டால் போதும்... பத்து நாளுக்குக்கூட நாற்றம் எடுக்காமல் பார்த்துக்கொள்வார்கள். அதுவரைக்கும் ஏதாவது செய்ய வேண்டும். நான் அதிக நேரம் குழம்பாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே தைலம் நிரம்பிய ஒரு பாட்டில் கண்ணில் பட்டது. அதை அப்படியே இரண்டு விரல்களால் தோண்டி உடல் முழுவதும் நன்றாகத் தேய்த்தேன். அதைக் கீழே வைக்கும்போது கட்டிலுக்கு அடியில் மண்ணெண்ணெய் தென்பட்டது.

வெளியே அப்பாவியாக இருந்த ஆறுமுக அண்ணனை உள்ளே கூப்பிட்டு கால்களுக்கு மண்ணெண்ணெய் தேய்ப்பதற்கு உதவியாக வைத்துக்கொண்டேன். எல்லாவற்றுக்கும் சாட்சி வேண்டும் அல்லவா. இனி யார் கேட்டாலும் அவரே பதில் சொல்லிவிடுவார்.தவறு செய்கிறோமா என்று என்னைக் கேட்டுக்கொண்டேன். அந்த இடத்தில் வள்ளுவர் தான் உதவியாக இருந்தார்.

`பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.’

வெளியே சற்றுப் பரபரப்பாக இருந்தது. ஆம்புலன்ஸுக்குச் சென்றிருந்த அவர்கள் வந்துவிட்டார்கள். வேகமாக எல்லாக் காரியங்களும் நிறைவேறின. நான்கைந்து பேர் சேர்ந்து அழகாக அவரை மருத்துவப் படுக்கையில் படுக்க வைத்தோம். தலைப்பகுதியை நான் பார்த்துக்கொண்டேன். தலை தொங்காமல் காப்பது மிகவும் முக்கியம். அப்பட்டமாகத் தெரிந்துவிடும்.

ஆம்புலன்ஸ் புறப்படத் தயாராக இருந்தது. அதில் யாரெல்லாம் கூட வர வேண்டும் என்பதில் ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது. திருமணம் அருகில் நெருங்கிவிட்டதால், அவனுடைய அத்தையை மட்டும் அழைத்துக் கொண்டு புறப்பட்டோம்.

வேகமாக வண்டி போய்க்கொண்டிருந்தது. எல்லா மருத்துவமனைகளும் பிரதான பேருந்து நிலையம் அருகில் இருந்தபடியால் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தது.

உயிரிழந்தவர்களுக்கு சிறப்பாக வைத்தியம் செய்யும் இரண்டு மருத்துவமனைகளில் ஒன்றுக்குத்தான் போக வேண்டும். ஏற்கெனவே பலமுறை அந்த மருத்துவமனைகளை நான் கடுமையாக விமர்சனம் செய்திருந்ததால் இப்போது அதை சிபாரிசு செய்ய முடியாத நிலையில் இருந்தேன். மிகப்பெரிய சைரன் ஒலியோடு அதிவேகமாகப் போய்க்கொண்டிருந்தது. உள்ளே உட்காருவதற்கு பயமாக இருக்கும் படியான வேகம்.

``நாம் இப்போ ------ ஆஸ்பத்திரிக்குப் போலாம்.’’

நான் சொல்ல நினைத்ததை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. தர்ம சங்கடத்திலிருந்து தப்பித்ததில் நிம்மதி.

எனக்கு முன்பாக வெங்கடேஷ் அதை ஒப்புக் கொண்டதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

``எவ்வளவு சீரியஸ் கேஸாக இருந்தாலும் அவர்கள் காப்பாற்றிவிடுவார்கள்...’’

அந்த மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அதிகமான சன்மானம் கிடைக்கும் என்ற செய்தியை உறுதிப்படுத்திக்கொண்டிருந்தார் அந்த ஓட்டுநர்.

பிரதான பேருந்து நிலையத்தின் இடப்புறம் இருந்த ஆரிய பவன் சிற்றுண்டிக்கு அருகில் வானளாவிக் காணப்பட்டது அந்த மருத்துவமனை. மிகப்பெரியதாக சில்வர் எழுத்துகளால் தகதகவென மின்னிக்கொண்டு இருந்தது அதன் விலாசம்.

வண்டி நின்ற அடுத்த விநாடியே மருத்துவமனையின் ஊழியர்கள் அவரைத் தூக்கிக்கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டிருந்தனர்.

செவிலியர் ஒருவருடன் இருந்த அவர்தான் மருத்துவராக இருக்க வேண்டும். வெங்கடேஷ் அருகில் வந்தார்.

``என்னோட அப்பாங்க... திடீர்னு பேச்சு மூச்சில்லாமல் மயக்கமாகிட்டார்ங்க.’’

படபடப்பாக வெங்கடேஷ் சொல்லிக் கொண்டிருந்தான். இதற்குள் உள்ளே அவசர சிகிச்சை வார்டில் இருந்து ஒரு செவிலியர் வேகமாக ஓடிவந்து மருத்துவரின் அருகில் சென்று சத்தம் குறைவாக எதுவோ சொன்னார்.

அவசரமாகத் திரும்பியவரின் கையை இறுகப் பிடித்துக்கொண்டான் வெங்கடேஷ்.

``எங்க அப்பாவ எப்படியாவது காப்பாத்துங்க.. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.’’

நண்பனின் தோளை ஆறுதலாகத் தட்டிவிட்டு வேகமாக உள்ளே போனார் மருத்துவர்.

அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த அவசர சிகிச்சை அறை பரபரப்பாக இருந்தது. நான் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக வைத்தியம் ஆரம்பமாகியிருந்தது. நிம்மதியாக இருந்தது எனக்கு. இரண்டு நாள் தாக்குப் பிடித்துவிட்டால் போதும்.

அவருக்கு அலங்காரம் முடிந்துவிட்டது போலும். எங்களைக் கண்ணாடிவழியாகப் பார்க்கச் சொன்னார்கள். பதறியடித்துக் கொண்டு போனோம்.

பெரிய கனமான ஒரு துணியில் கழுத்து வரை போர்த்தியிருந்தார்கள். மூச்சு விடும் போது உடல் அசைவின்றி இருப்பதைப் பற்றி நாங்கள் கேட்காமல் இருப்பதற்காக அப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டேன்.

வைத்தியம்: சிறுகதை

பிராண வாயுக்கான இணைப்பு முகத்தில் பொருத்தப்பட்டிருந்தது. குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிடப்பட்டிருந்தது. நன்றாக உற்றுக் கவனித்தேன். சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. எங்கே இறங்கிக் கொண்டிருக்கிறது? குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

இப்போது பெரியதாக அழுகைச் சத்தம் வர ஆரம்பித்திருந்தது. வெங்கடேஷின் அம்மாவோடு இன்னும் சில பேர் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். இதுவரை விசும்பிக் கொண்டிருந்த அத்தை இப்போது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்திருந்தாள்.

அவர்களை அவ்வாறு கதறி அழாமல் இருக்க செவிலியர்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தனர். நாங்கள் சற்றுத் தள்ளி வெளியே வந்து அமர்ந்துகொண்டோம். எவ்வளவு தத்ரூபமாக நடந்துகொள்கிறார்கள். அவர்கள்மேல் அருவருப்பாக இருந்தது. மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

செவிலியர்களில் ஒருவர் எங்களைப் பார்த்துக் கையசைப்பது தெரிந்தது. வேகமாக அவரை நோக்கிப் போனோம். கையில் மருத்துவமனை விலாசம் தாங்கிய ஒரு பேப்பரை யாரிடம் என்று இல்லாமல் மொத்தமாக நீட்டினாள். சட்டென அதை வாங்கினான் வெங்கடேஷ்.

வாங்கி வேகமாக அதைப் பார்த்தோம். ரூபாய் 70,000 கட்டச் சொல்லிய ரசீது அது. அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. எதிர்பார்த்ததுதான் என்றாலும் ஆரம்பத்திலேயே இவ்வளவு தொகையை இவ்வளவு சீக்கிரம் கட்டச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை நான்.

``கவுன்டரில் கட்டிட்டு ரசீதை ரிசப்ஷன்ல கொடுத்துடுங்க, அர்ஜென்ட்.’’

வெங்கடேஷ் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும். பணம் கட்டும் இடத்தை நோக்கிப் போனான். கூடவே ஓடினேன் நானும்.

``கல்யாண கிப்ட்டா கார் வாங்குவதற்கு அட்வான்ஸ் குடுப்பதற்கு வச்சிருந்தேன்... ஒண்ணும் பிரச்சினை இல்ல, சரி பண்ணிக்கலாம்’’ வருத்தமும் தெளிவுமாகச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.

குற்றவுணர்ச்சி எனக்கு ஆரம்பமாகியிருந்தது. சொல்லிவிடலாமா என்று யோசனையாக இருந்தது. உணர்ச்சிவசப்பட்டுவிட்டான் என்றால் சொதப்பிவிடும். கூட்டம் வேறு நிறைய சேர்ந்து விட்டது. கண் முன்னால் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்க முடியாத அவஸ்தையோடு நின்று கொண்டிருந்தேன் நான்.

விடிந்திருந்தது. இரவு முழுதும் விழித்திருந்ததில் அசதியாகவும் அழுக்காகவும் இருந்தேன். வீட்டுக்குப் போய் குளித்து, சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டு வந்தேன். இதற்குள் மறுபடியும் ஒரு ஐம்பதாயிரம் கட்டியதற்கான ரசீது காண்பித்தான். கிட்டத்தட்ட 20,000 ரூபாய்க்கு மருந்து வேறு.

தாங்கவொண்ணா ஆதங்கத்துடன் தலையைப் பிடித்துக்கொண்டேன். மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப்போயிருந்தேன். எப்படியான மோசடி இது. இவர்களைக் கடவுளென வேறு கொண்டாடுகிறார்கள். ஆத்திரமாக வந்தது. என்னை ஆறுதலாக அந்த மருத்துவரைப் போலவே தட்டினான். பொறுமை இழந்து கொண்டிருந்தேன் நான்.

திருமண வீட்டிலிருந்து ஒவ்வொருவராக வந்து சென்றுகொண்டிருந்தார்கள். இன்று நிச்சயதார்த்த சீர் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி. நான் என் நண்பனை திருமண வேலையைச் சிறப்பாகப் பார்க்கும்படி சொல்லி அனுப்பி வைத்தேன். போய்விட்டான். நிம்மதியாக இருந்தது.

நான் எதிர்பார்த்ததுபோலவே இரவு 10 மணியளவில் செவிலியர் ஒருவர் அழைத்தார். தனி அறையில் அமர்ந்திருந்த பெரிய மருத்துவரைப் பார்க்குமாறு சொன்னாள். போனேன்.

``கேஸ் கொஞ்சம் சீரியஸா இருக்கு. இப்ப தான் லேசா மூவ்மென்ட் வருது. நாளைக்கு ஒரு காஸ்ட்லியான இன்ஜெக்ஷன் போடணும்... பம்பாயிலிருந்து வருது... நர்ஸ் கொட்டேஷன் தருவாங்க... கவுன்டரில் கட்டிடுங்க…’’

முன்பே நான் இதை எதிர்பார்த்ததுதான். பதிலையும் நான் தயார் செய்து வைத்திருந்தேன்.``ரொம்ப நன்றிங்க சார்... கையில் இருந்த பணத்தை யெல்லாம் கட்டிட்டோம். நாளைக்கு மதியத்துக்கு மேலதான் பணம் ரெடி ஆகும் சார்... நாளைக்கு இரண்டு மணிக்குக் கட்டிடறோம் சார்.’’

``ஓகே, எவ்வளவு சீக்கிரம் கட்ட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கட்டிருங்க.’’

நாளை 4 மணி வரை இழுத்து விட்டு மருத்துவமனையை விட்டு காலி செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

என் அலுவலக நண்பன் பாலுவைக் காலையில் வரச் சொல்லியிருந்தேன். அவனை சும்மா மருத்துவமனையில் இருக்கும்படி சொல்லிவிட்டு நான் திருமணத்துக்குச் சென்றேன்.

நான் எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பாக நடந்தது திருமணம். அவளுடைய அம்மா மட்டும் லேசாகக் கலங்கியிருந்தாள். நிம்மதியாக இருந்தது எனக்கு. வெங்கடேஷும்கூட உற்சாகமாக இருப்பதாகவே பட்டது. எனக்குத்தான் குற்றவுணர்ச்சி சிறிது சிறிதாக மேலோங்கிக்கொண்டிருந்தது. இப்போதாவது சொல்லிவிடலாமா... ஏதோ ஒன்று தடுத்தது... முதலிரவு முடிந்துவிடட்டுமா... எனக்கு வெவ்வேறு யோசனைகள் தோன்றிய வண்ணம் இருந்தது. மதிய விருந்து முடிந்து அவனை மருத்துவமனைக்கு வரச் சொன்னேன். நான் கிளம்பிவிட்டேன்.

நான் இங்கிருந்து கிளம்பும்போது நண்பன் பாலுவைப் போகச் சொல்லிவிட்டேன். நான் மருத்துவமனை வந்த சிறிது நேரத்துக்குள் திருமணத் தம்பதி வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அது ஒரு உணர்ச்சிவசமான நிகழ்வாக இருந்தது. இப்போது நான் மட்டும் தனித்து விடப்பட்டு இருந்தேன். மதியம் ஒரு மணி ஆகிவிட்டிருந்தது. இதற்குள் செவிலியர்கள் மூன்று முறை வந்து பணம் கட்டுவது சம்பந்தமாகக் கேட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

இனி ஒரு பைசாகூடக் கட்டக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன். நண்பன் வருவதற்குள் முடிவை எடுத்துவிட வேண்டும். நான் எதிர்பார்த்ததுபோலவே அடுத்த பத்தாவது நிமிடத்தில் செவிலியர் என்னை நோக்கி வந்தார்.

``சார் ரொம்ப அர்ஜெண்டா அந்த மருந்து வாங்கணும்... பணம் ரிசீவ் ஆகலைன்னு சொன்னாங்க... இப்போ கட்டியிருக்கீங்களா..?’’

``இல்லைங்க மேடம்... பணம் புரட்ட முடியல... டிஸ்சார்ஜ் பண்ணிக்கிறோம். ஜி.ஹெச்ல அட்மிட் பண்ணிக்கிறோம்.’’

குரல் தழுதழுத்ததுபோலச் சொன்னேன். வேகமாக மருத்துவர் இருந்த அறையை நோக்கிப் போனார் அந்தச் செவிலியர்.

நாங்கள் முதன்முதலாக இங்கே வந்தபோது இருந்த பரபரப்பு மறுபடியும் ஏற்பட்டது அங்கே. செவிலியர்களும் மருத்துவர்களும் குறுக்கும் நெடுக்குமாகப் போய் வந்துகொண்டிருந்தார்கள். ஒரு அரை மணி நேரத்துக்குள் முடிவைச் சொல்லிவிட்டார்கள். இறந்துவிட்டாராம். மிகுந்த வருத்தத்துடன் சொன்னார் அந்த மருத்துவர். அழுகையைக் கட்டுப்படுத்துவது போன்று நடித்தேன்.

எதிர்பார்த்ததுதான். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனையாக இருந்தது. இன்றைய இரவைக் கழிக்க வேண்டும். உடலை இவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் சென்னையில் இருக்கும் இவருடைய தம்பி வீட்டுக்குக் கொண்டு செல்லலாம். எவ்வளவு வேகமாகச் சென்றாலும் ஆறு மணி நேரம் பிடிக்கும். அங்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள். எல்லோரும்தான் திருமணத்துக்கு வந்திருக்கிறார்களே. பிறகு திரும்பி வந்து விடலாம். நாளை மதியம் ஆகிவிடும். கண்டிப்பாக இந்தத் திட்டத்திற்கு வெங்கடேஷ் ஒத்துக் கொள்வான்.

திட்டமிட்டபடியே எல்லாமும் நடந்து கொண்டிருக்கின்றன... இப்போது அவரின் உடலை வாங்கிக்கொண்டு சென்னை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். உறவினர்களிடம், வேறு மருத்துவமனைக்குச் செல்வதாகவும் அங்கே சென்று அனுமதித்துவிட்டு உங்களுக்குத் தகவல் தருகிறோம் என்றும் தகவல் தந்தோம்.

அவனைப் பார்க்கப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. முதலிலேயே இதைச் செய்திருக்கலாம் என்று தோன்றியது. இரண்டு லட்சம் என்பது நடுத்தரக் குடும்பத்தினருக்கு எவ்வளவு பெரிய தொகை... அநியாயமாகத் தொலைத்துவிட்டோமே! நினைக்க நினைக்க ஆத்திரமும் பரிதாபமும் பயமுமாய் ஒரு கலவையாக உடல் உஷ்ணமாகி உணர்ச்சிக் கொந்தளிப்பாய் இருந்தேன். அவன் கையை என்னையுமறியாமல் பிடித்துவிட்டேன். அவன் முகம் கலங்கியிருந்தது. அதற்குமேல் என்னால் பொறுக்க முடியவில்லை.

``என்னை மன்னிச்சிடு வெங்கடேஷ். உங்க அப்பா வீட்டிலேயே இறந்துட்டார். இறந்தவருக்குத்தான் இவ்வளவு பணம் செலவு செய்து வைத்தியம் பார்த்திருக்கிறோம்.’’

குறுகிப்போய்ச் சொன்னேன். அவனுடைய எதிர்வினை எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தயாராக இருந்தேன்.

பெரிதாகச் சிரித்தான், அந்தச் சூழலுக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருந்தது அது. விரக்தியில் சிரிக்கிறான் என்று நினைத்தேன்.

``எனக்கும் முன்பே தெரியும்.’’