ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வலிக்கும் வடுக்கள் - க்ரைம் ஸ்டோரி

வலிக்கும் வடுக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
வலிக்கும் வடுக்கள்

- காஞ்சனா ஜெயதிலகர்

“உனக்கு வயசே தெரியலடீ” - பாராட்டிய தாயின் பூரிப்பு, மங்கையிடம் பிரதிபலித்தது.

ஆனாலும் சலிப்பதுபோல, “வகை தொகையாய் இப்ப வரை சாப்பிடலைல்ல... அதான் சதை போடல” என்றாள்.

முதன்முறையாய் அழகு நிலையம் வந்ததால் கிசு கிசுப்பாய் பேசிய தாய், “எங்க காலத்துல சலூன்னா அது ஆம்பளைகளுக்குத்தான்... இந்த ரெண்டாயிரத்து வருஷத்துல பொம்பளை...”

“இது பியூட்டி பார்லர்ம்மா...”

“புருவங்களோடு கேசத்தையும் திருத்திவிட, அப்ஸரஸாட்டம் இருக்கே...”

மாதுளைச்சாறு வாங்கிக் குடித்து, ஆட்டோவில் வீடு திரும்பியவர்கள் அந்த லைன் வீட்டின் பூட்டை திறக்க, மரக்கதவு திணறலாய் விரிந்தது. எட்டுக்குப் பத்து அளவில் இருந்த அந்த இருண்ட அறையில் பொருந் தாமல் நின்றன டிவியும், முப்பட்டை கண்ணாடியுள்ள அலங்கார மேஜையும்.

சேர்த்துக் கட்டிய கூந்தலைப் பிரித்து அதன் முன் நின்று கோதிய மங்கைக்கு, பிரதிபலித்த தன் அழகு மும்மடங்கானதாகப்பட்டது. இனி வாழ்வில் முப்போக செழிப்புதான்.

“அண்ணன் தீர விசாரிக்கலம்மா... போஸ்ட் ஆபீஸில் வேலைன்னதும், சென்ட்ரல் கவர்ன்மென்ட்... கை நிரம்ப சம்பளம் தரும்னு என்னைக் கட்டி அனுப்பிட்டான்.”

“நம்ம வீட்டுக்கு இது தேவலடீ.”

“இவருக்கு தம்பி, தங்கச்சின்னு நொச்சு இருக்கே?”

அண்ணன் கூடுதலாய் பத்து பவுன் போட்டிருந்தா வசதியான, ஸ்மார்ட் மாப்பிள்ளையாய் பிடிச்சிருக்கலாம். கண்ணாடியின் மூன்று பிம்பங்களும் சேர்ந்து உதடு பிதுக்கின.

“ச்சே... கல்யாணமாகி நாலு வருஷம் கழிச்சு இது என்ன பேச்சு...” என்று கண்டிக்காமல் தாய் சிரித்தாள்.

“மாப்பிள்ளை அப்பிராணிதான். ஆனால், தேத்திட்டியே நீ!”

“கஷ்டப்பட்டேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வித்தை காட்டி, தினசு தினசாய் வறுத்தெடுத்தேன்.”

“கடைசில சாதிச்சுட்டேல்ல... இனி வரப்போற நாளு, மாசம், காலமெல்லாம் நீ ராணிதான். சமையலுக்கும் ஒரு ஆளைப் போடேன்.”

“ஐயோ... இப்பவே பக்கத்து வீடெல்லாம் புகையுது. சாதாரண என்.எஸ்.சி ஏஜென்ட் வீட்டுல வசதி வளருர வேகத்தைப் பார்த்து...”

“ஆமா எப்படி காசு வருது... யாருமில்லா விட்டாலும்” - தாய் கிசுகிசுத்தாள்.

“வழி, வித்தை எல்லாம் அவருக்குத் தெரியும். செய்ற துப்புதானில்ல. யாரும் காசு போட்டு, நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்னு சேமிச்சுக் கலாம். அலைய முடியாத, பிடிக்காத பெரிய மனுஷங்களுக்காக இவர் அந்த வேலையச் செய்வாரு. நல்ல இங்கிலீஷ் பேச்சு, பவ்யமெல் லாம் பார்த்து இவருக்கு தரப்பட்டதெல்லாம் பெருத்த கைங்க...”

“ஓஹோ...” என்ற நீட்டலில் காசு வரும் வழி பற்றிய யூகமிருந்தது.

“நெய் சாதமும் குருமாவும் சமைச்சு வச்சிருந்தேன். சூடு பண்ணவா...”

“பசிக்குது தான். நீ மினுமினுங்கற - ஆனா, மாப்பிள்ளைகிட்ட மாற்றமில்லையே?”

“பயப்படறாரும்மா. இது பாவம், தப்புன்னு சதா புலம்பறார்” - டிவி பார்த்தபடி சாப்பிட்ட வர்கள், உள் அறைக்கு வர...

“படும்மா... டன்லப் மெத்தை” - மகள் உபசரித்தாள்.

“ஹப்பா... சொகுசுடீ... படுத்ததும் தூங்கிடலாம்.”

“ஆனா, அவருக்கு உறக்கமும் பிடிக்கற தில்லை... தரையிலதான் சுருண்டுக்கறது.”

வலிக்கும் வடுக்கள் - க்ரைம் ஸ்டோரி

“மெள்ளப் பழகட்டும். இன்னிக்கு சலூன்ல, நக, உதட்டு, சாயமெல்லாம் வாங்குனியே.”

“ம்ப்ச்... இங்கே பூசிக்க முடியாது. வெளியூர் போனாத்தான்...”

“போறச்ச என்னையும் கூட்டிட்டு போவியா?”

“பின்ன... நீயும் கொஞ்சமேனும் சுகப்பட ணும்மா.”

“எனக்கு இந்த சாமர்த்தியமில்லடீ... அதான் கல்யாணமான அஞ்சு வருஷத்துல மூணு பெத்துக்கிட்டேன். நடுப்பிள்ளை தவறிட் டான்... ஆனாலும் கஷ்ட ஜீவனம்தான்.''

“நா அதுல கடும் கண்டிப்பு. நெருங்க விடறதில்ல.”

“ஐயோ... உங்கப்பாகிட்ட அந்தப் பருப்பெல் லாம் வேகாது” - இன்னும் மிச்சமிருந்த கூச்சத்துடன் சிரித்தாள் அம்மா.

“எடுத்ததுமே நாம எகிறடணும்மா...”

“எங்க... மாமி, நாத்தின்னு சுத்தி டஜன் கண்ணு நம்மைக் கவனிச்சுட்டே இருக்கை யில...”

“அப்படி ‘நல்ல பெண்மணி’ வேஷத்துக்கு என்ன மிஞ்சியது?”

“ஹப்பா... மெத்தை சுகந்தான்...”

“ஆனா, வீட்டை மாத்திக்கணும். தபாலாபீஸ் பக்கம்னுதான் குடி மாற இவர் சம்மதிச்சது. தச்சநல்லூரிலிருந்து பாளையங்கோட்டை வந்து போற அலைச்சல் மிச்சம்.”

“வர்ற காசுல அங்கே பங்கு உண்டா?”

“அதுக்கு சம்மதிச்சதாலதான் எனக்கு வருது. தங்கைக்கு செயின் செஞ்சாச்சு. வர்ற வருஷம் தம்பி படிப்பு முடியவும், நாங்க கழண்டுக்கணும்.”

“முன்னே நா வரவும் ஒன்னிரண்டு குட்டிங்க ஓடி வரும்களே...” - கிளம்பிய அம்மா கேட்டாள்.

“இப்ப யாரும் வந்து எட்டிப் பார்க்கறதில்ல... அங்... போன வாரம் தபாலாபீஸ் சீனியர் ஆபீஸர் ஒருத்தர் வீடு வந்தார்...”

“மூணே நிமிஷ நடை தானே ஆபீஸிலிருந்து.”

“ஆனா... உன் மாப்பிள்ளை முகம் சுண்டிருச்சு. நான் அசரலை. இவர் வர்ற நேரம்னு பளிச்சுன்னு நின்னவ, ‘திக்’காய் காபி கலந்து பரிமாறினேன்.”

“நீ... கெட்டியாச்சே.”

“சதா அலங்காரமா நின்னாதானே ஆம் பளை தடுமாறுவான்.”

“என் தோளைத் தொடற அவரு கையே கூட தகிக்கும். ஆனா நா, ‘நாம் மூணானா செலவும் மூணு மடங்கு’ன்னு அவரு தோளுல சாஞ்சு புலம்புவேன். ஏத்தி விட்டுட்டு விலகி டணும்...”

“அது சரி... அந்த ஆபீஸர் கதை என்னாச்சு?”

“வந்தது போல போனாரு... அவ்வளவுதான்.”

வலிக்கும் வடுக்கள் - க்ரைம் ஸ்டோரி

ஆனால், நிலைமை அப்படியே நகரவில்லை. கோபாலின் வளம், வசதி பற்றிய பேச்சு புகையாய் பரவ, கேள்விகளுக்கான பதிலைத் துருவினார்கள். விஜிலென்ஸின் சோதனையில் வாடிக்கையாளர்களின் தொகை அப்படியே வரவில்லை என்பது தெளிவானது. ஆடிட்டர் களை வரவழைத்து ஸ்டாக், செக் நடத்தி னார்கள். பூட்டிய அறைகளிலிருந்த கோப்பு களை சரிபார்க்க, சில எண்ணுள்ள கோப்பு களைக் காணவில்லை. அதிலிருந்து பணத்துக்கு போலி ரசீதுகள் போயிருந்தன. பணமோ மங்கையின் கைக்கு.

சஸ்பென்ஸ் ஆர்டர், சார்ஜ் மெமோவைத் தொடர்ந்து காவல்துறை கோபாலைக் கூட்டிப் போனது. செஷன்ஸ் நீதிபதி முன் கைகட்டி, தலைகுனிந்து நின்றவன், பிறகு நிமிரவே இல்லை. ‘அச்சம் இருப்பவனுக்கு அரண் இல்லை’ என்பது கோபாலுக்கு மட்டுமல்ல, இத் தனைக்கும் காரணமானவளுக்கும் புரிந்தது.

எதை, யாரைக் கண்டாலும் அரண்டார்கள்.

வக்கீல் வீடுகளைத் தேடி அலைந்து ஏறி இறங்கினாள். பிறந்த வீட்டைத் தொடர்பு கொண்டால், “எதிர் வீட்டுக்கு வந்ததுதானே நான் போன் பேச முடியும்? இங்கேயும் எல் லாருக்கும் விஷயம் தெரிஞ்சு போச்சு... முகத் தைக் காட்டுறாங்க” - தாயும் வெட்டினாள்.

“நீ ஏம்மா வர்றதில்ல?”

“உங்கண்ணன் இப்ப வேண்டாங்கறான். அவனை நம்பித்தானே நானு...”

“அவன் பக்கபலமாய் வந்து எனக்காய் நிக்க வேணாமா...” - மங்கை கேவினாள்.

“குடிக்காத புருஷன்... வையறதுமில்ல... சீர் கேட்டு விரட்டாத, கூட்டாளிகளோட ஊர் சுத்தாத அருமையான மனுஷனை தப்பு வழிக்கு நீயும்தான் சேர்த்து திருப்பினேன்னு என்னையும் சேர்த்து குத்தறான்” - தாயின் குரல் கிசுகிசுப்பாய் குற்றம்சாட்டியது.

தபாலாபீஸ் அதிகாரிகளிடம் போய் கெஞ் சினாள். யாரும் நின்றுகூட காது தரவில்லை.

- காஞ்சனா ஜெயதிலகர்
- காஞ்சனா ஜெயதிலகர்

இவள் வீடு வந்து காபி குடித்தவர் மட்டும், “ஒரு மனிதனின் நேர்மை அவன் வளர்ப்பில் மட்டுமல்லம்மா. அந்த விதைக்கு மழையாய் வர மனைவி முக்கியம். அந்த நிழலில்தானே குழந்தைங்க பாதுகாப்பாய் வளரும்” என்று காலம் கடந்த அறிவுரை சொன்னார்... ஏனெனில், பிறகு கோபாலனை இவள் பார்க்கவே இல்லையே. கணவனை கையாலாகாதவன் என நினைத்தவள், தானும் அந்நிலைக்கு சறுக்கினாள்.

சில ஆண்கள் இவள் காதில் விழும் அளவில், ‘லட்டு மாதிரி இருக்கிறதாலதான் பயல் அப்படி மயங்கி ஆடியிருக்கான்...’

‘சரி... இனி லட்டு உருண்டு யார் கைக்கு போவும்?’ சீண்டினார்கள்.

நம்பிக்கையாய் நினைத்த ஒருவனை அண்டி, அவனுடன் சேர்ந்து கணவனை மீட்க அலைந்தாள்.

“எங்கப்பா ரிட்டயர்மென்ட் பணத்துல பாதி எனக்கு வந்தது. அதை வட்டிக்கு விட்டு பெருக்கி னேன்னா எதற்கும் சாட்சியில்லையே..” என்றவன் அவளை மேலும் அலைக்கழித்தான்.

லட்டு கேவலமாய் வேறு வழியில் சேதமானது. கோபாலன் தண்டனை தீர்ந்த பிறகும் மனைவியைத் தேடாதது போல, மங்கையும் ஒதுங்கி ஒளிந்தாள். பெண் டாக்டர் ஒருவரின் மருத்துவமனையில், வரவேற்பு பகுதியில் வேலைக்குச் சேர்ந்தவள், எப்போதேனும் தாயின் கண்ணில் பட்டாள்.

இருபது சொச்ச வருடங்கள் கழித்து தேடி வந்த தாயை சலனமின்றி பார்த்தாள்... “வாம்மா...’’

“உனக்கு இன்னிக்கு பிறந்த நாளு மங்கை - ஐம்பதாவது.”

சொன்ன தாயைவிட தான் மூப் படைந்தது போலிருந்தது மங்கைக்கே தெரிந்தது. இளமையை தவறாய் உபயோகித்தவளிடமிருந்து அது விரை விலேயே நழுவிப் போயிருந்தது.

“மாப்பிள்ளை தங்கச்சிய போன வாரம் ஒரு விசேஷத்தப்ப பார்த்தேன்... அவரும் வேற கல்யாணம் கட்டிக்கல...”

‘தெரியும்’ என்பதாய் தலையசைத் தாள்.

“அமைதியான பையன். போய் பார்த்தா... மன்னிச்சிடுவாரு...”

“என் மனசு கேட்காதும்மா. சீரழிச்சதுமில்லாம, சீரழிஞ்சுட் டேன்ல” - குரல் கேவியது.

“என்ன சொல்ற?”

“புருஷனிடம்கூட பொத்தி, போக்கு காட்டினதை அந்த நாய் பிடுங்கிப் புரட்டி எடுத்திருச்சு.”

“யாரைச் சொல்ற? பார்த்த வக் கீலுங்க வயசாளி இல்ல...”

“உதவறேன்னு ஏஜென்ட் போல என்னை கூட்டிட்டு போனவன்... என் கேஸ் தாக்குப் பிடிக்காதுன்னு அறிஞ்சே, என்னை சுத்த விட்டு, செலவுக்காகன்னு என்னைய எடுத்துக்கிட்டான்.”

விக்கித்து நின்ற தாய், சற்று நேரம் கழித்து... “அளவோட நின்னுருக் கணும். அளவை மிஞ்ச, அமிர்தமே நஞ்சாயிடுமில்ல..”

“நான் புரிஞ்சுகிட்டது வேறம்மா... அளவோட நின்னாலும் நஞ்சு அமிர்த மாகாது” - மகள் பேச்சுக்கு இருபது வருஷங்களுக்கு முன் ஆனந்தப்பட்ட தாய் இப்போது அயர்ந்து நின்றாள்.