சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

நழுவி விழும் பூக்கள்

நழுவி விழும் பூக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
நழுவி விழும் பூக்கள்

- வண்ணதாசன்

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

`ஒன்றின் மேல் ஒன்றாக

வாத்துக் கால் பலநூறின்

தடம் கிடக்கும் தனியாக

நதி நடக்கும் துணையாக'

என்று எத்தனையோ வருடங்களுக்கு முன்பு கவிதை எழுதியிருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்பு பாறைக்குளத்தில் அப்படி ஒரு வாத்துக் கூட்டம், அதன் பல நூறு வாத்துகளும் ஒரே வாத்தாகி நகர்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அது குளத்து நீரிலிருந்து கரையேறி, அதன் பின்பக்கங்களை அசைத்தசைத்து அதன் கரண்டி அலகுத் துளையின் நுகர்ச்சி மட்டுமே அறிந்த வாத்துத் தடத்தில் தன் சேர்ந்திசையை வெயிலில் எறிந்துகொண்டு நகர்வது ஒரு மாயம் செய்யும். அப்போது நான் வாத்து மேய்ப்பவனாக மட்டுமே இருப்பேன். என் இடது முழங்கையில் தொங்கும் பிரப்பங்கூடையில் வாத்து முட்டைகளைக் குனிந்தெடுத்துச் சேகரிக்க ஆரம்பித்திருப்பேன்.

ஆனால் என் எந்தச் சொப்பனங்களிலும் அந்த வாத்துக் கூட்டம் இதுவரை வரவே இல்லை. மணி மாறன் இன்று முகநூலில் பதிவிட்டிருக்கிற அவருடைய அதிகாலைச் சொப்பனத்தில் நீர்வாத்துகள் வந்திருக்கின்றன. அவரைத் தண்ணீரில் இறங்கச் சொல்லிச் சிரித்திருக்கின்றன. கோணங்கி வந்து, ‘பயப்படாம இறங்கி வாத்து கூடயே போ. ஒண்ணும் ஆகாது’ என்கிறார். எங்கிருந்தோ தமிழ்ச்செல்வன் வந்து ‘பக்கத்தில ஒரு நல்ல தண்ணிக் கிணறு இருக்கு. போயி குளி’ என்று சொல்கிறார்.

நழுவி விழும் பூக்கள்

கோணங்கி, தமிழ்ச்செல்வன் வராத, வாத்தும் வராத என் சொப்பனத்தில் திரும்பத் திரும்ப ஆறு வந்திருக்கிறது. ஆறு வந்தது உண்டு என்று சொல்வதே சரி. இப்போது அந்தக் கனவு வருவதில்லை எனினும், ஒரு ஈர ரிப்பன் போல நகர்ந்துகொண்டு இருந்த அந்த நெளியும் நீர்த் தடத்தை நான் ஆறு என்றே நம்புகிறேன். அந்த ஆற்றின் மேல் ஒரு சிறகு விரித்த பறவை போல நான் பறந்து கொண்டே இருப்பேன். சிறகடிப்புகள், சிறகசைவுகள் எல்லாமற்ற அந்த இரு கைகள் விரித்த நிலையில் நான் ஆற்றுக்கு மேலும் வானுக்குக் கீழும் மிதக்கும் கனவு தொலைந்துபோயிற்று. உயர உயரப் பறப்பது எல்லாம், ஒரு கணம் அப்படிச் சிறகடிப்பை எல்லாம் நிறுத்தி, அந்தரத்தின் பரவசத்தில் மிதப்பதற்கு என்றே எப்போதும் எனக்குத் தோன்றும். தொலைந்த கால் கொலுசும் தொலைந்த கனவும் தொலைத்தவன்/ள் கையில் என்றைக்காவது கிடைத்தது உண்டா?

கரண்டை அளவே, புன்னைக் கொட்டைகள் உருண்டு வரும், தெளிந்த தண்ணீர் ஓடும் ஆறு அது. அப்படி எனில் சிவசைலம் ஆறாகத்தானே இருக்க முடியும். படித்துறைக் கல் மண்டபத் தூணில் ஏற்கெனவே இருக்கும் குரங்குச் சிற்பத்திற்குத் துணையாக யாரோ ஒருவர் இன்னொரு குரங்குச் சிற்பத்தைச் செதுக்கியபடி இருக்கிறார். நான் எங்கே இருந்து இதை எல்லாம் பார்க்கிறேன் என்று நினைவில்லை. பார்க்கிறவனின் கைரேகையாவது பதியாமல் ஒரு சொப்பனத்தை யாரும் காணவே முடியாது என்கிறார்கள்.

ஆற்றோரத் தாழம் புதர்களின் பக்கம் ஒருவர் முட்டளவு தண்ணீரில் நடந்து நடந்து தாழம் பூப் பறித்தபடியே என்னைப் பார்க்க வருகிறார். நான் இல்லை எனினும் என்னைப் பார்க்கத்தான் என்கிற ஒரு திசை அது. அவர் கையில் இருக்கிற துரட்டிக் கம்பு மிக நீளமாக இருக்கிறது. நட்சத்திரங்களைக்கூடப் பறித்துவிடும் அளவுக்கு நீளம். ‘ஏ ஆயான், நீ எப்ப வந்தே?' என்று அங்கிருந்தே சத்தம் கொடுக்கிறார். எப்போதோ இறந்துபோன சிவசைலம் தாத்தா. ‘தெய்வு எப்படியிருக்கா?’ என்று கேட்கிறார். எங்கள் அம்மை இறந்துபோயும் வருடங்கள் ஆகியிருந்தது. அவள் எப்படி இருக்கிறாள் என்று அவளுக்கு முன்பே ‘போய்ச் சேர்ந்துவிட்ட’ சின்னத் தாத்தா அல்லவா என்னிடம் சொல்ல வேண்டும். ஒரு வேளை சிவ சைலம் தாத்தா பறித்த தாழம்பூ எல்லாம் எங்கள் அம்மைக்குக் கொடுக்கத்தானோ?

அதே சிவசைலம் தாத்தா வீட்டுத் துலாக் கிணறுதான். ஒரு வீட்டையும் தோட்டத்தையும் ஒட்டி அவ்வளவு பெரிய கிணறு, நான் அந்த வயதில் வேறு எங்கேயும் பார்த்ததில்லை. ஆனால் அந்தத் துலாக் கிணற்றில் இறைத்து இறைத்துக் குளித்துக்கொண்டு இருந்தது சிவசைலம் தாத்தா இல்லை. அவருடைய அண்ணனாகிய எங்களுடைய அம்மாத் தாத்தா. நல்ல ஊற்றுக் கசிவில், எப்போது பார்த்தாலும் குனிந்து செம்பில் கோதுவது போல நிரம்பிக் கிடக்கிற கிணற்றுத் தண்ணீருக்கு உண்டான குளிர்ச்சியோடும் பளிங்கோடும் அது அவருடைய உச்சந்தலை வழுக்கையிலிருந்து கண்ணாடிப் பாளமாகச் சிதறுகிறது. பாளத்துக்கு ஊடாகப் பார்த்தால் அவர் உடம்பில் எந்தத் துணியுமே இல்லை. எண்பது வயது வரை இறுகிக் கிடந்த அவர் உடம்பு மட்டுமே எண்ணெய் பூசி வழுக்குகிறது. நிறை அம்மணமாகத் தாத்தா இறைத்து இறைத்துக் குளித்துக்கொண்டே இருக்கிறார்.

நான் பதறி விழித்துவிட்டேன். காலையில் இதை வீட்டில் சொன்னபோது சங்கரியம்மா இரண்டு கையையும் சேர்த்து உயர்த்திக் கும்பிட்டாள். ‘யம்மா, நாம தாத்தாவுக்கு ஒரு குறையும் வைக்கலையே... இப்படிச் சொப்பனத்தில ஒண்ணும் உடுத்தாமக் கண்ணுல தெரிஞ்சா, வேட்டி துண்டு வச்சுக் கும்பிடச் சொல்லி அறிக்கை காட்டுதாக அல்லவா அர்த்தம்’ என்று கண் கலங்கினாள்.

நழுவி விழும் பூக்கள்

தாத்தாவுக்கு அந்த வருடம் வேட்டியை முறுக்கிப் பலகையில் வைத்து, துண்டை முறுக்கித் தலைப்பாகை சார்த்திக் கும்பிட்டோம். பாம்புப் பிணைச்சலாய் திருகிக் கிடந்த வேட்டி படம் எடுத்து ஆடியது. அந்தத் தடவை வேட்டியில் வைத்த சந்தனமும் குங்குமமும் நெற்றிக் கண் போல என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தது. யாரும் பக்கத்தில் இல்லாத சமயம் நானும் அந்தக் கண்ணைப் பார்த்துக் கொண்டே நின்றேன். எப்போது அப்படி ஆயிற்று என்று தெரியவில்லை. பார்க்கப் பார்க்கச் சந்தனமும் குங்குமமும், நான் தொடாமலே குளுகுளுவென்று குளிர்ந்து பிசுபிசுப்பு அடைந்துவிட்டதாக ஒரு உணர்வு. மீசையை ஒதுக்கித் தாத்தா சிரிக்கிறார்.

பத்துப் பதினைந்து வருடங்கள் இருக்கும். வேறு ஒரு காரியமாகக் குற்றாலத்தில் தங்கியிருந்த சமயம். ரவி சுப்ரமணியன் அவருடைய நண்பர் அண்ணாதுரை, இடைகால் காந்தி மற்றும் நான் எல்லோரும் தேனருவிக்குப் போனோம். தேனருவியில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை. தடாகத்தில் மட்டும் தண்ணீர் கிடந்தது. பல்லூழி காலம் கண்ட அருவித் தடாகத்தின் ஆழத்திற்கு எல்லாம் கணக்கே கிடையாது. அது பாதாளம் வரைக்கும் இருக்கும். அந்தப் பாதாளத்தில் நீலி, மூலி எல்லாம் இருப்பார்கள்.

ரவி, அண்ணாதுரை, காந்தி எல்லாம் தடாகத்தின் இந்தக் கரையிலிருந்து நீந்தி அருவிக் கரைக்குப் போகிறார்கள். இவன் நீச்சல் தெரியாதவன் என்பதை அந்தப் பாதாளம் அறிந்திருக்க வேண்டும். என்னை அது மிகுந்த வசீகரத்துடன் கூப்பிட ஆரம்பித்துவிட்டது. ‘`ஒன்றுமில்லை. இறங்கு. நானாயிற்று. என் தோளில் உன்னை உட்கார்த்தித் தூக்கிவைத்து அங்கே கொண்டு போய்விட்டு விடுகிறேன்'’ என்று என் காதில் மட்டும் விழும்படி சொல்கிறது. எனக்கு நீச்சல் தெரியும் என்பது போல, ``அண்ணே, அப்படியே ஓரமாக வாங்க, ஆழம் ஒண்ணும் இல்லை'’ என்று ரவியோ, அண்ணாதுரையோ சொல்வது கேட்கிறது. யாரும் சொல்லவில்லை. அது பாதாளத்தின் பல்குரல். நான் தடாகத்தில் இறங்குகிறேன். முதல் காலின் சிலீரில் தண்ணீர் மெத்தை போல் அமுங்குகிறது. இரண்டாவது காலை முதலைக் கவ்வலாகப் பாதாளம் உள்ளே இழுக்கிறது. என் மொத்த உடலும் ஒரு கூழாங்கல்லாகித் தடாகத்தில் அமிழத் தொடங்குகிறது...

நழுவி விழும் பூக்கள்

தண்ணீர் மூன்று முறை கருணை காட்டுமாம். நான் முதல் முறையிலேயே அதை அடைந்தேன். கொப்பளித்துத் துப்பியது போல தடாகம் என்னைக் கரையில் வீசியது. நான் மறுமுறை பிறந்து என் தொப்புள் கொடியை நானே அறுத்து எழுந்து நின்ற போது என் பக்கவாட்டுப் பாறையில் ஒரு இலைகூட அற்ற, ஒரே ஒரு கன்னங் கருநீலப் பூ மலர்ந்திருந்தது. அது என் மேல் தடாகம் துப்பியிருக்க நினைத்த விஷத்தின் கருநீலம். நான் அதைப் பறிக்கவில்லை. எனக்குத் தெரியும், எவ்வளவு முயன்றிருந்தாலும்கூட அதைப் பறித்திருக்க முடியாத பாறைப் பூ அது. என்னைத் தவிர யாரும்கூட அதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. என் குவளைக்கான நஞ்சை யார் குவளையிலும் ஊற்றியிருக்க வாய்ப்பில்லை.

இந்த நீலப் பூ பற்றி என் சினேகிதி ஒருத்தியிடம் சொல்லியிருந்தேன். என் கனவில் வராத அது, அவருடைய கனவில் வந்திருந்ததாம். அது ஒரு சங்கு புஷ்பம் போலவும் ஒரு யோனியைப் போலவும் புத்துயிர்த்து மலர்ந்திருந்ததாக அவர் சொன்ன போது, ஒருவேளை தேனருவித் தடாகப் பாறையிலும் அது அப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என எனக்குள் ஒப்புக்கொண்டேன்.

அந்த இன்னொரு கனவிலும் நான் எங்கமர்ந்து கண்டேன் என்று இப்போது நினைவில்லை. உலகில் அறுபடாத ஒரு கனவை, முழு கேக்கை உண்பது போல யாரும் உண்ண முடிந்ததில்லை. சின்ன வயதுப் புத்தாடைகளைவிடவும் ஈர்ப்பாக இருக்கிற வெட்டுத் துணிகள் போன்ற கனவுகளை ஒரு கைத் தையல் மெஷினில் தைப்பது போல மனம் தைத்துக் கொண்டே இருக்கிறது.

மிகவும் வழுவழுப்பான பாறைகளின் குவியலில் ஆற்றுத் தண்ணீர் இறங்கிக் குதித்துப் போகிறது. துகள் மணலில்கூட அல்ல, பிருபிருவென்ற பெரு மணலில் இருந்து சாய்ந்த வாக்கில் முளைத்து நிற்பது போல ஒரு கன்னங் கறுத்த சிலை கிடக்கிறது. தண்ணீருக்கு மேலே கிடக்கிறதா, தண்ணீருக்குக் கீழே கிடக்கிறதா என்ற நிச்சயம் இல்லை. முங்கிக் குளிப்பதுவும் வெயிலுக்கு மேலே வந்து முகத்தைக் காட்டுவதுமான ஒரு எடையும் எடையின்மையும். கறுப்பெனில் கறுப்பு, சிமிழ் எனில் சிமிழ், குமிழ் எனில குமிழாகத் திரண்ட வளரிணை முலைகளில் ஆவியன்ன அவிர் நூற் கலிங்கமாகத் தண்ணீர் தன்னை உடுத்தி உடுத்தி அவிழ்த்து அப்புறம் செல்கிறது. ரொம்ப நாள்களுக்கு சாய்ந்தாற் போல அந்தக் கனவுச் சிற்பம் மணலில் முளைத்துக் கிடந்தது. ஆறுகளில் மணல் அள்ளப்பட்டபோது அந்த என் கனவும் அள்ளப்பட்டுப் போயிருக்க வேண்டும்.

இந்தக் கனவை முகநூலில்கூடப் பதிவிட்டிருந்தேன். எத்தனை மாமர இலையை – மாவிலையை - நான் பார்த்தாலும். நான் பார்த்த முதல் மாவிலையையே நான் வர்ணிக்கிறேன் என்பதே உண்மை. இந்தக் கனவின் வரிகளில் இருந்து அந்த முகநூல் பதிவை அப்புறப்படுத்திவிட முடியாது.

சொப்பனத்தில் வந்தது ஒரு சிறு ஒடுக்கமான படகு. என் சினேகிதன்மார் அதைச் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தன் எல்லாப் படகிலும் எனக்கு இடம் கொடுக்கிற, அல்லது என் எல்லாப் படகிலும் ஏறிக்கொள்கிற பரமன் இருந்தானா தெரியவில்லை. ஆர்.பாலு இருந்தான். அவன் முகம் ஞாபகம் வருகிறது.

ஆறு மாதிரித் தெரியவில்லை. சதுரமான மிகப்பெரிய தெப்பக்குளம் போன்ற நீர்ப்பரப்பு. தண்ணீர் வேறு மாதிரி இருக்கிறது. திரவ நிலையைவிட அதிகமாக, திட நிலையைவிடக் குறைவாக ஒரு பக்குவம் கொண்டது. சாதாரணப் படகைவிடவும், ஒரு கனவில் வருகிற படகு எப்படி வழுக்கிச் செல்லுமோ அப்படிச் செல்கிறது. தட்டுப் பந்தல் போட்டது போல ஒரு இருட்டு. இருட்டுகூட அல்ல, வெளிச்சக் குறைவு. கழி ஊன்றியா, துடுப்பிட்டா தெரியவில்லை. நீர் கிழித்து, நீர் துளைத்து அது போய்ச் சேர்ந்து நிற்கிற துறை வாரணாசிப் படிக்கட்டுகள் போலத் தெரிகிறது.

தனுக்கோடி அழகர் அந்தப் படிகளில் இறங்கிவருகிறான். குறுந்தாடி வைத்திருக்கிறான். இதற்கு முன்னால் கிடையாது. பின்னால் திரும்பிக் கையை உயர்த்திக் காட்டி – சூரியன் அப்படித் திகிரி சுழற்றுகிறது சிவந்த வானத்தில் – அந்தப் பல்கலைக்கழகத்தில் படிப்பதாகச் சொல்கிறான். படகில் ஏறி என்னைக் கட்டி அணைத்துக்கொள்கிறான். நான் இறங்கிக் கொள்ள விரும்புவதாக பாலுவிடம் சொல்கிறேன்.

அழகர் அனுமதிக்கவில்லை. மறுக்கிறான். `நீ படகிலிருந்து இனி ஒருபோதும் இறங்குவதற்கில்லை' என்கிறான். அவனே படகைச் செலுத்துகிறான். அவனால் படகை வேகமாகச் செலுத்த முடிகிறது. ஏற்கெனவே தண்ணீருக்குள் இருக்கும் பாதைகளை அறிந்தவன் போல, திடமும் திரவமுமான தண்ணீரை வகிர்ந்து வகிர்ந்து தனுக்கோடி அழகர் படகைச் செலுத்தும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. நின்றுகொண்டே படகைச் செலுத்தும் அழகரின் தோளில் வந்தமர்ந்த பறவையை இதற்கு முன்னால் நான் எங்குமே பார்த்ததில்லை.

இப்படித்தான் பார்க்காத பறவைகளும் பெயர் தெரியாத பறவைகளும் நிரம்பியதாக என் கனவின் வானமும், நனவின் தீரமும் இருக்கின்றன. என் தோளின் மீது பறவைகள் வந்தமர்கின்றன. தோளிலிருந்து பறவைகள் பறக்கின்றன.

“தோளின் மீது ஒரு பறவை

வந்தமர்ந்த கணம்

என்னிடம் அப்படியே இருக்கிறது.

பறவையிடம் இருக்கக் கூடும்

தோளில் இருந்து

பறந்த கணம்”

வந்தமரும்போதும் பறந்து செல்லும் போதும் கனவு எனக்கு மட்டும் கேட்கும்படி ஒரு குரலை எழுப்புகிறது. அந்தக் குரல் என் இரவுக்குள் சில பூக்களை இப்படி நழுவ விடுகிறது.