
- அசோக்ராஜ்
கிளிகளின் கீச்சொலி என்னைத் தூங்கவிடவில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் அரச மரங்கள் தானாக முளைத்துவிடுகின்றனவா? எத்தனை கிளிகள். அவை தூங்கவே தூங்காதா? எழுந்து உட்கார்ந்தேன். டிசம்பர் குளிர் ஒரு போர்வை போல வளாகத்தை வியாபித்திருந்தது. பாதி விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வரிசையாக ஆட்கள் படுத்திருந்தார்கள். மூன்றாவதும் பெண் என்று வருத்தப்பட்ட, அந்தப் பெயர் தெரியாத பழூர் ஆசாமி அயர்ந்து மல்லாந்தபடி தூங்கிக் கொண்டிருந்தார். கைலி விலகித் தெரிந்த கருந்தொடையில் கொசு அப்பிக்கொண்டிருந்தது. சாலைக்கு எதிர்ப்புறம் டீக்கடை திறந்திருந்தது. நான் பார்த்தவரையில் அங்கே ஆட்கள் மாறுகிறார்களே தவிர கடை திறந்தேதான் இருக்கிறது. ஒரு மகப்பேறு மருத்துவமனைச் சந்தடிகளின் தேவைகள் எல்லாமே அங்கே பூர்த்தியாகிவிடுகின்றன. பிரட், டயாபர், சிறிய துண்டு, சீப்பு, சோப்பு என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள். செல்போனில் நேரம் மூன்று ஆக இன்னும் பத்து நிமிடம் காட்டியது. இனி தூக்கம் வாய்ப்பில்லை. டீ குடித்துவிட்டு வரலாம் என்று கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
சுமதியின் பிரசவத்திற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்திருக்கிறோம். நேற்று மதியம் எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவம்தான். ஆனால் குழந்தையை ஒரு பஞ்சுப்பொதி போன்று வெள்ளைத் துணியில் சுற்றி சுமதியின் அம்மா கைகளில் கொடுக்கும் போதே டாக்டர் சொல்லிவிட்டார்.
``பேபிக்கு நாக்கு ஒட்டியிருக்கு.'' குழந்தையைப் பார்த்து நெகிழும் நொடிகள் இரண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. தன் பாட்டியின் மடியில் இருந்த குழந்தையைத் தொடாமல் பார்த்துக் கொண்டிருந்த நான் டாக்டரிடம் திரும்பி, ``அப்படின்னா என்ன டாக்டர்?'' என்றேன்.
``குழந்தையோட நாக்கு கீழ ஒட்டியிருக்கு. அதால நாக்கை வெளில நீட்ட முடியாது. நாக்கை அசைக்க முடியாது. அதனால சரியா பால் குடிக்க முடியாது. புரையேறும். அதுக்குன்னு தனியா பால் புட்டி இருக்கு. வாங்கிக்கோங்க.'' எந்திரம்போல சொல்லியபடி நகர்ந்து கொண்டிருந்த, முப்பதைத் தாண்டாத சின்னப் பையனான டாக்டர் பின்னாலேயே ஓடினேன். ஏதாவது தீர்வைச் சொல்லிவிட்டுப் போடா அடே தம்பி?
``பத்து மாசம் கழிச்சு, குழந்தை குறைச்சலா எட்டு பத்து கிலோ வெயிட் போட்டதுக்கு அப்புறம் சர்ஜரி பண்ணிக்கலாம்.''
இது அடுத்த இடி. ரோஜா நிரம்பிய தாம்பூலத்தட்டை ஏந்திக்கொண்டு வருவது போல பின்னாடியே வந்துகொண்டிருந்த மாமியார் நடையை நிறுத்தினார்.
``மாப்ளை, ஆபரேஷனா?''
டாக்டர் என் மாமியாரைப் பார்த்து ``பயப்படாதீங்கம்மா... இது நிறைய குழந்தைங்களுக்கு வர்றதுதான். ஆபரேஷன் பண்ணி சரி பண்ணிடலாம். குழந்தைக்கு எப்படிப் பால் கொடுக்கறதுன்னு நர்ஸ் சொல்லிக் கொடுப்பாங்க. பரம்பரைல யாருக்காவது இப்படி இருக்கா?''
டாக்டர் எங்கள் இருவரையும் பொதுவாகப் பார்த்துக் கேட்டார். நாங்கள் ‘இல்லை’ என்பது போல தலையை ஆட்டினோம். நர்ஸ் வந்து குழந்தையை வாங்கிக்கொண்டு அறுவை அரங்கில் அரை மயக்கத்தில் படுத்திருந்த சுமதியிடம் சென்றாள். மாமியார் பின்னாலேயே ஓடினார்.
கண்ணாடிக் கதவருகே செல்லும்போது, ``நீங்க இங்கேயே இருங்கம்மா, நாங்க கூப்பிடறோம்'' என்ற நர்ஸின் வார்த்தைகளுக்கு பிரேக் போட்டது போல் நின்று வாசலிலேயே காத்திருக்க ஆரம்பித்தார் மாமியார்.
நான் நகர்ந்து வெளியே வந்து அப்பாவுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். அவர் குரலில் எந்த உணர்ச்சியும் இல்லை.

``பயப்பட ஒன்னும் இல்லையே?'’ என்று அவர் கேட்கும் தொனியிலேயே, ‘பயப்பட ஒன்னும் இல்லை கவலைப்படாதே' என்ற ஆறுதல் வார்த்தைகளையும் சேர்த்துச் செருகியிருந்தார். அம்மா அவர் அருகில் நின்றுகொண்டு ‘என்ன குழந்தை’ என்று கேட்பது கேட்டது.
எப்போதும் அப்பாவைவிடவும் அம்மாவிடம்தான் அதிகம் பேசி வளர்ந்தவன். சுமதியைக் கல்யாணம் செய்த பிறகுதான் எனக்கும் அம்மாவுக்கும் நடுவில் ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவர் கிளம்பி நிற்கிறது. எந்தத் தகவலும் அப்பாவின் மூலமே அம்மாவுக்குக் கடத்தப்படுகிறது. நினைத்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. அப்படி என்ன ஆகாததை நான் செய்துவிட்டேன்? ஆமாம். ஆகாததுதான். அவளைப் பொறுத்தவரையில் ஆகாததுதான்.
ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்க்கும் சுமதி, என்னை நேசிப்பதாகச் சொன்னதற்கு முன்பிருந்தே எனக்கு அவளைப் பிடித்திருந்தது. மலங்க மலங்க விழிக்கிற மானின் கண்களை உடைய, தந்திர பாவம் எதுவுமில்லாத ஒரு குழந்தையின் முகம் அவளுக்கு.
``ஏன் சார் நேத்து லீவு?''
``வழக்கம் போல பொண்ணு பார்க்கப் போனோம் மேடம். ஆனா செட் ஆகலை. விக் வெச்சுடலாம்னு இருக்கேன் மேடம்.'' - இப்போதும் சுமதியை நான் ‘மேடம்’ என்றுதான் அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
``கல்யாணம் பண்ணுன பிறகு வழுக்கை விழுந்தா என்ன பண்ணுவாங்களாம். கவர்மென்ட் வேலை கசக்குதாமா இந்தப் பொண்ணுங்களுக்கு?'' சுமதியின் இந்தக் கேள்விக்கு நான் பதிலேதும் பேசாமல், கையில் வைத்திருந்த கோப்புகளை பிரக்ஞையின்றிப் பிரித்துக்கொண்டிருந்தேன்.
வேலை முடித்துக் கிளம்பும் மாலை நேரம் அது. எங்களைத் தவிர அங்கே யாரும் இல்லை.
``நாங்கெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரிய மாட்டோமா சார்?'' என்றாள் சுமதி. இதைவிடவும் அழகானதொரு காதல் முன்மொழிவு இருக்குமா? ஆனால் அந்தக் கணம் என் மரமண்டைக்கு அது புரியவில்லை. அல்லது புரிந்திருந்தாலும் ஊர்ஜிதம் செய்ய நினைத்தேனோ என்னவோ?
``என்ன மேடம் சொல்றீங்க?''
``நாங்கெல்லாம் உங்களுக்குப் பொண்ணா தெரியலையான்னு கேட்டேன்'' என்றவள், பேக்கைத் தோளில் மாட்டிக்கொண்டு விடுவிடுவென்று கிளம்பினாள்.
நாங்கள் காதலிக்க ஆரம்பித்த மூன்றாவது மாதம் அப்பாவிடமும் அம்மாவிடமும் விஷயத்தைச் சொன்னேன். அழகான பெண், உள்ளூர், ஒரே அலுவலகம், இருவருக்கும் அரசாங்கச் சம்பளம் இப்படி எல்லாமே அவர்களுக்கு இணக்கமாக இருந்தாலும், ஒரே விஷயம் இவை அனைத்தையும் சுக்கலாக அடித்து நொறுக்கியது.
``அவங்க என்ன ஜனங்க?'' என்று அம்மாதான் முதலில் கேட்டாள். இந்த விஷயத்தில் அப்பாவைவிடவும், அம்மாதான் பிடிவாதம் பிடிப்பாள் என்று எனக்குத் தெரியும் என்றாலும், சுமதியைத் தவிர யாரையும் கல்யாணம் செய்து கொள்வதில்லை என்று தீர்மானமாக இருந்தேன்.
ஒரே மகனாக இருந்தபோதிலும், என் கல்யாணத்திற்கு எங்கள் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. சுமதியின் குலதெய்வக் கோயிலில், அவள் குடும்பம் மற்றும் சில அலுவலக நண்பர்கள் சூழ எளிமையாக எங்கள் திருமணம் நடந்தது.
அம்மாவின் கோபம் தணியலாம் என்று ஒரு மாதம் சுமதியின் வீட்டில் இருந்தோம். இன்று வரையும்கூட அம்மாவின் கோபம் சூடு குறையாத சூரியன்போல அப்படியேதான் தகித்துக் கொண்டிருக்கிறது.
நாங்கள் தனிக்குடித்தனம் வந்த அடுத்த வாரம் அம்மாவும் அப்பாவும் வீட்டிற்கு வந்தார்கள். எனக்கு உள்ளம் பூரித்திருந்தது.
``வாம்மா'' என்றபடி வாசலுக்கு ஓடினேன்.
``மாட்டுக்கறியும் பன்னிக்கறியும் விக்கிறவனுக்கு எங்களை சம்பந்தி ஆக்கிட்டல்ல?'' என்று அம்மா பொலபொலவேன்று அழ ஆரம்பித்தாள். சுமதி புறமண்டையில் அடிபட்டவள் போல அதிர்ந்து நின்றாள். வந்ததும் வராததுமாக அம்மா செய்த அலைக்கழிப்பைப் பார்த்து அப்பா, அம்மாவைக் கடுமையாகத் திட்டினார்.

``இப்படி ஒப்பாரி வைக்கத்தான் மவனப் பார்க்கணும்னு கிளம்பினியா?'' என்று அப்பா அதட்டிய பிறகு கொஞ்சம் அடங்கினாள். எனினும் சுமதியிடம் அம்மா ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
விடிவதற்குள் இரண்டு டீ மற்றும் ஒரு காபியை உள்ளே தள்ளியிருந்தேன். பார்வையாளர்களை இரவு ஏழு மணிக்கு வெளியே அனுப்பிவிட்டால் மறுநாள் காலை ஏழு மணிக்குத்தான் திரும்ப உள்ளே விடுகிறார்கள். சுமதியை ஜெனரல் வார்டுக்கு மாற்றியிருந்தார்கள். நான் வருவது கண்டு கட்டிலுக்குக் கீழே படுத்திருந்த மாமியார் எழுந்து உட்கார்ந்தார். தூக்கமில்லாத அவர் கண்கள் சிவந்திருந்தன.
``எதுக்கு வெளில படுத்தீங்க. வீட்டுக்குப் போயிட்டு காலைல வரலாம்ல?''
``இருக்கட்டும் மேடம். ஏதாவது எமர்ஜென்ஸினா?''
``என்ன எமர்ஜென்ஸி வந்துடப்போகுது? அம்மாதான் துணைக்கு இருக்காங்களே. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. முப்பத்தஞ்சு குழந்தைல, நம்ம புள்ளைக்கு மட்டும்தான் இப்படி ஆகியிருக்கு.'’ சுமதியின் கண்களிலிருந்து நீர் திரண்டு வழிந்தது.
தாயின் கதகதப்பான அரவணைப்பில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது.
``உங்க வீட்டிலிருந்து யாரும் வரலையா?''
``அம்மாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?''
மாமியாருக்கு காபியும் பன்னும் வாங்கிக் கொடுத்துவிட்டு குளிப்பதற்காக வீட்டிற்கு வந்தேன். ஹெல்மெட் அணிந்திருந்ததால் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனில் அம்மாவின் அழைப்புகள் காதில் விழவில்லை. மூன்று அழைப்புகள். சோபாவில் உட்கார்ந்தேன். அப்படியே சாய்ந்து தூங்க வேண்டும்போல் இருந்தது.
பேத்தியைப் பார்க்கக் கிளம்பி வரப் போகிறார்களோ அல்லது வந்தேவிட்டார்களோ என்ற யோசனையுடனேயே அம்மாவை அழைத்தேன்.
``எங்க போயிருந்தே... போன் அடிச்சிட்டே இருக்கேன், எடுக்கவே இல்லை'' எடுத்த எடுப்பிலேயே அம்மா கோபமாகப் பேசினாள்.
``வந்துட்டிருந்தேன்மா... சொல்லு.''
``கேள்விப்பட்டேன். கிரகணத்துல போன் பார்க்காதேன்னு சொன்னேன். கேட்டாளா அவ?''
எனக்கு சுரீரென்று கோபம் கொப்பளித்தது. ``எதையாவது சொல்லி வெறுப்பேத்தாதம்மா... நானே ரொம்ப டயர்டா இருக்கேன்.''
``சொல்பேச்சு கேட்டாதானே... அவளே வேண்டாம்னேன், கேக்கலை... உங்களோட சேர்ந்து நாங்களும் அவஸ்தைப்பட வேண்டியிருக்கு''
``அப்படி என்னத்த நீ அவஸ்தைப்பட்டுட்டே.. நீங்க யாரும் வர வேணாம். என் குழந்தையை எப்படி சரி பண்ணணும்னு எனக்குத் தெரியும். போனை வை முதல்ல.'' போனை அணைத்து சோபாவில் விட்டெறிந்தேன். அம்மாவின் சொற்கள் மனதைக் கீறிக்கொண்டிருந்தன.
வழக்கம்போல ஏழாவது மாதம் சுமதியின் வளைகாப்பு அன்று அம்மாவும் அப்பாவும் வரவில்லை. இரண்டு நாள் கழித்துக் கிளம்பி வந்தார்கள். அன்று நண்பகலில் வருகிற கிரகணம் முடிந்து மாலை கிளம்புவதாக இருந்தார்கள். கிரகண நேரத்தில் சோபாவில் சாய்மானமாக உட்கார்ந்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்த சுமதியிடம் முதன்முதலாக அம்மா பேசியிருக்கிறாள்.
``இந்தா, கிரகண நேரத்துல வயுத்துப் புள்ளக்காரி செல்போன் பாத்துட்டிருக்கே... ஆப் பண்ணிப் போடு.'' பேசாதவள் வந்து முதன் முதலாகப் பேசியிருக்கிறாள். சொல்வதைக் கேட்டு சுமதி போனை தூர வைத்திருக்கலாம். ‘சரி’ என்று சொல்லிவிட்டு ரூமிற்கு வந்து செல்போன் பார்ப்பதைத் தொடர்ந்திருக்கிறாள் சுமதி.
அலுவலகத்தில் இருந்த எனக்கு அம்மாவிடமிருந்து போன் வந்தது. ``சொல்லியும் கேட்காம ரூமுக்குப் போய் செல்போன் பார்க்கிறாடா உன் பொண்டாட்டி. கிரகண நேரத்துல டி.வி-யே பார்க்கக் கூடாதுங்கறாங்க தெரியுமா... அவ மட்டும் பார்த்தா யார் கேட்கப் போறா... உள்ள சிசு இருக்கில்ல... அதை பாதிக்கும்டா.''
``அதெல்லாம் ஒன்னும் ஆகாதும்மா... வர்றப்பல்லாம் ஏதாவது ஒரண்டய இழுக்காதே'' பார்த்துக்கொண்டிருந்த அலுவலக வேலைக்கு நடுவே அம்மாவின் இப்படியான அழைப்பு எனக்கு எரிச்சலைக் கொடுத்திருந்தது. அதை அம்மாவிடமும் காட்டிவிட்டேன். அவ்வளவுதான். மாலை நான் வருவதற்குள் அம்மாவும் அப்பாவும் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பியிருந்தார்கள்.
``உங்களுக்காவது புத்தி வேணாமா? பெரியவங்க சொல்றாங்கன்னு கேட்டுத் தொலைச்சாதான் என்ன?'' முதன்முதலாக சுமதியை அன்று கடுமையாகக் கோபித்துக் கொண்டேன்.
அம்மா இப்படி எங்களைப் பார்க்க வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பிக்கொண்டுதான் இருந்தாள். சுமதி சமைத்த எதையும் அவள் தொடுவதில்லை. அப்பாவையும் அனுமதிப்பதில்லை. எங்கள் வீட்டிற்கு அவள் வந்தால் புழங்குவதற்காகச் சில பாத்திரங்களைத் தனியாக வாங்கி வைத்திருந்தாள். அம்மா வீட்டிற்கு வந்துவிட்டால், சுமதி அடுக்களை செல்வதற்கே கூசுவாள். நாளடைவில் சரியாகும் என்று சுமதியை சமாதானம் செய்வேன்.
முப்பத்திரண்டு வருடங்களில் அம்மா இந்த அளவிற்கு வர்க்க துவேஷம் அனுசரிக்கக் கூடியவள் என்று நான் அறிந்திருக்கவில்லை. அதற்கான வாய்ப்பு இருந்திருக்கவில்லை. என்னாலும் அப்பாவாலும் எதுவும் செய்ய முடியவில்லை. அப்பாவின் சித்தப்பா ஒரு பட்டியலினப் பெண்ணை முப்பது வருடங்களுக்கு முன்பே காதலித்து, வீட்டின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்திருக்கிறார். அம்மாவைச் சமாதானப்படுத்த முனையும் அப்பாவின் எந்த முயற்சியிலும் அந்தச் சித்தப்பாவின் தலைதான் உருளும்.
`நீங்க சொல்லாதீங்க... உங்க பரம்பரைலயே இந்த ரத்தம் ஓடுது. உங்க சித்தப்பா புத்திதான் உங்க புள்ளைக்கும் வந்திருக்கு. உங்க சித்தப்பா பத்தி முன்னாடியே எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சிருந்தா என்னையே உங்களுக்குக் கொடுத்திருக்க மாட்டார்.'
அப்பா என்னை நிர்க்கதியானதொரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக பேப்பர் படிக்க ஆரம்பித்துவிடுவார்.
சுமதியிடம் அம்மாவின் அணுகலைக் காணும் போதெல்லாம் எனக்கு என் நண்பன் ராமகிருஷ்ணனின் அம்மாதான் நினைவுக்கு வருவார். மாயவரத்திலிருந்து மன்னம்பந்தல் ஏ.வி.சி காலேஜுக்கு நானும் ராமகிருஷ்ணனும் அவனுடைய பைக்கிலேயே சென்றுவிடுவோம். எங்கள் வீட்டிலிருந்து சைக்கிளில் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு நான் சென்றுவிடுவேன். ராமகிருஷ்ணனின் அம்மா கூடத்திற்கு வெளியே என்னை உட்காரச் சொல்வார்.

அவர்கள் காலைக்கும் மதியத்துக்கும் சேர்த்தே ஒரே வேளையாகக் குழம்புச் சோறு சாப்பிட்டுவிடுவார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் வட்டாவில் பில்டர் காபி குடிப்பார்கள். அப்போது எனக்கும் ஒரு டம்ளரில் கொஞ்சம் காபி வரும். ராமகிருஷ்ணனின் அம்மா போடுகிற பில்டர் காபியின் சுவைக்கு, மாயவரம் காளியாகுடி காபிகூட பக்கத்தில் வர முடியாது.
ராமகிருஷ்ணனின் அம்மா காபியுடன் வரும் போது, சுண்டியிழுக்கும் அதன் வாசனையால் ஈர்க்கப்பட்டு பல முறை அதை நான் வாங்க எத்தனிக்கும்போதெல்லாம் ``வைரவா... எத்தனை தடவை சொல்லியிருக்கேன். தொடப்படாது. பொறு. நான் வைக்கிறேன். எடுத்துக்கோ...'' என்று அருகில் இருக்கும் மேஜையில் வைப்பார்.
ராமகிருஷ்ணன் `அம்மா ரொம்ப ஆச்சாரம். அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா' என்பான். அவன் கண்களில் கெஞ்சல் இருக்கும். அம்மா வீட்டில் இருக்கும்போது நான் சுமதியின்மீது வீசுகிற அதே கெஞ்சல் பார்வை. அந்த வயதில் எனக்கு ராமகிருஷ்ணன் அம்மாமீது கோபமெல்லாம் வந்ததில்லை. அவரும் என்மீது வெறுப்பை உமிழ்ந்ததில்லை. `தப்பா நினைக்காதே வைரவா... அப்படியே வளர்ந்துட்டேன்' என்பார். நான் சிரித்துக்கொள்வேன்.
அலுவலக நண்பர்கள் சிலர் மருத்துவமனைக்கே பார்க்க வந்திருந்தார்கள். ஜெனரல் வார்டின் நுழைவாயில் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த பாலிமர் நாற்காலிகளில் மாமனாரும், சுமதியின் தம்பி சுதாகரும் உட்கார்ந்திருந்தார்கள். இங்கிருந்தே அவர்களைப் பார்த்துச் சிரித்தேன்.
சுதாகர் என் அருகில் வந்து ``மச்சான், உங்களை அப்பா கூப்பிடறாங்க'' என்றான். பால் புகட்ட குழந்தையை நர்ஸ் எடுத்துச் சென்றதை அடுத்து, நண்பர்கள் கிளம்பியவுடன் நான் மாமனார் அருகில் சென்றேன்.
``உங்க வீட்டிலிருந்து யாரும் வரலையா மாப்ள?''
``யாருக்கும் சொல்லவே இல்லை மாமா... சுமதி மாசமா இருந்ததே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மட்டும்தான் தெரியும்.''
``சுமதிய கட்னதுனால சொந்தம் விட்டுப்போயிடுச்சா?''
``அப்படியெல்லாம் இல்ல மாமா... மாயவரத்துலருந்து இந்த ஊருக்குக் குடியேறனப்பவே சொந்தங்ககூட பெருசா ஒறவு இல்ல மாமா.''
``ஒங்க வீட்ல இன்னும் சுமதிய ஏத்துக்கலயே மாப்ள'' - அவருக்கு என் அம்மா சுமதியை ஏற்றுக்கொள்ளாதது ஒரு குறையாகவே இருக்கிறது. காலம் எல்லாவற்றையும் சரி செய்யும் என்று ஆறுதலாகச் சொல்ல நினைத்தேன். ஏனோ மெளனமாக இருந்தேன்.
மாமாவின் கண்கள் கலக்கமாக இருந்தன. என் கையைப் பிடித்துக்கொண்டு ``புள்ள இப்படிப் பொறந்திருச்சுன்னு சுமதிய வெறுத்திராதீங்க மாப்ள.''
சிரித்துக்கொண்டே, ``அனாவசிய கற்பனை மாமா'' என்றேன். ``அப்படி பெரிய பிரச்சினை எதுவும் என் புள்ளைக்கு இல்ல. இது சாதாரண விஷயம்தான். ஆபரேஷன் முடிச்சு சில தெரபிலாம் செஞ்சா அவ எல்லார மாதிரியும் சாப்பிடவும் பேசவும் முடியும்.''
``காபி சாப்பிடலாம் வர்றீங்களா?'' என்றார். படுத்த மேனிக்குத் திரும்பிப் பார்த்த சுமதியிடம் `காபி சாப்பிட்டு வர்றோம்' என்று ஜாடையாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
குழந்தை பிறந்து ஒரு மாதம் முடிந்த நிலையில் அலுவலகத்தில் வேலையில் ஆழ்ந்திருந்த ஒரு திங்களன்று அம்மா போனில் வந்தாள்.
``எங்க இருக்கீங்க எல்லாரும்?''
``என்னம்மா கேள்வி இது? நான் ஆபீஸ்ல இருக்கேன். சுமதி வீட்ல இருக்கு.''
``அவங்க அம்மா இருக்காளா, போயிட்டாளா?''
``அவங்களையும் அனுப்பிட்டு நாங்க என்ன பண்ணுறது. குழந்தைய யார் பாத்துக்கறது?''
``சரி... சரி... அவ இருக்கும்போது நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேன். எங்கயாவது வெளில அழைச்சிட்டு வந்தா சொல்லு.''
அம்மாவை நினைத்து எனக்குச் சிரிப்பு வந்தது.
``பத்து நாளுக்கு ஒரு தடவை புள்ளைய கும்பகோணம் அன்பு ஹாஸ்பிட்டல்ல வந்து காமிக்கிறேன். அங்கதான் இதுக்கான ஸ்பெஷலிஸ்ட் இருக்காரு. வாரா வாரம் குழந்தை 200 கிராமாவது ஏறணுமாம்... அப்பதான் பத்து மாசத்துக்குள்ள ஆபரேஷன் பண்ணலாமாம்.''
இதிலெல்லாம் அம்மாவுக்கு எந்த அக்கறையும் இல்லாதவள்போல ``இதெல்லாம ஏன்டா என்கிட்ட சொல்றே... சொல்பேச்சு கேட்டாத்தானே... கிரகணத்துல போன் பார்த்தா அப்படித்தான்'' அன்று சொன்னதையே அம்மா இன்று சொன்னாலும், எனக்கு அன்று வந்த கோபமும் எரிச்சலும் இன்று இல்லை.
``இல்லம்மா... கார் புடிச்சுக் கும்பகோணம் போறப்ப சொல்றேன். நீயும் அப்பாவும் வர்றதா இருந்தா சொல்லு. சுமதி அம்மாவை வர வேண்டாம்னு சொல்லிடறேன்.''
அம்மா நேரடியாக இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அப்படிச் செய்வது தன் கெளரவத்துக்கு இழுக்கு என்று கருதியிருக்க வேண்டும். ``அவர்கிட்ட விவரத்தைச் சொல்லு'' என்று போனை அப்பாவிடம் கொடுத்தாள்.

இரண்டாம் நாள் தெருமுக்கில் காத்திருந்த அப்பாவையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு காரில் கும்பகோணம் பயணப்பட்டோம். சுமதி சிரித்துக்கொண்டே குழந்தையை அம்மாவிடம் செலுத்தப் பார்த்தாள். அம்மா ஓரக்கண்ணால் குழந்தையை அவ்வப்போது பார்த்தாளே தவிர, கும்பகோணம் வரும் வரை குழந்தையைக் கையில் ஏந்த மறுத்தாள்.
மருத்துவமனையில் குழந்தையின் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த டாக்டர், அருகில் இருந்த என் அம்மாவைப் பார்த்து, ``நீங்க யாரு, பாட்டியா?'' என்றார். அம்மா சிறிய தயக்கத்துடன் தலையை ஆட்டினார். அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டிருந்த குழந்தையின் முகத்தை டாக்டர் திருப்பி ``இங்க பாரு... பாட்டி பாரு...'' என்றவர் ``குழந்தை உங்க ஜாடைதான்'' என்றார் அம்மாவிடம்.
அம்மா தன்னியல்புடன் சிரித்தபடி என்னை ஒரு கணம் பார்த்துவிட்டு, டாக்டரின் வார்த்தைகளை ஆமோதிக்கும் விதமாக முதன்முதலாக குழந்தையை வாஞ்சையுடன் பார்த்தாள். அது கிட்டத்தட்ட ராமகிருஷ்ணனின் அம்மா என்மீது வைத்திருந்த வாஞ்சையை ஒத்திருந்தது.