சினிமா
Published:Updated:

வேட்டை பூதம் - சிறுகதை

வேட்டை பூதம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை பூதம் - சிறுகதை

12.01.2022 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

ஆள்காட்டிகள் பய ஒலி எழுப்பின. வங்குநரிகள் அருகாமையில் ஊளையிட்டன. கிழக்குத்திசைக் கொண்டல் பெருங்காற்றாய் மாறி நெடும்பனைகளை அசைத்தது. அமராவதி ஆற்றின் மேற்குக்கரை மூங்கில் தூர்களிடையே சென்ற மேட்டுத் தடத்தில் நான் அப்பாவைப் பின்தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன். அப்பாவுக்கு முன்னே கிட்டு வண்ணாரும் சடைய மூப்பரும் போய் கொண்டிருந்தனர். எனக்குப் பின்னே கந்த மாதாரியாரும் சின்னா நாவிதரும் மாகாளித் தோட்டியாரும் வந்து கொண்டிருந்தனர். எல்லோர் கைகளிலும் குத்தீட்டியும் வல்லயமும் இருந்தன. ஆளின் முகம் ஆளுக்குத் தெரியாத அமாவாசை இருள். நடுநிசியை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம். மாகாளித் தோட்டியார் பின்னாலிருந்து தணிந்த குரலில் பேசினார்.

வேட்டை பூதம் - சிறுகதை
வேட்டை பூதம் - சிறுகதை

“அந்த சப் கலெக்டரு ஒரு பேடி… அவ வந்திருப்பான்னு இந்த அகாலத்துல நாம போறது வீணான வேலயின்னு நெனைக்கறே… அப்புறம் வேட்ட பூதம் வருமுங்கறதுக்கும் என்ன உத்தரவாதமிருக்கு…?”

முன்னாலிருந்து சடைய மூப்பர் பதில் சொன்னார். “வேட்ட பூதம் இன்னிக்கு வரத்தான் போவுது. அந்த முட்டாள் சப் கலெக்டர அடிச்சுக் கொல்லத்தான் போவுது. அதெ நாம ரெண்டு கண்ணாலப் பாக்கத்தாம் போறோம்.”

கீழே ஆற்று மடுவில் நீந்தியபடி இருந்த தண்ணீர்க்கோழிகள் ஆளின் அரவம் கண்டு பறந்து எட்டப் போயின. எனக்கு தைப் பனிக் குளிர் உடலைச் சிட்டெடுக்க வைத்தது.எல்லோரும் நடந்துகொண்டே இருந்தோம்.திடீரென மேட்டுத் தடம் குறுகி ஒற்றைக்கால் மண்தடமாக மாறியது. இலுப்பைத் தோப்புக்குள்ளே போனது. கருகற்மதில் சூழ்ந்த கருப்பராயன் கோவில் அனாதரவாகக் கிடந்தது.அப்பா எங்கள் எல்லோரையும் நிறுத்தினார்.

“கலெக்டரு மானஸ்தெ… கண்டிப்பா வருவே…நாம இங்கேயே ஒளிஞ்சுக்குவோம்.”

நிலத்திற்கு மேலே வேர் பிதுங்கிய இலுப்பை மரத்தினடியில் எல்லோரும் ஒண்டி நின்று கொண்டோம். அப்பா கோவிலையே பார்க்கும்படி கட்டளையிட்டார். ஐம்பதடி தூரத்தில் வேட்டைத் துப்பாக்கி ஏந்தி வீச்சரிவாள் பிடித்து ஏகாந்தமாக எல்லைக் கருப்பராயன் நின்றிருந்தார். கோவிலுக்குப் மேற்குப்புறத்தில் ஊர் செல்லும் தடம் அரவமின்றிக் கிடந்தது. சப் கலெக்டர் வருவதற்கான சுவடேயில்லை.

அவ்வப்போது பழந்தின்னி வவ்வால்கள் இலுப்பையின் உச்சியில் மோதும் சப்தம் எழுந்தது. நேரம் செல்லச் செல்ல தனிமையும் நிசப்தமும் சூழ்ந்த கோவில்வெளி அமானுஷ்யத்தை தோற்றுவிக்கத் தொடங்கியது.எனக்கு திகில்தன்மை கூடிக்கொண்டு வந்தது. இருப்பினும் எல்லோரையும் போலவே பொறுமையாகவே காத்திருந்தேன்.

திடீரென ஊர்த் தடத்திலிருந்து சப் கலெக்டர் வந்து எல்லைக் கருப்பராயனுக்கு முன்னே நின்றார். குழல் துப்பாக்கியை நீட்டி கருப்பராயனை குறிப் பார்த்தார்.

“ஏய் கருப்பராயா… நான் சொன்ன சொல் தவறாதவன். வந்துட்டேன். உனக்கு தைரியமிருந்தா என்னைக் கொல்ல இப்ப நீ வேட்டை பூதத்தை ஏவு பாக்கலாம்…”

ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது மட்டும் உறுதியானது. சப் கலெக்டர் தொடர்ந்து தகாத வார்த்தைகளைச் சொல்லி கருப்பராயனைத் திட்ட ஆரம்பித்தார். அடுத்தகணம் கருப்பராயன் தோள்பட்டை ஓரத்திலிருந்து ஒரு குத்தீட்டி பாய்ந்து வந்து சப் கலெக்டரின் கையைத் தாக்கியது. சப் கலெக்டர் துப்பாக்கியிலிருந்து பிடி தளர்த்தினார். கைகளை வலி மிகுதியால் உதறினார். துப்பாக்கியும் அவர் உடம்போடு தொங்கி நிலத்தைக் குறி பார்த்தது. சப் கலெக்டர் சுதாரிப்பதற்குள் வல்லயம் ஒன்று பாய்ந்து வந்து துப்பாக்கியைப் பிய்த்து அந்தரத்தில் வீசிற்று. சப் கலெக்டர் நிராயுதபாணியானார். இருளில் எங்கிருந்தோ தோன்றிய வேட்டை பூதம் கருப்பராயனுக்கும் சப் கலெக்டருக்கும் இடையே குதித்திறங்கி நின்றது. நாங்கள் எல்லோரும் திடுக்கிட்டு என்ன செய்வதெனத் தெரியாமல் அப்பாவைப் பார்த்தோம். அப்பா சலனமில்லாமல் வேட்டை பூதத்தையே நோக்கியபடி இருந்தார்.

தொட்டிக்கட்டு வாசல் திண்ணையில் உறக்கம் வராமல் படுத்திருந்த நான் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். இந்த அகாலத்தில் இந்த சம்பவம் ஏன் நினைவுக்கு வருகிறது எனக் குழப்பம் ஏற்பட்டது. பக்கத்துப் பாயில் செல்வியும் பிரீத்தியும், அதற்கடுத்த பாயில் ராணி அத்தையும் ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தனர். எதிர் திண்ணை மரக்கட்டிலில் படுத்திருந்த நல்லசாமி மாமா குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார். நான் சப்தமெழுப்பாமல் இறங்கி வெளித்திண்ணையில் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கிக் கொண்டிருந்த அப்பாவிடம் போனேன். கட்டிலில் அப்பாவைக் காணவில்லை. சிறுநீர் கழித்துவிட்டு வருவார் எனக் காத்திருந்தேன். அப்பா வரவில்லை. நான் பயந்து போனேன். இந்நேரத்தில் அப்பா எங்கு போயிருப்பார் என்று யோசித்தேன்.

நேற்று அந்தியில் அம்மாவின் பதினாறாம் நாள் காரியம் முடிந்து வீடடைக்கும் சடங்கு தொடங்கியது. அப்பா தொட்டிக்கட்டு வாசல் திண்ணைத்தூணில் சாய்ந்து உட்கார்ந்து எதைப் பற்றியோ ஆழ்ந்து யோசித்தபடியிருந்தார். முகமும் வாடியிருந்தது. யாரும் எதிர்பாராமல் நடந்த அம்மாவின் திடீர் மரணம் அப்பாவுக்கு பெரிய இழப்பு. அப்பாவை ஆறுதல்படுத்த முடியாது என்று நான் அமைதியாகவே இருந்தேன். அம்மாவின் உயிர் பிரிந்த நேரம் தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரமான சதயம்.சாஸ்திரப்படி ஆறு மாதம் வீடடைப்பு. பங்காளிகளும் மாமன் மைத்துனர்களும் பச்சைத்தடுக்கும் கம்பந்தட்டும் இலந்தை முள்கொத்தும் தூக்கிக் கொண்டு அம்மாவின் உயிர் பிரிந்த தொட்டிக்கட்டு வாசல் திண்ணையின் வடகோடி அறையின் நடையை அடைப்பதற்காகத் தயாராயினர். ராணி அத்தையும் செல்வியும் அம்மா பிரியமாக உபயோகித்த சேலைகளையும் பொருட்களையும் எடுத்து வந்தனர். வீடடைக்கும் சீருக்கான சாங்கியத்தை சின்னா நாவிதரும் கிட்டு வண்ணாரும் முன்னின்று செய்து கொண்டிருந்தனர்.அப்போது நல்லசாமி மாமா என்னிடம் கேட்டார்.

“ஏம்ப்பா குமரேசு… நீ நாளைக்கே பெங்களூரு போகப் போறே. வூடு நீக்க இன்னும் ஆறு மாசம் இருக்கு. அதுவரைக்கும் மச்சான் எங்ககூட வந்து இருக்கட்டுமே…”

“இல்ல மாமா... அப்பாவ நாங்க பெங்களூரே கூட்டிக்கிட்டுப் போகலாமுன்னு இருக்கோம்.”

அந்தக்கணம் அப்பாவின் முகம் சுருங்குவதைக் கண்டேன். அதன்பின்பு அப்பா புதுமண்பானை நீரில் காசு போடவோ, விளக்கைத் தொட்டுக் கும்பிடவோகூட வரவில்லை. வீடடைக்கும் கதவை இழுத்துச் சாத்தும் தருணத்தில் அப்பா சட்டென எழுந்தார். சாத்தும் கதவைத் தடுத்து உள்ளே நுழைந்தார். யாருக்கும் எதுவும் புரியவில்லை. அட்டாழியின் அடியில் போய் நின்று எம்பி கட்டுக்கோலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். ராணி அத்தை சப்தமிட்டாள்.

“ஏண்ணா... நீங்களே மகன் மருமகளோட பெங்களூரு போகப் போறீங்க. இந்தக் கருமத்த எதுக்குத் தூக்கிட்டு. இன்னும் மொச வேட்ட ஆச உடுலியா என்ன..?”

எல்லோரும் சிரித்தனர். அப்பா யாரையும் பொருட்படுத்தவில்லை. வீடடைக்கும் நிகழ்வையும் கவனிக்கவில்லை. கட்டுக்கோலையே பார்த்தபடியிருந்தார். இரவுச் சாப்பாட்டின்போது கட்டுக்கோலுடன் என்னிடம் வந்தார்.

“குமரேசுக் கண்ணு! நா ஊரிலேயே தங்கிக்கறேண்டா. நானே சமைச்சும் உண்ணுக்கிறேண்டா. நாளைக்கு நானு உங்ககூட வரலையிடா.”

வேட்டை பூதம் - சிறுகதை
வேட்டை பூதம் - சிறுகதை

எனக்குக் கோபம் வந்தது. ‘‘நாங்க உசிரோட இருக்கும்போது நீங்க எதுக்கு இங்க கையால ஆக்கித் தின்னுக்கிட்டு அனாதையாட்டக் கெடக்கனும்? உங்களுக்கு ஏதாச்சும் ஒண்ணுனா, பெத்த அப்பனையே பாக்காத பாவின்னு ஊரு என்னைப் பேசாதா? பொலம்பாம எங்ககூட வர்ற வழியெப் பாருங்க…”

அப்பா சரியாகக்கூட சாப்பிடவில்லை.வெளித்திண்ணையில் போய் படுத்துக் கொண்டார். நானும் சமாதானப்படுத்த முயலவில்லை. காராட்டுப் பூனை ஒன்று கத்தியபடி மதிலேறிக் குதித்துப் போனது. நான் திரும்பவும் அப்பாவின் கட்டிலோரம் பார்த்தேன்.கட்டுக்கோலையும் காணவில்லை. அப்பா இனியும் திரும்பி வருவதற்கு சாத்தியமில்லை என்று பட்டது. எனக்குப் பயம் அதிகமானது.வீட்டுக்குள் உறங்குபவர்களை எழுப்பிச் சொல்லவும் தயக்கமாக இருந்தது. வெறிச்சிட்ட வீதிகளில் இறங்கித் தேட முயன்றேன். மின்கம்ப விளக்குகள் மங்கி எரிந்தன. அப்பா ரோசக்காரர்.இறங்கிய செயலில் பின்வாங்காதவர். ஏதாவது தப்பான முடிவுக்குப் போகாமலிருக்க வேண்டும் என்று மனம் பதறியது.

ரௌத்ரி வருசத்தின் ஆடி மாசம். பதினெட்டாம் பெருக்கின் வைகறை. கோடைக்காற்று குளிருடன் வீசிற்று. உள்ளூர் முயல் வேட்டையாடிகள் வாசலில் காத்திருந்தனர்.அம்மாவிடம் சொல்லிவிட்டு அப்பா கட்டுக்கோலை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.வெளிநடை தாண்டும்போது நான் பின்னாலேயே ஓடிப்போய் அழுதேன்.

“என்னையும் கூட்டிக்கிட்டுப் போங்கப்பா…”

அப்பா கண்டுகொள்ளவில்லை. அம்மா என்னை எட்டிப் பிடித்து சமாதானப்படுத்த முயன்றாள். நான் துள்ளியபடி வீறிட்டு அழுதேன்.

“நானும் போறே… நானும் போறே…”

அப்பா மனமிரங்கவில்லை. உள்ளூர் முயல் வேட்டையாடிகளோடு வீதியில் இறங்கிப் போய்விட்டார். அன்று முன்னிரவில் வீட்டுக்கு வந்த அப்பா, பச்சைப் பனையோலையில் மடித்த முயல்கறிக் கூறை அம்மாவிடம் கொடுத்தார்.நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். அப்பா குளித்து வருவதற்குள் அம்மா முயல்கறியை வடைச்சட்டியில் வறுத்தெடுத்து வந்தாள். அப்பா பிச்சுக்கறியாகப் பொறுக்கி என் வட்டிலில் போட்டார். நான் சாப்பிடவில்லை. எழுந்து வெளித்திண்ணையில் போய் உட்கார்ந்துகொண்டேன். அப்பா வட்டிலைத் தூக்கிக்கொண்டு நடைப் பக்கம் வந்து நின்று கேட்டார்.

“உன்னோட தகுதாயம்தான் என்னடா…?”

“இனிமேல் மொச வேட்டைக்கு உங்களோட நானும் வருவேன்…”

“தை வேட்டைக்கு உன்னைக் கூட்டிட்டுப் போறேன்… போதுமா?”

நான் அப்பாவிடம் வட்டிலை வாங்கி பிச்சுக்கறியை சாப்பிடத் துவங்கினேன். அம்மா சிரித்தாள். தை மாதத்திற்காக என் மனம் ஏங்கியது. சதா நான் முயல் வேட்டை குறித்தே பேசிக் கொண்டு திரிந்தேன். கார்த்திகைக் கடைசியில் வளர்பிறை மேல்நோக்கு நாள் பார்த்து அப்பா என்னை கருக்கலில் எழுப்பினார். மிதிவண்டியில் ஊரைக் கடந்து வடக்கே ஊதியூர் மலைக்குக் கூட்டிப் போனார்.அரிவாளுடன் மலைக்கரட்டுக்குள் நுழைந்தார். கடலைப் புதர் பார்த்து விளாறுகளாக அரக்கி எடுத்தார். நாருரித்து சீவி அளவு வைத்துத் தறித்து கட்டுக்கோலாக்கினார். மிதிவண்டியை திருப்பிச் செலுத்தி நேராக எல்லைக் கருப்பராயன் கோவில் வந்து நிறுத்தினார். என்னுடைய கட்டுக்கோலை கருப்பராயன் காலடியில் வைத்து எடுத்து வாழ்த்தி என் கையில் கொடுத்தார். எனக்கு அளவிட முடியாத சந்தோஷம். ஊருக்குள் பெரிய முயல் வேட்டையாடி ஆகிவிட்டதாக கனவு விரிந்தது.

ஊரின் எல்லா வீதிகளிலும் தேடி விட்டேன். எங்கும் அப்பா தென்படவில்லை.நேரமும் நடுச்சாமம் கடந்து விட்டது. மன உறுதியும் குலைந்தது. இனி இந்த அகாலத்தில் அப்பாவை எங்கு போய் தேடுவது என்கிற குழப்பம் மேலிட்டது. கண் கலங்கி நீர் முட்டியது. ஆள் புழங்காத வீட்டின் வெளித்திண்ணை ஒன்றின் மீதேறி உட்கார்ந்தேன். எல்லைக் கருப்பராயனிடம் மனமுருகி வேண்டினேன்.

“நீயே கதின்னு கெடந்த அப்பாவ எப்படியாவது திருப்பிக் குடு...”

அந்தக்கணம் எனக்கு, அப்பா பழைய முயல் வேட்டையாடிச் சினேகிதர்களைப் பார்க்கப் போயிருக்கலாம் என்று தோன்றியது. அவசரமாக எழுந்து கிழக்கு வளவில் இருக்கும் கிட்டு வண்ணார் வீட்டை நோக்கி நடந்தேன்.

எங்கும் தை மாதத்தின் தலை நடுங்கும் குளிர். முதல் சேவல் கூவிற்று. உள்ளூர் முயல் வேட்டையாடிகள் வாசலில் வந்து குழுமினர். வேட்டைநாய்கள் வீதியில் நின்று குரைத்துக் கொண்டிருந்தன. அப்பா வெளித்திண்ணை வாசற்படியில் நின்று உள்ளூர் முயல் வேட்டையாடிகளை நோட்டமிட்டார். நான் அப்பாவிற்கு பின்னால் வந்து நின்று கொண்டேன்.

“என்னப்பா? எல்லாரும் வந்தாச்சா…பொறப்படலாமா?”

உள்ளூர் முயல் வேட்டையாடிகள் நாய்களை உசுப்பேற்ற விசிலடித்தனர். நாய்களும் குரைத்தபடி வேட்டையாடிகளோடு வர ஆரம்பித்தன. குறுக்கு வழியாக அமராவதியின் மேற்குக்கரை மேட்டுத் தடத்தில் ஏறி நடந்து எல்லைக் கருப்பராயன் கோவில் போய் சேர்ந்தோம். வேட்டைத் துப்பாக்கியும் வீச்சரிவாளும் ஏந்திய எல்லைக் கருப்பராயன் பாதத்தில் எல்லோரும் கட்டுக்கோல்களைச் சமர்ப்பித்தோம். இலுப்பை இலைகளின் நுனியில் பனிநீர் சொட்டிட்டது. முயல் வேட்டைக்கு பண்ணாடியாக முன்னே நின்ற அப்பா கேட்டார்.

“எல்லா வருசமாதிரியே இந்த தை வேட்டையிலும் நாமதான் அதிக மொசலெடுக்கறோம். கரைவெளிக்கார மொச வேட்டையாடிகள முந்த உடக்கூடாது.”

உள்ளூர் முயல் வேட்டையாடிகளின் குரல் ஒருசேர ஆமோதித்து ஒலித்தோய்ந்தது. அப்பா கருப்பராயன் பாதத்தில் சூடமேற்றி வழிபாடு செய்தார்.

“ஒருபிடி மண்ணுல உருவா வளர்ந்த உத்தண்ட கருப்பராயா…

பக்கத் தொணையிருந்து பாதுகாப்புக் குடப்பா…

அப்பாங்கற சொல்லுக்கு ஆபத்துல ஓடிவந்து…

பாதுகாத்துக் குடுக்கணுமடா எங்க கருப்பராயா…”

அப்பாவின் பாடலை உள்ளூர் முயல் வேட்டையாடிகள் பின்பாடலாகப் பாடி வழிபட்டனர். அடுத்ததாக அப்பா விழுந்து வணங்கி முதல் கட்டுக்கோலை கையில் எடுத்தார்.

“எழுப்பாளித் தலைவனே முன்னே வாப்பா…”

கந்த மாதாரியார் முன்னே வந்து அப்பாவின் பாதம் தொட்டு வணங்கி நின்றார். அப்பா கட்டுக்கோலை கந்த மாதாரியாரின் கையில் கொடுத்து வாழ்த்தினார்.

“எழுப்பாளிகளான நீங்க இந்த வேட்டையிலயும் அதிகமான மொசல எழுப்பனும்…”

கந்த மாதாரியார் தலையாட்டி நகர்ந்து நின்றார். அடுத்து அப்பா இரண்டாவது கட்டுக்கோலை எடுத்தார். சடைய மூப்பர் அப்பாவின் பாதம் வணங்கி பெற்றுக் கொண்டார்.

“வீச்சாளிகளான நீங்க இந்த வேட்டையிலும் எழுப்பாளிக எழுப்பி விடற எல்லா மொசலையும் ஒன்னுவிடாம வேட்டையாடனும்…”

அதற்கடுத்து அப்பா மூன்றாவது கட்டுக்கோலை படுக்கையாளிகளின் தலைவனான மாகாளித் தோட்டியாரின் கையில் கொடுத்து வாழ்த்தினார்.

“வேட்டையாடற எல்லா மொசலையும் எதிர் வேட்டையாடிகளுக்கு கெடைக்காம நீங்களே கைப்பத்தணும்…”

அப்பா நான்காவது கட்டுக்கோலை வேட்டையாடிய முயல்களை சுமந்து வரும் சுமையாளித் தலைவனான கிட்டு வண்ணாரிடம் கொடுத்து வாழ்த்தினார். நையாண்டியாகப் பேசி முயல் வேட்டையாடிகளை குஷிப்படுத்தும் சின்னா நாவிதரை அப்பா தன்னோடவே வைத்துக் கொண்டார். மற்ற முயல் வேட்டையாடிகள் கட்டுக்கோலை எடுத்துக் கொண்டு தங்கள் தலைவனோடு போய் சேர்ந்து கொண்டனர்.

அந்த சமயத்தில் கிழக்குத் திசையில் ஆற்றுக்கு அப்பால் நாய்களின் குரைப்பொலிகள் விடாமல் எழுந்தன. அப்பா சப்தமிட்டார்.

“அடேய்…கரைவெளி மொசல் வேட்டை யாடிக வந்துட்டாங்க. இந்த தைக்கு கல்லுத்துறை, அலங்கியம், மனக்கடவு, கொள்ளபட்டி, ஆச்சியூருன்னு பெரிய பட்டாளமாகவே சேந்து வர்றதா கேள்விப்பட்டேன். எல்லாரும் மளாருன்னு பொறப்படுங்க. அவுங்க ஊதியூரு வெரைக்கும் நம்மள புடிக்கக் கூடாது.”

ஊரின் வடக்குத் திசை நோக்கி உள்ளூர் முயல் வேட்டையாடிகள் புறப்பட்டனர். மானாவாரி மேய்ச்சல் காடுகளில் எழுப்பாளிகள் நாய்களோடு சேர்ந்து முயல்களை எழுப்பினர். எழும்பிய முயல்களை வீச்சாளிகள் கட்டுக்கோல் கொண்டு வேட்டையாடினர். அடிபட்டு துடிதுடித்த முயல்களை படுக்கையாளிகள் கைப்பற்றினர். எனக்கு முயல் வேட்டை புது அனுபவமாக இருந்தது. அப்பா வழிநடத்திக் கொண்டு சென்றார். நாங்கள் நொச்சிப் பாளையத்தை சமீபிக்கும்போதே கரைவெளி முயல் வேட்டையாடிகள் எங்களோடு வந்து கலந்து விட்டனர். எங்கள் வீச்சாளிகள் வேட்டையாடிய முயல் ஒன்றை கரைவெளிப் படுக்கையாளி ஒருவர் எடுத்துக் கொண்டார். அப்பா இதைக் கண்டும் காணாதவர்போல் போய்கொண்டிருந்தார்.

“அப்பா... அது நம்ம மொசல்…”

“அடேய்… மொசல் வேட்டையில ஆரு கடேசில மொசல எடுக்கறாங்களோ, அவுங்களுக்குத்தான் மொசல் சொந்தம்…”

எனக்கு இந்த முறை வினோதமாக இருந்தது.அப்போது வேட்டையாடப்பட்ட ஒரு முயலை கரைவெளி படுக்கையாளியும் எங்கள் படுக்கையாளியும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடாமல் போராடியபடி வந்து கொண்டிருந்தனர். பின்மதியம் கடந்தபோதுகூட யாரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. முயல் இருவருக்குமிடையே சிக்கி சின்னாபின்னப் பட்டது. அந்தி அடிசாயும் வேளையில் மாகாளித் தோட்டியார் அப்பாவிடம் ஓடி வந்தார்.

“நம்ம படுக்கையாளிதான் மொசல கைப்பத்தினாருங்க… ஆனா அவுங்க அடிச்சுப் போட்டு புடிங்கிக்கிட்டாங்க…”

அப்பா கரைவெளி முயல் வேட்டையாடிகளின் பண்ணாடியான நல்லசாமியிடம் போனார்.

“என்ன இப்பிடிச் செஞ்சிருக்கீங்க? இது வேட்டத் தர்மமே இல்லியே… மருகாதியா மொசல எங்க படுக்கையாளிகிட்ட திருப்பிக் குடுத்துருங்க…”

“உங்க படுக்கையாளிதான் கைப்பத்தி னான்ங்கிறதுக்கு ஏதாச்சும் சாட்சி வெச்சிருக்கீங்களா…?”

அப்பா மாகாளித் தோட்டியாரைக் கைக் காட்டினார். மாகாளித் தோட்டியார் தூரத்தில் ஊதியூர் மலை மேல் தெரியும் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலைக் கும்பிட்டுச் சொன்னார். “அந்த முருக மேல சத்தியமா நாங்கதான் மொசலக் கைப்பத்தினோம்…”

நல்லசாமி நம்பவில்லை. “இந்த பொய்ச் சத்தியமெல்லாம் வேண்டாங்க… மொசல எங்களுது…”

அப்பாவுக்கு ஆத்திரம் பீறிட்டது. “அப்ப இந்த மொசல் பொதுவுல இருக்கட்டும். இந்த வேட்டயில ஆரு அதிகமான மொசல கைப்பத்தறோமோ அவங்க எடுத்தக்கலாம்…”

அப்பாவின் சவாலை நல்லசாமி ஏற்றுக் கொண்டார். அந்தி இருள் சூழும்போது நாங்கள்தான் நூற்றிப் பத்து முயல்களை கைப்பற்றியிருந்தோம். அவர்கள் வெறும் எண்பத்தெட்டுதான். நல்லசாமி அந்த முயலை எங்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சொன்னார்.

“அடுத்த தை வேட்டயில இதே சவாலத் தொடறலாமுங்களா…?’’

அப்பாவும் சம்மதித்தார். அடுத்த தை வேட்டைக்காக எல்லோரும் காத்திருந்தோம்.துன்மதி வருசம் பிறந்து கார்த்திகை மாதமும் வந்தது. கனத்த மழையும் கீகாற்றுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. வளர்பிறை தினமொன்றில் ஆகாயம் சிறு வெட்டாப்பு விட்ட மதியத்தில் நல்லசாமி குதிரை வண்டியில் வீட்டுக்கு வந்திறங்கினார். அப்பாவிடம் ராணி அத்தையைப் பெண் கேட்டார். ராணி அத்தையும் நல்லசாமியும் ஒருவரை ஒருவர் விரும்புவது அதன்பின்பே அப்பாவுக்குத் தெரிந்தது. அப்பா ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சொன்னார்.

“வருகிற தை வேட்டயில நீ சவால் விட்ட மாதிரியே செயிச்சுக் காட்டு… நா ராணிய கட்டிக் குடுக்கறே… இல்லீனா வேற மாப்பிள பாப்பேன்…”

அப்பாவின் சவாலையும் ஏற்றுக் கொண்டு நல்லசாமி புறப்பட்டுப் போனார். தை பிறப்பதற்கு சில தினங்களே இருந்தன. இந்த முயல் வேட்டை சுற்றுவெளி எல்லா ஊர்களிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. நல்லசாமிக்கு ஜெயித்தே ஆகவேண்டிய வாழ்க்கைப் பிரச்சனை. வேட்டையில் புது வியூகத்தையெல்லாம் வகுத்துக் கொண்டிருந்தார். அப்பாவும் நல்லசாமியை தோற்கடிக்க எல்லா வழிகளிலும் வேட்டையாடிகளோடு கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். வேட்டை நாய்களையும் அதிகப்படுத்தினார். நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு ராணி அத்தை என்னிடம் புலம்பிக் கண்ணீர் சிந்தியபடி இருந்தாள்.

தை பிறப்பதற்கு முந்தின முன்னிரவு. ஊர்த் தலைவாசலில் உள்ளூர் முயல் வேட்டையாடிகள் எல்லோரும் கூடி வேட்டைக்கான முன்னேற்பாடு களைச் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது ஜீப் ஒன்று வந்து நின்றது. தாராபுரத்திற்கு புதிதாக மாற்றலாகி வந்த சப் கலெக்டர் ஜீப்பிலிருந்து இறங்கினார்.

“முயல் வேட்டைக்கு நான் தடை போட்டிருக்கேன். அந்த தெற்கத்தி ஊர்க்காரங்களுக்கும் சொல்லிட்டேன். மீறி முயல் வேட்டையாடினீங்கன்னா, நான் போலீசை அனுப்புவேன்…”

அப்பா முன்னே போனார்.

“முயல் வேட்டையிங்கறது வெறும் கறி திங்க இல்லயிங்க… எங்க எல்லைக் கருப்பராயனுக்கு நாங்க வருசா வருசம் தவறாம செய்யற படையலுங்க…”

“சாமி பேரச் சொன்னாலும் விடமாட்டேன்…”

சப் கலெக்டர் திரும்பி ஜீப்பில் ஏறப் போனார்.

“நாங்க தெய்வகுத்தத்துக்கு ஆளாக வேண்டி வருமுங்க... நாங்க நாளைக்கு முயல் வேட்டைக்கு பொறப்பட்டே தீருவோம்…”

“நான் ஏன் முயல் வேட்டைக்கு தடை விதிச்சேன் தெரியுமா? தெக்கத்தி ஊர்க்காரங்களும் நீங்களும் ஏதோ சபதம் போட்டு வேட்டைக்குப் போறீங்க… நிச்சயமா மோதிக்குவீங்க… அப்புறம் சட்டப் பிரச்சனையை யார் சமாளிக்கறது…?”

அப்போது மாகாளித் தோட்டியார் கூட்டத்தை விலக்கி சப் கலெக்டர் எதிரில் வந்தார்.

“நீங்க மொசல் வேட்டைய தடுத்தீங்கன்னா, எங்க எல்லைக் கருப்பராயன்… வேட்டை பூதத்தை ஏவி உங்கள கொல்லாம உடாது.”

சப் கலெக்டர் சப்தமாகச் சிரித்தார்.

“நீங்க சவால் விட்டு முயல் வேட்டைக்குப் போகும்போது நானும் இதைச் சவாலா ஏத்துக்கறேன். இப்பவே நான் உங்க எல்லைக் கருப்பராயனைப் போய் சந்திக்கறேன். எங்கே என்னை வேட்டை பூதத்தை ஏவிக் கொல்லச் சொல்லு பாக்கலாம்…”

“தெகிரீயமிருந்தா எங்க எல்லைக் கருப்பராயன் வேட்டைக்குப் பொறப்படுற நடுச்சாமத்துல போய் நில்லுங்க பாக்கலாம்…”

சப் கலெக்டர் நடுச்சாமத்துக்காக ஜீப்பிலேயே காத்திருந்தார். சுற்றுவெளி ஊர்களுக்கும் விசயம் பரவி எல்லோரும் அச்சத்தில் உறைந்து போயினர். அப்பாவுக்கு சப் கலெக்டர் வேட்டை பூதத்தால் கொல்லப்படுவதில் உடன்பாடில்லை. யோசித்தபடியே இருந்தார். இருந்திருந்தாற்போல் எங்களை ஆயுதங்களோடு ரகசியமாக அழைத்துக்கொண்டு எல்லைக் கருப்பராயன் கோவிலை நோக்கி நடந்தார்.

கிட்டு வண்ணார், சின்னா நாவிதர், சடைய மூப்பர், கந்த மாதாரியார், மாகாளித் தோட்டியார் என எவரையும் அப்பா பார்க்கப் போகவில்லை.என்னைப் போலவே அவர்களுக்கும் அப்பா எங்கு போயிருப்பார் என்கிற குழப்பம் நீடித்தது. எல்லோரும் விரைசலாக எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். நான் நல்லசாமி மாமாவை எழுப்பப் போனேன். மாகாளித் தோட்டியார் தடுத்தார்.

“எதுக்கும் நாம ஒரு தவக்கா எல்லைக் கருப்பராயன் கோயிலு போயிப் பாக்கலாம் அப்புனு…”

“தீட்டு இருக்கு… அப்பா அங்க போகமாட்டாரு…”

“இல்ல… போய்ப் பாக்கலாம்.”

குறுக்கு வழியாக எல்லைக் கருப்பராயன் கோவிலை நோக்கி நடந்தோம்.

திடீரென கொம்புகள் ஊதின. கொட்டுமளக்கு விசையோடு முழங்கின.வேட்டை பூதம் ஒரு கையில் வல்லயம், மறுகையில் குத்தீட்டி பிடித்து பாதச் சதங்கை அதிர சப் கலெக்டரை நோக்கி முன்னேறி நடந்தது. குரல் கர்ண கொடூரமான தொனியில் ஒலித்தது.

“இப்ப சொல்லு… எனக்கு படையல் வைக்கற முயல் வேட்டைக்குத் தடை போடுவியா?”

“என் உயிரே போனாலும் உன்னைக் கண்டு பயப்பட மாட்டேன்…”

வேட்டை பூதம் கோவில் கருகற்மதில் எதிரொலிக்க சிரித்தது. வல்லயத்தையும் குத்தீட்டியையும் நீட்டி நடந்தது. சப் கலெக்டருக்கும் வேட்டை பூதத்திற்கும் இடைவெளி குறைந்து வந்தது. சப் கலெக்டர் பயந்து பின்வாங்கி ஓடுவார் என எதிர்பார்த்தோம். அந்த ஆள் வீராப்பாய் அசையாமல் அப்படியே நின்றார். கொம்புகளின் ஊதலும் கொட்டுமளக்கின் முழக்கமும் அதிகமாயின. நான் திகிலுடன் பார்த்தபடியிருந்தேன்.அப்பா வலதுகையில் வல்லயத்தையும் இடதுகையில் குத்தீடியையும் சராங்கமாகப் பிடித்து முன்னே எட்டு வைத்தார். பின் வேட்டை பூதத்தை நோக்கி ஓடினார்.வேட்டை பூதம் வேறு ஆள் வருவதைக் கண்டு சுதாரித்துக் கொண்டது. சட்டென அப்பாவின் பக்கம் திரும்பியபடி கத்திற்று.

வேட்டை பூதம் - சிறுகதை
வேட்டை பூதம் - சிறுகதை

“பரிவாரப் பூதங்களே... வாங்கடா!”

அடுத்த கணம் நாலு திசைகளிலிருந்தும் நான்கு வேட்டை பூதங்கள் வெளிக் கிளம்பின. எல்லாம் ஒருசேர வல்லயத்தையும் குத்தீட்டியையும் நீட்டியபடி அப்பாவின் மேல் பாய்ந்தன. அப்பாவின் குத்தீட்டியும் வல்லயமும் சிலம்புக்கம்பாய் மாறிச் சுழன்றன. நடுமத்தியில் அப்பா. சுற்றிலும் வேட்டை பூதங்கள். சண்டை மும்முரமானது. குத்தீட்டிகளும் வல்லயங்களும் மோதி ஒலிக்கும் ஓசை. இக்கட்டான நிலையில் நாங்கள். அப்பா உயிரோடு திரும்ப சாத்தியமேயில்லை என எனக்குப் பட்டது. அழுகை வந்தது.

நேரம் கடந்தும் சண்டை நடந்து கொண்டே இருந்தது. அப்பாவிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் பரிவார வேட்டை பூதங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கி ஓடி மறைந்தன. இறுதியாக பெரிய வேட்டை பூதமும் அப்பாவும் மட்டுமே தனித்து மோதினர். வல்லயங்களும் குத்தீட்டிகளும் ஆக்ரோஷமாக சுழன்றன. எவரும் தோற்பதாக இல்லை. அப்பா சப் கலெக்டரைப் பார்த்து சப்தமிட்டார்.

“இந்த வேட்டை பூதம் என்னை அடிச்சுதுன்னா அவ்வளவுதான்… உங்களக் கொல்லாம உடாது…நீங்க ஓடீருங்க...”

“அப்போ உன் கதி?”

“எனக்கு எல்லைக் கருப்பராயன் உட்ட வழி…”

சப் கலெக்டர் அரைமனதாக நகர்ந்தார்.இருளுக்குள் போனபின்பு சொன்னார்.

‘‘நீ உயிரோட ஊர் திரும்பினீனா… விடியால முயல் வேட்டையை நடத்து…”

மேலும் சிறிதுநேரம் சண்டை ஓய்ந்தபாடில்லை.அப்பா பெரிய வேட்டை பூதத்தின் வல்லயத்தையும் குத்தீட்டியையும் தட்டிவிட்டு நிர்க்கதியாக்கினார்.

“நல்லசாமி… வேசத்தைக் கழட்டிட்டு வெளிய வா… மொசல் வேட்டையில மோதுவோம்…”

முதல் சேவல் கூப்பிட்டது. எப்பொழுதும் போல முயல் வேட்டை ஆரம்பித்தது. ஊரின் மேற்குத்திசை நோக்கி நகர்ந்தது. நல்லசாமியின் கரைவெளி முயல் வேட்டையாடிகளும் எங்கள் உள்ளூர் முயல் வேட்டையாடிகளும் சரிசமமாகவே முயல்களைக் கைப்பற்றிக் கொண்டே வந்தனர். செஞ்சேரிமலை முருகன் கோவில் போனபோது அந்தி மஞ்சள் வெயில் மங்கி இருட்டத் தொடங்கியது. இரு பக்கமும் கைப்பற்றிய முயல்களை எண்ணினர். கரைவெளி முயல் வேட்டையாடிகள் இரு முயல்கள் அதிகம் கைப்பற்றியிருந்தனர்.

அப்பாவின் முகம் சோர்ந்து போனது. எதுவும் பேசாமல் ஊர் திரும்பினார். மாசியிலேயே ராணி அத்தையை நல்லசாமிக்குக் கல்யாணம் செய்து கொடுத்தார்.

அன்றிரவு அப்பா மாகாளித் தோட்டியாருக்கு ஆள் அனுப்பிக் கூட்டி வரச் சொன்னார்.மாகாளித் தோட்டியார் வெளித்திண்ணையோரம் வந்து பயந்துபோய் நின்றார்.

“எதுக்கு ரெண்டு மொசல நல்லசாமிக்கு உட்டுக் குத்தே…?”

“குமரேசு அப்புனுதான்… ராணி அம்மிணி அழுதுக்கிட்டு கெடக்கறதாச் சொல்லுச்சு…”

அப்பா எதுவும் பேசாமல் வீட்டுக்குள் போய்விட்டார்.

இலுப்பைத் தோப்பு இருளுக்குள் கிடந்தது. கருகற்மதில் கடந்து கோவிலுக்குள்ளே போனோம். எல்லைக் கருப்பராயன் பாதத்தினடியில் அப்பா உட்கார்ந்திருந்தார். உதடுகள் எதையோ உச்சரித்துக் கொண்டிருந்தன.நான் மட்டும் அப்பாவின் அருகில் போய் தோளைத் தொட்டேன். சலனமின்றி வெறித்த அப்பா எழுந்து நின்றார்.

“இன்னிக்கோட எங்கதெ முடியப் போகுதுன்னு நெனைச்சேன். தீட்டுக்காரன் கோவிலுக்குள்ள வந்திருக்கேன். வேட்டை பூதத்தை ஏவி என்னைக் கொன்னுருன்னு வேண்டிக்கிட்டேன்… கருப்பராயனுக்கு ஏனோ என்னைக் கொல்ல மனசில்ல போலிருக்கு…”

நான் அமைதியாக அப்பாவையே பார்த்தேன்.

‘‘என்னோட எல்லா நினைவுகளும் இந்த ஊரச் சுத்தியே இருக்குடா… இனி நானு டவுனுக்கு வந்து என்னத்த சாதிக்கப் போறேன்? என்னைய இங்கயே உட்டீனாத்தான் எனக்கு நிம்மதி… சாவும்போது சந்தோசமாவாவது சாவேன்…”

இந்த இரவு அப்பாவை மட்டுமல்ல, என்னையும் எனக்குப் புரிய வைத்து விட்டது. கருப்பராயனின் பாதத்தில் இருந்த அப்பாவின் கட்டுக்கோலை எடுத்து அப்பாவின் கையில் கொடுத்தேன். அப்பாவின் கண்கள் முன்புபோலவே விரிந்து பிரகாசித்தன.

- என்.ஸ்ரீராம்

(12.01.2022 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)